தமிழ்நாடு எப்படி உருவானது?
விவேக் கணநாதன்
இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களின் கோரிக்கைகளின் வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய மாகாணத்திலிருந்த ஒரிசாவில் 1895ம் ஆண்டு இந்தி திணிக்கப்பட்டபோது, தங்களை தனி மாகாணமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரிய மக்கள் போராட்டத்தை துவங்கினார்கள். தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் 1935-ல் ஒரிசா தனி மாகாணமாக ஆனது.
இந்தியாவை பல்வேறு மொழி தேசிய இனங்கள் அடங்கிய கூட்டுநாடாக பார்க்கும் அறிவியல் பார்வை 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே வலுவடைந்தது. மொழிவழி தேசிய இனங்களின் அரசியல் உரிமையை அங்கீகரிக்கும் வகையில், தேசிய இயக்கமாக இருந்த காங்கிரஸ் 1921ம் ஆண்டு முதலே அந்தந்த மாநிலங்களில் உள்ள மொழிகளுக்கு, மொழிவழி மாகாண கமிட்டிகளை ஏற்படுத்தி இயங்கத் துவங்கியது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் வெளியேறுவது உறுதியாகிவந்த சூழ்நிலையில், 1940களுக்கு பிறகு மொழிவாரி மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை தீவிரமடைந்தது
சென்னை மாகாணம்
பிரிட்டிஷ் இந்தியாவில் தென்னிந்தியா என்பது சென்னை மாகாணமாக நிர்வகிக்கப்பட்டு வந்தது. சென்னை மாகாணம் என்பது முழுமையான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவின் மலபார் பகுதிகள், கர்நாடகத்தின் பெல்லாரி மாவட்டம், உடுப்பி, தட்சிண கன்னடா ஆகிய மாவட்டங்கள், ஒரிசாவின் தெற்குப்பகுதி, அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பெரும்பகுதியாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த போது, சென்னை மாகாணத்தின் பரப்பளவு சுமார் 1 லட்சத்து 97 ஆயிரம் சதுர மைல்கள். தென்னிந்தியாவில் கேரளத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம், கொச்சின் சமஸ்தானம், ஆந்திராவில் ஹைதராபாத் சமஸ்தானம், கர்நாடகத்தில் மைசூரு சமஸ்தானம், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகியவை மட்டுமே பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்படாத தனி சமஸ்தானங்களாக இயங்கி வந்தன.
பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை மாகாணமாக இயங்கி வந்தபோதே, ஆந்திராவை தனிமாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆந்திர பகுதி மக்களால் எழுப்பப்பட்டது. 1913இல் ஆந்திர மகாசபை என்ற அமைப்பு உருவானது. அன்றைய சென்னை மாகாண அரசின் வேலைவாய்ப்பில் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களும், மராத்தியப் பார்ப்பனர்களுமே அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர். ஆந்திர மாணவர்களுக்குப் போதுமான இடம் கிடைக்க வில்லை. இதன் காரணமாகவே தெலுங்குக்காரர் களுக்குத் தனிமாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை உருவானது என்கிறார் ஆய்வாளர் இன்னையா.
ஆந்திராவின் போராட்டம்!
ஆந்திர மொழி பேசுபவர்களுக்கென தனி அரசியல் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காகவே, 1918ஆம் ஆண்டே நீதிபதி சுப்பராவ் என்பவர் தலைமையில் ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியை ஆந்திர காங்கிரஸார் அமைத்துக் கொண்டனர். 1921ல் மகாத்மா காந்தி மொழி வாரியாக காங்கிரஸ் மாகாண கமிட்டிகளை அமைப்பதற்கு முன்பே ஆந்திரர்கள் இப்படிச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கர்கள் மட்டும் செயல்படுவதற்காக அமைக்கப்பட்ட இந்த ஆந்திர பிரதேச காங்கிரஸின் தலைமை பீடம், ஹைதராபாத்திலோ, வேறு தெலுங்கு பகுதியிலோ அமைக்கப்படவில்லை. மாறாக, சென்னையில் இருந்தே ஆந்திர கமிட்டி செயல்படத் துவங்கினர். காரணம், தெலுங்கர்களை பொறுத்தவரை சென்னை என்பது ஆந்திரர்களுக்கு உரியது என்றே அவர்கள் நம்பினர்.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதில் பிரதானமாக இரண்டு சிக்கல்கள் இருந்தன. ஒன்று இந்தியாவின் மிகப்பெரும் நகரங்களில் ஒன்றாக இருக்கும் சென்னை ஆந்திராவோடு இருக்க வேண்டும் என தெலுங்கர்கள் விரும்பினர். இன்னொன்று திருத்தணி, திருப்பதி, திருக்காளத்தி என்கிற காளகஸ்தி, பல்லவனேரி, சித்தூர், புத்தூர், மதனப்பள்ளி, வாயல்பாடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டம் யாருக்கு என்பது?
1947 ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா பிரிட்டிஷிடமிருந்து விடுதலை பெற்ற மறுதினமே தமிழரசு கழகத்தின் நிறுவனர் மா.பொ.சி, மலங்கிழார், வேங்கடசாமி நாயுடு, பி.ஜனார்த்தனம் போன்றோர் வடக்கு எல்லை காக்கும் போராட்டத்தை தொடங்கினர். வேங்கடத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று திருப்பதிக்காகவும், தணிகை தமிழருடயதே என்று திருத்தணிக்காகவும், சித்தூர் தமிழருக்கே என்று சித்தூர் தாலுக்காவின் தமிழக பகுதிகளுக்காகவும் அவர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை யாருக்கு ?
இந்நிலையில், இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்களை பிரிப்பதற்காக 1948 ஜூன் மாதம் நீதிபதி தார் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. 1948 டிசம்பர் மாதம் தனது அறிக்கையை அளித்த தார் கமிட்டி, எரிந்துகொண்டிருந்த ஒரு பிரச்னையை புதிய திசையில் திருப்பியது, அதுதான் சென்னை யாருக்கு என்கிற பிரச்னை!
தார் கமிட்டி கொடுத்த அறிக்கையில் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படும்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில், 70 சதவீதம் பேருக்கு மேல் ஒரே மொழியைப் பேசும் மக்கள் இருந்தால் தான் அதை ஒரு மொழிப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் 70 சதவீதம் பேருக்கு கீழாக ஒரே மொழியைப் பேசும் மக்கள் உள்ள பகுதியை ‘இரு மொழியாளர் பகுதி’ (அ) பல மொழியாளர் பகுதி என்றே கருதவேண்டும் என்ற கருத்தை அறிவித்தது. சென்னையில் தமிழர்கள், தெலுங்கர்கள் இருவருமே வசித்து வருவதாலும், சென்னை இந்திய அளவில் மிக முக்கியமான நகரமாக இருப்பதாலும் சென்னையை தனி மாகாணப்பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றது தார் கமிட்டி அறிக்கை.
தார் கமிட்டி அறிக்கைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாடு மட்டுமல்ல, ஆந்திராவிலும், வட இந்தியாவின் பலபகுதிகளிலும் கூட எதிர்ப்பை சம்பாதித்த தார் கமிஷன் அறிக்கை தோல்வி பெற்ற அறிக்கையாக அத்தோடு நின்றுபோனது.
தார் கமிட்டி தோற்றுப்போன நிலையில், மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி முடிவெடுக்க ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், பட்டாபி சீத்தாராமையா ஆகியோர் தலைமையில் மூவர் கமிட்டி அமைக்கப்பட்டது. நேரு தலைமையிலான இம்மூவர் கமிட்டி, ஆந்திராவை தனிமாநிலமாக பிரிக்க இசைவு தெரிவித்தாலும், சென்னையை தங்கள் மாநிலத்துக்குள் அமைக்க வேண்டும் என ஆந்திரர்கள் கோருவதை நிறுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. நேரு, பட்டேல், பட்டாபி அடங்கிய மூவர் குழுவின் பரிந்துரையின்படி, சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவை தனியாக பிரிப்பதற்காக, சென்னை மாகாண அரசாங்கம் ஒரு குழு ஒன்றை அமைத்தது. அன்றைய சென்னை மாகாண முதல்வர் குமாரசாமி ராசா தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழு 17 முறை கூடி விவாதித்தது.
சென்னை மாகாண அரசின் எல்லாத் துறைகளைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்த அக்குழு, 1949 டிசம்பரில் தனது அறிக்கையை அளித்தது. தமிழ்நாடு – ஆந்திர பிரிவினை குழு அளித்த அறிக்கையில்,
*சென்னை மாகாண அரசு சென்னைக்கு ஈடாக ஆந்திராவில் புதிய தலைநகரை ஏற்படுத்திக் கொள்ள ரூபாய் ஒரு கோடி கொடுக்க வேண்டும்
* பிரிக்கப்படும் புதிய ஆந்திரத்தின் தலைநகர் ஆந்திர எல்லைக்குள் அமைய வேண்டும்
* ஆந்திராவின் உயர்நீதி மன்றம் ஆந்திர எல்லைக் குள் அமைய வேண்டும்
*அன்றைக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் 16 பேரில் 7 நீதிபதிகள் புதிய ஆந்திர உயர்நீதி மன்றத்திற்குச் செல்ல வேண்டும்
*சென்னை மாகாண அரசில் பணியில் இருந்த 28 IAS அதிகாரிகளில் 11 பேர் புதிதாக அமையும் ஆந்திராவுக்குச் செல்ல வேண்டும்
* இந்தியா ஒரு குடியரசு நாடாக அறிவிக்கப்பட இருக்கும் 1950, ஜனவரி 26 அன்றே ஆந்திர மாநிலமும் அமைய வேண்டும் என்று பரிந்துரைத்தது.
பொட்டி ஸ்ரீராமுலு
ஆனால், ஆந்திர பிரிவினைக்குழுவின் இந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட மத்திய அரசு சுமார் 3 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விளைவு, ஆந்திர மாநிலம் அமைவதற்காக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த துவங்கினார் பொட்டி ஸ்ரீராமுலு. சென்னையிலுள்ள மயிலாப்பூரில் சுமார் 57 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீ ராமுலு 1952 டிசம்பர் 15ம் தேதி உயிர் நீத்தார். பொட்டி ஸ்ரீ ராமுலுவின் மரணத்தையொட்டி, “ஆந்திரர்கள் சென்னை தங்கள் மாநிலத்துக்கு வேண்டும் என்று கேட்காமல் இருந்தால் ஆந்திர மாநில பிரிவினை பரிசீலிக்கப்படும்” என மத்திய அரசு அறிவித்தது. பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்தால், சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட ஆந்திர பகுதிகள் கலவர பூமியாகின. விஜயவாடா இரயில் நிலையத்தை அடித்து நொறுக்கினர். துணை இராணுவப் படை வரவழைக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடைபெற்றுச் சிலர் கொல்லப்பட்டார்கள். மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்த பிறகு, புதிய ஆந்திர மாநிலத்தை உருவாக்குவதற்காக நீதிபதி வாஞ்சு தலைமையிலான குழுவை அமைத்தது மத்திய அரசு.
ஆந்திரா பிரிந்துசென்றாலும், தங்களின் நிரந்தர தலைநகரம் சென்னையிலேயே இருக்கவேண்டும் என்று ஆந்திரர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தற்காலிக தலைநகராகக்கூட சென்னை இருக்கக்கூடாது என்றும் அது தேவையில்லாத தொந்தரவை ஏற்படுத்தும் என்றும் தமிழ்நாடு சார்பாக வலியுறுத்தப்பட்டது. இரண்டு மாநிலங்களின் குரலையும் கேட்ட நீதிபதி வாஞ்சு, தனது அறிக்கையை 1952 பிப்ரவரி மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தார்.
ஆனால், ஆந்திர பிரிவினை கமிட்டி தலைவர் வாஞ்சு அறிக்கையில், சென்னை ஆந்திராவின் தற்காலிகத் தலை நகராக 3 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம். ஆந்திரர்களுக்குச் சென்னையின் மீது எவ்வித உரிமையும் இல்லை. விருந்தாளிகளைப் போல அல்லது வாடகைதாரர்களைப் போல அவர்கள் இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர்கள் சென்னையில் இருக்கக் கூடாது” என்று வலியுறுத்தியிருந்தார்.
வாஞ்சு கமிஷன் அறிக்கை வெளியான பிறகு, அன்றைய சென்னை மேயர் செங்கல்வராயன் தலைமையில் அனைத்துக்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் கலந்துகொண்ட அந்த ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, “சென்னையில் தற்காலிகமாகக்கூட ஆந்திர தலைநகர் அமையக்கூடாது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் ஆந்திர தலைநகர் அமையக்கூடாது என்பதை வலியுறுத்தி 1952 பிப்ரவரி 16ம் தேதி சென்னை கடற்கரையில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டு பெரியார் உரையாற்றினார்.
சென்னையைக் காப்பதற்காக அனைத்துக்கட்சிகளும் ஒருங்கிணைந்திருக்கும் இணையில், இந்தி திணிப்பை எதிர்ப்பது உள்ளிட்ட மேலும் ஐந்து அம்சங்களை நமது நோக்கமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற பெரியாரின் கருத்தை மா.பொ.சி உள்ளிட்ட தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், ஆந்திர பிரிவினை உச்சத்தில் இருந்தபோது சென்னைக்கு வருகைதந்த அன்றைய குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கு எதிராக சுமார் 5000 திராவிட கழகத் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராடினர். சென்னையை ஆந்திராவுக்கு அளிக்கக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களிலேயே திராவிடர் கழகம் நடத்திய இந்த போராட்டமே பெரும்போராட்டமாகும். தொடர்ச்சியாக வாஞ்சு அறிக்கை கண்டன நாள், “தமிழக உரிமைப் பாதுகாப்பு நாள்” போன்றவற்றை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் கடைபிடித்தது.
ஆந்திராவின் உதயம்
சென்னையில் தலைநகரை மட்டும் அமைத்துக் கொள்கிறோம் என்ற ஆந்திரர்களின் கோரிக்கை குறித்து , “வீட்டைவிட்டு கோபித்துக் கொண்டு செல்பவன், வீட்டைவிட்டுத்தான் போகவேண்டுமே ஒழிய, என் சமையலை மட்டுமே இங்கே நடத்திக் கொள்கிறேன் என சொல்லக்கூடாது” என்று சொன்னார் தந்தை பெரியார். தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு, 1953 மார்ச் 25ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய நேரு, ஆந்திராவின் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என்றும், சென்னையில் அமையாது என்றும் அறிவித்தார். இதனால், சென்னை தமிழ்நாட்டுக்குரியது என்று முடிவானது. 1953 அக்டோபர் மாதம் ராயலசீமா, கோரமண்டல் கடற்கரை பகுதிகளை உள்ளடக்கிய 13 மாவட்டங்களோடு ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. கர்நூல் மாவட்டம் ஆந்திராவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இப்போது இன்னொரு சிக்கல் இருந்தது. தமிழ்நாடு – ஆந்திர மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை பிரிப்பதுதான் அது. கூடுதலாக, ஆந்திர மாநிலப்பிரிவினையால் எழுச்சிபெற்ற மற்ற மொழி தேசிய இனங்கள் தங்களுக்கும் மொழி அடிப்படையில் தனிமாநிலம் வேண்டும் என்று குரல் எழுப்பத் துவங்கினர். ஆந்திரா பிரிந்தது போக மீதமிருந்த சென்னை மாகாணத்திலிருந்து கேரளம், கர்நாடகம், ஒரிசா ஆகிய தனி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எல்லா கோரிக்கைகளிலிருந்தும் இருந்த ஒரே சிக்கல், மாநிலங்களைப் பிரித்தால் அவற்றுக்கு எது எல்லை என்பதுதான் அது!
கடுமையான போராட்டங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் 1953 டிசம்பர் மாதம், இந்தியாவை மொழிவாரியாக பிரிப்பதற்காக பஸல் அலி கமிஷன் அமைக்கப்பட்டது.
அண்ணாவின் திராவிட நாடு
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளம் என திராவிட இனத்தைச் சேர்ந்த தென்னிந்தியாவை நான்கு மாநிலங்களாக பிரிப்பதற்கான கோரிக்கை வலுவடைந்தபோது இந்தியாவே ஒருவரது குரலைத்தான் ஆவலோடு எதிர்பார்த்திருந்தது. அவர்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பேரறிஞர் அண்ணா. திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி வந்த அண்ணா, மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற குரலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்டபோது அண்ணா சொன்னார்,
“மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதே இப்போதைய உடனடிய தேவையாகும். அப்படி மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்படும்போது ஒருமொழிப்பிரிவின் நிலப்பரப்பை மற்றொரு மொழிப்பிரிவு அபகரித்துக் கொள்ளாமல் அதிகாரத்தில் உள்ளவர்கள் பாதுகாக்க வேண்டும். அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும், மொழிவழி மாநிலங்கள் அமைய வேண்டும் என்பதன் சேர்க்கையே திராவிட நாடு ஆகும்”
அண்ணாவின் இந்த தெளிவு, எல்லைப் போராட்டத்தில் திமுகவை ஈடுபட வைத்தது. குறிப்பாக, தமிழ்நாட்டின் வடக்கு எல்லையைத் தீர்மானிப்பதற்கான போராட்டத்தில், பிரச்னைக்குரிய சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினரே ஈடுபட்டனர். இதற்கிடையில், தமிழ்நாடு – ஆந்திரா எல்லையை வரையறுக்க எல்லை கமிஷன் அமைக்கப்படும் என்று நேருவின் அறிவிப்பை ஏற்பதாக அறிவித்த மா.பொ.சி வடக்கு எல்லை போராட்டத்தை 1953 சூலையில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார்.
எல்லைப் போர்
தமிழ்நாட்டின் எல்லைப்பிரச்னைகளில் பிரதானமாக இருந்தவை ஆந்திராவின் வடக்கு எல்லைப்பகுதியில் சித்தூர் மாவட்டப் பகுதிகள், கேரளாவை ஒட்டிய தெற்கு எல்லைப் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதி, கர்நாடகத்தை ஒட்டிய மேற்கு எல்லையில் கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள கொல்லங்கோடு காட்டுப்பகுதி ஆகியனவாகும்.
இதில், சித்தூர் மாவட்டம் என்பது 1911 வரை வட ஆர்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. பிறகு அன்றைய சென்னை மாகாணத்தின் நிர்வாக வசதிக்காக திருத்தணி, திருப்பதி, திருக்காளத்தி என்கிற காளகஸ்தி, பல்லவனேரி, சித்தூர், புத்தூர் ஆகிய தமிழர் பெரும்பான்மை பகுதிகளையும், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த மதனப்பள்ளி, வாயல்பாடி ஆகிய ஆந்திரர் பெரும்பான்மை பகுதிகளையும் இணைத்து சித்தூர் உருவாக்கப்பட்டது.
ஆந்திர பிரிவினை கோரிக்கை தொடங்கிய நாட்களிலிருந்தே சித்தூர் மாவட்டப்பகுதிகள் யாருக்கு என்கிற சர்ச்சை நீடித்து வந்தநிலையில், மாநில சீரமைப்புக்குழு தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் தலையிடப்போவதில்லை என அறிவித்தது. எல்லைப் பிரச்னையைப் பொறுத்தவரை சென்னை மாகாண முதல்வரும் – ஆந்திர முதல்வரும் கலந்துபேசி முடிவெடுப்பதாக அறிவித்தனர். இதன்படி காமராஜரும், டி.பிரகாசமும் மூன்று முறை சந்தித்துப் பேசினர். ஆனால், அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இறுதியாக, 1960ம் ஆண்டு மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் படாஸ்கர் செய்த சமாதானத்தின் அடிப்படையில் திருப்பதி ஆந்திராவுக்கு என்றும், திருத்தணி தமிழ்நாட்டுக்கு என்றும் முடிவுசெய்யப்பட்டது.
ஆந்திர உடனான வடக்கு எல்லை பிரச்னை ஒரு அரசியல் பிரச்னை என்கிற அளவில் பெரியதாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டின் தெற்குப்பகுதியிலிருக்கும் கன்னியாகுமரி, திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட எல்லை பிரச்னை என்பது லட்சக்கணக்கான மக்களின் உணர்ச்சிப்பூர்வமான பிரச்னையாக உருவெடுத்திருந்தது.
1945களிலிருந்தே இந்தியாவின் தெற்கு எல்லையாக இருக்கும் நாஞ்சில் நாட்டின் மீது தமிழர்களுக்கு உரிமை குறித்து எழுச்சிகரமான மனநிலை உருவானது. தெற்கு எல்லை வீரன் என போற்றப்படும் மார்ஷல் நேசமணி, 1945லேயே திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை உருவாக்கி வெற்றிகரமான அமைப்பாக்கியிருந்தார். 1954ல் மாநில சீரமைப்புக்குழு அமைக்கப்பட்ட நேரத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என தீவிரமான போராட்டங்களை நடத்தினார் நேசமணி. 1954 ஆகஸ்ட் 11ம் தேதி, எல்லைப் போராட்டத்திற்காக தமிழர் விடுதலை நாள் அனுசரிக்கப்பட்ட போது கல்குளத்தில் 11 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மிகவும் உணர்ச்சிப்பூர்வமான நிலையையொட்டி போராட்டம் நகர்ந்தநிலையில், மாணவர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறை கடுமையான அடக்குமுறைகளை மக்கள் மீது நடத்தியது. நேசமணி உள்ளிட்ட நாஞ்சில் நாட்டு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அமளியான சூழலுக்கு மத்தியில் 1955 டிசம்பரில் வெளியான மாநில சீரமைப்புக்குழு அறிக்கை கல்குளம், அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, செங்கோட்டை ஆகிய பகுதிகளை தமிழ்நாட்டோடும், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை கேரளாவோடும் இணைப்பதாக அறிவித்தது. முல்லைப் பெரியாறு அணையும், நெய்யாறு அணையும் கேரள எல்லைக்குள் வந்தது.
இறுதியாக, 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மாநில சீரமைப்புக் குழுவின் அறிக்கைபடி, மொழிவாரி மாநிலங்கள் அமலுக்கு வந்தது. சென்னை மாகாணமாக இருந்த தென்னிந்திய பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரிசா என பிரிக்கப்பட்டன. மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்கள், அவற்றின் மொழிக்கு ஏற்ற நிலப்பெயரை பெற்றன. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டும் தமிழ்நாடு என பெயர் வைக்க அனுமதிக்கவில்லை மாநில சீரமைப்புக் குழு. தமிழ்நாடு மெட்ராஸ் பிரசிடென்சி என்றே அழைக்கப்படும் என்றது.
சென்னை மாகாணம் தமிழ் நாடானது
இதனை எதிர்த்தும், தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமாக பெயரிட வேண்டும் என்று வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் விவாதங்கள் நடந்தது. தமிழ்நாடு என பெயர் வைக்க வலியுறுத்தி 1957ம் ஆண்டு உண்ணாவிரதப்போராட்டத்தை துவங்கிய தியாகி சங்கரலிங்கனார் 77 நாள் உண்ணாவிரதத்துக்குப் பிறகும், கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் 1957 அக்டோபர் 13ம் தேதி மரணமடைந்தார்.
மனிதனை மனிதன் என அழைக்க வேண்டும் என்பதை போல தமிழ்நாட்டை தமிழ்நாடு என அழைக்க வேண்டும் என்கிற மிக அடிப்படையான கோரிக்கை பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு பேரறிஞர் அண்ணாவாலேயே நிறைவேற்றப்பட்டது. 1967ம் ஆண்டு மார்ச் 8ம் நாள் ஆட்சிக்கு வந்த அண்ணா, ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் சென்னை தலைமைச் செயலகத்தின் பெயரை தமிழக அரசு என மாற்றினார். 1967 ஜூலை 18ம் நாள் மெட்ராஸ் மாகாணம் என்பதை திருத்தி தமிழ்நாடு என அறிவிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றினார்.
தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, ‘தமிழ்நாடு’ என அண்ணா முழக்கமிட, ‘வாழ்க’ என 234 உறுப்பினர்களும் விண்ணதிர முழக்கமிட்டனர். தமிழ்நாட்டில், தமிழ்நாட்டை ஆளும் சட்டமன்றத்தில், தமிழர்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் வரலாற்றிலேயே முதன்முறையாக அண்ணா ஆட்சியில் தான் முழக்கமிட முடிந்தது, “தமிழ்நாடு வாழ்க” !
https://minnambalam.com/k/2019/11/01/30
Leave a Reply
You must be logged in to post a comment.