அறிஞர் அண்ணா நினைவாக (அறிஞர் அண்ணாவின் நினைவு தினம் பெப்ருவரி 3)…..

அறிஞர் அண்ணா நினைவாக (அறிஞர் அண்ணாவின் நினைவு தினம் பெப்ருவரி 3)

E-mailPrintPDF
அறிஞர் அண்ணாஇதுவரை உலகில் நடைபெற்ற மரண ஊர்வலங்களில் மிகப்பெரியது கின்னஸ் உலக சாதனைக்குறிப்பின்படி அறிஞர் அண்ணாவின் மரண ஊர்வலம்தான். சுமார் 15 மில்லியன் மக்கள் (ஒன்றரைக்கோடி மக்கள்) கலந்துகொண்ட மரண ஊர்வலம் அது. (ஆதாரம்: https://www.bbc.com/news/blogs-magazine-monitor-25310508)
. உலகத்தமிழர்கள் மத்தியில் அறிஞர் அண்ணாவுக்கு மிகுந்த மதிப்பு உண்டு. தமிழக அரசியலிலும் சரி, கலை, இலக்கிய வரலாற்றிலும் சரி திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு மறுக்க முடியாத இடமுண்டு. சமூதாயச்சீர்திருத்தக் கருத்துகளை, மதரீதியிலான சுரண்டல்களை, தமிழர்களின் தாழ்ந்து போன நிலைக்குக் காரணங்கள் எவை என்பது பற்றிய கருத்துகளை எனத் தமிழ் மக்களை விழிப்படைய வைத்ததில் திமுகவினருக்குச் சிறப்பானதோரிடமுண்டு. அவர்களது பகுத்தறிவுக் கருத்துகளை, மதச்சார்பற்ற கருத்துகளை திரைப்படங்கள், எழுத்துகள் மூலம், உரைகள் மூலம் கொண்டு சேர்த்தவர்கள் அவர்கள். குறிப்பாக மதம் எவ்வளவுதூரம் மக்களை வர்ணரீதியாகப்பிரித்து வைத்திருக்கின்றது என்பதைப்புள்ளி விபரங்களுடன் , தர்க்கரீதியாக, சுவையான அடுக்குமொழித்தமிழில் எடுத்துக்காட்டியவை அறிஞர் அண்ணாவின் எழுத்துகள். உண்மையில் நாடகம், சினிமா போன்றவற்றில் நாற்பதுகளின் இறுதிக்காலத்திலிருந்து அறுபதுகளில் திமுக ஆட்சியினைப் பிடிக்கும் வரையிலான காலகட்டத்தில் தமிழகக்கலை, இலக்கியம் மற்றும் அரசியலில் திமுக வகித்த ஆரோக்கியமான பங்கு முக்கியமானது.
சினிமாவைப்பொறுத்தவரையில் பாடல்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தை வசனத்துக்கு மாற்றியவர்கள் திமுகவினர் என்று கூறலாம். திரைப்படங்களில் சமுதாயச்சீர்திருத்தக் கருத்துகளை மையமாக வைத்துக் கதைகளைப் பின்னினார்கள். அறிஞர் அண்ணாவின் கதை, வசனத்தில் திரைப்படங்களாக அவரது நாடகங்கள், நாவல்கள் வெளிவந்தன. உதாரணத்துக்கு ‘ஓர் இரவு ‘ நாடகம் திரைப்படமாகியதையும், ‘ரங்கோன் ராதா’ நாவல் திரைப்படமாகியதையும் குறிப்பிடலாம். ‘நல்லதம்பி’, ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ ‘ரங்கோன் ராதா’ போன்ற அறிஞர் அண்ணாவின் திரைப்படங்கள் அவரது திரையுலகப்பங்களிப்பைப்பொறுத்தவரையில் முக்கியமானவை.
என் மாணவப்பருவத்தில் அறிஞர் அண்ணாவின் நூல்களைத்தேடிப்பிடித்து வாசித்தேன். ‘ஏ தாழ்ந்த தமிழகமே’, ‘ரங்கோன் ராதா’, ‘பார்வதி பி.ஏ’, போன்ற அவரது படைப்புகளையெல்லாம் வாசித்து இன்பமுற்றேன். ஐம்பதுகளில், அறுபதுகளில், எழுபதுகளிலெல்லாம் தமிழர்கள் வாழும் பிரதேசங்களிலுள்ள இளைஞர்கள் பலர் திமுகவினரால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இதன் காரணமாகவே அவ்விளைஞர்களில் பலர் சமூகத்தொண்டுகள் பலவற்றை (குறிப்பாக நூல்நிலையங்கள் அமைத்தல், சமூகத்துக்கான தன்னார்வத்தொண்டுகள் என) ஆற்றியிருக்கின்றார்கள். யாழ் மனோஹராத்திரையரங்குக்கு அண்மையில், கே.கே.எஸ் வீதியில் ஆரம்பிக்கப்பட்ட ‘அண்ணா அறிவகம்’ அவ்வகையில் குறிப்பிடத்தக்கது.
என் மாணவப்பருவத்தில் யாழ் பொதுசன நூலகம் எனக்குப் பலதுறைகளிலும் பல நூல்களை அறிமுகப்படுத்தியது என்றால் நான் அதிகமாகத் தினசரிப்பத்திரிகைகள் பலவற்றைப்படிப்பதற்கு அந்த ‘அண்ணா அறிவக’த்தையே பாவித்திருந்தேன். இந்நூல் நிலையத்திறப்பு விழாவன்று தமிழ் இளைஞர் பேரவையைச்சேர்ந்த வண்ணை ஆனந்தன் உரையாற்றியது ஞாபகத்திலுள்ளது.
– அண்ணாவின் இறுதி ஊர்வலக்காட்சி பற்றிய பத்திரிகைச் செய்தி –
அறிஞர் அண்ணா என்றதும் கூடவே எனக்கு என் அப்பாவின் நினைவும் வந்துவிடும். அப்பா திமுகவின் மேல் மிகுந்த பற்று வைத்திருந்த ஒருவர். 1968இல் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டையொட்டி சிறப்பான, அழகான மலரொன்றினைத் அறிஞர் அண்ணவின் தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அழகான, மறக்கமுடியாத மலர். அதனை அப்பா வாங்கி வைத்திருந்தார். கலைஞரின் பூம்புகாரின் நாடகத்தை அம்மலர் உள்ளடக்கியிருந்தது.
அக்காலகட்டத்தில் ராணிமுத்து பிரசுரங்கள் வெளிவரத்தொடங்கிய காலகட்டம். அறிஞர் அண்ணாவின் ‘பார்வதி பீஏ’, ‘ரங்கோன் ராதா’, கலைஞரின் ‘வெள்ளிக்கிழமை’ ஆகிய நாவல்களும் ராணிமுத்து பிரசுரங்களாக வெளியாகியிருந்தன. அதில் ‘ரங்கோன் ராதா’ நாவலின் முடிவு மிகவும் சிறப்பாக, அறிஞர் அண்ணாவின் பாணியில் அடுக்குமொழிகள் அழகாகக் கலக்கப்பட்டு முடிந்திருக்கும். அதனை அப்பா மிகவும் இரசித்தார். அதனால் அதனை நானும் வாசித்து இரசித்தேன். இன்றுவரை அந்நாவலின் முடிவு நினைவில் அழியாத சித்திரங்களிலொன்றாக நிழலாடுகின்றன. அதனை நீங்களும் சுவைத்திட கீழே தருகின்றேன்:
“இன்பமே” என்றேன் நான். கண்களை ஒரு விநாடி மூடித் திறந்தாள் – செந்தாமரை மலர்ந்தது. அருகே வந்தாள், வசந்தம் வீசிற்று! புன்னகை புரிந்தாள், புது விருந்து உண்டேன்!” இவற்றில் வரும் ‘வசந்தம் வீசிற்று! புன்னகை புரிந்தாள், புது விருந்து உண்டேன்’ என்பதிலுள்ள அடுக்குமொழி அழகே அப்பாவுக்கு மிகவும் பிடித்திருந்தது.
– அண்ணாவின் கைவண்ணத்திலுருவான ‘திராவிடநாடு’ அட்டைப்படம் –
அண்ணா என்றதும் நினைவுக்கு வரும் மேலுமொரு விடயம்:. ஒருமுறை கூட்டமொன்றுக்கு வரத்தாமதமாகிவிட்டது. அறிஞர் அண்ணாவின் உரையினைக் கேட்பதற்காக மக்கள் காத்துக்கிடக்கின்றார்கள். அப்பொழுது வருகின்றார் அண்ணா. தூக்கக்கலக்கத்தில் சோர்ந்து கிடக்கும் மக்களைப்பார்க்கின்றார். உடனே பேசத்தொடங்குகின்றார் : “மாதமோ சித்திரை. நேரமோ பத்தரை. நீங்களோ நித்திரை” பிறகென்ன கேட்கவா வேண்டும். தூக்கக்கலகம் நீங்கி மக்கள் விழித்தெழுந்து முடியும் வரை அவரது உரையினைக் கேட்டு இரசித்தார்கள்.
 அண்ணா வரைந்த அரசியல் கேலிச்சித்திரமொன்று –
சூழலுக்குத் தகுந்து அவர் கையாளும் சொற்பிரயோகங்கள் சிறப்பானவை. ஒரு முறை எம்ஜிஆரைப்பற்றிக் குறிப்பிடுகையில் ‘இதயக்கனி’ என்று குறிப்பிட்டார். அது பின்னர் எம்ஜிஆரின் கலையுலக, அரசியல் வாழ்வுக்கு மிகவும் உதவியது. எம்ஜிஆரும் தனது திரைப்படங்கள் பலவற்றில் அண்ணாவை நினைவு கூரும் வகையில் காட்சிகளை , பாடல்களை அமைத்தார். கடைசியில் அவரது பெயரிலேயே கட்சியையும் ஆரம்பித்துத் தமிழக அரசியலில் காலூன்ற வைத்தார். அண்ணா மறைந்து இவ்வளவு வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னும் தமிழக அரசியலில் அவர் பெயர் கோலோச்சிக்கொண்டுதானுள்ளது.
அறிஞர் அண்ணாவின் படைப்புகள் (நாவல்கள், சிறுகதைகள், உரைகள், கட்டுரைகள், & ஓவியங்கள்) அனைத்தையும் உள்ளக்கிய தளம் ‘அண்ணாவின்படைப்புகள்.இன்ஃபோ’ தளம். அதற்கான இணையத்தள முகவரி: http://www.annavinpadaippugal.info/home.htm
அண்ணா எழுத்தாளர் மட்டுமல்லர்; பேச்சாளர் மட்டுமல்லர்; இதழாசிரியர் மட்டுமல்லர்.’ சிறந்த ஓவியரும் கூட. அவரது ஓவியங்களத்தாங்கி திராவிடநாடு, காஞ்சி ஆகிய சஞ்சிகைகளில் பல அட்டைப்படங்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவர் கேலிச்சித்திரங்கள் வரைவதிலும் வல்லவர்.
About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply