கஜேந்திரகுமாரது அரசியல் ஏன் புறக்கணிக்கப்பட வேண்டியது?

கஜேந்திரகுமாரது அரசியல் ஏன் புறக்கணிக்கப்பட வேண்டியது?

2009 களில் பேரினவாதம் வல்லரசுகள் துணையுடன் தலைவிரித்தாடிய கோரத் தாண்டவத்தை அடுத்து தமிழ் பேசும் இலங்கை மக்களின், குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பயணம், அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கப் போகிறது என்கின்ற பதட்டமான சூழ்நிலை நிலவியது. காரணம் சிங்களப் பேரினவாதம் வெற்றி கொண்டாட்டத்தில், எதையுமே எமக்கு இனி கொடுக்கத் தேவையில்லை என்கின்ற உச்ச மதையில் இருந்தது. சர்வதேசத்திற்கோ எம்மை விட எமது பிரச்சனைகளை விட எமது உரிமைகளை விட நமது தேவைகளை விட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த “இலங்கை அதிகார மையத்தின்” ஆதரவும் நட்பும் தேவைப்பட்டது.இந்த நிலையில் எமக்கான அரசியல் வலுவானதாக ஒற்றுமையாக கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டிய தேவை அன்று இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் “தமிழ் தேசியக் கூட்டமைப்பு” என்கின்ற தமிழ் மக்களின் ஒரே கூரையின்கீழ் கட்டமைக்கப்பட்ட அத்தியாவசியமான ஒரு ஏகப் பிரதிநிதித்துவ அரசியலை உடைத்த பெருமை “கஜேந்திரகுமார் பொன்னம்பலம்” அவர்களையே சாரும்.

அதற்கு அவர் உப்புச்சப்பில்லாத சில காரணங்களை கூறினாலும் அவரது சகாக்களுக்கு அவர் விரும்பியபடியான ஒதுக்கீடு பாராளுமன்ற தேர்தலில் கிடைக்காததுதான் முக்கியமான காரணம் என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதன் வெளிப்பாடு அந்த பாராளுமன்றத் தேர்தலிலே இவர்களது அரசியல் தமிழ்பேசும் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட திலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

அதற்கு முந்தைய பாராளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்த முதல் மூன்று பேரும் 5 சதவிகித வாக்கை கூட பெறமுடியாமல் தோற்றுப் போனதிலிருந்து இவர்களை தமிழ் மக்கள் எந்த அளவிற்கு புரிந்து வைத்திருந்தார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் இவர்களை விட்டு வெளியேறியது, இவர்களுடன் ஆரம்ப காலத்தில் கூட இருந்த யாழ் மண்ணின் கல்வியாளர்ஆசிரியர் திரு வரதராஜன் அவர்கள் இவர்களை விட்டு வெளியேறியது என இவர்கள் மீதான நம்பிக்கை மக்களுக்கு குறைந்து கொண்டே வந்தது.மிகப் பெரும் நிலப்பரப்பு, பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான போராளிகள், அவர்களை வழிநடத்த ஒரு தலைவர் என ஒரு தனி அரசாங்கமே நிகழ்த்தி வந்த விடுதலைப்புலிகளை சர்வதேசம் மௌனிக்க வைத்ததன் பின்னணி இந்த முன்னணி அறியாததல்ல.

இப்படியான ஒரு சூழ்நிலையில் எமக்கான அதிகபட்ச அதிகாரப் பகிர்வு சமஸ்டியை கிடைக்குமா என்கின்ற நிலையில் எமது அரசியல் வலு இருக்கும்போது இவர்கள் பேசும் ஒரு நாடு இரு தேசம் என்கின்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத அரசியலை தமிழ் மக்கள் நம்பத் தயாராக இருக்கவில்லை.காரணம் அந்த இலக்கை இவர்கள் எந்த வழியில் அடையப் போகிறார்கள் என்பதற்கான பதில் இவர்களிடம் இல்லை. இவர்களது அரசியல் ஏட்டு அரசியலாக, நடைமுறை சாத்தியங்கள் அற்ற அரசியலாக, உணர்ச்சியை தூண்டும் அரசியலாக, உசுப்பேற்றும் அரசியலாக இன்னும் சொல்லப்போனால் கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் அரசியலாக மட்டுமே இருந்து வந்துள்ளது; அதிலும் முக்கியமாக சுமந்திரனை எதிர்ப்பது மட்டுமே இவர்களது முழுநேர அரசியல் என்கின்ற அளவில் இந்த முன்னணியின் அரசியல் பின்தங்கிப் போனது.இவர்களது இலக்கு நோக்கிய பயணத்திற்கான வலுவோ, திட்டங்களோ, நம்பிக்கையோ, சாத்தியங்களோ இவர்களால் மக்கள் முன் நம்பகமாக முன்வைக்கப்படவில்லை.

இளைஞர்களை தூண்டுவது, போராட்டங்கள் என்னும் பெயரில் அனைத்தையும் எதிர்ப்பது என தமிழ் மக்களை மீண்டும் ஒரு அச்ச நிலைக்கு இட்டுச் செல்வார்கள் என்கின்ற பயத்தை இவர்கள் ஏற்படுத்தினார்கள். காரணம் மீண்டும் ஒரு போராட்டம் (அதாவது ஆயுதப் போராட்டம் என்றில்லாமல் ஒரு சாத்வீகமான போராட்டமே முன்னெடுக்கப்படும் என்றாலும்) இளைஞர்களை, பொதுமக்களை முன்னிறுத்தி முன்னெடுத்தால்; அதில் மக்களுக்கான இளைஞர்களுக்கான பாதுகாப்பை இவர்களால் உத்தரவாதப்படுத்த, உறுதிப்படுத்த முடியாத கொள்ளவே இவர்களது கொள்ளளவு என மக்கள் நன்றாக அறிந்துள்ளார்கள்.

அதற்கு நியாயமான காரணமாக கடந்த காலத்தில் நிகழ்ந்த பொங்கு தமிழின் போது உணர்ச்சி பேச்சுகள் பேசி இளைஞர்களை தூண்டிவிட்டு பின்னர் நாட்டிலே குழப்பமான யுத்த சூழல் நிலவும் போது வீதிகளில் இளைஞர்கள் சுடப்பட்டு இரத்த குளங்களில் மிதந்த போது வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்தவர்கள் தான் இவர்கள்; இத்தனைக்கும் அன்று பாதுகாப்பாக வன்னிப் பெரு நிலப்பரப்பு இருந்தது ஆனால் இப்போது? எப்படி இவர்களது வெற்றுக் கூச்சல்களையும் வீர வசனங்களையும் நடைமுறை சாத்தியமில்லாத இலக்குகளையும் மக்கள் நம்புவார்கள்?

அதன் வெளிப்பாடுதான் கடந்த கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தல்களிலும் தமிழ் மக்கள் கொடுத்த தீர்ப்பு; தவிர வட மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்கள் போன்றவற்றை இவர்கள் புறக்கணிக்கச் சொன்னதை முழுமனதாக மறுத்து அமோகமாக வாக்களித்து இவர்களை நிராகரித்ததும் மக்கள் இவர்கள் மீது கொண்டிருந்த அவநம்பிக்கையின் வெளிப்பாடே..! கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் சாவகச்சேரி பருத்தித்துறை நகர சபைகள் பிரதேச சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்வீட்டு கலகங்களால் இவர்களுக்கான வாக்கு வங்கி முதல் முறையாக அதிகரித்தது. ஆனால் அவற்றைப் பயன்படுத்தி நகரசபை பிரதேச சபைகளை கூட கைப்பற்றமுடியாத அளவுக்கு முடியாத அளவிற்கு இவர்களது கையாலாகாத தினமும் இயங்கு திறனை தன்மையும் மக்களுக்கு மேலும் இவர்கள் மீது சலிப்பை ஏற்படுத்தியது.

மேலும் அந்த தேர்தல்களில் இவர்களது வாக்குவங்கி அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்த வட மாகாணசபையின் முன்னாள் முதல்வர் திரு விக்னேஸ்வரன் அவர்களும், அன்றைய கூட்டமைப்பின் தென்மராட்சியின் வாக்கு வங்கியின் சொந்தக்காரர் அருந்தவபாலன் அவர்களும் அப்போது இவர்களுக்கு சாதகமாக இருந்து தற்சமயம் பிறிதொரு கட்சியில் இருப்பதால் அந்த வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது அரசியல் அறிந்தவர்களுக்கு தெரியாத விடயமல்ல.

இவற்றை எல்லாம் கடந்து இவர்களது தமிழ் தேசிய அரசியலை எடுத்து நோக்கினால் இவர்களை ஏன் எங்கள் மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்ப கூடாது என்பதற்கான மற்றுமொரு வலுவான காரணம்; இவர்களது கட்சி வியாபித்திருக்கும் தமிழர் நிலப்பரப்புகள் எந்த அளவிற்கு உள்ளது என்பதுவே. யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டம், வன்னி தேர்தல் மாவட்டம், திருகோணமலை தேர்தல் மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம், அம்பாறை தேர்தல் மாவட்டம் என; தமிழ் மக்களின் அரசியல் பலத்தை நிரூபிக்க வேண்டிய, அந்தந்த பிரதேச மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் எமக்கான உரிமைகளை பேசவேண்டிய தேவை அவசியம் தமிழர் தரப்புக்கு இருக்கும் நிலையில்; இவர்களது அரசியலோ யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில், யாழ்ப்பாணத்தில், அதிலும் குறிப்பாக வலிகாமத்தில் முடங்கி இருப்பது எந்த வகையிலும் இவர்களை தமிழர் தரப்புக்காண ஒரு மாற்று அணியாக தமிழ் தரப்பின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளளும் நம்பகத் தன்மையை வெளிப்படுத்தும்?

அம்பாறையில் கருணா உடைக்கட்டும், மட்டக்களப்பிலே பிள்ளையானும் வியாழேந்திரனும் பார்த்துக் கொள்ளட்டும் என்ன நினைக்கிறார்களோ என்னவோ அங்கெல்லாம் இவர்களது கட்சியின் வேட்பாளர்கள் யார் என்பதே பலருக்கும் தெரியாத சூழ்நிலை நிலவுகிறது, இவர்களது கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் அங்கு இல்லை; தலைவர் செயலாளர் பேச்சாளர் அமைப்பாளர் என அத்தனை பேரும் யாழ் கிளி தேர்தல் மாவட்டத்தில், அதிலும் யாழ் மாவட்டத்தில், இன்னும் சொல்லப் போனால் வலிகாமத்தில் முடங்கிப் போய் கிடக்கிறார்கள்.

அதே நேரம் திருகோணமலையில் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு ஒரு ஆசனமே அதிகபட்சமாக கிடைக்கும் எனும் நிலையில் அதனை குழப்பி சிங்களவர்களுக்கு அல்லது இஸ்லாமியர்களுக்கு போனாலும் பரவாயில்லை கூட்டமைப்புக்கு பெறக் கூடாது என்கிற உயரிய நோக்கில்; அங்கு இறங்கி தமிழர் வாக்குகளை பிரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதில் மட்டும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் யாழ் மாவட்டத்தில் கிடைத்த வாக்குகளை தங்களுக்கு, தங்களை நம்பி விழுந்த வாக்குகளாக நம்பி யாழ் மாவட்டத்தை மட்டுமே குறிவைத்து இவர்களது தேர்தல் முன் நகர்வுகள் இருக்கின்றன.

வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சனைகளை பேசப்போகும் ஒரு கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக தங்களை முன்மொழிவை அவர்கள் யாழ் தேர்தல் மாவட்டத்தில் மட்டும் ஓரிரு ஆசனங்களை பெற்று எப்படி எமக்கான பேசும் சக்திகளாக பாராளுமன்றத்துக்கு சென்று சாதிக்க முடியும்? வேண்டுமானால் அடுத்த ஜனாதிபதி அல்லது பாராளுமன்றத் தேர்தல்களின் போது சிங்கள பெரும்பான்மை கட்சிகளில் எந்தக் கட்சி அதிக இனவாதத்தை கக்குகிறதோ அந்தக் கட்சியின் வெற்றிக்கு சிங்கள பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக இவர்கள் வாழ்வளிக்க உதவலாம்.

அதைத்தாண்டி இந்த ஓரிருவர் பாராளுமன்றம் சென்று எதனையும் சாதிக்க முடியாது; ஏனென்றால் இவர்களை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கண்டுகொள்ளப் போவதில்லை! அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்கின்ற அடுத்தகட்டம் எங்களைப் போலவே அவர்களுக்கும் தெரியாது.இவர்கள் இந்தத் தேர்தலில் ஒருவர் அல்லது பேரதிசயம் நிகழ்ந்தது இருவர் தெரிவு செய்யப்பட்டால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலமான பாராளுமன்ற இருப்பை குறைக்குமே அன்றி வேறு எதனையும் நிகழ்த்தப் போவதில்லை. இவர்களுடன் திரு விக்னேஸ்வரன் அவர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்கிறார் என்று வைத்தால் கூட இவர்கள் அவருடன் சேர்ந்து இயங்கும் அளவிற்கான நம்பிக்கையை இதுவரை விதைக்கவில்லை; காரணம் இவர்களது எதிர்ப்பரசியல். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக் கொண்டாலே இதுவரை எந்த இடத்திலும் இவர்கள் சேர்ந்து இயங்க தயாராக இருக்கவில்லை.

பிரதேச சபைகள், நகரசபைகள் மாநகரசபைகள், என உள்ளூராட்சி சபைகளில் கூட எங்குமே சேர்ந்து இயங்க முடியாத இவர்கள் ஒருபோதும் பாராளுமன்றத்தில் சேர்ந்து இயங்க முடியாது; அந்த அளவுக்கு இவர்களது தலைமையில் ஈகோ உள்ளது. அது ஒருபோதும் விக்னேஸ்வரன் அவர்களுடன் கூட சேர்ந்து இயங்க வைக்காது. இந்த நிலையில் இவர்கள் அங்கு தனித்தவில் வாசித்து எதையும் சாதிக்கப் போவதில்லை; தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏக பிரதிநிதித்துவத்தை உடைப்பதை தவிர…! ஆகவே அன்பார்ந்த தமிழ் மக்களே கடந்த அத்தனை பாராளுமன்ற ஜனாதிபதித் தேர்தல்களிலும் இவர்களை, இவர்களது கோரிக்கைகளை தூக்கி எறிந்தது போல் இந்தத் தடவையும் தயக்கமில்லாமல் தூக்கி எறியுங்கள். தமிழ் மக்கள் நிராகரித்த இவர்களது நம்பமுடியாத சாத்தியமற்ற அதே கொள்கைகளை மீண்டும் ஒன்றும் சொல்லிக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்ப்பது மட்டுமே தமது அரசியலாக கொண்டுள்ள இவர்களை இந்த தேர்தலின் மூலம் மீண்டும் ஒரு தடவை புறக்கணியுங்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பானது, வீட்டின் வெற்றியானது, எமக்கு எதிரான சிந்தனையுள்ள எம்மை நசுக்க நினைக்கும் பேரினவாதிகளுக்கும், அவர்களுக்குத் துணைபோகும் சக்திகளுக்கும் எரிச்சலைக் கொடுக்கிறது என்றால்; பிரபாகரன் கேட்டதை ஜனநாயக வழியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்கின்றது என மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விசனம் கொள்கின்றார்கள் என்றால்; வீட்டின் தோல்வியை அவர்கள் அத்தனை பேரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள் என்றால்; நாம் ஏன் அந்த வீட்டை உடைத்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்?

எமது வீட்டை பலப்படுத்துவது தான் எமது அரசியல் தேவை. நேற்றல்ல இன்றல்ல நாளையல்ல எமக்கான நிரந்தர தீர்வு ஒரு நாள் என்றோ எட்டப்படும்வரை நாம் விரும்பியோ விரும்பாமலோ வீட்டை தெரிவு செய்வது தான் எமக்கான ஒரேவழி..! காரணம் வீட்டின் தோல்வி அல்லது வீழ்ச்சி அல்லது உடைப்பு எதிர்த்தரப்பின் கொண்டாட்டத்திற்கான காத்திருப்பு என்பதை மறந்துவிடாதீர்கள்..! வீட்டின் உள்ளே இருப்பவர்களை வேண்டுமானால் மாற்றங்கள் வீட்டை ஒருபோதும் மாற்றிக் கொள்ளாதீர்கள்.

About editor 3123 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply