உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்?


உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்?

நக்கீரன்

இந்த நாடு சிங்கள பவுத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று பொதுபல சேனாவின்  தலைவர் ஞானசார கல பொட தேரர் கூறியிருக்கிறார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் “இந்த நாட்டின் ஆதிக் குடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கல பொட தேரர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறித் தத்தம் மூதாதையர்கள் வந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டும். ஏன் பவுத்த மதம் கூட இந்தியாவில் இருந்து வந்ததுதான். அதையும் பாரத நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எனவே இத்தகைய நடைமுறைச் சாத்தியமில்லாத கூற்றுக்கள் கூறுவதை நிறுத்த வேண்டும்” என மே 22, 2013 அன்று  கொழும்பில் இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து அய்க்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில் “தமிழர்களின் நிலம், கடல் பறி போகின்றது. தமிழர்களின் மொழி, கலாசாரம், மதம் அழித்தொழிக்கப்படுகின்றது. அரசியல் அமைப்பில் 13 ஆவது திருத்தம் என்ற உரிமையைக் கூட வழங்க மறுத்துவிட்டு, இந்த நாட்டை சிங்கள, பவுத்த நாடு என்று அறிவிக்கின்றீர்கள்.  விமல்வீரவன்ஸ, சம்பிக்க இரணவக்க, குணதாச அமரசேகர, ஞானசார கல பொட தேரர் ஆகியோர் உசுப்பி விடப்பட்டுள்ளனர். இதற்குப் பின்னால் இந்த அரசு இருக்கின்றது”  எனக் குற்றம் சாட்டினார்.

“செப்தெம்பர் மாதம் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்று சர்வதேச சமூகத்துக்கு உறுதி வழங்கிவிட்டு இன்று நீதிமன்றத்தின் பின்னால் சென்று ஒளிவதற்கு இந்த அரசு முயற்சிக்கின்றது. இப்படியே போனால் ஓடி ஒளிவதற்கு இடமில்லாத நிலைமை ஏற்படப் போகின்றது” என்றார்.

சிங்கள – பவுத்த பேரினவாதிகள் விஜயனது வருகையோடுதான் இலங்கைத் தீவின் வரலாறு தொடங்குகிறது  எனப் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.  ஆனால் இந்தக் கதையைக் கூறும் மகாவம்சமே விஜயனது வருகைக்கு முன்னர் இலங்கைத்தீவில் நாகர், இயக்கர், அரக்கர், புலிந்தர்  இருந்தனர் என்றும் அவர்கள் கொற்றமும் கொடியோடும் அரசாட்சி செய்தார்கள் என்றும் கூறுகிறது.

விஜயனது வருகைக்கு முன்னர் நாகர்,  இயக்கர் வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களே இலங்கையை ஆண்டு வந்தார்கள். அந்த அரசர்களுள் மணியக்கிகா, மகோதரன், குலோதரன் ஆகிய நாகவம்ச  மன்னர்களும் குவேனி, மஹாகல சேனன் ஆகிய இயக்க வம்ச மன்னர்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

Image result for இலங்கையில் உள்ள நாகர் புத்தர் சிலை

இலங்கையில் உள்ள நாகர் புத்தர் சிலை

மகாவம்சம் மற்றும் ஜாதக கதைகள் இலங்கையை தம்பபாணி எனக் குறிப்பிடுகிறது. இலங்கையில் உள்ள  நாகதீபம், கல்யாணி (இன்றைய களனி) என்ற இடங்களையும் அங்கே இயக்கர்களும் இயக்கிகளும் வாழ்ந்தார்கள் எனக் குறிப்பிடுகின்றன. மகாவம்சம் இயக்கர்கள் தெற்கிலும் (மகியங்கன) நாகர்கள் வடக்கிலும் (நாகதீபம்) வட மேற்கிலும் (கல்யாணி) வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது. இவர்கள் திராவிட இன மக்களாவர்.

இந்த நாகர்கள் கோதாவரி மற்றும் நர்மதா நதிகளுக்கு இடையில் மற்றும் அவந்தி மற்றும் மவுரியக் காலங்களில் மற்றும் அதற்குப் பின்பும் வாழ்ந்த நாகர்களுடன் தொடர்பு உள்ளவர்களாக இருக்கக்கூடிய சாத்தியம் உள்ளது.

பழைய தமிழ் மரபுப்படி பல்லவ வம்சத்தின் பாரம்பரியம் பீலிவளை என்ற நாக இளவரசியை சோழன் கிள்ளிவளவன் திருமணம் செய்து கொண்டதன்  மூலம் உருவானது எனச் சொல்லப்படுகிறது.

தென்பகுதி துணைக்கண்டத்தில் அவர்களுடைய பெயருடன் தொடர்புள்ள நாகர்கோவில், நாகப்பட்டினம், நாக்பூர் போன்ற ஊர்கள் உள்ளன.
ஈழத்தில் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பல தொல்லியற் சான்றுகள்  தமிழ் (திராவிட) இனமக்கள் வாழ்ந்ததை உறுதிப் படுத்துகின்றன. பழைய கற்காலம் தொட்டு (ஒரு இலட்சம் வருடங்களுக்கு முன்னர்) திராவிட இனமக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். கிமு 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே ஈழம் எங்கும் நாகரிகம் மிக்க மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. விவசாயத்திலும் நீர்பாசனத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் குடியிப்புகள் காணப்படுகின்றன. பயிர்செய்நிலம், சிறுகுளம், இடுகாடு கொண்ட குடியிருப்புகள், இம் மக்களின் இரும்பு உபயோகம், இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை, ஆழ்கடல் மீன்பிடி முறை, நீர்ப்பாசன முறை, கறுப்பு மட்பாண்ட உபயோகம் என்பன காணப்படுகின்றன.

ஆனைக்கோட்டை,  கந்தரோடை ஆகிய இடங்களில் எலும்புக் கூடுடன் கிடைத்துள்ள ‘கோவேந்தன்” ‘கோவேதன்” என்ற சொற்கள்   பொறிக்கப்பட்ட வெண்கல முத்திரையும், வடமேற்கே பூநகரி தொடக்கம் களனி ஆற்றங்கரைவரையும், தென்கிழக்கே மட்டக்களப்பு தொடக்கம் அம்பாறை மாவட்டம் வரையும் காணப்படும் கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள் என்பனவும் கிமு 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே ஈழத்தில் நாகரிகம் மிக்க தமிழ் (திராவிட) இனம் வாழ்ந்ததைத் தெரிவிக்கின்றன.
பவுத்தம் இலங்கையில் பரவி ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரே பவுத்த நாகர்களுக்கும்  பவுத்த தமிழர்களுக்கும் சிங்கள அடையாளம் கொடுக்கப்பட்டது. இலங்கையில் இனப் பிரிவையும், மதப் பிரிவையும் உண்டாக்கியவர்கள் புத்த பிக்குகளே.

பின்னால்  வந்த இசுலாம் மதம் இன்னோர் பகுதித் தமிழர்களைப்  பிரித்தெடுத்துவிட்டது. தொடர்ந்து வந்த கிறித்தவ மதம் மேலும் ஒரு பகுதி தமிழ்மக்களை சிங்களவர்களாக இனம் மாற்றம் செய்துவிட்டது. மலைநாட்டுத் தமிழர்கள் அயல் கிராமங்களில் உள்ள சிங்களப் பெண்களை மணம் செய்து கொள்வதால் அவர்களும் சிறிது சிறிதாக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழந்து வருகிறார்கள். ஈழத்தில்  தமிழர்கள் சிறுபான்மையாக மாறியதற்கு இந்த மதமாற்றமும் மொழி மாற்றமும் காரணிகளாகும்.

கிபி 140அளவில் கிரேக்க புவியியல் அறிஞர் புகழ்பெற்ற உலகப் படத்தை வரைந்தார். இதில் இலங்கைத் தீவை தப்ரபேன் (Tabrobana) என்று குறிப்பிட்டதுடன் அவரது படத்தில் குறிப்பிட்டுள்ள இடங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாகவே காணப்படுகின்றன.

தப்பிரபேன் என்பது தாமிரபரணி என்ற பெயரின்  ஒரு உருமாற்றம்.  தீபவம்சத்தில் இந்தப் பெயர் தம்பபாணி என்றும் கிரேக்கர்கள் இதை தழுவி தப்ரபேன் என அழைக்கலானார்கள்.  விஜயன் இலங்கையில் வந்திறங்கிய இடத்தில் (புத்தளம்) ஒரு நகரை உருவாக்கி அதற்கு தம்பபாணி (செப்புநிற பூமி) என்று  பெயர் இட்டதாக  மகாவம்சம் (அதிகாரம் VII) கூறுகிறது.

நாகர்கள் இலங்கையின் பழங்குடி மக்கள்

நாகதீப வருகைக்குப் பின்னர் 3 ஆண்டுகள் கழித்து களனி எனப்படும் கல்யாணி என்ற நதிக்கரையை  ஆண்டு கொண்டிருந்த மனியக்கியா (Maniakkhika)  மற்றும் அவனுடைய சகோதரன் மகோதரா (Mahodara)  ஆகியோரது அழைப்பின் பேரில் விசாக மாதத்தின் பவுர்ணமி இரண்டாம் நாள் 500 பவுத்த தேரர்களையும் அழைத்துக் கொண்டு  நாக மன்னன் மனியக்கியா இருந்த இடத்தை புத்தர் அடைந்தார். நாக மன்னன் அவர்களுக்கு இனிய உணவு கொடுத்து உபசரித்தான். அவர்களுக்குப் போதனைகள் செய்த பின்னர், சுமனகூடம் (Sumanakuta) என்ற மலை அடிவாரத்தை நோக்கித் தம் பரிவாரங்களுடன் நடந்து சென்று இளைப்பாறினார். பின்னர் திகவாபி (Dhighvapi) என்ற இடத்தைச் சென்றடைந்தார். அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்து அந்த இடத்தைப் புனிதமாக்கினார். அங்கிருந்து புறப்பட்டு அனுராதபுரத்தின் மற்றொரு பகுதியில் இருந்த சிலாசெத்தியா (Silacetiya) என்ற இடத்துக்குச் சென்று அங்கு வாழ்ந்த மக்களுக்கு அறிவுரைகளை வழங்கிய பின்னர் மீண்டும் ஜெத்வனத்துக்குத் திரும்பினார்.  நதியருகே தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த இடத்தில் ஸ்தூபி கட்டப்பட்டது. களனியிருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்று தனது அடிச்சுவட்டைப் பதித்தார்.

முன்னர் குறிப்பிட்டவாறு புத்தர் தனது வாழ்நாளில் வட இந்தியாவை விட்டு வேறு எங்கும் பயணம் செய்யவில்லை.  தென்னாட்டுக்குக் கூடப் புத்தர் வந்ததாக வரலாறு இல்லை. இலங்கை தொன்று தொட்டு ஒரு பவுத்த நாடென்றும் அந்த நாட்டுக்கு புத்தர் வருகை தந்து அதனைப் புனிதப்படுத்தினார் என்பதை நிறுவவே மகாவம்ச ஆசிரியர் இந்தக் கதைகளைக் கட்டியுள்ளார்.

புத்தர் மூன்றாவது தடவை இலங்கைக்கு வந்து சென்று 37 ஆண்டுகள் கழிந்த பின்னர்தான் விஜயன் இலங்கைக்கு வந்தான் என்பது மகாவம்சத்தின் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. எனவே, சிங்களவர்களின் முன்னோடியான விஜயன் வருவதற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே இலங்கைத்தீவு முழுவதும் நாகர்கள் வடக்கிலும் வடமேற்கிலும் இயக்கர் தெற்கிலும் சிறப்புற வாழ்ந்து ஆட்சி நடத்தி வந்தார்கள் என்பது தெளிவாகிறது.

விஜயன்  சந்ததி இல்லாத இறந்த போது நாக வம்சத்தைச் சார்ந்த அரசர்களே கிபி 11 ஆம் நூற்றாண்டு வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளார்கள். அவர்களது பெயர்கள் நாக அல்லது திஸ்ச (தீசன்)என்ற  பின்னொட்டோடு முடிகிறது.

மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என தரச்சர், லம்புக்காணர் (முயல் அல்லது ஆடு), பாலிபோஜகர் (காகம்), மோரியர் (மயில்), புலிந்தர் இவர்களைக் குறிப்பிடுகிறது. மகாவம்சத்தின் கதைப்படி வேடர் விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த பிள்ளைகள் எனச் சொல்லப்பட்டுள்ளது. “வேடர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறிய ஆரியர்களோடு நாளடைவில் மணவுறவு மூலம் கலந்தார்கள் என” இலங்கையின் பழைய வரலாறு என்ற நூலில் ஜி.சி. மென்டிஸ் குறிப்பிடுகிறார். கண்டிச் சிங்களவர் தென்புலத்தோர்க்குப் படையல் படைக்கும் வழக்கம் வேடர்களது கலப்பினால் ஏற்பட்டதென கலாநிதி செலிக்மன் அபிப்பிராயப் படுகிறார்.

இந்த நாகர்கள், இயக்கர்கள், வேடர்கள் ஆதிதிராவிட இனமக்கள் என்பதும் அவர்கள் சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. சங்ககாலப் புலவர்களில் சிலர் வேடர் மற்றும் நாகர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

இப்போது குடாநாடாக விளங்கும் யாழ்ப்பாணம் முன்னொரு காலத்தில், அதாவது கிறித்து பிறப்பதற்கு அநேக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு தீவுகளாக இருந்தது. மேற்கே நாகதீபம், மணிநாகதீபம், மணிபுரம், மணிபல்லவம் என்னும் பெயர்களால் வழங்கப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமை முல்லைத்தீவு என்று பெயர்பெற்ற சிறுதீவும் இருந்தன.
இவை காலத்துக்குக் காலம் இடம்பெற்ற கடற்கோள்களினால் பெரும்பகுதி அழிந்து போயின. இன்று யாழ்பாணக்குடா நாட்டைச் சுற்றியிருக்கும் புங்குடுதீவு, அனலைதீவு, மண்டைதீவு போன்ற தீவுகள் அப்பெருந்தீவகத்தின் மிஞ்சிய பகுதிகளேயாகும்.

கிமு 10 ஆம் நூற்றாண்டளவில் வட இந்தியாவை ஆண்ட பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது இன்றைய கீரிமலையான நகுலமலையைக் கொண்ட மணிபுரத்துக்கு வந்தானென்றும் அந்த நாட்டு நாக அரசனனின் மகள் சித்திராங்கதையைக் கண்டு காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்தானென்றும் பாரதக்கதையில் சொல்லப்படுகிறது. அருச்சுனன் – சித்திராங்கதை இருவருக்கும் பிறந்த சித்திரவாகன் என்பான் தனது தந்தையாகிய அருச்சுனனைப் போரில் வென்றான் என்றும் அவனது கொடி சிங்கக் கொடி  என்பதும் மகாபாரதத்தால் அறியப்படும்.

நாகர்கள் வரலாறு

இலங்கையில் ஆதியில் வாழ்ந்த இயக்கர், நாகர் என்பார் மனித வர்க்கத்தினரைச் சேர்ந்தவரல்லர் என்ற கருத்துப் பொதுவாக வரலாற்று ஆசிரியர்களிடையே நிலவி வந்துள்ளது. எனினும், இலங்கையின் வரலாற்றை ஆராய்பவர்கள் இந்த இரு இனத்தைச் சேர்ந்தவர்களே இலங்கையின்  ஆதிக்  குடிகள் என்ற முடிவுக்கு வருவார்கள்.  சிறப்பாக இயக்கர் என அழைக்கப்பட்டோர்.  இராவணன் இயக்க குல அரசன் என்பது இராமாயணம் போன்ற இதிகாசங்களால் அறியப்படும்.

நாகர்கள், இயக்கர்கள் என்பவர் யார் என்பதுபற்றி அறிஞர்களிடையே கருத்து ஒருமைப்பாடு இன்னமும் ஏற்படவில்லை. தென்னிந்தியாவிலே திராவிட இனப்பண்பாட்டோடு தொடர்புடைய பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. நாகர்களும் இயக்கர்களும் திராவிடர்களாக – தமிழர்களாக – இருக்கவேண்டும் என்ற கருதுகோள் சிலரால் முன்வைக்கப்படுகிறது.
இந்தியாவின் வடகீழ் எல்லைப்புறத்திலே, நாகர்கள் என்ற மங்கோலியத் தொடர்புள்ள இனத்துக்கு நாகலாந்து என்று தனிமாநிலம் காணப்படுகிறது. வரலாற்றுக்காலத்துக்கு முன்பும் வரலாற்றுக்காலத்திலும் நாகர்களைப் பற்றிய பல குறிப்புகள் இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்தும் கிடைக்கின்றன. நாகமன்னர்கள் ஆரியமன்னர்களோடும் திராவிடமன்னர்களோடும் வேறுபாடுகாட்டாது கலப்புகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்.

பண்டைக்காலத் தமிழக்கத்திலே சேரநாடு என்று பெயர்பெற்றிருந்த நிலப்பரப்பின் பெரும்பகுதியாக அமைந்து, இன்று தமிழோடு ஒப்புமைகள் பலவற்றைக் கொண்டுவிளங்கும் மலையாள மொழி வழங்கும் கேரளா மாநிலத்தில் நாயர் என்ற சமூகத்தினர் வாழுகின்றனர். நாகபாம்பு வழிபாட்டின் எச்சசொச்சங்கள் அவர்களிடையே இன்றும் காணப்படுகின்றன. நாகர் என்ற சொல் நாயர் என்று திரிந்து வழங்குகிறதெனக் கொள்ளலாம்.
நாகர், இயக்கர் இனங்களே இலங்கையின் வரலாற்றைத் தொடங்கி வைத்தவர்கள் என்ற கருத்தைக் கல்வெட்டு ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன.

மகிந்தன் (கி.பி. 956 – 972) கல்வெட்டொன்று மகிந்த தேரரால் வெல்லப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட இயக்கர்களால் காவல் செய்யப்பட்ட திசவாபி பற்றிக் குறிப்பிடுகின்றது. மேலும் கர்மவிபங்க எனும் சமஸ்கிருதப் பவுத்த நூலும் இயக்கர்களை  மகிந்த தேரர் வென்றார் எனக் குறிப்பிடுகின்றது. சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூறும் (71:14) இயக்கன் என்ற சொல்லை ஆட்பெயராக, மக்கள் பெயராகக் குறிப்பிடுகின்றது.

நாகர் வடக்கே இமயம் வரையும் தெற்கே இலங்கை வரையும் கிழக்கே பர்மா முதலிய தென்கிழக்காசிய நாடுகள் கடந்து பசிபிக் தீவுகள் வரையும் பரவியிருந்தனர். அவர்கள் வகுத்த எழுத்து முறையே நாகரி – நகரி என்ற பெயரிலும் தேவநாகரி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. வடதிசைச் சமஸ்கிருதமும், பிற வடதிசைத் தாய்மொழிகளும் எழுதப்படும் எழுத்து வடிவு இதுவே.

நாகர் என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். நாகர்களின் நாடு நாகரிகமும் செல்வ வளமும் நிரம்பியது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. நாகர்கள்  நாகபாம்பை வழிபட்டு வந்தவர்கள். இயக்கர்கள் இறந்த மூதாதையரை வழிபட்டு வந்தவர்கள்.  அச்சத்தின் காரணமாக இந்த வழிபாடு தொடங்கி இருக்கலாம். இந்த வழிபாடு  தமிழர்கள் மத்தியிலும்  பரவலாகக்  காணப்படுகின்றது.
மேலே குறிப்பிட்டவாறு சங்க காலத்தில் நாகர் இனத்தைச் சேர்ந்த பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள். புறத்திணை நன்னாகனார், மருதன் இளநாகனார், முரஞ்சியூர் முடிநாகராயர், வெள்ளைக்குடி நாகனார், சங்கவருணர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். முடிநாகர் இனத்தைச் சேர்ந்த முரஞ்சியூர் முடிநாகராயர்  சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியிருக்கிறார்.  இவர்கள் நாகவுருவைத்  தலையில் அணிந்ததால் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோயில் நாகபாம்பையே மூலவராகக் கொண்ட  கோயில் ஆகும். தமிழ்நாட்டில் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மன் கருநாகமாக தோன்றினார் என்று தலபுராண வரலாறு கூறுகிறது. இங்கு கருமாரியம்மன் அய்ந்து தலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்து காட்சி தருகிறார். திருச்செங்கோடு மலைச்சரிவில் 60 அடி நீளத்தில் பாம்பு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்துகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சமுதாயத்தினர் நாகத்தை குலதெய்வமாக கொண்டு ஒடுப்பறை என்ற இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர்.

மறவர், ஒளியர், எயினர், ஓவியர், அருவாளர், பரதவர் என்போர் பழம் நாகக்குடி வழிவந்த தமிழ்க்  குடிகளே ஆவர். தமிழக வரலாற்றின்படி நாகர்கள் சங்க காலத்துக்குப் பின் பழந்தமிழ்க் குடிகளுடன் ஒன்று கலந்துவிட்டனர்.
நாகர் வழிபாட்டு முறைமை  சைவ மதத்துடன் ஒன்று கலக்க ஆரம்பித்தன. மேலும் இலங்கை நாகர்கள் தமிழக அரசுகளுடன் தொடர்புடையவர்கள் என்பதை மகாவம்சம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
மகாவம்சம் மட்டுமின்றி தொலமியின் இலங்கைப் படத்தின் புவியியல் குறிப்புகளும் சான்றுகளாக அமைகின்றன. தொலமியின் புவியியல் படத்தின் படி இலங்கையின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்குப் பகுதியூடாக தென்கிழக்குப் பகுதிவரை நாகர்கள் தம் செல்வாக்கை நிலைநாட்டியிருந்தனர் என்பது தெரிகின்றது. அன்று நாகர்களும் பழந்தமிழர்களும் பரவி வாழ்ந்த பகுதிகளே இன்றும் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் தமிழ்ப் பகுதிகளாகக் காணப்படுகின்றன.

‘நாகநாட்டு நாக அரசன் வலைவாணன் என்பவன் மகள் பீலிவளை என்பவளைச் சோழநாட்டு மன்னன் வடிவேற்கிள்ளி காதல் மணம் புரிந்தான்’ என்கிறது மணிமேகலை. அதே மணிமேகலை சாவக நாட்டை ஆண்ட பூமிசந்திரனும் அவன் வளர்ப்பு மகனான புண்ணிய ராசனும் நாக மரபினர் என்று  கூறுகிறது.

மணிமேகலை ஆதிரையின் கணவன் சாதுவன் பற்றிய கதையைக் கூறுகிறது. அவன் தீய ஒழுக்கம் கொண்டு கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய பொருள் தீர்ந்த பின் கணிகை அவனை வீட்டை விட்டு வெளியேற்றினாள். சாதுவன் பொருள் ஈட்டுவதற்காக வணிகர்களுடன் கப்பலில் சென்றான். கடும் காற்றால் கப்பல் கவிழ்ந்தது. சாதுவன் தப்பி நாகர்கள் வாழும் மலைப்பக்கம் சேர்ந்தான். கப்பலில் தப்பிய சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். சாதுவன் உயிரோடு இருப்பதை அறியாத அவர்கள் அவன் இறந்து விட்டதாகக் கூறினர். அதனைக் கேட்ட ஆதிரை தீயில் பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள். தீயில் குதித்தாள். ஆனால் தீ அவளைச் சுடவில்லை. ஆதிரை ‘தீயும் சுடாத பாவியானேன்’ என்று வருந்தினாள். அப்போது ‘உன் கணவன் இறக்கவில்லை. விரைவில் திரும்புவான்’ என அசரீரி கேட்டது. ஆதிரை மகிழ்ச்சியோடு வீடு திரும்பி நல்ல அறங்களைச் செய்து வந்தாள்.

கடல் கொந்தளிப்பிலிருந்து உயிர்தப்பி நாகர்மலையைச் சென்றடைந்த சாதுவனை நாகர்கள் பிடித்து அவனை உண்ண முயன்றனர். சாதுவன் நாகர்மொழியை அறிந்திருந்ததால் நாகர்களின் தலைவனோடு பேசி அவர்களுக்குக் கொல்லாமை அறத்தை அறிவுறுத்தினான். நல்வினை, தீவினை ஆகியன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான். நல்லறிவு பெற்ற நாகர் தலைவன், சாதுவனுக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தந்தான். அவற்றைப் பெற்று அங்கு வந்த சந்திரதத்தன் கப்பலில் சாதுவன் மீண்டான். ஆதிரை கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.

நாலைக்கிழவன் நாகன் என்ற மறவர் கோமான், பாண்டிய அரசனிடம் அமைச்சனாகவும் அவன் படைகளின் தலைவனாகவும் பணியாற்றினான். குதிரை மலையை ஆண்ட பிட்டங்கொற்றன் என்ற மற்றொரு தலைவன் சேர அரசனிடம் பணியாற்றினான்.

பரதவர் கடற்கரையில் மீன் பிடித்தும் வணிகம் செய்தும் வாழ்ந்த நாக வகுப்பினர் ஆவர். அவர்கள் முத்தும் சங்கும் எடுக்கக் கடலில் மூழ்கினர். அவர்கள் தென்பாண்டி நாட்டில் கொற்கையைச் சூழ்ந்த இடத்திலேயே மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். நாகர்கள் பல கலைகளில் திறமையுடையவர்கள். குறிப்பாக நெசவுக் கலையில் கலிங்கநாட்டு நாகர் புகழ் பெற்றிருந்தனர்.

நாகர்கள் ஒரு காலத்தில் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய பரப்பின் பெரும்பகுதியையும் ஆண்டார்கள். அவர்கள் இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கில் உள்ள நாகலாந்து நாகர்களது  சொந்த நாடாகும்.

நாகர், நாகம், நாகரிகம் போன்ற சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்களே. நாகர் நாடு என்பது குமரிக்கண்டத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து பின்னர் அடுத்தடுத்து நிகழ்ந்த கடற்கோள்களால் அழிந்துபட்டது என்பதைப் பல்வேறு தமிழிலக்கியங்கள் வாயிலாக அறியலாம். கீழ்த்திசையிலிருந்த நாகர் நாடு பற்றி மணிமேகலை, நாகத்தை வழிபட்டும் நாக இலச்சினையைக் கொண்டிருந்தும் வாழ்ந்திருந்தவர் என்று கூறுகின்றது.

நகரம் – நாகரிகம் – நாகம் – நாகர் போன்ற அனைத்துத் தமிழ்ச் சொற்களும், நகர் என்ற மூலத்தமிழ்ச் சொல்லினின்று பிறந்தவைகளே.  நாகர்கள், அழிந்துபட்ட நாகநாட்டுத் தமிழ் மக்களின் இன வழியினரேயாவர்.

அக்காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்து வந்த திராவிட இனத்தாருக்கு அசுரர் என்று பெயர் இருந்தது. அசுரர்களில் ஒரு பிரிவினர் நாகர் என்பவர். நாகர் ஆதிகாலத்தில் தமிழ்நாட்டிலும் இருந்ததைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். அசுரரும், அவரில் ஒரு பிரிவினரான நாகரும் வருணன் என்னும் தெய்வத்தை வழிபட்டனர்.

முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் முடிநாகர்  சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியதை குறிப்பிடுகின்றனர். இவர்கள் நாகவுருவை தலையில் அணிந்ததால் இவர்கள் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர். (வளரும்)

About editor 3124 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply