யூலை 21, 2020
ஊடக அறிக்கை
தமிழ்மக்களது அடிப்படை அரசியல் உரிமைகளுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் உழைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்!
தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எமது அன்பான உறவுகளே!
கடந்த மே 18, 2009 அன்று முடிவுக்கு வந்த போருக்குப் பின்னர் மூன்றாவது தடவையாக தாயக மக்கள் ஒரு பொதுத் தேர்தலைச் சந்திக்கிறார்கள். இந்தப் பொதுத் தேர்தலில் தென்னிலங்கை சிங்கள – பவுத்த தேசியக் கட்சிகள் உட்பட பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வடக்கிலும் கிழக்கிலும் போட்டியிடுகின்றன.
தமிழர் தாயகம் எங்கும் அதாவது வடக்கு கிழக்கு என்ற இரண்டு பகுதிகளையும் உள்ளடக்கிய நிலப்பரப்பில் காலூன்றி வலுவாக உள்ள ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். பெரிய வாக்குத் தளம் அந்த கட்சிக்கு மட்டுமே உண்டு. ஏனைய கட்சிகள் பெரும்பாலும் யாழ்ப்பாணக் குடாநாட்டை மையமாக வைத்து இயங்கும் கட்சிகளாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ததேகூ அரசியல் தளத்திலும் பொருளாதாரத் துறையிலும் பல சாதனைகளைச் சாதித்துள்ளது.
(1) ததேக இன் இடைவிடாத முயற்சி காரணமாகவே தமிழ்மக்களது இனச் சிக்கல் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பேசுபொருளாக இருக்கிறது. 2009 இல் பயங்கரவாதத்தை ஒழித்த சிறிலங்காவைப் பாராட்டி இதே சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தலை கீழாக்கி கடந்த 2015 ஒக்தோபர் மாதம் முதலாம் நாள் ஐநாமஉ பேரவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 30-1 தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கிய சிறிலங்கா அரசு அதில் இருந்து இந்த ஆண்டு விலக்கிக் கொண்டாலும் அந்தத் தீர்மானம் அந்த அரசின் தலைமீது தொங்கிக் கொண்டிருக்கும் கூர்வாளாகத் இருந்து வருகிறது.
(2) நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட அரசியல் நிருணய சபை 82 தடவைக்கும் மேலாகக் கூடி ஒரு இடைக்கால அறிக்கையை 2018 இல் வரைந்தது. இந்த வரைவை வரைவதில் ததேகூ இன் பங்களிப்பு பாரிய அளவில் இருந்தது. குறிப்பாக இரா. சம்பந்தன் ஐயா மற்றும் மதியாபரணம் சுமந்திரன் இருவரது பங்களிப்பும் போற்றத்தக்கதாக இருந்தது. ஆனால் நல்லாட்சி அரசில் ஏற்பட்ட பிளவு காரணமாக ஆளும் தரப்புக்கு இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாது போய்விட்டது. இதனால் அந்த வரைவின் அடிப்படையில் ஒரு புதிய அரசியலமைப்பு வரையும் வாய்ப்பு இழக்கப்பட்டுவிட்டது. இருந்தும் இனச் சிக்கலுக்கான தீர்வு பற்றி எதிர்காலத்தில் பேசப்படும் போது இந்த இடைக்கால அறிக்கை ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. எந்தத் தீர்வானாலும் தமிழ்மக்கள் தனித்துவமான மக்களாகவும் தேசிய இனமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒன்றுபட்டதும், பிளவுபடாததுமான இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு – கிழக்கில் தக்க தன்னாட்சி முறைமையின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் ததேகூ பற்றுதியோடு இருந்து வருகிறது.
(3) இனச் சிக்கலுக்கு ஒரு நியாயமான, நீதியான தீர்வை எட்டுவதற்கு அனைத்துலக நாடுகளின், குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், கனடா போன்ற நாடுகளின் முழு ஆதரவைத் திரட்டுவதிலும் அந்த நாடுகளை எமது பக்கம் வைத்திருப்பதிலும் கணிசமான வெற்றியை ததேகூ ஈட்டியுள்ளது.
(3) தமிழ் மக்களது அரசியல் உரிமைகளுக்கு இடைவிடாது ததேகூ பாடுபட்டு வரும் அதே வேளையில் 30 ஆண்டுகாலப் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தை நிமிர்த்துவதிலும் ததேகூ குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
(அ) 2015 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வட – கிழக்கில் இராணுவத்தின் பிடியில் 76,595 ஏக்கர் காணி விடுவிக்கப்படாது இருந்தது. இதில் நல்லாட்சி காலத்தில் 47,604 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டது. அதாவது 75.48 விழுக்காடு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
(ஆ) காணாமல் போனோர் தொடர்பாக இரண்டு சுயாதீன ஆணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு அவை இயங்கி வருகிறது. இந்தக் குழுக்களின் அதிகாரங்கள் நாம் எதிர்பார்தது போல இல்லாவிட்டாலும் எமது மக்களுக்குப் பேரளவு இல்லாவிட்டாலும் ஓரளவு பயனுள்ளதாக அமைந்துள்ளன. ரூபா 1.4 பில்லியன் செலவில் காணாமற் போனோருக்கான செயலகம் செயற்படுகின்றது. வலிந்து காணாமல் போனோர் குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபா இடைக்கால உதவியாக வழங்கப்படுகிறது.
(இ) ததேகூ இன் இடைவிடாத முயற்சி காரணமாக 2015 இல் 217 ஆக இருந்த அரசியல் கைதிகளின் தொகை இப்போது 92 ஆகக் குறைந்துள்ளது.
(ஈ) எமது மக்களின் வாழ்வாதாரம் விவசாயம், மீன்வளம் இரண்டிலுமே தங்கியுள்ளன .
* மயிலிட்டி மீன்பிடித்துறை முகத்தின் முதல் கட்ட மீள்கட்டமைப்பு ரூபா 150 கோடியில் நிறைவு பெற்றுள்ளது. அதன் இரண்டாவது கட்ட மீள்கட்டமைப்பு ரூபா245 கோடியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
* காங்கேசன்துறை துறைமுகம் இந்திய அரசு அன்பளிப்பாகக் கொடுத்த அ.டொலர் 47.5 மில்லியன் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.
* பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் 12,600 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட இருக்கிறது. இந்தத் துறைமுகம் ஒரே நேரத்தில் 300 பெரிய படகுகள் தரித்து நிற்கும் வசதிகளைக் கொண்டிருக்கும்.
* நெதெலாந்து நாட்டின் 60 மில்லியன் யூரோ (12,000 மில்லியன் ரூபா) நிதியுதவியில் வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களில் ஆதார மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
* யாழ்ப்பாணம் பன்னாட்டு வானூர்தி நிலையம் 2.25 பில்லியன் (ரூபா 2250 மில்லியன்) ரூபா செலவில் கட்டிமுடிக்க உள்ளது. முதல் கட்டமாக இந்த விமான நிலையத்தில் பிராந்திய விமான சேவைகள் ஒக்தோபர் 17, 2019 அன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
* யாழ்ப்பாண மாநகர முன்னாள் வளாகத்தில் ரூபா 2,350 மில்லியன் செலவில் ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
* மொத்தம் 63,000 வீடுகளில் 46000 வீடுகளை இந்திய அரசு கட்டியுள்ளது. இந்திய அரசு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் உள்ள வேளாண்மை மற்றும் பொறியியல் பீடத்திற்கும் ரூபா 600 மில்லியன் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் திறன் கூறுகள் ஆகியவற்றை உதவியுள்ளது.
ததேகூ தமிழ் மக்களது அரசியல் உரிமைகளை மட்டுமல்ல அவர்களது பொருளாதார மேம்பாட்டையும் சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் உறுதியாக உள்ளது. இந்த விடயத்தில் ஏனைய கட்சிகள் சில முதலில் அரசியல் உரிமை அதன் பின்னர்தான் பொருளாதார மேம்பாடு எனச் சொல்கின்றன.
அனைத்துலக நாடுகளுடன் நல்லுறவுகளை வைத்துக் கொண்டிருக்கும் ஒரே கட்சி ததேகூ தான். பூகோள அரசியலைக் கையாளும் இராசதந்திரத்தையும் பட்டறிவையும் கொண்டுள்ள ஒரே கட்சி ததேக தான்.
உள்நாட்டிலும் பன்னாட்டு அரங்கிலும் தமிழ்மக்கள் சார்பாக தொடர்ந்து குரல் கொடுக்க எதிர்வரும் ஓகஸ்ட் 5 இல் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் ததேகூ க்கும் அதன் ஆளுமை மிக்க வேட்பாளர்களுக்கும் வாக்களித்து எமது இனத்தின் ஒற்றுமையையும் உறுதிப்பாட்டையும் பேரம் பேசும் ஆற்றலையும் மீள உறுதிப்படுத்துமாறு தமிழ்மக்கள் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
நக்கீரன் தங்கவேலு
தலைவர்
கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
Leave a Reply
You must be logged in to post a comment.