தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

என்.கே. அஷோக்பரன்  

2019 டிசெம்பர் 23

 2001இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது, காலத்தின் கட்டாயமாகத் தான் அமைந்திருந்தது என்றால், அது மிகையல்ல.   

அன்று, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம், தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டிருந்த கடுமையான அடக்குமுறைகளுக்கு எதிராக, தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஆனால், தமிழர்களின் ஜனநாயக அரசியல் சக்திகளுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும், குறிப்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில், முழுமையான சுமுகநிலை நிலவவில்லை என்ற யதார்த்தத்தை, நாம் மூடிமறைத்துவிட முடியாது.  

 குறிப்பாக, தமிழர் ஐக்கிய விடுலைக் கூட்டணியின் தலைமைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான உறவில் சுமுக நிலை இருக்கவேயில்லை. இது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் காலத்திலிருந்து ஏற்பட்டிருந்த முறுகல் நிலை. இதன் விளைவாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் படுகொலையுட்பட, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பல தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.   

இந்தப் படுகொலைகளைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால், அன்று இலங்கை அரசாங்கத்தால், தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அடக்குமுறைச் சூழலில், தமிழ் மக்களுக்கு விடுதலைப் புலிகளை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.   

இவ்விடத்தில், நாம் முடிந்த முடிவுகளுக்கு அவ்வளவு இலகுவில் வந்துவிட முடியாது. இதில் யார் செய்தது சரி, யார் செய்தது பிழை என்ற அந்த முடிந்த முடிவுகளுக்கு வருவதில் மெத்தப் பெரும் சிக்கல்கள் இருக்கின்றன.   

ஏனென்றால், போராட்டம் என்பது இராணுவ ரீதியிலான அணுகுமுறையைக் கொண்டது. அரசியல் என்பது ஜனநாயக ரீதியிலான அடிப்படைகளைக் கொண்டது. தமிழர்கள் சார்பில் ஒரே அமைப்பு, ஒன்றோடொன்று இயைபுற்ற அமைப்புகள் இவ்விரண்டு அம்சங்களையும் கொண்டு நகர்த்தியிருந்தால் இந்தச் சிக்கல்கள் இங்கு குறைவாக இருந்திருக்கும்.   

ஆனால், இங்கு தமிழ் மக்களின் போராட்டமும் ஜனநாயக அரசியலும் ஒன்றுடனொன்று சில முரண்பாடுகளையும் பனிப்போரையும் கொண்ட முகாம்களால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. தமிழ்க் கட்சிகளிடையேயும் இதன் தாக்கம் தெரிந்தது.   

தமிழர்கள் மத்தியில் செல்வாக்கோடு அன்று இயங்கிக் கொண்டிருந்த கட்சிகளை, விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சி (1990களின் பின்னரான குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்) அவர்களை ஆதரிக்க விரும்பாத, அதேவேளை எதிர்க்க முடியாத நிலையிலுள்ள கட்சி (தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, முன்னாள் ஆயுதக் குழுக்களாக இருந்து, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த கட்சிகள்), விடுதலைப் புலிகளை முற்றாக எதிர்க்கும் கட்சி (டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி) எனப் பிரித்து நோக்கலாம்! நிற்க.  

தமிழ்க் கட்சிகளிடையையேயான ஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பில், அவ்வப்போது ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தவர், வௌிநாட்டு இராஜதந்திரிகள் முயற்சியெடுத்தாலும் மிகப் பல காலமாக அது சாத்தியப்படவில்லை.   

குமார் பொன்னம்பலத்தின் வௌியேற்றத்தின் பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்பது, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்காரரைப் பிரதானமாகவும், மிகச் சொற்பளவிலான முன்னாள் காங்கிரஸ்காரர்களையும் (ஆனந்த சங்கரி, எம்.சிவசிதம்பரம் உள்ளிட்டோர்) கொண்டமைந்த கட்சியாகவே தொடர்ந்தது. அதைக் ‘கூட்டணி’ என்று நாம் தொடர்ந்தும் விளிக்க முடியாது.   

மீண்டும், குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இணைவது என்பது, சாத்தியமாகாத கனவாகவே தொடர்ந்தது. இதில், தனிமனித முரண்பாடுகள் மிக முக்கிய காரணம் என்றாலும், கொள்கை நிலைப்பாடு சார்ந்த முரண்பாடுகளும் பிரதான தடையாக இருந்தன.  

 ‘திம்புக் கோட்பாடு’களைத் தமிழர்களின் மிக அடிப்படையான அபிலாசையாக முன்னிறுத்திய குமார் பொன்னம்பலத்துக்குத் தமிழர்களின் தேசியம், தாயகம், சுயநிர்ணயத்தை அங்கிகரிக்காத எந்தவொரு தீர்வும் ஏற்புடையதாக இருக்கவில்லை.   

மறுபுறத்தில் நீலன் திருச்செல்வம் உள்ளிட்டவர்கள், தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தத்துவார்த்தங்களுக்குப் பெரிதும் அழுத்தம் கொடுக்காது, பிராந்திய ரீதியான, பலமான அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.   

இந்த இரண்டு முகாம்களும் இணைவது சாத்தியமில்லை என்பதே, வௌிப்படையாகத் தெரிந்தது. மறுபுறத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலிருந்த முறுகல் நிலை, தேர்தல் அரசியலில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பிக்கு சாதகமாக அமைந்திருந்தது.  

 விடுதலைப் புலிகளுக்கு இலங்கை ஜனநாயக அரசியலில் பங்கெடுப்பதில் எந்த ஆர்வமும் இருக்கவில்லை. அவர்கள் ‘இலங்கை’ என்ற எண்ணக்கருவுடனேயே முரண்பாடுகளைக் கொண்டிருந்தார்கள். ஆனால், அரசியல் யதார்த்தம் வேறானதாக இருந்தது.   

விடுதலைப் புலிகள், தம்மைத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அறிவித்துக்கொண்டிருந்தாலும், அதற்கான மக்கள் அங்கிகாரத்தின் வௌிப்பாடு என்ற ஒருவிடயம் இருக்கவில்லை. அதன் அரசியல் அவசியத்தை, விடுதலைப் புலிகள் புரிந்துகொள்ள இன்னும் சில காலம் தேவைப்பட்டது.  

இந்தச் சூழல் பின்புலத்தில்தான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் முயற்சி, கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களால் முன்னடுக்கப்பட்டது.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய தன்னுடைய கட்டுரையொன்றில், அதன் ஸ்தாபக ஆவணத்தில் கையொப்பமிட்ட ஸ்தாபகர்களில் ஒருவரான, அன்றைய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்த நல்லையா குமரகுருபரன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘2000ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி, தமிழ்க் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அமரர் குமார் பொன்னம்பலம், தலைநகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.   

‘அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் பொதுச் செயலாளராக நானும் தலைவராக சட்டத்தரணி விநாயகமூர்த்தியும் மிகவும் காத்திரமாக, வீரியத்துடன் முன்னெடுத்துச் சென்றோம்…  

‘தமிழ்த் தலைமைகளின் ஒருமைப்பாட்டின் வெளிப்பாடாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கும் எண்ணம், முதலில் கருக்கொண்ட து கிழக்கு மாகாணத்தில் என்பதும் ஆயுத போராட்டத்துக்கு இணையாகத் தமிழர் தம் அபிலாசைகளைத் திண்ணமாக எண்ணத்தில் கொண்டவர்கள், உச்சபீடமான நாடாமன்றத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டியதும் அல்லாது போனால் ஏற்றப்படக்கூடிய விளைவுகளும் தமிழர் தம் அபிலாசைகளை நேசித்தவர்களால் உணரப்பட்ட நேரம்…  

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் கருக் கொண்டதில், ஆரம்ப கர்த்தாக்களாக கிழக்கு மாகாண புத்தி ஜீவிகளுடன் ஊடகவியலாளர் சிவராம் முக்கிய பங்காற்றினார். அங்கே தான் தமிழ் தலைமைகள் ஒன்றுபட வேண்டிய தேவையை உணர்த்தி, கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.   

‘கட்சிகளுடனான சந்திப்பை மேற்கொண்டவர்கள், சிவராம் உடன் காலத்துக்குக் காலம், அவருடன் இணைந்த நண்பர்களுமே ஆவார். இந்தவகையில், என்னையும் விநாயகமூர்த்தியையும் அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களது இல்லத்தில் சந்தித்தவர்கள், சிவராமும் ஆங்கிலப் பத்திரிகையாளரான திஸ்ஸநாயகமும் ஆவர். 

‘நான் அவர்களுக்குக் கூறிய ஒரே ஒரு விடயம், ஏதெனும் ஒரு கொள்கை அடிப்படையில் அதற்கு மக்கள் ஆணை கேட்டு, ஒன்றுபட்டு தேர்தலில் நிற்பதுதான் ஒரு புத்திசாதுரியமான விடயம் எனத் தமிழ் காங்கிரஸ் நம்புகின்றது என்பதாகும்’.  

அந்தக் கட்டுரையில், நல்லையா குமரகுருபரன் குறிப்பிட்ட கொள்கை ரீதியிலான ஒற்றுமை என்பது, அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை என்பதை, அவர் மேலும் குறிப்பிடும் விடயங்களில் இருந்து தௌிவாகிறது.   

குறிப்பாக, விடுதலைப் புலிகளின் வகிபாகம் பற்றி, தமிழ் காங்கிரஸும் விடுதலைக் கூட்டணியும் இணங்குவதிலேயே நிறையச் சிக்கல்கள் இருந்தன. இது பற்றி நல்லையா குமரகுருபரன் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:  

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எண்ணம் கருக்கொண்ட போதும் சரி, முதல் தேர்தலில் விஞ்ஞாபனத்தை உருவாக்கிய போதும் சரி, வேட்பாளரைத் தெரிவு செய்தபோதும் சரி, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், எந்தவகையிலும் பங்கு பெறவில்லை. தேர்தல் விஞ்ஞாபனத்தை உருவாக்கிய போது, நாம் வெறுமனே ஒன்றுபட முடியாது; விடுதலைப் புலிகளே, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதற்கு, மக்கள் ஆணையுடனான அங்கிகாரத்தைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸினர் தான். 

‘நீண்ட சொல்லாடல்களுக்கு மத்தியில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் இரா.சம்பந்தன், ‘விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள்’ எனும் சொற்பிரயோகத்துக்குப் பதிலாக, அவர்கள் ‘முக்கியமானதோர் அரசியல் அமைப்பு’ என பாவிக்கலாம் என்று வலியுறுத்தினார்’… 

‘2001 ஒக்டோபர் 21ஆம் திகதி நள்ளிரவில் கூட்டமைப்பு உருவாகக் கைச்சாத்திடப்படும் வரை, என்னோடு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சார்பாக கலந்து கொண்ட முன்னாள் ஐ.நா ஆலோசகர் தில்லைக்கூத்தன் நடராஜாவும் திம்புக் கோட்பாடுகள், ஏக பிரதிநிதித்துவம் என்பவை, எதிர்கால அரசியல் தீர்வுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்பது, காலத்தின் கட்டாய தேவை என்பதால், இவை தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.   

‘ஆயினும் இணக்கப்பாடு ஏற்படாத நிலையில், ஓர் இணக்கப்பாட்டு அடிப்படையில், இறுதி வடிவம் கொடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்ட நிலையில், ஏக பிரதிநிதித்துவம் எனும் பதப்பிரயோகத்தை முக்கிய அரசியல் அமைப்பு எனும் வகையில் இரா.சம்பந்தன் அவர்களுடைய ஆலோசனையை ஏற்று மாற்றத்தை ஏற்றுக் கொண்டோம்.  

‘நிச்சயமாக, குமார் பொன்னம்பலம் உயிரோடு இருந்திருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்று சாத்தியமாகி இருப்பதற்கான வாய்ப்புக் குறைவு. ‘ஏக பிரதிநிதிகள்’ என்ற சொற்பதத்தைத் தவிர்க்க அவர் ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார். அதன் கொள்கை மேன்மைகள் எவ்வாறு இருந்தாலும், யதார்த்த அரசியலில் அதன் தாக்கமானது, ‘கூட்டமைப்பு’ என்ற பலமானதொரு சக்தி உருவாகாது போகும் நிலையை ஏற்படுத்தியிருக்கும்.   

‘ஆகவே காலத்திற்கேற்ற நெகிழ்வுத்தன்மை அரசியலுக்கு அவசியம். இது கொள்கைப் பிறழ்வு அல்ல. இந்தத் தௌிவையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், சமரசம் என்பது ஏற்படாவிட்டால், சமரசத்துக்கான விட்டுக்கொடுப்புகள் இல்லாது விட்டால், ஒற்றுமையென்பது ஒருபோதும் அடையப்பட்டுவிட முடியாததொன்றாகவே இருக்கும்.  

பலத்த சமரசங்களுக்கு மத்தியில், உருவாகிய கூட்டமைப்பு, தமிழர்களின் பலமானதோர் அரசியல் சக்தியாகவும் தவிர்க்க முடியாத ஜனநாயக அமைப்பாகவும் மாறியிருந்தது.   

ஆனால், மீண்டும் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள், கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஒற்றுமையைச் சிதைத்து, இன்று அதன் எதிர்காலத்தை மட்டுமல்ல, தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி நிற்கிறது.  

http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/91-242834

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply