‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்….. அஹம் பிரம்மாஸ்மி ’
தலைவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற, கவியரசரின் வரிகளில், ‘மாமா’ மகாதேவன் அவர்களின் இசையில், தெய்வப்பாடகரின் கம்பீரக் குரலில் கேட்டாலே தன்னம்பிக்கையும் எழுச்சியும் கொடுக்கும் ‘உன்னை அறிந்தால்…’ பாடல் பற்றி இன்று எழுதலாம் என்று தோன்றிவிட்டது. காரணம் பிறகு சொல்கிறேன். இரண்டு நாட்கள் முன்பு நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்கள் இந்தப் பாடலை நமது திரியில் தரவேற்றியிருந்தார்.
‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலைவணங்காமல் நீ வாழலாம்…
மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மானென்று சொல்வதில்லையா?
தன்னைத் தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?….
மானத்திலே மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான் போல இருக்க வேண்டும். தன்னையும் அறிந்து கொண்டு ஊருக்கும் வழிகாட்டும் அறிவுரைகளை சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா? அப்படி ஊருக்கு நல்லது சொல்லி தலைவர் ஆனவருக்கு நம் தலைவரே உதாரணம்.
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகரில்லையா?
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளையில்லையா?…..
இப்புவியில் நேராக, நேர்மையாக வாழும் எல்லோருமே சாமிக்கு நிகர்தான். இதைத்தான் வள்ளுவரும் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார். பெரியவர்கள் சொல்வார்கள். தெய்வத்திடம் அதுவேண்டும், இது வேண்டும் என்று கேட்காதீர்கள். உனக்கு எது வேண்டும்? என்று தெய்வத்துக்கு தெரியாதா? என்று. அது போல பிறரின் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளைகள். அப்படி மக்களுக்கு தேவை அறிந்து வாரிக் கொடுத்த தலைவரும் தெய்வத்தின் பிள்ளைதானே?
மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்றுக் குறையாத
மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்…
இந்த வரிகளுக்கு பொருத்தமானவர் தலைவர்தான் என்றாலும், நம்மையும் இதுபோல சபைகளில் நடக்கும்போது மாலைகள் விழுவதற்கும் மாற்றுக்குறையாத மன்னவன் என்றும் மற்றவர்கள் போற்றிப் புகழும் அளவுக்கும் உயர்ந்திட வேண்டும் என்கிறார். தான் உயர்ந்தது போல நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்துக்கு பயன்பட்டு அதன் மூலம் பாராட்டு பெறும் அளவுக்கு உயர வேண்டும் என்கிறார்.
இந்தப் பாடலில் தலைவரின் கெளபாய் டிரஸ்சும் ஸ்டைலும் அட்டகாசம். ‘மா…. ஹூ.. ஹா.. என்ற ஏ.எல்.ராகவனின் தாளக்கட்டு குரலுக்கேற்ப குதிரையில் இருந்து லாவகமாக தலைவர் இறங்கும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தலைவர் எப்போதுமே நடித்துக் கொண்டிருக்கும்போதும் கூட, சூழ்நிலை குறித்து கவனமாக இருப்பவர். கடைசி பாராவின் போது, நடிகையர் திலகம் சாவித்திரியுடன் தலைவர் வேகமாக, ஸ்டைலாக நடந்து வருவார். சாவித்திரியின் பின்னால் குதிரை வந்து கொண்டிருக்கும்.
ஒரு கட்டத்தில் சாவித்திரியின் முதுகை முட்டுவது போல அவரது நடையை விட வேகமாக குதிரை வரும். பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை என்றாலும் கூட, குதிரை தன் முகத்தால் சாவித்திரியின் முதுகை தள்ளினால் அவர் கீழே விழலாம். அல்லது தடுமாறி ரீ டேக் எடுக்கும் நிலை ஏற்படலாம்.
குதிரை சாவித்திரியின் பின்னால் முட்டுவதைப் போல வருவதை ஓரக்கண்ணால் கவனிக்கும் தலைவர், அதன் முகத்தை பிடித்து பக்கவாட்டில் தள்ளிவிடுவார். குதிரையும் தள்ளிச் செல்லும். இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் திரு.சிவாஜி செந்தில் தரவேற்றிய இந்தப் பாடலில் இக்காட்சியை கவனித்தால் தெரியும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாடல் வரிகளுக்கும் சரியாக வாயசைத்துக் கொண்டே குதிரையையும் கவனித்து அதன் முகத்தைப் பிடித்து தள்ளிவிடும் கவனமும், நுட்பமும், திறமையும், விழிப்புணர்வும் தலைவருக்கே சொந்தம்.
சரி… இப்படி உலகத்தில் போராடி, உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் வாழ வேண்டும், பூமியில் நேராக வாழ வேண்டும், மாபெரும் சபையில் நடந்தால் மாலைகள் விழ வேண்டும், பிறர் தேவையறிந்து வாரிக் கொடுக்க வேண்டும், ஊருக்கும் நல்லது சொல்லி தலைவர்கள் ஆக வேண்டும் ……….இந்த வேண்டும்கள் எல்லாம் நடக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்… என்று தலைவர் வழிகாட்டுகிறாரே. அப்படி நம்மை அறிய வேண்டும். அப்படி அறிந்தால் இந்த சிறப்புகளைப் பெறலாம். அது மட்டுமல்ல….
‘ஜீவாத்மா (மனிதன்) வேறு, பரமாத்மா (தெய்வம்) வேறு அல்ல, இரண்டும் ஒன்றே’ என்று அத்வைத தத்துவத்தை போதித்த ஆதிசங்கரரும் நம்மை நாம் அறியச் சொல்கிறார். (நாம் வேறு, தெய்வம் வேறு என்பது இரண்டாக பார்க்கும் கொள்கை. நாமும் தெய்வமும் வேறு அல்ல ஒன்றே, என்பதை விளக்குவதே அத்வைத கொள்கை. த்வைதம் என்றால் இரண்டாக காண்பது, அத்வைதம் என்றால் இரண்டல்லாமல் ஒன்றாக பார்ப்பது. சாத்தியம் என்பதற்கு எதிர்ப்பதமாக முன்னாலே ஒரு ‘அ’ சேர்த்து அசாத்தியம் என்கிறோமே. அதேபோல த்வைதம், அதற்கு எதிர்ப்பதம் அத்வைதம்)
அப்படி, தெய்வம் வேறு நாம் வேறு அல்ல, என்பதை நாம் உணர்ந்தால் உபநிடதங்களில் ஒன்றான பிரகதாரண்ய உபநிடதத்தில் ஆதிசங்கரர் போதித்த ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற முடிவுக்கு வருவோம். அதாவது நாமே கடவுள் என்று பொருள். மனிதனே கடவுள். மகாகவி பாரதியாரும் ‘தெய்வம் நீ என்று உணர்’ என்று கூறியிருக்கிறார்.
கடவுள் தனியாக எங்கும் இல்லை. இதைத்தான் ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்றார் பேரறிஞர் அண்ணா.
அதன்படி, மக்களை, ஏழைகளை… தெய்வமாக அவர்களுக்கு செய்யும் சேவையையே இறைவன் தொண்டாக உணர வேண்டுமானால், நம்மை உணர வேண்டும். அப்படி நம்மை உணர்ந்தால்
அதாவது…..
உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்….. அஹம் பிரம்மாஸ்மி.
இந்தப் பாடலை இன்று எழுதலாம் என்று தோன்றி விட்டது என்று முதலில் கூறினேனே. அந்த உந்து சக்தி ஏற்படக் காரணம், மேலே கூறியபடி அத்வைத தத்துவத்தை போதித்த ஆதிசங்கரர் அவதரித்த நாள் இன்று.
‘அஹம் பிரம்மாஸ்மி’.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Leave a Reply
You must be logged in to post a comment.