பல வேடிக்கை மனிதரைப் போல – நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

பல வேடிக்கை மனிதரைப் போல – நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

தமிழர் அரசியலில் இப்போது சூடு பிடித்திருக்கும் விவகாரம் சுமந்திரனுக்கு எதிரான உள்குத்து வெட்டுத்தான். அதைத் தவிர்த்து அரசியல் பேச முடியாது என்பதால் இன்றும் அது தொடர்பிலேயே எழுதுகிறேன்.

சுமந்திரன் விடயத்தில் வெளியில் ஆரவாரம் பண்ணாமல், கமுக்கமாக இருந்து, தன் பெயரைச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்ட அந்தத் தமிழரசுப் பிரமுகர் தமக்கு நெருக்கமானவர்களிடம் இப்படிக் கூறினாராம்.

மூன்று விடயங்கள்

ஒன்று – சுமந்திரனின் அந்த சிங்களப் பேட்டியை நல்ல சிங்களம்  தெரிந்த நண்பர் ஒருவரிடம் காட்டி முழுமையாகக் கேட்டு அறிந்து கொண்டேன். அதில் சுமந்திரன் மீது கோபிப்பதற்கு எதுவுமில்லை. அவர் முன்னர் சொன்னவற்றைத்தான் திரும்பவும் கூறியுள்ளார்.

“இரண்டு – சம்பந்தன் ஐயா, தான் தேடிப்பிடித்துக் கொண்டு வந்தவர் என்பதால் இன்று வரை விக்னேஸ்வரனுக்கு எதிராகப் பகிரங்கமாக ஏதும் கூறாமல் அமைதி காக்கின்றார். வளர்த்த கடா மார்பில் பாய்ந்த மாதிரி விக்னேஸ்வரன் செயற்பட்ட போதிலும் சம்பந்தன் ஐயா இன்றுவரை பிரதிபலிப்பு ஏதும் காட்டவில்லை. அப்படிப்பட்ட சம்பந்தன் ஐயா, தாம் தேர்ந்து கொண்டு வந்து, தனது தளபதி போல பக்கத்தில் வைத்திருக்கும் சுமந்திரனைக் கைவிடுவார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஆகவே இந்த விடயத்தில் நான் முட்டாள்தனமாக நடந்து கொள்ள விரும்பவில்லை.

“மூன்று – சரியோ, பிழையோ இன்றைய நிலையில் தமிழரசுக்கும் கூட்டமைப்புக்கும் சுமந்திரனின் பங்களிப்பு மிகமுக்கியமானது. இன்றியமையாதது. அவரைக் கட்சியோ, கூட்டமைப்போ இழப்பது பெரும் பாதிப்பைத் தரும். தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அந்த வேலையை முன்னெடுப்பது கடைசியில் கட்சிக்கும் நமது மக்களுக்கும்தான் பேரிழப்பைத் தரும். அதனால் நான் சத்தம் சந்தடியின்றி இருந்தேன். எனினும் சுமந்திரனைத் தொடர்பு கொண்டு அவரது பேட்டி தொடர்பில் எனது மனதில் பட்டவற்றை – அவர் தவறுகளை – அவருக்குச் சுட்டிக்காட்டினேன். அதேநேரம் கட்சித் தலைவர் மாவை அண்ணனையும் சந்தித்து என் ஆலோசனையை வழங்கினேன்” என்றார்

அந்தப் பிரமுகர். சுமந்திரனின் மனப் பட்டியலில சம்பந்தனுக்கு அடுத்த இரண்டாவது வரிசையில்  இப்போது இருக்கின்றார் என்பதை என்னால் அறிய முடிகின்றது. ஏற்கனவே அந்தப் பட்டியலில் இருந்த இளம் நகரபிதா ஒருவரை அப்பட்டியலில் இருந்து சுமந்திரன் தூக்கிக் கடாசி விட்டார் என்பதும் எனக்குத் தெரியும்.

அந்த இடம் நான் குறிப்பிடும் பிரமுகருக்கு வழங்கப்பட்டு விட்டதோ என்னவோ…! ஆனால் அந்தப் பிரமுகர் கூறியபடி சம்பந்தன் – சுமந்திரன் புரிந்துணர்வு நாங்கள் எல்லோரும் கருதும் நிலையையும் கடந்து இறுக்கமானது. சுமந்திரன் விவகாரத்தில் – இந்த சர்ச்சைக்குரிய பேட்டிவிடயத்தில் – சம்பந்தன் தமது முடிவு – தீர்ப்பு – யாது என்பதை விவரமான அறிக்கையாக வெளிப்படுத்தி விட்டார் அல்லவா?

நான் கூறுவதை நம்புங்கள். நம்பா விட்டால் சுமந்திரன் அல்லது சம்பந்தனிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சுமந்திரனின் மேற்படி சிங்களப் பேட்டி வெளியாகி இப்போது இரண்டு வாரங்களாகிவிட்டன. பல்வேறு அறிக்கைகள், கண்டனங்கள், சொல் வீச்சுகள், திட்டுகள், வசவுகள் என்று பல அரங்கேறி விட்டன. கடைசியாக – முத்தாய்ப்பாக – சம்பந்தன் தமது முடிவையும் அறிவித்து விட்டார். சுமந்திரனின் சிங்களப் பேட்டி வெளியானமைக்கும் அது தொடர்பில் சம்பந்தனின் அறிக்கை பிரசுரமானமைக்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு, மூன்று தடவைகளுக்கு மேல் சம்பந்தனைச் சுமந்திரன் நேரடியாகச் சந்தித்து விட்டார். பல டசின் தடவைகளுக்கு மேல் இருவரும் தொலைபேசியில் உரையாடியுமுள் ளனர். அரசியல் களநிலைவரம் என்று பல விடயங்களை இருவரும் பேசிக் களைத்தும் விட்டனர்.

ஆனால் இதுவரை – நேற்றுப் பிற் பகல் வரை – இன்னமும் – இந்தப் பேட்டி குறித்து சுமந்திரனிடம் ஒரு சொல் கூட சம்பந்தன் ஐயா பேசினார் இல்லை. இவ் விவகாரம் குறித்து அவர் சுமந்திரனிடம் ஏதும் கேட்டாருமில்லை. சுமந்திரன் தானாக ஏதும் அவரிடம் சொன்னாரு மில்லை.

சுமந்திரனின் பேட்டி தொடர்பில் மாவை சேனாதிராசா உட்படப் பலர் சம்பந்தனிடம் முறைப்பாடு செய்திருந்த போதிலும், அவை எவை குறித்தும் ஒரு சொல்தன் னும் சம்பந்தன் சுமந்திரனிடம் கேட்க வில்லை என்பது இருவரிடையேயான புரிந்துணர்வுக்கு நல்ல எடுத்துக்காட்டு.

கூட்டமைப்பின் தலைவருக்கும் சுமந்திரனுக்கும் உறவு அப்படி என்றால், இலங்கைத் தமிழரசின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கும் சுமந்திரனுக்கும் உறவு வேறு விதமானது.

தமிழரசுக் கட்சியினதும், கூட்டமைப்பி னதும் பல பிரமுகர்கள் இந்தச் சந்தர்ப்பத் தைப் பாவித்து சுமந்திரனைக் கடித்துக் குதறலாம் என்று முயன்ற போது, உரிய நடவடிக்கை எடுத்து அதைக் கட்டுப்படுத் தத் தவறிய மாவை சேனாதிராசா, இப்போது இதனால் கட்சிக்கும் கூட்டமைப் புக்கும் பின்னடைவு வந்து விடுமோ என்ற கவலையில் சுமந்திரனுடன் சமாளித்துப் போகும் காய் நகர்த்தல்களை ஆரம்பித்திருக்கின்றார் என்று தெரிகின்றது.

“நானும் (மாவையும்), செல்வமும், சித்தார்த்தனும் ஒன்றாக வந்து நேரடியாக உங்களுடன் ஆறஅமர இருந்து பேசி விடயங்களை சுமுகமாக்க விரும்புகி றோம். நீங்கள் இப்போது உயர்நீதிமன்ற வழக்கில் மும்முரமாக உள்ளீர்கள். அது முடிய அடுத்த வாரத்தில் (இவ்வாரத்தில்) நேரில் வந்து கொழும்பில் சந்தித்துப் பேசுவோம். ” என்று மாவை சேனாதிராசா சுமந்திரனுக்கத் தெரியப்படுத்தியுள்ளார் என்றும் “ஓம் சந்திப்போம். பேசுவோம்!” – என்று சுமந்திரன் பதிலளித்தார் என்றும் சுமந்திரனின் மிக நெருங்கிய வட்டாரம் ஒன்று எனக்கு நேற்று மாலை தொலை பேசியில் தகவல் கசிய விட்டது.

ஆயினும் அந்த வட்டாரத்துக்கும் சில கோபதாபங்கள் உண்டு. “எல்லோரும் அறிக்கை விட்டு சுமந்திரனைத் தாக்கிய போது மாவையர் மட்டுமல்லர், செல்வம், சித்தார்த்தன் போன்ற தலைவர்களும் தாங்களும் சேர்ந்து தங்கள் பாட்டுக்கு அறிக்கை விட்டு ஆரவாரம் பண்ணிப்போட்டு, இப்போதுதான் தாங்கள் தலைவர்கள் என்பது நினைவுக்கு வர, தலைவர்கள் மாதிரி ந டக்க   மு ய ற் சி க் கி ன ம் . ஏ ன் அ றி க்கை  வெளியிட முன்னர் சுமந்திரனுடன் பேசி, அவர் பக்கக் கருத்தையும் கேட்டபின்னர் அவர்கள் அறிக்கைகளை வெளியிட்டிருக்கலாமே…! வித்தியா கொலைச் சம்பவத்தோடு தமிழ்மாறனைக் கூட்டமைப்பு அரசியலிலை எழும்பவிடாமல் ஒரேயடியா அடிச்சு அமுக்கின மாதிரி, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுமந்திரனை எல்லாருமாகச் சேர்ந்து அடிச்சு விழுத்தலாம் எண்டு பார்த்தினம். சரி வரல்லே. இப்ப சமரசம் செய்யினம்.” – என்று சீறியது அந்த வட்டாரம்.

சுமந்திரனின் முகப்புத்தகம் பார்த்தனீர்களா என்று அந்த வட்டாரம் கேட்டது. நான் இல்லை என்றேன்.

“பல வேடிக்கை மனிதரைப் போல – நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” – என்று சுமந்திரன் தனது முகப்புத்தகத் தில் கேட்டிருப்பது இதைத்தான் என்றது அந்த வட்டாரம். “அப்படி யாரிடம் கேட்கிறார் சுமந்திரன்? மாவையிடமா?” – என்று அந்த வட்டாரத்தைச் சீண்டினேன் நான்.

அந்த வட்டாரத்துக்குப் பொத்துக் கொண்டு வந்ததே சீற்றம்…! “ஒருக்கா… கூட்டத்திலை பேசி இரண்டு பேரையும் கொழுவி வைச்சிட்டியள்… இப்ப அடுத்த தடவை தொடங்கியிருக்கின்றியள் போல…!” – என்று சினந்தது அந்த வட்டாரம்.

“நாரதர் கலகம் நன்மையில் முடியும்” – என்று கூறித் தொடர்பைத் துண்டித் தேன் நான். நாரதர் கலகம் எப்போதும் நன்மையிலா முடியும்? நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் வாசகர்களே…!

(காலைக்கதிர் 24-05-2020 மின்னல்)

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply