ஆட்டம் ஆரம்பம்

ஆட்டம் ஆரம்பம்

தாயகன்

August 15, 2020

னாதிபதி கோத்தபய ராஜபக்ச -பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசில் தமிழ்,முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் கடந்த புதன்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகுல்மடுவ மண்டபத்தில் நடந்தேறிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக்களின் தலைவர்கள் நியமனம் மற்றும் அதன் பின்னரான அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனத்தின் மூலம் நிதர்சனமாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசின் 25 பேரைக் கொண்ட அமைச்சரவையில் ஒரு தமிழருக்கும் ஒரு முஸ்லிமுக்கும் 39 பேரைக்கொண்ட இராஜாங்க அமைச்சர்களில் இரு தமிழர்களுக்கும் நியமனங்களை வழங்கியும் மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக்குழுக்களின் தலைவர் பதவிகளில் தமிழ், முஸ்லிம் மக்களின் தாயகப் பிரதேசங்களான திருகோணமலை ,அம்பாறை மாவட்டங்களுக்கு சிங்களவர்களை நியமித்தும் 25 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனத்தில் எந்தவொரு தமிழ் முஸ்லிமுக்கும் இடம்வழங்காதும் தந்து பேரினவாத முகத்தை எந்தவித மனக்கிலேசமுமின்றி அப்பட்டமாக கோத்தபாய அரசு வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி நடந்த இலங்கை பாராளுமன்றத்துக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவுக் கட்சிகளின் சார்பில் என்றுமில்லாதவாறு தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அங்கயன் இராமநாதன், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் வன்னி மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. யை சேர்ந்த திலீபன், பொதுஜன பெரமுனவை சேர்ந்த காதர் மஸ்தான் என 4 பேர் வெற்றி பெற்றனர்.

அதேபோன்று தமிழ், முஸ்லிம் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரான சிவனேசதுரை சந்திரகாந்தன்,பொதுஜன பெரமுனவை சேர்ந்த முன்னாள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.யான வியாழேந்திரன் ஆகியோரும் திகாமடுல்ல மாவட்டத்தில்,தேசிய காங்கிரஸை சேர்ந்த முன்னாள் அமைச்சரான அதாவுல்லாவும் வெற்றி பெற்றனர். அதேபோன்று தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ரமேஸ்வரன் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

எனவே இந்த பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தலைவராகக்கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் என்றுமில்லாதவாறு 11 தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளைப்பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள நிலையிலேயே அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர்கள், அமைச்சு செயலாளர்கள் நியமனங்களில் தமிழ், முஸ்லிம்கள் திட்டமிட்டு பொதுஜன பெரமுன அரசினால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ச அரசின் அமைச்சரவையில் முன்னர் பிரதி அமைச்சர் பதவிகளைக்கூட வகித்திராத நாமல் ராஜபக்சவுக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சும், உதய கம்மன்பிலவுக்கு வலுச் சக்தி துறை அமைச்சும் நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் பொதுஜன பெரமுனவினர் மீது தொடுக்கப்பட்ட இலஞ்ச , ஊழல் மோசடிக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவினருக்கு ஆதரவாக வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு தேசியப்பட்டியல் ஊடாக எம்.பி. பதவியும் நீதி அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் வடக்கிற்கு மட்டும் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கிற்கு இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரனும் மலையகத்துக்கு இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமானுமே நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ், முஸ்லிம் சார்பில் மலையகத்துக்கு அமைச்சரவை அமைச்சு வழங்கப்படவில்லை. எனினும் அமைச்சரவை அமைச்சராக முஸ்லிமான அலி சப்ரி இருக்கின்றபோதும் அவர் தேசியப்பட்டியல் ஊடாகவே வந்தவர் என்பதனால் எந்த மாகாணத்தையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. கிழக்கு மாகாணத்துக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு சிங்கள அமைச்சர் கூட நியமிக்கப்படவில்லை. இதே போன்றே பொலனறுவை மாவட்டம், மொனராகல மாவட்டம்,கேகாலை மாவட்டம் ஆகியவற்றுக்கும் அமைச்சரவை அமைச்சுப்பதவி கிடைக்கவில்லை.

கண்டி மாவட்டத்தில் மஹிந்தானந்த அளுத்கமகே , கெஹெலிய ரம்புக்வெல்ல, நுவரெலியா மாவட்டத்தில் சி.பி.ரத்நாயக்க, பதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால டி சில்வா ,காலி மாவட்டத்தில் ரமேஷ் பத்திரன,மாத்தறை மாவட்டத்தில் டலஸ் அழகப்பெரும, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, சமல் ராஜபக்ஷ , மாத்தளை மாவட்டத்தில் ஜனக பண்டார தென்னகோன், களுத்துறை மாவட்டத்தில் ரோஹித அபேகுணவர்தன, இரத்தினபுரி மாவட்டத்தில் பவித்ரா வன்னியாராச்சி ,வாசுதேவ நாணயக்கார, அநுராதபுரம் மாவட்டத்தில் எஸ்.எம் சந்திரசேன,குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஜொன்ஸ்டன் பெரேரா, கொழும்பு மாவட்டத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பந்துல குணவர்தன, தினேஸ் குணவர்த்தன, காமினி லொகுகே,கம்பஹா மாவட்டத்தில் பிரசன்ன ரணதுங்க என்ற வகையில் அமைச்சரவை அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசியப்பட்டியலில் இரு அமைச்சரவை அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கொழும்பு மாவட்டம் 5 அமைச்சரவை அமைச்சுக்களைப்பெற்று முதலிடத்திலும் அம்பாந்தோட்டை மாவட்டம் 3 அமைச்சரவை அமைச்சுக்களைப்பெற்று இரண்டாமிடத்திலும் உள்ளன.

அதுமட்டுமன்றி இராஜாங்க அமைச்சுக்களில் கூட முன்னர் பிரதி அமைச்சுப்பதவிகளைக்கூட வகித்திராதவர்களுக்கும் தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. தேனுக விதானகமகே , சிசிர ஜயக்கொடி, பியல் நிசாந்த டி சில்வா பிரசன்ன ரணவீர டீ.வீ.சானக டீ.பீ. ஹேரத், சசிந்திர ராஜபக்‌ஷ,நாலக கொடஹேவா, ஜீவன் தொண்டமான், அஜித் நிவாட் கப்ரால் – சீதா அரும்பேபொல, சன்ன ஜயசுமன ஆகியவர்களுக்கே இவ்வாறு இராஜாங்க அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் நாலக கொடஹேவா, அஜித் நிவாட் கப்ரால், சீதா அரும்பேபொல ஆகியோர் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாவர்.

இதேவேளை ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் 25 பேரைக்கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையில் முக்கியமான 8 அமைச்சுக்குள் ராஜபக்ச குடும்பத்துக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அதில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் பாதுகாப்புஅமைச்சும் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் நிதி, புத்த சாசனம், மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள், நகர அபிவிருத்தி,வீடமைப்பு அமைச்சுக்களும் சமல் ராஜபக்சவிடம் நீர்ப்பாசன அமைச்சும் நாமல் ராஜபக்சவிடம் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் சமல் ராஜபக்‌ஷவும் நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழங்கள், மிளகாய், வெங்காயம் விதை உற்பத்தி உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்சவின் புதல்வரான சசிந்திர ராஜபக்‌சவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இம்முறை இராஜாங்க அமைச்சு நியமனங்கள் எதிர்க்கட்சிகளின் கிண்டல்களுக்கு இலக்காகியுள்ளதுடன் மக்களும் இந்த நியமனங்களை வேடிக்கையாகவே பேசுகின்றனர். கரும்பு ,சோளம் ,மரமுந்திரிகை , மிளகு , கராம்பு, கறுவா, வெற்றிலை க்கு ஒருஇராஜாங்க அமைச்சர், ,உர உற்பத்தி , விநியோகம் , கிருமிநாசினி பாவனை க்கு ஒரு இராஜாங்க அமைச்சர், அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு க்கு ஒரு இராஜாங்க அமைச்சர், மகாவலி வலயங்களை அண்மித்த கால்வாய்களுக்கு ஒரு இராஜாங்க அமைச்சர், வயல் நிலங்கள் அதனை அண்மித்த குளங்கள் , நீர்த்தேக்கங்களுக்கு ஒரு இராஜாங்க அமைச்சர், பிரம்புகள், பித்தளை , மட்பாண்டங்கள், மரக் கைத்தொழிலுக்கு ஒரு இராஜாங்க அமைச்சர்,கால்நடை வளங்கள் , பண்ணை மேம்பாடு , பால் மற்றும் முட்டைக்கு ஒரு இராஜாங்க அமைச்சர்,மரக்கறிகள் , பழங்கள் , மிளகாய் , வெங்காயம் விதை உற்பத்தி க்கு ஒரு இராஜாங்க அமைச்சர், கழிவுப்பொருட்கள் அகற்றல் , சமூதாய தூய்மைப்படுத்தலுக்கு ஒரு இராஜாங்க அமைச்சர் என தமது உறுப்பினர்களுக்கு ஏதாவது ஒரு அமைச்சை வழங்க வேண்டுமென்ற ரீதியில் ஒரு அமைச்சு பல அமைச்சுக்களாகப் பிரித்து வழங்கியுள்ளனர்.

எனினும் கடந்த ஒவ்வொரு அரசிலும் இருந்து வந்த மீள்குடியேற்ற அமைச்சு, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சு,தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழி மற்றும் நல்லிணக்க அமைச்சு, மலைநாட்டு புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாய அபிவிருத்தி அமைச்சு போன்ற சிறுபான்மையினங்களான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய அமைச்சுக்கள் பொதுஜன பெரமுன அரசில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. தமிழ், முஸ்லிம்களுக்கான அமைச்சுக்கள் மட்டுமல்ல அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களும் இல்லாது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமிழ் ,முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு,கிழக்கு மற்றும் மலையகத்தில் என்றுமில்லாதவாறு 11 தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளைப்பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் 11 பேரில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஈ.பி.டி.பி. செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவியும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வியாழேந்திரனுக்கும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜீவன் தொண்டைமானுக்கும் இராஜாங்க அமைச்சுப்பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. மிகுதி 8 பேரில் கிழக்குமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதாவுல்லா ஒரு கட்சித்தலைவர்.அத்துடன் முன்னாள் அமைச்சரவை அமைச்சராகவும் இருந்தவர். அவருக்கு எந்த அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை. அதேபோன்று வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கயன் கடந்த மைத்திரி அரசில் முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்தவர். அதேபோன்று காதர் மஸ்தான் பிரதி அமைச்சராக இருந்தவர். இவர்கள் இருவருக்கும் எந்தவொரு அமைச்சும் வழங்கப்படவில்லை.

புதிய முகங்களுக்கு கூட தேசியப்பட்டியலையும் வழங்கி இராஜாங்க அமைச்சுக்களையும் வழங்கிய கோத்தபாய அரசு வடக்கு,கிழக்கில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பொதுஜன பெரமுனவிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் பொதுஜன பெரமுன ஆதரவு தனிக்கட்சியாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்று, “நாம் வடக்கு கிழக்கிலும் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த மாகாணசபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றுவோம்.வடக்கிலும் நாம் வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளோம்” என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச பெருமை பேசுவதற்கான கள நிலைமையை ஏற்படுத்திக்கொடுத்த அதாவுல்லா, அங்கயன், காதர்மஸ்தான் ஆகியோரை இராஜாங்க அமைச்சுப்பதவிகள் கூட வழங்காது புறக்கணித்தமை திட்டமிட்ட இன, மத ரீதியான பாகுபாடு.

சரி அமைச்சரவை அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களில் தான் தமிழ் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று பார்த்தால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் நியமனத்தில் கூட தமிழ், முஸ்லீம் தாயகப்பகுதிகளில் சிங்களத் திணிப்பு இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் அந்த திணிப்பு இடம்பெறாதபோதும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் திருகோணமலை மற்றும் திகாமடுல்ல [அம்பாறை]மாவட்டங்களுக்கு சிங்கள எம்.பி.க்களே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை . மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன வில் போட்டியிட்ட வியாழேந்திரன் வெற்றிபெற்ற நிலையில் அவருக்கு இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. அடுத்தவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினை சேர்ந்த சிவநேசத்துரை சந்திரகாந்தன். இவர் தற்போது சிறையில் இருக்கின்றார்.

அதேவேளை இராஜாங்க அமைச்சுப்பதவிகளில் ஒன்று மிகுதியாக இருப்பதுடன் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்பாளர் பதவியும் வெற்றிடமாக இருப்பதனால் இவற்றுக்கு சிவநேசத்துரை சந்திரகாந்தன் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அமைச்சரவை அமைச்சில் தமிழ் முஸ்லிம்களுக்கு இரு இடங்களும் இராஜாங்க அமைச்சுக்களில் தமிழர்களுக்கு இரு இடங்களும் வழங்கப்பட்ட போதும் அமைச்சுக்களுக்கான செயலாளர் நியமனங்களில் எந்தவொரு தமிழ், முஸ்லிமும் உள்வாங்கப்படவில்லை. அமைச்சரவை அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள், அமைச்சு செயலாளர்கள் நியமனங்களில் தனது முதல் ஆட்டத்தை தொடங்கியுள்ள கோத்தபாய ராஜபக்ச அரசின் அடுத்த ஆட்டங்கள் எப்படி இருக்குமென்பதனை இன்னும் சில நாட்களில் கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும்.

https://yarl.com/aggregator/sources/11

——————————————————————————————————————–


அறுதிப் பெரும்பான்மையில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம்

மொஹமட் பாதுஷா  

2020 ஓகஸ்ட் 18

சுதந்திர இலங்கையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றிலிரண்டு அறுதிப் பெரும்பான்மையுடனான ஆட்சியை இம்முறை, பொதுஜன பெரமுன நிறுவிக் கொண்டிருக்கின்றது. இந்தப் பலம், ஆட்சியாளர்களுக்குத் தாம் நினைத்ததைச் செய்யக் கூடிய இயலுமையை வழங்கும். இதற்காகவே, படாதபாடுபட்டு 150 ஆசனங்களைப் பொதுஜன பெரமுன பெற்றிருக்கின்றது.  

ஆனால், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அடுத்துவரும் ஐந்து வருடங்களில் வசந்தகாலம் நிலவுமா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்துதான் விடை காண வேண்டும்.  

தேர்தல் முடிவுகளை ஆழமாக அலசுகின்றவர்கள், மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றி என்பதற்கு அப்பால், மேலும் பல விடயங்களைப் புரிந்து கொள்ளலாம். அதாவது, சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் கணிசமானவர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிளவுபட்ட அணியினரால் கட்டமைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியும் நாட்டின் பிரதான கட்சிகளாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன.  

இந்தப் பின்னணியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் பிரதான அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன போன்றோர் புறமொதுக்கப்பட்டுள்ளனர்.   

இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், சிங்களப் பகுதிகளில் பொதுஜன பெரமுனவே பெரும்பாலும் வெற்றியீட்டியுள்ளது. சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியில், சிங்கள மக்களின் விகிதாசாரப் பங்களிப்பை விட, ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள், தமிழர்களின் வகிபாகம் அதிகமாகக் காணப்படுகின்றது போல ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது. எம்.பிகளின் எண்ணிக்கையிலும் இதை அவதானிக்கலாம்.  

இதன்மூலம், மொட்டு அணிக்கே பெரும்பான்மை மக்கள், ஆணை வழங்கி இருக்கின்றார்கள், சஜித் அணியை, அவர்கள் அங்கிகரிக்கவில்லை என்ற தோற்றப்பாடு, கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது. பெரும்பான்மை மக்களில், கிட்டத்தட்ட 75 சதவீதமானோர் மொட்டுச் சின்னத்துக்கு ஆதரவளித்து இருப்பதாகவும் ரணிலை முற்றாகப் புறக்கணித்துள்ளதாகவும் சஜித் அணியைக் கூட, அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் குறிப்புணர்த்தும் வகையிலேயே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாகச் சொல்லலாம்.  

இவ்வளவுக்கும் மத்தியில், ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கோதாவில், தமிழர்களும் முஸ்லிம்களும் தமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். ஆனாலும், பெருமளவான சிறுபான்மையின  எம்.பிக்கள் எதிர்த்தரப்பிலேயே அமரவுள்ளதாலும், ஆளும் தரப்பில் இருக்கின்ற சிறுபான்மையின எம்.பிக்களுக்கும் ‘கட்டுப்பாடுகள்’ இருக்கின்றமையாலும், அமையப் போகின்ற நாடாளுமன்றம், சிறுபான்மையின மக்களுக்குச் சாதகமானதாக அமையுமா என்ற சந்தேகம் எழவே செய்கின்றது.  

பொதுவாகவே, அறுதிப் பெரும்பான்மை என்பது, சிறுபான்மையின சமூகங்களுக்கு அவ்வளவு நல்ல சகுணங்களாக இருப்பதில்லை. ஏனெனில், ஜே.ஆர் ஆட்சியின் அனுபவங்கள் அப்படிப்பட்டவை! தமது, மிக நீண்டகால ஆட்சிக் கனவை நனவாக்குவதற்காக, ஆறில் ஐந்து பலம் பயன்படுத்தப்பட்ட வரலாறுகளே அதிகம். அதற்காக, அமையும் புதிய அரசாங்கமும் அவ்விதமே செயற்படும் என்று உறுதியாகக் கூறிவிடவும் முடியாது.  

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, இந்த நாட்டைப் பல வருடங்கள் ஆட்சி செய்து விட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இப்போதுதான் சிம்மாசனம் ஏறியுள்ளார். இந்தப் பின்புலத்தில், ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு நெடுங்காலம் ஆட்சியதிகாரத்தில் நிலைத்திருப்பதற்கான விருப்பம் இருக்கின்றது என்பது, பொதுவான அபிப்பிராயமாகும்.   

எனவே, புதிய அரசாங்கம் முஸ்லிம்களையும் தமிழர்களையும் அரவணைத்துச் செல்லும் வாய்ப்புள்ளதாகக் கூறலாம். அதனையே குறிப்பாக, முஸ்லிம்கள் அவாவி நிற்கின்றனர்.  

அரசியல் காரணங்களுக்காகவே இலங்கையில் இனவாதமும் மதவெறுப்பும் தோற்றுவிக்கப்பட்டன; ஊக்குவிக்கப்பட்டன.  அந்த வகையில் நோக்கினால், பொதுஜன பெரமுனவுக்கு இப்போது, அறுதிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. எதிர்க்கட்சியில் உள்ள சில முஸ்லிம் எம்.பிக்கள் உள்ளடங்கலாகப் பலர், ‘பெல்டி’ அடிக்கத் தயாராக இருக்கின்றனர். எனவே, அளவுக்கு மிச்சமான பலம் ராஜபக்‌ஷக்களுக்குக் காணப்படுகின்றது.  

எனவே, சிறுபான்மையின மக்களை, இனவாத சக்திகள் சீண்டுவதன் மூலம், நாட்டில் குழப்பகரமான நிலை ஏற்படுவதை அரசாங்கம் விரும்பாது. இப்போது, ஆளும் தரப்புக்கு எல்லாம் கிடைத்து விட்டதால், அப்படியொரு தேவை இல்லை. அத்துடன், வேறு யாரும் இதைச் செய்தாலும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டாது என்றும் எடுத்துக் கொள்ளலாம். எனவே, முஸ்லிம்களையும் தமிழர்களையும் வரையறுக்கப்பட்ட மட்டத்தில் வைத்து மனம் கோணாமல் கையாள்வதற்கே ஆட்சியாளர்கள் விரும்பலாம் என்ற நம்பிக்கை உள்ளது.  

ஆனால், அறுதிப் பெரும்பான்மைப் பலத்தை வைத்துக் கொண்டு, கடந்தகாலத்தில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்ற நகர்வுகள் முன்னெடுக்கப்படுமாயின், இந்த நம்பிக்கை வீண்போய் விடும். அவ்வாறு எதுவும் நடந்து விடுமோ என்பதே, சிறுபான்மையின சமூக அரசியலில், கடந்த சில தினங்களாக அங்கலாய்க்கப்படும் விடயமாக இருக்கின்றது.   

புதிய அரசாங்கம், பல்வேறு காரியங்களைச் செய்து முடிப்பதற்கு இந்தப் பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தும். மாகாண சபை முறைமையில் திருத்தம், அரசமைப்பின் திருத்தங்களை மீளத் திருத்துதல், தேர்தல் முறைமையில் மாற்றம் எனப் பல திட்டங்கள், பெரமுன அரசாங்கத்திடம் இருக்கின்றன. அதற்கேற்றாற்போல், எல்லாம் கட்டமைக்கப்பட்டு வருவதையும் கூர்ந்து நோக்குவோரால் அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.  

பெரும்பான்மையின மக்களிடம் இருக்கின்ற சிறிதளவு ஆதரவையும் இழந்து விடக் கூடாது என்பதற்காக (ஐ.தே.க, சு.க, ஐ.ம.சக்தி போன்ற) மற்றைய பெரும்பான்மையினக் கட்சிகளும் ஆளும்தரப்பின் நகர்வுகளைப் பெரிதாக எதிர்க்காது. எனவே, ‘அப்படி’ எதுவும் நடந்தால், சிறுபான்மை முஸ்லிம்களும் தமிழர்களுமே, அதற்குள் கிடந்து உழல வேண்டிய நிலை ஏற்படும்.  
அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு தமிழ் எம்.பிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சும் இருவருக்கு இராஜாங்க அமைச்சுகளும் வழங்கப்பட்டுள்ளன.  முஸ்லிம் தரப்பில், ஜனாதிபதி சட்டத்தரணியும் அண்மைக்காலமாகப் பெரமுனவின் வெற்றிக்கு உழைத்தவருமான அலி சப்ரிக்கு தேசியபட்டியல் வழங்கி, நிதி அமைச்சராகவும் அரசாங்கம் நியமித்துள்ளது. பிக்குகளின் அழுத்தத்தையும் மீறி, ஜனாதிபதி இப்பதவிக்கு அவரை நியமித்துள்ளார்.  

இருப்பினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில், அமைச்சு கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டவரும் ராஜபக்‌ஷக்களுக்கு மிக நெருக்கமாக இருந்தவருமான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வுக்கு எந்த அமைச்சும் கிடைக்கவில்லை. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன், இராஜாங்க அமைச்சராகவும் எந்த முஸ்லிம் எம்.பியும் நியமிக்கப்படவில்லை. ஆயினும், கடந்த முறை, ஒரு முஸ்லிமைக் கூட அமைச்சரவைக்கு நியமிக்காத ஆளும் கட்சி, இம்முறை ஒருவரையாவது நியமித்துள்ளது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.  

பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவை, தேசிய அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் பலத்தை, ஏற்கெனவே இழந்து விட்டிருக்கின்ற நிலையில், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு விசுவாசமாக இருந்த தலைவரான அதாவுல்லாஹ்வுக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றமை, முஸ்லிம்களுக்கு இருந்த ஒரேயொரு நம்பிக்கையை வீணாக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.  

எவ்வாறிருப்பினும், ஆளும் கட்சி நினைக்கின்ற எந்தவொரு தீர்மானத்தையும் சட்டமூலத்தையும் திருத்தத்தையும் நாடாளுமன்றில் இலகுவாக நிறைவேற்றி விடுவார்கள். அமைச்சரவையில் இருக்கின்ற ஒரு சில சிறுபான்மையின அமைச்சர்களாலோ, ஆளும் தரப்பில் உள்ள ஏனைய தமிழ், முஸ்லிம் எம்.பிக்களாலோ எதிர்த்துப் பேச முடியாது.   

கடந்த பல அரசாங்கங்களில், அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இருந்தபோது, முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்களுக்காகக் குரல் கொடுப்பதற்குத் தயங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள், இந்த ஆட்சியில் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பேசுவார்கள் என்றோ, அவ்வாறு பேசினாலும் எதாவது நடக்கும் என்றோ யாரும் எதிர்பார்க்கத் தேவையில்லை.  

இன்று, முஸ்லிம் சமூகம் இவ்வாறான ஒரு நிலைக்கு வந்திருக்கின்றது என்றால், அதற்கு அவர்கள் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.  தமிழ் அரசியல் தலைமைகள், கொஞ்சம் வித்தியாசமாகச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும், அது வெற்றியைத் தரும் என்பது நிச்சயமில்லை.  

எனவே, சிறுபான்மையினச் சமூகங்கள், எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு, முற்றாக இணக்க அரசியலுக்குள் உச்சக்கட்ட சகிப்புத்தன்மையுடன் சங்கமமாக வேண்டிய நிலை வரலாம். குறிப்பாக, முஸ்லிம் தலைவர்கள் இதைச் செய்வதில் தவறிழைப்பார்களாயின், முஸ்லிம் கட்சிகளை மெல்ல மெல்லக் கைவிட்டு, பெருந்தேசியக் கட்சிகளை நோக்கி, மக்கள் நகர்வதற்கான சூழல் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், தமிழ் மக்கள் அவ்விதம் நகர மாட்டார்கள்.  

அதற்காக யாரும் நம்பிக்கை இழக்கவோ, அச்சப்பட வேண்டிய அவசியமோ இல்லை. ஏனெனில், ‘நமக்குப் பெரும்பான்மைப் பலம் இருக்கின்றதுதானே; எல்லாம் கிடைத்து விட்டதுதானே’ என்ற எண்ணத்தில், பன்னெடுங்காலம் ஆட்சி செய்யும் நோக்கோடு, ஆட்சியாளர்கள் சிறுபான்மைச் சமூகங்களை அரவணைத்துப் பயணிக்கும் மாறுபட்ட அரசியலைச் செய்வதற்கும் வாய்ப்புள்ளது.  
எனவே, மிகக் கவனமாகவும் பக்குவமாகவும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைக்க வேண்டியதே இன்றைய தேவையாகும்
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அறுதிப்-பெரும்பான்மையில்-சிறுபான்மைச்-சமூகங்களின்-எதிர்காலம்/91-254455

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply