நம்மாழ்வார் நினைவு தினம்: “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்”

நம்மாழ்வார் நினைவு தினம் “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்”

நம்மாழ்வார்

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அந்த பெருங்கிழவன் நம்மாழ்வார் மீது கவனம் குவிந்தது சுனாமிக்கு பின்புதான். சுனாமியினால் கடற்கரை அருகே உள்ள கிராமங்களில் கடல் தண்ணீர் புகுந்து நிலத்தடி நீர் பாழடைந்தது. ஏற்கெனவே கடன், லாபமின்மை, ஆட் பற்றாகுறையால் விவசாயிகள் தவித்து கொண்டிருந்தனர்.

நம்பிக்கை கீற்று

மெல்ல நினைவுகளை திரட்டி அசைப்போட்டோமானால் டெல்டாவில் விவசாயிகள் எலி கறி தின்ற காலமது. எங்கும் இருள் படிந்திருந்த நிலையில் சுனாமி அவர்களின் கவலையை இன்னும் தடிமனாக்கி இருந்தது. உப்பு தண்ணீரை கொண்டு இனி எப்படி விவசாயம் செய்ய என குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள வேறு வழிகளை தேடிய போது நம்பிக்கை ஒளிகீற்றாக நம்மாழ்வார் வந்தார். அந்த பகுதிகளில் சுழன்று சுழன்று வேலை பார்த்தார்.

இனி விவசாயமே செய்ய முடியாது என்று கைவிடப்பட்ட நிலங்களை பண்படுத்தினார். உப்பு பூத்த அந்த நிலத்தில் மெல்ல பச்சையம் மீண்டும் துளிர்விட தொடங்கியது.

அதுவரை அவருக்கு செவிக் கொடுக்க மறுத்தவர்கள். அவரின் ஆலோசனைகளை மறுத்தலித்தவர்கள் அவரை தேட தொடங்கினார்கள். பலர் மெல்ல இயற்கை விவசாயத்தை நோக்கி திரும்பினார்கள். மரபு விதைகளை மீட்க புறப்பட்டார்கள்.

நுகர்வியம், இயற்கையோடு இயைந்த வாழ்வு என பொது தளத்தில் ஆரோக்கியமான உரையாடல்கள் தொடங்கின. குறிப்பாக விவசாயத்தை இழிவாக பார்த்த ஒரு தலைமுறை மீண்டும் நிலத்திற்கு திரும்பியது.

சூழலும் தீர்வும்

மீண்டும் அப்படியான சூழ்நிலைதான் இப்போதும் நிலவுகிறது. கஜ புயல் பாதித்த சில பகுதிகளுக்கு அண்மையில் சென்றிருந்தேன். அப்போது நான் சந்தித்த பலர், “இது புயல் இல்லை; சுனாமி” என்றார்கள். சுனாமி எப்படி ஒரு நிலப்பரப்பின் சமூக, பொருளாதார கட்டமைப்பில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதோ, அதைவிட மோசமான தாக்கத்தை கஜ புயல் ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டார்கள்.

நம்மாழ்வார்படத்தின் காப்புரிமைM NIYAS AHMED

“சுனாமிக்கு பின் நிலத்தின் காயங்களை ஆற்ற நம்மாழ்வார் பல வெற்றிகரமான தீர்வுகளை சொன்னார். ஆனால், இப்போது அதைவிட மோசமான நிலையில் இருக்கிறோம். என்ன தீர்வு என்றுதான் தெரியவில்லை” என்றார் மன்னார்குடியை சேர்ந்த விவசாயி மணி.

ஆனால், அப்போதே இது குறித்து எச்சரித்து இருக்கிறார் நம்மாழ்வார்.

இயற்கை விவசாயம் என்பது யாதெனில்?

2008ஆம் ஆண்டு திருவாரூரில் நடந்த ஒற்றை நாற்று நடவு நெல் அறுவடை திருவிழாவில் அவர் கூறியது நன்றாக நினைவிருக்கிறது. அவருக்கே உரிய வெள்ளந்தி மொழியில் சொன்னார், “இயற்கை விவசாயம் என்பது ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல. இயற்கையின் மொழி புரிந்து அதன் தன்மைக்கேற்றவாரு விவசாயம் செய்யுறதுதான். இப்ப ஊரு பூரா தென்னை நடுறான். நிலத்துக்குள்ள போனா தென்னை மட்டும்தான் இருக்கு. இதுல பெருமையா , இயற்கை விவசாயம் செய்யுறேன். தென்னைக்கு பூச்சி விரட்டி எதுவும் அடிக்கிறது இல்லைங்குறான். இது எப்படி இயற்கை விவசாயம் ஆகும்? நிலம் முழுக்க ஒற்றை பணப்பயிர் நடுறது இயற்கை விவசாயம் இல்லை”என்றார்.

நம்மாழ்வார்படத்தின் காப்புரிமைM NIYAS AHMED

அதற்கு மாற்றும் சொன்னார், “அஞ்சு அடுக்கு முறை, ஏழு அடுக்கு முறையில விவசாயம் செய்யுங்க. அது நம்ம நிலத்துல காடு வளர்க்கிற மாதிரி. அதாவது நிலத்தில் ஒரு பயிர் மட்டும் நடாமல், பல்வேறு காலக்கட்டங்களைல் அறுவடைக்கு வரும் மரங்களை நடுவது. தேக்கு, தென்னை, வாழை, பாக்கு என கலவையாக மரங்களை நடுவது. ஊடுபயிராக காய்கறிகளையோ, கடலை போன்ற பயிர்களை விவசாயம் செய்வது. இது பெரும் காற்றடிக்கும் போது ஒரு மரம் மற்றதற்கு அரணாக இருக்கும். சுழற்சியில் அறுவடைக்கு வருவதால், பொருளாதார ரீதியாகவும் நல்லது.” என்று விவரித்தார்.

இதனை கஜ புயலோடு பொருத்தி பாருங்கள் தெளிவாக புரியும்.

விவசாயத்துறை அதிகாரிகளும் இதனை வழிமொழிகிறார்கள்.

ஓய்வுபெற்ற உதவி வேளாண்மை இயக்குநர் மதுபாலன், “இதுதான் சரியான தீர்வு. இப்படியாக மரங்கள் நடுவது தடுப்பணை கட்டுவது போல, பெருங்காற்று உள்புகுவதை தடுக்கும். ஒரு மரத்தின் சறுகு மற்றதற்கு உரமாக அமையும். மணி அரிப்பையும் தடுக்கும்” என்கிறார்.

பெருவாழ்வு என்பது தம் காலத்தை கடந்தும் மற்றவர்களுக்கு பயனாக வாழ்வது. அப்படியான பெரும் வாழ்வை வாழ்ந்திருக்கிறார் நம்மாழ்வார். காலத்தை கடந்தும் தீர்வுக்காக அவரையே தேடுகிறார்கள்.

எல்லாருக்கும் நம்மைபயக்க வாழ்ந்த அந்த வெண்தாடி கிழவனின் நினைவுதினம் இன்று.

About editor 3015 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply