சங்க காலத்தில் எப்படிக் கணித்தார்கள்?

சங்க காலத்தில் எப்படிக் கணித்தார்கள்?

வராஹமிகிரரின் மகன் ஸ்ரீ பிருதுயஜஸ் என்கிற பூகீர்த்தி என்பவர் ‘ஹோரா சாரம்’ மற்றும் ‘ஹோரா ஷட்பந்நாசிகா’ ஆகிய நூல்களை எழுதினார். கி.பி. 169-ம் நூற்றாண்டில் ‘யவனேஸ்வரர்’ என்பவர் இயற்றிய யவன ஜாதகம் என்ற நூலே மிகப் பழமையானது.
கி.பி. 268-ம் நூற்றாண்டில் ‘ஸ்பூர்ஜித்துவஜன்’ என்பவர் நான்காயிரம் ஸ்லோகங்கள் கொண்ட ‘யவன ஜாதகம்’ என்ற நூலை இயற்றினார். சாராவளி என்பது மற்றொரு முக்கியமான வடமொழி நூல். இந்த ஜோதிட சாஸ்திர மூலகிரந்தத்தை எழுதி வெளியிட்டவர் கல்யாண வர்மா.

ஜாதக அலங்காரம்

கீரனூர் நடராஜன் என்பவர் கி.பி.1725-ம் ஆண்டுக்கு முன்பு வட மொழியில் உள்ள ஹோரசாரம், சாராவளி, பராசாரியம், சந்தான தீபம், பிருகத் ஜாதகம், சர்வார்த்த சிந்தாமணி, மணிகண்ட கேரளம், சம்பு நாதம் போன்ற பல கிரந்தங்களின் சாராம்சத்தைத் திரட்டி ‘சாதகலங்காரம்’ என்ற நூலை விருத்தங்கள் என்னும் செய்யுள் வடிவில் இயற்றினார்.

இப்படி வடமொழி நூல்களில் பிரசித்தி பெற்ற ஜோதிடம் பண்டைக் காலத்தில் தமிழ் இலக்கியத்திலும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

தமிழ் இலக்கியத்தில் ஜோதிடம்

பண்டைய தமிழ் இலக்கியத்தில் ஜோதிடத்தைப் பற்றிய செய்திகள் நிறைய காணப்படுகின்றன. ஜோதிடர்கள் நிமித்தகன், கணிகன், காலக்கணக்கன், தெய்வக்ஞன் என்று போற்றப்பட்டனர். இவர்களில் ஜோதிடம், இலக்கியம் இரண்டிலும் சிறந்து விளங்கியவர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஏன்ற பிரபஞ்ச சமத்துவத்தை மண்ணில் விதைத்த சங்ககாலப் புலவரான கணியன் பூங்குன்றனார்.

கம்பராமாயணத்தில் திருமணம், முடிசூட்டல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நன்னாள் நியமித்த செய்தி பேசப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திர சாரத்தில் சந்திரன் வந்து நின்று உச்சம் பெறுகின்ற நாளில் திருமணம் நடந்தால் பிற்காலம் மிகவும் சிறப்புற்று விளங்கும் என்று நம்பினார்கள். சங்க இலக்கியத்தில் அரண்மனை அமைக்க மனையடி சாஸ்திர விதியை நாடினர். ஜோதிட அறிஞர்கள் நாழிகை கணக்குப் பார்த்து திருமுறைசார்த்து செய்திருக்கின்றனர்.

சித்திரை மாதம் 10-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் பகல் பொழுதில் 15 நாழிகை அளவில் சூரியன் நடு உச்சியில் இருக்கும்போது நிலத்தில் இரண்டு கம்புகளை நாட்டி, நிழல் எந்தத் திசையிலும் சற்றும் விழாத நிலையை அறிந்து மனைக்கு அடிக்கல் இட்டு திருமுறை சார்த்திய செய்தியை,

விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்டிலம்
இருக்கோற் குறிநிலை வழுக்காது குடக்கோல்
பொறுதிறந் சாரா அரை நாள் அமையத்து
நூலறி புலவர் நுண்ணுதிற் கயிறிட்டுத்
தே எங் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கொப்ப மனைவகுத்து
உலவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்புன்கண் மாலை மலை மறைந்தாங்கு

என்கிற சங்கப் பாடல் கூறுகிறது.

மற்ற கலைகளைப் போல் ஜோதிடக்கலையும் நாம் காணக்கூடிய ஒரு நடைமுறை அறிவியல் கலை (Dilectic Science) என்பதை உணர வேண்டும் என்று அறப்பளீசுர சதகம் கூறுகிறது. வானியல், அறிவியல் உபகரணம் ஏதும் தோன்றாத அந்தக் காலத்தில் சூரிய, சந்திர கிரகணங்கள் நடைபெறும் காலங்களை மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு கூறியிருந்தது விந்தையிலும் விந்தை.

அங்கம் துடித்தல்

தொல்காப்பியத்தில் ‘ஆவொடுபட்ட நிமித்தம் கூறலும். செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்’ என்று கூறப்பட்டுள்ளது. தலைவன் வெளியூருக்குப் போக இருக்கிறான். அந்தச் செய்தி கிடைக்கும் நேரம் பசு ஒன்று பால் நிறைய கறந்திருக்கிறது என்ற செய்தியும் கிடைக்கிறது. எனவே தலைவனுக்கு நல்லது நடக்கும் என்று கருதி மகிழ்வுடன் விடை கொடுத்து தலைவி அனுப்பி வைத்தாள் என்பதை இவ்வரிகள் விளக்குகின்றன.

இரவில் நிமித்தங்கள் (சகுனங்கள்) வெளிப்படத் தெரியாது. எனவே பிறர் பேசும் வார்த்தைகள், பறவைகளின் ஒலி முதலியன கேட்டு சுபமா? அசுபமா? என அறிந்து பலன் கண்டறிந்தனர். இத்தகவலை

படை இயங்கு அரவம்
பாக்கத்து விரிச்சி

என்ற தொல்காப்பிய வரிகள் புலப்படுத்துகின்றன.

ஆண்களுக்கு வலதுபுறமும், பெண்களுக்கு இடது புறமும் கண், புருவம், தோள் முதலியன துடித்தல் நல்ல நிமித்தங்களாகும்.

பொலந்துடி மருங்குவாய் புருவம் கணிமுதல்
வலந்துடிக்கின்றன வருவது ஒர்கிலேன்

என்று கம்பராமாயண சுந்தர காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.

எதிரிடை நட்சத்திரச் செய்தி

மேஷ ராசியில் கார்த்திகை நட்சத்திரம் தெரிய, பங்குனியின் 15 நாட்களில் உத்தர நட்சத்திரம் மாசுபட, மூலம் எதிரிடை நட்சத்திரமாக நிற்க, மிருகசீரிடம் அடியில் நிற்க, ஓர் எரி வெள்ளி கிழக்கோ வடக்கோ செல்லாது கீழே விழுந்த நேரம் சேர அரசன் யானைக்கட்சேய் மாந்தேரல் சேரலிரும் பொறை இறந்தான் என்பதை புறநானூறு

ஆடியல் ஆழந்குட்டத்து
ஆரிருள் அரையிருளின்
முடப்பனையைத்து வேர்முதலா
கடைக்குளத்துக் கயம் காயப்
பங்குனி ஆயர் அழுவத்துத்
தலைநாண் மீன் நிலை திரிய
தொன்னாண்மீன் துறைபடியப்
பாசி செல்லாது ஊசி முன்னாதுஅளக்கர் தினை விளக்காக..

என்ற வரிகள் அறிவிக்கின்றன.

– தொடரும்


வானியல், கணிதவியல் மற்றும் ஆன்மீகம் உள்ளடக்கியது வேத ஜோதிடம்!

ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி    

 24th July 2019

 இந்த பிரபஞ்ச சக்தியில் ஜோதிடம் என்பது வானியல் அறிவியல், கணிதவியல் மற்றும் ஆன்மீக சார்ந்த உள்ளடங்கிய ஒன்று என்று கூறலாம். ஜோதிடம் எப்பொழுது பார்க்கப்பட்டது என்று பார்க்கும்பொழுது, நாடுகளின் படையெடுக்கும் நாள் குறிக்க, அரசரின் முடிசூட்டல் மற்றும் மருத்துவம் சார்ந்து விஷயங்களுக்கு ஜோதிடம்  பார்ப்பதுண்டு. பின்பு அரச குடும்பத்துக்காக மட்டும் ஜோதிடத்தை பயன்படுதியதாக கூறப்படுகிறது. அதுவே பிற்காலத்தில் நம் மக்கள் அனைவராலும் பின்பற்றினர்.

இந்தியாவைப் பொறுத்தவரை விண்ணில் உள்ள நட்சத்திரம், ராசி மண்டலங்களைக் கொண்டு ஜோதிடம் சொல்லப்பட்டது. பின்பு தனி மனித பிறப்பு ஜாதகம் கொண்டு  எதிர்கால பலன்கள் பார்க்கப்படும் அளவிற்கு வளர்ச்சி பெற்றது. ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாகப் பழமையான ஜோதிடப் பாடல்களும், வெண்பாக்களும், சித்தர்களின் நூல்கள்,   வடநாட்டு ஜோதிட நூல்களும் உறுதுணையாக உதவுகிறது. மேலும் அவரவருக்கென்று ஜோதிட குருக்கள் இருக்கின்றனர். அவர்களின் வழியாக ஜோதிட அறிவு பெறுகிறோம்.

வேத ஜோதிடம் என்பது ஐந்தாம் வேதாங்கமாகவும் முதன்மையாவதுமாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தில் ஒருசில பிரிவுகள் மூலம் பலன் அளிக்கப்படுகிறது அவை ஆருடம்,  வாஸ்து, கிளி ஜோதிடம், நாடி, கைரேகை, எண் ஜோதிடம், பெயர் ஜோதிடம், கே.பி ஜோதிடம், மரபணு (DNA) ஜோதிடம் மற்றும் இன்னும் பல இக்காலத்தில் வளர்ந்து  கொண்டு வருகிறது. இவற்றில் சங்க இலக்கியத்தில் அரண்மனை அமைக்க மனையடி சாஸ்திர விதியை நாடினர். எடுத்துக்காட்டாக மனையடி சாஸ்திர முறை பற்றிய  விவரம் நெடுநல்வாடையில் கூறப்பட்டுள்ளது.

விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்,
இரு கோல் குறிநிலை வழுக்காது, குடக்கு ஏர்பு,
ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து,
நூல் அறி புலவர் நுண்ணீதின் கயிறு இட்டு,
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி,
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப, மனை வகுத்து

(நெடுநல்வாடை)

சூரியன் எங்கும் விரிந்த கதிர்களைப் பரப்பும் அகன்ற இடத்தினையுடையது. அச்சூரியன் மேற்கு நோக்கி உயர்ந்து எழுந்து ஒரு பக்கம் நிழல் சாராத வேளையில், இரு கோலினை நட்டு அதன் நிழல் மாறுபடாது நிற்கின்ற நண்பகல் பொழுதில் (இது சித்திரை மாதம் 10ம் நாளுக்கு மேல் 20ம் நாளுக்குள் நிகழும் என்பர்) கட்டடக்கலை பற்றிய  நூல்களைக் கற்றுத் தேர்ந்தோர், நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து, திசைகளைத் தெரிந்து, அத்திசைகளுக்குரிய தெய்வங்களையும் கருத்தில் கொண்டு, பெரிய புகழினையுடைய  மன்னர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அரண்மனை என்று வாஸ்து ஜோதிட முறையினை அக்காலத்திலே விதைக்கப்பட்டது.

ஆதார பூர்வ நூல்கள்

ஆதவன்பங் கயன் வேத வியாசன் பாரா  சரனும்
அத்திரிரோ  மகன்வசிட்டன் அணிமரிசி தானும்
போதபௌ லகன்யவனன் சௌனன்மனு பிருகு
புகழ்சனகன் ஆங்கீரன் காசிபன்கார்க் கியனும்
ஓதியரா ரதன்முதல்ஈர் ஒன்பதின்மர் கூடி
உரைசெய்த நான்கிலக்கத்   தைம்பதினா யிரமாம்
நீதிபெறும் ஜோதிடத்தில் தெரிந்தெடுத்த உண்மை நிறைந்த
பொருள் தனைக்கருத்தில் நினைந்துமிகத் தானே  

(ஜாதக அலங்காரம்)

கடவுளின் கட்டளைப்படி சூரியன், பிரம்மா, வியாசர், பராசர், அத்ரி, உரோமசர், வசிஷ்டர், மரீசி, மெய்யறிவு வாய்க்கப்பெற்ற பௌலகர், யவனர், சௌனகர், மனு, பிருகு,  கீர்த்தமிக்க ஜனகர், ஆங்கீரசர், காசிபர், கார்க்கியர் மற்றும் மேம்படுத்திக் கூறப்பட்ட தேவ ரிஷி நாரதர் ஆகிய 18 ரிஷி முனிவர்கள் இயற்றிய 4,50,000 ஸ்லோகங்களுடைய  ஜோதிட சாஸ்திரத்தின் முக்கிய மூல நூல்கள் மூலம் உலகிற்குத் தெரியப்பட்டது. பின்பு ஜோதிடம் அனைத்து குருமார்களிடம் சாஸ்திர முறைப்படி கற்பிக்கப்பட்டது.

இலக்கிய காலத்தில் முழு வளர்ச்சி அடைந்தது ஜோதிட அறிஞர்களால் பல புத்தகங்கள் வெளியிட்டான் அவைகளில் பழமையானது வராகமிகிரர் எழுதிய பஞ்ச  சித்தந்திகா, பிருஹத் சம்ஹிதை, பிருஹத் ஜாதகம், பிருஹத் யாத்திரை, லஹு ஜாதகம், பிருஹத் விவாஹ படலம் மற்றும் ஸ்ரீ பிருதுயஜஸ் ரிஷியின் ஹோரா சாரம்,  ஹோரா ஷட்பந்நாசிகா, யவனேஸ்வரின் யவன ஜாதகம், கணித மேதை பாஸ்கராச்சாரியார் சித்தாந்த சிரோமணி, கரணகுதூகலம் கல்யாண வர்மமரின் சாராவளியை  மற்றும் பல வடமொழியில் (ஹோரசாரம், சாராவளி, பராசாரியம், சந்தான தீபம், பிருகத் ஜாதகம், சர்வார்த்த சிந்தாமணி, மணிகண்ட கேரளம், சம்பு நாதம்)  நூல்கள்   இயற்றபட்டன. கி.பி 12-ம் நூற்றாண்டுக்குப்பின் கணிதம் மற்றும் வானவியலை, வாஸ்து, சாமுத்ரிகா லட்சணம், கைரேகை, பிரஸ்னம், எனும் தனிதனி பிரிவுகள் கூடிய 100க்கு மேல் நூட்பாக்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது கீரனூர் நடராஜனின் சாதக அலங்காரம், மங்களேஸ்வரியம், வீமகவி ஜோதிடம், சாதக சூடாமணி,  சினேந்திரமாலை, தாண்டவமாலை, சாதக சிந்தாமணி, சந்திர காவியம், ஆனந்த களிப்பு, புலிப்பாணி ஜோதிடம், மற்றும் அகத்தியரில் ஆரம்பித்து பல சான்றோரால்  இயற்றப்பட்ட ஆயிரக்கணக்கான அற்புதமான ஜோதிட நூல்கள் தமிழில் உள்ளன.

உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் ஜோதிடம் கூறும் வழிகளில் நகர்கின்றன. ஜோதிடத்தை கிரேக்கர்கள், பாபிலோனியர்கள் அராபியர், எகிப்தியர், யாதா, பாரசீக,   சீனர்கள் மற்றும் பல மேலை நாடுகளில் ஆராய்ச்சி மூலம் பயனடைவதாகக் கூறப்படுகிறது.

வானவியல் அறிவியல் சார்ந்த ஜோதிடம் 

ஜோதிடம் என்பது வானியல் ரீதியாக கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால நிகழ்வுகளைக் கூறுவது. ஜோதிடம் கொஞ்சம் கணிதவியல் மற்றும்  அறிவியல் மார்க்கமாகச் சென்றால் நம் பலன்களை அருமையாகக் கணிக்க முடியும் என்பது நம் முன்னோர்கள் கருத்து. எடுத்துக்காட்டாக வானியல் சாஸ்திரத்தை  அடிப்படையாகக் கொண்ட அறிவியல் சார்ந்தது தான் நம் வேத கால ஜோதிடம் தொன்றுதொட்டு வளர்த்துக்கொண்டு வருகிறது. ஜோதிடத்தில் வானியல் சார்ந்ததது  என்பதற்கு சித்தாந்தம், ஹோர ஸ்கந்தம், சம்ஹிதை ஜாதகம் என்பன கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.  முக்கியமானது மேலும் பூமியையும் சூரியனையும் சந்திரன் சுற்றுவதால் ஏற்படும் இரு புள்ளிகளும் (ராகு & கேது) உள்ளன என்பது நம் ஜோதிடத்திற்கு அடிப்படை  வானியல் சாஸ்திரம்.

பூமி மற்றும் சூரியக்குடும்ப உறுப்பினர்களான சந்திரன், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றைக் கோள்கள் இயக்கத்தைப் பற்றிய விவரம் இன்றைய  விஞ்ஞானிகளால் செயற்கைக் கோள்கள் அனுப்பிக் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் நம் முன்னோர்கள் அன்றே பலவித வானவியல் சார்ந்த இதனைக் கணிதச்  சமன்பாடுகளால் ஏற்கனவே கணித்துச் சொல்லி விட்டார்கள் முக்கிய ஆராய்ச்சியாளர்கள் வராஹமிகிரர், ஆர்யபட்டா, பாஸ்கராச்சாரியா விவரமாகக் கூறியுள்ளனர்.

இந்த பிரபஞ்சமானது  பழங்கால நாகரிகத்தினிடையே கொஞ்சம் கொஞ்சமாக ஜோதிட அறிவியல் விரிந்து பரவ தொடங்கியது. கி.பி.499ம் ஆண்டு கணிதம், வானியல்,  ஜோதிடம், போன்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் ஆரியப்பட்டர். இவரே சூரிய சந்திர கிரகணம் ஏற்படுவதைப் பற்றியும் மற்றும் பூமி உருண்டை வடிவிலானது என்றும் அது  தன்னைத்தானே சுற்றிவருகிறது என்றும் முதன்முதலில் அறிவித்தவர் ஆரியபட்டரேயாவார்.

ஜோதிடக் கலையில் சிறந்த புலமையுடையவராகவும் வராஹமிகிரர் திகழ்ந்தார். அவரது படைப்பான பிருகத்ஜாதகம் மற்றும் பிருகத்சம்ஹிதை இலக்கியத்தில் – வானவியல்,  ஜோதிட கலை, கட்டிடக்கலை பற்றியும் வானிநிலை இயக்கம் பற்றியும், மணமுறைகள், சகுனங்கள் என பல்வேறு தலைப்புகள் இவர் விவரித்துள்ளார். ஜோதிடம் என்பது அறிவியல் சார்ந்தது என்பதற்கு உதாரணமாக செவ்வாய் தோஷம் உள்ளவர்க்கு ரத்த அணுக்கள் மாறுபட்டிருக்கும் என்பதும் மரபுக்கூறுகளின் அடிப்படையில் பிரித்து திருமணப்பொருத்தம் மற்றும் தோஷ சாமியம் பார்த்து ஆண் –  பெண் இருவரையும் திருமணப் பந்தத்தில் சேர்த்து வைக்கப்படுவார்கள்.

மற்றொரு எடுத்துக்காட்டாக ஜோதிட முறைப்படி குழந்தை இல்லாதவர்கள் ஈரப் புடவையுடன் உயர்ந்த மரமான அரச மரத்தைச் சுற்றும் பொழுது அதில் வரும் ஒருவித நல்ல  வாயுவானது உடலில் முக்கியமாக வயிற்றில் படும்பொழுது கருப்பை மற்றும் விந்தணுக்கள் பலம் பெறும் என்பது அறிவியல் சார்ந்த உண்மை.

சித்த ஜோதிடம்

உருத்திரன் என்றழைக்கப்பட்ட சிவனே முதல் சிறந்த சித்த மருத்துவனாக ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிடம் அறிந்த சித்தர்கள், ரிஷிகள், என் குருவான  பெரியவா வரை மருத்துவ தொண்டினை மக்களுக்கு செய்து வந்தார்கள். ஜோதிட சாஸ்திர  அடிப்படியில் பல்வேறு நூல்களிலும் துல்லியமாகக் கணித்துக் கூறியுள்ளனர்.  அகத்தியர் தான் சித்தர்களின் தலைவர் என்று கூறலாம். இவருடைய வைத்தியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  பல நோய்களுக்கும் தீர்வு காணப்பட்டது. அகத்தியர் நிறைய நூல்களை எழுதியுள்ளார் முக்கியமாக அறிவியல் ரீதியாக அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றிக் கூறியுள்ளார்.

பண்டைய மருத்துவத்தில் முக்கிய அங்கமாகிய ஜோதிடக்கலை,  மருத்துவ முறைகளிலும், பஞ்சபூத தத்துவபடியான கிரக நிலை மற்றும் கோள்களின் ஆதிக்கம் மாறும்போது உடலிலும் வாத பித்த கப மாறுபாடு அடிப்படையாகவும், உடம்பின் இன்னென்ன பகுதிகள் பாதிக்கப்படும் என்ற தத்துவத்தை அவர்கள் கணக்கிட்டு, அந்த  அடிப்படையில் வைத்தியம் செய்ய இயற்கை மூலிகை மூலம், உலோகமும், ரத்தினக்கற்கள் மற்றும் ரசவாத முறைப்படி மருந்து தயாரிக்கப்பட்டது. இப்படி அவர்களுடைய  வைத்திய முறை இயற்கையின் சக்திகளை ஒட்டியதாகவே அமைந்திருந்தது. அந்த காலங்களில் சித்தர்கள்  உடலினை எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ரத்த ஓட்ட  மண்டலம், தசை மண்டலம், மூச்சு மண்டலம் ஆகிய மண்டலங்கள் அடிப்படையில்  பிரித்து அதற்கேற்ப மருத்துவம் கொடுத்தனர்.

இந்த பிரபஞ்சத்தில் ஐம்பூதங்களான மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் இவற்றின் பிரதிபலிப்பு ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளது அவற்றின் சக்திகள் அனைத்தும்  மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளது என்பதால் திருமூலர் ஊண் உடம்பே ஆலயம் என்றார். அவற்றையே சித்தர்கள் கீழே குறிப்பிட்டமாதிரி  பாடியுள்ளார்கள்.

அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமு மொன்றே
அறிந்து தான் பார்க்கும் போதே 

அதாவது பிரபஞ்சத்தில் உள்ளது அனைத்தும் பிண்டத்தில் அதாவது உடம்பில் உள்ளது. அதாவது  பிரபஞ்ச சக்தியானது உடலில் கரு உற்பத்திக்கு முக்கிய காரணமாகிறது  சுக்கிலமும் சுரோனிதமும் இணையும்போது, காற்று நீர், நெருப்பு மூன்றும் சேர்ந்து மண் உருவு கொண்டு உடலாய் மாறி உயிர் சேர்ந்து வாதம், பித்தம், கபம் என  நிலைப்படுகின்றது. இவ்வாறு பஞ்ச பூதங்களுள் அடங்கிய உடலானது உலகில் உள்ள தாவர மற்றும் தாதுப்பொருட்கள் அனைத்தும் இணைந்த ஒரு பிரபஞ்ச சக்தி என்று   சித்தர்கள் கூற்று. இந்த மனித உடலில் உள்ள சூரிய சக்தியானது மனிதனின்  இதயத்துடன் தொடர்புடையது என்றும், மூளை நரம்புகள் அனைத்தும் சந்திரனோடு தொடர்பு  உடையவை என்றும், பித்தப்பை இரத்தம், செவ்வாயோடு தொடர்பு உடையவை என்றும் உடலைப்  பிரபஞ்சத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.

பழங்காலத்திலே அக்கால மருத்துவர்கள் அறுவை சிகிச்சை முறையைப் பயன்படுத்தியுள்ளனர் . போர்க் காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய  அளவிலிருந்தால் அப்புண்ணை மருந்துகள் வைத்துச் சேர்த்துத் தைக்கப்பட்டன என்று விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.

“கூறுவேன் தேகமது என்னவென்றால்
குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே

(திருமூலர் )

திருமூலர் தன் பாடல் மூலம் உடல் என்பது, எலும்புகளைத் தூண்போல நாட்டி வைத்து, அவற்றின் இருப்பிடம் மாறிவிடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, அவற்றுக்கு இடையில் தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, தோலால் மூடி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை அடக்கி உடல்  என்ற உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறதாம்.

சித்தர்கள் மருந்துகளை மற்றும் அவற்றினை உட்கொள்ளும் முறையினை ஜோதிட உதவியுடன் செயல்பட்டனர். இன்றும் சிலர் ஜாதக கட்டம் கொண்டு தான் மருத்துவம்  செய்கின்றனர். நம் நாட்டில் இந்த ஜோதிடகலை முறைப்படி அனைத்து பல்கலைக்கழக வாயிலாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும் முக்கியமாக வேத ஜோதிட பாடத்தினை வானியல், அறிவியல் ரீதியாக சீராகக் கற்றுக்கொடுத்தால் வருங்காலத்தில் உள்ளவர்கள் சரியான முறையில் அறிவியல் ஜோதிடம் கற்று மக்களுக்கு இந்திய  மருத்துவரீதியாக உதவுவார்கள்.

குருவே சரணம்

ஜோதிட சிரோன்மணி தேவி


பண்டைத் தமிழ் வானியல் நுட்பங்கள்

9 ஜனவரி, 2012

சங்கப்புலவர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள்; இயற்கையின் நுட்பங்கள் பலவற்றைத் தம் நுண்மாண் நுழைபுலத்தோடே கண்டு இலக்கியங்களில் இயைபுறப் பாடியவர்கள். அவ்வகையில் அவர்கள் தாம் வாழ்ந்த இந்நிலவுலகிற்கு மேலே நிலைபெற்றுள்ள வானத்து இயல்புகளையும் அவ்வானத்தில் நாள்மீன்களாலும்

கோள்மீன்களாலும் நாட்தோறும் நிகழும் மாற்றங்களையும் அம்மாற்றங்களின் விளைவுகளையும் நுண்ணிதின் நோக்கிப் பாடியுள்ள பாடல்களைப் பார்க்கிறோம். அவ்வாறு அப்பாடல்களில் காணப்படும் வானியல் நுட்பங்களை இந்தக் கட்டுரையில் எடுத்துக்கொண்போம்.

பண்டைத்தமிழ் வானியல் கல்வி

தமிழகத்தில் சங்க இலக்கியங்களுக்கு முன்பே வானியல் கல்வி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருந்தது. தொல்காப்பியத்தில், அவரவர் மேம்பாடு பற்றிக் கூறும் வாகைத்திணையில்,

மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்

(தொல். பொருள். நூ. 74)

என்று வானியல் அறிவனின் மேம்பாடு பேசப்படுகிறது. அந்த அறிவனைக் கணியனென்று காட்டும்

உரையாசிரியர் இளம்பூரணர், குற்றமற்ற செயற்கையோடு மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்திலும் பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து, அங்கு நிகழும் இந்திரவில், மின்னல், ஊர்கோளாகிய மண்டிலம், வால்மீன், மீன்வீழ்ச்சி,கோள்நிலை, மழைநிலை போன்ற பிறவற்றையும் பார்த்துப் பயன்கூறுவது அறிவனின் மேம்பாடாம் என்றும் விளக்குவார். எனவே அக்காலத்து அறிவனின் வானியல் வன்மை விளங்கும்.

சங்ககாலத்தே கணியன் பூங்குன்றார் போன்ற புலவர்களும் இத்தகைய வானியல் அறிஞர்களாகத் திகழ்ந்தனர். உறையூர் முதுகண்ணன் சாத்தனார், சோழன் நலங்கிள்ளியைப் பாடிய புறப்பாடலொன்றில் (புறம்.30) அக்காலத்து வானியல் கல்வியாளரின் நுண்மாண்நுழைபுலத்தை வியப்போடே விரிக்கின்றார். கதிரவனின் வீதியும் அவ்வீதிவழி அவன் இயக்கமும் அவ்வியக்கத்தால் சூழப்படும் மண்டிலமும் காற்று இயங்கும் திக்கும் ஓர் ஆதாரமுமின்றித்தானே நிற்கின்ற ஆகாயமுமென்ற இவற்றின் அளவுகளை அங்கங்கே சென்று அளந்தறிந்து வந்தவர்போல், இவையிவை இன்னின்ன அளவுடையன எனச்சொல்லும், கல்வியுடையோரும் உள்ளனரென்று அவர் தம் காலத்து வானியற் கல்வியாளரைச் சுட்டுகின்றார். கதிரவனின் இயக்கம், குறித்த பாதைவழியே நிகழ்கின்றதென்பதையும் அவன் இயக்கவேகம் இன்னதென்பதையும் அவ்வேகத்தால் பார் வட்டம் குழப்படுகின்ற தென்படையும் காற்று இன்னின்ன காலங்களில் இந்திந்தத்திக்குகளில் இவ்விவ்வாறு இயங்குமென்பதையும் ஆகாயம் தனக்கோர் ஆதாரமின்றி (தானே பிற பூதங்களுக்கு ஆதாரமாய்) நின்கின்ற தென்பதையும் அக்காலத் தமிழகத்து வானியலாளர்நேரில் கண்டவர்போல் கணித்துக் கூறினரென்பதை இங்கே காண்கிறோம்.

நாள்மீன்களும் கோள்மீன்களும்

விண்மீன்களும் அசுவினி முதலான இருபத்தேழு சிறப்புடை நாள்மீன்களும் ஞாயிறு முதலான ஒன்பது கோள் மீன்களும் பற்றிய பொதுக்குறிப்புகளோடே அவற்றுள் பலவற்றைப் பற்றிய சிறப்புச் செய்திகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரை மன்றங்களில் மறவர்களும் அவர்களின் தலைவர்களும் கூடிப் போர்விளையாட்டுப் புரிந்திருந்தனரென்று பாடும்போது அவர்களுக்கு, விண்ணிடத்தே வலமாக எழுந்து திரியும் நாள்மீன்களையும் கோள்மீன்களையும் உவமை கூறுகின்றது.

பட்டினப்பாலை. “நீல்நிற விசும்பின் வலனேர்பு திரிதரும், நாள் மீன் விராயகோள்மீன்” (பட்.67-68) எனவரும் அவ்வடிகளில் அவற்றின் பொதுவான வலவோட்டம் குறிக்கப்பட்டுள்ளது காணலாம்.

பகைவர்களின் போர்திறன் ஒடுங்குமாறு தோன்றிய சேரமான் செல்வக் கடுங்கோ வழியாதனுக்கு, வானத்திலே பல விண்மீன்களின் ஒளி கெடுமாறு தோன்றுகின்ற ஞாயிற்றை உவமை கூறுகின்றார் கபிலர். “மாயிரு விசும்பிற் பன்மீன் ஒளிகெட, ஞாயிறு தோன்றியாங்கு” (பதி. 64:12-13) எனவரும் இவ்வடிகளில், இரவிற் போலவே பகலில் விண்மீன்கள் இருந்தும் அவற்றின் ஒளி ஞாயிற்றொளியின்முன் தோற்றமின்றி மங்கிமொழியும்உண்மையைக் கூறியுள்ள நுண்மை உணரத்தகும்.

பாண்டிய வேந்தர்களின் செங்கோற் சிறப்பினால் வானத்துக் காற்று வலமாகவே சுழல,நாள்மீன்கள் தத்தம் வழிமாறாமல், நடக்க, செஞ்ஞாயிறும் வெண்திங்களும் தீதின்றித் தோன்றி விளங்க, வேண்டும்போது வேண்டிய மழை பெய்ததென்று மதுரைக்காஞ்சி (5-10) மாண்புறப்பாடும்.

இனி, தனித்தனி நாள்மீன்களின் சிறப்புச் செய்திகளாக வருபவற்றுள், பரணிமீன்யானைக்குப் பிறப்புநாளென்ற முறையில் வேழமென்னும் பெயரைப் பெற்று, இராசி மண்டலத்தில் தன்னைஉள்ளடக்கிய மேடராசியை உணர்த்தி வருகின்றது (பரி 11:2). அதேபோல், கார்த்திகைமீன்தீயினைக் கடவுளாக உடையதென்ற முறையில் எரியென்னும் பெயரைப்பெற்றுத் தன் முதற்காலொழிந்த முக்காலையுடைய இடபராசியை உணர்த்தி வருகின்றது. (பரி. 11:2). அந்தக்கார்த்திகைக்கே ஆரலென்னும் பெயரும் (பரி. 9:7), அப்பெயரின் குறைவடிவமாக ஆலென்னும்பெயரும் (பரி. 5:43) வருகின்றன. அது தன் வெண்ணிறத்தின் காரணமாக முசுண்டைக் கொடியின் வெண்பூவினுக்கு உவமையாகவும் கூறப்படுகின்றது (மாலை. 100-101) இவையேயன்றி உரோகிணி (அகம். 136; நற். 202; நெடு.163) திருவாதிரை (பரி. 11:2,77), மகம் (பட்.35) ஆகிய மீன்களும் ஒன்பது கோள்களும் பற்றிய வேறுபல செய்திகளும் சங்க இலக்கியத்தில்விரவிவரக் காணலாம்.

மழைவரும் வானியல்

இனி, வானியல் நிலைகளின் விளைவுகளைக் கூறுகையில், மழைமலிந்து உலகில் வளம்கொழிப்பதற்குக் காரணமான நிலைகளைச் சங்க இலக்கியங்களில் பரக்கப்பார்க்கிறோம். சிறப்புமிக்க வெள்ளியாகிய சுக்கிரன், விளக்கம் மிக்க தன்கதிர்களைப் பரப்பி, வானகம் ஒளிபெறுமாறு சிறிது வடக்கே சாய்ந்து, மழைக்குத்துணையாகும் மற்றை நாள்மீன் கோள்மீன்களோடு கூடிச் சென்றால் மழைவளம் மலியுமாம் (பதி 24:23-29, 69:13-15). அவ்வாறு வெள்ளி, மற்றைக் கோள்களோடே சேரநின்று மழைபொழியக் காரணமாவதைப் பரிபாடலில் தெளிவுறப்பார்க்கலாம்.

கன்னிப்பெண்கள் தைந்நீராடுமாறு வையையாற்றில் வெள்ளம் வந்ததைப் பாடுகின்ற ஆசிரியர் நல்லந்துவனாரின் பரிபாடல், அவ்வெள்ளத்திற்குக் காரணமாய்ப் பெய்தமழைக்குக் காரணமான வானியல் நிலையை மிக நுட்பமாக வண்ணித்துக் கூறுகின்றது. (பரி.

11:1-15). அசுவினி முதலான இருபத்தேழு நாள்மீன்களுள் ஒவ்வோர் இரண்டேகால்

நாள்களையும் உள்ளடக்கிய மேடராசி முதலிய வீடுகள் பன்னிரண்டுள் நந்நான்கு

வீடுகளாகப் பிரிந்து, ஒன்பதொன்பது நாள்மீன்கள் அடங்கிய மூவகை வீதிகளையுடைய

இராசிமண்டிலத்தில், வெள்ளியாகிய சுக்கிரன் இடபத்திலும் செவ்வாய் மேடத்திலும்

புதன் மிதுனத்திலும் ஆதித்தன் சிம்மத்திலும் வியாழனாகிய குரு மீனத்திலும்

திங்களும் சனியும் இராகுவும் மகரத்திலும் கேது கடகத்திலும் செல்லக்கூடிய

ஆவணித்திங்கள் அவிட்டநாளில், திங்களை இராகு தீண்டுகின்ற சந்திர கிரகணம்

நேருமாயின் மழைபெய்யுமென்ற வானியல் விதிப்படி, கோள்கள் கூடினமையால் மேற்குத்

தொடர்ச்சி மலையில் மழைபெய்து வையையில் வெள்ளம் புரண்டதென்பது அப்பரி பாடலடிகளின்

கருத்தாகும். அவற்றுள், கோள்நிலைகளைக் கூறி வருகின்றபோது, ஆதித்தன் சிம்மத்தில்

செல்லும் நிலையைப் புலவர் நேரடியாகக் கூறாமல், ‘புலர்விடியல் அங்கி உயர் நிற்ப’

என்று விடியற்காலத்தில் கார்த்திகை மீன் உச்சம் பெற்ற நிலையைக் கூறும் முறையிலேயே

உணர்த்துகின்ற நுட்பமும், அவ்வாறே ஆவணிமாதத்து மதிநிறை நாளான அவிட்டமென்ற

குறிப்பினையும் அதன்படி திங்களும் இராகுவும் மகத்தில் செல்வத்தையும் இராகு

செல்லும் மகத்திற்கு ஏழாமிடமான கடகத்தில் கேது செல்வதையும், ‘பாம்பு மதியம் மறைய

ஒல்லை வருநாள்’ என்ற சிறுதொடரால் உணர்த்துகின்ற ஒட்பமும், உளங்கொளத்தறுவனவாம்.

 

மழைகெடும் வானியல்

—————————————————————————————————————————

 

மழைவருவதற்குக் காரணமாகும் வானியல் நிலைகளை வரைகின்ற சங்க இலக்கியங்களுள்

மழைகெடுவற்குக்

காரணமாகும் நிலைகளும் வரைந்து காட்டப்பட்டுள்ளன. வெள்ளிக்கோள் தான் நிற்க

வேண்டிய வடதிசையிலே சாய்ந்து நில்லாமல் தெற்கே சாய்ந்தாலும் அது

செவ்வாயோடு சேர்ந்தாலும்

சனி தனக்குப் பகையாகிய சிம்மராசியில் சென்று புகைகளோடு கூடிப்

புகைந்தாலும், புகைக்கொடியாகிய

தூமகேது தோன்றினாலும் மழைகேட்டு உலக வாடுமென்பதற்குச் சான்றுகள் பலவுள (புறம்,

35, 117, 388; பதி. 13; மது. 106-109; பட். 1-6; சிலம்பு. 10: 102-108).

 

அரசழியும் வானியல்

—————————————————————————————————————————

கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் இறப்புக் குறித்த வானியல் நிலையினையும் அந்நிலையில் விண்மீனொன்று எரிமீனாய் வீழ்ந்ததையும் அவன் இறப்புக்கு ஏழாம்நாள் இரவிலே தம் கூட்டத்தாருடனே கண்டு, அதன் விளைவையுணர்ந்து விதுப்புற்று அஞ்சிப் பின் அத்தீநிமித்தம் அதே தீங்கினில் முடிந்தபோது இரங்கிப்பாடிய கூடலூர் கிழாரின் புறப்பாடலொன்று (229) தமிழ்ப் புலவர்களின் வானியல் நுட்பத்திற்குச் சிறந்த சான்றாக வருகின்றது. அஃதாவது, ஒரு பங்குனி மாதத்து முதற்பதினைந்து நாளுள் மேடராசியில் பொருந்திய கார்த்திகை நாளின்முதற்காலில் நிறைந்த இருளையுடைய பாதியிரவில் திருவாதிரை முதலாகக் கேட்டை எல்லையாகப் பதின்மூன்று நாள்மீன்கள் வானத்தே விளங்கிக் காய்ந்து கொண்டிருக்கவும் அவற்றுள் உச்சமாகிய உத்தரமீன் அவ்வுச்சியிலிருந்து சாயவும் அவ்வுத்தரத்திற்குப் பின் எட்டாவது மீனாகிச் சென்ற மிருகžரிடம் மேற்கே அத்தமித்து மறையவுமான அளவில் வானில் நின்ற ஒருமீன் கிழக்கேயும் போகாமல் வடக்கேயும் வாராமல் வடகிழக்கினில் சாய்ந்து தீப்பரக்க வீழ்ந்ததாம். அதனைக்கண்ட கூடலூர் கிழாரும் அவரைச் சார்ந்த புலவர் பலரும் தம் அரசனுக்குத் தீங்கு நேருமென்று அஞ்சி, அவன் நோயில்லாதிருப்பின் நன்றென விரும்பியிருக்கவும், அவர்கள் அஞ்சியபடியே, மீன் விழுந்ததையடுத்த ஏழாம் நாள் அச்சேரமான் இறந்தனனென்று அவர் இரங்கிப் பாடுகின்றார்.

அப்பாடலில் காணும் வானியல் நுட்பம் வானளாவிய வியப்பிற்குரியது. அதில், கார்த்திகைமீன்தீயினைக் கடவுளாக உடையதென்ற முறைப்படி அழலென்னும் பெயரைப் பெற்று, அதன்முதற்கால் ஆட்டினது வடிவினையுடைய மேட ராசிக்குட்படுவதால் ‘ஆடியல் அழல்குட்டம்’ (குட்டம்-குறைந்த பகுதி;கால்) எனக் குறிக்கப்படுகின்றது. அனுடத்தின் வடிவமாகிய ஆறுமீன்களின் தொகுதி வளைந்த பனைமரம் போன்ற தோற்றமுடைமையால் முடப்பனையமெனமொழியப்பெற்று, அதன் ‘வேர்’ (அடிமீன்) என்று கேட்டை கூறப்படுகின்றது.

கயமாகிய குளவடிவமுடைய புனர்பூசத்தின் முன்னுள்ள மீனாகிய திருவாதிரை, ‘கடைக்குளத்துக்கயம் (கயத்துக் குளக்கடை) எனக்காட்டப்படுகின்றது. தலை நாள்மீனென்று உச்சமீனும், நிலைநாள் மீனென்று உதயமீனும் தொல் நாள்மீனென்று அத்தமன மீனும் பொருளழகோடே புகழப்படுகின்றன. அண்ட கோளத்தைச் சுற்றிலும் அடங்கிய அசுவினி முதலான இருபத்தேழுநாள்மீன்களுள் திருவாதிரை முதல் கேட்டை முடியப் பதின்மூன்று மீன்கள் கண்ணுக்குத் தோன்றும் அரைவட்ட வானத்தில் விளங்கிக் காய்ந்தனவாகக் காட்டுகின்ற உண்மையும் கருதத்தகும்.

இவ்வாறான வானவியல் நுட்பங்கள் பலவற்றைச் சங்க இலக்கியங்களில் பரவலாகப் பார்க்கலாம்.

நன்றி இரவா.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply