சுமந்திரனைப் பார்த்து விக்கி குரைப்பது ஒருவகை மனநோயின் வெளிப்பாடாகும்!  

சுமந்திரனைப் பார்த்து விக்கி குரைப்பது ஒருவகை மனநோயின் வெளிப்பாடாகும்!

சுமந்திரனைப் பார்த்து விக்கி குரைப்பது ஒருவகை மனநோயின் வெளிப்பாடாகும்!

நக்கீரன்

ஊழையிடும்  நரிக்கு நாட்டாமை கொடுத்தால்  கிடைக்கு இண்டு ஆடு கேட்குமாம். செத்தேனே சிவனே என்று தானும் தனது வீடும் என்றிருந்த ஒருவரைத்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும்  சேர்ந்து அரசியலுக்கு  அழைத்து வந்தார்கள். தமிழரசுக் கட்சி மட்டும் அழைத்தால் மட்டும் போதாது ததேகூ இல் இருக்கும் ஏனைய கட்சிகளும் அழைக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் அடம் பிடித்தார். இதனால் இபிஎல்ஆர்எவ், ரெலோ, புளட் தலைவர்களும் அவருக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்கள். அப்படி அழைத்து வந்து வட மாகாண சபைக்கு நடந்த தேர்தலில்  முதன்மை வேட்பாளராகப் போட்டியிட வைத்து  முதலமைச்சராகவும் தெரிவு செய்து அழகு பார்த்தார்கள்.

அமைச்சர் வாரியத்துக்கு யார் யாரை  அமைச்சர்களாக நியமிப்பது என்பதை ததேகூ இன்  தலையீடின்றி விக்னேஸ்வரனது விருப்பத்துக்கு சம்பந்தர் விட்டுவிட்டார். தொடக்கம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் போகப் போக விக்னேஸ்வரன் தனது சின்னத்தனத்தைக் காட்டத் தொடங்கினார். விளைவு? வட மாகாண சபை குரங்கு கைப் பூமாலையானது!

ஆடத் தெரியாத ஆடலழகி கூடம் கோணல் என்று  சொன்ன மாதிரி  வட மாகாண சபையின் ஆளுநர் இராணுவ தளபதியாக இருப்பது ஆட்சியை சுமுகமாக நடத்துவதற்குத் தடையாக இருப்பதாக கூறத்தொடங்கினார். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது அதுவரை ஆளுநராக இருந்த இராணுவ தளபதி சி.ஏ. சந்திரசிறி (12 யூலை 2009 – சனவரி 2015) மாற்றப்பட்டு அவரது இடத்துக்கு எச்எம்ஜிஎஸ் பளிகக்கார நியமிக்கப்பட்டார்.  ஆனால் விக்னேஸ்வரன் கொடுத்த குடைச்சல் காரணமாக  பளிகக்கார  16 பெப்ரவரி 2016 இல்  மாற்றலாகிப் போய்விட்டார்.

ஆளுநர் சந்திரசிறி ஆளுநராக இருக்கு மட்டும் மாகாண சபையால் ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறது என்று முகாரி பாடிய விக்னேஸ்வரன் படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில் போல அதே சந்திரசிறியிடம் இருந்து யாழ்ப்பாணம் – கொழும்பு – யாழ்ப்பாணம் என விமானப் பயணம் செய்வதற்கு பயணம் செய்யும் சலுகையைப் பெற்றுக் கொள்ளத் தவறவில்லை.  தனக்கு மட்டுமல்ல, தனது தனிச் செயலாளருக்கும் அதே சலுகையைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். அதனால் மாகாணசபைக்கு ரூபா 22 இலட்சம் செலவானது.

இதற்கிடையில் விக்னேஸ்வரன் நாவடக்கம் இல்லாது நாட்டின் பிரதமராக இருந்த இரணில் விக்கிரமசிங்க அவர்களோடு சொற்போர் செய்யத் தொடங்கினார். “உன்னைத் தெரியாதா?  40 நா.உறுப்பினர்களோடு பிரதமராக வந்தவன் நீ, உன்னுடைய கட்சி மாமன் – மருமகன் கட்சி என்பது எனக்குத் தெரியாதா?” எனப் பகிரங்கமாக மேடைகளில் வைத்து வசை பாடினார். சானதிபதி சிறிசேனாவையும் விட்டு வைக்கவில்லை. அவரை மேடையில் வைத்துக்  கொண்டே “நீங்களாக முடிவெடுத்து எம்மை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காதீர்கள்” என்றார். இது விக்னேஸ்வரனுக்கும்  அரசியல் சாணக்கியத்திற்கும் எட்டாம் பொருத்தம் என்பதைக் காட்டியது. எல்லோரையும் விட  ஓர் அரசியல்வாதிக்கு இடம், பொருள், ஏவல் பார்த்துப் பேசத் தெரியாது.

இப்போது விரக்தியின் உச்சத்தில் இருக்கும் விக்னேஸ்வரன் நா.உறுப்பினர்  சுமந்திரன் மீது சேறுவாரிப் பூசுகிறார்.

“கடந்த அரசின் கைக்கூலிகளாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டனர். அதற்கு முக்கிய மானவர் சுமந்திரனே. அரசின் அடிமைத்தனத்துக்குள் எமது மக்களை கொண்டு சென்றவர் அவர்தான்” என தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில்  வெளிப்படையாக விக்னேஸ்வரன் கடந்த வாரம் குற்றம் சாட்டியிருக்கிறார் அவர் மேலும் தெரிவிக்கையில் “எனது மாணவனாகிய சுமந்திரனை நான் தனிப்பட்ட ரீதியில் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. அந்தத் தேவையும் எனக்கில்லை. எனினும் கொள்கையின் பொருட்டே நான் அவருடன் முரண்படுகிறேன். பொதுக் கொள்கையின் அடிப்படையில் நாம் யாருடனும் கூட்டுச் சேர்வதற்குத் தயாராக உள்ளோம்.”

சுமந்திரனின் கொள்கை என்ன? விக்னேஸ்வரன் கொள்கை என்ன?  விக்னேஸ்வரன் தனித் தமிழீழம் கேட்கிறாரா? இல்லையே!  ஒன்றுபட்ட நாட்டுக்குள் தமிழர்களுக்கு இருக்கிற உள்ளக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தமிழர்களது பாரம்பரிய வாழ்விடமான வடக்கு – கிழக்கில் அதியுச்ச அதிகாரம் படைத்த ஆட்சி முறையைத்தான் விக்னேஸ்வரன் கேட்கிறார். அதையேதான் சுமந்திரனும் கேட்கிறார்!

விக்னேஸ்வரன் மேலும் ஒரு கண்டுபிடிப்பைக்   கண்டு பிடித்ததாக உளறுகிறார். “கடந்த சனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு, சனாதிபதி கோட்டாபய மீதான வெறுப்பேயன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியதால் அல்ல” என்கிறார். மேலும்   கூட்டமைப்பினர் “வெளிப்படையாகப் பரப்புரை செய்தமையும் (சஜித் பிரேமதாச)  தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது” என்கிறார்.

ஒரு வாதத்துக்கு விக்னேஸ்வரன் சொல்வது சரி என்றே வைத்துக் கொள்வோம்.  அதாவது ததேகூ சொல்லாவிட்டாலும் தமிழ்மக்கள் சஜித் பிரேமதாசாவுக்கே வாக்களித்திருப்பார்கள்.  உண்மை என்னவென்றால் ததேகூ மக்களது நாடித் துடிப்பை சரியாகக் கண்டுபிடித்து, அவர்களது மனவோட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு  சனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களியுங்கள் எனக் கேட்டது. மக்களும் அப்படியே வாக்களித்தார்கள். அதாவது  ததேகூ பும்  மக்களும் ஒரே மாதிரிச் சிந்தித்தார்கள்.   ஒரே நேர்க் கோட்டில் ஒரே புள்ளியில் சந்தித்தார்கள் என்பதே உண்மை.

ஆனால்  சனாதிபதி தேர்தல் பற்றி விக்னேஸ்வரனது நிலைப்பாடு எப்படியிருந்தது?

உண்மையைச் சொல்லப் போனால் தமிழ் வாக்காளர்களுக்கு இருக்கும் அல்லது இருந்த அரசியல் ஞானம், அரசியல் புரிதல் மெத்தப்படித்த விக்னேஸ்வரனுக்கு இல்லை என்பதாகும்.    “இரண்டும் சிங்களக் கட்சி இதில் ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு என்னால் கேட்க முடியாது”  என்று ஏன் விக்னேஸ்வரன் சொன்னார்? தமிழ்மக்களது நாடித் துடிப்பை ஏன் அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை”

அதே நேரம் தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கூறிய கஜேந்திரகுமாரின் முடிவும் முட்டாள்தனமானது என்கிறார் விக்னேஸ்வரன்.  அது முட்டாள்த்தனம்தான் அதில் ஐயமில்லை. ஆனால் சரியோ பிழையோ கஜேந்திரகுமார் ஒரு முடிவை அறிவித்திருந்தார். ஆனால் விக்னேஸ்வரனால் எந்த முடிவையுனம் எடுக்க முடியவில்லையே? எந்த முடிவையும் அறிவிக்கவில்லையே? ஏன்?

“அரசிடம் இருந்து வந்த தடைகளை விட தமிழ்த் தலைவர்கள் சிலரிடம் இருந்து வந்த தடைகள் அதிகமானவை. சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எமது காலத்தில் முற்பட்ட போதும் எமக்கு அதிகாரம் கிடைக்கவில்லை” என்கிறார். அந்தத் தடைகள் எவையெவை, அந்தத் தலைவர்கள் யார், யார் என்பதை விக்னேஸ்வரன் அறிவிக்கவில்லை.

இலங்கையில் காணப்படும் 9 மாகாண சபைகளில் எந்தக் கட்சிக் கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக ஆட்சி நடத்தியவர் விக்னேஸ்வரன். அதன் காரணமாகவே தனக்குப் பிடித்தவர்களுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுத்தும் பிடிக்காதவர்களிடம் இருந்து  அமைச்சர் பதவிகளைப் பிடுங்கவும் செய்தார்.

கதையோடு கதை மருத்துவர் சத்தியலிங்கத்துக்கு எதிராகவும் அமைச்சர் டெனீஸ்வரனுக்கு எதிராகவும் குற்றம் சாட்டியவர் வேறு யாரும் இல்லை அனந்தி சசிதரன்தான். ஆனால் அவர் ஆணைக்குழு முன் தோன்றிச் சாட்சியம் அளிக்காது ஒளிந்து கொண்டார். அதற்குப் பரிசாக பின்னர் விக்னேஸ்வரன் அனந்திக்கு அமைச்சர் பதவி வழங்கி  அழகு பார்த்தார்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் சுண்ணாகம் குடிதண்ணீர் சிக்கல் தொடர்பாக  அமைச்சர் ஐங்கரநேசன் ஊழலில் ஈடுபட்டார் எனவே அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மட்டும் மாகாண சபை உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். ஆனால் தனக்கு நெருங்கிய அமைச்சர் ஐங்கரநேசனை மட்டுமல்லாது ஏனைய மூன்று அமைச்சர்கள் மீதும் விசாரணை நடத்த விக்னேஸ்வரன் முடிவு செய்தார். அமைச்சர்கள் பற்றிபொதுமக்களும்  புகார் செய்யலாம் என  செய்தித்தாள்களிலும் விளம்பரம் செய்யப்பட்டது. தன்னை மட்டும் விசாரணையில் இருந்து வசதியாக விலத்திவிட்டார்.

செய்தித்தாள்களில் தனது அமைச்சர்களுக்கு எதிராக (ஊழல்) புகார், முறைகேடுகள் செய்யலாம் எனக் கேட்டுக் கொண்ட ஒரே முதலமைச்சர் விக்னேஸ்வரனாகத்தான் இருக்க வேண்டும். இதனை அரிய சாதனை என்றே சொல்லவேண்டும்.

விக்னேஸ்வரன் அமைத்த விசாரணைக் குழு  மருத்துவர் சத்தியலிங்கம் மீதான எந்தக்குற்றச் சாட்டும்  எண்பிக்கப்படவில்லை என்று தனது அறிக்கையில் சொல்லியது. அப்படிச்  சொல்லிய பின்னரும் அவரிடம் இருந்து விலகல் கடிதம் பெற்று அமைச்சர் பதவியில் இருந்து அவரை சுலபமாக நீக்கி  விட்டார். ததேகூ இன் தலைவர் சம்பந்தரே அந்த விலகல் கடிதத்தைக் கொடுக்குமாறு சொல்லிவிட்டார்.

அதே போல  அமைச்சர் பா.டெனீஸ்வரனும். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எண்பிக்கப் படவில்லை என விசாரணைக் குழு  தெரிவித்தது.  அப்படியிருந்தும்  விக்னேஸ்வரன்,  டெனீஸ்வரனைப் பதவி விலகுமாறு கேட்டார்.  மருத்துவர் சத்தியலிங்கத்திடம் வெந்த பயறு டெனீஸ்வரனிடம் வேகவில்லை. எந்தக் குற்றமும் செய்யாத தன்னைப் பதவி விலகுமாறு முதலமைச்சர் கேட்க முடியாது பதவி விலகவும் மாட்டேன், முடியுமானால் பதவியில் இருந்து அகற்றுமாறு சவால் விட்டார். தானும் ஒரு சட்டத்தரணிதான். தனக்கும் சட்டம் தெரியும் என்றார்.

அது போதுமே விக்னேஸ்வரனுக்கு?  சாம்பிராணி காட்டினால்தான் பேயாடுவார்கள். ஆனால் சாம்பிராணி இல்லாமலே பேய் ஆடத் தொடங்கினார்.  வெகுண்டெழுந்த விக்னேஸ்வரன்,   அமைச்சர் பதவியில் இருந்து  டெனீஸ்வரனை விலக்கி விட்டாதாக  தன் கைப்படக் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பினார். மகாண சபை அமைச்சர் வாரியத்தில் இருந்து ஒரு அமைச்சரை நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்ற சட்ட ஞானம் கூட 30 ஆண்டுகள் நீதிமன்றங்களில்  நீதிபதியாக இருந்த விக்னேஸ்வரனுக்குத் தெரியாமல் போய்விட்டது. அல்லது தெரிந்தும் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற மாதிரி  நடந்து கொண்டார்.

அமைச்சர் டெனீஸ்வரன் தன்னைப் பதவி நீக்கம் செய்தது சட்டத்துக்கு முரணானது எனக் கூறி 2017 இல்  நீதிமன்றம் சென்றார். பல தடவை – பல நாட்கள்- விசாரணை நடந்தது. முடிவில் ஓகஸ்ட் 24 2017ஆம் திகதி முதல் பதவியை விட்டு விலக்கியதாகத் தெரிவித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் அனுப்பிய கடிதம் செல்லுபடியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவரை மறுபடியும் அமைச்சர் பதவியில் அமர்த்துமாறும் அதற்கு முதலமைச்சர் முட்டுக்கட்டை எதுவும் போடக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கெடுகுடி சொல் கேளாது என்பார்கள்.  உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த விக்னேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. அந்த உத்தரவைக் காலில் போட்டு மிதித்தார். இதனால் டெனீஸ்வரன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றைத் தாக்கல் செய்தார். அது பற்றிய விசாரணை கடந்த மாதக் கடைசியில் இடம்பெற்றது. அனந்தி சசிதரன்  சார்பாகத் தோன்றிய சட்டத்தரணி தான் அந்த வழக்கில் இருந்து விலகுவதாகவும் ஒரு புதிய சட்டத்தரணி வழக்கை நடத்த இருப்பதாகவும் கூறி கால அவகாசம் கேட்டார். இப்போது விசாரணை மார்ச் மாதத்துக்குப் பின்போடப்பட்டுள்ளது. சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து எப்படியும் நீதிமன்ற விசாரணையை இழுத்தடிக்க  விக்னேஸ்வரன், அனந்தி, சிவநேசன் படாது பாடுகிறார்கள். ஆனால்  விக்னேஸ்வரனுக்கு எதிரான இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அவரது காலைச் சுற்றியுள்ள பாம்பு என்று ஓர் ஊடகவியலாளர் சுட்டிக் காட்டியுள்ளார்!

மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின்  அடிப்படையில்  ஓகஸ்ட் 2017 முதல் ஒக்தோபர்  2018  வரையிலான- அதாவது   வடக்கு மாகாண சபை கலையும் வரையான (ஒக்தோபர் 25, 2018) காலத்துக்குத்   தாம் மாகாண அமைச்சராகப் பதவி வகித்தார் என்ற அடிப்படையில் உரிய வேதனம், மற்றும் கொடுப்பனவு, பிற கொடுப்பனவுகளைத் தமக்கு வழங்கும்படி டெனீஸ்வரன் மாகாண நிர்வாகத்திடம் கேட்டிருந்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பெற்று அதனடிப்படையில் இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு மாகாண சபையின் தற்போதைய நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது.   இதன் அடிப்படையில் டெனீஸ்வரனுக்கு மாத்திரம் என்றால் மாதாந்தம் சுமார்  மூன்றரை இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் பதினான்கு மாதங்களுக்கு சுமார் ஐம்பது இலட்சம் ரூபா வரை மாகாண நிர்வாகம் கொடுக்க வேண்டியிருக்கும். இதற்கான பணம் எங்கிருந்து வரும்?

2017 ஓகஸ்ட் வரை டெனீஸ்வரன் வைத்திருந்த அமைச்சுப் பதவிகளை முதல்வர் விக்னேஸ்வரன் பங்கிட்டு மூன்று பேரிடம் ஒப்படைத்திருந்தார். ஒரு பிரிவை அனந்தி சசிதரனிட மும், ஒரு பகுதியை சிவநேசனிடமும் ஒப்படைத்த அவர் எஞ்சிய துறைகளைத் தனது கையில் எடுத்துக் கொண்டார்.  அப்படியாயின் இந்த மூன்று அமைச்சர்களிடம்  இருந்துதான் இந்தப் பணத்தை அறவிட வேண்டியிருக்கும்.

ததேகூ நா.உறுப்பினர்களுக்கு பதவி மோகம் படைத்தவர்கள், சலுகைகளுக்குக் கையேந்தி நிற்பவர்கள், கைக்கூலிகள் எனத் தரம் தாழ்ந்து விக்னேஸ்வரன் வாயில்வந்தபடி திட்டுகிறார். ஆனால் அவரது யோக்கிதை என்ன?  சிறிசேனா – இரணில் இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச்  சொகுசு வரியில்லாத வண்டிகள் வாங்க அனுமதிப் பத்திரம் வழங்கினார்கள். இந்தச் சலுகை மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டது. அந்தச் சலுகையைப் பயன்படுத்தி விக்னேஸ்வரன் அ.டொ 45,000  பெறுமதியான வண்டி ஒன்றை இறக்குமதி செய்வதற்குரிய அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டார். பிறகுதான்  தனது பதவிக்கு அ.டொலர் 65,000 பெறுமதியான வண்டியை வரிசெலுத்தாமல் இறக்குமதி செய்வதற்கு உரித்துடையவர் எனக் கண்டு கொண்டார்.  எனவே கிடைத்த அனுமதிப் பத்திரத்தை திருப்பி அனுப்பி தனக்கு முதலமைச்சர் என்ற முறையில் அ.டொலர் 65,000 பெறுமதியான வண்டிக்கு அனுமதிப் பத்திரம் தருமாறு கேட்டார்.

விக்னேஸ்வரனின் கெட்ட காலம்  நிதி நெருக்கடி காரணமாக இந்தச் சலுகையை அரசாங்கம் நிறுத்திவிட்டது. இதனால்  கையில் இருந்த ஒரு புறாவை பறக்க விட்டுவிட்டுப் பற்றைக்குள் இருந்த இரண்டு புறாக்களைப்  பிடிக்க  ஆசைப்பட்டவன்  கதையாகப் போய்விட்டது. தனது விண்ணப்பத்தில் வண்டியின் விலை அ.டொலர் 65,000 தனது மகன் தருவார் என்று குறிப்பிட்டிருந்தார். பேராசை பெரும் நட்டம் என்பதற்கு இதைவிட வேறு நல்ல எடுத்துக்காட்டு வேறு இருக்கமுடியாது!

இப்படியான சாமுத்திரிகா குணங்களைக் கொண்ட  விக்னேஸ்வரன் மாகாண அபிவிருத்திக்கு மத்திய அரசிடம் இருந்து ரூபா 12,000 மில்லியன் கேட்டதாகவும் ஆனால் அரசாங்கம் ரூபா 1,260 மில்லியன் மாத்திரமே கொடுத்ததாகவும் குறைபட்டுள்ளார்.

ஆனால் இதே விக்னேஸ்வரன்தான் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனம் தனது சமாதானத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்தின்  (Peace Building Fund)  கீழ் வட மாகாண தோட்டக்காரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அ.டொலர் 150 மில்லியன் (ரூபா 27,000 மில்லியன்) நிதியை மானியமாகக் கொடுக்க முன்வந்தது. சும்மா வந்த சீதேவியை விக்னேஸ்வரன் விளக்குமாற்றால் அடித்துத் துரத்தினார். தனது மருமகன் நிமலனுக்கு அந்தத் திட்டத்தின் கீழ் ‘சிறப்பு அதிகாரி’ யாக மாதம் அ.டொலர் 5,000 சம்பளத்தில் நியமிக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் அழுங்குப் பிடியாக நின்றார்.  இதனால் அந்த நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதிக்கும் இடையில் முரண்பாடு எழுந்தது.  அந்த முரண்பாடு காரணமாக அந்த நிதிக் கொடுப்பனவு கிட்டாது போய்விட்டது. ஒரு தனிப்பட்ட நபருக்காக, அதுவும் தனது மருமகனுக்காக ஒரு சர்வதேச நிறுவனம் கொடுக்க முன்வந்த அ.டொலர் 150 மில்லியனை விக்னேஸ்வரன் கோட்டை விட்டார். இதுபோல வடக்கு மாகாண சபைக்கு  கிடைக்க இருந்த எத்தனையோ உதவித்திட்டங்கள் இவரால்  உதறித்தள்ளி விடப்பட்டிருக்கின்றது.

இரணைமடுத்திட்டத்திற்குக் கிடைக்கவிருந்த நிதி ரூபா 29,500 மில்லியன் (USD 164 மில்லியன்) – ஐந்து ஆண்டுக்கு மாகாணசபைக்குக் கிடைக்கும் நிதியை விடக் கூடுதலானது –   வேண்டாமென்று விக்னேஸ்வரன் உதறித் தள்ளினார்.

வட மாகாண சபைக்கு ஓர் ஆண்டுக்கு கிடைக்கும் மூலதன நிதி ஏறத்தாழ ரூபா 4,000 – 4,500 மில்லியன் மட்டுமே. ஆனால் இரணைமடுத்திட்டத்திற்குக் கிடைக்கவிருந்த நிதியோ ரூ. 25,000 மில்லியன். (USD 164 மில்லியன்). ஐந்து ஆண்டுகளுக்கு வட மாகாண சபைக்குக் கிடைக்கும் நிதியை விடக் கூட. அதனை வேண்டாமென்று உதறித் தள்ளியவர் விக்னேஸ்வரன். இந்தக் குற்றச்சாட்டுக்களை  2017 இல் நடந்த வரவு – செலவுத் திட்ட அறிக்கை மீது நடந்த விவாதத்தில்  அன்றைய மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா முன்வைத்தார்.

தனது குறைபாடுகளை,  தனது இயலாமைகளை மறைக்க மற்றவர்கள் மீது சேறுவாரிக் கொட்டுவது விக்னேஸ்வரனின் பாணியா இருந்திருக்கிறது. “கடந்த அரசின் கைக்கூலிகளாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டனர். அதற்கு முக்கிய மானவர் சுமந்திரனே. அரசின் அடிமைகளாகத் தமிழரை மாற்றியமைத்தவரும் சுமந்திரன்னே!”  என்பதும் அதே பாணிதான்.

நா.உறுப்பினர் சுமந்திரன் மீது   மன நோயாளிகளே  இப்படியான  அடிநுனி இல்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள். நிலாவைப் பார்த்துக்  குக்கல்கள் குரைக்கின்றன. அப்படிக் குரைப்பவர்களில்  விக்னேஸ்வரனுக்கு முதலிடம்!

சுமந்திரனைப் பார்த்து விக்கி குரைப்பது ஒருவகை மனநோயின் வெளிப்பாடாகும்!

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply