கண்ணதாசன் போல் காலம் தந்த “காவியக் கவிஞர்” வாலி
ரா. மணிராஜ், திருநெல்வேலி
July 18, 2020
தமிழ் சினிமாவில் காலத்தால் மறக்கமுடியாத பாடல் வரிகளைத் தந்து, என்றும் நம் நினைவில் வாழ்பவர், கவியரசர் கண்ணதாசன் என்றால், அவருக்கு அடுத்து இன்னொரு கவிஞரையும் காலம் உருவாக்கித்தந்தது. 1963-ம் ஆண்டு நடிகர்திலகத்தின் அன்னை இல்லம், மக்கள் திலகத்தின் பரிசு ஆகிய இரு படங்களுக்கு மத்தியில் கேஎஸ் கோபாலகிருஷ்ணனின் கற்பகம் திரைப்படமும் வெளிவந்தது.
கற்பகம் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்எஸ் விசுவநாதனும் மற்ற இரு படங்களுக்கும் திரை இசைத்திலகம் கேவி மகாதேவனும், இசை அமைத்திருந்தனர். மூன்று படங்களிலுமே பாடல்கள் சூப்பர்ஹிட். ஆனால் அன்னை இல்லத்திலும், பரிசிலும் கவியரசர் பாடல் எழுதியிருந்தார். கற்பகத்தில் வாலி எழுதியிருந்தார். அத்தை மடி மெத்தையடி, மன்னவனே அழலாமா, ஆயிரம் நிலவுகள் வருவதுண்டு உள்பட அவர் எழுதிய அத்தனை பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
படத்தின் டைட்டில் பார்க்காதவர்கள் இவையனைத்தும் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் என்றே கருதினர். கற்பகம் பாடல்களால் வாலி ஒரே நாளில் பிரபலமானார். அதற்கு முன்பும் அவர் நாடகங்கள் நடத்தியும், படங்களுக்கு பாடல்கள் எழுதிக்கொண்டும் தான் இருந்தார். ஆனால் பெரிய அளவில் பேசப்படவில்லை. வருமானமும் இல்லை. இதனால் மனம் வெறுத்து, சென்னையை விட்டு வெளியேறி, மதுரைக்குச்சென்று வேறு வேலை பார்க்கலாம் என்ற முடிவில் இருந்தார். அப்போது அவர் காதில் ஒலித்தது, ஒரு பாடல்.
“மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா..” சுமைதாங்கி படத்துக்காக கவியரசர் எழுதிய பாடல் அது. “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்… வாசல்தோறும் வேதனை இருக்கும்… வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை…”—இந்த பாடல் வரிகள் வாலியின் மனதை மாற்றின. தொடர்ந்து இங்கிருந்து போராடுவோம் என்ற முடிவுக்கு வந்தார். சிறிதுகாலம் போராடினார். கற்பகம் படத்தில் மெல்லிசை மன்னர் அவருக்கு கை கொடுத்தார். முதலில் ஒரு பாடலுக்குத்தான் வாய்ப்பு என்று சொன்ன கேஎஸ்ஜியின் மனதை மாற்றி அத்தனை பாடல்களையும் எழுதும் வாய்ப்பை வாலிக்குப்பெற்றுத்தந்தார், எம்எஸ்வி. கற்பகம் படம், வாலியை புகழேணியில் ஏற்றியது. இந்த நன்றியை வாலி வாழ்நாள் முழுக்க மறக்கவே இல்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், “எம்எஸ் விசுவநாதன் அண்ணனைப் பார்க்கும் வரை எனக்கு தின்ன சோறு கிடைக்கவில்லை. அவரைப்பார்த்த பிறகு சோறு தின்ன நேரம் கிடைக்கவில்லை” என்று பொதுமேடைகளில் அவர் பேசத் தவறவில்லை.
கற்பகம் படம் தயாரிப்பில் இருந்தபோது எம்ஜிஆரின் படகோட்டி படமும் தயாராகிக்கொண்டு இருந்தது. இதிலும் வாலிக்கு வாய்ப்பு அளித்து இருந்தார், எம்எஸ்வி. கற்பகத்திற்குப்பிறகு படகோட்டி வெளியானது. அந்தப்படத்திலும் எல்லாப்பாடல்களும் “ஹிட்” அடித்தன. “தரைமேல் பிறக்கவைத்தாய்” பாடல், மீனவர்கள் மத்தியில் எம்ஜிஆரின் புகழை உயர்த்தியது. வாலியின் புகழ் உச்சம் தொட்டது. பாடல்களைக்கேட்டு மகிழ்ந்த எம்ஜிஆர், “இனி என் படங்களுக்கு வாலி தான் பாடல் எழுதுவார்” என்று அறிவிப்பே செய்தார்.
அதன்பிறகு, சிவாஜி படங்கள் என்றால் கண்ணதாசனும், எம்ஜிஆர் படங்கள் என்றால் வாலியும் பாடல் எழுதுவார்கள் என்று ஒரு ‘டிரென்ட்’ உருவாகி விட்டது. கண்ணதாசனும், வாலியும் தொழிலில் போட்டி போட்டாலும் இருவரும் நல்ல நட்புடன் பழகிக்கொண்டனர். இதுபற்றி வாலி ஒரு முறை குறிப்பிடும்போது, “ நான் சினிமாவே வேண்டாம் என்று ஓடத்தான் பார்த்தேன். ஆனால் என்னை ஓடவிடாமல் நிறுத்தி வைத்தது கண்ணதாசன் பாடல் தான். அவரது மயக்கமா கலக்கமா பாடலைக் கேட்டிருக்காவிட்டால் என் வாழ்க்கையே வேறுபக்கம் திசை மாறியிருக்கும். எனவே அவரோடு என்னை போட்டி போடவைத்தவர் அவர் தான். நாங்கள் எதிர்எதிர் கடை விரித்தாலும் எங்களுக்குள் நல்ல நட்பு உண்டு” என்று சொன்னார்.
சிவாஜியையும் கவர்ந்த வாலி
எம்ஜிஆருக்கு வாலி, சிவாஜிக்கு கண்ணதாசன் என்ற நிலையிலும் பின்பு மாற்றம் வந்தது. சிவாஜியின் அன்புக்கரங்கள் படத்தில், “ஒன்னா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையைச்சொன்னா ஒத்துக்கணும்”, “காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன்” ஆகிய பாடல்களைக்கேட்டு வியந்த சிவாஜி, வாலியை வெகுவாகப் பாராட்டினார். இதனால் சிவாஜி படங்களுக்கும் வாலி எழுதத்தொடங்கினார். உயர்ந்த மனிதன் படத்தில் அவர் எழுதிய “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே” பாடலும் பிரமாதமாக அமைந்தது. பாரதவிலாசின் “இந்திய நாடு என் வீடு” பாடலும் பாராட்டுக்களையும், விருதுகளையும் அள்ளியது.
பூவா தலையா படத்தில் அழகிய ஒரு பெண்ணை தமிழகத்துடன் உருவகப்படுத்தி வாலி எழுதிய “மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே…” பாடலைக்கேட்டு, ரசிகர்கள் பரவசம் அடைந்தனர்.
முத்துராமன் நடித்த தீர்க்க சுமங்கலி படத்தில் வாலி எழுதி வாணிஜெயராம் பாடிய “மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ…” பாடலை கேட்டு மயங்காதவர்களே இருக்க முடியாது.
இசைஞானியின் பாராட்டு
1960களில் தொடங்கி, 2013 வரைக்கும் வாலி எழுதிய சினிமா பாடல்கள் 15 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும்.
எம்ஜிஆர் படங்கள் 63-க்கு பாடல் எழுதிய அவர், சிவாஜிக்கு 70 படங்களில் பாடல் எழுதி விட்டார்.
இசைஞானி இளையராஜா இசையில், கமல், ரஜினி ஆகியோருக்கு அவர் எழுதிய பாடல்களும் அற்புதமாக அமைந்தன. இளையராஜா ஒரு மேடையில் பேசுகையில், “சந்தம் சொன்ன வேகத்தில் வரிகளைத்தருவதில் கண்ணதாசனையும், வாலியையும் மிஞ்சுவதற்கு உலகிலேயே யாரும் கிடையாது” என்றார். இளையதலைமுறை நடிகர்களுக்கும் பாடல் எழுதிய வாலி, முதிய வயதிலும் “வாலிபக்கவிஞர்” என்று அழைக்கப்பட்டார்.
எம்ஜிஆருக்காக பிரார்த்தித்த ஒளிவிளக்கு பாடல்
1984 அக்டோபரில் முதல்-அமைச்சர் எம்ஜிஆர் உடல்நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.
அப்போது “ஒளிவிளக்கு” படத்தில் வாலி எழுதியிருந்த “இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு. தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு” என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.
இதுகுறித்து வாலி சொல்கையில், “அமெரிக்க மருத்துவமனையில் அண்ணியார் ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, நான் அண்ணியாருக்கு ஆறுதல் சொன்னேன். அப்போது “உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறினார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்தில்லை” என்று ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க என்னிடம் சொன்னார்கள். என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும், “அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்” என்று சொன்னேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எம்ஜிஆரை “சிஎம்” ஆக்கிய பாடல்கள்
அரசியலில் எம்ஜிஆரும் கலைஞர் மு. கருணாநிதியும் இரு துருவங்கள். எனினும் இந்த இரு துருவங்களுடனும் இணக்கமான நட்பு கொண்டிருந்த சாமர்த்தியசாலி, வாலி.
எம்ஜிஆரின் இமேஜை மென்மேலும் உயர்த்தும் வகையில் பாடல்கள் தந்தவரும் வாலி தான்.
ஒரு நிகழ்ச்சியில் வாலியின் முன்னிலையிலயே ஒருவர், எம்ஜிஆருக்காக வாலி எழுதிய சில பாடல்களைக் குறிப்பிட்டு, அவற்றை கண்ணதாசன் சிறப்பாக எழுதியதாக பாராட்டினார். அதை பொறுமையாகக்கேட்ட வாலி, “அந்தப்பாடல்களை எழுதியது நான் தான்” என்று குறிப்பிட்டதோடு, “எம்ஜிரை ‘சிஎம்’ ஆக்கியவை என் பாடல்கள். அதேநேரம் கண்ணதாசன் எழுதியிருந்தால், எம்ஜிஆர் ‘பிஎம்’ ஆகியிருப்பார்” என்றார். தவறான புரிதலுக்கு விளக்கம் அளித்த நிலையிலும் அவர், கண்ணதாசனை ஒரு படி உயர்த்திப்பேசியது, கை தட்டல்களை அள்ளியது.
ஆரம்ப கால வாலி
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி பிறந்தது திருச்சி திருப்பராய்த்துறையில், வளர்ந்தது திருவரங்கத்தில். ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, வாலி என்ற பெயரைச் சூட்டினான்.
தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிகையை வாலி தொடங்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர், எழுத்தாளர் கல்கி. திருவரங்கத்தில் வாலி நடத்திய கையெழுத்துப்பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றனர். அப்படிப் பங்கேற்றவர்களில் ஒருவர், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா என்கிற ரங்கராஜன்.
பாடல்கள் எழுதியதோடு வாலி திரைப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் ‘கையளவு மனசு’ என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்து இருக்கிறார்.
சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதுகளை 4 முறை பெற்ற வாலி. 1972-ல் “கலைமாமணி” விருது பெற்றார்.
“கலை வித்தகர்” என்பதற்கான தமிழக அரசின் பாரதிதாசன் விருது, தமிழக அரசின் பாரதி விருது, ஆழ்வார் மையத்தின் தமிழ்த்தாத்தா விருது, முரசொலி அறக்கட்டளை விருது ஆகியவையும் அவருக்கு கிடைத்துள்ளன.
இவர் கதை-வசனம் எழுதிய – “ஒரே ஒரு கிராமத்திலே படம், மத்திய அரசின் விருது பெற்றது.
1931 அக்டோபர் 29-ந்தேதி பிறந்த வாலி, 2013 ஜூன் மாதம் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு மேல் சிகிச்சை பெற்றும் பலன் இல்லாமல் ஜூலை 18-ந்தேதி மரணம் அடைந்தார்.
வாலியின் மனைவி பெயர் ரமணதிலகம். இவர்கள் ஆரம்ப காலத்தில் நாடக வாழ்க்கையில் காதலித்து மணந்து கொண்டார்கள். ரமணதிலகம் வாலிக்கு முன்பே 2009-ல் மரணம் அடைந்து விட்டார். இந்தத்தம்பதியருக்கு ஒரே மகன் பாலாஜி.
கண்ணதாசனுக்காக வாலி வடித்த கவிதை
1981-ம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் அமெரிக்கா சென்றிருந்தபோது மரணம் அடைந்தார். இதனால் துயரம் அடைந்த வாலி வடித்த கவிதை இதோ:
“எழுதப்படிக்கத்தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன்…
அழகிய கவிதைப்புத்தகத்தைக் கிழித்துப்போட்டு விட்டான்.”
அதே வாலி என்ற இன்னும் ஓர் அழகிய கவிதைப்புத்தகமும் எமனால் கிழிக்கப்பட்ட நாள் தான் ஜூலை 18.
இன்று காவியக்கவிஞர் வாலியின் 7-ம் நினைவு நாள்.
Leave a Reply
You must be logged in to post a comment.