ஜஸ்ரின் ட்ரூடோவின் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் என்னவாயிற்று?
எதிர்வரும் ஒக்டோபர் 21 திகதி கனடாவின் மத்திய அரசிற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் செல்வாக்குச் சரிந்துவரும் நிலையில் இத்தேர்தல் எதிர்க் கட்சியான கொன்சவேடிவ் கட்சிக்கும் லிபரல் கட்சிக்கும் இடையேயான பலப்பரீட்சையாகப் பார்க்கப்படுகிறது.
இரு கட்சியினரும் சமஅளவிலான ஆசனங்களே பெறுவார்கள் என கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. கொன்சவேடிவ், லிபரல் கட்சிகளுக்கு அடுத்து மூன்றாவது நிலைக்கு என்டிபி எனப்படும் புதிய ஜனநாயகக் கட்சியினர் வருகின்றனர்.
இம்முறை தேர்தலில் 4 தமிழர்கள் போட்டியிடுகிறார்கள். என்டிபி கட்சி தமிழ் வேட்பாளர்கள் யாரையும் இம்முறை களமிறக்கவில்லை. அதேபோல லிபரல் கட்சியும் புதிதாக எந்தத் தமிழ் வேட்பாளர்களையும் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆயினும் லிபரல் கட்சியின் பட்டியலில் இலங்கையின் மூத்த அரசியல் தலைவரான வீ. ஆனந்தசங்கரியின் மகனான கரி ஆனந்தசங்கரி இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.
கொன்சவேடிவ் கட்சி இம்முறை இரண்டு தமிழர்களை புதிதாகக் களமிறக்கியிருக்கிறது. பீப்பிள்ஸ் பார்ட்டி இன்னுமொரு தமிழரை போட்டியிட வைத்துள்ளது. நான்கு தமிழ் வேட்பாளர்களும் தாம் வெற்றி பெற்றதும் தாயகத்து மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்போம் என்று கூறிவருகிறார்கள்.
இதேபோல கடந்த 2015 தேர்தலின்போது கனடாவின் லிபரல் கட்சி ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தம் தந்து தீர்வு ஒன்றை பெற்றுத் தருவதாகவும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாகவும் கூறியிருந்தது. அந்த வாக்குறுதியை கட்சியின் கனடிய தமிழ் மக்களுக்கான தேர்தல் அறிக்கையாகவும் லிபரல் கட்சி வெளியிட்டு தமிழ் மக்களைக் கவர்ந்து வாக்குச் சேகரித்தது. லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆளும் கட்சியுமாகி ஜஸ்ரின் ட்ரூடோ பிரதமரானார்.
மூத்த தமிழ் அரசியல்வாதியின் புதல்வர் ஒருவர் துணைநிலை அமைச்சருக்குச் சமனமான பராளுமன்ற செயலாளர் நிலைக்கும் உயர்ந்தார். ஆனால் அந்த தீர்வு திட்டம் குறித்து எதுவித நடவடிக்கைகளும் அதன்பின் எடுக்கப்படவில்லை.
இலங்கை தேர்தல் களங்கள் போல அங்கும் தமிழ் மக்கள் வஞ்சிக்கப்படுவது என்பது சர்வசாதாரணமாகியிருக்கிறது. குறிப்பாக தேர்தல் காலங்களில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளை ஈழத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் காற்றில் விட்டது போல, காலத்தை இழுத்தடித்துக் கொண்டும், மக்களை சந்திக்கும் போது தீர்வு இதோ வருகிறது அதோ வருகிறது என்று சொல்லிக் காலத்தைக் கழிக்கிறார்கள்.
உண்மையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை நில மீட்பு, காணாமல் போன உறவுகளின் போராட்டம் போன்ற எதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவரக் கையாலவில்லை என்னும் குற்றச்சாட்டுக்கள் பகிரங்கமாக வைக்கப்படுகின்றன.
கடும் கோபத்தில் இருக்கிறார்கள் வாக்காளர். தேர்தல் காலங்களில் மட்டும் வரும் ஞானோதயம் என்பது பின்னர் வருவதில்லை என்பதை தமிழர் தரப்பு நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. மீண்டும் அடுத்தாண்டு இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அப்போது தமிழர் தரப்பு மீண்டும் பழைய சங்கதியை பாடத் தொடங்கிவிடுவார்கள்.
இதேபோன்று தான் கடந்த 2015 தேர்தல் வாக்குறுதிக்கு என்ன நடந்தது என்ற கேள்வி தமிழ் உணர்வாளர்களால் லிபரல் கட்சியினைப் பார்த்து எழுப்பப்படுகிறது. தனது 2015 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற லிபரல் கட்சி இதுவரை எதுவும் செய்யாத காரணத்தால் இக் கேள்விக்கான பதிலைத் தரமுடியாமல் அக் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் திண்டாடி வருகின்றனர்.
தமிழ் மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு பின்னர் தேர்தல் முடிந்து ஆசனம் கிடைத்த பின்னர் தங்கள் வழமையான மறதிக் குணத்திற்கு சென்றுவிடுகிறார்கள்.
இந்தநிலையில் இம்முறை வாக்குச் சேகரிக்க தமிழர் உரிமை குறித்து போலி வாக்குறுதிகளுடன் கனடாத் தமிழ் அரசியல்வாதிகள் வருவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே தமிழ் கனேடியர்களின் ஆதங்கமாகும். 2015 தேர்தல் வாக்குறுதிக்கு என்ன நடந்தது என்பதை சம்பந்தப்பட்ட லிபரல் கட்சியினரும், அதன் தமிழ் உறுப்பினரும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இத் தேர்தல் காலத்தில் வலுத்து வருகிறது.
மக்களிடம் உண்மையை கூறி அதன் மூலமாக தங்களின் வாக்குகளை சேகரிப்பதை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து உறவுகளை இழந்திருக்கும் சொந்தகளிடம் நம்பிக்கையை கொடுத்து பின்னர் ஏமாற்றுவதை இனிவரும் காலங்கள் அவர்கள் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.கொள்கை கோட்பாடு எது என்பதை மக்கள் முன்னிலையில் உரிய முறையில் கொடுத்து வாக்குறுதிகள் உறுதியாக நிறைவேற்றப்படும் என்னும் உத்தரவாதத்தை இத்தேர்தலிலாவது சரியாக கொடுக்க வேண்டும் என்று கனடா வாழ் தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.(https://www.tamilwin.com/articles/01/228346?ref=category-feed)
Leave a Reply
You must be logged in to post a comment.