சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்

தமிழ் நாட்டு மூவேந்தர் வரலாறு அறிய மிகவும் உதவும் காப்பியம் சிலப்பதிகாரம். மேலும் அக்கால நாகரிக நிலை பற்றி அறிய உதவும் காப்பியம் ஆகும். இக்காப்பியத்தைக் குறித்த ஆய்வுகள் சுமார் 1890 -ல் தான் முதன் முதலில் எழுந்தது எனக் கொள்ளலாம். இசை, வரலாற்றுப் பொருள்கள் பற்றி இக்காவியம் தமிழ் மக்களிடையே பரவி வந்ததேயன்றி தமிழ் மக்களிடையே இக்காப்பியத்தின் கலைச் சிறப்பு, கவிதைநடை, பிற இலக்கியச் சுவைகள் அறியப்படாமலே இருந்தன. உ. வே சாமிநாதய்யர் சிலப்பதிகாரம் குறித்த ஏடுகளைத் தேடி ஒரு வித்துவானிடத்தில் சென்ற போது சிலப்பதிகாரம் என்ற சுவடியைப் பற்றிக் கேட்டார் ஆனால் அவர் சிலப்பதிகாரம் என்றால் அதற்கு பொருளே இல்லை ‘சிறப்பதிகாரம் என்ற பெயருள்ளதாய் இருத்தல் வேண்டும் என்றாராம். இதன் மூலம் படித்தவர்கள் கூட சிலப்பதிகாரம் பற்றி பலரும் அறியாத நிலை இருந்து வந்துள்ளது.

சிலப்பதிகாரம் குறித்த கர்ண பரம்பரைக் கதைகள்

இக்காப்பியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லையாயினும் இதன் கதை பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களிடையே அறிந்துகொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இலங்கை தீவிலும், கொச்சி முதலிய பிரதேசங்களிலும் இக்கண்ணகி கதை பலவாறாகத் திரிந்து வழங்கி வந்தது. சாதாரணக் கல்வி உடைய பலரும் அம்மானை வடிவத்தில் அமைந்த இக்கதையை மனனம் செய்து இரவில் பலரும் கேட்கும்படி சொல்லி வந்துள்ளனர். வில்லுப்பாட்டாகவும் இக்கதை வழங்கி வந்துள்ளது. மேலும் கோவா நகரத்தில் எம்.ஃப்ரெரீ(M.FRERE) என்பவர் ‘ தக்காணத்து பண்டை நாட்கள்’ (Old Deccan Days) என்ற ஆங்கிலக் கதைத் தொகுதியொன்றினை 1868 -ல் வெளியிட்டுள்ளார். இதில் ‘சந்திரா பழி வாங்கியது’ என்ற தலைப்பில் கோவலன் கதை காட்சியளிக்கிறது. ஏடுகளில் காணும் அம்மானையைப் புகழேந்திப் புலவர் இயற்றியது என்பாரும் உளர். மேலும் திருவிதாங்கூர் பகுதியில் கிடைத்த கோவலன் சரித்திரம் என்ற பிரதியில் அரங்கேற்றுக் காதை முதலிய தலைப்புகளோடு சிலப்பதிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடன் காணப்படுகிறது. இதன் கதாநாயகி கண்ணகி காளியின் அம்சம் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கொடுங்கோளூர் பகவதி அம்மன் ‘ஒற்றை முலைச்சி’ என்ற பெயருடன் விளங்குகிறாள்.மேலும் தாசியின் தொழில் முறை பற்றி கண்ணகிக்கு முற்றிலும் மாறுபட்ட இயல்புடன் மாதவி படைக்கப்பட்டுள்ளாள்.


உரையாசிரியர்கள் காட்டும் மேற்கோள்கள்

1650 க்கு முன்புவரை கற்றோர்க்கு மாத்திரம் தெரிந்ததாக இந்நூலானது விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில் நச்சினார்க்கினியர் இந்நூலைத் தமது தொல்காப்பிய உரையில் பல இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் 14 ஆம் நூற்றாண்டினரான பரிமேலழகரும்,மயிலைநாதரும் இக்காப்பியப் பகுதிகளை பல இடங்களில் ஆண்டுள்ளனர். மேலும் அதே நூற்றாண்டில் வாழ்ந்த பேராசியரும் தனது களவியலுரை யில் இந்நூலை ஆண்டிருக்கிறார். இக்காலத்திலே தான் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற வழக்கு தோன்றி விட்டது என்பதனை நன்னூலால் அறியலாம். 11- ஆம் நூற்றாண்டில் இக்காப்பியம் அறிஞர்களுக்குள்ளே பெருவழக்காய் இருந்தது என்பதனை யாப்பருங்கல விருத்தியுரையாலும் தொல்காப்பிய உரையாலும் அறியலாம். இதற்கு முன்பாக 10- ஆம் நூற்றாண்டளவில் எழுந்த களவியலுரையிலும் இந்நூலை மேற்கோள் காட்டியுள்ளார்கள்.

தொன்மை

நச்சினார்க்கினியார் தமது தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் (237) தொன்மை என்பதை ‘உரைவிராஅயப் பழமையாகிய கதைப் பொருளாகச் சொல்லப்படுவது’ என விளக்கி உதாரணங்களாக பெருந்தேவனார் பாரதம், தகரூர் யாத்திரை, சிலப்பதிகாரம் என்ற மூன்றனையும் தருகிறார். எனவே பழமையாகிய கதையை உட்கொண்டே சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது என விளங்குகிறது.

நற்றிணையில் கண்ணகி

மேலும் நற்றிணைப் பாடல் (216) ஒன்று திருமாவுண்ணி என்பவள் தன்மீது அன்பற்றுத் துறந்து தனக்கு அயலான் போலாகிவிட்ட காதலனைப் பற்றிக் கவலை கொண்டு வருந்தினாள் எனவும், பின் தனது ஒருமுலையைத் திருகியெறிந்து வேங்கைமரத்தின் கீழ் நின்றாளெனவும் குறிக்கிறது.

யாப்பருங்கலத்தில் கண்ணகி

யாப்பருங்கல விருத்தியில் (பக் 351) ஒருத்தி தன் கணவன் கொலையுண்டு கிடந்த நிலைகண்டு பாடியதாக ஒரு வெண்பா காணப்படுகிறது. இது பத்தினிச் செய்யுள் என உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். எனவே சிலப்பதிகாரம் தோன்றியதற்கு முன்பே கண்ணகி வரலாறு தோன்றி வளர்ந்து தமிழகம் முழுதும் பரவியது என அறியலாம்.

இளங்கோவும் சாத்தனாரும்

மேற்கண்ட கூற்றுகளால் இளங்கோவடிகள் தன் காலத்தில் நிகழ்ந்த உண்மைச் செய்திக்ளை அவர் காவியமாக அமைக்கவில்லை என்பது வெளிப்படை. சேரன் செங்குட்டுவனுக்கு இளங்கோ என்றொரு தம்பி இருந்ததாகப் புலப்படவில்லை. சேரர்தம் வரலாறு கூறும் பதிற்றுப்பத்து நூலில் உள்ள ஐந்தாம் பத்து சேரன் செங்குட்டுவனைப் பற்றியது. இவனுக்குத் தம்பி ஒருவன் உண்டென்ற வரலாறு அந்நூலில் இல்லை. மணிமேகலையிலும் இது காணப்படவில்லை. எனவே இளங்கோவடிகள் சேரர் பரம்பரையில் மிகவும் பிற்காலத்தே தோன்றியவராக இருக்கலாம்.

தொகை நூல்கள் ஒன்றிலேனும் இவரது செய்யுள் காணப்படாமையாலும் இவர் கடைச் சங்கத்துப் புலவர் அல்லர் என்பது தெளிவு. இவரோடு சமகாலத்தவரான் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்பவர், கடைச் சங்கப் புலவரான சீத்தலைச் சாத்தனாரின் வேறானவர். சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் சீத்தலைச் சாத்தன் என்ற பெயர்வழக்கு காணப்படாமை இம்முடிவினை வலியுறுத்தும். அரும்பத உரைக்காரரும், அடியார்க்கு நல்லாரும் சிலப்பதிகாரத்தைக் கேட்டவர் சீத்தலைச் சாத்தன் எனக் கூறவில்லை. பேராசிரியர் உரையில் தான் இருவரும் ஒன்றெனக் கூறப்பட்டுள்ளது.(தொல்-செய்-240 உரை)

மணிமேகலையில் கோவலன் கதை

மணிமேகலையில் 28-ஆம் காதை(103 முதலிய வரிகள்) சேரன் செங்குட்டுவனது தந்தையாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு உற்ற தோழனாய்க் கோவலன் என்பான் ஒருவன் இருந்தனன் என்றும், அவன் மரபில் ஒன்பது தலைமுறைக்குப் பிற்பட்டுத் தோன்றிய வேறொரு கோவலனே சிலப்பதிகாரத்தின் கதா நாயகன் என்று கூறுகிறது. எனவே மணிமேகலை இயற்றிய சாத்தனார், காலத்தால் பிற்பட்டவர் என்பது தெளிவு. மேலும் ‘கோவலனும் கண்ணகியும் புத்ததேவன் கபிலவஸ்துவில் அவதரித்துச் செய்யும் தருமோபதேசத்தைக் கேட்டு வீடுபேறு அடைவார்கள்’ என்று மாசாத்துவன் கூறியதாகச் சாத்தனார் மணிமேகலையில் குறிப்பிட்டுள்ளார். எனில் புத்தன் தோன்றுவதற்கு முற்பட்ட காலத்திலேயே கோவலன் முதலியோர் வாழ்ந்தனர் என்பது இவர் கொண்ட கதையாகும். இது முன்பின் முரணாகும். எனவே சாத்தனார் சங்ககாலப் புலவர் எனக் கொள்வது பிழையாகும்.

இளங்கோவடிகளும் கூலவாணிகனும் பிற்காலத்தவரேயாவர். இவர்கள் தம் காலத்து வழங்கிய கர்ண பரம்பரைக் கதைகளைக் கொண்டே தம் காப்பியங்களைப் படைத்தார்கள் என்பது தெளிவு. இளங்கோவடிகள் தாமறிந்த கதையைச் சங்க காலத்தோடு தொடர்பு படுத்தி நூலினை யாத்துள்ளார் என அறியலாம்.

சிலப்பதிகாரக் காலம் கி.பி. 2- ஆம் நூற்றாண்டு என்ற கருத்து[தொகு]
சிலப்பதிகாரம் சங்க காலத்தில் தோன்றியது என்பர்.கடைச் சங்க காலத்திலேயே சிலம்பும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப் பாராட்டப்பட்டுள்ளன. மேலும் பல்லவர்களைப் பற்றி சிலப்பதிகாரம் எதனையும் கூறவில்லையாதலால் இந்நூல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்பர். சிலம்பும் மணி மேகலையும் பல இடங்களில் கச்சியைப் (காஞ்சி) பற்றிக் குறிப்பிட்டாலும் பல்லவ வேந்தர்கள் ஒருவரையும் ஒரு இடத்தில் கூட குறிக்கவில்லை. பல்லவர் பிராகிருத மொழியில் வெளியிட்ட ஆதி ஆணை வெளியீடுகள் மயிடவோலு, ஹீரகடஹள்ளி, பிரித்தானியப் பொருட்காட்சி சாலை ஆகிய இடங்களில் இன்னும் உள்ளன. இந்தியக் கல்வெட்டுத் தொகுதியிலும் இவை இடம் பெற்றுள்ளன. இவை கி. பி. 200-250. ஆண்டில் வெளியிடப்பட்டிருத்தல் வேண்டும் என்பர். பல்லவர்கள் காஞ்சியில் குடிபுகும் முன் அப்பகுதி சோழர்தம் வட எல்லைப் பகுதியாக அமைந்ததோடு, சோழர் பிரதிநிதிகளுக்கும் தலைநகரமாக இருந்திருந்தது என்பதை சங்க நூல்களின் வாயிலாக அறியலாம்.

சிலப்பதிகாரக் காலத்தில் காஞ்சியில் சோழர் பிரதிநிதியாக இருந்தவன் தொண்டைமான் இளந்திரையன் என்பவன். இவனே கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பெரும்பாணாற்றுப் படை என்ற நூலில் பாடப்பட்டவனாவான். பல்லவர் குடியேரும் முன் காஞ்சியில் வாழ்ந்த திரையர்க்கு இவ்விளந்திரையனே தலைவன். இத்திரையர்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழர்களுக்கு அடங்கி வாழ்ந்தவர் ஆவார்கள். காஞ்சியைக் குறிப்பிட்ட சிலப்பதிகாரம் எந்த வகையிலும் பல்லவ மன்னர்களைக் குறிப்பிடவில்லை. இதனால் சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலத்திற்குப் பின்னரே பல்லவர்கள் காஞ்சியில் குடியேறி இருக்க வேண்டும். இதனால் சிலப்பதிகாரம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனக் கூறுகின்றனர்.

சேரன் செங்குட்டுவன் காலம்

சேரன் செங்குட்டுவனின் மனைவி வேண்மாள் என சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. இவளை இளங்கோ வேண்மாள் என்பதும் பொருந்தும். பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தில் செங்குட்டுவனுக்கு குட்டுவன் சேரல் என்ற மகன் இருந்தான் எனவும் அம்மகன் சங்கப்புலவருள் ஒருவரான பரணருக்கு பிற பரிசில்களோடு ஒரு பரிசிலாகக் கொடுக்கப்பட்டான் எனவும் அறியலாகிறது. அக நானூற்றில் அறியலாகும் சேரன் செங்குட்டுவனின் தந்தையான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இறந்திருக்க வேண்டும். இமய வரம்பனுக்கு இரு தேவியரும் நான்கு பிள்ளைகளும் இருந்தனர். அவர்களுள் ஒருவனான செங்குட்டுவனே இமயவரம்பனுக்குப் பின் அரசக்கட்டிலேறினான். உடன் பிறந்தவரான இளங்கோவடிகள் துறவு பூண்டார். எஞ்சிய இரு புதல்வருள் ஒருவனான நார்முடிச்சேரல் நன்றாக் குன்றத்தின் அருகில் உள்ள கொங்கு நாட்டின் வட பகுதியை ஆண்டு வந்தான். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் குட்ட நாட்டுக்கு அரசனானான். இவர்கள் இருவரும் வஞ்சியைத் தலைநகராகக் கொண்ட சேரன் செங்குட்டுவன் ஆணைவழி ஆட்சி புரிந்தனர்.

கயவாகு காலம்

இலங்கை வேந்தன் கயவாகு பத்தினிக் கடவுள் பிரதிட்டிக்கப்பட்ட காலத்தில் வஞ்சியில் உடன் இருந்தான் என சிலம்பு கூறுகிறது. கயவாகு கி.பி. 171- ஆம் ஆண்டு பட்டத்திற்கு வந்தவன். அவன் அரசுக் கட்டில் ஏறிய பிறகே இலங்கையை விட்டு தமிழகம் வந்திருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் இடையீடு பட்டவர்களாக மகாவம்சத்தில் கூறும் கயவாகுகளுள் முதல்கயவாகுவே வரந்தரு காதையில் கூறிய இலங்கை வேந்தன் எனவும் அவ்வேந்தனே செங்குட்டுவனால் பத்தினிக் கடவுட்காக எடுக்கப்பட்ட விழாவில் கலந்து கொண்டான் எனவும் கூறுகின்றனர். டாக்டர். வில்ஹெம்கெய்கர் என்னும் அறிஞர் தான் மொழிபெயர்த்த மஹாவமிசத்தின் முகவுரையில் இலங்கை வேந்தர் அடுத்தடுத்து ஆண்ட காலங்களையும் அவர்தம் பெயர்களையும் புத்தராண்டிலும் கிறித்துவ ஆண்டிலும் குறிப்பிட்டுள்ளார். அவர் காட்டிய இலங்கைத் தொல் வேந்தருள் கி. பி. 171-173 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி புரிந்த நாற்பத்தாறாம் வேந்தன் என கயவாகுவைக் குறித்துள்ளார். இவனே சிலப்பதிகாரம் கூறிய கயவாகு எனும் பெயரிய இலங்கை வேந்தனாவான். இதனால் சிலப்பதிகாரக் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு எனலாம்.

சிலப்பதிகாரக் காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு (வானியல் கணிப்பு)
கோவலனும் கண்னகியும் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டுப் புறப்பட்ட காலம் பற்றியும், மதுரை எரியுண்ட காலம் பற்றியும் வரும் சோதிடக் குறிப்புகள் கொண்டு நோக்கின் கி. பி. 756 ஆகிய ஓராண்டே நன்கு பொருந்தும் என்பது திவான் பகதூர் சுவாமிக்கண்ணுப்பிள்ளை அவர்கள் கருத்து ( An Indian Ephemeris, VoL-1,pt-1, app.iii) இதனால் சிலப்பதிகாரம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்பது கருத்து.

சிலப்பதிகார காலத்தை வானியல் நெறியில் கணித்த நெறி துல்லியமாயினும், அவர் கொண்ட பாடத்தில் பிழை நேர வாய்ப்பு உண்டு. மேலும் அக்காலப் பல்லவர்கள் பற்றிய கருத்து இரட்டைக் காப்பியங்களில் இல்லை. எனவே ஒப்புமை வரலாற்றோடு பொருத்திக் கணிக்கப்பட்ட கயவாகு மன்னனின் கி. பி. 117 கண்ணகிக்குக் கல் நட்ட காலம் என்றும், அடுத்த வாழ்நாள் காலம் மணிமேகலை காலம் என்றும், இளங்கோவின் சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் கி. பி. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை என்றும் தெளிவாக உணரமுடிகிறது.

சிலப்பதிகாரம் சங்க நூல் அன்று என்ற கருத்து மேற்கோள்கள்

சிலப்பதிகார நூலில் பரத நாட்டியக் கருத்துக்கள் மிகுதியாக வந்துள்ளன.. மயமதம், கரவடநூல் முதலிய வட நூல்களும் ஆளப்படுகின்றன. வடமொழிப் பஞ்ச தந்திரத்தின் ஒரு கதையும்( கீரிப்பிள்லையைக் கொன்ற பிராமணியைக் குறித்தது இக்கதை. இவளுக்கு கோவலன் பொருளளித்து, தானம் செய்து, இவளைக் கணவனுடன் கூட்டி நல்வழிப்படுத்தினானம்) ஒரு சுலோகமும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நூலில் நான்மணிக்கடிகை,பழமொழி, ஆசாரக்கோவை முதலிய கீழ்க்கணக்கு நூல்கள் எடுத்தாளப்படுகின்றன.

இலக்கணம்

இந்நூலில் முன்னிலைப்பன்மையாகைய ‘நீர்’ என்ற சொல்லும் தன்மையொருமையாகிய ‘ நான்’ என்ற சொல்லும் (செங்குட்டுவற்குக் கண்ணகி கூற்று; தேவந்தி சொல்; காவற்பெண்டு சொல்; அடித்தோழி சொல்) இந்த என்ற சுட்டுச் சொல்லும்; அறிகுவன், போக்குவன், உறுவன் என எதிர்காலத்துத் தன்மையொருமையில் வரும் அன் விகுதி முதலிய பிற்காலத்து வழக்குகளும் வந்துள்ளன. அன் ஈறு தமது காலத்து வழக்கென இளம்பூரனார் குறிப்பிடுகிறார்.

பிற்காலப் பெயர்கள்

சிலப்பதிகாரத்தில் வங்க தேசத்தினரை பங்களர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிற்காலப் பெயராகும். மேலும் பக்கம், வாரம், திதி முதலியனவும், திரையல், அடைக்காய் முதலிய பிற்காலத்து நுகர்ச்சிப் பொருள்களும் கூறப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் நோக்குங்கால் சிலப்பதிகாரம் சங்க நூல் அன்று என்பது உறுதியாகிறது என்பர். இந்நூலின் கண் மிகுதியாக ஆளப்படுகின்ற வடமொழிச் சொற்களும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றன.

சினவரன் தேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்திலொளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்…
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருண்முனி”
( சிலம்பு.10.180-187)
என வரும் அடிகள் இவற்றை உணர்த்தும். சங்க கால நூல்களில் இவை போன்ற சொற்கள் வரும் என நினைக்கவும் கூடவில்லை.

தமிழிலக்கிய வரலாறு

சங்க காலத்துச் செய்யுள்கள் தனித் தனியாகத் தோன்றிப் பின்னர் தொகையாகவும் பாட்டாகவும் தொகுக்கப்பட்டன. அதன் பின்னர் நாட்டிலே ஜைன சமயம், வைதீகச் சமயம் என்ற இருவகைக் கிளர்ச்சிகள் தோன்றின. இக்காலத்தே பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றலாயின. பக்தி இலக்கியங்களும் எழுந்தன. வடமொழியும் தமிழும் கலந்து உறவாடின. இதன் பயனாய் காவிய காலம் தோன்றியது. உதயணன் பெருங்கதை, மணிமேகலை, சிந்தாமணி முதலியன இக்காலப் பகுதியில் தோன்றியனவே. இம்மூன்றிலும் காப்பியம் என்ற சொல் பயின்று வந்துள்ளது. பொதுவாக இலக்கிய வரலாற்றில் ஒரு காலத்தே எழுந்த நூல்கள் அமைப்பு – நெறியில் ஒரு தன்மையவாய் அமைதல் இயற்கையாகும். ஆகவே, சிலப்பதிகாரமும் இப்பிற்காலப்பகுதியைச் சார்ந்தது என்றே ஊகிக்கலாம்.

ஊழ்வினை நம்பிக்கைகள்

ஒழுக்கத்தை வற்புறுத்தி வந்த ஜைன சமயத்தினர் நாளடைவில் சமயத் தத்துவங்களை பாராட்ட ஆரம்பித்தனர். அவற்றுள் கருமம் பற்றிய கொள்கைகளை ஆழ்ந்து நூல் எழுதத் தொடங்கினர். வடநாட்டிற் பிறந்த ஜாதகக் கதைகளை முன்மாதிரியாகக் கொண்டு நூல் அமையலாயிற்று. முற்பிறவியில் நிகழ்ந்த கருமங்களின் விளைவே அடுத்த பிறவியின் நிகழ்ச்சிகளாகும் என்ற கொள்கை தமிழகத்தில் சம்பந்தர் போன்றோர் காலத்திற்குப் பிறகு நுட்பமாகச் செய்யப்பட்டன. சிலப்பதிகார வரலாறும் இந்நெறியைப் பின்பற்றுகிறது. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதூஉம்’ எனப் பதிகத்தில் குறிப்பிடுவதோடு.

வினை விளை காலமாதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரா னாகி
( XVI. 148-149)
எனவும்

உம்மை வினைவந் துருத்த காலைச்
செம்மையிலோர்க்குச் செய்தவம் உதவாது (XXIII..171-172)
எனவும் வினையின் இயல்பை வற்புறுத்திக் கூறுதல் காணலாம். மேலும் கோவலன் முதலியவர்களது துன்ப நுகர்ச்சிக்குக் காரணமாக , அவர்களது முற்பிறப்பு வரலாறு கூறப்படுகிறது. இவ்வகைப் பிறப்பு வரலாறுகள் சங்க காலத்து வழஙகியவனவாகத் தெரியவில்லை. இதனை நோக்குமிடத்தும் இது சங்க கால நூல் இல்லை என்பது தெளிவு.

பத்தினி வழிபாடு

இந்நூல் பத்தினிக் கடவுள் வழிபாடு தமிழ் நாட்டிலும் பிற நாடுகளிலும் ஏற்பட்டிருக்க வேண்டும். இறுதியிலுள்ள வஞ்சிக்காண்டம் முழுவதும் பத்தினி வழிபாட்டையே தலைமைப் பொருளாகக் கொண்டுள்ளது. இப்பத்தினி வழிபாடு எப்பொழுது தோன்றியது என்பதற்கு சான்றுகள் இல்லை. ஆனால் சங்க காலத்திலோ ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்திலோ கூட சான்று காணப்படவில்லை. ஆனால் சக்தி வழிபாடும் அவை பற்றிய நூல்களும் தோன்றிய காலம் கி. பி. 500 முதல் 900 வரை என்பர். (An Outline of the Religious Literature or India. O.U.P) இதனை நோக்கினும் சிலப்பதிகாரம் சங்க நூலன்று எனலாம்.

சமுதாய நிலை

சிலப்பதிகாரதில் விளங்கும் நாட்டிய நிலையும், இசையின் நிலையும், கணிகையர் நிலையும் பிறவும் இக்காலத்துச் சமுதாயம் நாகரீகச் சுழற்சியில் மூழ்கி மகிழ்ச்சியில் திளைத்திருந்தமையைத் தெரிவிக்கின்றன. இவைகளுக்கும் சங்க காலத்துச் சமுதாயத்தில் புலப்படும் எளிமை, நேர்மை, வீரம், காதல் முதலியவற்றுக்கும் வெகு தூரம். எனவே, சங்க இலக்கிய காலத்திற்குப் பிற்பட்ட சமய, சமுதாய நிலையுமே சிலப்பதிகாரத்தில் வெளிப்படுகின்றன எனலாம்.

உசாத்துணை

ஆர்.கே.சண்முகம் செட்டியார். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட உரை. புதுமலர் நிலையம் -வெளியீடு- 1946
வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட மதிப்புரை. புதுமலர் நிலையம் வெளியீடு -:1946
எஸ். வையாபுரிப்பிள்ளை. தமிழ் ஆராய்ச்சித்துறைத்தலைவர். சென்னைப் பல்கலைக்கழகம்- சிலப்பதிகாரப் : புகார்க்காண்டம் முன்னுரை. புதுமலர் நிலையம் வெளியீடு- 1946

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply