நீச்சல் வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன்

நீச்சல் வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன்

ந.நகுலசிகாமணி

(நீச்சல் வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக பல மில்லியன் ரூபா செலவில் நீச்சல் தடாகம் நாளை திறப்பதை முன்னிட்டு வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்
வல்வெட்டித்துறை)

திரு.ஆனந்தன் அவர்கள் திரு.விவேகானந்தன், ராசரெத்தினம் தம்பதியினருக்கு மூத்த மகனாக 1943 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி வல்வைத் தீருவிலில் உள்ள அவர்களது வீட்டில் பிறந்தார். ஆனந்தன் சிவகுருவித்தியாசாலை, சிதம்பராக்கல்லூரி, ஹாட்லிக் கல்லூரியில் கல்விப்பொதுத்தராதர உயர்வகுப்பு படித்து சித்திபெற்று பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று சட்டக்கல்லூரியில் சேர்ந்து  வழக்கறிஞரானார்.

ஆனந்தன் இலங்கைக்கு, வல்வைக்கு சர்வதேச ரீதியில் புகழ் தேடித்தந்த வீரனாவார். வீரகேசரிச் சிறப்பிதழ்கள் ஆழிக்குமரன் என்னும் பட்டத்தைச் சூட்டியது. இவர் வல்வைச் சிவன்கோயில் இராஜகோபுரத்தை கட்டி பெரிய திருப்பணியைச் செய்த பெரியார் சி.செல்லத்துரைப்பிள்ளை அவர்களின் பேரனாவார். ஆங்கிலக்கால்வாயை நீந்திக்கடக்கும் சாதனையை மேற்கொள்வதற்காக 1984 இல் அதே கால்வாயில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் சமயம் எதிர்பாராத விதமாக மரணத்தைத் தழுவிக்கொண்டார். ஆனந்தன் நிகழ்த்திய சாதனைகள்.

1. 20 -3 -1963 வல்வெட்டித்துறையிலிருந்து கோடிக்கரைக்கு பாக்கு நீரிணையை நீந்திக்கடந்தது. கடந்த தூரம் 38 மைல் எடுத்தநேரம் 42 மணி.

2. 1975ல் ஏப்பிரல் மாதம் 18 – 20 தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை நீந்திச்சென்று நீந்தியே திரும்பியது. கடந்த தூரம் 40 மைல்.

3. 1 -1 -1979 இல் காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக டுவிஸ்ட் டான்ஸ் (Twist Dance) 180 மணித்தியாலம் . இச்சாதனை இடம்பெற்ற சமயம்  இலங்கைக் குடியரசுத் தலைவர் மேதகு  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள் சமூகமளித்துப் பாராட்டினார்.

4. 1979 மே மாதம் 2 -10, 187 மணி 28 நிமிடம் இடைவிடாது 1487 மைல்கள் கொழும்பு விகாரமாதேவி பூங்காவைச் சுற்றி சைக்கிள் ஓடியது.

5. 26 -12 1979 தொடக்கம் 1 -1 -1980 வரை தொடர்ச்சியாக 136 மணிநேரம் போல் பஞ்சிங்|.

6. 15 -5 -1980 இல் இரு நிமிட நேரத்தில் 165 தடவை இருந்து எழும்பியது. கொழும்பு வை.எம்.சி.ஏமண்டபத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து உடனடியாக
7. 1980 -5 -15 தொடக்கம் 17 வரை ஒற்றைக்காலில் நின்று 33 மணிநேரம் நின்று கொழும்பில் உலகசாதனை.

8. 31 .12 .1980 – 1 .1 .1981 இல் High Kicks  என்ற உலகசாதனை, கொழும்பு காலிமுகத்திடலில் 6மணி 51 நிமிடத்தில் 9100 தடவை.

9. 30 -6 -1981 தொடர்ச்சியாக 80 மணிநேரம் சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில் தண்ணீரில் மிதந்து சாதனை.

10. ஆகஸ்ட் 1981ல் 296 மைல்களை 159 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடந்து சாதனை.

11. 31 -12 -1982ல் 22 அவுன்ஸ் நிறையுள்ள பில்லியட்ஸ் தடியை ஒற்றைக் கையினால் 2520 தடவைகள் மேலும் கீழுமாக உயர்த்தி 2மணி 29 நிமிடங்கள். அதுவே யாழ்மண்ணில் கடைசியாக நிகழ்த்திய சாதனை.

மேற்குறிப்பிட்டவற்றுள் 1, 3, 10, 11 தவிர்ந்த ஏனையவை கின்னஸ் புத்தகத்தில் பதிந்துள்ளன.

ரேவடி மைதானத்தில் ஆனந்தனுக்கு வழங்கப்பட்ட வீரவரவேற்பில்
க.துரைரெத்தினம் பா. உ அவர்கள் உரையாற்றினார். அன்று நடந்த வரவேற்பில் தந்தை செல்வநாயகம் அவர்களும் கலந்து மேலும் பல சாதனைகள் செய்ய வாழ்த்தினார்.

ஆனந்தனுக்கு விளையாட்டுக் கழகங்கள், அவர் படித்த பாடசாலைகள், அதனைத் தொடர்ந்து நாடு பூராகவும் வரவேற்பளித்தும், பரிசுகள் வழங்கியும் கௌரவித்தனர். யாழ் முஸ்லீம் கள் பிரம்மாண்டமான ஊர்வலத்தையும் ஜின்னா மைதானத்தில் பெரும் வரவேற்புக் கூட்டத்தையும் அளித்து கௌரவித்தனர்.

பல வருடங்களின் பின்பு இலங்கை அரசாங்கமும் முத்திரை வெளியிட்டு அவரைக் கௌரவித்தது. தற்போது அவரது மனைவியின் உறவினரான நிதியமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் ஆதரவுடன் பெரும்செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 9ம் திகதியில் திறந்து வைக்கப்படவுள்ளது. இது எமது வல்வைக்கு கிடைத்த சிறப்பாகும்.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவிடம் இருந்து  தனக்குக் கிடைத்த நிதியை கிழக்கு மாகாண புயல்நிவாரண நிதிக்கு ஆனந்தன் வழங்கினார்.


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply