சர்வதேச விசாரணை முடிந்ததா? முடியவில்லையா?
நக்கீரன்
சர்வதேச விசாரணை முடிந்ததா? முடியவில்லையா? என்ற கேள்வி அரசியல் பொதுவெளியில் சர்ச்சைக்கு உள்ளாகி வரும் கேள்வியாகும்.
சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ம.ஆ. சுமந்திரன் அவர்களது நிலைப்பாடு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் அதுதான்.
இல்லை, சர்வதேச விசாரணை முடியவில்லை. இனிமேல்த்தான் அது நடைபெற வேண்டும் என்பது விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் போன்றவர்களது கருத்தாகும்.
இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 01 ஒக்தோபர் 2015 அன்று நிறைவேறிய தீர்மானம் 30-1 இன் படியை ஜெனீவா தெருக்களில் போட்டு எரித்தவர்கள். தீர்மானத்தால் ‘ஒரு பிரயோஜனமும் இல்லை’. ‘‘இதில் சமஷ்டி இல்லை”, “வடகிழக்கு இணைப்பில்லை”, “தமிழ் என்ற வார்த்தைகூட இல்லை” என்று சொன்ன கஜேந்திரகுமாரை ஆமோதிப்பவர்கள்.
தீர்மானத்தை தெருவில் போட்டு எரித்தவர்கள், அமெரிக்க நாட்டின் தேசியக் கொடியையும் விட்டு வைக்கவில்லை. அதனையும் தெருக்களில் போட்டு எரித்தார்கள்.
இதனைப் பார்த்த ஐ.நாவுக்கான அமெரிக்க நாட்டுத் தூதுவர்கள் குழம்பிப் போனார்கள்.
“அமெரிக்கா முன்மொழிந்துள்ள இந்தத் தீர்மானத்தை சிங்களவர்கள் எதிர்க்கிறார்கள். இப்போது நீங்களும் (தமிழர்களும்) எதிர்க்கிறீர்கள். தீர்மானத்தைக் கொளுத்துகிறீர்கள். எங்களது நாட்டுத் தேசியக் கொடியையும் எரிக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது நாங்கள் ஏன் உங்களது பிணக்கில் தலையிட வேண்டும்?” எனச் சுமந்திரனைப் பார்த்துக் கேட்டார்கள்.
“உங்களது ஆதங்கம் எனக்குப் புரிகிறது. இப்படித் தீர்மானத்தையும் அமெரிக்கக் கொடியையும் எரிப்பவர்கள் தீவிர தமிழ்த் தேசியவாதிகள். அப்படித் தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள். எண்ணிக்கையில் அவர்கள் சிறுபான்மை. பெரும்பான்மைத் தமிழர்களை நாங்கள்தான் (ததேகூ) பிரநித்துவப் படுத்துகிறோம். எனவே நீங்கள் அவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை” என சுமந்திரன் அவர்களை ஆற்றுப்படுத்தினார்.
ஜெனீவாவில் தீர்மானத்தை எரித்தவர்கள், அமெரிக்க தேசியக் கொடிகளை எதிர்த்தவர்கள்தான் இப்போது “சர்வதேச விசாரணை நடைபெறவில்லை” எனக் கூரையேறிக் கொக்கரிக்கிறார்கள். கூச்சல் இடுகிறார்கள்.
வாயாலே வடை சுடும் சிவாஜிலிங்கம் சர்வதேச விசாரணை நடைபெறவில்லை என அறிக்கை விடுகிறார். அவரை பெருந்தன்மையோடு மன்னித்துவிடலாம். அவரது கட்சிக்காரர்களே அவர் ஒரு கோமாளி என்று வருணித்தவர்கள். ஆனால் நீதியரசன் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், பிறேமச்சந்திரன் போன்றோருக்கும் விடயம் விளங்கவில்லையா? இந்த விடயத்தை வைத்து அவர்கள் அரசியல் குளிர்காய நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? தமிழ்மக்களை ஏய்க்க எத்தனிப்பது அறமா?
தேர்தல் நெருங்க, நெருங்க அவர்களது கூச்சல் இன்னும் பல மடங்கு கூடும் என எதிர்பார்க்கலாம்.
ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவும், ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகமும் இதுவரை நடாத்திய விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இலங்கை இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா அரசு பயணத் தடை விதித்திருக்கிறது.
சர்வதேச விசாரணை ஒன்றல்ல இரண்டு நடந்து முடிந்து விட்டது. அவற்றின் அடிப்படையில்தான் தீர்மானம் 30-1 ஒக்தோபர் 01, 2015 இல் ஒருமனதாக நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து தீர்மானம் 40 -1 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்படடது. அதற்கு ஸ்ரீ லங்கா உட்பட 46 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன! அந்தத் தீர்மானம் என்ன சொல்கிறது என்றால், 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30-1 முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். அது தொடர்பான முன்னேற்றம் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் ஓர் எழுத்து மூலமான அறிக்கையை மனித உரிமை பேரவையின் 43 ஆவது அமர்விலும் (2020) அதனைத் தொடர்ந்து ஒரு முழுமையான அறிக்கையை 46 ஆவது அமர்வில் (2021) சமர்ப்பிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து பேரவையின் 30-1 தீர்மானம் நடைமுறைப் படுத்தப்பட்டமையையிட்டு ஒரு கலந்துரையாடல் இடம் பெறும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் ஸ்ரீ லங்காவுக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றி வந்துள்ளது. அதில் 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானம் மிக முக்கியமானது. அதில் அதிகாரப் பரவலாக்கல், பாதுகாப்புப் படைகளை சீரமைத்தல், முப்படை வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல், இறுதிப் போரில் ஸ்ரீலங்கா படையினரும் விடுதலைப் புலிகளும் இழைத்த போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஒரு கலப்பு விசாரணை செய்ய வேண்டும் என்பவை அடங்கலாக 25 விடயங்கள் வரிசைப்படுத்தப் பட்டிருக்கிறது. தீர்மானம் 30-1 இல் சிலவற்றை இரணில் அரசு நடைமுறைப்படுத்தியிருக்கிறது. சிலவற்றை அரையும் குறையுமாக – பாதிக் கிணறு தாண்டியவன் மாதிரி – செய்து முடித்திருக்கிறது. எடுத்துக் காட்டு வலிந்து காணாமல் போனோரை கண்டறியும் ஆணையம் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆணையம். அரசியல் பரவலாக்கல் பற்றி எடுத்த முயற்சி பாதியில் நின்றுவிட்டது.
கலப்பு போர்க்குற்ற விசாரணையை நடைமுறைப்படுத்த மாட்டோம் என முன்னாள் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன 2019 மார்ச் மாதம் ஐநாமஉ பேரவையில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்! இன்றைய வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவும் அவரை மேற்கோள் காட்டி கலப்பு போர்க்குற்ற விசாரணையில் இருந்து பின்வாங்கியுள்ளார். அது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கிறது, அரசியலமைப்பை மீறுகிறது என வாதாடியுள்ளார்.
கடந்த பெப்ரவரி 27, 2020 இல் ஐநாமஉ பேரவையில் பேசிய அமைச்சர் குணுவர்த்தனா “நல்லாட்சிக் காலத்தில் ஐ.நாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 30/1 உட்பட பொறுப்புகூறுகின்ற தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுகிறது. எனினும், ஐ.நாவுடன் தொடர்ந்தும் நல்லுறவுடன் செயற்படுவோம். குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அரசியலமைப்பு கட்டமைப்புக்குள் செயற்படுத்தப்பட முடியாது. மேலும் மக்களின் இறையாண்மையை மீறும் செயற்பாடு. கடந்த அரசாங்கம் அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறியது. குறிப்பாக இந்த ஜெனிவா தீர்மானத்துக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுமில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் அதனைக் காண்பிக்கவில்லை” என்றார்.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பு மற்றும் மனித உரிமைகள் ஊக்குவித்தல்’ மார்ச் 2019 தீர்மானம் 40/1 க்கு வழங்கிய அனுசரணையிலிருந்து சிறிலங்கா விலகிக் கொள்கிறது என்ற முடிவை அறிவிக்க விரும்புகிறது. அதற்கு முந்தைய தீர்மானங்கள் 30 – 1 (ஒக்ரோபர், 2015) மற்றும் 34-1 (மார்ச் 2017 ) உள்ளடக்குகின்றன.
அதாவது சிறிலங்கா அரசு தீர்மானங்கள் 30-1 மற்றும் 40-1 இல் இருந்து பின்வாங்கவில்லை. அந்தத் தீர்மானத்துக்கு வழங்கிய அனுசரணையில் இருந்துதான் சிறிலங்கா அரசு பின்வாங்கியிருக்கிறது. அது ஐ.நா மற்றும் அதன் துணை அமைப்புக்களுடன், வழக்கமான மனித உரிமை ஆணையகங்கள் /அமைப்புகள் மற்றும் பொறிமுறைகள் உட்பட, உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கும் தேவைக்கும் ஏற்ப, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உதவியை நாடிப் பெற்றுக் கொள்ளும். (https://www.mfa.gov.lk/tam/statement-by-foreign-minister-dinesh-gunawardena-in-parliament-on-unhrc-resolution-301-on-20-february-2020/)
இந்தப் பின்னணியில் ‘காலைக்கதிர்’ மின் இதழில் மார்ச்சு 6 ஆம் நாள் “சர்வதேச விசாரணை முடிந்ததா?“ என்ற தலைப்பில் வெளிவந்த ஆசிரிய தலையங்கத்தைக் கீழே மறு பிரசுரம் செய்துள்ளோம்.
இந்தத் தலையங்கத்தில் சர்வதேச விசாரணை முடிந்ததா? முடியவில்லையா? என்ற கேள்விக்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச விசாரணை ஒன்றல்ல இரண்டு முடிந்துவிட்டன என்பதே ‘காலைக்கதிர்’ ஆசிரிய தலையங்கத்தின் மையக் கருத்தும் முடிவும் ஆகும். சர்வதேச விசாரணை முடிந்ததா? என்ற கேள்விக்கு சுருக்கமாகவும் இறுக்கமாகவும் விளக்கமாவும் ஆசிரியர் பதில் அளித்துள்ளார்.
‘காலைக்கதிர்’ ஆசிரியர் ஒன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் அல்ல. அவ்வப்போது ததேகூ யை கடுமையாக விமர்ச்சித்து வருபவர். ததேகூ எதனையும் சாதிக்கவில்லை எனச் சாதிப்பவர். ததேகூ இன் தலைவர்களை அதைவிடக் கடுமையாக விமர்ச்சிப்பவர். இரா.சம்பந்தன், சுமந்திரன், சேனாதிசாரா போன்றோர் அவரது விமர்ச்சனத்துக்கு உள்ளாக்கி வருபவர்கள். தனது நிலைப்பாடு நடுநிலை என்று கூறிக் கொண்டாலும் “சர்வதுச விசாரணை முடியவில்லை” என வாதிடுபவர்களது அறிக்கைகள், செய்திகள் போன்றவற்றுக்கு முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் முன்பக்கத்தில் முக்கியத்துவம் கொடுத்து வருபவர்.
எனவே ‘காலைக்கதிர்’ தலையங்கத்தை ஒருமுறைக்கு இரண்டுமுறை கவனமாகப் படித்து தெளிவுபெறுமாறு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறோம். மற்றவர்களோடும் இந்தத் தலையங்கத்தை பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
சர்வதேச விசாரணை முடிந்ததா?
தமிழர்களின் ஆயுதம் தாங்கிய உரிமைப் போராட்டம் – விடுதலை வேள்வி – ஸ்ரீலங்காப் படைகளின் மிக மூர்க்கத்தன மான – மிக மோசமான – கொடூர நடவடிக்கைகள் மூலம் முடிவுறுத்தப்பட்டது. அந்தக் கொடூரங்களும் குரூரங்களும், யுத்தக் குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான அட்டூழியங்களும் தமிழர் தம் ஆன்மாவில் மறக்க முடியாத வேதனை வடுக்கள். தமிழர் தம் வாழ்வியலில் உணர்வுபூர்வமான விட யங்கள்.
வரப்போகும் பொதுத் தேர்தலில் அந்த உணர்வுபூர்வ விடயத்தைக் கையில் எடுத்து உணர்ச்சியைத் தட்டி எழுப்பி, வாக்குகளை அறவிடும் தந்திரோபாயம் கட்டவிழும்; கட்டவிழ்கின்றது.
அதன் ஒரு பகுதியாகத்தான் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற யுத்தக் கொடூரங்கள், மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை முடிந்து விட்டதா, இல்லையா என்ற சர்ச்சையாகும்.
அந்த விசாரணை இன்னும் முடியவில்லை என்று, இவ் விடயங்களின் பெயரால் அடிக்கடி ஜெனீவா “விசிட்’ அடிக்கும் நமது “பயர்பிராண்ட்’ அரசியல்வாதி சிவாஜிலிங்கம் தன்பாட் டுக்கு ஒரு கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
இந்த விவகாரங்களில் அதிகம் சம்பந்தப்பட்டவரான கூட் டமைப்பின் பேச்சாளரான சுமந்திரனை அரசியல் ரீதியாகத் தாக்குவதற்கான துரும்பாக உணர்வுபூர்வமான இந்த விடயமே பொருத்தமானது என சில தரப்புகள் கருதுகின்றன. சிவாஜிலிங்கம் மாத்திரமல்லர், கஜேந்திரகுமார் பொன்னம் பலம், நீதியரசர் விக்னேஸ்வரன் போன்றோரும் இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றனர்.
உண்மையில் மேற்படி அட்டூழியங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை நடைபெற்று முடிந்து விட்டதா அல்லது இனிமேல் தான் நடக்க வேண்டுமா? இல்லையே நடந்து முடியாத ஒன்றை நடத்த விவகாரமாக சுமந்திரன் சப்பைக் கட்டுக் கட்டுகின்றாரா? எது உண்மை.
இதில் “விசாரணை’ என்று தமிழில் நாம் குறிப்பிடும் விடயம் எது என்பதுதான் கேள்வி. குழப்பத்துக்கும் சர்ச்சைக்கும் அதுதான் காரணம்.
குற்றச் சம்பவங்கள் தொடர்பில் நடைபெறும் Investigation வேறு, Inquiry அல்லது Trial என்பது வேறு.
Investigation என்பது புலனாய்வு.
Inquiry அல்லது Trial என்பது விசாரணை.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்கள் தொடர் பில் சர்வதேச புலனாய்வு முடிவடைந்து விட்டது என்பதுதான் சுமந்திரன் கூறவருவது.
Inquiry அல்லது Trial என்ற விசாரணை இனிமேல் தான் நடக்க வேண்டும்.
முதலாவது விடயம் புலனாய்வு என்பது குற்றமிழைத்த தரப்புக்குத் தெரியத் தக்கதாக, பகிரங்கமாக நடக்க வேண்டும் என்பதில்லை. குற்றம் புரிந்த தரப்புக்குத் தெரியாமலேயே – அறிவிக்காமலேயே – புலன் விசாரணை நடக்கும். இலங்கை விவகாரத்தில் நடந்துள்ளது.
இரண்டு மட்டங்களில் நடந்து, புலனாய்வு அறிக்கைகள் வெளிவந்து விட்டன.
ஒன்று – தருமஸ்மன் குழுவின் அறிக்கை. அது 2011 இல் வெளிவந்து விட்டது.
அடுத்தது ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் விசேட அதிகாரிகளை சர்வதேசப் பிரமுகர்கள் மூவரை நியமித்து அவர்கள் மூலம் நடத்திய சுயாதீன புலனாய்வு அறிக்கை. அது 2015 செப்ரெம்பரில் வெளிவந்தது.
இரண்டுமே யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றன என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளன. அவற்றின் அடிப்படையில்தான் இலங்கை இராணுவத் தளபதிக்கு எதிரான நுழைவு இசைவுக்கான தடை உத்தரவை அமெரிக்கா பிறப்பித்தது.
புலனாய்வில் குற்றமிழைத்தவர்களாகக் கண்டுபிடிக்கப் பட்டவர்களை பொறுப்புக் கூற வைக்கும் நீதி விசாரணைதான் – வழக்கு விசாரணைதான் – இனிமேல் பாக்கி.
குற்றமிழைத்தவர்கள் என சந்தேகிக்கப்படும் பிரகிருதிகளை அந்த விசாரணையின் முன் நிறுத்தி சட்டத் தண்டனை வாங்கிக் கொடுக்கும் – கட்டிப் போடும் (Binding) – விடயத்தை முன்னெடுக்க வேண்டுமானால் அது வெறுமனே சர்வதேச விவகாரமாக அமைவதில் பயனில்லை. சம்பந்தப்பட்டடோரை சட்டரீதியாகக் கட்டி இழுத்து வந்து நிறுத்தக் கூடிய பொறுப்பில் இருப்போரையும் அந்த விவகாரத்தில் சம்பந்தப்படுத்த வேண் டும். அதனால்தான் சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுநர், புலனாய்வாளர்களுடன் இலங்கைத் தரப்பையும் சம்பந்தப் படுத்தி, அந்த நீதிப் பொறிமுறை விசாரணையை – பொறுப்புக் கூறும் நடைமுறையை – கலப்பு பொறிமுறை ஏற்பாடாக முன் னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.
சுயாதீனமாக – சுதந்திரமாக – நம்பகத்தன்மையுடையதாக இருப்பதற்காக புலனாய்வு நடவடிக்கை சர்வதேச ரீதியில் நடந்தது. இனி, தண்டனை வாங்கிக் கொடுக்கும் – பொறுப்புக் கூறலை நிலைநாட்டுவதன் மூலம் நீதியைப் பெற் றுக் கொடுக்கும் – நடவடிக்கை. குற்றமிழைத்த தரப்பை சம்பந்தப்படுத்துவதற்காக அதற்குக் கலப்புப் பொறிமுறை.
இந்த விடயம் தெளிவாகப் புரிந்தும்கூட, அரசியல் காரணங்களுக்காக புரியவில்லை என நடிப்பவர்களுக்கு இதைப் “புரியவைப்பது’ கஷ்டம்தான்.
சர்வதேச விசாரணை முடிந்ததா…….? சுமந்திரன் என்ன பிதற்றுகிறாரா….?
Leave a Reply
You must be logged in to post a comment.