அன்று பிரேமானந்தா… இன்று ராம் ரஹீம்… தொடரும் சேட்டை சாமியார்கள் மீதான சட்டத்தின் சாட்டையடிகள்!!
By Gajalakshmi |
August 28, 2017,
தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் மட்டுமல்ல தமிழகத்தில் ஆசிரமம் நடத்திய பிரேமானந்தாவும் பாலியல் புகாரில் சிக்கி இரண்டு ஆயுள் தண்டனை பெற்றார். சிர்சாவில் உள்ள தேரா சச்சா ஆசிரமத்தில் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக எழுந்த புகாரில் 14 ஆண்டு விசாரணைக்குப் பின்னர் அந்த தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரமம் நடத்தும் சாமியார்கள் பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்குவதில் ராம் ரஹீம் போல தமிழகத்திலும் ஒரு முன் உதாரணம் இருக்கிறது. அவர் தான் மறைந்த பிரேமானந்தா. பிரேம்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட சுவாமி பிரேமானந்தா இலங்கையின் மாத்தளையைச் சேர்ந்தவர். சித்து வேலைகளில் சிறப்பாக இருந்த பிரேமானந்தா, 1989ல் தமிழகம் வந்து திருச்சியில் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். வாயில் இருந்து திருநீறு கொட்டுவது, சிவலிங்கம் வரவழைப்பது, அந்தரத்தில் கையை அசைத்து திருநீறு, குங்குமம், சந்தனத் தூள், ருத்திராட்சக் கொட்டை போன்றவற்றை வரவழைப்பது போன்ற சித்து வேலைகளை அதிசயமாகச் செய்து காட்டியதால் பிரேமானந்தாவுக்கு அதிக மவுசு ஏற்பட்டது.
லீலை சாமியார் பிரேமானந்தா மக்களிடையே பிரபலமான இவரது ஆசிரமத்திற்கு சொத்துகள் சேர ஆரம்பித்தன. இதனையடுத்து திருச்சி பாத்திமா நகரில் 150 ஏக்கரில் தனது ஆசிரமத்தை விஸ்திகரீத்தார். அநாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து இந்த ஆசிரமம் நடத்தப்பட்டது,1993 இறுதி வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஆச்சிரமத்துக்குள், சுவாமியின் குடிலுக்குள் இடம்பெறும் பயங்கரங்கள் பற்றி செய்தி கசியத் தொடங்கியபோதுதான் நிலைமை விபரீதமாயிற்று.
வரிந்து கட்டி எழுதிய பத்திரிக்கைகள்
சில சிறுமிகள் ஆச்சிரமத்தை விட்டுத் தப்பி வந்து போலுசாரிடம் புகார் அளித்தனர். அப்போதுதான் தோண்டத் தோண்ட பல பூதங்கள் கிளம்பின. குற்றம் நிரூபனம் நீதிமன்ற அனுமதியுடன் பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. அந்த விஷயத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு பிரேமானந்தா தான் காரணம் என்பது நிரூபனமானது. சிறுமிகளுக்கு நடந்த பாலியல் கொடூரங்களை தட்டிக் கேட்ட ரவி என்ற ஆசிரம உதவியாளர் கொல்லப்பட்டு ஆசிரமத்திற்குள்ளாகவே புதைக்கப்பட்டார். இரட்டை ஆயுள் தண்டனை விசாரணை, ஆதாரங்களின் அடிப்படையில் 1997ம் ஆண்டு சுவாமி பிரேமானந்தாவுக்கும் அவரது உதவியாளர்கள் 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரேமானந்தா செய்த மேன்முறையீடு 2002ல் ஹைகோர்ட்டால் நிராகரிக்கப்பட்டு அவருக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டது.
தனது தண்டனை காலத்திலேயே 2011ம் ஆண்டு தனது 59 ஆவது வயதில் மஞ்சள்காமாலை நோய் காரணமாக சிகிச்சை பலனின்றி பிரேமானந்தா காலமானார்.
காலம் திரும்புகிறது
தமிழக பிரேமானந்தா போல மன்மத லீலைகளில் ஈடுபட்ட மாடர்ன் சாமியார் ராம் ரஹீமிற்கு நீதிமன்றம் சாட்டையடி தீர்ப்பை அளித்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு சாமியார் வழக்கில் நீதிமன்றம் தனது கடுமையான தண்டனை அளித்து நீதியை நிலை நாட்டியுள்ளது.
இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தா
அவர் பத்திரிகையில் தந்த விளக்கம்.
உங்களது ஆசிரமத்தில் பணிபுரிந்த ஓர் இளம் பெண்ணையே கற்பழித்தீர்கள். அதனை நேரடியாகப் பார்த்துவிட்ட ஒரு இன்ஜினீயரை கொலை செய்தீர்கள்… என்கிற புகார்களுக்காகத்தானே உங்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை?.
“அந்தப் பெண் கைக்குழந்தையா இருக்கும்போதே அவளை குளிப்பாட்டி, ஜட்டி போட்டுவிட்டு பெற்ற மகளைப் போல வளர்த்தேன். அந்தப் பெண்ணை எப்படி நான் கற்பழிக்க முடியும்? நான் என்ன மிருகமா? எனக்கு அப்படியொரு ஆசையிருந்தா, என்னிடம் இருந்த பணத்திற்கு அழகான பெண்களோடு இருந்திருப்பேன். காதல் வயப்பட முதலில் அந்தப் பெண் ஓரளவு அழகாக இருக்கவேண்டும். நான் கற்பழித்ததாகக் கூறப்பட்ட பெண் அப்படி இல்லை. தவிர, இன்றும் அந்தப் பெண் எனது ஆசிரமத்தில்தான் தங்கியிருக்கிறார். நான் கற்பழித்ததை நேரில் பார்த்த சாட்சியான நந்தகுமார் என்ற இன்ஜினீயரை கொலை செய்ததாக ஒரு வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் பதிவு செய்தனர். ஆனால் உண்மையில் நந்தகுமார் இன்ஜினீயரே அல்ல. ப்ளஸ் டூ வரை படித்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அவர். தன்னைத்தானே எதையாவது எடுத்து தாக்கிக் கொள்வது அவரது வழக்கம். அப்படிப்பட்டவரை நான் முழங்காலுக்குக் கீழே பிரம்பால் அடித்ததாகவும், அதனால் அவர் இறந்ததாகவும் சார்ஜ் ஷீட் போட்டுள்ளனர். எனவே, இதெல்லாம் எனக்கு எதிரான சதி.’’
உங்களுக்கு எதிராக அப்படி சதி செய்தவர்கள் யார்?
“அப்படிக் கேளுங்க! திருச்சி ஆசிரமத்திற்கு அருகில் இருந்த நிலத்தை எல்லாம் வாங்கிப்போட்டு ஆசிரமத்தை விரிவுபடுத்தினேன். அந்த இடத்தை சசிகலா கேட்டதாகவும், நான் தர மறுத்ததால்தான் இப்படி பழிவாங்கப்பட்டதாகவும் ஊரே பேசிக்கொண்டது. பத்திரிகைகளில் என்னைப் பற்றி வந்த செய்தியின் அடிப்படையில் மாதர் சங்கத்தினர் எனக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அன்றைக்கு ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள என்னைக் கைது செய்து உள்ளே போட்டுவிட்டார். கலைஞரும் ஆட்சியை காப்பாத்திக்கிறதுக்காக என்னை வெளியே விட மறுத்துவிட்டார்.
தவிர, ஆன்மிகரீதியான சதிகளும் இருக்கு. எனது ஆன்மிகப் பயணத்தினால் உலக நாடுகளில் இந்து மதத்தைத் தழுவியவர்கள் பலர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த மார்க்ப்ளண்ட் கிறிஸ்ட் என்பவர் எனது ஆசிரமத்தில் இருந்த அம்பிகானந்தா என்பவரை எப்படியோ வளைத்துப்போட்டு, என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டார். இது எனக்கு எதிரான சதி மட்டுமல்ல, இந்து ஆன்மிகவாதிகளுக்கு எதிரான சதியாகும்.’’
மதத்தையும் இதில் நுழைக்கிறீர்களே?
“ஆமாம். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் ஜோசப் என்கிற பாதிரியார் எனக்குப் பிறகு செக்ஸ் மற்றும் கொலை வழக்கில் கைதானவர்தான். எப்பவோ அவர் ஜாமீனில் விடுதலையாகிவிட்டார். ஆனால் சங்கராச்சாரியாரை என்ன பாடு படுத்திவிட்டார்கள்.
உங்களுடன் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திவ்யா என்ன ஆனார்?
“திவ்யாவை எனது மனைவி என்று பத்திரிகைகளில் எழுதிவிட்டார்கள். உண்மையில் அவர் என் உடன்பிறந்த சகோதரி. இப்படி உறவுகளையே கொச்சைப்படுத்தி எழுதியதால், அவர் அமெரிக்காவுக்குச் சென்று விட்டார். இனி இந்த மண்ணில் கால் பதிப்பதில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.’’
சரி… எப்படித்தான் இப்படி காவி உடைக்கு மாறினீர்கள் என்கிற கதையையும் சொல்லிவிடுங்களேன்?
“என் தந்தை பிறந்து வளர்ந்தது இந்தியாதான். பிழைப்புக்காக அவர் இலங்கை சென்றார். நான் இலங்கையில்தான் பிறந்தேன். கள்ளர் இனத்தைச் சேர்ந்தவன். பதினேழு வயது வரை மாமிசம் சாப்பிட்டு வளர்ந்தவன்தான் நான். சிறுவயதில் இருந்தே ஒருவரின் முகத்தைக் கண்டு, ‘உனக்கு இன்ன பிரச்னை, அடுத்து இப்படி நடக்கப் போகிறது’ என்று சொல்வேன். அது அப்படியே நடக்கும். சிறு வயதிலேயே விபூதி, பூமாலை போன்றவற்றை வரவழைத்து சித்துவேலை காட்டுவேன். இந்த விஷயம் பரவியதால் என்னிடம் பலரும் அருள்வாக்கு கேட்கத் தொடங்கினர். இப்படித்தான் வெறும் பிரேம்குமாராக இருந்த நான் பிரேமானந்தாவாக காவி உடைக்குள் வந்தேன்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, துறவு வாழ்க்கைக்கு மாறி இலங்கையின் பல பகுதிகளிலும் 29 ஆசிரமங்களை நிறுவினேன். அங்கு பவுத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் கூட எனது அருள் வாக்கு கேட்டு இந்து சிங்களவர்களாக மாறினர். இதனால் 1983ல் தமிழர் சிங்களர் போரின்போது சிங்கள ராணுவம் எனது ஆசிரமங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியது. ஒரு முறை ராணுவ குண்டுவீச்சில் எனது ஒரு ஆசிரமம் தீப்பிடித்ததால், அங்கிருந்த குழந்தைகளை காப்பாற்றிக் கொண்டு எனது பக்தரான கலெக்டர் ஒருவர் உதவியுடன் இந்தியா வந்தேன்.
பிறகு ஆறு மாத காலம் சென்னையில் இருந்தேன். அப்போது இலங்கைத் தமிழர் ஒருவர் மூலம் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்தேன். அவர்தான் எனக்கு திருச்சியில் இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்து ஆசிரமம் அமைக்க உதவினார். அதில் ஆசிரமம் அமைத்து இலங்கைப் போரில் பெற்றோரை இழந்து தவித்த ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து வந்தேன். பத்து ஆண்டு காலம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்திற்குக்கூட நான் சென்று இருந்தேன். என்னிடம் அருள்வாக்கு கேட்காத முக்கியப் பிரமுகர்களே இங்கு கிடையாது.’’

Leave a Reply
You must be logged in to post a comment.