1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி!

1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி!

லண்டன் சுவாமிநாதன்

brahmanabad.


24 மார்ச் 2014

இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய சகாப்தம் பற்றி தெற்கே வசிக்கும் மக்களுக்கு அதிகம் தெரியாது. காரணம் என்ன வென்றால் இது நடந்தது பாகிஸ்தானிலும் ஆப்கனிஸ்தானிலும். இந்த இரண்டு நாடுகளும் இப்போது முஸ்லீம் நாடுகளாக ஆகிவிட்டன. முஸ்லீம் நாடுகள் அவர்களுடைய பழைய வரலாற்றைப் பாராட்ட முடியாது. அது மத விரோதச் செயல் ஆகிவிடும். இரண்டாவது காரணம் பிராமணர்கள் ஆட்சி செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்லுவதால் அவர்களும் பெருமை பாராட்ட முடியாது. சங்கத் தமிழ் நூல்களும் அதற்குப் பின்வந்த திருக்குறள் முதலிய அற நூட்களும் பிராமணர்களை ‘அறு தொழிலோர்’ என்றே அழைக்கின்றன. இந்த 6 தொழில்களில் ஆளும் தொழில் கிடையாது.

சாஸ்திரம் ஒருபுறம் இருக்க, பிராமணர்கள் ஆட்சி புரிந்த செய்தியை கிரேக்க நாட்டு வரலாற்று ஆசிரியர்களும் 2700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற, உலகின் முதல் இலக்கண வித்தகரான பாணினியும் எழுதி வைத்துள்ளனர். இது தவிர பாகிஸ்தானையும் ஆப்கனிஸ்தானத்தையும் ஆண்ட பிராமண அரசர்கள் பற்றி அராபிய யாத்ரீகர்கள் நிறைய எழுதி வைத்துள்ளனர். கி. மு. 700 க்கு முன் துவங்கிய பிராமணர் ஆட்சி, கி.பி.712ல் சிந்து மாகாணத்தில் அராபிய படைத்தளபதி முகமது பின் காசிம் நுழைந்தது வரை நீடித்தது. அதற்குப் பின் 1000 ஆண்டுகளுக்கு “அன்பிலா அந்நியர் ஆட்சி” (பாரதி பாடல் வரிகள்) இந்தியாவில் நடந்ததை நாம் அறிவோம். இலங்கையில் யாழ்ப்பாணப் பகுதியை 1200 முதல் 1600 வரை ஆரிய சக்ரவர்த்திகள் என்னும் பிராமணர்கள் ஆண்டனர். இவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழ் பிராமணர்கள்.

ராமாயண காலத்தில் ராவணன் என்னும் பிராமணன் இலங்கையை ஆண்டான். ஆனால் அவன் 100 விழுக்காடு பிராமணன் இல்லை. தந்தை பிராமணன், தாய் ராக்ஷச வம்சம். தாய்க்கு யக்ஷர்களுடனும் தொடர்பு உண்டு. ஆக ராவணன் பாதிப் பிராமணன், பாதி ராக்ஷசன். ராமாயணத்தில் ஸ்ரீ இராம பிரானே, ஓரிடத்தில், ராவணனை, ஏ, மஹா பிராமணனே! என்று அழைப்பதாக வால்மீகி முனிவர் எழுதியுள்ளார். இப்படி அசுரக் கலப்புடன் பிறந்தவர்களை பிரம்ம-ராக்ஷச வம்சம் என்பர்.

Rajaraja Chola I Chola Ruler


Statue of Hindu King Raja Raja Choza

ராமனுக்குப் பிறகு கிருஷ்ணர் வந்தார். அவரது காலத்தில் துரோணர், கிருபர், அஸ்வத்தாமன் போன்ற வல்லமை வாய்ந்த பிராமண வீரர்கள் போரில் ஈடுபட்டதையும் ஆயுதப் பயிற்சி கொடுத்ததையும் அறிகிறோம். ஆயினும் அவர்கள் அரசு கட்டிலில் அமரவில்லை. போரில் முரசு கொட்டியதோடு நின்றுவிட்டனர்.

ஆயுதப் பயிற்சி பெற்றவுடன, கற்ற கல்விக்கு எவ்வளவு ‘பீஸ்’ (குரு தட்சிணை) என்று பாண்டவர்கள் கேட்டனர். துரோணர் சொன்னார்: “ எனக்கு பணம் எதுவும் வேண்டாம். என்னை சிறு வயதில் அவமானப் படுத்திய பஞ்சாப் (பாஞ்சால) மன்னன் துருபதனைக் கட்டி இழுத்துவா”. உலகப் புகழ்பெற்ற வில்வீரன் அர்ஜுனனுக்கு இது கொசுவைப் பிடித்து வா என்று சொல்வது போல. ‘சென்றான், வென்றான்’, துருபதனைத் தேர்ச் சக்கரத்தில் கட்டி இழுத்துவந்தான். அப்போது துரோணர் பஞ்சாப் பகுதியில் பாதியை எடுத்துக் கொண்டு மீதியை துருபதனிடமே கொடுத்து விரட்டிவிட்டார். ஆனால் அவர் எடுத்துக்கொண்ட ராஜ்யத்தை அவர் ஆண்டதாகத் தெரியவில்லை.

பரசுராமர் (கோடாி ராமன்) என்ற பிராமணருக்கு க்ஷத்ரியர்கள் மீது கோபம். ஆகையால் 21 க்ஷத்ரிய மன்னர்களை வெட்டி வீழ்த்தினார். ஆனால் அவரும் ஆண்டதாக நமது இதிஹாச புராணங்கள் சொல்லவில்லை. வடமேற்கு இந்தியாவில் மட்டும் ஆட்சி செய்தது புரியாத புதிராக இருக்கிறது!

சாணக்கியர் (கௌடில்யர்) எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் பிராமணர் படைகளை விட மற்ற மூன்று வர்னத்தினர் கொண்ட படைகளைத்தான் அரசன் அமைக்கவேண்டும் என்பார். காரணம், எதிரிகள் தங்கள் காலில் விழுந்தால் உடனே பார்ப்பனர்கள் மன்னித்துவிடுவர்.. ஆகையால் அவர்கள் படைகளுக்கு லாயக்கு இல்லை (அர்த்த சாஸ்திரம் 9-2-21/24) என்பார்.

King Karikala

Statue of Hindu King Karikala

இது முற்றிலும் உண்மை. தமிழ்நாட்டில் பிராமண அக்ரஹாரங்களும், பிராமண கிராமங்களும்தான் முதலில் முஸ்லீம் மயமாகின. மற்ற ஜாதியினர் அவர்களை உள்ளே விடமாட்டார்கள்.. மார்க்கோபோலோ என்ற இதாலிய யாத்ரீகனும் பிராமண ஜாதியை மிகவும் சிலாகித்து எழுதியுள்ளார். எல்லோரும் சத்தியத்தின் உறைவிடமாகத் திகழ்ந்த பிராமணர்களை நடுவர்களாக வைத்துகொண்டு வியாபாரம் செய்தனர் என்று!! ( இது 800 வருஷத்துக்கு முந்திய பார்ப்பனர்களின் கதை!!! இப்போது யாரையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள்!!!)

இதற்குப் பின் வரலாற்று காலத்தில் இந்தியாவை ஆண்ட பிராமணர்கள் பற்றி நமக்கு ஏராளமான செய்திகள் கிடைக்கின்றன. சுங்க வம்சம், கண்வ வம்சம் சாதவாகனர்கள், கங்க வம்சம், வாகடர்கள் ஆகியோர் பிராமணர்கள். பல்லவர்கள், மற்றும் ‘தத்தா’ என்ற பெயர் உடைய பல அரசர்கள், பஞ்சாபின் மொஹியால்கள், வங்காள அரசர்கள் பலரும் பிராமணர்கள் தான். இவர்களை பிரம்ம கஷத்ரியர்கள் என்பர். அதாவது 50% பிராமணர், 50% க்ஷத்ரியர்!!

நமது காலத்தில் ஜவஹர்லால் நேரு குடும்பம் முதல் தேசாய், வாஜ்பாயீ, நரசிம்மராவ் வரை பல பிரதமர்களும் ஐந்து ஜனாதிபதிகளும் பிராமணர்கள்தான். ஆனால் நான் சொல்ல வந்த பிராமண ஆட்சி —வரலாறு அறியாத கால— பிராமணர் ஆட்சி!

அலெக்சாண்டர் வென்ற பிராமணன்

shivaji_19178

Picture of great Hindu king Veera Shivaji

அலெக்ஸாண்டர் படை எடுத்த கி. மு. நான்காம் நூற்றாண்டில் பிராமண ராஜ்யத்தை அவர் வெற்றி கொண்டதாக கிரேக்க வரலாற்று ஆசிரியர் கூறுவர். சிந்து மாகாணத்தை சம்பூ என்ற பிராமணன் ஆண்டதாக சிந்தி வரலாறு கூறுகிறது. பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ ( எட்டு அத்தியாயம்) என்ற சம்ஸ்க்ருத நூலில் ‘’பிராமணக’’ என்ற நாட்டைக் குறிப்பிடுகிறார். பிராமண சாம்ராஜ்யங்கள் வெளியிட்ட நாணயங்களும் இப்போது கிடைக்கின்றன. பிராமணர்களை பிராக்மேன், பிரஹ்மன், பாஹ்மன் என்று பாரசீக ,கிரேக்க நூல்கள் குறிப்பிடும். யாராவது ஒருவர் இந்தத்துறையில் ஆய்வு செய்தால் சிந்து சமவெளியை ஆண்ட அரசர்கள் வரை கண்டுபிடித்து விடலாம்!!

பாணினி கி.மு ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக ஆர்.ஜி.பண்டார்கர், கோல்டுஸ்டக்கர் போன்ற அறிஞர்கள் கூறுவர். கௌடில்யர் என்ற பிராமணர் எழுதிய உலகின் முதல் பொருளியல் நூலான அர்த்த சாஸ்திரத்தில் அப்போது இருந்த நாடுகளின் பெயர்கள் வருகின்றன. அவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்ததை எல்லோரும் ஒப்புகொள்வர். அவர் குறிப்பிடும் வடமேற்குப் பகுதி தேசங்களுக்கும் பாணினி குறிப்பிடும் வடமேற்குப் பகுதி தேசங்களுக்கும் பெருத்த வித்தியாசம் இருப்பதால், பாணினிக்கு கி.மு.700 என்ற தேதியே சரி என்பது புலனாகும்.

சிந்து மாகாணத்தின் சோகக் கதை

சிந்து மாகாணத்தை ஆண்ட கடைசி இந்து மன்னன் ராஜா தகிர். அவர் ஒரு பிராமணர். மஹா வீரன். அராபிய முஸ்லீம் வரலாற்று ஆசிரியர்களும் அவர் இறுதி வரை போரிட்டதைப் புகழ்ந்துள்ளனர். ஆனால் பெண்களிடத்தில் பலவீனம் உடையவர். அவருக்கு முன்னால் அந்த இடத்தை 140 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்த பௌத்தர்களையும் , ரஜபுதன வீரர்களையும் மட்டமாக நடத்தினார். எல்லா அடிப்படை உரிமைகளையும் பறித்தார். இதனால், முகமது பின் காசிம் ஆறு மாத காலம் முற்றுகையிட்டுத் திணறிய காலத்தில், கோட்டைக்குள்ளிருந்து ரகசிய தகவல்களை முஸ்லீம் படைகளுக்கு எழுதி அனுப்பினர். ராஜா தகிருக்கு உதவவும் மறுத்தனர். அதற்குப் பின் வெற்றி கண்ட இராக்கிய அராபிய தளபதி முகமது பின் காசிம் ஆயிரக் கணக்கான வீரர்களைப் பிடித்து தலைகளைச் சீவினார். ‘டன்’ கணக்கில் தங்கத்தை மூல்டான் (மூலஸ்தானம் சூரியன் கோவில்) கோவிலில் இருந்தும் அரண்மனையில் இருந்தும் இராக் நாட்டிற்கு அனுப்பிவைத்தார். ராஜா தகீரின் மகன் ஜசியாவும் மஹா வீரன். ஆனால் அவன் உதவி கேட்டு பல மன்னர்களுக்கு எழுதிய கடிதங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்தது.

brahminabad3

பிராமணாபாத் நகர இடிபாடுகள்

சிந்து மாகாணத்தில் இப்போது பிராமணாபாத் என்ற ஒரு ஊர் உண்டு இடிபாடுகள் நிறந்த ஊர். ஒரு காலத்தில் சிந்து மாகாண அரசர்களின் கோடைகாலத் தலைநகராகக் கொடி கட்டிப் பறந்த நகரம். பிரம்மண்டமான கோட்டை கொத்தளம் நிறைந்த இடம். அராபியர்கள் இதை தரை மட்டம் ஆக்கியதால் பின்னர் இந்நகரம் எழுந்திருக்கவே இல்லை! பக்கத்தில் அல் மன்சுரா என்ற இடத்தை பின்னர் உருவாக்கினர். ஆனால் மக்களுக்கு பிராமணாபாத் நினைவு நீங்கவே இல்லை. அதையும் பிராமணாபாத் என்று அழைக்கத்துவங்கிவிட்டனர். இந்த ஊரில் இருந்த அத்தனை செல்வத்தையும் அராபியப் படைகள் இராக் நாட்டிற்குக் கடத்திவிட்டதால் யாருக்கும் இதைப் பற்றி ஆர்வமே இல்லாமல் இன்னும் இடிபாடுகளுடன் காட்சி தருகிறது. சிந்து சம்வெளியைப் பற்றி முதலில் புத்தகம் எழுதிய ஒரு வங்காளி அறிஞர் சிந்து சமவெளி நாகரீகமே இதைச் சேர்ந்ததுதான் என்று எழுதினார். மொஹஞ்சதாரோ, ஹரப்பா நாகரங்கள் மிகவும் அதிக தொலைவு இல்லை. இப்பொழுதைய பாகிஸ்தானிய ஹைதராபாத் அருகில் பிராமணாபாத் இருக்கிறது.

(ஆகமதாபாத், அல்லாஹாபாத் என்று முடியும் நகரங்களில் உள்ள ‘பாத்’ என்பது பாரசீகச் சொல் என்று சொல்வர். அது பிழையே. ஜனபத என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து இது வந்தது என்பதை வடமொழி வல்லுனர்கள் அறிவர்).

பிராமணர்களுக்கு முன் சிந்து மாகாணத்தில் 140 ஆண்டுகளுக்கு புத்தமத ஆட்சி நடந்ததும் ஒரு புதிர்தான். அங்கு சித்தூர் (ராஜஸ்தான்) மன்னன் உதவியுடன் அவர்கள் ஆட்சிக்கு வந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த சீன யாத்ரீகன் யுவாங் சுவாங் எழுதியப் பயணக் குறிப்புகளில், நாட்டின் வளத்தைப் புகழ்ந்துள்ளார். ஆனால் புத்தமதப் பிட்சுக்கள் பேராசைக் காரர்களாகவும் பெண் பித்தர்களாகவும் இருப்பதாக இகழ்ந்துள்ளார்.

சிந்து மாகணத்தில் எப்போது இப்படி பிராமண ஆட்சி துவங்கியது என்று தெரியவில்லை பாணினியின் எழுத்தைக் கொண்டு பார்கையில் கி.மு 700 வாக்கில் ‘’பிராமணக’’ தேசம் இருந்தது தெரிகிறது. புராண காலத்தில் சிந்துத்வீப அம்பரிஷனும், மஹா பாரத காலத்தில் ஜயத்ரதனும் சிந்து சமவெளியை ஆண்டது நமது நூலகளில் உள்ளது. ஒருவேளை சிந்து சமவெளி நாகரீகமே பிராமண-ஷத்ரிய நாகரீகமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. அங்கே யாக குண்டங்கள் கண்டு பிடிக்கப்பட்டதையும், முத்திரைகளில் காணப்படும் வடிகட்டி, சோம பானம் செய்யும் வடிகட்டிப் பாத்திரம்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் இனம் காணத் துவங்கிவிட்டனர். அது மட்டுமல்ல. அங்கே கிடைத்த யோகி முத்திரை பிராமண வேத விற்பன்னர்கள் அணியும் பூப்போட்ட சால்வையை அணிந்திருப்பதும் அவர் இடது தோளில் அதைப் போட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும். இன்றும் வேதம் சொல்லும் பார்ப்பனர்களும் யாகம் செய்யும் பார்ப்பனர்களும் இதே மாதிரியில்தான் சால்வை அணிவர்.

Moovendar

Picture of three great Tamil kings. They were present together at the Rajasuuya Yagna performed by the Choza king. Avvaiyar praised their unity.

முகமது நபி இஸ்லாம் மதத்தை ஸ்தாபிப்பதற்கு முன்பே காபா கோவில் மெக்காவில் இருந்ததை உலகமே அறியும். அங்கு காபா கோவிலைச் சுற்றும் முஸ்லீம்களும் இப்படி வேத விற்பன்னர்கள் போல இடது தோளில் வெள்ளை வேஷ்டி, துண்டு அணிந்து சுற்றுவதையும் படத்தில் பார்த்திருப்பீர்கள். ஒரே வித்தியாசம். அவர்கள் வலமாகச் சுற்றுவதில்லை.

பணம் இருந்தால் வாழ்நாள் முழுவதையும் இந்த ஆராய்ச்சியில் செலவிட எனக்கும் ஆசைதான்!

Please read the following posts:
1.How Old is Indian Civilisation posted on 8th November 2011
2.BIGGEST BRAINWASH IN THE WORLD posted 13th September 2012
3.Megasthenes did not know Buddha 16 June 2013
4.Sanskrit Words in the Bible 14 July 2012 & August 2012
5. Elephants Lost, Cats Won: A sad story from Indian History 12/03/2014

இந்த ஆங்கிலக் கட்டுரைகள் தமிழிலும் உள்ளன

https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3-

Contact swami_48@yahoo.com

—————————————————————————————————————–

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply