திருகோணமலையில் விக்னேஸ்வரன் பிறேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்!
நக்கீரன்
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம். தமிழரசுக் கட்சியை சுமந்திரன் அழிப்பதாக தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியில் உள்ள இரண்டொருவர் குற்றம் சுமத்தியுள்ளனர். அந்தக் குற்றச்சாட்டு என்பது நிதர்சனமான உண்மை என்கிறார் பிறேமச்சந்திரன். மகளிர் அணியினர் தொடர்பான சிக்கல் உள்வீட்டுச் சிக்கல். அதைத் தமிழ் அரசுக் கட்சி உரிய முறையில், நியாயமான வழிகளில் கையாளும். அதையிட்டு பிறேமச்சந்திரன் வீணாகக் கவலைப் படத் தேவையில்லை. தூக்கத்தைத் தொலைக்கத் தேவையில்லை. அந்தச் சிக்கலை வைத்து பிறேமச்சந்திரன் அரசியல் குளிர்காய நினைத்தால் அது நிறைவேறாது. அது பெரிய ஏமாற்றத்தில் முடியும்.
பிறேமச்சந்திரனுக்கு எதை எதோடு ஒப்பிட வேண்டும் என்பது தெரியாமல் இருக்கிறது. கருணா, தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் காட்டிக் கொடுத்தவர். காட்டிக் கொடுத்ததோடு நில்லாமல் எதிரிகளிடம் சரண் அடைந்தவர். அதற்குப் பரிசாக அமைச்சர் பதவி வகித்தவர். அவரையும் அவர் தோற்றுவித்துள்ள கட்சியையும் தமிழ்மக்கள் தேர்தலில் அடியோடு நிராகரித்துள்ளார்கள்.
ஆனால் சுமந்திரன் அப்படியா? 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாகச் சுமந்திரன் போட்டியிட்டு 58,044 விருப்பு வாக்குகளால் வெற்றி பெற்றவர். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தவர். கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாவது இடத்துக்கு வந்தவர்.
அதே (2015) தேர்தலில் பிறேமச்சந்திரன் படுதோல்வி அடைந்தார். அவர் ஏற்கனவே நா.உறுப்பினராக இருந்தும் மொத்தம் 29,906 விருப்பு வாக்குகள் பெற்று 7 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அவருக்கும் ததேகூ இல் போட்டியிட்டு 6 ஆவது இடத்தைப் பிடித்த அருந்தவபாலனுக்கும் இடையிலான விருப்பு வாக்கு வித்தியாசம் 13,019 ஆகும். அவரது கட்சியில் போட்டியிட்ட அனந்தராஜ் 15,408 விருப்பு வாக்ககள் பெற்று 9 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அதந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டவர்கள் பெற்ற மொத்த விருப்பு வாக்குகளும் அவற்றின் வாக்கு விழுக்காடும் பின்வருமாறு:
2015 யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் – தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் |
கிடைத்த வாக்குகள் |
இதஅ |
இபிஆர்எல்எவ் |
புளட் |
ரெலோ |
|
1 |
சி. சிவஞானம் |
72258 |
72258 |
|||
2 |
மாவை சேனாதிராசா |
58782 |
58782 |
|||
3 |
ம.ஆ. சுமந்திரன் |
58043 |
58043 |
|||
4 |
த. சித்தார்த்தன் |
53740 |
53740 |
|||
5 |
இ.சரவணபவன் |
43289 |
43289 |
|||
6 |
அருந்தவபாலன் |
42925 |
42925 |
|||
7 |
சுரேஸ் பிறேமச்சந்திரன் |
29906 |
29906 |
|||
8 |
ந. சிறிகாந்தா |
20684 |
20684 |
|||
9 |
அனந்தராஜ் |
15408 |
15408 |
|||
10 |
நெல்சன் மதனி |
13793 |
13793 |
|||
மொத்தம் |
408828 |
289090 |
45314 |
53740 |
20684 |
|
விழுக்காடு |
|
66.69 |
10.45 |
12.4 |
4.77 |
தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்ட 6 வேட்பாளர்கள் 289,090 வாக்குகள் (66.69 விழுக்காடு) பெற்று 4 இருக்கைகளைக் கைப்பற்றினார்கள். அதே சமயம் இபிஎல்ஆர்எவ் கட்சியில் போட்டியிட்ட 2 வேட்பாளர்கள் 45,314 வாக்குகள் (10.45 விழுக்காடு) பெற்று இரண்டு பேரும் தோற்றுப் போனார்கள்.
இதுவே தமிழ் அரசுக் கட்சிக்கும் இபிஆர்எல்எவ் கட்சிக்கும் உள்ள வித்தியாசம். இந்த யதார்த்தத்தை பிறேமச்சந்திரன் ஏற்க மறுத்தார். அதன் காரணமாக ததேகூ க்குள் தமிழ் அரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது, மேலாண்மை செய்கிறது எனத் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
ஒரு கூட்டணி என்று வரும்போது அதிலுள்ள பெரிய கட்சியின் செல்வாக்கு அதிகரித்தே காணப்படும். மேலே கொடுக்கப்பட்ட புள்ளி விபரத்தின் அடிப்படையில் இபிஎல்ஆர்எவ் கட்சியை விடத் தமிழ் அரசுக் கட்சி ஆறு மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது. முதல் ஆறு இடங்களில் முதல், இரண்டு, மூன்று, ஐந்து மற்றும் ஆறு இடங்களில் தமிழ் அரசுக் கட்சி வென்றிருக்கிறது. இபிஆர்எல்எவ் கட்சியை விட முதல்முறை தேர்தலில் போட்டியிட்ட சுமந்திரன் 12,729 விருப்பு வாக்குகளை அதிகமாகப் பெற்றுள்ளார்! இந்த முடிவுகள் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் அரசுக் கட்சியின் செல்வாக்கையும் இபிஆர்எல்எவ் கட்சியின் செல்வாக்கின்மையையும் துல்லியமாகக் காட்டுகிறது.
பிறேமச்சந்திரன் தேர்தலில் 29,908 வாக்குகள் பெற்று 7 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்ட பின்னரும் அவர் தான் ஒரு கட்சியின் தலைவராக இருப்பதால் தேசியப் பட்டியலில் இருந்து தனக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று அடம்பிடித்தார். இது எந்த ஊர் நியாயம் எனத் தெரியவில்லை. தேசியப் பட்டியலில் இடம் கொடுக்க வேண்டும் என்றால் அதில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 42,289 விருப்பு வாக்குகள் பெற்று ஆறாவது இடத்துக்கு வந்த அருந்தவபாலனுக்குக் கொடுக்க வேண்டும். அதுதான் நியாயம். அதுதான் அறம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழ் அரசுக் கட்சி எப்படி முதன்மைக் கட்சியாக இருக்கிறதோ அது போலத்தான் சிறிலங்கா பொதுசன சுதந்திரக் கூட்டமைப்பில் சிறிலங்கா பொதுசன பெரமுனை முதன்மைக் கட்சியாக இருக்கிறது. சிறிலங்கா பொதுசன பெரமுனையே சிறிலங்கா பொதுசன சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர், செயலாளர் பதவிகளை வைத்திருக்கிறது. பிரதமர் மகிந்த இராசபக்சா அதன் தலைவராக இருக்கிறார். சின்னமும் அப்படித்தான். மேலும் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் சுமந்திரன் களம் இறங்கியதை பிறேமச்சந்திரன் சிறிதும் விரும்பவில்லை. சுமந்திரன் ஏன் தேர்தலில் நிற்கிறார்? அவருக்குத் தேசியப் பட்டியலில் இருந்து இடம் கொடுக்கலாம் எனப் பிறேமச்சந்திரன் சொன்னார்.
சுமந்திரன் தேர்தலில் நிற்பதால் போட்டி கடுமையாக இருக்கும் எனப் பிறேமச்சந்திரன் நினைத்தார். இதனால் தனது வெற்றி வாய்ப்புப் பாதிக்கப்படும் எனவும் நினைத்தார். அதன் காரணமாகவே சுமந்திரனை மெல்லப் போட்டியிலிருந்து வெட்டிவிடப் பார்த்தார். மேலும் 2010 இல் 9 ஆக இருந்த ஆசனங்கள் 2015 இல் 7 ஆகக் குறைந்து விட்டது போட்டியை கூர்மையாக்கியது.
2010 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 4 இருக்கைகளை மட்டும் ததேகூ பிடித்தது. மாவை சேனாதிராசாவுக்கு 20,501 விருப்பு வாக்குகள்கிடைத்தன. அடுத்ததாக 16,425 விருப்பு வாக்குகள் பெற்று பிறேமச்சந்திரன் வெற்றி பெற்றார்.
2015 இல் நடந்த தேர்தலில் பிறேமச்சந்திரன் கூட இருந்து சுமந்திரன் அவர்களுக்கு குழி வெட்டப் படாத பாடுபட்டார். அதற்காகப் புலத்தில் வாழ்ந்த தனது உறவினர்கள். நண்பர்கள் ஆதரவாளர்களிடம் இருந்து நிதி திரட்டினார். அது தொடர்பாக ஒரு மின்னஞ்சலை அவர் அனுப்பி வைத்தார். மின்னஞ்சலை அவர் அனுப்பினாலும் “பிறேமச்சந்திரனின் நண்பர்கள்” அனுப்பியதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆங்கிலத்தில் அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலின் தமிழாக்கம் பின்வருமாறு.
அன்புள்ள புலம்பெயர்ந்த நண்பர்களே,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் சனநாயகமாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதாவது, பிறேமச்சந்திரனின் கட்சி உட்பட பிற தமிழ்க் கட்சிகளுடன் எங்கள் தலைமை ஆலோசிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இப்போது சுமந்திரனும் சம்பந்தனும் மற்றத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளுடனோ அல்லது தமிழ் மக்களிடமோ கூட ஆலோசிக்க வேண்டிய தேவையில்லாமல் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்களின் கொள்கைகள் ஏமாற்றமளிக்கின்றன. இது சிங்களத் தலைவர்களும் அவர்களது இராணுவமும் செய்த போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை ஒன்றை ஊக்குவிப்பதை அவர்கள் ஏற்கனவே கைவிட்டு விட்டார்கள் போல் தெரிகிறது. சுமந்திரன் மற்றும் சம்பந்தனும் வடகிழக்கில் உள்ள தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கூட கைவிட்டு விட்டதாகப் படுகிறது.
கொள்கையை இயற்றுவதற்கான சுமந்திரனின் வழியைத் தடுக்க (அவர் தனது சொந்த தீர்ப்பின்படி காரியங்களைச் செய்கிறார், மற்றவர்கள் அதனைப் பற்றிப் பின்னர் தெரிந்துகொள்ள அனுமதிக்கிறார்) பிறேமச்சந்திரனை ஆதரிக்கும் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களை அவரை பலப்படுத்தக்கூடிய பதவிகளில் அமர்த்தலாம் என்று நம்புகிறோம். அப்படிச் செய்தால் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் அவரோடு ஆலோசிக்க வேண்டியிருக்கும். பிறேமச்சந்திரனது கைகனை வலுப்படுத்த 5 இடங்கள் போதுமானதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
சுமந்திரன் தனிப்போக்காக நடந்து கொள்வதைத் தடுப்பதற்கான ஒரே ஜனநாயக வழி இதுதான்.
சுரேஸின் கொள்கைகள் சர்வதேச விசாரணை மற்றும் வடகிழக்குத் தமிழர்களிடையே வாக்கெடுப்பு ஆகிய இரண்டிற்கும் சாதகமாக இருப்பதால், நாங்கள் அவரை ஆதரிக்கிறோம். அவர் சுமந்திரன் மற்றும் சம்பந்தனின் கொள்கைகளுக்கு எதிராகப் பேசியுள்ளார், எனவே அவர் எங்கள் உதவிக்கும் ஆதரவிற்கும் தகுதியானவர் என்று நாம் இன்னும் உறுதியாக நம்புகிறோம்.
பிறேமச்சந்திரனுக்கு நன்கொடை அளிக்க: https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=7SQUE7C2HLK22
வெளிநாட்டில் நிதி திரட்டுவதில் பிழையில்லை. ஆனால் நிதியை வைத்துக் கொண்டு சம்பந்தர் மற்றும் சுமந்திரன் இருவரையும் ஓரங்கட்ட நினைத்தது பிழை. கூட்டணித் தர்மத்துக்குப் பிழையானது. கடைசியில் சம்பந்தருக்கும் சுமந்திரனுக்கும் சூனியம் வைக்கப் போய் தனக்குத்தானே தனது சொந்தச் செலவில் பிறேமச்சந்தின் சூனியம் வைத்தார்! தேர்தலில் மக்கள் அவருக்கு செம பாடம் படிப்பித்தார்கள்.
சம்பந்தர் மற்றும் சுமந்திரன் இருவரிடத்தும் சனநாயகம் இல்லை என்று சொல்லும் பிறேமச்சந்திரனின் சனநாயகம் எப்படிப்பட்டது? அவருக்குத் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுத்திருந்தால் தமிழ் அரசுக் கட்சியில் சனநாயகம் இருக்கும். கொடுக்காவிட்டால் சனநாயகம் இல்லை.
2015 இல் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதென 14 நா.உறுப்பினர்கள் முடிவு எடுத்த பின்னர் அவரது கட்சியை சேர்ந்த சிவசக்தி ஆனந்தன் வாக்கெடுப்பு நேரத்தில் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தார்.
2015 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பது என ததேகூ முடிவு செய்தது. ஆனால் தேர்தல்ப் பரப்புரை நேரத்தில் பிறேமச்சந்திரன் தமிழ்நாட்டுக்குப் போய்விட்டார். வாக்களிப்புக்கு முதல் நாள்த்தான் அவர் ஊர் வந்து சேர்ந்தார். வாக்களித்து விட்டு வாக்குச் சாவடியில் இருந்து வெளியே வந்த பிறேமச்சந்திரனிடம் செய்தியாளர்கள் “யாருக்கு வாக்களித்தீர்கள்?” எனக் கேட்டார்கள். “வேண்டா வெறுப்பாக சிறிசேனாவுக்கு வாக்களித்தேன்” எனப் பதில் இறுத்தார்!
சம்பந்தரும் சுமந்திரனும் பிரதமர் இரணில் விக்கிரமசிங்காவுக்கும் அவரது அரசுக்கும் முண்டு கொடுக்கிறார்கள் என ஓயாது ஒழியாது சிவசக்தி ஆனந்தன் சொல்லி வந்தார். ஆனால் அவரது யோக்கியதை என்ன?
ஏப்ரில் 04, 2018 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் இரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு எதிராக இராசபக்சவின் சிறிலங்கா பொது சன பெரமுன மற்றும் அன்றைய சனாதிபதி சிறிசேனாவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதிக்கப்பட்டது. தீர்மானம் வாக்கெடுப்புக்கு விட்ட போது 122 பேர் தீர்மானத்துக்கு எதிராகவும் 78 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. ஐதேக, ததேகூ, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி. இபிடிபி நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. வேடிக்கை என்னவென்றால் ததேகூ இரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு முண்டு கொடுக்கிறது என்று குற்றம் சாட்டி வந்த சிவசக்தி ஆனந்தனும் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்தார்!
ததேகூ இரணில் விக்கிரமசிங்கவுக்கு முண்டு கொடுக்கிறது என்று கண்டித்துவிட்டு, இரண்டு கோடியை இலஞ்சம் வாங்கிக் கொண்டு விக்கிரமசிங்க அவர்களை ததேகூ ஆதரிக்கிறது என மேடைகளிலும் அறிக்கைகளிலும் சொல்லிவிட்டுப் பின் எந்த முகத்துடன் சிவசக்தி ஆனந்தன் அதே விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்தார்? அப்படியென்றால் சிவசக்தி ஆனந்தனும் இலஞ்சம் வாங்கிவிட்டுத்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்து எதிராகவும் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும் வாக்களித்தாரா? இது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் இல்லையா?
டிசெம்பர் 12, 2018 அன்று பிரதமர் இரணிலுக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா? இல்லையா என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு நடந்தது. அந்த வாக்கெடுப்பில் ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்களில் 14 பேர் ஆதரவாக வாக்களித்தார்கள். ஆனால் சிவசக்தி ஆனந்தன் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார். அதற்கு அவர்அளித்த விளக்கம் விக்கிரமசிங்கவுக்கும் இராசபக்சவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லையாம்!
2013 செப்தெம்பர் 21 இல் நடந்த வட மாகாண சபைத் தேர்தலில் இபிஆர்எல்எவ் கட்சி சார்பாக போட்டியிட்ட பொ. ஐங்கரநேசனுக்கு 22,268 விருப்பு வாக்குகள் கிடைத்தன. க. சர்வேஸ்வரனுக்கு 14,761 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இபில்ஆர்எல் கட்சி சார்பாக ஒரு அமைச்சர் பதவிக்கு ஒருவரை பரிந்துரைக்குமாறு முதலமைச்சர் கேட்ட போது பிறேமச்சந்திரன் 22,268 விருப்பு வாக்குகள் பெற்ற ஐங்கரநேசனை ஓரங்கட்டி விட்டு 14,761 விருப்பு வாக்குகள் பெற்ற தனது சகோதரனை அமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்தார். இதன் மூலம் தண்ணீரைவிட இரத்தம் தடிப்பானது என்பதை பிறேமச்சந்திரன் எண்பித்தார். இவர்தான் ததேகூ க்குள் சனநாயகம் இல்லை என்று கூரை ஏறிக் கொக்கரிக்கிறார்.
இபிஆர்எல்எவ் கட்சி ஈரோஸ் அமைப்பில் இருந்து 1979 ஆம் ஆண்டு பிரிந்தது. அதை அடுத்து கே.பத்மநாப தலைமையில் இபிஆர்எல்எவ் தோற்றம் பெற்றது. பின்னர் பத்மநாப யூன் 19, 1990 அன்று தமிழ் நாட்டில் வைத்து வி.புலிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதனை அடுத்து அவரது இடத்தை சுரேஸ் பிறேமச்சந்திரன் நிரப்பினார். அன்று தொடக்கம் இன்றுவரை – முப்பது ஆண்டுகள் – அவரே கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இது எப்படிப்பட்ட சனநாயகம்? அவரைவிட கட்சியில் வேறுயாரும் அந்தப் பதவிக்குப் பொருத்தம் இல்லையா?
இபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த சிவசக்தி ஆனந்தன் மற்றவர்கள் மீது சேறு அள்ளிப் பூசுவதில் ஒரு மன்னன். குறிப்பாக ததேகூ நா.உறுப்பினர்கள் 2018 இல் கொண்டுவரப்பட்ட வரவு – செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களிக்க இரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து தலா ரூபா 2 கோடி இலஞ்சம் வாங்கியதாக மேடை தோறும் பொய்யுரைத்தார். உண்மை என்னவென்றால் இரணில் அரசு தொகுதி அபிவிருத்திக்கு ததேகூ உறுப்பினர்களுக்கு 2018 இல் ரூபா 2 கோடி ஓதுக்கியிருந்தது. இந்தத் தொகை அந்தந்த மாவடடச் செயலாளர்கள் மூலமாக குறிப்பிட்ட நா.உறுப்பினர்கள் அடையாளம் காட்டும் அபிவிருத்திக்கு செலவழிக்கப்படும். குறித்த நிதியில் 5 இலட்சத்திற்குக் குறையாமலும் 15 இலட்சத்திற்கு மேற்படாமலும் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளிற்கு மட்டுமே வழங்க முடியும் என்பது நிபந்தனை ஆகும். 2019 இல் இந்தத் தொகை 3 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிதி ஊரெழுச்சி திட்டத்தின் கீழ் பள்ளிக்கூடங்களைத் திருத்த, குளங்களைத் தூர்வார, சாலைகள் அமைக்க ஒதுக்கப்பட்டது.
இவற்றைவிடவிட அபிவிருத்திக்கு மேலதிகமாக ததேகூ நா.உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. எடுத்துக்காட்டாக சம்பந்தன் ஐயாவுக்கு ருபா 120 கோடி வழங்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் அபவிருத்திக்கு ருபா 157.871 மில்லியன் ஒதுக்கப்பட்டது.
தமிழ்மக்களது உரிமைகளுக்கான போராட்டம் அவர்களது வாழ்வாதாரத்தைத் தூக்கி நிறுத்த பொருளாதார அபிவிருத்தி இந்த இரண்டும் சமாந்தரமாக முன்னெடுக்கப் படவேண்டும் என்பதே ததேகூ கோட்பாடாகும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் வட கிழக்கு அபிவிருத்திக்கு ததேகூ நா.உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியை இலஞ்சம் என்று பரப்புரை செய்த சிவசக்தி ஆனந்தன் இரணில் அரசைக் கெஞ்சிக் கூத்தாடி ரூபா 5 கோடியை அபிவிருத்திக்குப் பெற்றுக் கொண்டார்!
இப்படிப் பொய்யைவிட உண்மையை ஒருமுறை தன்னும் பேசாத சிவசக்தி ஆனந்தனை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமா? என வன்னி வாழ் தமிழ்வாக்காளர்கள் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.
தமிழரசுக் கட்சி மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு அதில் சனநாயகம் இல்லை, தமிழரசுக் கட்சியே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது, பங்காளிக் கட்சிகளுக்கு சமத்துவம் இல்லை என ததேகூ இல் இருந்தபோது ஒப்பாரிவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். ததேகூ இன் தலைவர் பதவி சுற்றுமுறையில் இருக்க வேண்டும். ஒருவரே தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என பிறேமச்சந்திரன் கூறுவதுண்டு. அதாவது சம்பந்தர் தலைவராக நீடிக்கக் கூடாது தனக்கும் வாய்ப்புத் தரவேண்டும் என்பது அவர் முன்வைத்த வேண்டுகோளாகும்.
ஆனால் இன்று தமிழ் மக்கள் தேசிய முன்னணியில் என்ன நடக்கிறது? தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டி போடும் 10 இடங்களையும் எப்படிப் பங்கு போட்டார்கள்?
விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணிக்கு 5 இடங்கள். இபிஆர்எல்எவ மற்றும் ரெலோ (சிவாஜி – சிறிகாந்தா) தலா இரண்டு இடங்கள். அனந்திக்கு ஒரு இடம். பிறேமச்சந்திரனின் சித்தாந்தத்தின் படி இந்த நாலு கட்சிகளும் பத்து இடங்களையும் சரி சமமாகப் பிரித்திருக்க வேண்டும். ஏன் பிரிக்கவில்லை? இந்த நான்கு கட்சிகளிலும் இபிஆர்எல்எவ கட்சி மட்டுமே பதிவு செய்யப்பட்ட கட்சி. ஏனைய கட்சிகள் பதிவு செய்யப்படாத கட்சிகள். அப்படியிருக்க பதிவு செய்யப்படாத, இதுவரை தேர்தலில் நிற்காத தமிழ் மக்கள் கூட்டணிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டதை எப்படிச் சத்தம் போடாமல் பிறேமச்சந்திரன் ஏற்றுக் கொண்டார்? இது சந்தர்ப்பவாத அரசியல் இல்லையா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதே தேர்தலில் தமிழ்மக்களுடைய வாக்குகள் சிதறடிக்கப்படுவதால் அவர்களது பிரதிநித்துவம் குறைந்து விடுகிறது அல்லது இல்லாமல் போய்விடுகிறது என்ற கவலையே.
திருகோணமலை மாவட்டத்தில் 2000ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் தமிழ் கட்சிகள் பிளவு பட்டு நின்றதாலும் தமிழ் வேட்பாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி போன்ற கட்சிகளில் போட்டியிட்டுத் தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்ததாலும் முதல்முறையாக தமிழ்ப் பிரதிநிதி ஒருவரை திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்ய முடியாமல் போனது.
தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், ரெலோ, மற்றும் தமிழ் சுயேச்சைக் குழுக்கள் என்பன மொத்தமாக 24ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தன. ஐக்கிய தேசியக்கட்சி சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய கட்சிகளில் போட்டியிட்ட தமிழர்கள் சுமார் 10 ஆயிரம் வாக்குகளை அக்கட்சிகளுக்கு பெற்றுக்கொடுத்திருந்தனர். தமிழ் வாக்குகள் சிதையாமல் சிந்தாமல் இருந்திருந்தால் திருகோணமலையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை நிச்சயமாகத் தக்க வைத்துக் கொண்டிருந்திருக்கலாம்.
2000 ஆம் ஆண்டு தேர்தலில் அடைந்த பின்னடைவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஒக்தோபர், 2001 அன்று தோற்றம் பெற்றது. தொடக்கத்தில் கிழக்க இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்களே இதற்கான முயற்சியை மேற்கொண்டனர். அதனை ஏற்று வி.புலிகள் அதற்கு வடிவம் கொடுத்தனர். அதன் முதல் கூட்டம் இதன் காரணமாக 2001 இல் நடந்த தேர்தலில் திருகோணமலை உட்பட தமிழ் நா.உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது!
இப்போது வரலாறு மீண்டும் திரும்புகிறது. திருகோணமலையில் கஜேந்திரகுமாரின் தமிழ்க் காங்கிரஸ், விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி போட்டியிடுகின்றன. மொத்தம் 4 இருக்கைகளுக்கு 13 கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்களும் களத்தல் இறங்கியுள்ளன. தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் தமிழ்மக்கள் வாக்குகளைப் பிரிப்பதால் 2000 இல் நடந்த தேர்தலைப் போல திருகோணமலையில் தமிழர் பிரதிநித்துவம் இல்லாமல் போகும் அபாயம் இருக்கிறது. திருகோணமலையில் 245, 915 வாக்காளர்கள் (2018) இருக்கிறார்கள். 2012 இல் எடுத்த குடித்தொகைக் கணக்கின்படி முஸ்லிம் 152,854 (41.22 விழுக்காடு) தமிழர் 115,549 (31.22 விழுக்காடு) சிங்களவர் 101,991 (27.50 விழுக்காடு) ஏனையோர் 7,788 மொத்தம் 378,172 பேர் இருக்கிறார்கள்.
குடித்தொகை அடிப்படையில் வாக்காளர் தொகை தோராயமாக முஸ்லிம்கள் 101,378, தமிழர் 76,722, சிங்களவர் 67,771 ஆகும். 2010 இல் நடந்த தேர்தலில் 2 சிங்களவர், 1 தமிழர், 1 முஸ்லிம் தெரிவு செய்யப்பட்டனர். 2015 இல் நடந்த தேர்தலில் 2 முஸ்லிம், ஒரு தமிழர், ஒரு சிங்களவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
திருகோணமலையில் தமிழ்மக்களது எண்ணிக்கை நாடு சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு வீழ்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத் தக்கது. இதற்கு காரணம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், புலப்பெயர்வு மற்றும் போர்க்காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் ஆகும்.
1981 க்கும் 2012 க்கும் இடைப்பட்ட காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களின் குடித்தொகை 11.08 விழுக்காடு அதிகரித்துள்ளது. தமிழ்மக்களுடைய குடித்தொகை 5.79 விழுக்காட்டால் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 115 ஏதிலி முகாம்களில் 105,043 தமிழர்கள் வாழ்கிறார்கள். முகாம்களில் 73,241 பேரும் வெளியில் 31,802 பேரும் வாழ்கிறார்கள். இவர்களில் ஒரு தொகையினர் திருகோணமலையில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. இவர்களில் 681 குடும்பங்கள் கடந்த ஆண்டு திருகோணமலையில் மீள்குடியேறியுள்ளார்கள். அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
திருகோணமலையில் தமிழ்மக்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறிவரும் வேளையில் விக்னேஸ்வரன், பிறேமச்சத்திரன், சிவாஜிலிங்கமும் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கப் பார்க்கிறார்கள்!
Leave a Reply
You must be logged in to post a comment.