சஜித் பிரேமதாசாவின் அன்னச் சின்னத்துக்கு வாக்களித்து அவரை வெற்றியடைய வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!
எதிர்வரும் நொவெம்பர் 16 அன்று நடைபெறும் சனாதிபதி தேர்தலில் புதிய சனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள வேண்டுகோளை கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமனதோடு வரவேற்கிறது.
என்னென்ன காரணங்களுக்காக 2010 ஆம் ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதி பொன்சேகாவையும் அடுத்து 2015 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவையும் ஆதரித்தோமோ அதே காரணங்களுக்காக சஜித் பிரேமதாசாவையும் ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
நல்லாட்சி அரசில், குறிப்பாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக சனாதிபதி சிறிசேனாவும் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கவும் பிரிந்து நின்று முரண்பட்டுக் கொண்டாலும் இந்த அரசிற்கு நாம் வழங்கிய ஆதரவு காரணமாக அரசியல்துறையிலும் பொருளாதார மேம்பாட்டிலும் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம்.
இடைக்கால அறிக்கையை அரசியலமைப்பு சபையிலும் பின்னர் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற முடியாது போனாலும் –
(1) மங்கள முனசிங்கா தலைமையிலான தெரிவுக் குழு அறிக்கை (1997)
(2) சந்திரிகா குமாரதுங்காவின் அரசியலமைப்பு சட்ட வரைவு (2000)
(3) மகிந்த இராசபக்ச காலத்தில் திஸ்சா விதாரண தலைமையிலான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளது அறிக்கை (டிசெம்பர் 2006)
(4) அரசியலமைப்பு மற்றும் நிபுணர் குழு அறிக்கை (டிசெம்பர் 2006) , மற்றும்
5) மகிந்த இராசபக்ச அவர்கள் தீர்வுக்கான குழுக்கூட்டத்தில் அதனை ஆதரித்து ஆற்றிய உத்தேச திட்டங்கள் அடங்கிய உரை (யூலை 2006) போன்று இந்த இடைக்கால அறிக்கையும் ஓர் ஆவணமாக பதியப்பட்டுள்ளது.
மேற்கூறிய ஐந்து ஆவணங்களையும் அடிப்படையாக வைத்தே தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அது இந்த தோதல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
சஜித் பிரேமதாசாவின் தேர்தல் அறிக்கையில் “தற்போதைய நாடாளுமன்றத்தில் அரசமைப்பு சீர்திருத்த முயற்சி அனைத்துப் பங்குதாரர்களுடனும் முன்னெடுக்கப்பட்டு தாமமின்றி முடிக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் “பிளவு படாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிக பட்ச அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்படும்” என்றும் கூறுகிறது. இந்தத் தேர்தல் அறிக்கையில் “ஒற்றையாட்சி முறைமை உறுதிப்படுத்தப்படும்’ என்று எங்கும் சொல்லப்படவில்லை.
ஆனால் சில போலித் தேசியவாதிகள் இடைக்கால அறிக்கை ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் அதனை நிராகரிக்க வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் கூறிவருகிறார்கள். குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒற்றையாட்சியை வலியுறுத்தும் அந்த இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் எனக் குரங்குப் பிடி பிடித்துக் கொண்டு நிற்கிறது. சனாதிபதி தேர்தலையும் புறக்கணிக்கச் சொல்கிறது.
2005 ஆம் ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தலைப் புறக்கணித்ததால் ஏற்பட்ட பின் விளைவுகளை ததேமமு கணக்கில் எடுக்க மறுக்கிறது. மேலும் இப்போது நடைபெறும் தேர்தலையும் புறக்கணிக்குமாறு ஊழையிடுகிறது.
இடைக்கால அறிக்கையின் முதல் இரண்டு பக்கங்களைப் படித்தாலே சாதாரண படிப்பறிவுடையவர்களுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்வது அப்பட்டமான பொய் என்பது விளங்கும்.
இடைக்கால அறிக்கையின் உறுப்புரிமை 1 மற்றும் 2 இல் எழுதப்பட்டுள்ள வாசகத்தில் ஒற்றையாட்சி என்ற சொல் அதில் காணப்படவில்லை. ஏக்கியராஜ்ஜிய என்ற சிங்களச் சொல்லுக்கு ஒருமித்த நாடு என்றே தமிழில் வியாக்கியானம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏக்கியராஜ்ஜிய என்றால் ஒற்றையாட்சிதான் என்று யாராவது அடம்பிடித்தால் அப்படியானவர்களை விட்டுவிட்டு நாம் மேலே செல்ல வேண்டும்.
கடந்த செப்தெம்பர் 21, 2017 இல் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் கூறப்பட்ட அதிகாரப் பகிர்வு 13ஏ திருத்தத்தை விடப் பல மடங்கு தமிழ்மக்களுக்கு நன்மையானது. அந்த அறிக்கையைக் காய்தல் உவத்தல் இன்றி ஆழ்ந்து படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.
உறுப்புரிமை 1 மற்றும் 2 என்ன சொல்கிறது?
இலங்கையின் இறைமை மக்களுக்குயுரியதாகஇருப்பதோடு பாரதீனப்படுத்த முடியோததாகவும் பிரிக்கப்பட முடியாததாகவும் இருத்தல் வேண்டும்.
இலங்கை பிரிக்கப்படாத மற்றும்பிரிக்கப்பட முடியாத ஒரு நாடாக இருத்தல் வேண்டும்.
பிரிந்து செல்லுதலை (நாட்டைக் கூறுபோடுதல்) தடுக்கும் பொருட்டு அரசியலமைப்பில் விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.
அதிகூடிய அதிகாரப் பகிர்வு (maximum devolution) வழங்கப்படல்வேண்டும்.
அரசியலமைப்பு இலங்கையின்உச்ச சட்டமாகயிருத்தல் வேண்டும்.
அரசியலதைப்புக்கான திருத்தம் அல்லது நீக்கம் அல்லதுமாற்றீடு அரசியலமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நாடாளுமன்றத்தினாலும் இலங்கை மக்களாலும் (தேவைப்படுமிடத்து) மேற் கொள்ளப் படுதல் வேண்டும்.
மேலும் இந்த உறுப்புரைகளின் கீழ் (1,2) விடயங்கள் என்ற தலைப்பில் இடைக்கால அறிக்கை கூறுவதாவாது :
சனாதிபதி அவர்கள் அரசியலமைப்புச் சபையைத் தாபிப்பதற்கான தீர்மானம் பற்றி உரையாற்றுகையில் தெற்கில் உள்ள மக்கள் “பெடரல்”(Federal) எனும் பதம் தொடர்பாக அச்சம் அடைந்திருக்கும் வேளையில் வடக்கில் மக்கள் “யூனிற்றரி” (Unitary) எனும் பதம் தொடர்பிலும் அச்சடைந்திருந்தனர் எனக் கூறினார்.
அரசியலமைப்பானது மக்கள் அச்சமடைய வேண்டிய ஆவணமொன்றல்ல. “யுனிற்றரி ஸ்ரேற்” (Unitary State) எனும் ஆங்கிலச் சொல்லின் பண்டைய வரைவிலக்கணம் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் வட அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்திலும் தற்போது ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லக் கூடியதாயுள்ளது. ஆங்கிலப் பதமான “யுனிற்றரி ஸ்ரேற்” (“Unitary state” ) இலங்கைக்குப் பொருத்தமற்றதாக இருக்கும்.
பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு என்பதைச் சிங்களப் பதமான “ஏக்கிய இராஜ்ஜிய” நன்கு விபரிக்கிறது. இது தமிழ் மொழியில் “ஒருமித்த நாடு” என்பதற்குச் சமம் ஆகும். இத்தகைய சூழமைவுகளில், பின்வரும் உருவாக்கம் பரிசீலிகப்படலாம்:
“ஸ்ரீலங்கா (இலங்கை), அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டவாறு தத்துவங்களைப் பிரயோகிப்பதற்கு ஏற்புடையதான மத்திய மற்றம் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டுள்ள சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள “ஏக்கிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு” எனும் குடியரசாகும்.
இந்த உறுப்புரையியின் ஏக்கிய இரோஜ்ஜியம்/ ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு எனும் பொருளாகும். அத்துடன், அரசியலமைப்புக்கான திருத்தம் அல்லது நீக்கம் அல்லது மாற்றீடு அரசியலமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விதமாக நாடாளுமன்றத்தினாலும் இலங்கை மக்களாலும் எக்காலத்திலும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
முதன்முறையாக நாடு மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டதாக இருக்கும். இங்கே இணைப்பாட்சி என்ற பதம் பயன்படுத்தப் படாவிட்டாலும் இணைப்பாட்சிக்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் பொருள் என்னவென்றால் இணைப்பாட்சியில் காணப்படுவது போல அதிகாரம் பேரளவு மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஒற்றையாட்சி என்ற சொல் எங்குமே காணப்படவில்லை. அத்துடன் ஏக்கியராஜ்ஜிய என்ற சிங்களச் சொல்லுக்கு யாரும் நினைத்தபடி பொருள்கொள்ளக் கூடாதென்பதற்காக ‘ஏக்கியராஜ்ஜிய’ என்ற சிங்களச் சொல்லுக்கு (தமிழில்) ஒருமித்த நாடு என்ற வியாக்கியானம் அடுத்த வரியிலேயே சொல்லப்பட்டுள்ளது. இதன் பின்னரும் ஏக்கியராஜ்ஜிய என்றால் ஒற்றையாட்சிதான் என்று சிலர் அடம் பிடிக்கிறார்கள்.
இன்னும் சிலர் தமிழரின் ஒன்றித்த பலத்தை உலகுக்குக் காட்டிட சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு கேட்கிறார்கள். இந்தத் தேர்தலில் வெற்றிபெற அறவே வாய்ப்பில்லாத ஒருவரை, கட்டுக்காசை நிச்சயம் பறிகொடுக்கப் போகும் ஒருவரைக் காட்டி தமிழ்மக்களது ‘ஒற்றுமையை’ வெளிப்படுத்துவது சரியா? அல்லது வடக்கு – கிழக்கு மாகாணத்தில் 2015 ஆம் ஆண்டில் நடந்த சனாதிபதி தேர்தல் போல் இப்போது பல இலட்சம் வாக்குகளை சஜித் பிரேமதாசாவுக்கு எடுத்துக் கொடுக்கப் போகிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் காட்டி எமது ஒற்றுமையை வெளிப்படுத்துவதா சரியா? இதில் எது சரி என்பது தமிழ்மக்களுக்குத் தெரியும்.
சனாதிபதிக்கான போட்டி புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்க்ஷவுக்கும் இடையிலேயேதான் நடக்கின்றது. கடந்த தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியேயுள்ள 10 மாவட்டங்களில் பின்னடைவைச் சந்தித்த சிறிசேனா தமிழ் – முஸ்லிம் மக்கள் போட்ட வாக்குகளால் அவர் 449,072 அதிகப்படியான வாக்குகளால் வெல்ல முடிந்தது. சஜித் பிரேமதாச தனது தேர்தல் அறிக்கையில் ஐந்து கட்சித் தலைவர்கள் கூட்டாக விடுத்த 13 அம்ச வேண்டுகோள்களில் 9 க்கு அவரது தேர்தல் அறிக்கையில் பிரதிபலிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் காட்டப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை புதிய சனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமாதாசாவின் வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2010, 2015 இல் கடைப்பிடிக்கப்பட்ட தந்திரோபாயமே (Tactic) இப்போது நடைபெறும் தேர்தலிலும் பின்பற்றப்படுகிறது.
துணையின்றித் தனித்திருப்பவன் தன்னை எதிர்த்த இரு பகையில் ஒன்றினைத் துணையாகக் கொள்ள வேண்டும். (குறள் 875 – அதிகாரம் 88 பகைத்திறன் அறிதல்).
(He who is alone and helpless while his foes are two should one of them as an agreeable help (to himself – Kural 875 – Chapter 88 On Enmity)
சிறிலங்கா பொதுசன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ஐந்து கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளை அடியோடு நிராகரித்துள்ளார். அதற்கு அவர் சொன்ன ஒரேயொரு காரணம் அந்தக் கோரிக்கைகள் நாட்டின் இறைமையைக் கீழறுக்கும் (Undermine) என்பதாகும்.
கோட்டாபய ஒரு அபாயகரமான மனிதர் என்பதை அவரது கடந்த காலச் சொல்லும் செயலும் எண்பிக்கும். அது தெரிந்தும் கருணா, பிள்ளையான், வியாழேந்திரன், தேவானந்தா, அங்கஜன் போன்றோர் தங்களது சுயநல அரசியல் இலாபத்துக்காகக் கோட்டாபயவுக்கு வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கேட்கிறார்கள்.
மகிந்த இராசபக்சவின் ஆட்சியில் 25 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரவிராஜ், யோசேப் பரராஜசிங்கம் கொல்லப்பட்டார்கள். இரவிராஜ் அவர்கது கொலையை இராணுவப் புலனாய்வுப் பிரிவே மேற்கொண்டது. அதில் பிள்ளையானின் அடியாட்களும் இருந்தார்கள். யோசேப் பரராஜசிங்கத்தை நத்தார் (டிசெம்பர் 24, 2005) நள்ளிரவு திருப்பலி பூசை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது தேவாலயத்தில் வைத்து பிள்ளையானும் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) அவனது அடியாட்களும் சுட்டுக் கொன்றார்கள். தமிழ்மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த ஒருவரின் குரல் ஆயுதத்தால் அடக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசேப் பரராஜசிங்கம், நடராசா இரவிராஜ் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக விசாரணைக்காக அழைக்கப்பட்ட சந்திரகாந்தன் 2015 அக்டோபர் 14 அன்று கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளான். மகிந்த இராசபக்சவின் ஆட்சிக் காலத்தில் இந்தப் படுகொலைகள் மூடி மறைக்கப்பட்டன. அண்மையில் சிறிலங்கா பொதுசன முன்னணியின் தலைவர் மகிந்த இராசபக்ச யோசேப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மட்டக்களப்புச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானைச் சந்தித்துக் குசலம் விசாரித்தார். இதன் மூலம் அவர் தமிழ்மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறார் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
எனவே அகத்தில் உள்ள எமது தமிழ் உறவுகள் முதலில் தங்கள் விலை மதிக்க முடியாத வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். தேர்தலைப் புறக்கணிக்குமாறு கேட்போரைப் புறக்கணிக்க வேண்டும். தமிழ்மக்கள் சஜித் பிரேமதாசாவின் அன்னச் சின்னத்துக்கு வாக்களித்து அவரை வெற்றிவாகை சூட வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
கனடா
12-11-2019
Leave a Reply
You must be logged in to post a comment.