கீழடியில் கிடைத்த நுண்கற்கால கருவிகளும் எரிந்த நெல் மணிகளும்
24 ஓகஸ்ட் 2020
கீழடித் தொகுதியில் நடந்து வரும் அகழாய்வில் நுண்கற்கால கருவிகள், கரிமயமாகிப்போன நெல்மணிகள் உள்ளிட்டவை கிடைத்திருப்பது ஆய்வாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் முழுக்க நடந்துவரும் ஆய்வுகளில் ஆயிரக்கணக்கான தொல் பொருட்களும் நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது கீழடி தொகுதிகள், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. இந்த அகழாய்வுப் பணிகள் எந்த நிலையில் உள்ளன, கிடைத்த பொருட்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார்.
கீழடி பகுதியில் தற்போது நடந்துவரும் அகழாய்வில் உருளை வடிவ பானைகள், உலை, கால்நடை எலும்புகள், இரும்புப் பொருட்கள், விலைமதிப்பற்ற கற்களால் ஆன மணிகள், எடை கற்கள், முத்திரைகள் உள்ளிட்டவை கிடைத்திருக்கிறன. க – ய என்ற தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடும் கிடைத்திருக்கிறது.
அதேபோல, வடமேற்கு இந்தியாவின் தற்போதைய மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய பகுதிகளில் பரவலாக காணப்படும் அகேட், சூது பவளம் போன்ற மணிகளும் கிடைத்திருப்பதால், இங்கு தொழில், வணிகத் தொடர்புகள் சிறப்பாக நடந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பஸால்ட் வகை கற்களால் ஆன எடை கற்கள், சுடுமண்ணாலான முத்திரை ஆகியவையும் கிடைத்துள்ளன. கூம்பு வடிவத்திலான இந்த முத்திரையின் நடுப்பகுதியில் ஆமை வடிவம் இடம்பெற்றிருக்கிறது.
கீழடியை அடுத்துள்ள கொந்தகை முழுமையாக ஈமச்சின்னங்கள் நிறைந்துள்ள பகுதி என ஏற்கனவே அடையாளம் காணப் பட்டிருந்தது.
இங்கிருந்து இதுவரை 40 முதுமக்கள் தாழிகளும் 17 மனித எலும்புக் கூடுகளும் 2 கால்நடை எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நுண் கற்காலக் கருவிகள், எரிந்த நெல் மணிகள்
கீழடிக்கு அருகில் உள்ள மற்றொரு பகுதியான அகரத்தில் நடத்தப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வில் பல முக்கியமான தொல்பொருட்கள் கிடைத்திருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
“இங்கு கிடைத்துள்ள தொல்பொருட்களில் நுண் கற்காலக் கருவிகள் கிடைத்திருப்பது கவனத்திற்குரியது. இந்த நுண் கருவிகள் இங்குதான் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் கரிமயமான நெல்மணிகளும் கிடைத்திருப்பது தொல்லியல் ரீதியில் மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்தார் பாண்டியராஜன்.
இவை தவிர, அகரத்தில் இருந்து, பட்டை தீட்டப்பட்ட கல் கருவிகள், கறுப்பு – செவ்வண்ண பானை ஒடுகள், சுடுமண்ணாலான உருவங்கள், பொருட்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. கரிமயமான நெல்மணிகளைப் பொருத்தவரை, அவை 20 என்ற எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. அவற்றுக்கு அருகிலேயே கிடைத்த கற்கள் ஒன்றில் கிண்ணம் போன்ற குழி காணப்பட்டிருக்கிறது.
இவை தவிர, பிற்காலத்தைச் சார்ந்த தங்க நாணயம், செலடான் வகை சீன மட்பாண்ட ஓடு, புகைப்பான்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
- கீழடி: பழங்கால எலும்புக்கூடு மரபணு ஆராய்ச்சிக்கு நிதி இல்லை – யார் காரணம்?
- கீழடியில் கிடைத்தது போன்று விழுப்புரத்தில் பெரிய செங்கற்கள்? – அகழாய்வு நடத்த கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்ச நல்லூரில் 1876ல் முதல் முறையாக பெர்லின் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ஜோகோர் என்பவரால் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் உள்ள ஈமக்காடு கண்டறியப்பட்டது. 1903ல் அலெக்ஸாண்டர் ரீ இங்கு மிகப் பெரிய அளவிலான தொல்லியல் ஆய்வை நடத்தினார்.
மத்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையால் மீண்டும் இந்த இடத்தில் 2003-04ல் அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டன. இந்த தொல்லியல் ஆய்வின் முடிவுகள் நீண்ட காலமாக சமர்ப்பிக்கப்படாத நிலையில், இங்கு தற்போது தமிழகத் தொல்லியல் துறை அகழாய்வைத் துவங்கியிருக்கிறது.
உங்கள் மாவட்டத்தை தெரிவு செய்யுங்கள்
ஈமக்காடாக உள்ள பகுதியிலும் வாழ்விடப் பகுதி எனக் கருதப்படும் பகுதியிலும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. வெளிக் கொணரப்பட்ட பத்து முதுமக்கள் தாழிகளில் இரண்டு மிக நல்ல நிலையில் உள்ளன. இவை தவிர, இரும்பாலான பொருட்கள் உட்பட 438 தொல்பொருட்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஆதிச்ச நல்லூரில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ள சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பானை ஓடுகளும் இடைக் கற்காலக் கருவிகளும் இப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்த்தியதையடுத்து இங்கும் அகழாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதுவரை 61 தொல் பொருட்களும் 31 முதுமக்கள் தாழிகளும் இங்கே கிடைத்துள்ளன.
ஈரோடு மாவட்டம் கொடுமணல் நீண்ட காலமாகவே தொல்லியல் ரீதியில் கவனிக்கப்பட்ட பகுதியாக இருந்துவந்தது. இங்கு பண்டைய குடியேற்றத்தைக் கண்டறிதல், தமிழி எழுத்தின் வளர்ச்சியைக் கண்டறிதல் ஆகிய நோக்கத்துடன் மாநில தொல்லியல் துறை இங்கு ஆய்வு நடத்தி வருகிறது.
அதில் பெரும் எண்ணிக்கையில் கருப்பு – செவ்வண்ண பானை ஓடுகளும் உலைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் கிடைத்துள்ளன. ஆகவே இந்தப் பகுதி ஒரு தொழில்சார்ந்த பகுதியாக இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.
- கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது – வியப்பூட்டும் அகழ்வாய்வு முடிவுகள்
- கீழடி: 2,600 ஆண்டுகால வரலாற்றின் ஆய்வறிக்கை வெளியாகக் காரணமான பெண்
இது தவிர, தமிழி பொறிக்கப்பட்ட பானை ஒடுகளும் கிடைத்துள்ளன. ஒரு பானை ஓட்டில் ஆதன் என்ற பெயரும் மற்றொரு பானை ஓட்டில் ‘ள்அகுர (வன்)” என்ற எழுத்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கருங்கல், சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட கற்சுவர் ஒன்றும் வெளிக்கொணரப் பட்டிருக்கிறது. உலையும் எரிந்த களிமண் கொண்ட பகுதியும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தங்கத்தால் ஆன அணிகலன்கள், காசுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
கீழடி அகழாய்வுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளின் மீது பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தொடர்ச்சியாக ஆய்வுகளுக்காக குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொல் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் ஒன்றை அமைக்கும் பணிகளும் நடந்துவருவதாக அவர் கூறினார்.
இந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் தொல் பொருட்களை அறிவியல் ரீதியாக ஆய்வுசெய்ய இந்தியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் மாநிலத் தொல்லியல் துறை தெரிவிக்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.