“இந்தியர்கள் இதனை தமிழர்களுக்காக செய்கிறார்கள். நீங்கள் என்னிடம் தேநீர் பரிமாற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?”


“இந்தியர்கள் இதனை தமிழர்களுக்காக செய்கிறார்கள். நீங்கள் என்னிடம் தேநீர் பரிமாற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?”

கோகுலன்

யாழ்ப்பாண விமான நிலையம் திறக்கப்பட்ட நிகழ்வு தெற்கில் இனவாதப் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ள அதேவேளை, இதனை முன்வைத்து தமிழர்கள் மத்தியில் கிண்டலும், கேலியும், ஆரோக்கியமற்ற விமர்சனங்களும் உலாவிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.

கடந்த ஓரிரு வாரங்களாகவே சமூக ஊடகங்களில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், பலாலி விமான நிலையம் என்று தான் ஒரே பேச்சாக இருக்கிறது.

இதனை முன்னிறுத்தி பலர் கேலியான கற்பனைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் கிண்டல் செய்யும் மீம்ஸ்களை பரப்புகிறார்கள்.மற்றொரு பிரிவினர் இதனை பூகோள அரசியல், பிராந்திய ஆதிக்கம் என்று மற்றொரு பரிமாணத்தைக் கொடுத்து விமர்சனங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பலாலி சர்வதேச விமான நிலையம் வடக்கில் உள்ள தமிழர்களுக்கு மிக முக்கியமானது. இந்தியாவுக்கு மாத்திரமன்றி உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு இது வழியை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியது.

கட்டுநாயக்கவுக்கும், வடக்கிற்கும் இடையிலான நீண்ட பயணத் தூரத்தை, நேரத்தை மற்றும் பயண ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்ளும் அல்லது குறைத்துக் கொள்ளும் வாய்ப்புகளை அளிக்கக்கூடியது.அதுமாத்திரமன்றி, வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்புகளையும், வடக்கிற்கு அளிக்கக்கூடியது. பொருளாதார தேட்டங்களை விரிவுப்படுத்துவதற்கும் பயன்படக்கூடியது. இது புதியதொரு மாற்றத்துக்கான ஒரு திறவுகோலாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.

தற்போதைய அரசாங்கம் இதனை அரசியல் நலன்களை முன்னிறுத்தியேனும், அதன் பதவிக்காலத்தில் கடைசி கட்டத்திலாவது நிறைவேற்றியிருக்கிறது.யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளதை தெற்கிலுள்ள இனவாதிகள் விரும்பவில்லை. இதனைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைக்க முடியுமோ அப்படியொல்லாம் இனவாதம் விதைக்கப்படுகிறது.

அதேயளவுக்கு சிங்கள இனவாதிகள் மத்தியில் மாத்திரம் இந்தக் காழ்ப்புணர்வு இருக்கிறது என்றில்லை.சமூக ஊடகங்களில் யாழ்ப்பாண விமான நிலையத்தை முன்னிறுத்தி செய்யப்படும் கேலிகள், கிண்டல்கள், எதிர்மறையான விமர்சனங்கள் எல்லாமே தமிழர்கள் மத்தியிலும் அதே உணர்வு பலரிடம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.தெற்கில், பலாலி விமான நிலையத்தை வைத்து பிரச்சினையை முதலில் கிளப்பியவர் நாமல் ராஜபக்க்ஷதான்.

அவர் அம்பாந்தோட்டையில் பல பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றிய போது, வடக்கிலுள்ள தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அரசாங்கம் அவசர அவசரமாக வடக்கில் ஒரு சர்வதேச விமான நிலையத்தை அமைக்கிறது என்று கூறியிருந்தார்.

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும் அதேவேளை, மத்தல விமான நிலையத்தை அரசாங்கம் நாசமாக்கி விட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

உண்மையில் மத்தல விமான நிலையம் ஒரு வணிகப் பெறுமானம் அற்றது என்பதை ஏற்றுக் கொள்ள ராஜபக்ஷவினர் இப்போதும் தயாராக இல்லை.

மத்தலவுக்கும் வெளிநாடுகளுக்கும் உள்ள தொடர்புகளை விட, வடக்கிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொடர்புகள் – உறவுகள் அதிகம். அதனை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.வணிகப் பெறுமானம் இல்லாத எந்தவொரு விமான நிலைத்தினாலும் தாக்குப் பிடிக்க முடியாது. பலாலி அவ்வாறானதொன்று அல்ல.

வடக்கிற்கும் வெளிநாடுகளுக்கும் அதிகளவு தொடர்புகள், போக்குவரத்துகள் உள்ள நிலையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக பலாலியையே ராஜபக்ஷவினர் உருவாக்கியிருக்க வேண்டும்.

ஆனால் அந்த வருமானமும் வளர்ச்சியும் வடக்கிற்கு சென்று விடக்கூடாது என்ற காழ்ப்புணர்வும், அம்பாந்தோட்டையை அபிவிருத்தி செய்த பெருமையை ராஜபக்க்ஷவினரே பெற வேண்டும் என்ற அவாவும் தான் மத்தல விமான நிலையத்துக்காக மில்லியன் கணக்கான டொலர்களை கொட்ட துண்டியது.

இப்போது மத்தல விமான நிலையம் முடங்கிப் போய் கிடக்கின்ற நிலையில் வடக்கில், யாழ்ப்பாண விமான நிலையம் எழுச்சி பெறுவதை ராஜபக்ஷவினராலோ அவர்களைச் சார்ந்த இனவாதிகளாலோ பொறுத்துக் கொள்ள முடியாதிருக்கிறது.

யாழ்ப்பாண விமான நிலையம் திறக்கப்பட்ட அடுத்த சில நாட்களில் கொட்டிய மழையில், கட்டுப்பாட்டு அறை மற்றும் ஓடுபாதைக்கு செல்லும் வழிகளில் தேங்கியிருந்த மழைநீரைப் படம் பிடித்தது சமூக ஊடகங்களில் கொண்டாடினார் நாமல் ராஜபக்க்ஷ.

கட்டுப்பாட்டு அறை தற்காலிகமாக அவசர அவசரமாக உருவாக்கப்பட்டது. 1950களில் இருந்து 1970கள் வரை பயன்பாட்டில் இருந்த கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய பலாலி விமான நிலையம் இப்போது விமானப்படை வசம் உள்ளது.அதனை அவர்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாததால் தான் தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விரிவாக்கப்பட்டுவதை, சிங்களப் பேரினவாதிகளைப் போலவே படையினரும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.யாழ்ப்பாண விமான நிலையத்தை ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவதற்குப் பதிலாக அந்த திட்டம் இனவாத பொறாமைக்கு உள்ளாகியிருக்கிறது என பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ஒரு சம்பவத்தையும் விபரித்திருக்கிறார்.

“விமானப்படைத் தளபதி ஒத்துழைக்க தவறிவிட்டார். 2019 செப்டெம்பர் 16ஆம் திகதி, பலாலிக்கு வந்திருந்த இந்திய தொழிநுட்பக் குழுவினர் கடுமையான வேலைகளின் பின்னர் தேநீர் கேட்டனர்.

அதற்கு விமானப்படைத் தளபதி “இந்தியர்கள் இதனை தமிழர்களுக்காக செய்கிறார்கள். நீங்கள் என்னிடம் தேநீர் பரிமாற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, சோர்ந்து போன இந்திய குழுவினர், பிற்பகல் இரண்டு மணியளவில் தமக்குப் புத்துணர்ச்சியைப் பெறுவதற்காக ஜீப்பை காங்கேசன்துறைக்கு அனுப்பினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண விமான நிலையம் விடயத்தில் எந்தளவுக்கு மோசமான இனவாதம் கக்கப்படுகிறது என்பதற்கு மற்றொரு உதாரணம்.

தெற்கிலுள்ள ஜனாதிபதித் தேர்தல் பிச்சார மேடைகளில் இப்போது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் முக்கியமானதொரு பேசு பொருளாக மாறியிருக்கிறது. இந்தச் சூழலை உருவாக்கியது மஹிந்த ராஜபக்க்ஷ தரப்பினர் தான்.

பலாலி விமான நிலையத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதை காரணம் காட்டி, இது மொழிக் கொள்கைகளை மீறும் செயல் என்று தெற்கில் இனவாத உணர்வுகளைக் கிளறி விட்டார் விமல் வீரவன்ச.

இதற்கு அரசியலமைப்பின்படி வடக்கு – கிழக்கில் தமிழ் நிர்வாக மொழி என்றும் அந்தந்தப் பகுதிகளில் கூறுதலாக வசிக்கும் மக்கள் பேசும் மெழிக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்றும், அமைச்சர் மனோ கணேசன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஆனால் பலாலி விமான நிலையத்தில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டதை பூதாகாரப்படுத்தி இனவாதக் கருத்துக்களைப் பரப்புவதில் மஹிந்த அணியில் உள்ளவர்கள் தீவிரம் காட்டுகிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் ஜனசெத பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பத்தேக சீலாரத்ன தேரர், வடக்கில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் நாடு ஏற்கனவே பிளவுபட்டு விட்டதோ என்ற சந்தேகம் வருகிறது என்று கூறியிருக்கிறார்.

இவ்வாறான பிரச்சாரங்கள் தெற்கிலுள்ள அரசியல் மேடைகளில் தீவிரமாக தீயாகப் பரவுகிறது – பரப்பப்படுகிறது.

தமிழ் மக்களுக்கு விமான நிலையத்தை அமைத்துக் கொடுத்துள்ளதால் வடக்கில் ஆளும்கட்சி பெறக்கூடிய வாக்குகளை விட அதற்கு எதிரான கருத்துக்களை பரப்புவதன் மூலம் தெற்கில் அதிகமான வாக்குகளைப் பெற்று விட வேண்டும் என்ற குறியுடனேயே இவ்வாறான பொய்யான – புரளியான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

வெளிநாட்டு பயணங்களுக்காக தமிழ் மக்கள் படுகின்ற துயரங்களை துன்பங்களை பற்றி சிந்திக்கின்ற நிலையில் தெற்கின் இனவாத அரசியல்வாதிகள் இல்லை.எப்படியெல்லாம் தமிழர்களைப் பற்றி இனவாதக் கருத்துக்களை கூர்மைப்படுத்த முடியுமோ அவ்வாறெல்லாம் இனவாதத்தைப் பரப்பி குளிர்காய எத்தனிக்கிறார்கள்.

மத்தல விமான நிலையத்துக்காக கொட்டப்பட்டது போல பெருந்தொகையான நிதி யாழ்ப்பாண விமான நிலையத்துக்காக செலவிடப்படவில்லை. செலவிடப்பட்டுள்ள நிதியைக் கூட ஒரே வருடத்தில் இலாபமாகப் பெற்ற விட முடியும் என்று பிரதமர்  இரணில்  விக்ரமசிங்க கூறியிருக்கிறார்.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வைத்து இனவாதத்தைக் கிளப்புகின்ற பேரினவாத அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்தால் இதனை தொடர்ந்து செயற்படுத்த இடமளிப்பார்களா என்ற சந்தேகங்களும் வடக்கிலுள்ள மக்களுக்கு ஏற்படுகிறது.

வடக்கில் தமிழரின் வளர்ச்சியை பொருளாதார முன்னேற்றத்தை விரும்பாத இனவாதிகளுக்கு யாழ்ப்பாண விமான நிலையம் ஒரு உறுத்தலாகவே இருக்கிறது.

வடக்கிலுள்ளவர்கள் தனியாக விமானப் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கி விட்டால் தமிழகத்துடனும், உலகத்துடனும் நெருங்கி விடுவார்கள் அவர்கள் தெற்கின் மீது தங்கியிருக்கும் நிலை குறைந்து விடும் என்று சிந்திப்போர் தெற்கில் உள்ளனர்.

அவ்வாறான சிந்தனைப் போக்கில் இருப்பவர்களால் யாழ்ப்பாண விமான நிலையத்தின் வளர்ச்சியைப் பெறுத்துக் கொள்ள முடியாது. எப்படியாவது அதனை முடக்கி விட வேண்டும் என்றே முயற்சிப்பார்க்ள.

விமல் வீரவன்ச போன்ற சகாக்கள் யாழ்ப்பாண விமான நிலையத்தை முன்னிறுத்தி செய்கின்ற பிரச்சாரங்களை, இனவாதக் கருத்துக்களை கோத்தபாய ராஜபக்ஷவோ, மஹிந்த ராஜபக்ஷவோ கண்டு கொள்ளவோ கண்டிக்கவோ இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

அவர்கள் மத்தியிலும் வடக்கு செழித்து விடப் போகிறதே என்ற கொதிப்பு இருக்கக்கூடும். தெற்கிலுள்ள இனவாதிகளக்கு மாத்திரமே யாழ்ப்பாண விமான நிலையம் உறுத்தலாக இருக்கவில்லை.மீம்ஸ் போட்டு கேலி செய்யும் தமிழர்களக்கும் இது உறுத்தலாகத் தான் இருக்கிறது. வடக்கின் பொருளாதாரம் விரிவடைவதை விரும்பாத ஒற்றைப் படைச் சிந்தனை கொண்டவர்கள் பலரும் எம்மிடையே இருக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை வடக்கு மூடப்பட்டதாக இருக்க வேண்டும். அந்நிய முதலீடுகள், பொருளாதார நிழல் படிந்து விடக்கூடாது. அவர்களுக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த விமான நிலையம் வடக்கின் மீது வெளிநாடுகளின் வெளிச்சத்தைப் பாய்ச்சி விடுமோ என்ற கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகம் இன்று மிகவும் சுருங்கி விட்டது. கண்டங்களுக்கு இடையிலான பயணங்களே சுருங்கி விட்டன. இவ்வாறான நிலையில் மிகக் கிட்டிய தொலைவில் உள்ள தமிழகத்துக்கு செல்வதற்குக் கூட கட்டுநாயக்கவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் நேரத்தை செலவிட வேண்டிய நிலையில் வடக்கிலுள்ள மக்கள் இருந்தனர்.

அந்த நிலை மாற்றப்பட்டு வடக்கின் பொருளாதாரம் புதியதொரு பரிணாமத்தை எட்டக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதனை புவிசார் அரசியல் என்றும் பிராந்திய பாதுகாப்பு நலன் என்றும் குறுகிய மனப்பாங்களில் சிந்திக்கின்ற பலரும் இருக்கிறார்கள்.

அவர்களுக்கும் யாழ்ப்பாண விமான நிலையம் உறுத்தலாகவே இரக்கிறது. உலகமே இன்று விமானப் பயணங்களால் இணைந்திருக்கிறது. சீனா, ரஷ்யா போன்ற மூடிய பொருளாதாரத்தை கொண்டிருந்த நாடுகள் கூட எல்லாவற்றையும் திறந்து விட்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில் வடக்கிலுள்ள தமிழர்களும் தம்மை – தமது பொருளாதார பலத்தை விரிவுப்படுத்திக் கொள்வதற்கு யாழ்ப்பாண விமான நிலையம் கைகொடுப்பதாக இருக்கும்.போருக்குள் சிக்கிச் சின்னாபின்னமாக ஒரு பிராந்தியத்தின் மீள் எழுச்சிக்குக்கூட இத்தனை எதிர்ப்புகளும், காழ்ப்புகளும் இருக்கும் என்பதை யாழ்ப்பாண விமான நிலையம் புரிய வைத்திருக்கிறது.

 

About editor 3123 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply