விடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வும், அவர்களின் எதிர்பார்ப்பும்

விடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வும், அவர்களின் எதிர்பார்ப்பும்

11 செப்டம்பர் 2019

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தபோது, அந்த இயக்கத்தின் அநேகமான துறைகளில், ஆண் உறுப்பினர்களுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

சண்டைக் களங்களில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்குப் பெண்களும் தலைமையேற்றிருந்தனர்.

இருந்தபோதும், இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்குப் பிறகு, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்காக பெரும் கஷ்டங்களையும், சவால்களையும் எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் உறுப்பினர்களின் நிலை தற்போது எவ்வாறுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, அவர்களில் சிலரை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது.

இறுதி யுத்தம் நிறைவுக்கு வந்தபோது, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரம் உறுப்பினர்கள், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.

அதற்கு முன்னதாக, புலிகள் இயக்கத்தின் கிழக்குத் தளபதி கருணா அம்மான் எனப்படுகிற விநாயக மூர்த்தி முரளிதரன், அந்த இயக்கத்திலிருந்து பிரிந்தபோது, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கணிசமான உறுப்பினர்களும் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி, தமது குடும்பத்துடன் சேர்ந்து கொண்டனர். அவ்வாறானவர்களும் தற்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே தமது வாழ்க்கையை எதிர்கொண்டு வருகின்றனர்.

13 வயதில் போராடத் துவங்கிய விஜயலட்சுமி

துரைராஜா விஜயலட்சுமி – அவ்வாறான முன்னாள் பெண் புலி உறுப்பினர்களில் ஒருவர். அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த விஜயலட்சுமி 1981ஆம் ஆண்டு பிறந்தவர். வீட்டுக்கு ஒரே பிள்ளை. விஜயலட்சுமியின் சிறிய வயதில், அவரின் அப்பா இறந்துவிட்டார். குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக அம்மா வெளிநாடு சென்றார். ஒரு கட்டத்தில் நிராதரவான நிலை ஏற்பட்டமை காரணமாக 1994ஆம் ஆண்டு, தனது 13ஆவது வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் இணைந்து கொண்டார்.

விஜயலட்சுமியை சில தினங்களுக்கு முன்னர் அவரின் வீட்டில் சந்தித்தேன். ஓடு மற்றும் தகரம் ஆகியவற்றால் கூரையாக வேய்ந்த பழைய வீடு ஒன்றில் அவர் வாழ்ந்து வருகிறார். அந்த வீட்டுக்கு அருகிலேயே கோழிக் கூண்டுபோல் ஒரு சின்னக் குடிசையொன்றும் உள்ளது. அது பற்றிக் கேட்டபோது; ” ஓடு வீடு மிகவும் பழையது. அதன் கூரை பழுதடைந்து விட்டது. பெரும் காற்று வீசும்போது, வீட்டுக் கூரை உடைந்து விழுந்து விடும் எனும் பயத்தில், குடிசைக்குள் வந்து விடுவோம்” என்று, வறட்டுப் புன்னகை கலந்த பதிலுடன், அவர் பேசத் தொடங்கினார்.

விஜயலட்சுமி
Image captionமுன்னாள் பெண் போராளி விஜயலட்சுமி

புலிகள் இயக்கத்தில் சேர்ந்த தனக்கு 3 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட்டதாகக் கூறும் விஜயலட்சுமி, அந்த இயக்கத்தின் காலால் படையில் ஐந்து ஆண்டுகளும், கடற்படையில் மூன்று ஆண்டுகளும் இருந்துள்ளார்.

மாங்குளம் ராணுவ முகாம் மீது புலிகள் நடத்திய தாக்குதல்தான், தான் கலந்து கொண்ட முதலாவது சண்டை என்கிறார்.

“கடற்புலிகள் அணியிலிருந்தபோது, ஒரு நாள் படகொன்றில் 34 போராளிகள் ரோந்தில் ஈடுபட்டிருந்தோம், அப்போது எம்மீது இலங்கைக் கடற்படையினரும் விமானப் படையினரும் கடும் தாக்குதலை மேற்கொண்டார்கள். படகிலிருந்த பலர் காயப்பட்டு இறந்தனர். ஒரு கட்டத்தில் நாங்கள் பயணித்த படகும் கவிழ்ந்தது. நான் நீந்திக் கரை சேர்ந்தேன். என்னைத் தவிர ஏனைய 33 பேரும் அந்தத் தாக்குதலில் பலியாகி விட்டார்கள்” என்று தப்பிப் பிழைத்த அனுபவத்தை பிபிசி உடன் விஜயலட்சுமி பகிர்ந்து கொண்டார்.

புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்த கருணா அம்மான் அந்த இயக்கத்திலிருந்து பிரிந்த பின்னர் ஏற்பட்ட குழப்ப நிலையினை அடுத்து, 2003ஆம் ஆண்டு அந்த இயக்கத்திலிருந்து விலகி தனது ஊருக்கு விஜயலட்சுமி திரும்பினார். அப்போது அவரின் அம்மாவும் ஊரிலேயே இருந்தார்.

“இயக்கத்திலிருந்து விலகி வந்த 6 மாதத்திலேயே எனக்குத் திருமணம் நடந்தது” என்று கூறும் அவருக்கு இப்போது மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

அவர்களில் மூத்த பெண்ணுக்கு 16 வயதாகிறது.

விஜயலட்சுமியின் இல்லம்
Image captionவிஜயலட்சுமியின் இல்லம்

மிக நீண்ட காலமாக தனது மகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்து வருவதாகவும் விஜயலட்சுமி கூறினார். அவரை நான் சந்திக்கச் சென்றிருந்த தருணத்திலும், அந்த மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அவரின் ஏனைய பிள்ளைகள் இருவரும் ஆண்கள்.

விஜயலட்சுமியின் கணவர் ஒரு கூலித் தொழிலாளி. “எங்கள் வருமானம் சாப்பாட்டுக்கே போதாமல் உள்ளது” என்று விஜயலட்சுமி கவலைப்பட்டார்.

“எனது வாழ்வாதாரத்துக்கென இதுவரை எந்தவொரு தரப்பும், எந்தவித உதவிகளையும் செய்யவில்லை” என்று கூறும் அந்தப் பெண்ணின் வீட்டில், காணுமிடமெல்லாம் வறுமையின் அடையாளங்கள் தெரிகிறது.

ஒரு சிறிய வீடு, வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கான போதிய வருமானம் – அதற்கான வழி. இவைதான் விஜயலட்சுமியின் இப்போதைய எதிர்பார்ப்புகளாக உள்ளன.

’முன்னர் இருந்த மரியாதை இப்போது இல்லை’

அம்பாறை மாவட்டம் – திருக்கோவில் பிரதேசத்தில் நாம் சந்தித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மற்றொரு முன்னாள் பெண் உறுப்பினர் கனகசுந்தரம் சரோஜினி.

“எனக்கு இப்போது 43 வயது. 1997ஆம் ஆண்டு இயக்கத்தில் சேர்ந்தேன். எனக்கு முன்னதாகவே இயக்கத்தில் என்னுடைய தம்பி இணைந்து கொண்டார்,” என்று கூறிய சரோஜினியிடம், “புலிகள் இயக்கத்தில் ஏன் இணைந்து கொண்டீர்கள்” என்று கேட்டேன்.

அந்த கேள்விக்கு சரோஜினி பதிலளிக்கவில்லை. மௌனமாக இருந்தார். அவரின் கண்கள் கலங்கின, திடீரென ஏற்பட்ட அழுகையை உதடுகளை இறுக்கியவாறு அடக்கிக் கொண்டார். ஆனாலும், கண்ணீரை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

“இந்த அழுகைக்குப் பின்னால், சொல்ல முடியாத காரணங்கள் ஏதாவது இருக்கிறதா”? எனக் கேட்டேன்.

சரோஜினி மீண்டும் பேசத் தொடங்கினார்.

கனகசுந்தரம் சரோஜினி
Image captionகனகசுந்தரம் சரோஜினி

தனது தங்கையொருவர் மிகவும் சுயநலத்துடன் சரோஜியின் எதிர்காலம் பற்றிய எவ்வித அக்கறைகளுமின்றி ஒரு தடவை நடந்து கொண்டமை, சரோஜினிக்கு பெருத்த ஏமாற்றத்தையும் வஞ்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் அவர் புலிகள் இயக்கத்தில் போய் சேர்ந்து கொண்டதாகக் கூறினார்.

“நான் எழுதியிருந்த ஓ.எல். (சாதாரண தரம்) பரீட்சையின் பெறுபேறு வெளியாகியிருந்த சமயத்தில்தான் இயக்கத்தில் சேர்ந்து கொண்டேன்”.

“புலிகளின் அலுவலகம் ஒன்றுக்குச் சென்று, நான் இயக்கத்தில் சேர வேண்டும் என்கிற விருப்பத்தைக் கூறினேன். என்னுடன் இன்னும் பல பெண் பிள்ளைகளும் இருந்தனர். எல்லோரையும் சேர்த்து, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தரவை பிரதேசத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்குதான் 3 மாதங்கள் ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொண்டேன். ஆனாலும், என்னை சண்டையிட அவர்கள் களத்துக்கு அனுப்பவில்லை. எனக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கினார்கள், தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்புக் கற்றுக் கொடுத்தார்கள், தாதியொருவருக்குத் தேவையான மருத்துவப் பயிற்சிகளை வழங்கினார்கள். ஆங்கிலம் கற்றுக் கொள்வதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை”.

“சண்டைக் களத்தில் காயப்படும் போராளிகளுக்கு ஆரம்ப கட்ட சிகிக்சையளிப்பதே எனக்குரிய கடமையாக இருந்தது” என்று கூறிய சரோஜினி, ஒரு தடவை, ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் காயப்பட்ட விஜயலட்சுமிக்கும் தான் சிகிச்சையளித்ததாகத் தெரிவித்தார்.

இவ்வாறு செயற்பட்டு வந்த நிலையில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களுக்கான கள மருத்துவப் பொறுப்பாளராக தான் நியமிக்கப்பட்டதாக சரோஜினி கூறினார்.

இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு புலிகளின் அனுமதியுடன் இயக்கத்திலிருந்து விலகி, குடும்பத்துடன் சரோஜினி சேர்ந்து கொண்டார்.

புலிகள் இயக்கத்தில் பிராந்திய முக்கியஸ்தராக இருந்த தனது தம்பி, கஞ்சிகுடியாறு பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், கருணா தரப்பினரே அந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்போது சரோஜினிக்கு 13 வயதில் மகளொருவர் இருக்கிறார். இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்த பின்னர், 2005ம் ஆண்டு சரோஜினி திருமணம் செய்து கொண்டார்.

கணவர் கூலி வேலை செய்வதால் கிடைக்கும் வருமானத்தில், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் குடும்பத்தை நடத்தி வருவதாக அவர் கூறுகின்றார்.

“ஆண்களுக்கு நிகராக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயற்பட்ட உங்களின் இப்போதைய வாழ்கை எப்படியிருக்கிறது” என்று சரோஜினியிடம் கேட்டேன்.

“இயக்கத்தில் இருந்த போது கிடைத்த மரியாதை இப்போதைய வாழ்க்கையில் இல்லை” என்றார்.

குட்டிமணி மாஸ்டர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயத்தில் ஒரு பயிற்சியாளராக இருந்தவர் நாகமணி கிருஷ்ணபிள்ளை. குட்டிமணி என்று புலிகள் இயக்கத்தில் அழைக்கப்பட்டார். இவர் ஆயுதப் பயிற்சி வழங்கும் ஒருவராக இருந்ததால், இவரை ‘குட்டிமணி மாஸ்டர்’ என்றுதான், புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் இப்போதும் அழைக்கின்றனர்.

இறுதி யுத்தம் வரை களத்தில் நின்று சண்டையிட்டவர் குட்டிமணி. யுத்தம் முடிவுக்கு வந்தபோது, இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார். பல வருடங்கள் இவர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர், சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த குட்டிமணி, தற்போது தனது உறவினர் ஒருவரின் சிறிய கடையொன்றில் பணிபுரிகின்றார்.

புனர்வாழ்வு பெற்றுத் திரும்பிய பின்னர் திருமணம் செய்து கொண்ட குட்டிமணிக்கு 3 வயதில் பெண் குழந்தையொன்று உள்ளது.

குட்டிமணி மாஸ்டர்
Image captionகுட்டிமணி மாஸ்டர்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்ளை ஒருங்கிணைத்து, அவர்களின் நலன்கள் தொடர்பிலும், அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் குட்டிமணி முன்னின்று செயற்பட்டு வருகின்றார்.

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, அவரிடம் பேசினேன்.

“புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் புனர்வாழ்வு பெற்றோர், புனர்வாழ்வு பெறாதோர் என்று இரண்டு வகையினர் உள்ளனர்.

“எவ்வாறாயினும் அம்பாறை மாவட்டத்தில் மட்டும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சுமார் 350 பேர் உள்ளனர். இவர்களில் சுமார் 100 பேர் பெண் பேராளிகள்”

“புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில் ஒரு சிலருக்கு அரசு உதவிகள் கிடைத்துள்ளன. ஆனால், இறுதி யுத்தத்துக்கு முன்னர் இயக்கத்திலிருந்து விலகிய நிலையில் புனர்வாழ்வு பெறாதோருக்கு, எந்தவித உதவிகளும் யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை” என்கிறார் குட்டிமணி.

களத்தில் நின்று போர்களை எதிர்கொண்ட புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் மிக அதிகமானோர், தமது அன்றாட உணவுக்கான வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே, தினமும் வேறொரு வகையான போரினை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை, அவர்களுடன் பேசியபோது புரிந்து கொள்ள முடிந்தது.

பிரபாகரனின் பூர்வீக வீட்டை இலங்கை ராணுவம் இடித்தது ஏன்?

பிற செய்திகள்:

காந்திக்கு ஆர்.எஸ்.எஸ் உடன் உண்மையில் எப்படிப்பட்ட உறவு இருந்தது?

இலங்கையில் தற்கொலை செய்யும் இடமாக மாறியுள்ள வரலாற்று அடையாளம்

நரேந்திர மோதி vs இம்ரான் கான்: ஐ.நாவில் யாருடைய உரை சிறப்பாக இருந்தது?

ஏமன் போர்: செளதி படைகளை பிடித்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் – விரிவான தகவல்கள்

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply