தமிழ்மக்கள் ஒற்றுமையாய்,  ஒரேயணியில்,   சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும்! மண்குதிரைகளை நம்பக் கூடாது! 

தமிழ்மக்கள் ஒற்றுமையாய்,  ஒரேயணியில்,   சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும்! மண்குதிரைகளை நம்பக் கூடாது! 

நக்கீரன்

டிப்பது தேவாராம் இடிப்பது சிவன் கோயில் என்ற கதையாக விக்னேஸ்வரன், பிறேமச்சந்திரன் போன்ற அரசியல்வாதிகள் ஒற்றுமை பற்றி ஊருக்கு உபதேசம் செய்கிறார்கள். ஆனால் ஒற்றுமை பற்றிப் பேசுகிற விக்னேஸ்வரன் புதிய கட்சிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அதன் காரணமாக தமிழ்மக்களை கூறுபோட்டுத்  தென்னிலங்கை சிங்கள – பவுத்த பேரினவாதிகளது ஆசையை நிறைவேற்றுகிறார்.

முதலில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் இணைத்தலைவராகவும் இருக்கிறார். அது அரசியல் கட்சி அல்ல அதுவொரு சிவில் சமூக அமைப்பு என்று சொன்னார். ஆனால் அதில் அரசியல் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதன் தலைவர்கள் இருந்தார்கள். கஜேந்திரகுமார், பிறேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், சித்தார்த்தன் போன்றவர்கள் சமூகவாதிகள் அல்லர். அசல் அரசியல்வாதிகள்!

இந்தத் தமிழ் மக்கள் பேரவை ஒக்தோபர் 24,  2018 ஆம் திகதி தமிழ் மக்கள் கூட்டணியாக பரிணாம வளர்ச்சி அடைந்தது. அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் ஆகத் தன்னைத்தானே விக்னேஸ்வரன் அறிவித்தார். ஏனைய பதவிகள் கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் முறையாக முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு நிரப்பப்படும் என்றும் சொன்னார். இப்போது 16 மாதங்கள் கழிந்தும் ஆண்டுக் கூட்டம் கூட்டப்படவில்லை. பதவிகளும் நிரப்பப்படவில்லை. காரணம் ஆட்பஞ்சம்.

இந்த இலட்சணத்தில் விக்னேஸ்வரன் மேலும் ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கிறார். அதற்கும் சாட்சாத் விக்னேஸ்வரனே தலைவர்!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் இடம்பெற்ற நான்கு கட்சிகளில் மூன்று கட்சிகள் முந்தநாள் பெய்த மழைக்கு நேற்று முளைத்த காளான்கள்!

ஒக்தோபர் 21, 2018  அன்று தோற்றம் பெற்ற  ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தொடக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை எண்ணி 22 பேர்தான். விக்னேஸ்வரனைப் பின்பற்றி  அனந்தியும் தன்னைத்தானே அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமாக அறிவித்தார். தலைவர் யார், பொருளாளர் யார், செயல் குழுவில் யார் யார் என்பது சிதம்பர இரகசியமாக இருக்கிறது. விக்னேஸ்வரன் கட்சி போல இந்தக் கட்சிக்கும் ஆட் பஞ்சம் போலும். அந்தக் கட்சியின் தொடக்கக் கூட்டத்துக்குப் பின்னர் அது எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை. ஆட்கள் இருந்தால் அல்லவா கூட்டத்தைக் கூட்டுவதற்கு? எல்லாம்  புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கண்றாவிக் கதைதான்.

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் சிதைந்து போயுள்ளதால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமுள்ள தமிழ் தேசிய உணர்வாளர்கள் தமது தமிழ் தேசிய உணர்வை அடைவதற்காக பல்வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளார்கள். இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டிய அத்தியாவசியம் இந்தக் காலகட்டத்தில் எழுந்துள்ளது. இந்தக் கடமைப் பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்திற்கு அனைவரின் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்என அனந்தி தனது  கழகத்தின் கொள்கைப் பிரகடன உரையின் போது  தெரிவித்தார். எல்லாம் பேச்சுப் பல்லக்கு அக்கா கால்நடை என்ற கதைதான். அவரது வேண்டுகோளுக்கு ஒரு காக்காய் கூட செவி சாய்க்கவில்லை. சிலருக்குத்  தங்கள் உயரம் தெரியாமல் இருக்கிறது!

சென்ற மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்துக்கு வழக்கம் போல இந்த ஆண்டும்  அனந்தி போயிருந்தார். ஆனால் அரச சார்பற்ற நிறுவனங்கள் நடத்தும் கூட்டத்தில் பேச  அவரை அழைத்தவர்கள் அவரைப் பேச விடவில்லை. அவரை வழக்கமாக வரவேற்று உபசரிப்பவர் பெயர் பிரான்ஸ் நாட்டு போஸ் என்பவர். அவர் இம்முறை ஜெனீவா பக்கம் தலைகாட்டவில்லை. அனந்தி அவர்களைத் திட்டித் தீர்த்துவிட்டு நாடு திரும்பி விட்டார். நாட்டில் இருந்து புறப்படு முன்னர்  தன்னைச் சந்தித்துத்  தங்கள் சிக்கல்களைச் சொன்னவர்களுக்கு அவற்றையிட்டு தான் ஐநாமஉ பேரவையில் பேசித் தீர்த்துவைப்பதாக அனந்தி சொல்லிவிட்டு  வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு காளான் கட்சி தமிழ்த் தேசியக் கட்சி.  சிறிகந்தா – சிவாஜிலிங்கம் இரட்டையர்கள்தான் இந்தக் கட்சியைத் தொடக்கியுள்ளார்கள். இப்படி இவர்கள் ரெலோ கட்சியில் இருந்து பிரிந்து தனிக் கட்சி உருவாக்கியிருப்பது இது  மூன்றாவது முறையாகும்.  இந்தக் கட்சிக்கு ஒரு பெயர்ப்பலகை மட்டும் உண்டு. உறுப்பினர்களோ கிளைகளோ கிடையாது. ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டித் தாங்கள் இருப்பதை அவ்வப்போது வெளியுலகிற்குக் காட்டிக் கொள்கிறார்கள்.

இந்தக் காளான் கட்சிகளுக்குள் ஒரு பொது ஒற்றுமையுண்டு. இபிஆர்எல்எவ் கட்சி நீங்கலாக மற்றக் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்வதற்கான காலமும் கடந்துவிட்டது. இதனால் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி,  இபிஆர்எல்எவ் கட்சியில் போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. பிறேமச்சந்திரன் தனது கட்சியின் பெயரை  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்று மாற்றிவிட்டார்.

இந்தக் கட்சிகளிடம் காணப்படும் மேலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் அவை யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள்ளே குதிரை ஓட்டுகின்றன!  இந்தக் கட்சிகள்  ஆனையிறவைத் தாண்டியதில்லை. ஆக மிஞ்சினால் கிளிநொச்சி வரை.  

தமிழ்த் தேசியயக் கூட்டமைப்பில் தமிழ் அரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது என்பது பிறேமச்சந்திரன், விக்னேஸ்வரன் போன்றோரது குற்றச்சாட்டாகும். விக்னேஸ்வரன் தோற்றுவித்துள்ள தமிழ்  மக்கள் தேசியக் கூட்டணியின் இலட்சணம் என்ன? விக்னேஸ்வரன்  யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் 10  வேட்பாளர்களில் பேரை தனது கட்சிக்கு ஒதுக்கினார். இபிஎல்ஆர்எவ் 2 பேர், அனந்தி மற்றும் சிவாஜிலிங்கத்துக்கு தலா ஒருவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சனநாயகம் இல்லை என்று ஒப்பாரி வைக்கும் இவர்கள் ஏன் 10 இடங்களை சரி சமமாகப் பிரிக்கவில்லை?  விக்னேஸ்வரனது தமிழ் மக்கள் கூட்டணி என்ன ஆனை, சேனை, அணிதேர் புரவிகள் கொண்ட கட்சியா? 

தான் போக வழியில்லை சுண்டெலி விளக்குமாற்றையும் இழுத்துக் கொண்டு போனதாம். விக்னேஸ்வரன் தான் நாடாளுமன்றம் போனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு  ஒத்துழைப்பாராம். அப்படியென்றால் ஏன் இப்போது ஒத்துழைக்க மறுக்கிறார்?

தமிழ் அரசுக் கட்சி கஜேந்திரகுமாரின் தமிழ்க் காங்கிரஸ் கட்சி போல ஒரு குடும்ப அரசியல் கட்சியல்ல. தனிமனிர்களில் தங்கியிருக்கும் கட்சியல்ல. ஏனைய கட்சிகள் போல் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் குதிரை ஓட்டுகிற கட்சியும் அல்ல. வட கிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் ஆல்போல் தளைத்து அறுகு போல் வேரோடி கிளை பரப்பி  நிற்கும் கட்சியாகும்.

விக்னேஸ்வரனது கட்சி மற்றும்  கூட்டணி அவர் இருக்கும் மட்டும்தான். தேர்தலில் தோற்றவுடன்  கொழும்புக்கு அடுத்த விமானத்தில் அவர் பறந்து விடுவார்!

கொள்கை, கோட்பாட்டைப் பொறுத்த மட்டில் தமிழ் அரசுக் கட்சிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இடையில் வேறுபாடில்லை. தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என்பதே தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை, கோட்பாடு, இலக்கு ஆகும். இதனைத்தான் ஏனைய கட்சிகளும் கேட்கின்றன. எந்தவொரு கட்சியும் தமிழீழம் கேட்கவில்லை. நாட்டைப் பிரிக்க வேண்டும் என்றும் கேட்கவில்லை.

தமிழர் தரப்பு ஆளுக்கொரு கட்சி தொடங்கினால் அதனால் தமிழ்மக்களது அரசியல் பலம் குறையும். மாடுகள் ஒன்றாக நின்ற போது சிங்கத்தால் அவற்றைப் பிடித்துச்  சாப்பிட முடியவில்லை. தனித்தனியாகப் பிரிந்து நின்ற போது சிங்கம் அவற்றை ஒவ்வொன்றாகப் பிடித்துச் சாப்பிட்டுப் பசியாறியது.

முன்னாள் மட்டக்களப்புத் தேர்தல் மாவட்ட நா.உறுப்பினர் அரியநேத்திரன் வடக்கு – கிழக்குத் தமிழ் மக்கள்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் ஆதரிப்பதே ஒரே வழி எனக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் சரியானவர்களைத் தெரிவு செய்து தமிழர்களின் இருப்பை நிரூபியுங்கள் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு – கிழக்கில் இன்று பல்வேறு கட்சிகளும் சுயேட்சைகளும்  சூழ்ச்சிகள் மூலமாகத் தமிழ் மக்களின் வாக்குகளைப்  பிரிப்பதற்காக களமிறக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நா.உறுப்பினர் சிறிநேசன் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு  சனநாகப் போராளிகள் கட்சி சேர்ந்து அரசியல் செய்ய முன்வந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில், வடக்கு – கிழக்கு இணைந்த தாயகப் பகுதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வெற்றிக்காக உழைக்கும் என அந்தக் கட்சியின் செயலாளர் இ. கதிர்  தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு – கைவேலிப் பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். கிழக்கு மாகாண சனநாயக போராளிக் கட்சி உறுப்பினர்கள் தமிழ் அரசுக் கட்சிப் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் அவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்கள்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடனான தனது செயற்பாடுகளை தனிப்பட்ட நலன்கருதி தாம் நிறுத்தியுள்ளதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் முக்கியஸ்தர் இரா.துரைரத்தினம் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில்  அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்கிழக்கில் வாக்குகள் பிரிபடக்கூடாது என்பதற்காக கடந்த காலத்தில் மாகாணசபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்பட்டேன். எனவே  எதிர்காலத்திலும் நாடாளுமன்றம், மாகாணசபை, உள்ளுராட்சி தேர்தல்களிலும் ஏனைய பொதுவான விடயங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பங்குதாரர்களாக என்னையும் ஒரு குழுவாக இணைத்துக் கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கோரியுள்ளேன்எனக் கூறியுள்ளார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழரசுக் கட்சிக்குள்ளும் சிறு சிறு முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் அது மூலோபாயக் கொள்கை, கோட்பாடு, இலக்குத் தொடர்பானவை அல்ல. அவை உத்திகளில், அணுகுமுறையில் எழுகின்ற  வேறுபாடுகள். அப்படியான வேறுபாடுகள் உட்கட்சி சனநாயகத்துக்கு நல்லது. ஆனால் பேசி, அலசி ஆராய்ந்து ஒரு முடிவை எட்டிய  பின்னர் எல்லோரும் ஒரே நேர்க் கோட்டில் நிற்க வேண்டும். நிற்கிறார்கள்.

எதிர்வரும் தேர்தலில் மகிந்த இராசபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுசன முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்குக் கங்கணம் கட்டி நிற்கிறது. 19ஏ சட்ட திருத்தத்தை இல்லாது ஆக்கி மீண்டும் ஊழல் நிறைந்த  ஒரு சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுவருவதே அவர்களது நோக்கம் ஆகும்.

13ஏ இல் கூட மகிந்த இராசபக்ச கை வைக்கலாம். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு 13 ஏ தடையாக இருக்கிறது என கோத்தாபய இராசபக்ச பகிரங்கமாகக் கூறிவருகிறார். முன்னொரு முறை அதனை முற்றாக நீக்கிவிட முயற்சி மேற்கொள்ளப்பட்டது நினைவிருக்கலாம்.

எதிரி எம்மைத் துண்டு துண்டாக வெட்டிப் பிரித்தாள நினைக்கிறான். அதற்கு எங்களில் சிலர் பலியாகியுள்ளார்கள். ஆனால் இதற்கு  ஒரு துளி கூட தமிழ் மக்கள் இடம் கொடுக்கக் கூடாது.  காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு ஓடி வரும் சிங்கள – பவுத்த பேரினவாதத்துக்கு அணைபோட தமிழ் மக்களது ஒற்றுமையே ஒரே வழி!

தமிழ்மக்கள் ஒற்றுமையாய்ஒரேயணியில்,   சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும்! மண்குதிரைகளை நம்பக் கூடாது! 

தமிழ்மக்கள் ஒற்றுமையாய், ஒரேயணியில், சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும்! மண்குதிரைகளை நம்பக் கூடாது!


About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply