சனாதிபதி தேர்தல் சனநாயகத்துக்கும் – சர்வாதிகாரத்துக்கும் தர்மத்துக்கும் – அதர்மத்துக்கும் நீதிக்கும் – அநீதிக்கும்  இடையிலான போராக மாறியுள்ளது!

சனாதிபதி தேர்தல் சனநாயகத்துக்கும் – சர்வாதிகாரத்துக்கும் தர்மத்துக்கும் – அதர்மத்துக்கும் நீதிக்கும் – அநீதிக்கும்  இடையிலான போராக மாறியுள்ளது!

நக்கீரன்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் முகமூடியான  தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணி (ததேமமு) ஆறுகட்சிக் கூட்டத்தில் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுள்ள இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று பிடிவாதம் பிடித்தது.   பின்னர் அந்தக் கட்சியின் கோரிக்கையை எஞ்சிய 5 கட்சிகளாலும்  நிராகரிக்கப்பட்ட  போது  கஜேந்திரகுமார், கஜேந்திரன் வெளிநடப்புச் செய்தார்கள். கஜேந்திரகுமாரையும் அவரது ததேமமு யை தாங்கிப் பிடிக்கும் சில ஊடகங்கள் அவர்கள் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று திரித்து  எழுதின.

இப்போது வாலறுந்த நரிபோல (வாலறுந்த நரி வால் போனபின் தான் மிக அழகாக இருப்பதாகவும் அதனால் தன்னைப் போல மற்ற நரிகளையும் வாலை அறுக்குமாறு கேட்டுக் கொண்டது) சனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூவுகிறார்கள்.   ஆனால் தமிழ்வாக்காளர்கள் அவர்களது முகத்தில் கரி அள்ளி அப்பியுள்ளார்கள். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 98 விழுக்காட்டு  அஞ்சல் வாக்காளர்கள்  வாக்களித்துள்ளனர்! வன்னி தேர்தல் மாவட்டத்தில் 95 விழுக்காடு வாக்களித்துள்ளனர்.  இந்த வாக்களிப்பு விழுக்காடு பொய் என்று கஜேந்திரகுமார் சொல்லப் போகிறாரா?

கஜேந்திரகுமாரும்  தேர்தல் புறக்கணிப்பைத் தனது  வசதிக்கேற்ப கையில் எடுப்பதும்  வசதிக்கு ஏற்ப  கைவிடுவதுமாக நடந்து கொள்கிறார்.  போர் முடிந்த கையோடு வடக்கிலும் கிழக்கிலும் நடந்த உள்ளூராட்சித் தேர்தலை ததேமமு புறக்கணித்தது. அதேபோல் 2012 இல் நடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணித்தது. மேலும் 2013 இல் நடந்த வட மாகாண சபைத் தேர்தலையும்  புறக்கணித்தது. அதிகாரம் எதுவும் அற்ற மாகாண சபையால் ‘எந்தப் பிரயோசனமும்’ இல்லை என்பது கஜேந்திரகுமாரின் கண்டு பிடிப்பாகும்.

ஆனால்  2010, 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களைப் புறக்கணிக்காமல் போட்டியிட்டார்கள்! போட்டியிட்டுக் கட்டுக்காசை இழந்தார்கள் என்பது வேறு கதை.

விடிய விடிய இராமர் கதை விடிந்தபின் இராமருக்கு சீதை என்னமுறை என்று கேட்ட புத்திசாலி போல இடைக்கால அறிக்கை ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுள்ளது என்ற பொய்யைத் திரும்பத் திரும்ப கஜேந்திரகுமார் சொல்லி வருகிறார். ஒரு பொய்யை பலமுறை சொன்னால் அது மெய்யாகிவிடும் என்ற ஜெர்மன் நாஜி பரப்புரை அமைச்சர் யோசேப்  கோயபல்ஸ் (Joseph Goebbels) அவர்களின் கோட்பாட்டை அச்சொட்டாக அவர் பின்பற்றுகிறார்கள்.

கோயபல்ஸ்  இரண்டாவது உலக யுத்தத்தின் போது எப்போதும் ஜெர்மன் மக்களுக்கு நாஜி ஆட்சியின் சாதகமான செய்திகளை வெளியிட்டு வந்தவர். நாஜி படைகள் பின்வாங்கிக் கொண்டிருக்கும் போது அவை முன்னோக்கிப் பாய்கின்றன எனச் சொன்னார். இட்லரின் தற்கொலையை அடுத்து  ஜெர்மன் நாட்டின் சான்செலர் (Chancellor) ஆக ஒரு நாள் மட்டும் இருந்தார். அடுத்த நாள் தங்களது ஆறு குழந்தைகளை நஞ்சூட்டிக் கொன்றுவிட்டு அவரும் அவரது மனைவி மக்டா (Magda)வும் தற்கொலை செய்து கொண்டனர்!

இடைக்கால அறிக்கையின் முதல் இரண்டு பக்கங்களைப் படித்தாலே சாதாரண படிப்பறிவுடையவர்களுக்கு  கஜேந்திரகுமார்  சொல்வது அப்பட்டமான பொய் என்பது விளங்கும்.

இடைக்கால அறிக்கையின் உறுப்புரிமை 1 மற்றும் 2 இல் எழுதப்பட்டுள்ள வாசகத்தில் ஒற்றையாட்சி என்ற சொல் அதில் காணப்படவில்லை. ஏக்கியராஜ்ஜிய  என்ற சிங்களச் சொல்லுக்கு ஒருமித்த நாடு என்றே வியாக்கியானம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏக்கியராஜ்ஜிய  என்றால் ஒற்றையாட்சிதான் என்று யாராவது அடம்பிடித்தால் அப்படியானவர்களை விட்டுவிட்டு நாம் மேலே செல்ல வேண்டும்.

இலங்கையின் வரலாற்றில் 13 ஏ திருத்தம் ஒரு வரலாற்றுத் திருப்பு முனை ஆகும்.  இந்தத் திருத்தச் சட்டம்  மூலமே முதல்முறையாக மத்திய அரசின் அதிகாரத்தை – வெளியுறவு, மத்திய வங்கி, போக்கு வரத்து, தொலை தொடர்பு நீங்கலாக – மாகாணங்களுக்குப்  பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்திய பிராந்திய வல்லரசு,   இலங்கைத் தமிழர்களுக்கு செய்த மிகப் பெரிய நன்மை இதுவாகும். 13 ஏ திருத்தம் முழுதாக (காணி, பொலீஸ்) நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால் கிட்டத்தட்ட ஒரு இணைப்பாட்சி உருவாகியிருக்கும்.  இன்று 1987 இல் நிறைவேற்றப்பட்ட 13ஏ திருத்தத்தை திரும்பிப் பார்க்கும் போது அதனைத் தற்காலியமாகவேனும்  ஏற்றுக் கொண்டு அதில் வேண்டிய திருத்தங்களைச் செய்யுமாறு  தமிழர் தரப்பு இந்திய அரசிடம்  தொடர்ந்து வற்புறுத்தியிருக்க  வேண்டும். எடுத்துக்காட்டாக ஆளுநரின் நிறைவேற்று அதிகாரங்களை நீக்குமாறு கேட்டிருக்க வேண்டும். இந்திய மாநிலங்களின் ஆளுநர்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கிடையாது.

கடந்த செப்தெம்பர் 21, 2017 இல்  சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் கூறப்பட்ட அதிகாரப் பகிர்வு 13ஏ திருத்தத்தை விடப்  பல மடங்கு  தமிழ்மக்களுக்கு நன்மையானது. அந்த அறிக்கையை காய்தல் உவத்தல் இன்றி ஆழ்ந்து படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

உறுப்புரிமை 1 மற்றும் 2 என்ன சொல்கிறது?

  • இலங்கையின் இறைமை மக்களுக்குயுரியதாகஇருப்பதோடு பாரதீனப்படுத்த முடியோததாகவும்  பிரிக்கப்பட  முடியாததாகவும் இருத்தல் வேண்டும்.
  • இலங்கை பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத ஒரு நாடாக இருத்தல் வேண்டும்.
  • பிரிந்து செல்லுதலை (நாட்டைக்கூறுபோடுதல்) தடுக்கும்  பொருட்டு அரசியலமைப்பில் விசேட  ஏற்பாடுகள் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.
  • அதிகூடிய பகிர்வு (maximum devolution) வழங்கப்படல் வேண்டும்.
  • அரசியலதைப்பு இலங்கையின்மீயுயர் சட்டமாகயிருத்தல்வேண்டும்.
  • அரசியலதைப்புக்கான திருத்தம் அல்லது நீக்கம் அல்லதுமாற்றீடு அரசியலமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  விசேட பாராளுமன்றத்தினாலும் இலங்கை மக்களாலும் (தேவைப்படுமிடத்து) மேற் கொள்ளப்படுதல் வேண்டும்.

மேலும் உறுப்புரைகளின் கீழ் (1,2) விடயங்கள் என்ற தலைப்பின் கீழ் இடைக்கால அறிக்கை கூறுவதாவாது :

சனாதிபதி அவர்கள் அரசியலமைப்புச் சபையை தாபிப்பதற்கான  தீர்மானம்  பற்றி உரையாற்றுகையில் தெற்கில் உள்ள மக்கள்  “பெடரல்”(Federal) எனும் பதம்
தொடர்பாக  அச்சம் அடைந்திருக்கும் வேளையில்  வடக்கில்  மக்கள் “யூனிற்றரி”(unitary) எனும் பதம்  தொடர்பிலும்  அச்சடைந்திருந்தனர் எனக்  கூறினார்.
அரசியலமைப்பானது  மக்கள்  அச்சமடைய   வேண்டிய  ஆவணமொன்றல்ல. “யுனிற்றரி” (Unitary state) எனும் ஆங்கிலப் பதத்தின் பண்டைய வரைவிலக்கணம்  மாற்றத்திற்கு   உட்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் வட அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்திலும் தற்போது  ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லக் கூடியதாயுள்ளது. ஆங்கிலப் பதமான “யுனிற்றரி” (“Unitary state” ) இலங்கைக்குப் பொருத்தமற்றதாக இருக்கும்.

பிரிக்கப்படாத மற்றும்  பிரிக்கப்பட  முடியாத  நாடு  என்பதை  சிங்களப் பதமான “ஏக்கிய இராஜ்ஜிய” நன்கு விபரிக்கப்படுகிறது. இது தமிழ் மொழியில் “ஒருமித்த நாடு” என்பதற்குச் சமனாகும். இத்தகைய சூழமைவுகளில், பின்வரும் உருவாக்கம்  பரிசீலிகப்படலாம்:

ஸ்ரீலங்கா (இலங்கை), அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டவாறு தத்துவங்களைப் பிரயோகிப்பதற்கு ஏற்புடையதான  மத்திய மற்றம் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டுள்ள சுதந்திரமும் இறைமையும்  தன்னாதிக்கமும் கொண்டுள்ள “ஏக்கிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு” எனும் குடியரசாகும்.

இந்த உறுப்புரையியின் ஏக்கிய இரோஜ்ஜியம்/ ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட  முடியாத  நாடு எனும் பொருளாகும். அத்துடன், அரசியலமைப்புக்கான திருத்தம் அல்லது நீக்கம் அல்லது மாற்றீடு  அரசியலதைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விதமாக  பாராளுமன்றத்தினாலும் இலங்கை மக்களாலும் இலங்கை எக்காலத்திலும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

முதன்முறையாக நாடு மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டதாக இருக்கும். இங்கே இணைப்பாட்சி என்ற பதம் பயன்படுத்தப் படாவிட்டாலும் இணைப்பாட்சிக்கான அம்சங்கள்  இடம்பெற்றுள்ளன.

இதன் அர்த்தம் என்னவென்றால்  இணைப்பாட்சியில் காணப்படுவது போல அதிகாரம் மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இந்த இடைக்கால அறிக்கை வெளிவந்தபோது  அரசவை உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உறுப்புரை 1, 2 பற்றிப் பல கூட்டங்களில் விளக்கம் அளித்தார்.

“இடைக்கால அறிக்கை தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்போர் அறிக்கையில் முதல் இரண்டு பக்கங்களை வாசித்துத் தெளிவடைய வேண்டும். அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை  தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள் உள்ளடங்கிய ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவாக்குவதற்கான பொறுப்பை மக்கள் தமது கட்சிக்கு வழங்கியிருக்கிறார்கள். இடைக்கால அறிக்கையில் சமஷ்டி என்ற சொல் அதாவது பெடரல் (Federal) என்ற கட்டமைப்பு இலங்கைக்குப் பொறுத்தமற்றது என குறிப்பிடப்படவில்லை.   ஆனால் ‘யுனிட்ரறி’ (Unitary) என்பது இலங்கைக்கு பாதகமானது என அதில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.எனது ஆட்சியின் முதல் நடவடிக்கை! முல்லைத்தீவில் சஜித் பகிரங்க அறிவிப்பு

‘ஏக்கியராஜ்ஜிய’ என்ற பதம் நாடு ஒன்றாக இருப்பதைதான் குறிக்கிறது. அதற்கு இணையான தமிழ் சொல்லாக ஒருமித்த நாடு என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதனை நன்றாக புரிந்து கொள்ளாமல் சிலர் தேவையற்றவிதத்தில் கூச்சலிடுகிறார்கள். இதேவேளை ஒன்றையாட்சி என்ற சொல் ஆட்சி அதிகாரங்களை மையப்படுத்துவதாகவும், மாறாக ‘ஏக்கியராஜ்ஜிய’ என்ற சொல் முழு நாட்டையும் அதாவது ஒன்றாக இருக்கும் நாட்டைக் குறித்து நிற்கிறது” எனச்  சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய  சனநாயக முன்னணியின் சனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கடந்த ஒக்தோபர் 31 அன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஐந்து கட்சிகள் கூடிச் சமர்ப்பித்த 13 அம்சக் கோரிக்கைகளுக்கு அவரது தேர்தல் அறிக்கை நேரடியாகவும் மறைமுகமாகவும் சாதகமான பிரதிபலிப்பைக் காட்டுகிறது.  சஜித் பிரேமதாசாவின் தேர்தல் அறிக்கை அப்படியான பிரதிபலிப்பைக் காட்டும் என்பதைச்  சுமந்திரன் எதிர்வு கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கோரிக்கை1 – புதிதாக உருவாக்கப்படும் அரசமைப்பில் ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்குத் தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்குஉரித்துடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும்.

பிரதிபலிப்பு – நேரடியாகப் பதில் இல்லாவிட்டாலும் “தற்போதைய நாடாளுமன்றத்தில் அரசமைப்பு சீர்திருத்த முயற்சி அனைத்துப்  பங்குதாரர்களுடனும் முன்னெடுக்கப்பட்டுத் தாமதமின்றி
முடிக்கப்படும். மாகாணங்களின் அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பொறுப்புக் கூறல் ஆகியவை ஜனாதிபதிகளாகிய இரணசிங்க பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த இராஜபக்ச ஆகியோரின் கீழ் முன்வைக்கப்பட்ட திட்டங்களைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும்.”

இது, பிரேமதாச காலத்தில் மங்கள முனசிங்க குழுவின் அறிக்கை, சந்திரிகா காலத்தில் உத்தேச அரசமைப்பு நகல் (2000), மஹிந்த இராஜபக்ச காலத்தில் திஸ்ஸ விதாரண குழுவின் அறிக்கை, நிபுணர் குழுவின் பரிந்துரை, மகிந்த இராஜபக்ச தீர்வுக்கான குழுக்கூட்டத்தில் ஆற்றிய உத்தேச திட்டங்கள் அடங்கிய உரை ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது. இந்த ஐந்து ஆவணங்களையும் அடிப்படையாக வைத்தே தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அது இந்த அறிக்கையில்  இடம் பெற்றுள்ளது.

“பிளவு படாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிக பட்ச அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறும் இந்தத் தேர்தல்  அறிக்கையில்  “ஒற்றையாட்சி முறைமை உறுதிப்படுத்தப்படும்’ என்று எங்கும் சொல்லப்படவில்லை.

“பவுத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதே நேரம் அனைத்து மதங்களும் பாரபட்சமின்றி சமத்துவமாக நடத்தப்படும். அனைத்து மதங்களும் நம்பிக்கைகளும் அரசமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சம உரிமைகளைக் கொண்டிருப்பதோடு, எதுவித பாகுபாட்டுக்கும் உட்படுத்தப்படமாட்டா” என்றும் இந்த அறிக்கையில்  தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது.

மதத் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தப்படுவது மிக விளக்கமாக, விவரமாக இந்தத் தேர்தல்  அறிக்கையில்  இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நடுவண் அரசும்  மாகாணங்களும் பிணக்கின்றி அதிகாரங்களைப் பிரயோகிக்கின்றமையை உறுதி செய்வதற்காக மாகாண சபைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இரண்டாவது சபை – செனட்சபை – ஒன்று உருவாக்கப்படும் என இந்த அறிக்கை  கூறுகின்றது.

இதே சமயம், இரண்டு மாகாணங்களை இணைப்பதற்கு இடமளிக்கும் ஒரு வாசகமும் இந்த அறிக்கையில்  மிக நுட்பமாகச் செருகப்பட்டிருக்கின்றது. “அதிகாரப் பகிர்வு அலகுகளைப் பொறுத்தவரை, உடன்பாடுகளுக்கு ஏற்ப தேவையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதிகாரப் பகிர்வினை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், செலவு குறைந்தவையாகவும் மாற்றுவோம்” என்று குறிப்பிட்டதன் மூலம் இணைப்புக்கான சாத்தியம் நுணுக்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

இடைக்கால அறிக்கை செத்து அடக்கமும் செய்யப்பட்டு விட்டது என்று பரப்புரை செய்தவர்களுக்கு அது சஜித் பிரேமதாசாவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பது  மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கும்!

கோட்டாபய இராஜபக்ச ஐந்து கட்சிக்களின் 13 அம்சக் கோரிக்கைகளை அடியோடு நிராகரித்த பின்னரும் அவருக்கு இபிடிபி தேவானந்தா, தவராசா. றெமெடியஸ் வக்காலத்து வாங்குவது வேடிக்கையாக உள்ளது. நக்கிற நாய்க்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன? இரண்டும் ஒன்றுதான்!  அரசியல் கைதிகளை கோட்டாபய விடுவிப்பார் என இபிடிபி சொல்கிறது. ஆனால் அந்தக் கோரிக்கையையும் கோட்டாபய நிராகரித்துள்ளார்! இராஜபச்ச குடும்பம் தீவிர சிங்கள – பவுத்த மேலாதிக்க சிந்தனையுடைய குடும்பம்!  தேவானந்தா வயிற்றுப் பிழைப்புக்காக அவருக்கு குடை  பிடிக்கிறார். ஆலவட்டம் வீசுகிறார். பல்லக்குச் சுமக்கிறார்.

ஐந்து தமிழ்க்  கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகள் பற்றி சனாதிபதி வேட்பாளர் கோட்டாபய அவர்களின் பிரதி பலிப்பு என்ன?

‘அந்தக் கோரிக்களைப் ஏறெடுத்துப் பார்ப்பதற்குக்  கூட கோட்டாபய இராஜபக்ச விரும்பவில்லை’ என  அவரது அரசமுறைப் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான கெஹெலிய இரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர் ‘தமிழ்க் கட்சிகளின் 13  அம்சக் கோரிக்கைகளையும் நாங்கள் நிராகரிக்கின்றோம். நான் கோட்டாபயவின் ஊடகப் பேச்சாளர் என்ற அடிப்படையில் கூறுகிறேன் அவர் இந்த நிபந்தனைகளை வாசிப்பது கூட அர்த்தமற்ற – பலனற்ற விடயம் என்று கருதுகிறார். நான் ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்து விட்டேன். இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச இந்தக் இந்தக்கோரிக்கைகள் தொடர்பில் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்கட்டும் என நான் சவால் விடுக்கின்றேன். எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய  இராஜபக்ச ‘தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளைப் பார்ப்பதற்குக் கூடத் தயாரில்லை, 13 யோசனைகளையும் அவர் வெறுப்புடன் நிராகரித்துவிட்டார். பிரபாகரனின் கோரிக்கைகளை விட அதிகமான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்’ என்றார்.

போகட்டும் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில் வளதகத்தில்  நீதிமன்ற உத்தரவையும் மீறி விகாராதிபதி மேதாலங்காதர தேரரின் உடலை எரித்த சம்பவம் பற்றிக் சனாதிபதி வேட்பாளர்  கோட்டாபய என்ன சொல்கிறார்?

இந்த நாட்டில் பிக்குகளுக்குத் தனி மரியாதை உண்டு.  ஆனால், அவர்களை அவமதித்து தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகளின் நடவடிக்கையினால்தான் முல்லைத்தீவு – நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டது. இறந்த விகாராதிபதி மேதாலங்காதர தேரரின் உடலை அமைதியான ஓர் இடத்தில் தகனம் செய்யவே பிக்குகள் தீர்மானித்திருந்தார்கள்.  ஆனால், தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகள் பிக்குகளை அவமதிக்கும் வகையில் செயற்பட்டார்கள்.  அத்துடன் குறித்த சட்டத்தரணிகள்தான் ஆலய நிர்வாகத்தினரையும் நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்று இந்த விவகாரத்தை பெரிதாக்கினார்கள். அதற்காக நீதிமன்றத்தின் உத்தரவைவோ – தீர்ப்பையோ நான் விமர்சிக்க விரும்பவில்லை.  எனினும், அண்மைக் காலங்களில் பிக்குகளை அவமதிக்கும் வகையில் – அவர்களைச் சீண்டும் வகையில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் கோட்டாபய குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்க கொலை, பிரகீத் எக்நேலிகொட வலிந்து காணாமல் போதல், வாஸிம் தயூதீன் கொலை இவற்றுக்குப் பின்னால் கோட்டாபய வினது கைகள் இருப்பதாகச் சந்தேகிக்கப் படுகிறது.  அது மட்டுமல்ல மே 18, 2009 அன்று காலை வெள்ளைக்  கொடியோடு சரணடைந்த நடேசன், புலித்தேவன், கேணல் இரமேஷ் உட்பட 300க்கும் அதிகமான விடுதலைப் புலிகள், பொதுமக்கள்  மற்றும் அதே நாள் மாலை வட்டுவாகலில் சரணடைந்த 100 க்கும் அதிகமான இரண்டாம் மட்ட புலித்தளபதிகள், தலைவரது கடைசி மகன் பாலச்சந்திரன் போன்றோர்களைச் சுட்டுத்தள்ளுமாறு கோட்டாபயவே கட்டளை இட்டதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். வெள்ளைவான் கடத்தல்களுக்கும் அவர்தான் சூத்திரதாரி. அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் 25 தமிழ் ஊடகவியலாளர் சுட்டுக் கொல்லப்பட்டும் காணாமல் போயும்  உள்ளார்கள்.

கொழும்பையும் அதன் புறநகரிலும் வாழ்ந்த 11 தமிழ் இளைஞர்கள் கப்பம் கேட்டு வெள்ளைவானில் கடத்தப்பட்டு (2007-2008) கொலை செய்யப்பட்டார்கள்.  இந்த வழக்கில் கைதாகியுள்ள கடற்படைப் தளபதி மற்றும் புலனாய்வு அதிகாரிகள் அனைவரையும் தான் பதவிக்கு வந்த அடுத்த நாள் (நொவெம்பர் 17 காலை) காலை விடுவித்துவிடப் போவதாக கோட்டாபய சபதம் செய்துள்ளார்! இது நீதித்துறைக்கு பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கோட்டபாய இராஜபக்ச குற்றம்சாட்டப்பட்ட போர்க் குற்றவாளி. அவர் தேர்தலில் வென்றால் அது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஆழ்ந்த கவலையையும் தவிப்பையும் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இவ்வாறான சாமுத்திரிகா இலட்சணங்களைக் கொண்ட கோட்டாபய இராஜபக்சவை எந்த விதத்திலும் எக் காரணம் கொண்டும் தமிழ்மக்கள் ஆதரிக்கக் கூடாது – ஆதரிக்க  முடியாது.  வெட்கம், மானம்,  சூடு, சொரணை உள்ளவர்கள் தமிழ் மக்களது வாக்குகள் எனக்குத் தேவையில்லை என்று கொக்கரித்த கோட்டாபயவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

இப்போது இனிப்பான செய்தி வந்திருக்கிறது.

வவுனியாவில் நடந்த தமிழ் அரசுக் கட்சியின்  மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு முக்கிய  வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளும்   ஆராயப்பட்டு அதில் தமிழ்மக்களின் வேணவாக்களை  சஜித் பிரேமதாசா அவர்களுடைய தேர்தல் அறிக்கை அதிகம் பிரதிபலிக்கிறது எனவே அவரை ஆதரிப்பது என ஒருமனதாக முடிவு   செய்யப்பட்டுள்ளது. இது எல்லோரும் எதிர்பார்த்த முடிவுதான்.

இன்னும் இரண்டு கிழமையில் நடைபெற இருக்கும் சனாதிபதி தேர்தல் சனநாயகத்துக்கும் – சர்வாதிகாரத்துக்கும் தர்மத்துக்கும் – அதர்மத்துக்கும் நீதிக்கும் – அநீதிக்கும்  இடையில் நடைபெறும் போராக மாறியுள்ளது!

 

 

 

 

 

பெட்டிச் செய்தி

 

பின்வரும் சிறப்பு அம்சங்களும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையில் காணப்படுகின்றன.

*போதைப்பொருள், ஊழல் மற்றும் மதத் தீவிரவாதம் என்பவற்றுக்கு எதிரான போர்.

*பலமான தேசத்தை உருவாக்குதல்.

*தேசத்தை பாதுகாக்க ஸ்மார்ட் பாதுகாப்பு மற்றும் நவீன ஆயுதப்படை, அறிவார்ந்த புலனாய்வு வலையமைப்பு உருவாக்கம்.

*மக்கள் சக்தியை ஒருங்கிணைக்கும் மக்களுக்கான அரசியலமைப்பு.

நாடாளுமன்றில் 25% பெண்களுக்கான தேசிய பட்டியல் ஒதுக்கீடு.

இலங்கை முதன்மையாக வலுவான வெளிநாட்டுக் கொள்கை.

நவீன, பாகுபாடற்ற விரைவான நீதி அமைப்பு.

நீதியும் சுதந்திரமுமான ஊடகத்துறை.

பேரழிவுகளின் போதான இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை.

போட்டித்தன்மை மிகு பொருளாதாரம்.

மலிவான இணைய இணைப்பு மற்றும் எளிதான கொடுப்பனவு.

பொருந்தோட்டங்களை தரம் உயர்த்துதல்.

நீதியான சமூகத்தை கட்டியமைத்தல், நவீன யுகத்திற்கேற்ற நவீன கல்வி.

பயன்தரும் சுகாதார சேவை.

35 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ பரிசோதனை.

அனைவருக்கும் உறையுள், 2025ல் சொந்த வீடு கொண்ட சமூகம்.

தேசிய ஒற்றுமை மற்றும் சமத்துவம்.

 இனம், மதம், வர்க்கம், பாலினம் கருத்தில் கொள்ளப்படாமல் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவார்கள்.

மும்மொழிக் கொள்கை.

நல்லிணக்கம், மீள்கட்டுமாணமும்.

நீண்டகால இடம்பெயர்வினால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்குடியேற்றம், வீடுகள் மற்றும் மறுசீரமைப்பு இன்ன பிற உதவிகள்.

வட, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான அலுவலகத்தை முழுமையாக ஆதரித்தல்.

நீண்டகாலம் விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கு விடுதலை.

தனிநபர்கள், குழுக்கள், அரசியல் கட்சிகள், நிறுவனங்களின் வரலாற்று வகிபாகம், சிந்தனை போக்கு என்பவற்றை மாணவர்கள் புரிந்து கொள்ளும் பாடத்திட்ட சீரமைப்பு.

இலங்கையின் ஆன்மீகம்.

பெண்களுக்கு 52% சமவாய்ப்பு.

மாற்றுத்திறனாளிகளை அரவணைக்கும் ஆணைக்குழு நிறுவல்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு.

மலையக மக்கள்.

அனைத்து தோட்ட தமிழ் குடும்பங்களுக்கும் 7 பேர்ச் காணி.

அனைவருக்கும் தங்குமிடம்.

ஹைலேன்ட் பல்கலைக்கழகம்

 

 

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply