பண்டைத்தமிழ் வானியல் நுட்பங்கள்

பண்டைத்தமிழ் வானியல் நுட்பங்கள்

9 ஜனவரி, 2012

சங்கப்புலவர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள்; இயற்கையின் நுட்பங்கள்பலவற்றைத் தம் நுண்மாண் நுழைபுலத்தோடே கண்டு இலக்கியங்களில் இயைபுறப் பாடியவர்கள். அவ்வகையில் அவர்கள் தாம் வாழ்ந்த இந்நிலவுலகிற்கு மேலே நிலைபெற்றுள்ள வானத்து இயல்புகளையும் அவ்வானத்தில் நாள்மீன்களாலும் கோள்மீன்களாலும் நாட்தோறும் நிகழும் மாற்றங்களையும் அம்மாற்றங்களின்

விளைவுகளையும் நுண்ணிதின் நோக்கிப் பாடியுள்ள பாடல்களைப் பார்க்கிறோம். அவ்வாறு அப்பாடல்களில் காணப்படும் வானியல் நுட்பங்களை இந்தக் கட்டுரையில் எடுத்துக்கொண்போம்.

பண்டைத்தமிழ் வானியல் கல்வி

—————————————————————————————————————————

 

தமிழகத்தில் சங்க இலக்கியங்களுக்கு முன்பே வானியல் கல்வி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருந்தது. தொல்காப்பியத்தில், அவரவர் மேம்பாடு பற்றிக் கூறும் வாகைத்திணையில்,

மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்

(தொல். பொருள். நூ. 74)

என்று வானியல் அறிவனின் மேம்பாடு பேசப்படுகிறது. அந்த அறிவனைக்

கணியனென்று காட்டும் உரையாசிரியர் இளம்பூரணர், குற்றமற்ற செயற்கையோடு மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்திலும் பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து, அங்கு நிகழும் இந்திரவில், மின்னல், ஊர்கோளாகிய மண்டிலம், வால்மீன், மீன்வீழ்ச்சி, கோள்நிலை, மழைநிலை போன்ற பிறவற்றையும் பார்த்துப் பயன்கூறுவது அறிவனின்மேம்பாடாம் என்றும் விளக்குவார். எனவே அக்காலத்து அறிவனின் வானியல் வன்மை விளங்கும். சங்ககாலத்தே கணியன் பூங்குன்றார் போன்ற புலவர்களும் இத்தகைய வானியல் அறிஞர்களாகத் திகழ்ந்தனர். உறையூர் முதுகண்ணன் சாத்தனார், சோழன் நலங்கிள்ளியைப் பாடிய புறப்பாடலொன்றில் (புறம்.30) அக்காலத்து வானியல் கல்வியாளரின் நுண்மாண்நுழைபுலத்தை வியப்போடே விரிக்கின்றார். கதிரவனின் வீதியும் அவ்வீதிவழி அவன் இயக்கமும் அவ்வியக்கத்தால் சூழப்படும் மண்டிலமும் காற்று இயங்கும் திக்கும் ஓர் ஆதாரமுமின்றித்தானே நிற்கின்ற ஆகாயமுமென்ற இவற்றின் அளவுகளை அங்கங்கே சென்று அளந்தறிந்து வந்தவர்போல், இவையிவை இன்னின்ன அளவுடையன எனச்சொல்லும், கல்வியுடையோரும் உள்ளனரென்று அவர் தம் காலத்து வானியற் கல்வியாளரைச் சுட்டுகின்றார்.

கதிரவனின்இயக்கம், குறித்த பாதைவழியே நிகழ்கின்றதென்பதையும் அவன் இயக்கவேகம் இன்னதென்பதையும் அவ்வேகத்தால் பார் வட்டம் குழப்படுகின்ற தென்படையும் காற்று இன்னின்ன காலங்களில் இந்திந்தத்திக்குகளில் இவ்விவ்வாறு இயங்குமென்பதையும் ஆகாயம் தனக்கோர் ஆதாரமின்றி (தானே பிறபூதங்களுக்கு ஆதாரமாய்) நின்கின்ற தென்பதையும் அக்காலத் தமிழகத்து வானியலாளர் நேரில் கண்டவர்போல் கணித்துக் கூறினரென்பதை இங்கே காண்கிறோம்.

நாள்மீன்களும் கோள்மீன்களும் விண்மீன்களும் அசுவினி முதலான இருபத்தேழு சிறப்புடை நாள்மீன்களும் ஞாயிறு முதலான ஒன்பது கோள் மீன்களும் பற்றிய பொதுக்குறிப்புகளோடே அவற்றுள் பலவற்றைப் பற்றிய சிறப்புச் செய்திகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரை மன்றங்களில் மறவர்களும் அவர்களின் தலைவர்களும் கூடிப் போர்விளையாட்டுப் புரிந்திருந்தனரென்று பாடும்போது அவர்களுக்கு, விண்ணிடத்தே வலமாக எழுந்து திரியும் நாள்மீன்களையும் கோள்மீன்களையும் உவமை கூறுகின்றது.

பட்டினப்பாலை. “நீல்நிற விசும்பின் வலனேர்பு திரிதரும், நாள் மீன் விராய கோள்மீன்” (பட்.67-68) எனவரும் அவ்வடிகளில் அவற்றின் பொதுவான வலவோட்டம் குறிக்கப்பட்டுள்ளது காணலாம்.

பகைவர்களின் போர்திறன் ஒடுங்குமாறு தோன்றிய சேரமான் செல்வக் கடுங்கோ வழியாதனுக்கு, வானத்திலே பல விண்மீன்களின் ஒளி கெடுமாறு தோன்றுகின்ற ஞாயிற்றை உவமை கூறுகின்றார் கபிலர். “மாயிரு விசும்பிற் பன்மீன் ஒளிகெட, ஞாயிறு தோன்றியாங்கு” (பதி. 64:12-13) எனவரும் இவ்வடிகளில், இரவிற் போலவே பகலில் விண்மீன்கள் இருந்தும் அவற்றின் ஒளி ஞாயிற்றொளியின்முன் தோற்றமின்றி மங்கிமொழியும் உண்மையைக் கூறியுள்ள நுண்மை உணரத்தகும்.

பாண்டிய வேந்தர்களின் செங்கோற் சிறப்பினால் வானத்துக் காற்று வலமாகவே சுழல,நாள்மீன்கள் தத்தம் வழிமாறாமல், நடக்க, செஞ்ஞாயிறும் வெண்திங்களும் தீதின்றித்தோன்றி விளங்க, வேண்டும்போது வேண்டிய மழை பெய்ததென்று மதுரைக்காஞ்சி (5-10) மாண்புறப்பாடும்.

இனி, தனித்தனி நாள்மீன்களின் சிறப்புச் செய்திகளாக வருபவற்றுள், ரணிமீன் யானைக்குப் பிறப்பு நாளென்ற முறையில் வேழமென்னும் பெயரைப் பெற்று, இராசி மண்டலத்தில் தன்னைஉள்ளடக்கிய மேடராசியை உணர்த்தி வருகின்றது (பரி 11:2). அதேபோல், கார்த்திகைமீன்தீயினைக் கடவுளாக உடையதென்ற முறையில் எரியென்னும் பெயரைப்பெற்றுத் தன்முதற்காலொழிந்த முக்காலையுடைய இடபராசியை உணர்த்தி வருகின்றது. (பரி. 11:2). அந்தக் கார்த்திகைக்கே ஆரலென்னும் பெயரும் (பரி. 9:7), அப்பெயரின் குறைவடிவமாக ஆலென்னும் பெயரும் (பரி. 5:43) வருகின்றன. அது தன் வெண்ணிறத்தின் காரணமாக முசுண்டைக் கொடியின் வெண்பூவினுக்கு உவமையாகவும் கூறப்படுகின்றது (மாலை. 100-101) இவையேயன்றி உரோகிணி (அகம். 136; நற். 202; நெடு.163) திருவாதிரை (பரி. 11:2,77), மகம் (பட்.35) ஆகிய மீன்களும் ஒன்பது கோள்களும் பற்றிய வேறுபல செய்திகளும் சங்க இலக்கியத்தில் விரவிவரக் காணலாம்.

மழைவரும் வானியல்

—————————————————————————————————————————

இனி, வானியல் நிலைகளின் விளைவுகளைக் கூறுகையில், மழைமலிந்து உலகில் வளம்கொழிப்பதற்குக் காரணமான நிலைகளைச் சங்க இலக்கியங்களில் பரக்கப்பார்க்கிறோம். சிறப்புமிக்க வெள்ளியாகிய சுக்கிரன், விளக்கம் மிக்க தன் கதிர்களைப் பரப்பி, வானகம் ஒளிபெறுமாறு சிறிது வடக்கே சாய்ந்து, மழைக்குத் துணையாகும் மற்றை நாள்மீன் கோள்மீன்களோடு கூடிச் சென்றால் மழைவளம் மலியுமாம் (பதி 24:23-29, 69:13-15). அவ்வாறு வெள்ளி, மற்றைக் கோள்களோடே சேரநின்று மழைபொழியக் காரணமாவதைப் பரிபாடலில் தெளிவுறப்பார்க்கலாம்.

கன்னிப்பெண்கள் தைந்நீராடுமாறு வையையாற்றில் வெள்ளம் வந்ததைப் பாடுகின்ற ஆசிரியர் நல்லந்துவனாரின் பரிபாடல், அவ்வெள்ளத்திற்குக் காரணமாய்ப் பெய்த மழைக்குக் காரணமான வானியல் நிலையை மிக நுட்பமாக வண்ணித்துக் கூறுகின்றது. (பரி.11:1-15). அசுவினி முதலான இருபத்தேழு நாள்மீன்களுள் ஒவ்வோர் இரண்டேகால் நாள்களையும் உள்ளடக்கிய மேடராசி முதலிய வீடுகள் பன்னிரண்டுள் நந்நான்கு வீடுகளாகப் பிரிந்து, ஒன்பதொன்பது நாள்மீன்கள் அடங்கிய மூவகை வீதிகளையுடைய இராசிமண்டிலத்தில், வெள்ளியாகிய சுக்கிரன் இடபத்திலும் செவ்வாய் மேடத்திலும் புதன் மிதுனத்திலும் ஆதித்தன் சிம்மத்திலும் வியாழனாகிய குரு மீனத்திலும் திங்களும் சனியும் இராகுவும் மகரத்திலும் கேது கடகத்திலும் செல்லக்கூடிய ஆவணித்திங்கள் அவிட்டநாளில், திங்களை இராகு தீண்டுகின்ற சந்திர கிரகணம் நேருமாயின் மழைபெய்யுமென்ற வானியல் விதிப்படி, கோள்கள் கூடினமையால் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழைபெய்து வையையில் வெள்ளம் புரண்டதென்பது அப்பரி பாடலடிகளின் கருத்தாகும்.

அவற்றுள், கோள்நிலைகளைக் கூறி வருகின்றபோது, ஆதித்தன் சிம்மத்தில்செல்லும் நிலையைப் புலவர் நேரடியாகக் கூறாமல், ‘புலர்விடியல் அங்கி உயர் நிற்ப’என்று விடியற்காலத்தில் கார்த்திகை மீன் உச்சம் பெற்ற நிலையைக் கூறும் முறையிலேயே உணர்த்துகின்ற நுட்பமும், அவ்வாறே ஆவணிமாதத்து மதிநிறை நாளான அவிட்டமென்ற குறிப்பினையும் அதன்படி திங்களும் இராகுவும் மகத்தில் செல்வத்தையும் இராகு செல்லும் மகத்திற்கு ஏழாமிடமான கடகத்தில் கேது செல்வதையும், ‘பாம்பு மதியம் மறைய ஒல்லை வருநாள்’ என்ற சிறுதொடரால் உணர்த்துகின்ற ஒட்பமும், உளங்கொளத்தறுவனவாம்.

மழைகெடும் வானியல்

—————————————————————————————————————————

மழைவருவதற்குக் காரணமாகும் வானியல் நிலைகளை வரைகின்ற சங்க இலக்கியங்களுள் மழைகெடுவற்குக் காரணமாகும் நிலைகளும் வரைந்து காட்டப்பட்டுள்ளன. வெள்ளிக்கோள் தான் நிற்க

வேண்டிய வடதிசையிலே சாய்ந்து நில்லாமல் தெற்கே சாய்ந்தாலும் அது செவ்வாயோடு சேர்ந்தாலும் சனி தனக்குப் பகையாகிய சிம்மராசியில் சென்று புகைகளோடு கூடிப் புகைந்தாலும், புகைக்கொடியாகிய தூமகேது தோன்றினாலும் மழைகேட்டு உலக வாடுமென்பதற்குச் சான்றுகள் பலவுள (புறம்,35, 117, 388; பதி. 13; மது. 106-109; பட். 1-6; சிலம்பு. 10: 102-108).

அரசழியும் வானியல்

—————————————————————————————————————————

கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் இறப்புக் குறித்த வானியல் நிலையினையும் அந்நிலையில் விண்மீனொன்று எரிமீனாய் வீழ்ந்ததையும் அவன் இறப்புக்கு ஏழாம்நாள் இரவிலே தம் கூட்டத்தாருடனே கண்டு, அதன் விளைவையுணர்ந்து விதுப்புற்று அஞ்சிப் பின் அத்தீநிமித்தம் அதே தீங்கினில் முடிந்தபோது இரங்கிப்பாடிய கூடலூர் கிழாரின் புறப்பாடலொன்று (229) தமிழ்ப் புலவர்களின்வானியல் நுட்பத்திற்குச் சிறந்த சான்றாக வருகின்றது. அஃதாவது, ஒரு பங்குனி மாதத்து முதற்பதினைந்து நாளுள் மேடராசியில் பொருந்திய கார்த்திகை நாளின்முதற்காலில் நிறைந்த இருளையுடைய பாதியிரவில் திருவாதிரை முதலாகக் கேட்டை எல்லையாகப் பதின்மூன்று நாள்மீன்கள் வானத்தே விளங்கிக் காய்ந்து கொண்டிருக்கவும் அவற்றுள் உச்சமாகிய உத்தரமீன் அவ்வுச்சியிலிருந்து சாயவும் அவ்வுத்தரத்திற்குப் பின் எட்டாவது மீனாகிச் சென்ற மிருகசீரிடம் மேற்கே அத்த மித்து மறையவுமான அளவில் வானில் நின்ற ஒருமீன் கிழக்கேயும் போகாமல் வடக்கேயும் வாராமல் வடகிழக்கினில் சாய்ந்து தீப்பரக்க வீழ்ந்ததாம். அதனைக்கண்ட கூடலூர் கிழாரும் அவரைச் சார்ந்த புலவர் பலரும் தம் அரசனுக்குத் தீங்கு நேருமென்று அஞ்சி, அவன்நோயில்லாதிருப்பின் நன்றென விரும்பியிருக்கவும், அவர்கள் அஞ்சியபடியே, மீன்விழுந்ததையடுத்த ஏழாம் நாள் அச்சேரமான் இறந்தனனென்று அவர் இரங்கிப் பாடுகின்றார்.

அப்பாடலில் காணும் வானியல் நுட்பம் வானளாவிய வியப்பிற்குரியது. அதில்,கார்த்திகைமீன்தீயினைக் கடவுளாக உடையதென்ற முறைப்படி அழலென்னும் பெயரைப் பெற்று, அதன்முதற்கால் ஆட்டினது வடிவினையுடைய மேட ராசிக்குட்படுவதால் ‘ஆடியல் அழல்குட்டம்’ (குட்டம்-குறைந்த பகுதி;கால்) எனக் குறிக்கப்படுகின்றது. அனுடத்தின் வடிவமாகிய ஆறுமீன்களின் தொகுதி வளைந்த பனைமரம் போன்ற தோற்றமுடைமையால் முடப்பனையமென மொழியப்பெற்று, அதன் ‘வேர்’ (அடிமீன்) என்று கேட்டை கூறப்படுகின்றது. கயமாகிய குளவடிவமுடைய புனர்பூசத்தின் முன்னுள்ள மீனாகிய திருவாதிரை, ‘கடைக்குளத்துக்கயம் (கயத்துக் குளக்கடை) எனக்காட்டப்படுகின்றது. தலை நாள்மீனென்று உச்சமீனும், நிலைநாள் மீனென்று உதயமீனும் தொல் நாள்மீனென்று அத்தமன மீனும் பொருளழகோடேபுகழப்படுகின்றன. அண்ட கோளத்தைச் சுற்றிலும் அடங்கிய அசுவினி முதலான இருபத்தேழு நாள்மீன்களுள் திருவாதிரை முதல் கேட்டை முடியப் பதின்மூன்று மீன்கள் கண்ணுக்குத் தோன்றும் அரைவட்ட வானத்தில் விளங்கிக் காய்ந்தனவாகக் காட்டுகின்ற உண்மையும் கருதத்தகும்.

இவ்வாறான வானவியல் நுட்பங்கள் பலவற்றைச் சங்க இலக்கியங்களில் பரவலாகப் பார்க்கலாம்.

நன்றி இரவா

Posted by அகரமுதலி on Monday, January 9, 2012

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply