இன்றைய உலக ஒழுங்கில் அனைத்துலக சமூகத்தை வெட்டியோட முடியாது ஒட்டித்தான் ஓடவேண்டும்

மார்ச்சு 02, 2012

ஊடக அறிக்கை

இன்றைய உலக ஒழுங்கில்  அனைத்துலக சமூகத்தை வெட்டியோட முடியாது  ஒட்டித்தான் ஓடவேண்டும்

தேசியத்தை நேசிக்கும் எமது உறவுகளே!

வணக்கம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ)  ஜெனீவாவில் நடைபெறும் அய்யன்னா மனிதவுரிமை அவைக்குச் செல்லாமைக்கு எதிராக இணையத்தளங்களிலும் செய்தி இதழ்களிலும்  விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.  தொலைபேசி அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. இப்படி எம்மோடு தொடர்பு கொள்பவர்களில் பலர் ததேகூ இன் மீதுள்ள பற்றுக் காரணமாக தமது ஆதங்கத்தை தெரியப்படுத்தியவர்கள்.   

இந்த நிலையில் ததேகூ ஜெனீவாவுக்குச் செல்வதைத் தவிர்த்தமைக்கு ஆன காரணங்களை  விளக்க விரும்புகின்றோம்.

        1.  அய்.நா மனிதவுரிமை அவையில் அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானமானது போர்க்குற்ற விசாரணை பற்றியது அல்ல. இது சிறிலங்கா  அரசால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான  ஆணையம் (Lessons Learnt and Reconciliation Commission)   தனது அறிக்கையில் தெரிவித்துள்ள சில  ஆக்க அடிப்படையிலான பரிந்துரைகளைச் செயற்படுத்துமாறு கோரும் ஒரு தீர்மாமாகும். இந்த கபாமநஆ  அறிக்கையைத் ததேகூ  நிராகரித்து விட்டது. இதுபற்றி 105 பக்க அறிக்கை மும்மொழிகளிலும் வெளிவந்தது தெரிந்ததே. 

        2. அய்.நா மனிதவுரிமை அவையில் இரண்டு விதமான அமர்வுகள் நடைபெறுகின்றன. ஒன்று அரச பிரதிநிதிகளுக்கான அமர்வு.  இதில் அரசாங்கப் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்வர். மற்றது அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான அமர்வு.  இதில் அரச சார்பற்ற அமைப்புச் சார்பாக வருபவர்கள் கலந்து கொள்வர். ததேகூ  இந்த இரண்டு பிரிவிலும் அடங்காது. 
 

        3. அய்.நா மனிதவுரிமை அவையில் அரச பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டமே முதன்மையானது. இதில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் தத்தம் நாட்டு அரசுகள் எடுக்கும் முடிவுகளுக்கு அமையவே பேசி வாக்களிப்பர்.  அந்தந்த நாட்டு அரசுகளோடு பேசித்தான்  அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்க வேண்டும்.  இந்தப் பணியை ததேகூ செவ்வனே செய்து வருகிறது. மேற்படி கூட்டத்தில் பங்கு கொள்ளும் 47 நாட்டுத் தூதர்களோடு தொடர்பு கொண்டு சிறிலங்காவில் தொடர்ந்தும் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் தமிழர்களுக்கான பாதுகாப்பற்ற ஒரு நிலையும் எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.  போரினால் இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் இன்னமும் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியமரும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.  அண்மைய காலங்களிலும் கூடச் சிலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர்.  மக்களின் நாளாந்த வாழ்க்கையில் கூட இராணுவத்தின்  தலையீடு அதிக அளவில் உள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் வடக்குப் பகுதியில் இராணுவ நிர்வாகம்  நடைபெறுகிறது.  தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் மக்கள் மீண்டும் குடியேறிவரும் இடங்களிலும் அதிகப்படியான இராணுவ முகாம்களை இராணுவ குடியிருப்புக்களையும் அமைத்துள்ளார்கள்.  இது போன்ற விடயங்களிலிருந்தே சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் சமூக மற்றும் அரசியல் சுதந்திரங்களில் நிலவும் ஒருதலைச் சார்பான நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

இராணுவத்தினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் அதிகமானோர் பெண்களும் சிறார்களும் ஆவர்.   போரினில் கணவனை இழந்த பெண்கள், உறவுகளை இழந்து ஏதிலிகள் ஆக்கப்பட்டவர்களை குறிவைத்தே வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. விடுதலைப்புலிகள் அமைப்பில் பணியாற்றிய பெண்கள் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பெண்கள் துணை இராணுவப் படையினரால் கற்பழிக்கபட்டும் பெரும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர். ஆட்கடத்தல், திட்டமிட்ட பரத்தமை  போன்றவற்றிலும் இவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.  ததேகூ எமது பக்க நியாயங்களையும் தமிழ் மக்கள் படும் அவலங்களைகளையும் எடுத்துரைத்து தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறது. இது தொடர்பாக தமிழ்மக்கள்  பக்க நியாயத்தை சொல்லும் ஒரு கடிதத்தை இந்த நாடுகளுக்கு ததேகூ இன் தலைவர் திரு சம்பந்தன் அனுப்பியுள்ளார்.

இவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்த பின்பும் பன்னாட்டு அரசுகளின் அறிவுரைக்கு அமையவும் ஜெனீவா செல்வதில்லையென்ற முடிவை ததேகூ எடுத்தது.

இது இவ்வாறிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரனின் உருவப் பொம்மையை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் என்ற அமைப்பு பல்கலைக் கழக கட்டடத்தில் தொங்க விட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தமிழினத் துரோகி சுமந்திரன் என எழுதிய சுலோக அட்டையும் கழுத்தில் தொங்க விடப்பட்டுள்ளது.  சுலோக அட்டையில் போர் குற்ற விசாரணை எங்கே?  எனக் கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளதாம்.

இந்தச் செய்தியினை  TamilNet  இணையதளமும் வெளியிட்டு தனது வழக்கமான அழுக்காற்றையும் வெளிக்காட்டியுள்ளது. இதில் இருந்து இந்தக் கீழ்த்தரமான பரப்புரைக்குப் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஒன்றியம் எனப் பல ஒன்றியங்கள் இயங்குகின்றன. இதில் எந்த ஒன்றியம் இப்படியான கீழ்த்தரமான செயலுக்குப் பொறுப்பு என்பது தெரியவில்லை.   எதுவாக இருந்தாலும் ழகர, ளகர  வேற்றுமை தெரியாதவர்கள் இதை எழுதியுள்ளார்கள். 

பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றிச் சிங்கள இராணுவமும் காவல்துறையும் காவலுக்கு நிற்கும் போது  அதனையும் மீறி இலகுவில் யாரும் கழற்றி எடுத்துச்  செல்லாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கயிற்றினால் உயரமான மாடிக்கட்டடம் ஒன்றில் உருவப் பொம்மையை தொங்க விடப்பட்டிருப்பது இது உள்வீட்டு வேலை என்பதைக் காட்டுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வட்டாரத்தோடு தொடர்பு கொண்டு விசாரித்ததில் இபிடிபி டக்லஸ் தேவானந்தாவின் கைக்கூலி மாணவர்களே இந்தக் கைங்கரியத்தை செய்திருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது.  அதன் காரணமாகவே அந்த உருவப் பொம்மையை  சிங்கள இராணுவமோ சிங்கள காவல்துறையோ அகற்றாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

உண்மையில் இந்தப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்துக்கு துணிவு இருந்திருந்தால் மாகாண சபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை இல்லை வட – கிழக்கு இணைப்புத் தேவையில்லை என்று சொல்லிவிட்டு  இராசபக்சேயின் அமைச்சர் பரிவாரங்களோடு  ஜெனிவாவுக்குப் போயிருக்கும் டக்லஸ் தேவானந்தாவின் கொடும்பாவியை யாழ்ப்பாண பல்கலைக் கழகக் கட்டடத்தில் தொங்க விட்டிருக்க வேண்டும்!

ததேகூ எடுத்த முடிவுக்கு திரு சுமந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மட்டும் அதற்குப் பொறுப்பல்ல. ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  (திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் நீங்கலாக)  அந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.  குறிப்பாக ததேகூ இன் பொதுச் செயலாளர்  திரு மாவை சேனாதிராசா, கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அப்படியிருக்க  திரு சுமந்திரன் மீது மட்டும் சேறுவாரிப் பூசுவது ஏன்?  அதன் உள்நோக்கம் என்ன?

திரு சுமந்திரன்  ஒரு மூத்த வழக்கறிஞர். கட்சிப் பணிகளை செவ்வனே செய்து வருகிறார்.  வன்னிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அதனை ஆவணப்படுத்தி நாடாளுமன்றத்தில் பேசுகிறார்.   கபாநஆ இன் அறிக்கையை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து  105 பக்கங்களைக் கொண்ட திறனாய்வை மூன்று  மொழிகளிலும் தயாரித்து வெளியிட உதவினார்.  அரசு தமிழ்ப் பகுதிகளில் மேற்கொண்ட தனியார் காணிப் பதிவு சட்டத்துக்கு முரணானது என்று நீதிமன்றம் சென்று வழக்காடி வெற்றிபெற்றார்.  கடந்த நான்கு மாதங்களில் இரண்டுமுறை அமெரிக்கா வந்து இராசாங்க திணைக்களத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

இது போன்ற அவரது கட்சிப் பணிதான் ததேகூ இன் எதிரிகளுக்கு அவர் மீது காழ்ப்புணர்வை உருவாக்கியுள்ளது. அவர் பத்தோடு பதினொன்றாக இருந்திருந்தால் அவர் மீது சேறு பூச யாரும் முன்வந்திருக்க மாட்டார்கள்.  படித்தவர்களைப் பிடிக்காத ஒரு கலாச்சாரம் எம்மிடையே இருக்கிறது.

மேலே கூறியவாறு ததேகூ அய். நா வல்லுநர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள யோசனைகளை வரவேற்றிருக்கிறது. குறிப்பாக போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனிதவுரிமை மீறல்கள்,  போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒரு பன்னாட்டு விசாரணை தேவை என்பதை ததேகூ  வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளது.

கபாநஆ அறிக்கையை ததேகூ புறந்தள்ளியுள்ள அதே நேரம் அந்த அறிக்கையில் காணப்படும் உடன்பாடான (positive) பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கேட்கும் அமெரிக்க அரசின் தீர்மானத்தை அது வரவேற்றிருக்கிறது.

அதாவது ஆணையத்தின் பரிந்துரைகளான:

 (1) வடக்கு, கிழக்குப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருக்கும் ஒரு இலட்சம்  இராணுவத்தினர் அகற்றப்பட்டு சிவிலியன் ஆட்சி கொண்டுவரப்பட  வேண்டும்.

(2)  போரின் போது அரச படைகளின் மனிதவுரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மற்றும் இது தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் அளிக்கும் வண்ணம் சட்டப்படியான  ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.

(3)  ஒட்டுக்  குழுக்களின் ஆயுதங்கள களையப்பட வேண்டும்.

(4)  காவல்துறை  பாதுகாப்பு அமைச்சில் இருந்து பிரிக்கப்பட வேண்டும். (5)  புரையோடிப் போய்க்கிடக்கும் இனச் சிக்கலுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும்   என்பன   உடன்பாடான  பரிந்துரைகளாகும்.

அமெரிக்க அரசின் தீர்மானத்தை ததேகூ ஒரு தொடக்கமாகக் கருதுகிறது. சிறிலங்கா ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தத் தவறின் பன்னாட்டு சமூகத்தின் அழுத்தங்களை எதிர்நோக்க  நேரிடும் என அமெரிக்கா சிறிலங்கா அரசை எச்சரித்துள்ளது கவனிக்கத் தக்கது.

எமது வரலாற்றில் முதல்முறையாக  உலக நாடுகளில் ஒரு பகுதி எம்மை ஆதரிக்கிறது. தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் அவர்களது அரசியல் வேட்கைகளை சிறிலங்கா அரசு நிறைவு செய்யப்பட வேண்டும் எனக் குரல் கொடுக்கின்றன.  உலக ஒழுங்கில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை நாம் சாதுரியமாகப் பயன்படுத்த வேண்டும். சுண்டங்காய் அளவு நாடான சிறிலங்கா அமெரிக்கா என்ற வல்லரசோடு – ஒரு காலத்தில் நட்பு நாடாக இருந்த நாட்டோடு – மோதுகிறது. இது ததேகூ இன் இராசதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.

இன்றைய உலக ஒழுங்கில்  – புவிசார் அரசியலில் –  அனைத்துலக சமூகத்தை வெட்டியோட முடியாது.  ஒட்டித்தான் ஓடவேண்டும்.

அனைத்துலகம் என்பது முக்கியமாக அமெரிக்கா மற்றும் இந்திய நாடுகளாகும். இந்த நாடுகளின் உதவி இல்லாமல், ஒத்தாசை இல்லாமல் எமது உரிமைகளைப் பெறலாம் என நினைப்பவர்கள் அந்த உத்தி அல்லது உத்திகள் எவை என்று தயவு செய்து சொல்ல வேண்டும். 

நாம் முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமாகவும்  நீதியாகவும் நடைமுறை சாத்தியமானதாகவும்  இருப்பதாக பன்னாட்டு சமூகம் கருத வேண்டும். இப்போதைக்குச் சாத்தியம் இல்லாதவற்றைக் கேட்டுப் பயனில்லை.

முடிவாக ததேகூ இன் பேச்சாளர் திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி ததேகூ இன் முடிவு திரு சம்பந்தனும் திரு சுமந்திரனும் எடுத்த முடிவு என கனடிய தமிழ் வானொலியில் சொல்லிய கருத்தினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.  கூட்டமைப்போடு கருத்து வேறுபாடு இருந்தால் அதனை நாலு சுவர்களுக்கு உள்ளே  விவாதித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதை விடுத்து எடுத்தேன் கவிழ்த்தேன் என கருத்துக் கூறுவது அவர் போன்ற ஒரு மூத்த அரசியல்வாதிக்கு அழகல்ல. அது மகிந்த இராசபக்சேயின் பொறிக்குள் விழுவது போல் ஆகிவிடும்.  அதற்கு அவர் பலியாகக் கூடாது. 

இது தொடர்பாக மார்ச்சு 02 இல் கூடவிருக்கும் ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் முடிவு எதுவானாலும் அதனை நாம் வரவேற்போம். ததேகூ இன் தலைவர் திரு சம்பந்தன் மீது எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது என்பதை எந்த அய்யத்துக்கும் அப்பால் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

வே. தங்கவேலு
தலைவர்
தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு (கனடா)


About editor 3192 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply