டெனீஸ்வரன் புதிதாக ஒரு கட்சியைப் பிரசவித்து தமிழ்மக்களது ஒற்றுமையை மேலும் சிதறடிக்க ஆசைப்படுகிறார்!
நக்கீரன்
முன்னாள் வட மாகாண சபையின் அமைச்சர் பா. டெனீஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீக்கியது சட்டத்துக்கு முரணானது, ஒரு மாகாண அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை, அப்படி ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் விரும்பினால் அதனை ஆளுநரிடம் ஒரு ஆலோசனையாக முன் வைக்க வேண்டும். அப்படியான ஆலோசனையின் அடிப்படையில் ஆளுநர் குறிப்விட்ட அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யலாம். ஆனால் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அப்படிச் செய்யத் தவறிவிட்டார் தனது இச்சைப்படி தன்னை பதவி நீக்கம் செய்தார் என்ற வாதத்தை டெனீஸ்வரனின் சட்டத்தரணி முன்வைத்து வழக்கை வென்றார்.
மேல் நீதிமன்றத் தீர்ப்பை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப் படுத்தவில்லை உதாசீனம் செய்துவிட்டார் எனக் கூறி டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வைத்துள்ளார். அது தொடர்பான விசாரணையை மேல் நீதிமன்றம் மே மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.
இதன் பின்னர் மக்கள் மத்தியில் டெனீஸ்வரனுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்து வருகிறது. ஒரு இளம் சட்டத்தரணி முன்னாள் நீதியரசர் ஒருவருக்கு மாகாண சபை தொடர்பான சட்டம் தெரிந்திருக்கவில்லை என மக்கள் பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய பிம்பத்தை இப்போது பொரிமா முட்டிக்காரன் பாணியில் போட்டுடைத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் போராளிகளுக்குச் சரியான ஆசன ஒதுக்கீட்டை வழங்கவிலையாம். வழங்குமாறு எப்போது டெனீஸ்வரன் கேட்டார்? அதற்கான விண்ணப்பங்கள் அந்தத்தப் பங்காளிக் கட்சிகளால் கேட்கப்பட்டு, நேர்காணல் கண்டு ஏறக்குறைய வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு முடிந்து விட்டது. நாளை மறுநாள் அது இறுதி செய்யப்பட்டு விடும். இப்போதுதான் டெனீஸ்வரன் ஆழ்ந்த நித்திரையில் இருந்து எழும்பியவன் மாதிரி முன்னாள் போராளிகளுக்கு ஆசன ஒதுக்கீடு வழங்கப்படவில்லை, அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என ததேகூ யை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பார்க்கிறார்.
முன்னாள் போராளிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு சின்னதும் பெரியதுமான பல அமைப்புக்கள் இருக்கின்றன. இதில் ஜனநாயகப் போராளிகள் கட்சி எதிர்வரும் தேர்தலில் தமிழ்மக்களின் ஒற்றுமை கருதித் ததேகூ இன் வெற்றிக்குப் பாடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளது. அந்தக் கட்சி தனது உறுப்பினர்களுகு வேட்பு மனு வேண்டும் எனத் ததேகூ யைக் கேட்டதாகத் தெரியவில்லை. மேலும் முன்னாள் நா.உறுப்பினர்களுக்கு மீண்டும் நியமனம் கொடுக்கப்பட்டுவிட்டதால் எஞ்சிய இடங்கள் எண்ணிக்கையில் மிகச் சொற்பமே.
இப்படித்தான் 2015 இல் நடேசபிள்ளை வித்தியாதரன் முன்னாள் போராளிகள் சார்பாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் தலா இரண்டு பேருக்கு ஆசன ஒதுக்கீடு வேண்டும் என்று கடைசி நேரத்தில் ததேகூ யைக் கேட்டார். அது மறுக்கப்பட்டதும் ஜனநாயகப் போராளிகள் கட்சி என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட வைத்தார். தான்தான் அந்தக் கட்சியின் முதன்மை வேட்பாளர் என்றும் அறிவித்தார். ஆனால் அந்தக் கட்சிக்கு அந்தத் தேர்தலில் விழுந்த வாக்குகள் 1973 மட்டுமே.
வித்தியாதரன் போலவே டெனீஸ்வரனும் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் விடுத்த கோரிக்கைக்கு இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. இதனை உணர்ந்த விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை சுயேச்சையாகப் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் போராளிகளுக்குச் சரியான ஆசன ஒதுக்கீட்டை வழங்குவதாக இருந்தால் சுயேச்சைக்குழு சார்பில் முன்னாள் போராளிகள் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிக்கப் படும்” என்கிறார். அதாவது கத்தியை ததேகூ இன் கழுத்தில் வைத்துக் கொண்டு “நியமனம் கொடுக்க வேண்டும். இல்லையேல் சுயேட்சையாகப் போட்டியிடுவோம்” என வெருட்டுகிறார்.
இப்படியான வீராவேசப் பேச்சுக்கு ததேகூ செவிசாய்க்கும் அல்லது பயந்தபோய்விடும் என்று டெனீஸ்வரன் நினைத்தால் அது அவர் தன்னைத்தானே ஏமாற்றுவதாக முடியும். அது மட்டுமல்ல அந்த முன்னாள் போராளிகளையும் ஏமாற்றுவதாகவும் முடியும்.
எல்லோருகும் நியமனம் கொடுக்க முடியாது. எல்லோரும் நாடாளுமன்றம் போக முடியாது. இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ததேகூ க்கு ஆகக் கூடுதலாக 22 ஆசனமும் ஆகக் குறைந்த எண்ணிக்கை 14 ஆகவும் கிடைக்க வாய்ப்புள்ளது. ததேகூ க்கு தேசியப் பட்டியலில் இரண்டு இடம் கிடைத்தால் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர வாய்ப்புள்ளது.
நாட்டின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் முன்னாள் போராளிகளது அர்ப்பணிப்பு அளப்பரியது. ஒரு சுதந்திரமான நாட்டை உருவாக்க அவர்கள் செய்த தியாகம் ஒப்புவுவமை அற்றது. ஈடிணையற்றது. ஆனால் அந்தத் தியாகம் நாடாளுமன்றம் போக அல்ல என்பதை டெனீஸ்வரன் மறக்கக் கூடாது. அப்படி நினைத்தால் விடுதலைப் போராட்டத்தில் மடிந்து போன மாவீரர்கள் சரி, இப்போதுள்ள முன்னாள் போராளிகள் சரி இருசாராரையும் கொச்சைப் படுத்துவதாகும். கேவலப்படுத்தாகும். மலினப்படுத்துவதாகும்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் “எமது பகுதிகளில் சமய ரீதியாக பிளவுபட்டுள்ளோம், பிரதேச ரீதியாகப் பிளவுபட்டு நிற்கின்றோம், பல்வேறு அரசியல் கட்சிகளுக்குப் பின் எமது மக்கள் பிளவுபட்டு நிற்கின்றனர். இவை அனைத்தையும் நாங்கள் ஒற்றுமைப்படுத்த வேண்டும்” என்று உபதேசம் செய்யும் முன்னாள் மாகாண சபையின் அமைச்சர் டெனீஸ்வரன் புதிதாக ஒரு கட்சியைப் பிரசவித்து தமிழ்மக்களது ஒற்றுமையை மேலும் சிதறடிக்க ஆசைப்படுகிறார்.
இது எப்படியிருக்கிறது என்றால் மதுவிலக்கு வேண்டும் என்று சொல்கிறவன் மது விற்பனை நிலையத்தை நடத்துவது போன்றது!
Leave a Reply
You must be logged in to post a comment.