தேவதாசி முறையை அகற்றிய சமூகப் போராளி டாக்டர்முத்துலெட்சுமி அம்மையார்
-நக்கீரன்–கோலாலம்பூர்
July 22, 2020
பால்ய திருமணம், விதவைக் கோலம், சொத்துரிமை இல்லாமை, உடன் கட்டை ஏறுதல் என்றெல்லாம் பெண்களுக்கு எதிராக ஏராளமான அநீதிகள் இழைக்கப்பட்டன. இவற்றின் உச்சம், பொட்டுக் கட்டுதல்.
ஆலயத்திலேயே தங்கி, உண்டு, உறங்கி இறைப்பணியுடன் பார்ப்பன அர்ச்சகர்களுக்காக வாழ்நாள் முழுவதும் ஊழியம் புரிவதற்காக பருவப் பெண்களை அனுப்பி வைக்கும் முறைக்குதான் பொட்டுக் கட்டுதல் என்று பெயர்.
தேவதாசி என்று அழைக்கப்பட்ட இப்பெண்கள், ஒரு முறை பொட்டு கட்டப்பட்டால், அதன் பின் பெற்றோர், உடன்பிறந்தோர் என அனைத்து உறவையும் துறந்துவிட வேண்டும். இதற்கு எதிராக, யாரும் குரல் எழுப்பவோ மறுத்துப் பேசவோ ஆகாது.
20-ஆம் நூற்றாண்டின் மையப்பகுதிவரை தொடர்ந்த இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்தான் டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார்.
இந்தியாவில் முதல் முதலில் எம்பிபிஎஸ் படித்த முதல் பெண் மருத்துவர் இந்த வீரத் தமிழச்சிதான். ஆங்கியலேயர் ஆட்சியில் சென்னை மாகாண சட்டமன்ற துணைத்தலைவர் பொறுப்பு வகித்த முதன் பெண் திலகமுமான இவர், சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் பெண் என்ற பெருமைக்கும் உரியவர்.
அவ்வாறு மக்கள் மன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக கடமையாற்றியபோது-தான், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச்சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாக தடைச்சட்டம், பெண்களுக்கு கட்டாய கல்வி போன்ற சட்டங்களை நிறைவேற்ற அரும்பாடுபட்டார்.
இயல்பாகவே சமூக அக்கறையும் போராட்ட குணமும் வாய்க்கப்பெற்ற டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, அந்தக் காலத்தில் பெண் குலத்தை மிகவும் சிறுமைப்படுத்திவந்த ‘தேவதாசி முறை’க்கு சென்னை மாகாண சட்டமன்றத்-தில் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவருக்கு மறுப்பு தெரிவித்ததுடன் தேவதாசி முறைக்கு அப்பட்டமமாக ஆதரவு தெரிவித்த பிற்போக்குவாதி தீரர் சத்தியமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
காந்திக்கு நெருக்கமானவரும் கர்ம வீரர் காமராசரின் அரசியல் குருவும் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவருமான சத்தியமூர்த்தி, பிராமண குலத்தைச் சேர்ந்தவர்.
இந்தச் சுழலில் பொட்டுக் கட்டுதல் என்பதைப்பற்றி கேள்விபட்ட ஆங்கிலேய ஆட்சியாளர்கள் ஆச்சரியம் அடைந்ததுடன், முத்துலெட்சுமிக்கு ஆதரவாகக் குரலும் எழுப்பினர். ஆனால், சத்தியமூர்த்தியோ, “தேவதாசிப் பெண்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். எனவே, டாக்டர் முத்துலெட்சுமி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது” என்று சட்டமன்றத்திலேயே மனம் கூசாமல் சண்டித்தனம் புரிந்திருக்கிறார்.
அப்பொழுது பொங்கி எழுந்த முத்து லெட்சுமி அம்மையார், “ஏன் உங்கள் குலத்துப் பெண்களுக்கு சொர்க்கத்தில் இடம் வேண்டாமா? அவர்களை தேவதாசியாக ஆக்கிக் கொள்ளுங்கள். எங்கள் குலப் பெண்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது போதும்” என்று ஒரு போடு போட்ட பிறகுதான் சத்தியமூர்த்தி வாயடைத்துப் போனார்.
பெண்கள் கல்வி பயில பலவித தடைக்கற்கள் இருந்த கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், முத்துலெட்சுமி கல்லூரியில் சேருவதற்கு அன்றைய புதுக்கோட்டை மன்னர் சிறப்பு ஆணை பிறப்பித்ததோடு உதவித் தொகையும் வழங்கினார். எதையும் தடைக்கல்லாக கருதாமல், படிகற்களாகக் கருதும் முத்துலெட்சுமி அம்மையார், சென்னை ஆண்கள் மருத்துவக் கல்லூரியில் ஒரேப் பெண்ணாக சேர்ந்து, மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி பெற்று சரித்திரம் படைத்தார்.
அன்றைய புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்னும் இடத்தில் 1886 ஜூலைத் திங்கள் 30-ஆம் நாளில் பிறந்தவ முத்துலெட்சுமியின் தந்தை வழக்கறிஞர்; தாயார் இசைத் துறையில் நாட்டம் கொண்டவர். பருவமடைந்த பெண்கள் வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாட்டினால் பள்ளிக்கு தொடர்ந்து செல்ல முடியவில்லை. ஆனாலும் தந்தையின் உதவியுடன் தனிப்பட்ட முறையில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி மாநிலத்தில் முதலிடமும் பெற்ற முத்துலெட்சுமியின் உயர்க்கல்விக்கும் எதிர்கால சிறப்பிற்கும் துணை நின்றவர் புதுக்கோட்டை மன்னர்.
சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் பணியாற்றிய இவரின் ஆற்றலை அறிந்த ஆங்கிலேய அரசு, பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்புப் பயிற்சி பெற கல்வி உதவி நிதி வழங்கி, அவரை இங்கிலாந்திற்கு அனுப்பியது. மருத்துவராக விளங்கினாலும், சமூக சேவையில், குறிப்பாக பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சுகாதாரம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார் முத்துலெட்சுமி.
இந்தியாவின் முதல் பெண்கள் அமைப்பான இந்திய மாதர் சங்கத்தைத் தொடங்கி இறுதிவரை அதன் தலைவியாக செயல்பட்டதுடன் மாதர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட‘ஸ்திரீ தர்மம்’ என்ற மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயரும் இவர்தான்.
ஆதரவற்ற குழந்தைகளுக்காக அடையாற்றில் அவ்வை இல்லம் தொடங்கினார். புற்றுநோய் கண்ட தன் தங்கை இளம் வயதில் இறந்ததும், ஒரு மருத்துவராக இருந்தும் தன் தங்கையைக் காப்பாற்ற முடியாமல் போனதும் இவரை மிகவும் பாதித்தது.
இந்தத் துயரம் மற்றவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்பதால், 1925-ல் லண்டன் சென்ற இவர், செல்சியா மருத்துவமனையில் தாய், சேய் மருத்துவ ஆராய்ச்சியையும், ராயல் புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சியினையும் மேற்கொண்டார்.
சென்னைக்குத் திரும்பியதும், சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவகையாலும் முயன்று அந்தக் காலத்திலேயே 2 லட்சம் ரூபாய் நிதி திரட்டினார். தற்போது ஆசியாவிலேயே புற்றுநோய் சிகிச்சைக்கு சிறந்த இடமாக கருதப்படும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இவரின் அயராத முயற்சியால் உருவாக்கப்பட்டது.1936 முதல் முழு நேர மருத்துவராக செயல்படத் தொடங்கிய இவர், மீனவக் குழந்தைகளின் கல்விக்காகவும் பாடுபட்டார்.
சமூக, அரசியல் பணியில் அயராமல் ஈடுபட்டிருந்தாலும் இலக்கிய தாகமும் கொண்டிருந்த டாக்டர் முத்து லெட்சுமி அம்மையார் ஒருசில நூல்களையும் இயற்றியுள்ளார். ஈடு இணையற்று சமூக அக்கறையுடன் இவர் ஆற்றிய தொண்டறத்தைப் போற்றும் வண்ணம், இந்திய அரசின் சார்பில் பத்மபூஷண் விருது உட்பட எண்ணற்ற விருதுகள் அளிக்கப்பட்டன.
மகத்தான சமூக சேவகியும் தலைசிறந்த மருத்துவரும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவருமான டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் 1968 ஜூலை 22-ஆம் நாளில் தம்முடைய 82-ம் வயதில் இயற்கை எய்தினார். டாக்டர் முத்துலட்சுமியின் பிறந்தநாளான ஜூலை 30-ஆம் நாளை தமிழக அரசு ‘மருத்துவமனை தினமாக’ ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
தமிழ்ப் பெண்களின் வரலாற்றில் நிலைத்துவிட்ட டாக்டர் முத்துலெட்சுமி அம்மையாருக்கு ஜூலை 22, நினைவு நாள்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24
Leave a Reply
You must be logged in to post a comment.