தமிழ்த் தேசியத் தீ பரவட்டும்!
நக்கீரன்
காவேரி! நினைத்தாலே இனிப்பவள்!
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போற்றிடு புலவோர் பொய்யிலா நாவிலே தவழ்ந்தவள்!
முடியுடை வேந்தர்கள் மூவரும் வேளிரும் ஆண்ட பூமியில் எழில் வலம் வந்தவள்!
அந்நாள் தமிழகத்தின் வனப்புக்கும் வளத்துக்கும் செழிப்புக்கும் செழுமைக்கும் பாரியே என மாரி பொய்க்காது வாரி வழங்கியவள்!
”ஞாயிறு போற்றுதும்!; ஞாயிறு போற்றுதும்;!
காவிரி நாடன் திகிரிபோல், பொன்கோட்டு
மேரு வலந்திரித லான்”
என எந்நாளும் அழியா சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ போற்றிப் பாடியவள்!
”மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப் பூ ஆடை-அது போர்த்துக்
கருங்கயல் கண் விழித்து, ஒல்கி,
நடந்தாய், வாழி காவேரி!
………………………………………………………………
பூவார் சோலை மயில் ஆடப்
புரிந்து குயில்கள் இசைபாடக்,
காமர் மாலை அருகு அசைய,
நடந்தாய்! வாழி, காவேரி!”
இதுவும் இளங்கோவின் சொல் வண்ணத்தில் பிறந்த பாவண்ணம்தான்!
உன்னையும் உன் புகழையும் எந்தப் புலவன்தான் பாட மறந்தான்?
‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற்காவிரி”
பட்டினப் பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் உன்னை மெச்சிப் பாடிய வரிககள் இவை. இந்தப் பாடலுக்கு சோழன் கரிகாற் பெருவளத்தான் புலவருக்கு பதினாறு நூறாயிரம் பொன் பரிசு கொடுத்து மகிழ்ந்தானாம்!
‘பூவிரி அகன்துறைக் கணைவிசைக்
கடுநீர்க்காவிரி பேரியாற்று”
என அகநானூறு பெருமிதத்தோடு உன்னைப் போற்றுகிறது!
புத்தமத காப்பியமான மணிமேகலை இயற்றிய சாத்தனார் கூட உன் புகழ்பாட மறக்கவில்லை! நற்றமிழ் ஞான சம்பந்தர் உன்னை மறக்கவில்லை! சேக்கிளாரும் அப்படித்தான்!
பாரதிதான் உன்னை விட்டு வைத்தானா?
‘காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-யென
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு”
என்று பாமாலை பாடி உனக்குக் கவிமாலை சூட்டினான்!
தமிழ்நாட்டின் வரலாறு, இலக்கியம், பண்பாடு, கலை, வாழ்வு, நாகரிகம் இவற்றோடு பிணைந்த பெருமை காவேரிக்கு மட்டுமே உண்டு. ஆரிய நாகரிகத்துக்கு ஒரு கங்கை என்றால் தமிழர் நாகரிகத்துக்கு காவேரி சான்றாக விளங்குகிறது.
உலகத்தில் முதல் கல்லணை காவேரிக்குத்தான் கட்டப்பட்டது. சோழ மன்னன் கரிகாலன் ஈழப் படையெடுப்பின்பொழுது சிறை பிடித்துக் கொண்டுவந்த 12,000 சிங்களக் கைதிகளைப் பயன்படுத்தி கல்லணையைக் கட்டினான்.
1080 அடி நீளமும் 60 அடி அகலமும் 18 அடி உயரமும் கொண்ட இந்த அணை பெருங் கருங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்டது. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தக் கல்லணை இன்றும் ஆடாது அசையாது பெருமிதத்தோடு நிமிர்ந்து நிற்கிறது.
காவிரிப் படுக்கையில் விளைந்த பொருட்கள் பூம்புகார் பட்டினத்தின் வழியாக மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின. இதனை,
‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்”
பட்டினப்பாலை படம்பிடித்துக் காட்டுகிறது.
‘வான் பொய்க்கினும் தான் பொய்யா காவேரி’ இன்று பொய்த்து விட்டது. காவேரி ஆற்றுப் படுக்கை தண்ணீர் இல்லாது பாளம் பாளமாக வெடித்துக் காட்சி அளிக்கிறது. இலட்சக் கணக்கான ஏக்கர் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது. காவேரித் தண்ணீரை நம்பி வாழ்க்கை நடத்தும் தஞ்சை விவசாயிகள் கண்ணீரில் மிதக்கிறார்கள். அடுப்பினில் பூனை உறங்க அவர்கள் வயிற்றில் கொடிய பசித் தீ கொளுந்து விட்டு எரிகிறது!
தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை கன்னடம் தர மறுக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவையும், காவேரி ஆணையத்தின் கட்டளையையும் கன்னடம் துச்சமாக மதிக்கிறது. அவற்றை அச்சம் இன்றி மிதிக்கிறது.
கன்னடம் காவேரித் தண்ணீர் தமிழ்நாட்டுக்குப் பாய்வதைத் தடுப்பது இது முதல் தடவையல்ல. இந்த அவலம் இந்தியாவை வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் இருந்து தொடர்கதையாக வருகிறது. கடந்த எழுபத்தி ஏழு ஆண்டுகளாக தீர்வின்றி காவேரிப் பிரச்சினை இழுத்தடிக்கப்படுகிறது.
12 ஆம் நூற்றாண்டில் காவிரி நீரைத் தமிழகம் வராமல் தடுக்கும் முயற்சியில் கன்னடத்தை ஆண்ட முதலாம் நரசிம்மன் (கிபி 1141-1175) ஈடுபட்டான். காவிரியின் போக்கை செயற்கை மலைகளை ஏற்படுத்தி தடுத்தான். ”வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவேரி” பொய்த்தது.
சோழநாட்டில் இப்போது போலவே அப்போதும் வரட்சி ஏற்பட்டது. அப்போது சோழ நாட்டை ஆண்ட இரண்டாம் இராசராசன் போசள (கன்னடம்) நாட்டின் மீது படையெடுத்துச் சென்று நரசிம்மனைத் தோற்கடித்து செயற்கை மலையை தகர்த்து காவேரித் தண்ணீர் மீண்டும் சோழ நாட்டுக்குப் பாய வழிதிறந்தான்!
இன்று மன்னர்களும் இல்லை. அவர்கள் அணிந்த முடியும் இல்லை. கொடியும் இல்லை. படை நடத்த தடந்தோள் கொண்ட தளபதிகளும் இல்லை. காவேரி படுக்கைபோல் தமிழ்நாட்டுத் தமிழர் வீரமும் உணர்வும் வரண்டுபோய்க் கிடக்கிறது!
காவேரிச் சிக்கலில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கோயில் நவக்கிரகங்கள் போல் மூலைக்கு மூலை ஒருவரை யொருவர் பாராது கிடக்கின்றன.
கன்னட மாநில அரசின் முதல்வர் எஸ். எம். கிருஷ்ணா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை செய்கிறார்.
தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவோ ”எல்லாம் நானே” என்ற திமிரோடு அறிக்கைப் போர் தொடுக்கிறார். எதிர்க்கட்சிகளை திட்டித் தீர்த்துவிட்டு கூடிப் பேசலாம் என்று அழைப்பு விடுத்தார். அதனை எதிர்க்கட்சியான திமுக நிராகரித்தது.
கன்னட அரசியல்வாதிகள் மட்டுமல்ல அங்குள்ள திரையுலகக் கலைஞர்கள் சந்தன வீரப்பனால் விடுவிக்கப்பட்ட ராஜ்குமார் தலைமையில் கூடி காவேரி நீரைத் தமிழதத்துக்கு திறந்துவிடக் கூடாது என ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள்.
தமிழர்களது உடமை தீக்கிரையாக்கப்படுகிறது. தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டு போக்குவரத்துப் பேரூந்துகள் சேதமாக்கப்படுகின்றன.
1991ஆம் ஆண்டு இதே காவேரிப் பிரச்சினை காரணமாக கன்னட வெறியர்கள் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தார்கள். ஒரு இலட்சம் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தார்கள்.
இப்போதும் அங்கு வாழும் 40 இலட்சம் தமிழர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழும் அவல நிலை எழுந்துள்ளது.
பங்க;ரில் திரையுலக நடிகர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டுக்கு நடித்துப் பிழைக்க வந்த கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் (பஞ்சதந்திரம்) சென்னையில் இருந்து பங்கர் சென்று கலந்து கொண்டிருக்கிறார். அந்தளவு தூரம் மொழிப்பற்றும் இனப்பற்றும் கன்னடர்களுக்கு இருக்கிறது!
ஆனால் தமிழ்நாட்டு நடிக நடிகர்கள் வாய் மூடி மவுனியாகக் கிடக்கிறார்கள். முன்னணி நடிகர் விஜயகாந்த் தலைவராக இருக்கும் தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம் காவேரி சிக்கல் சம்பந்தமாக இதுவரை மூச்சே விடவில்லை!
தமிழ்த் திரைப்பட நடிகர் நடிகைகளில் சரி பாதிக்கு மேல் தமிழர் அல்லாதார்கள் இருப்பது இதற்கு ஒரு காரணம்.
ரமேஷ் அரவிந்த், முரளி, பிரபுதேவா, ரஜினி, அர்ச்சுன, பிரகாஷ்ராவ் இவர்கள் எல்லோரும் கன்னடக்காரர்கள்.
இப்போது தூங்கிக் கிடக்கும் தமிழ்நாட்டு திரைப்படப் படைப்பாளிகளை தட்டி எழுப்பும் பணியில் இயக்குனர் திலகம் பாரதிராசா ஈடுபட்டிருக்கிறார்!
‘காவேரி கன்னடர்களுக்கு என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழர்களுக்கே” என்ற முழக்கத்தோடு தமிழ்த் திரை உலகம் தமிழர் நல பாதுகாப்புக் கழகம் என்ற அமைப்பின் கீழ் அணி திரண்டு களத்தில் இறங்கியுள்ளது.
எதிர் வரும் 12ம் நாள் நெய்வேலி அனல் மின் நியைத்தை முற்றுகையிட தமிழர்நல பாதுகாப்புக் கழகம் வியூகம் வகுத்துள்ளது.
காவிரி நீர் சிக்கலுக்கு முடிவு வரும் வரை தேசிய விருதுகளை தமிழ்க் கலைஞர்கள் புறக்கணிக்க வேண்டும், தமிழ்ப் படங்களுக்கு தமிழ் அல்லாத ஆங்கிலம் மற்றும் வேற்று மொழியில் பெயர் வைப்பது இனி அறவே தவிர்க்கப்பட வேண்டும்,
தமிழ்த் திரையுலகின் எந்த சங்கங்களும் தமிழ் அல்லாத திரைப்படப் பெயர்களை பதிவு செய்யக் கூடாது, மீறி படங்கள் உருவாக்கப்பட்டால் தமிழ்நாடு திரைப்பட வினியோகத்தர்கள் அந்தப் படங்களை திரையிடக் கூடாது போன்ற அதிரடித் தீர்மானங்களை தமிழ் நல பாதுகாப்புக் கழகம் நிறைவேற்றியுள்ளது.
காவேரிபோல் தமிழ் உணர்வும் தமிழ் இனவுணர்வும் வற்றிப்போன தமிழகத்தில் அவற்றைத் தட்டியெழுப்ப புதிய இரத்தம், புதிய முறுக்கு, புதி;ய செருக்கு, புதிய தலைமை தேவைப்படுகிறது!
போராடிக் களைத்துவிட்ட கலைஞர் கருணாநிதியை தமிழ் மக்கள் இனிமேல் நம்பிப் பயன் இல்லை. அவரிடம் பெரியாரின் தன்மானமும் அண்ணாவின் இனமானமும் இருந்திருந்தால் தமிழ்த் தேசியத்தின் முதல் எதிரி ஜெயலலிதா ஆட்சிக் கட்டிலில் ஏறி இருக்க முடியாது!
தமிழ்நாட்டைத் தமிழ் ஆய்ந்த தமிழன்தான் ஆள வேண்டும். வந்தவர்கள் போனவர்கள் ஆளக் கூடது. அப்போதுதான் காவேரி நீர் மட்டுமல்ல தமிழ் உணர்வும் தமிழ் மானமும் தமிழ் நாட்டில் பாய்ந்தோடும்.
இயக்குனர் திலகம் பாரதிராசா மூட்டிவிட்ட தமிழ்த் தேசியத் தீ எங்கும் பரவட்டும். அதில் தமிழ்ப் பகை வெந்து மடியட்டும்! ஒரு தமிழனுக்குத்தானும் தீங்கென்றால் அங்கெல்லாம் நாங்கள் இருப்போம். இது பிரபாகரன் காலம். (முழக்கம்-ஒக்தோபர் 04,2002)
Leave a Reply
You must be logged in to post a comment.