மண்ணும் வானும் மறைந்தாலும் மறக்க முடியாத பாடல்கள்

மண்ணும் வானும் மறைந்தாலும் மறக்க முடியாத பாடல்கள்

கி.மு., கி.பி. என்பது போல், க.மு., க.பி., எனத் தமிழ்த் திரை உலகில் வழங்கி வரும் இரு சுருக்கக் குறியீடுகள் உண்டு. ‘கண்ணதாசனுக்கு முன்’, ‘கண்ணதாசனுக்குப் பின்’ என்பதே அது.

தமிழ்த் திரை உலகில் கண்ணதாசனுக்கு முன் பாடல் இயற்றி வந்தவர்கள் பெரும்பாலும், “வதனமே சந்திர பிம்பமோ, மலர்ந்த சரோஜமோ” என்றும், “சம்சாரம் சம்சாரம், சகல தர்ம சாரம் – சுக ஜீவன ஆதாரம்” என்றும், “சரச ராணி கல்யாணி – சுக, சங்கீத ஞான ராணி மதிவதனி” என்றும் வடசொற்களைக் கலந்து எழுதி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, “கட்டான கட்டழகுக் கண்ணா! – உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?… பட்டாடை கட்டி வந்த மைனா! -உன்னைப் பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா?” என இயல்பான – எளிய – அழகிய – தமிழ்ச் சொற்களைக் கையாண்டு பாடல் எழுத முற்பட்டார் கண்ணதாசன்.

***

1948-ல் திரைக்கு எழுதிய

முதற் பாடலிலேயே,

“கலங்காதிரு மனமே –  நீ கலங்காதிரு மனமே –

உன் கனவெல்லாம் நனவாகும்  ஒரு தினமே”

என நம்பிக்கை விதையை நெஞ்சில் ஆழமாக ஊன்றிய கவிஞர் அவர்.

***

இளமையின் தேசிய கீதம்

“கட்டித் தங்கம் வெட்டி எடுத்து  காதல் என்னும் சாறு பிழிந்து

தட்டித் தட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா –

அவள் தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!

”என்று கண்ணதாசன் காதலைப் பாடிய போது, அது ‘இளமையின் தேசிய கீதமானது!’

***

ஆயிரம் கண்ணீருக்கு ஆறுதலான கீதம்

“ காலமகள் கண் திறப்பாள் சின்னையா –

நாம் கண்கலங்கி கவலைப்பட்டு  என்னையா?

நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா –

அதில் நமக்கு ஒரு வழி இல்லையா  என்னையா?”

என்று கண்ணதாசன் சோகத்தைப் பாடிய போது, அது ‘ஆயிரம் கண்ணீருக்கு ஆறுதல் ஆனது!

***

முகமூடியை கழற்றி முகத்தை காட்டிய தத்துவம்

‘“வாழ்க்கை என்பது வியாபாரம் –

வரும் ஜனனம் என்பது வரவாகும் –

அதில் மரணம் என்பது செலவாகும்!”

என்று கண்ணதாசன் தத்துவம் பாடிய போது ‘வாழ்க்கை தனது முகமூடியைக் கழற்றி முகத்தைக் காட்டியது!’

***

பக்தி சுவை “உழைக்கும் கைகள் எங்கே

உண்மை இறைவன் அங்கே!

அணைக்கும் கைகள் யாரிடமோ

ஆண்டவன் இருப்பது அவரிடமே”

என்று கண்ணதாசன் பக்தியைப் பாடிய போது, பக்திச் சுவைக்கே ஒரு புதிய பரிமாணம் சேர்ந்தது.

“கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை –

அந்தக் காயத்திலே உடம்பு துடிக்கவில்ல –

நீ கண்ணால் அடித்த அடி வலிக்குதடி –

அந்தக் காயத்திலே மனது துடிக்குதடி!”

என்று கண்ணதாசன் காதலைப் பாடிய போது அங்கே கண்ணியமும் கட்டுப்பாடும் கைகுலுக்கிக் கொண்டன.

”ஆண்: நான் காதலெனும் கவிதை சொன்னேன்  கட்டிலின் மேலே…

பெண்: அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே”

என்று கண்ணதாசன் இல்லறமாம் நல்லறத்தின் இனிமையை இசைத்த போது அங்கே இங்கிதம் கோலோச்சி நின்றது.

“கள்ளம் இல்லாப் பிள்ளை உள்ளம்

நான் தந்தது

காசும் பணமும் ஆசையும் இங்கே

யார் தந்தது?

எல்லை யில்லா நீரும் நிலமும்

நான் தந்தது

எந்தன் சொந்தம் என்னும் எண்ணம்

ஏன் வந்தது?”

என்று ஒரு நாள் உலகைக் காணத் தனியே வந்த கடவுள், கண்ணில் கண்ட மனிதனிடம் கேட்பதாகக் கண்ணதாசன் பாடிய வைர வரிகள் பொட்டில் அடித்தாற் போல நம்மை உலுக்கி உசுப்பின!

கண்ணதாசனின் புரட்சி சங்க இலக்கியம், திருக்குறள், தேவாரம், கம்ப ராமாயணம், திருக்குற்றாலக் குறவஞ்சி, நந்திக் கலம்பகம், சித்தர் இலக்கியம் முதலான பழைய இலக்கியங்களின் கருத்துக்களைப் பொதுமக்களுக்குப் புரியும் வகையில் எளிமைப்-படுத்திக் கூறும் கலையிலும் கைதேர்ந்தவராக விளங்கினார் கண்ணதாசன்.

“இம்மை மாறி மறுமை ஆயினும் நீயா கியர் எம் கணவனை யானா கியர்நின் நெஞ்சு நேர்பவளே” என்று சங்க இலக்கியம் ஒரு பெண்ணையே பேச வைத்தது. கவியரசு கண்ணதாசன் தான் முதன்முதலில் இப்போக்கினை அடியோடு மாற்றி ஓர் ஆண்மகனைப் பின்வருமாறு பேச வைத்தார்.

“இங்கேயே காலமெல்லாம் கடந்து விட்டாலும் –

ஓர் இரவினிலே முதுமையை  நான் அடைந்து விட்டாலும்

மங்கை உனைத் தொட்டவுடன் மறைந்து விட்டாலும் –

நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்!”

இது கண்ணதாசன் திரைப்பாடல் வரலாற்றில் செய்து காட்டிய ஓர் அரிய புரட்சி. பழைய பாடலும் புதிய பாடலும் கண்ணதாசன் நிறுத்தி நிதானமாகப் பாடியதையே இன்றைய பாடலாசிரியர்கள் வேக வேகமாகப் பாடியுள்ளனர்.

கண்ணதாசன் ஒரு முறை சொன்னதையே இன்றைய பாடலாசிரியர்கள் மூன்று முறை அடுக்கிச் சொல்லி-யுள்ளனர்.  “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே?” என்பது கண்ணதாசன் ‘பழநி’ படத்திற்காக எழுதிய பாடல். இதையே வேறு சொற்களில் வேகமாக,“அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்குப் பதிலை”என்று பாடுகின்றது இன்றைய புதிய பாடல்.

“இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி,

இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி”

என்னும் கண்ணதாசனின் வரிகளே இன்றைய புதிய பாடலில்,

“நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீயின்றித் துாங்காது கண்ணே”

என்று புதுக்கோலம் பூண்டுள்ளன. கண்ணதாசன் பாடல்கள், இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதது; காலமெல்லாம் வாழும்!

About editor 3085 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply