சுமந்திரனை ஆனந்தசங்கரியோடு ஒப்பிடும் குலநாயகத்திடம் சில கேள்விகள்…

சுமந்திரனை ஆனந்தசங்கரியோடு ஒப்பிடும் குலநாயகத்திடம் சில கேள்விகள்…

22  ஆம் திகதி மே மாத தினக்குரலில் சுமந்திரன் தொடர்பாக தமிழ் அரசுக் கட்சி நிர்வாக செயலாளர் திரு குலநாயகமாகிய நீங்கள் வெளியிட்ட செய்தி சார்பாகச் சில கேள்விகள்.

1. திரு  ஆனந்தசங்கரி அவர்கள் புலிகளை குறைகூறி அடிக்கடி பத்திரிகைகளில் அரசாங்கத்துக்கு ஆதரவாய் கடிதம் எழுதினார். அதுதான் அவரது முற்றும் முழுதுமான செயற்பாடாக இருந்தது. திரு சுமந்திரன் அவர்கள் கடிதம் எழுதி அவ்வாறான செயற்பாடுகளிலா ஈடுபடுகின்றார்?

2. ஆனந்தசங்கரி அவர்கள் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வுவழியை முன்வைத்துத் தனது புலி எதிர்ப்பைக் காட்டினாரா? நீங்கள் சமுதித்த என்பவரின் சிங்கள மொழியிலான நேர்காணலை மையமாக வைத்துச் சுமந்திரனைச் சாடுகின்றீர்கள். சுமந்திரன் அவர்கள் ஆனந்தசங்கரி போல, புலி எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபடவில்லை . அவர் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ஒரு தெளிவான தீர்வு வழியை அறிமுகஞ் செய்து இயங்குகின்றார். சிங்களவர்களது அரசியல் உளவியல், அவர்களது பண்டைய வரலாற்றின் ஊற்றிலிருந்து கொதித்தெழுந்து பாய்வது. சோழ மன்னர் படை எடுப்புக்கள் காரணமாக  சிங்களவர்கள் அனுராதபுர இராச்சியத்தை விட்டும்  பின்னர் பொலநறுவை இராச்சியத்தைவிட்டும் எல்லா உடைமைகளையும் இழந்து அகதிகளாகத் தென் இலங்கைக்கு ஓடித்தப்பினர். அவ்வேளைகளில் தென் இந்திய தமிழ்ப் படைகள் புரிந்த கொலைகள், கொள்ளைகள், சித்திரவதைகள், பாலியல் அக்கிரமங்கள், பேரழிவுகளை, மற்றும் சிறைபிடித்த ஒரு மன்னனின் கண்களைத் தோண்டியெடுத்த கொடுமையை, விகாரைகளின் ஆவணங்களைச் சிதைத்த வக்கிரமத்தை, சிங்களவர்கள் இன்னும் மறக்கவில்லை. அவர்கள் குருதியோடும் சிந்தனையோடும் உறைந்து போயுள்ளன. இன்னும் ஒரு முறை அது நேர்ந்துவிடலாம் என்ற அச்சம் அவர்கள் உள்ளங்களில் ஊன்றி ஆலவிருச்சமாய் படர்ந்து நிற்கின்றது.மாஹாவம்சம் வளர்த்துள்ள திராவிட- தெமிழ பயத்தாலும் சந்தேகத்தாலும். எமக்கான தீர்வுகளை வன்மையாக எதிர்க்கும் சிங்கள மக்களின் மனதை மாற்றி, அவர்களுக்குச் சமஷ்டி பிரிவினை அல்ல என்பதை விளக்கி வெற்றி கொள்வதே சுமந்திரன் மேற்கொண்டுள்ள புதிய அரசியல் சாணக்கியம் .

3 சங்கரியைவிட மோசமான கருத்தை சுமந்திரன் கூறியுள்ளாரா? ஊடக நேர்காணலின் பொழுது , ஆயதப் போராட்டத்துக்கு எதிராகவோ , புலிகளுக்கு எதிராகவோ சுமந்திரன் அவர்கள் எதையும் கூறவில்லை . கொச்சைப்படுத்தவுமில்லை . மற்றும் தமிழரசுக் கட்சி அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணியின் போர்க்காலச் செயற்பாடுகளைப் பற்றியும் எதுவும் பேசவில்லை . நீங்கள் நேர்காணலை முழுமையாக வாசிக்கவில்லைப் போலும் . சுமந்திரன் தனக்குப் புலிகளின் வன்முறைச் செயற்பாடுகளில் உடன்பாடு இல்லை என்று மட்டுமே கூறினார். திரு  குலநாயகம் அவர்களே, உடன்பாடு இல்லை என்பது மோசமான கருத்தா?

4 கூட்டுப் பொறுப்பு என்று சொல்லி, எமது பிரச்சினைக்கான தீரவு பற்றி யாரும் பேசக்கூடாது என்று சொல்கிறீர்களா? சுமந்திரன் கூட்டுப் பொறுப்பை மறந்து செயற்படுகிறார் என்று கூறுகின்றீர்கள்.

அவர் நீண்ட காலமாகச் சொல்லி வந்த கருத்தையே நேர்காணலிலும் கூறினார். புதிதாக எதுவும் கூறவில்லை.

அமரர் இரவிராசும் சுமந்திரனின் கருத்தையே முன்னர் அறிமுகப்படுத்தியிருந்தார். ஏன் முன்னர் நீங்கள் வாய் திறக்கவில்லை? அதற்குப் பதில் சொல்லுங்கள். சுமந்திரனின் முயற்சி பிரச்சினைகளைத் தீர்க்குமே தவிர அழிவு எதையும் கொண்டு வராது. நீங்கள் , விரல்விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டும் கச்சைகட்டிக்கொண்டு கட்டுக்கதை பேசுகிறீர்கள். தேர்தலை நெஞ்சில் புதைத்து வைத்துக் கொண்டு நீங்கள் போடுகிற ஆட்டத்தை மக்கள் உன்னிப்பாகப் பார்க்கிறார்கள். மக்கள் தளும்பாமல் சுமந்திரன் பக்கம் நிற்கிறார்கள். உங்கள் கூய்ச்சல் அவரின் வாக்கு வங்கியைப் பெருக்குகிறது. விரைவில் வரும் தேர்தல் கையாலாகாத உங்கள் கூய்ச்சலுக்குப் பதில் சொல்லும்.

5  இராஜாஜி வெளியேறிப் பம்பாய் சென்று தனது கருத்தை வெளியிட்டார் என்று சொல்வது மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது போல உள்ளது. இருவரது செயற்பாடுகளுக்கான சூழ்நிலைகள் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.

6 சுமந்திரன் அவர்களை உடனடியாகக் கட்சியைவிட்டு விலத்த வேண்டும் என்று ஏன் அவசரப்படுகிறீர்கள்? அவரின் இடத்தை நிரப்பக்கூடிய ஒருவரையாவது சுட்டிக் காட்டுங்கள் பார்க்கலாம். இச்சந்தர்ப்பத்தில் என்னை ஒரு வரியில் அறிமுகஞ் செய்துகொண்டு மேற்செல்ல விரும்புகின்றேன். 1949 இல் தமிழரசுக் கட்சியின் நல்லூர் கைலாய பிள்ளையார் ஆலய வீதியில் நடந்த முதலாவது கூட்டத்தில், கூட்டத்தை நடாத்த முடியாமல்போனதால்  மேடையில் நின்று இழுபறிப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

இன்று தமிழ் அரசுக் கட்சிக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல, தமிழ் அரசுக்கட்சியின் சில தலைவர்களுமே  சுமந்திரனை துரத்தக் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்று கருதி , பொறாமைப் பாய்ச்சலில் ஈடுபடுவதாக உணர்கின்றேன். சுமந்திரனின் எழுச்சியால் முன்னர் உப்புச்சப்பில்லாத வீரவசனம் பேசியவர்களின் கொட்டம் அடங்கிப்போயுள்ளது. அவர்கள் நாமமே தெரியவில்லை. அதனால் அவர்கள் சிங்கள ஊடகத்துக்குச் சுமந்திரன் வழங்கிய நேர்காணலைத் திரிவுபடுத்தி, சுமந்திரனை துரத்திவிட்டுத் தாம் தலைநிமிர எத்தனிப்பதைக் காண்கின்றேன். பாராளுமன்றக் கதிரைகளில் தலையாட்டும் பொம்மைகளாக இருந்து காலம் நகரத்தியவர்களும் இதில் அடங்குவர் .

அமரர் அமிர்தலிங்கம், அமரர் நீலன் திருச்செல்வம், அமரர் சிவசிதம்பரம் ஆகியோர் இல்லாததால் துடிப்போடு செயற்படாமல் நத்தைபோல  நகர்ந்து கொண்டிருந்த தமிழ் அரசுக் கட்சி, சுமந்திரன் வருகையால் மறுமலர்ச்சி பெற்றுள்ளது. அவர் சிங்களவர்கள் பயத்தைப் போக்கி , எமது பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்று செயல்படுகின்றார். சிங்கள மக்களின் பயம் தீராதவரை எமக்கு விடிவில்லை. அதுவே நிதர்சனம். வடகிழக்குத் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாய் திரண்டு நின்று சுமந்திரனை ஆதரித்தால் எமது பிரச்சினைக்கு விடிவுவர நிச்சயமாக வாய்ப்புண்டு . எமக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பைத் தவறவிடாமற் பயன்படுத்தி வெற்றிப் பாதையில் வெற்றிவாகை சூடிப் பயணிப்போமாக.

(“அமிர்தலிங்கம் சகாப்தம்” , மற்றும் அமிர்தலிங்கம் அவர்கள் பற்றிய “சத்தியங்களின் சாட்சியம்” நூல்களின் ஆசிரியர் கதிர் பாலசுந்தரம் அவர்களின் கட்டுரை)

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply