நடமாடும் கோயில்களுக்குப் படமாடும் கோயில்கள் ஆதரவு அளிக்க வேண்டிய சமயம் இதுவாகும் நக்கீரன்

நடமாடும் கோயில்களுக்குப் படமாடும் கோயில்கள் ஆதரவு அளிக்க வேண்டிய சமயம் இதுவாகும்

நக்கீரன்

யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் ஏப்ரில் 12 ஆம் நாள் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் ஆலயங்களின் நிர்வாகத்தினருக்கு  ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் ஏப்ரில் 12 ஆம் நாள் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் ஆலயங்களின் நிர்வாகத்தினருக்கு  ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த வேண்டு கோளில் “தற்போது நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் வேலை இல்லாது பல் வேறுபட்ட மக்கள் உண்ண உணவின்றிப் துன்பப்படுகின்றதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் அதிகமான கோவில்கள் காணப் படுகின்றன. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக பல ஆலயங்களில் இந்தமுறை திருவிழாக்கள் நடை பெறுவதற்கு அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகின்றது. எனவே ஆலய நிர்வாகிகள் உணவின்றித் துன்பப் படும் மக்களுக்கு அந்த ஆலய திருவிழாக்களுக்கென  ஒதுக்கிய நிதியில் ஒரு பகுதியையாவது வழங்க முன் வரவேண்டும். அதன் வாயுலாக மதத்தின் தர்மத்தை நாம் காப்பாற்றவேண்டும்.  அவ்வாறு உதவி செய்ய விரும்புபவர்கள் தத்தமது பிரதேச செயலர் ஊடாக அனுமதி இணைப்புப் பெற்று ஏனைய மதத்தவர்கள் வழங்குவது போல நாமும் செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் ஆலயங்களின் நிர்வாகத்தினருக்கு  விடுத்த வேண்டுகோள் மிகவும் வரவேற்றக்பட வேண்டிய ஒன்றாகும். அவர் சொல்வது போல  மக்களுக்கு இடர் வரும்போது ஏனைய மதத்தவர்கள் ஓடிச் சென்று உதவுகிறார்கள். பேரிடர் என்றால் பெரியளவில் உதவி செய்கிறார்கள். ஆனால் இந்து மதத்தவர்களிடம் இப்படியான தொண்டு மனப்பான்மை இல்லை. விதி விலக்கு இருக்கலாம்.

தானங்களில் சிறந்த தானம்  அன்னதானம் என இந்து மதம் சொல்கிறது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோவில் அன்னதானத்துக்குப் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.  ஆண்டு முழுவதுமே அன்னதானம் நடைபெறுவதால் அங்கு எழுந்தருளியிருக்கும் முருகன் அன்னதானக் கந்தன் எனச் செல்லமாக அழைக்கப்படுகிறான்.  ஒரு காலத்தில் செல்வச்சந்நிதிச் சுற்றாடலில் 52 க்கும் மேற்பட்ட அன்னதான மடங்கள் காணப்பட்டன. இந்த நித்திய அன்னதானப் பணிக்கு பல கமக்காரர்கள்,  கொடையாளிகள், புரவலர்கள்  அரிசி, மரக்கறிகள் கொடுத்து உதவுகிறார்கள்.India - Tamil Nadu -Thanjavur - Brihadisvara Temple - Mura… | Flickr

பறவைகளுக்கு வேடந்தாங்கல் சரணாலயம் ஆக இருப்பது போல் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களுக்கும் செல்வச்சந்நிதி  கோவிலே புகலிடமாக விளங்குகிறது. அவர்கள் தங்கள்  இறுதிக்  காலத்தை இந்தக் கோயிலில் செலவிடுகிறார்கள்.

பண்டைக் காலத்தில் கோயில் மக்களது வாழ்வியலை மையப்படுத்தியிருந்தது. அவர்களது வாழ்வு தாழ்வில் அது பங்கு வகித்தது. பயிர்த்தொழில் செய்பவர்களுக்கு கடன் கொடுத்து உதவியது. ஆனால் பிற்காலத்தில் கோயில் சுரண்டுபவர்களின் கூடாரமாகியது. தமிழ்மொழி ஓரங்கட்டப்பட்டு வடமொழி கோலோச்சியது. தெய்வங்களின் பெயர்கள் கோவில் பெயர்கள் சமற்கிருத மயப்படுத்தப்பட்டன. இந்த மாற்றத்தைப் பிற்காலத்தில் தோன்றிய சித்தர்கள் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள்.

சித்தர்களின் பாடல்கள் ஓசை நயம் மிக்கவை. பழகு தமிழில் பாடப்பட்டவை. இருந்தும் மறைபொருள் கொண்டவை. பாடல்களைப் படிக்கும் போது நேரடியாக ஒரு பொருளும் மறைமுகமாக இன்னொரு பொருளும் இருக்கக் காணலாம். அதற்கொரு எடுத்துக்காட்டு.

‘நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?’

சிவவாக்கியர் பாடிய இந்தப் பாடல் வைதீக சமய நம்பிக்கைகளுக்கு எதிரான கலகக் குரல்.

சுட்ட சட்டியும் அதில் வேகுகின்ற கறியைக் கிளறுகின்ற கரண்டியும் அந்தக் கறிச்சுவையை அறியாதது போல, பரம்பொருள் நம் உள்ளத்தே இருக்க அதை அறியாமல் கற்சிலைக்கு நான்கு வகை மலர்கள் சாற்றுவதும் அதைச் சுற்றி வந்து முணு முணுக்கும் மந்திரம் எங்குள்ளது?

நட்ட கல் பேசுமோ? பேசாது!

இவ்வாறு உருவ வழிபாட்டை மறுத்து சிவவாக்கியர் நாத்திகவாதம் பேசுகிறார்.  அவர் 534 பாடல்களில்  உருவ வழிபாட்டையும் சடங்குகளையும் அஞ்சாது சாடி சமூக சீர்திருத்தக் கருத்துக்களை விதைத்துள்ளார். ஆனால் சிவவாக்கியார் சொன்னதை அவருக்கு முந்திய சித்தர்களும்  சொல்லியிருக்கிறார்கள்.

சித்தர்களில் பெரிய சித்தர் திருமூலர்.  அவர் தமிழ்  மூவாயிரம் என்ற நூலைப் படைத்துள்ளார். அது எழுதப்பட்ட காலம் கிபி 5 ஆம் நூற்றாண்டாகும்.  அதன் நுண்மை காரணமாக அதனை ஒரு சமய  நூலாகப்  பார்க்காமல் அதனை ஒரு அறிவியல் நூலாகப் பார்க்க வேண்டும் என பலர் நினைக்கிறார்கள். வைதீக மதம் கொடிகட்டிப் பறந்த காலத்தில், புராணங்கள் மலிந்த காலத்தில்  அறிவியல் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் திருமந்திரம் ஆகும்.AnanyaDesigns Wall Poster Ancient Hindu Temple Statues In Hampi ...

திருமூலர் திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் கடவுளர்க்குப் படையல் படைப்பதில் பலன் இல்லை என்கிறார். அப்படியென்றால் பலன் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பகவர்க்கு அது ஆமே.   

திருமூலர் திருமந்திரம் 1857

(படமாடக் கோயில் = இறைவன் உருவத்தை ஓவியமாக எழுதி வைத்துள்ள இடம், பகவன் = இறைவன், நடமாடக் கோயில் நம்பர் = நடமாடும் கோயிலாகிய மனிதர்கள், ஆமே = போய்ச் சேரும்)

அது என்ன ‘நம்பர்க்கு’? ‘நம்பர்’ என்ற சொல் ‘நம்மவர்’, ‘எம்மைப்போன்ற மனிதர்கள்’ என்ற பொருள் தரும். மனிதரின் உள்ளத்தில் இறைவன் குடி கொண்டுள்ளான். எனவே மனிதர்கள் இறைவனின் நடமாடும் கோயில்கள் – நடமாடும் கோயில்களாகிய நம் போன்ற மனிதர்க்கு – ஒன்று கொடுப்பது இறைவனுக்குக் கொடுப்பதற்கு ஒப்பாகும்.

ப(ந)டமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் — நடமாடும் கோயில் – மனிதனின் உள்ளம்தான் நடமாடும் கோயில் சிவ சிந்தனையில் இருக்கும் சிவனயடியார்களுக்கு அன்னமிட்டால் அது ஈசனுக்கு போய் சேரும்.  சிவனடியார்கள் பற்றிச் சொன்னது வறிய மக்களுக்கும் பொருந்தும். இதனை விளக்க கிருபானந்த வாரியார் தனது சொற்பொழிவுகளில் அவருக்கேயுரிய பாணியில் ஒரு கதை சொல்வார்.

தெரு ஓர அஞ்சல்ப் பெட்டியில்  கடிதம் போட்டால், தலைமை அஞ்சல் அலுவலகத்திற்குப் போகும், ஆனால் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கடிதம் போட்டால் எக்காலத்திற்கும் தெரு ஓர அஞ்சல் பெட்டிக்கு அது வராது.  மூலவருக்குப் பால், பழம், அமுது படைத்தலும் வணங்குதலும்  இறைவனிடம் போய்ச் சேருவதில்லை. நடமாடும் கோயில் – வறுமையில் இருப்பவர்களுக்கும்  சிவ சிந்தயைில் உள்ளவர்களுக்கும் ஆதரவற்றுவர்களுகும் உதவினால் அவ்வுதவி சிவனிடம் போய் சேரும்.Tanjore

திருமூலர் கோயிலில் இருக்கும் கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கைகள் எதுவும் அடியார்களுக்கும் ஏழைகளுக்கும் சென்று சேர்வதில்லை. ஆனால் அந்த ஏழை எளியவர்களுக்கு நாம் செய்யும் உதவிகள் நேரிடையாக அந்த இறைவனுக்கே போய் சேரும் என்கிறார்.

சங்க இலக்கியங்கள் காதல், வீரம்,  இரண்டும் இரு கண்களாகப் போற்றப்பட்டன. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் நாளாந்த வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. .சங்கம் மருவிய காலத்தில் படைக்கப்பட்ட காப்பியங்கள், பாடல்கள் அறத்தைப் போற்றிப்பாடின. பதிணெண் கணக்கு  நூல்கள் அறத்தை வலியுறுத்தின. திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, ஆசாரக்கோவை  உட்பட  18 நூல்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இவற்றில் அறநூல்கள் 11, அக நூல்கள் 6, புறநூல் 1 ஆகும்.

திருமூலர் திருவாக்கைப் சிக்கனப் பின்பற்ற வேண்டிய தருணம் இதுவாகும்.  நடமாடும் கோயில்களுக்குப் படமாடும் கோயில்கள் ஆதரவு அளிக்க வேண்டிய சமயம் இதுவாகும். அதையே நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் தக்க சமயத்தில் நினைவு படுத்தியுள்ளார். ஆலயங்களின் நிர்வாகத்தினர் கிடைத்த ஏழை எளியவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

https://seithy.com/breifNews.php?newsID=244202&category=TamilNews&language=tamil


 

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply