புத்த பெருமான் கண்டியில் பிறந்தாராம்! வவுனியாவில்தான் முதலாவது தர்ம போதனையாம்! புதிய வரலாற்று தகவல்
July 12, 2019
25 நூற்றாண்டுகளாக்கும் மேலாக நடைமுறையிலுள்ள வரலாற்றை மறுதலித்துள்ள சிங்கள உளவள ஊக்குவிப்பு பயிற்றுநர் ஒருவர், புத்த பெருமான் கண்டியை அண்மித்த கிராமமொன்றிலேயே பிறந்ததாகவும், வவுனியாவிலேயே முதலாவது தர்ம போதனையை நிகழ்த்தியதாகவும் புதிய வரலாற்றுத் தகவல்களை கூறியிருக்கின்றார்.
சிங்கள மக்கள் மத்தியில் பௌத்தத்தை போதித்துவரும் பிரதான பௌத்த தலைமை பிக்குவான ராஜகீய பண்டிதர் தொடம்பாஹல ராகுல தேரரின் முன்னிலையிலேயே உளவள ஊக்குவிப்பு பயிற்றுநர் சந்தன குணரத்ன, அதிசயமிக்க இந்த தகவல்களை தெரிவித்தார்.
சிறிலங்காவில் அண்மைய நாட்களாக சிங்கள பௌத்த பேரினவாதம் தீவிரமடைந்துவரும் நிலையில், சிங்கள வர்த்தகர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு டேவ் சிலோன் ஹோல்டின் லிமிட்டட் என்ற நிறுவனமொன்று சிங்கள வியாபாரிகள், சமூக வலைத்தள பதிவாளர்கள் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
கொழும்பை அண்மித்த புறநகரான கிரிபத்கொடபகுதியிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற இந்த நிறுவனத்தின் அறிமுக விழாவிற்கு, ஊக்குவிப்பு விரிவுரையொன்றை ஆற்றுவதற்காக அழைக்கப்பட்ட சந்தன குணரத்ன, ராஜகீய பண்டிதர் தொடம்பாஹல ராகுல தேரரின் முன்னிலையில், புத்த பெருமான் சிறிலங்காவிலேயே பிறந்ததாகவும், ஆனால்இந்திய பிரமாணர்கள் அதனை வரலாற்றை திரிபுபடுத்தி எழுதிவிட்டதாகவும் கூறினார்.
“புத்த பெருமான் சிறிலங்காவைச் சேர்ந்தவர். இந்த நாட்டில் பிறந்த ஹெல இனத்தவர். பிறந்தது எங்கே?. கண்டிக்கு அருகிலுள்ள பம்பரகல ரஜமகா விகாரையின் கல்வெட்டிலும் அங்குதான் பிறந்தார் என்று கூறப்பட்டிருக்கின்றது. அப்போதிருந்த சாலமரம் இன்னமும் அங்கு காணப்படுகின்றது. புத்த பெருமான் பரிநிர்வாணம் அடைந்தது எங்கே?
ஹிருவாடுன்ன என்ற இடத்தில். புத்த பெருமான் முதலாவது தர்ம போதனையை செய்தது எங்கே?. இசின்பெஸ்கல என்ற இடத்தில். அதனால்தான் இசிபத்தன என்று அழைக்கின்றோம்.
வாராணாசி, இசிப்பத்தன, மிகதாய என்று வவுனியாவையே கூறுகின்றனர். இன்றும் மிகதாய என்ற கிராமம் காணப்படுகின்றது. சரியாக புரிந்துகொள்ளுங்கள். புத்த பெருமான் போன்ற ஒருவர் சிறிலங்காவில் ஏன் பிறந்தார்?
இயற்கையாகவே சிறந்த அறிவு இருக்கும் இனத்தவர் என்பதால். புத்தி வளர்ச்சியடைந்ததன் காரணமாக. உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு புத்த பெருமான் ஒருவர் அல்லது புத்தி ஜீவிகள் சிறிலங்காவில் இயற்கையாகவே உருவாகக்கூடிய சூழல் காணப்படுகின்றது”.
புத்த பெருமானின் போதனைகள் அடங்கிய நூலான திரிபீடகம் முதலில் சிங்களவர்கள் ஆரம்பத்தில் பேசிய மொழியான ஹெல மொழியிலேயே எழுதப்பட்டதாகவும், அதனையே பின்னர் பாலியல் மொழிபெயர்த்ததாகவும் சந்தன குணரத்ன கூறினார்.
“உலகின் முதலாவது மொழி என்ன என்று தெரியுமா?. ஹெல மொழியே அது. அது சிங்களம் அல்ல. சிங்களத்திற்கு முன்னதாக நாம் பேசிய மொழி. புத்த பெருமானின் திரிபீடகமும் ஹெல மொழியிலேயே முதலில் எழுதப்பட்டது.
புத்த பெருமான் ஹெல மொழியிலேயே தர்மத்தை போதித்தார். உலக வரலாற்றில் முதன்முறையாக நூலகமொன்று தீயிட்டு கொளுத்தப்பட்டதும் சிறிலங்காவிலேயே. எங்கே அது அபயகிரியவில்.
புத்தகோச என்ற இந்திய பிரம்மணர் சிறிலங்காவிற்கு வந்து திரிபீடகத்தை கற்றுக்கொண்டார். முழுமையாக கற்றுக்கொண்டு அதனை பாலியில் மொழிபெயர்த்தார்.
நீங்கள் வாசிக்கும் திரிபீடகம் புத்த பெருமானின் நூறுவீதமான திரிபீடகம் அல்ல.
அதில் இந்து மதத்திலுள்ள விடையங்களையும் உள்ளடக்கிய திரிபீடகமாகும். இதற்கமைய பாலியில் மொழி பெயர்த்ததன் பின்னர் ஹெலட்டுவா என்ற ஒரு மலை அளவிற்கு உயரமான ஓலைச்சுவடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இந்த சம்பவமே உலக வரலாற்றில் முதன்முறையாக நூலக சாலையொன்று எரிக்கப்பட்ட சம்பவமாக இடம்பிடித்துள்ளது. இதனை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்”.
சிங்கள வர்த்தகர்கள், புத்தி ஜீவிகள், கல்விமான்கள், முன்னாள் படைத் தளபதிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில், உலகின் மனிதனின் பரிணாம வளர்ச்சியும் சிறிலங்காவிலேயே இடம்பெற்றதாகவும் சந்தன குணத்ன அவரது தொல்லியல் ஆய்வுத்தகவலொன்றையும் தெரிவித்தார்.
“சிங்கள இனத்தவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா?. சிங்களவன் என்பவன் உலகின் முதலாவது மனித இனத்தைச் சேர்ந்தவன். மனிதனின் பரிணாம வளர்ச்சி எமது சிறிலங்காவிலேயே இடம்பெற்றது. எங்கே என்று தெரியுமா?
சிவனொலிபாத மலை அடிவாரத்திலேயே இந்த பரிணாம வளர்ச்சி இடம்பெற்றது. சிறிலங்கா என்பது குறைவாக புவியீர்ப்பு விசை காணப்படும் ஒரு நாடாகும். இதனை உறுதிப்படுத்தும் நாஸாவின் காணொளியொன்றை எனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளேன். அங்கு சென்றால் நீங்கள் அதனை பார்க்கலாம். அந்த காணொளியில் குறைவான புவி ஈர்ப்பு விசைக் காணப்படுவதால் சிறிலங்காவை நீள நிற்த்தில் அடையாளமிட்டுள்ளனர்.
அதாவது சிறிலங்காவில் மேல் இழுக்கும் விசை அதிகம் காணப்படுகின்றது. அதனால் சிறிலங்காவில் பிறக்கும் மனிதனுக்கு இயற்கையாகவே மேலே இழுத்துச் செல்லும் சக்தியொன்று காணப்படுகின்றது.
இதனால் மூளையின் வளர்ச்சியும் அதிகம். ஒல்கொட்டின் பாரியார் பரிணாம வளர்ச்சி தொடர்பில் ஆய்வுகள் பலவற்றை செய்த நிபுணராவார். அவரது ஆய்விலும், சிறிலங்காவிலேயே மனிதனின் பரிணாம வளர்ச்சி இடம்பெற்றதை கண்டுபிடித்தார்.
இதற்கமைய குருவிட்ட, பலங்கொட ஆகிய பகுதிகளிலேயே முதலாவது மனித பரிணாம வளர்ச்சி இடம்பெற்றிருக்கின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனாலேயே சிவனொலிபாத மலை உச்சியிலுள்ள பாத அடையாளம் உலகின் முதலாவது மனிதனின் பாதத்தின் அடையாளங்கள் என்று அவர் அடையாளப்படுத்தினார்”.
இது மாத்திரமன்றி உலகில் முதன் முதலில் கப்பல் மற்றும் விமானங்களையும் சிறிலங்கா மக்களே கண்டுபிடித்ததாகவும் உளவள ஊக்குவிப்பு குரு சந்தன குணரத்ன தெரிவித்துள்ளார்.
“ உலகில் முதன்முறையாக மிக சுருக்கமாக கூறுகின்றேன். உலகில் முதன் முதலில் எங்கு விமானம் தயாரிக்கப்பட்டது. சிறிலங்காவைச் சேர்ந்த எமது மக்களே தயாரித்தனர். மேல் எழக்கூடிய சக்தி சிறிலங்காவிலுள்ள மனிதர்களுக்கு இருந்ததால் அதனை செய்ய முடிந்தது. உலகில் முதலாவது கப்பல் எங்கே கட்டப்பட்டது. சிறிலங்கா மக்களே கட்டினர்.
இரும்புகளைக் கொண்டு கப்பலை முதலில் தயாரித்தது சிறிலங்கா மக்கள். எகிப்து நாட்டவரான கொத்தாயத் என்பர் பலகைகளைக் கொண்டு கப்பலொன்றை கட்டியிருந்தார். அந்தக் கப்பலைக்கொண்டு அவர் கடலுக்கு சென்றிருந்தார்.
அதனால் எகிப்தின் அப்போதைய மன்னர் பெரிதும் மகிழ்ச்சியடைந்ததுடன், கடலில் பயணிக்கக்கூடிய வாகனத்தை தயாரித்த கொத்தாயப்பிற்கு பல வரப்பிரசாதங்களையும், சலுகைகளையும் வழங்கினார்.
இவ்வாறு இருக்கையில் ஒரு தடவை கொத்தாயத் கடலுக்கு சென்று திரும்பவே இல்லை. அதனால் அவன் இறந்துவிட்டான் என்று கருதி இறுதி மரியாதைகள் எல்லாம் செய்யப்பட்டன. இந்த நிலையில் மூன்று வருடங்களுக்குப் பின்னர் கப்பலொன்று வருகின்றது. பார்க்கும் போது கோத்தாய் உயிருடன் வருகிறான். எந்த கப்பலில் வந்தான்.
இரும்பில் கட்டப்பட்ட கப்பலில் வந்தான். அவனுடன் மிகவும் ஆஜானுபாகுக்கள் ஐந்து – ஆறு பேர் வந்தார்கள். அவர்கள் எங்கலைப்போல் நெத்தலிகளைப் போன்றவர்கள் அல்ல. மன்னரிடத்தில் சென்று நடந்தது என்ன என்பதை விபரித்தார்.
பயணம் செய்த கப்பல் உடைந்துவிட்டது. பின்னர் மரப்பலகையொன்றில் பிடித்துக்கொண்டு கரைக்கு அடித்துச்சென்ற செலனிக்கா என்ற ராஜ்ஜியத்திற்கு சென்றுள்ளார்.
செலனிக்கா மக்கள் கோத்தாயத்தை மன்னரிடத்தில் அழைத்துச் சென்றனர். அங்கு கரையோரங்களில் ஏராளாமான கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. என்ன கப்பல்கள்?. இரும்பிலானா கப்பல்கள் அவை.
ஹெல மொழியை கற்றுக்கொண்ட பின்னர் மன்னருக்கு தனது நிலமைகளை எடுத்துக்கூறியதை அடுத்து மன்னர் அவனுக்கு கப்பலொன்றையும் கொடுத்து, எகிப்திலும் இரும்பிலான கப்பல்களை கட்டிக்கொள்ளுமாறு கூறி பொறியியலாளர்கள் ஐந்து பேரையும் அவனுடன் அனுப்பிவைத்தார். அப்படித்தான் கபல் உருவாகியது. அதேபோலத்தான் விமானம் தயாரிக்கப்பட்டது”.
அதேவேளை உலகில் முதுன் முதலில் தொலைவிலிருந்து இலக்கை சுடக்கூடிய துப்பாக்கியான ஸ்னைபர் ரக துப்பாக்கியையும் சிங்கள மன்னனே கண்டுபிடித்ததாகவும் ஊக்கப்படுத்தல் பயிற்றுநர் குரு குணரத்ன தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் போருக்கு பின்னரான காலப்பகுதியில் இராணுவத் தளபதியாகவும், பின்னர் முப்படைகளின் பிரதானியாகவும் கடமையாற்றிய ஜெனரல் ஜகத் ஜயசூரிய முன்னிலையிலேயே சந்தன குணரத்ன இந்த தகவலைத் தெரிவித்தார்.
“ உலகில் முதன் முதலில் இந்த ஐயாவிற்கு என்னைவிட விபரங்கள் தெரிந்திருக்கும். ஸ்னைபர் துப்பாக்கி சிறிலங்காவிலேயே தயாரிக்கப்பட்டது. ஸ்னைபர் துப்பாக்கி. ஸ்னைபர் துப்பாக்கி அமெரிக்காவில் நான் கணாவில்லை.
வாசித்திருக்கின்றேன். அமெரிக்காவில் யுத்த ஆயுதங்கள் தொடர்பான அருங்காட்சியகத்தில் நான் அறிந்தவரையில் நிலத்துக்கு கிழ் ஏழாவது மாடியில் லேஸர் கதிர்களுக்கு மத்தியில் சிறிலங்காவில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட ஸ்னைபர் துப்பாக்கி வைக்கப்பட்டுள்ளது. மன்னர் பாவித்த இடுப்பில் தொங்கிக்கொண்டிருக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட ஸ்னைபர் துப்பாக்கி அது. அதன் புகைப்படங்களை கண்டிருக்கின்றேன்.
அவை என்னிடம் இருக்கின்றன. நான் அறிந்தவரை சிறிலங்காவில் ஒருவர் மாத்திரமே அதனை நேரில் பார்த்திருக்கின்றார். சரியா?. ஸ்னைபர் துப்பாக்கியை தயாரித்தது நாம். உலகில் முதன் முதலில் வங்கி முறையை உருவாக்கியது யார்.
இந்த சிறிலங்காவில். வணிக வங்கி முறையை உருவாக்கியதும் சிறிலங்காவில். உலகில் முதன்முறையாக கடலுடன் இணைத்த கால்வாய்களை கட்டி கப்பல்களை நாட்டிற்குள் கொண்டுவந்து விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்தது யார்?. சிறிலங்கா மக்கள். காலிங்க கால்வாய் என்பதுதான் அது.
முதன் முறையாக துறைமுகங்களில் வரி முறையை அறிமுகப்படுத்தியதும் சிறிலங்கா மக்களே. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலும், மன்னாரிலும் முதலில் வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது”.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சந்தன குணரத்ன, புத்த பெருமான் வியாபாரிகளுக்கே போதித்ததாகவும் கூறியதுடன், அதனால் நாட்டை தற்போதைய நிலையிலிருந்து மீட்டு, நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் சிங்கள வியாபாரிகளும், இராணுவத்தினரும் இணைந்து நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை கைப்பற்றி, நாட்டின் ஆட்சியை தம்வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இதனையடுத்து அங்கு உரையாற்றியிருந்த சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, சந்தன குணர்தனவின் கருத்துக்களை அங்கீகரித்ததுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதன் பின்னரான நிலமைகளில் இருந்து நாட்டை மீட்க இராணுவ ஆட்சியொன்றின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
https://www.ibctamil.com/srilanka/80/123928?ref=recommended3
Leave a Reply
You must be logged in to post a comment.