புத்தராகிப் பௌத்த தர்மம் உபதேசித்தது

கௌதம புத்தர்
மயிலை சீனி. வேங்கடசாமி

பகவன் புத்தர் வாழ்க்கை வரலாறு – இரண்டாம் பதிப்பு 1969

Lord Buddha’s Life History – Mylai Seeni Vengatasamy 2nd Edition 1969

 3. புத்தராகிப் பௌத்த தர்மம் உபதேசித்தது
Spreading the Dhamma as The Buddha
போதிமரத்தை அடைதல்

இவ்வாறு கௌதம முனிவர் அன்று பகலில் பத்திரவனத்தில் தங்கிச் சித்த விசுத்தி செய்துகொண்டு பிறகு மாலை நேரமானவுடன் சாலவனத்தை விட்டுப் புறப்பட்டுப் போதிமரம் (அரசமரம்) இருக்கும் இடத்திற்குச் சென்றார். செல்லும் வழியிலே எதிர்பட்ட சுவஸ்திகன் என்னும் பிராமணன் இவருக்கு எட்டுப்பிடி தர்ப்பைப் புல்லைக் கொடுத்தான். தர்ப்பையைப் பெற்றுக் கொண்ட கௌதம முனிவர், போதிமரத்தையடைந்து அதன் தென்புறத்திலே நின்றார். அப்போது அவ்விடம் தாமரை இலையில் தங்கிய தண்ணீர் உருள்வது போன்று நிலம் அசைந்தது. பிறகு மேற்குப் பக்கம் போனார். அங்கும் நிலம் அசைந்தது. அந்த இடத்தைவிட்டு வடக்குப் பக்கம் போய் நின்றார். அவ்விடத்திலும் நிலம் அசைந்தது. பிறகு கிழக்குப்புறம் வந்தார். அங்கு நிலம் அசைவற்று இருந்தது. இதுவே தகுந்த இடம் என்று கண்டு போதிசத்துவர் தமது கையிலிருந்த தர்ப்பைப் புல்லைத் தரையில் பரப்பி வைத்து அதன்மீது அபராஜித பரியங்கத்தோடு அமர்ந்தார். அதாவது உறுதியான மனத்துடன் அமர்ந்தார். “என்னுடைய உடம்பில் உள்ள தோல், சதை, இரத்தம், நரம்பு, எலும்பு முதலியவை உலர்ந்து வற்றிப் போனாலும் நான் புத்த பதவியையடையாமல் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டேன்,” என்று உறுதியான எண்ணத்துடன் அரசமரத்தில் முதுகை வைத்துக் கிழக்கு நோக்கி இருந்து பதுமாசனத்தில் (வச்சிராசனம்) அமர்ந்தார்.மாரன் போர்

கௌதம முனிவராகிய போதிசத்துவர் போதிமரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தபோது அவரைப் போற்றி வணங்குவதற்காகத் தேவர்களும், பிரமர்களும் ஆற்றில் நீரோடுவதுபோலக் கூட்டங்கூட்டமாக தேவலோகத்திலிருந்து மண்ணுலகத்திற்கு வந்தார்கள். தேவர்கள் எல்லோரும் இங்கு வந்து விட்டபடியால் இதுவே தேவலோகம் போலக் காணபட்டது. மாலை வேளையானபடியினாலே சூரியன் மறைந்துவிட்டது. வெள்ளுவாநாள் ஆனபடியினாலே முழுநிலா, பால்போன்ற நிலவை எங்கும் பரப்பிக் கொண்டு வானத்தில் எழுந்தது. முழு நிலா தோன்றும் இந்தக் காட்சி, போதிசத்துவராகிய கௌதமர் பத்துப் பாரமிதைகளை நிறைவேற்றி முடித்துவிட்டார் என்பதை உலகத்தாருக்குக் கூறுவதுபோலக் காணப்பட்டது. அப்போது போதிசத்துவர், அஸ்வத (அரச) மரத்தில் முதுகை வைத்துக் கிழக்கு முகமாக அமர்ந்து தியானத்தில் இருந்தார். இவருடைய உடம்பில் இருந்து வெளிப்பட்ட ஒளியானது இவர் இருந்த  இடத்தில் சுடரொளிபோல் காணப்பட்டது.

அப்போது திடீரென்று சூறாவளிக் காற்று வீசியது. ஆகாயம் எங்கும் மேகங்கள் சூழ்ந்து கொண்டன. இருள் மூடிக் கொண்டது. பயங்கரமாக இடி இடித்தது. பூமி அதிர்ந்தது. அவ்விடத்தில் வந்திருந்த தேவர்களும் பிரமர்களும் அஞ்சி ஓடிப் போனார்கள். இடியும் மின்னலும் அச்சத்தை உண்டாக்கின. வால் வெள்ளிகள் காணப்பட்டன. விண்மீன்கள் எரிந்து விழுந்தன. காக்கைகள் கரைந்து ஓலமிட்டன. ஆந்தைகளும் மரநாய்களும் பயங்கரமாக அலறி ஊளையிட்டன. எலும்புக் கூடுகள் நடந்துவருவதுபோலப் பேய்கள் வெளிப்பட்டன. தலையற்ற உடல்கள் ஆகாயத்தில் பறந்தன. வாள், வில், வேல், கோடரி, ஈட்டி, கட்டாரி முதலிய ஆயுதங்களை ஏந்திக் கொண்டு பூதங்கள் அங்கே வந்தன. ‘பிடியுங்கள்’ ! அடியுங்கள்! கட்டுங்கள்!கொல்லுங்கள்! என்னும் பயங்கரமான குரல்கள் கேட்டன. இவ்வாறு பயங்கரமான சேனையுடன் வந்தவன் யார்? இவ்வாறு வந்தவன் தேவசேனைகளையும் பிரமசேனைகளையும் முதுகு காட்டி ஓடச்செய்யும் பேராற்றல் வாய்ந்த வசவர்த்தி மாரனே.

இவ்வாறு ஆர்ப்பரித்துக் கொண்டு போதிசத்துவர் மீது போருக்கு வந்த வசவர்த்தி மாரன், அவருக்கு அருகே வரமுடியவில்லை. தூரத்திலேயே நின்றான். கௌதம முனிவர் அஞ்சாமல், மான் கூட்டத்தின் இடையே சிங்கம் போலவும், பறவைகளின் கூட்டத்தில் கருடன் போலவும் வீற்றிருந்தார். முன் பிறப்புக்களிலே பாரதைகளை நிறைவேற்றினவர் ஆகையினாலே இவர் சிறிதும் அஞ்சாமல் வீற்றிருந்தார். சேனைகளுடன் வந்த மாரன், இவரைப் பார்த்து உரத்த குரலில் இவ்வாறு கூறினான்: “நான் உலகத்திலேயே பெரியவன்; உயர்ந்தவன்; மேலானவன்; நீயோ அற்பச் சிறு மனிதன். பெரியவனாகிய நான் வரும்போது அற்ப மனிதனாகிய நீ எழுந்து நின்று வணங்காமல் ஏன் உட்கார்ந்திருக்கிறாய்? உனக்கு மட்டுமரியாதை இல்லயா? உனக்கு என்னிடம் அச்சம் இல்லையா?” என்று வெடிப்பான குரலில் அச்சமுண்டாகும்படி பேசினான். போதிசத்துவராகிய கௌதமர் சிங்கம்போல அஞ்சாமல் வீற்றிருந்தார்.அப்போது மாரன், இவருக்கு அச்சமுண்டாக்கி இவரை எழுந்து ஓடச்செய்வேன் என்று தனக்குள் நினைத்து, ஒன்பது விதமான மழைகளைப் பொழியச் செய்தான். இவைகளினாலே போதிசத்துவருக்கு எவ்விதமான துன்பமும் உண்டாகவில்லை. அவர் அஞ்சாமல் சிங்கம் போல் வீற்றிருந்தார். மாரன், தான் அமர்ந்திருந்த கிரிமேகலை என்னும் யானையைப் போதிசத்துவர் மேல் ஏவினான். “ஓய்! அந்தப் பதுமாசனத்தில் இருந்து எழுந்து ஓடிப்போ!” என்று அதட்டிக் கூவினான். அப்போதும் போதிசத்துவர், குழந்தை தன்னைக் காலால் உதைத்தாலும் கோபப்படாத தாயைப்போல இருந்து, மாரனைப் பார்த்து, “மாரனே! இவ்விடத்தை விட்டு நான் போகமாட்டேன்,” என்று உறுதியாகக் கூறினார்.

அப்போது மாரனுடைய சேனைகள் வந்து அவரைச் சூழ்ந்து கொண்டன. போதிசத்துவர் கிரிமேகலை மீது அமர்ந்திருந்த மாரனைப் பார்த்து மேலும் கூறுவார்: “இந்தத் தர்மயுத்தத்திற்கு நான் முனைந்து இருக்கிறேன். இந்தப் பதுமாசனத்தில் இருந்து மாரன் என்னை அசைக்க முடியாது. உலகத்திலே ஒருவரும் வெல்ல முடியாத காமம், வெகுளி, மயக்கம் முதலான சேனைகள் உன்னிடம் இருக்கின்றன. ஆனாலும் நான் தனியாக இருந்து பிரஞ்ஞா (ஞானம், அறிவு) மூலமாகப் போர் புரிந்து உனது சேனைகளைத் தோல்வியுறச் செய்வேன். ஓ, மாரனே! நான் உயர்ந்த நன்ஞானத்தினாலே மித்தியா சங்கல்பத்தை (பொய் அறிவை) நீக்கி சம்யத் சங்கல்பம் கொண்டு நான்கு விதங்களினால் மனத்தைப் பண்படுத்தி அதை விழிப்புடன் நன்றாக வைத்திருக்கிறேன். என்னுடைய சீடர்களையும் விழிப்பாக இருக்கும்படி பயிற்சிசெய்விப்பேன். நான் கூறுகிறபடி நடக்கிறவர்கள் நிர்வாண மோக்ஷத்தைப் பெறுவார்கள். உன்னால் தோல்வியுற மாட்டார்கள். அவர்கள் துக்கம் அற்ற நிர்வாண  மோக்ஷத்தையடைவார்கள்.”

இதை கேட்ட மாரன், “ஓ, சிரமணரே! என்னிடம் உமக்கு அச்சம் இல்லையா?” என்று கேட்டான்.

“இல்லை, மாரனே; உன்னிடம் எனக்கு அச்சம் இல்லை,” என்று உறுதியாக கூறினார் போதிசத்துவர்.

“தேவர்களும் என்னை எதிர்க்கத் தைரியம் இல்லாதபோது, மனிதனாகிய நீ மட்டும் எக்காரணத்தினால் அச்சமில்லாமல் இருக்கிறாய்?” என்று கேட்டான் மாறன்.

“பத்துப் பாரமிதை * தர்மங்களை நிறைவேற்றினவன் ஆகையினாலே உன்னிடத்தில் எனக்கு அச்சம் இல்லை,” என்று கூறினார் போதிசத்துவர்.
*பத்துப்பாரமிதைகளாவன: 1. தானம் 2. சீலம் (ஒழுக்கம்) 3. நெக்கம்மம் (ஆசைகளை அகற்றிப் பிறர் நலத்துக்காக வாழ்தல்) 4. பஞ்ஞா (ஞானம்) 5. வீரியம் (ஆற்றல்) 6. கந்தி (பொறுமை) 7. வாய்மை ( பத்தியம்) 8. அதிட்டானம் (ஒழுக்கம் நேர்மை இவற்றிலிருந்து பிறழாமல் இருத்தல்) 9. மேத்தை (அன்பும் அருளும் உடைமை) 10. உபேஷை (விருப்பு வெறுப்பு இல்லாதிருத்தல்).”நீர் பாரமித புண்ணியங்களை நிறைவேற்றினது யாருக்குத் தெரியும்? அதற்குச் சான்று உண்டா?” என்று கேட்டான் மாரன்.

போதிசத்துவர், “மாரனே! நான் சான்று காட்ட வேண்டியதில்லை. ஆனாலும், நீ கேட்கிறபடியினாலே சான்று காட்டுவேன். ஒரு வெஸ்ஸந்தர ஜன்மத்திலே நான் தானங்கொடுத்தபோது ஏழு தடவை பூமி அதிர்ச்சி கொண்டது உண்மை என்பதை இந்தப் பூமிதேவி சான்று கூறுவாள்,” என்று கூறி, சீவர ஆடையின் உள்ளே இருந்த தமது கையை வெளியில் எடுத்துப் பூமியைச் சுட்டிக் காட்டினார்.

அப்போது பூமியானது பயங்கரமான ஓசையுடன் ஆறு தடவை அதிர்ந்தது. இதைக் கண்டும், கேட்டும் அச்சங்கொண்ட மாரன் தன்னுடைய கொடியை எடுத்துக் கொண்டு சேனையுடன் ஓடிப் போனான். இவ்வாறு சூரியன் மறையுமுன்பே, போதிசத்துவர் மாரனை வென்று வெற்றிபெற்றார். இந்தப் போரை வெகு தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த பிரமர்களும், தேவர்களும் போதிசத்துவர் வெற்றி பெற்றதைக் கண்டு, “துக்கமற்ற புண்ணியவான்களே! சித்தார்த்த போதிசத்துவருக்கு வெற்றி கிடைத்தது! வசவர்த்தி மாரன் தோல்வியடைந்தான். ஆகையினாலே, ஐய மங்கள விழாவையும் புத்த மங்கள விழாவையும் ஒருங்கே கொண்டாடுவோம் வாருங்கள்,” என்று சொல்லிக் கொண்டே எல்லோரும் போதி மரத்தருகே வந்தார்கள்.

அப்போது ஆயிரம் கதிர்களையுடைய பொன்தட்டு ஒன்று தண்ணீரில் அமிழ்வது போலச் சூரியன் மேலைக் கடலில் மூழ்கினான். முழுநிலா பால்போன்ற ஒளியை எங்கும் வீசிக்கொண்டு ஆகாயத்திலே காணப்பட்டது. தூய்மையான வானத்திலே விண்மீன்கள் மின்னிக் கொண்டிருந்தன. இந்தக் காட்சி போதிசத்துவருக்கு அமைக்கப்பட்ட விதானம் போலத் தோன்றியது. வானமும் பூமியும் சேர்வதுபோலக் காணப்படும் வானவட்டமானது போதிசத்துவரைச் சூழ்ந்திருந்து பிரகாரம் போன்று காணப்பட்டது. பூமண்டலம் போதிசத்துவருக்கு அமைந்த ஒரு இல்லம் போலத் தோன்றியது. அடி முதல் நுனிவரையில் நூறு முழம் உயர்ந்து வளர்ந்த அந்த அரசமரமானது மயில் ஒன்று தன் தோகையை விரித்திருப்பது போன்று காணப்பட்டது. இந்தப் போதிமரத்தின் அடியிலே அமர்ந்து வசவர்த்தி மாரனை (தேவபுத்திர மாரனை) வென்ற போதிசத்துவர் கிலேச மாரன், மிருத்யுமாரன், ஸ்கந்த மாரன், அபிசம்ஸ்கார மாரன் என்னும் மற்ற மாரர்களையும் வெற்றி கொள்வதற்கு ஆயுத்தமாக இருந்தார். அவரிடம் வந்த தேவர்களும் பிரமர்களும் அவரை வணங்கி வாழ்த்திப் போற்றிப் பிறகு தத்தம் இருப்பிடம் சென்றார்கள்.

போதிஞானம் அடைதல்

மதிநாள் முற்றிய மங்கலத் திருநாளாகிய வைசாகப் பௌர்ணமி அன்று மாலை வசவர்த்தி மாரனை வென்ற போதிசத்துவர், அவ்விரவின் முதல் யாமத்திலே யோகத்தில் அமர்ந்து படிப்படியாக முலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என்னும் யோகங்களைச் செய்து நாலாவது யோகத்திலிருந்து மனத்தைச் செலுத்தித் தமது முற்பிறப்புக்க்ளைக் காணத் தொடங்கினார். இவ்வாறு முற்பிறப்புகளைக் காணும் இவருக்கு, முன்பு உண்டாகியிருந்த கணக்கற்ற பிறப்புக்கள் புலனாயின. இந்த முதல் யாமத்திலே யோகத்தை (அறியாமையை) நீக்கி, முற்பிறவியைக் காண்கிற ஞானத்தையடைந்தார். இந்த ஞானத்திற்கு ‘முதல் சித்திலாபம்’ என்பது பெயர்.

முதல் சித்தி லாபம் என்னும் இந்த ஞானத்தின் மூலமாகத் தமது முற்பிறப்புக்களைக் கண்ட போதிசத்துவர், “நாமரூபங்கள் (உயிருடன் கூடிய உடம்பு) அந்தந்தப் பிறப்பிலே உண்டாகி அந்தந்தப் பிறப்பிலேயே அழிந்து விட்டன. நாமாரூபங்கள் தோன்றியபோது ஐம்பொறிகளும் ஐம்புலன்களும் தோன்றி அவையும் அந்தந்தப் பிறப்பிலேயே மறைந்து விட்டன. அழிந்து விட்டன. ஆனால் தனிப்பட்டதும் அழியாததுமான உயிரானது, ஜீவனாவது, புருஷனாவது கிடையாது.  ஆகையினாலே, இவைகளை உண்டாக்கிய கடவுளாவது, பிரமனாவது, மாரனாவது கிடையாது!” என்று அறிந்து இருபது விதமான சத்காயதிருஷ்டியை (ஆத்ம திருஷ்டியை) நீக்கினார். இதுவே போதிசத்துவருக்குக் கிடைத்த முதல் விசுத்தியாகும்.

பிறகு போதிசத்துவர் அவ்விரவின் இடையாமத்திலே முன்போலவே யோகத்தில் அமர்ந்து அதன் மூலமாக நான்கு தியானங்களை அடைந்து நான்காவது தியானத்துக்கப்பால் தமது மனத்தைச் செலுத்தி ஜனங்களுடைய பிறப்பு இறப்புக்களைக் காணலானார். அப்போது இறக்கும் தருணத்தில் இருக்கிற உயிர்களையும், கருவிலே கிடந்து பிறக்குந் தருணத்தில் இருக்கிற உயிர்களையும், நன்மைகளைச் செய்த காரணத்தினாலே இன்பங்களை அனுபவிக்கிற உயிர்களையும், தீமைகளைச் செய்தபடியினாலே துன்பங்களை அனுபவிக்கிற உயிர்களையும் அவர் தமது மனக்காட்சியில் கண்டார்.  இவ்வாறு உயிர்களுடைய பிறப்பையும் இறப்பையும் கண்டபடியினாலே, அது பற்றியிருந்த மாயை இவருக்கு இல்லாமற் போயிற்று. பிறப்பு இறப்பைப் பற்றிய மாயை  நீங்கிவிடவே பதினாறு விதமான ஐயங்கள் நீங்கிவிட்டன. இதுவே போதிசத்துவருக்கு இரண்டாவதாகக் கிடைத்த காம்ஷாவிதரணவிசுத்தி ஆகும்.பிறகு இரவின் கடைசி யாமமாகிய மூன்றாவது யாமம்வந்தது. முன்போலவே போதிசத்துவர் பிரணாயாமம் செய்து யோகத்தில் அமர்ந்து நான்காவது நிலைமையையடைந்து உண்மைத் தத்துவத்தைக் காண மனத்தைச் செலுத்தினார். அப்போது பஞ்ச ஸ்கந்தங்கள், அநித்யம், துக்கம், அநாத்மம் என்பவற்றைக் கண்டு, ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்து, பன்னிரண்டு நிதானங்களிலே சொல்லுகிறபடி ஏழுவிதமான விசுத்திமார்க்கத்தைக் கண்டார். இவைகளை மேன்மேலும் ஆராய்ந்து பார்த்து, அநித்திய தரிசனம் மூலமாக  நித்தியம் என்னும் பொருளையும், துக்க தரிசனம் மூலமாகச் சுகம் என்னும் பொருளையும், அனாத்ம தரிசனம் மூலமாக ஆத்மசஞ்ஞை என்னும் பொருளையும் அறிந்தார். அவ்வாறே ஆராய்ந்து பார்த்து, விராக தரிசனத்தினாலே ராகத்தையும், நிர்விதானு தரிசனத்திலே நந்தி (ஆசை) யையும், நிரோதானு தரிசனத்தினாலே சமுதயத்தையும், பிரதி நிச்சர்க்க தரிசனத்தினாலே ஆதானத்தையும் நீக்கினார்.

பிறகு, எல்லா சம்ஸ்காரங்களையும் இரண்டாகப் பிரித்து உதயம் (தோற்றம்), வியயம் (அழிவு) என்னும் முறையில் ஆராய்ந்து பார்த்தபோது ஆலோகம், பிரீதி, பிரஸ்ரப்தி, ஞானம், சிரத்தை, ஸ்மிருத்தி, சுகம், உபேக்ஷை, வீரியம், நிகாந்தி என்கிற விதர்சனா ஞானங்களும் இவற்றினின்று எதிர்மாறான ஞானங்களும் தோன்றின (விதர்சனா ஞானம் அடைந்த படியினாலே இவருடைய சரீரத்திலே இருந்த இரத்தம் தூய்மை பெற்று அதிலிருந்து பொன்னிறமான ஒளி வெளிப்பட்டது).

மேலே சொன்ன ஆலோகம், பிரீதி, பிரஸ்ரப்தி முதலிய விஷயங்களை ஞானத்தினாலே ஆராய்ந்து பார்த்தபோது திருஷ்ணை, திருஷ்டியை, மானம் என்கிறவைகளுக்கு அவை ஆதாரமாக இருக்கிறபடியினாலே அது மோக்ஷ  மார்க்கத்துக்கு வழியாகாது; ஆகவே, இந்தப் பாதையைவிட்டு நீங்கி விதர்சனா பாதையில் செல்வதே நல்வழி என்று அறிந்தார். இவ்வாறு நன்நெறி தீநெறிகளைக் கண்டு, ஆலோகம் முதலானவைகளிலே மனத்தைச் செலுத்தாமல் விதர்சனா பாவத்திலே மனத்தைச் செலுத்துவது மோக்ஷ  மார்க்கம் என்பதைக் கண்டார்.இவ்வாறு இவர் கண்ட மார்க்கத்திற்கு ‘மார்கா மார்க்க ஞானதர்சன விலத்தி’ என்பது பெயர்.

விதர்சன நெறியில் சென்ற போதிசத்துவர், பிறகு அநித்தியம், துக்கம், ஆனாத்மம், அசுதி என்பவற்றைச் சிந்தித்து ஆராய்ந்து பார்த்தபோது பஞ்ச ஸ்தந்தங்களின் தோற்றத்தையும் அழிவையுங் கண்டார். இதற்கு ‘உதய வியய ஞானம்’ என்பது பெயர்.

இவ்வாறே போதிசத்துவர் முறையே பஞ்சானு தர்சன ஞானம், பயதோபஸ்தான ஞானம், ஆதீனவ ஞானம், முக்திகாமதா ஞானம், பிரதி சங்க்யானுதர்சன ஞானம், சம்ஸ்காரரோபேக்ஷா ஞானம் முதலிய ஞானங்களையடைந்தார். பிறகு சத்யானுலோம ஞானம் உண்டாயிற்று. பிறகு, பிருத்தஜ்னா கோத்ராவஸ்தையைக் கடந்து நிர்வாண மோக்ஷத்தைப் பெற்றுக்கொண்டே கோத்ரபூ ஞானம் கிடைக்கப்பெற்றார்.

கோத்ரபூ ஞானம் மனதில் தோன்றி மறையும் போது துக்கத்தைப் பார்த்துக் கொண்டே சமுதயத்தை நீக்கிக் கொண்டே நிரோதத்தைப் பாவித்து உறுதிப்படுத்திக் கொண்டே மார்க்க சத்தியத்தை அனுசரித்துக் கொண்டே முதலாவது ஞானதரிசனம் பெற்றார். அதாவது ஸ்ரோதபத்தி மார்க்கஞானம் பெற்றார்.

அதன் பிறகு ஸ்ரோதாபத்தி பலனும் பிறகு மார்க்க  ப்ரத்தியபேக்ஷண ஞானமும், பலப்ரத்தியவேக்ஷண ஞானமும், ப்ரஹீனக்லேச   ப்ரத்தியவேக்ஷண ஞானமும், வத்யக்லே சப்ரத்தியவேக்ஷண ஞானமும் உண்டாயின.

பிறகு மறுபடியும் உதய வியய ஞானத்திலிருந்து சம்ஸ்காரங்கள் அனித்தம், துக்கம், அனாத்மம் என்று சிந்திக்கும் போது போதிசத்துவருக்கு முன்போலவே சம்ஸ்காரோபேக்ஷா ஞானத்தின் கடைசியில், அநுலோக கோத்ரபூ ஞானத்திற்குச் சமீபமாகத் துக்கத்தைக் கண்டுகொண்டே சமுதய சத்யத்தை நீக்கிக் கொண்டே ராக துவேஷ மோகங்கள் முதலியவற்றைப் பலவீனப்படுத்திக்கொண்டே நிரோதசத்யத்தைப் பெற்றுக் கொண்டே அஷ்டாங்க மார்க்கத்தை அனுசரித்துக்கொண்டே இரண்டாவது ஞான தரிசனத்தைப் பெற்றார். அதாவது சத்ருதகாமீ மார்க்க ஞானம் அடைந்தார்.

பின்னர், போதிசத்துவர் உதய வியய ஞானத்திலிருந்து சம்ஸ்காரங்களுடைய இலக்கணங்களைப் பார்க்கத் தொடங்கினார். முன்போலவே சம்ஸ்காரோபேக்ஷா ஞானத்தின் கடைசியில் அனுலோம கோத்ரபூ ஞானங்கள் தோன்றி துக்கத்தைக் கண்டு, சமுதயத்தை நீக்கி, ராகத்வேஷ முதலியவற்றை அகற்றி, நிர்வாண மோக்ஷத்தையடைந்து கொண்டே அஷ்டாங்க மார்க்கத்தை அனுசரித்துக் கொண்டே மூன்றாவது ஞான தரிசனத்தைப் பெற்றார். அதாவது அனாகாமீ  மார்க்க ஞானம் அடைந்தார்.

அப்போது, இன்னும் சில கிலேசங்கள் மிஞ்சி நிற்பதைக்கண்டு, முன்போலவே உதயவியய முதலான ஒன்பது விதமான பெரிய விதர்சனா ஞான மூலமாக சம்ஸ்காரங்கள் அனித்யம், துக்கம், அனாத்மம், அசுதி என்று அறிந்து படிப்படியாக ஆராயும்போது, போதி சத்துவருக்கு சம்ஸ்காரோபேக்ஷா ஞானமும் பிறகு அனுலோமகோத்ரபூ ஞானங்களும் பிறந்தன. அப்போது துக்கங்களையெல்லாம் கண்டு சமுதய சத்தியத்தை (வாசனா தோஷங்களை) அறவே நீக்கி நிர்வாணத்தைப் பெற்றுக்கொண்டே மார்க்கத்தை அனுஷ்டித்துக் கொண்டே நான்காவது ஞான தரிசனத்தைப் பெற்றார். அதாவது அர்ஹந்த மார்க்க ஞானம்  அடைந்தார்.
மேலே கூறின சுரோதபத்தி, சத்ருதகாமி, அனாகாமி, அர்ஹந்த என்னும் நான்கு மார்க்கங்கள் ஞானதர்சன விசுத்தி என்று கூறப்படும்.

போதிசத்துவருக்கு அர்ஹந்தமார்க்க ஞானத்துடன் நான்குவிதமான பிரதிசம்பிதா ஞானமும், ஆறுவிதமான அசாதாரண ஞானமும், பதினான்கு விதமான புத்தஞானமும், பதினெட்டு விதமான ஆவேணிக தர்மங்களும், பத்துவிதமான பலமும், நான்குவிதமான வைசாரத்யங்களும் முதலான கணக்கற்ற புத்தகுணங்கள் நிறைந்தன.

இவ்வாறு இரவு முழுவதும் யோகத்திலிருந்து கிலேசங்களையெல்லாம் வென்று மிகவுயர்ந்த மேலான சம்புத்த பதவியையடைந்தார்.

முதல் வாரம்

அடைதற்கரிய புத்த பதவியையடைந்த ததாகதர், தாம் பிறவித் துன்பத்திலிருந்து வீடு பெற்றதையும், கிடைத்தற்கரிய புத்த பதவி கிடைக்கப் பெற்றதையும், அறநெறியை ஐயமறக் காணப்பெற்றதையும், அறநெறியை மக்களுக்குப் போதித்து அவர்களைத் துன்பங்களிலிருந்து நீக்கும் ஆற்றல் பெற்றிருப்பதையும் சிந்தித்துப் பார்த்து அதனாலே மகிழ்ச்சியடைந்து இவ்வாறு  உதானம் * கூறினார்.
உதானம் – பிரீதிவாக்கியம்

“பிறப்பு இறப்பாகிய சம்சாரம் எப்போதும் துன்பமானது.” உடம்பாகிய வீட்டைக் கட்டும்  திருஷ்ணை என்று சொல்லப்பட்ட கொல்லனைக் காண்பதற்காக, போதிஞானம் என்னும் கண்ணைப் பெறும்பொருட்டு, இதுவரையில் நூறாயிரக்கணக்கான பிறப்புக்களைப் பிறந்தேன். கடைசியாக, ஓ! கொல்லனே, உன்னைக்  கண்டுபிடித்தேன். நீ இனிமேல் எனக்கு உடம்பாகிய வீட்டைக் கட்டமாட்டாய் (பிறப்பு, இறப்பு இல்லை).  உன்னுடைய கிலேசம் என்னும் வலிச்சல்கள் உடைக்கப்பட்டன. பேதமை என்னும் கைத்துண்டுகள் பிளக்கப்பட்டன. என்னுடைய மனம் நிர்வாண மோக்ஷம் அடைந்தது. ஆகையால் ஆசையற்ற அர்ஹந்த பலனையடைந்தேன்.”

இவ்வாறு உதானம் உரைத்த பின்னர் ததாகதர், “இந்தப் பர்யங்கத்திற்காக (பர்யங்கம் – ஆசனம், புத்த பதவி) நான்கு அசங்கிய கல்பகாலம் பிறவி எடுத்து வந்தேன்.  நான் அடையப்பெற்ற இந்த ஆசனம் (நிலை) வெற்றியாசனம். மங்கல ஆசனம். நான்குவிதமான வீரியங்களை மனத்திலே நிறுவி இங்கு அமர்ந்து புத்தபதவியடையப் பெற்றேன்,” என்று நினைத்தவண்ணம் ஒரு வாரம் வரையில் அங்கேயே தங்கி விமுக்தி சுகத்தைத் துய்த்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு, அந்த வாரத்தின் கடைசி நாளாகிய ஏழாவது நாள் இரவில் முதல் யாமத்திலே, பன்னிரண்டு நிதானங்களை முதலிலிருந்து கடைசி வரையில் இவ்வாறு தனக்குள் நினைத்தார்:

பேதைமை சார்வாச் செய்கை யாகும்
செய்கை சார்வா உணர்ச்சி யாகும்
உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்
அருவுரு சார்வா வாயி லாகும்
வாயில் சார்வா ஊறா கும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றிற் றோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலை கையாறெனத்
தவலில் துன்பந் தலைவரும் என்ப
ஊழின்மண் டிலமாச் சூழுமிந் நுகர்ச்சி ” *

*மணிமேகலை 30-ஆம் காதை 104-118.  இது, விநயபிடகத்தின் மகாவக்கம் என்னும் பிரிவில் முதல் காண்டத்தில் உள்ள பாலிமொழி வாக்கியத்தின் சொல்லுக்குச் சொல் நேர்மொழி பெயர்ப்பாக இருக்கிறது.

இவ்வாறு ஊழின் மண்டிலமாகப் பன்னிரண்டு நிதானங்களைத் தமது மனத்திலே சிந்தித்துப் பார்த்த பகவன் புத்தர் அந்த இரவின் முதல் யாமத்தின் இறுதியிலே இவ்வாறு உதானம் உரைத்தார்:

“பிறப்பு இறப்பாகிய துன்பத்தை நீக்கக் கருதி ஊக்கத்தோடு முயற்சி செய்கிற யோகி ஒருவர், பௌத்தத்தின் முப்பத்தேழு தத்துவத்தை எப்பொழுது அறிகிறாரோ அப்பொழுதே – பேதமை முதலான காரணங்களினாலே உண்டான துக்கங்களைப் பிரித்துப் பிரித்து ஆராய்ந்து பார்க்கிறபடியினாலே – அவருடைய ஐயங்கள் மறைந்து விடுகின்றன,” என்று உதானம் (பிரீதி வாக்கியம்) உரைத்தார்.

பின்னர் அந்த இரவின் நடுயாமத்திலே ததாகதர் ஊழின் வட்டமாகிய பன்னிரு நிதானத்தைக் கடைசியில் இருந்து முதல் வரையில் இவ்வாறு சிந்தித்தார்:

பேதைமை மீளச் செய்கை மீளும்
செய்கை மீள உணர்ச்சி மீளும்
உணர்ச்சி மீள அருவுரு மீளும்
அருவுரு மீள வாயில் மீளும்
வாயில் மீள ஊறும் மீளும்
ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
வேட்கை மீளப் பற்று மீளும்
பற்று மீளக் கருமத் தொகுதி மீளும்,

கருமத் தொகுதி மீளத் தோற்றம் மீளும்,
தோற்றம் மீளப் பிறப்பு மீளும்,
பிறப்புப் பிணி மூப்புச்
சாக்கா டவலம் அரற்றுக் கவலை
கையா றென்றிக் கடையில் துன்பம்
எல்லாம் மீளும்இவ் வகையான் மீட்சி.” *
*(மணிமேகலை 30-ஆம் காதை 119-133. இது விநயபிடகத்தின் மகாவக்கம் முதல் காண்டத்தில் உள்ள பாலிமொழி வாக்கியத்தின் நேர்மொழி பெயர்ப்பாக அமைந்திருக்கிறது.)இவ்வாறு நிதானங்களைச் சிந்தித்துப் பார்த்த பகவன் புத்தர் இவ்வாறு உதானம் உரைத்தார்:”பிறவித்துன்பத்தை நீக்கும் பொருட்டு முயற்சியோடு தியானம் செய்து பாவத்தை நீக்கின யோகியானவர், பௌத்தத்தின் முப்பத்தேழு தத்துவத்தை எப்பொழுது உணர்கிறாரோ அப்பொழுதே – பேதமை முதலான காரணங்களினாலேயே உண்டான துக்கங்களைப் பிரித்து ஆராய்ந்து பார்க்கிறபடியினாலே – அவருடைய ஐயங்கள் நீங்கிவிடுகின்றன.”அதன் பின்னர், இரவின் மூன்றாவது யாமம் வந்தது. அப்போது பகவன் புத்தர் ஊழின் வட்டமாகிய பன்னிருநிதானம் என்னும் தத்துவத்தைத் தொடக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் (பேதமை சார்வாச் செய்கையாகும்- நுகர்ச்சி என்பது வரை) பிறகு கடைசியிலிருந்து தொடக்கம் வரையிலும் (பேதமை மீளச் செய்கையாகும் – மீட்சி என்பது வரை) மறுபடி சிந்தித்துப் பார்த்தார். பார்த்த பிறகு, இவ்வாறு உதானம் ஓதினார்:”துக்கங்களை அடக்கிப் பாவங்களை யொழிக்கிற ஆற்றல் உள்ள துறவியானவர், முப்பத்தேழுவிதமான தர்மங்களை அறியும் போது இருள்படலத்தை ஓட்டி ஒளியைப் பரப்புகிற சூரியனைப்போல, மாரனுடைய எல்லாவிதமான சேனைகளையும் வெற்றி காண்கிறார்.”

இரண்டாம் வாரம்

புத்த பதவியடைந்த பிறகும் ததாகதர், ஆசனத்தை விட்டு எழுந்திராமல் போதிமரத்தின் அடியிலேயே அமர்ந்திருந்தார். இதனைக் கண்ட சில தேவர்கள், “ஆசனத்திலிருந்து பகவன் புத்தர் எழுந்திருக்காதபடியினாலே இன்னும் இவர் அடையவேண்டிய நிலைகளும் உண்டு போலும்,” என்று நினைத்தார்கள். இவ்வாறு தேவர்கள் சிலர் எண்ணியதைப் பகவன் புத்தர் அறிந்தார். ஆகவே, அவர் அவர்களுடைய ஐயத்தை நீக்குவதற்காக ஆசனத்தை விட்டுக் கிளம்பி ஆகாயத்திலே நின்றார். இதைக் கண்ட தேவர்கள் ஐயம் நீங்கினார்கள்.

இவ்வாறு தேவர்களுடைய ஐயத்தை நீக்கிய பின்னர், பகவன் புத்தர் தரையில் இறங்கி புத்த ஆசனத்தைக் கண் இமைக்காமல் பார்த்தார். “இந்த ஆசனத்தில் இருந்த போது எனக்குப் புத்த பதவி கிடைத்தது. நான்கு அசங்கிய கல்பலக்ஷகாலம் வரையில் நான் நிறைவேற்றிய பாரமிதைகளின் பலனாக இந்தப் புத்த பதவி இந்த ஆசனத்தில் இருக்கும்போது எனக்குக் கிடைத்தது,” என்று நினைத்து நன்றியறியும் உள்ளத்துடன் அந்தப் போதியாசனத்தைக் கண்களினாலே பார்த்துக்கொண்டே இருந்தார்.  இவ்வாறு இரண்டாவது வாரம் கழிந்தது. இவ்வாறு இமைகொட்டாமல் பார்த்திருந்த இடத்திற்கு அநிமசலோசன சைத்தியம் என்பது பெயராகும்.

மூன்றாம் வாரம்

பின்னர் மூன்றாவது வாரம் முழுவதும், போதியாசனத்தின் அருகிலேயே ததாகதர் கிழக்கு மேற்காக உலாவிக் கொண்டிருந்தார். இந்த இடத்திற்கு இரத்தின சங்க்ரமன சைத்தியம் என்பது பெயராகும்.

நான்காம் வாரம்

நான்காவது வாரத்தில், போதி மரத்திற்கு வடமேற்கில்  சென்று இரத்தின கிருஹத்தில் அமர்ந்து தாம் கண்ட போதிதர்மத்தை மனத்திலே நினைத்து நினைத்து ஆராய்ந்தார். இந்தத் தர்மத்தைக் கேட்டு இதன்படி ஒழுகுகிறவர்கள், சீலத்தில் மனதை நாட்டிச் சமாதியை தியானித்துப் பிரஞ்ஞா (அறிவினால்) மூலமாகத் தத்துவத்தை நன்கறிந்து உயர்ந்த நெறியில் ஒழுகுவார்கள் என்று கருதினார். சீலத்தைப் பற்றி வினயபிடகம், சமாதியைப் பற்றி சூத்திராந்தபிடகம், பிரஞ்ஞாவைப் பற்றி அபிதர்மபிடகம் என்னும் மூன்றையும் சிந்தித்தார். இவை எல்லாத் தர்மங்களையும்விட மேலானதாகவும் ஆழமானதாகவும் இருப்பதை அறிந்து உவகை கொண்டார்.

அப்போது அவருடைய இருதயத்தில் உதிரம் மிகவும் தூய்மையாயிருந்தது. தேகத்தில் ஒளி வீசிற்று. அவருடைய திருமேனியிலிருந்து எண்பது முழம் வட்டத்தில் ஒளிக்கிரணங்கள் ஒளி வீசின. அப்போது அந்த இடத்திலே ஆயிரம் சூரிய சந்திரர்கள் இருந்து ஒளி வீசுவதுபோலத் தோன்றியது.

பகவன் புத்தர் போதிஞானம் அடைந்து நான்கு வாரம் வரையில் போதிமரத்தின் அருகிலேயே இருந்தார். ஐந்தாவது வாரம் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டுச் சென்று அஜபாலன் என்னும் ஆலமரத்தை அடைந்து அம்மரத்தடியில் அமர்ந்து ஒருவார காலம் வரையில் விமுக்தி சுகத்தை அனுபவித்துக்கொண்டே யோகத்தில் அமர்ந்திருந்தார்.பிராமணன் யார்?

இவ்வாறு ஒரு வாரம் வரையில் யோகத்திலிருந்த பகவன் புத்தர், யோகத்திலிருந்து விழித்தார். அப்போது ஒரு பிராமணன் அவரிடம் வந்தான். அந்தப் பிராமணன் முன்னரே இவருக்கு அறிமுகமானவன். போதிசத்துவர், உருவேல என்னும் இடத்தில் இருந்தபோதும் சேனானீ கிராமத்துக்கு அருகில் ஆசிரமம் அமைத்துக் கொண்டிருந்தபோதும் அவன் இவரிடம் பழகியவன். அந்தப் பிராமணன் பிராமணப் பிறப்பே உயர்ந்த பிறப்பு என்னும் எண்ணம் உடையவன். அவன் பகவன் புத்தரிடம் வந்து, “ஓ கௌதமரே! எந்தெந்தக் காரணங்களினாலே ஒருவன் பிராமணனாகக் கூடும்? பிராமணனுடைய இயல்பு என்ன? என்று கேட்டான்.

அதற்குப் பகவன் புத்தர் இவ்வாறு விடைகூறியருளினார்: “யார் ஒருவர் பாபங்களைப் போக்கி கொண்டாரோ, யார் மனமாசு நீங்கி, அழுக்கற்று, மனத்தூய்மையடைந்தாரோ, யார் தன்னடக்கமாக உள்ளாரோ, யார் வேதத்தைப் (வேதம்-ஞானம்) பெற்றிருக்கிறாரோ அவர்தான் உண்மையான பிராமணன் என்னும் பெயருக்கு உரியவர் ஆவர்,” என்று அறிவுறுத்தினார்.மாரன் அச்சுறுத்தல்

அஜபால மரத்தின் அடியில் இருந்த பகவன் புத்தர் பொருளற்ற கடுமையான உண்ணாவிரதத்தினால் உடம்பை வாட்டிக் கடுந்தபசு செய்வதிலிருந்து விலகி, நன்மையான மத்திம வழியிலே சென்று புத்தஞானப் பதவியையடைந்தது எவ்வளவு நன்மையானது என்று தமக்குள் எண்ணினார். இவ்வாறு பகவன் புத்தர் எண்ணியதையறிந்த மாறன் அவ்வமயம் இவரிடம் வந்து, “உயிர்களைத் தூய்மைப் படுத்துகிற கடுமையான தவம் செய்வதிலிருந்து நீங்கின நீர், தூய்மையானவர் என்று நினைக்கிறீரா? நீர் சுத்த மார்க்கத்திலிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறீர்,” என்று கூறினான். இவ்வாறு பேசினவன் மாரன் என்பதைப் பகவன் புத்தர் அறிந்துகொண்டார். அவனுக்கு இவ்வாறு விடை கூறினார்:

“அமரத்தன்மை பெறுவதற்காக உடம்பை வருத்தித் துன்பப்படுத்திக் கடுந்தபசு செய்வது எப்படியிருக்கிறது என்றால், கடலிலே செல்லும் கப்பலைக் கொண்டு வந்து மணல் நிறைந்த பாலைவனத்தில் வைத்து துடுப்புக் கொண்டு துழாவி ஓட்டுவதுபோல இருக்கிறது. அப்படிச் செய்வது வீண் முயற்சி என்றறிந்து, மார்க்க ஞானத்துக்கு நற்பாதையாகவுள்ள சீல, சமாதி பிரஞ்ஞை என்கிற மூன்றுவிதமான குணங்களை மேற்கொண்டு நடந்து தூய்மையடைந்தேன். மாரனே! உன்னை நான் வென்றேன்,” என்று கூறினார். அப்போது மாரன், பகவன் புத்தர் தன்னைத் தெரிந்துகொண்டார் என்பதையறிந்து, வெட்கமும் வருத்தமும் அடைந்து அவ்விடத்திலிருந்து மறைந்துவிட்டான்.

இரவு வேளையில் பகவன் புத்தர் அஜபாலன் என்னும் ஆலமரத்தண்டை உலாவிக் கொண்டிருந்தார். பிறகு அருகிலிருந்த ஒரு பாறைக் கல்லின்மேல் அமர்ந்தார். அப்போது மாரன் அவரை அச்சுறுத்த எண்ணினான். மிகப் பெரியதோர் யானையின் உருவம் கொண்டு அச்சந் தரத்தக்க முறையில் அவ்விடம் வந்தான். அந்த யானையின் தலை பாறைபோன்று பெரியதாக இருந்தது. தந்தங்கள் மிக வெண்மையாக வெள்ளி போன்றிருந்தன. தும்பிக்கை நீண்டு ஏர்க்கால் போல் இருந்தது. இவ்வாறு வந்தவன் மாரன் என்பதைப் பகவன் புத்தர் அறிந்து கொண்டார்.”நீண்டகாலமாக என்னை அச்சுறுத்துவதற்காக இனிய நல்ல உருக்கங்களையும் அச்சந் தரும் கொடிய உருவங்களையும் தாங்கிக்கொண்டு என்னிடம் வருகிறாய். இது மிக இழிவான செயல். மாரனே, உன்னுடைய முயற்சிகள் வீணாயின,” என்று உரைத்தார். அப்போதும் தன்னைப் புத்தர் அறிந்து கொண்டதை உணர்ந்த மாரன் வெட்கமும், துக்கமும் கொண்டு மறைந்து விட்டான்.

மற்றொரு முறை மாரன், பகவன் புத்தரை அச்சப்படுத்த எண்ணி, ஒரு நள்ளிரவிலே வெவ்வேறு உருவங்களைக் காட்டினான். அப்போது பகவன் புத்தர், “மாரனே! மனம் வாக்குக் காயங்களை உறுதியுள்ள அரணாக அமைத்துக் கொண்ட முனிவர்கள் உன்னுடைய செயலுக்கு அஞ்சித் தோல்வியுற மாட்டார்கள்,” என்று கூறினார். உடனே மாரன் முன்போலவே அவ்விடத்தைவிட்டுப் போய்விட்டான்.

குருவைத் தேடல்

அஜபால மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த பகவன் புத்தருக்கு ஒரு குரு வேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. யாரும் ஒருவரைக் குருவாகக்கொண்டு அவரை வணங்கி வழிபடுவது நல்லது. குருவைப் பெறாதவர் நன்மை பெறுவதில்லை. ஆகையினாலே நாமும் ஒரு குருவை நாடிக்கொள்ள வேண்டும். அவருக்குத் தாம் மாணவனாக இருந்து அவரை வழிபடவேண்டும். அப்படிப்பட்ட  ஒருவரைத் தேடிக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் அவருக்குத் தோன்றியது. ஆகவே அவர் யாரைக் குருவாகக் கொள்ளலாம் என்று தமக்குள் சிந்தித்தார். இவ்வாறு சிந்தித்துத் தேடிப்பார்த்தபோது சீலம், சமாதி, பிரஞ்ஞை என்கிற மூன்று குணங்களாலும் தமக்கு மேலானவர் ஒருவரும் மூவுலகத்திலும் இல்லாததையறிந்து, “பிறர் உதவி இல்லாமல் என்னாலேயே மிக நன்றாக அறிந்துகொள்ளப்பட்ட அறத்தையே நான் குருவாக ஏற்றுக்கொள்கிறேன். அறத்தையே வழிபட்டு வணங்கிப் போற்றுகிறேன்,” என்று தமக்குள் கூறிக்கொண்டார்.

அப்போது சஹம்பதி மகாப்பிரமன் அவர்  முன்தோன்றி வணக்கம் செய்து, “ஆமாம் புத்தரே!ஆமாம் சுகதெரே! சென்ற காலங்களில் புத்தஞானப் பதவி பெற்ற புத்தர்கள் எல்லோரும் சத்தர்மத்தையே குருவாகக் கொண்டு வணங்கி வழிபட்டார்கள். வரும் காலத்திலும் புத்தஞான பதவியையடையப்போகிற புத்தர்களும் சத்தர்மமாகிய அறத்தையே குருவாகக் கொண்டு வணங்கி வழிபடுவார்கள். ஆகையால், உத்தமரே! இந்தக் காலத்திலே புத்தஞானப் பதவியைப் பெற்ற தாங்களும் சத்தர்ம அறத்தினையே குருவாகக் கொண்டு போற்றி வழிபடுவது நல்லது,” என்று கூறி வணங்கினார்.

நாகராசன் வணங்கியது

ஐந்தாவது வாரத்தை அஜபால மரத்தடியில் கழித்த பகவன் புத்தர், ஆறாவது வாரத்தில் அம்மரத்தை விட்டு அகன்றுபோய் முசலிந்த மரத்தருகே சென்றார். அங்கு அந்த வாரம் முழுவதும் சமாபத்தி தியானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது மழைகாலமில்லாமலிருந்தும் பெரிய மேகங்கள் சூழ்ந்து மிகவும் இருண்டு ஏழுநாளும் மழை பெய்தது. குளிரும் அதிகமாயிருந்தது. அப்போது நாகலோகத்திலிருந்து நாகராசன் வந்து, குளிரும் மழையும், எறும்பும், கொசுவும் புத்தரை அணுகக்கூடாது என்று கருதி, தனது உடம்பினால் பகவன் புத்தரை ஏழுசுற்று சுற்றிக்கொண்டு தன் தலையைப் படமெடுத்துப் பகவன் புத்தர் தலைக்குமேல் குடைபோலத் தாங்கிகொண்டான். ஏழு நாட்களுக்குப் பிறகு மழை நின்று வானம் வெளுத்தது. அப்போது நாகராசன், பகவன் புத்தரை விட்டு வெளிவந்து இளமைப் பருவமுள்ள மனித உருவத்துடன் தோன்றிக் கைகூப்பித் தலைவணங்கி நின்றான். அப்போது பகவன் புத்தர் அவனுக்கு இவ்வாறு திருவாய் மலர்ந்தருளினார்:

“உண்மையைக் கண்டு அதனை உணர்ந்து மகிழ்ச்சியோடிருக்கிறவரின் ஏகாந்தம் இன்பமானது. அழுக்காறு இல்லாமல் எல்லா உயிர்களிடத்திலும் அன்புள்ளவராய்த் தன்னடக்கத்தோடு இருப்பவர் மகிழ்ச்சியுள்ளவராவர். ‘நான்’ என்கிற ஆணவத்தை விட்டவர் இன்பம் அடைகிறார். ஆசையை நீக்கியவர் இன்பம் உள்ளவர் ஆவர்.” இவ்வுபதேசத்தைக் கேட்ட நாகராசன் மனமகிழ்ந்து அவரை வணங்கிச் சென்றான்.

பகவன் புத்தர் ஆறாவது வாரத்திற்குப் பிறகு முசலிந்த மரத்தைவிட்டு அகன்று இராஜாயதன மரத்தடிக்குச் சென்றார்.  சென்று அம்மரத்தின் கீழ் யோகத்தில் அமர்ந்து ஏழுநாட்கள் இருந்தார். ஏழாவது நாளின் இறுதியில் பகவன் புத்தர் தியானத்திலிருந்து விழித்தார். ஏழுவாரம் வரையில் அவர் உணவு கொள்ளவில்லை. போதிஞானத்தைச் சிந்திப்பதிலேயும் தியானத்திலும் அவர் நாட்களைக் கழித்தார்.

சாவக நோன்பிகள்

தியானத்திலிருந்து விழித்தபோது சக்கன் (தேவேந்திரன்) அவரிடம் வந்து பல் தேய்க்கப் பல் குச்சியையும் முகம் கழுவ நீரையும் கடுக்காய் மருந்தையும் கொடுத்துவிட்டுப் போனார். பகவன் புத்தர் பல்தேய்த்து முகம் கழுவி இராஜாயதன மரத்தின் அடியில் அமர்ந்தார்.

அப்போது உத்கலப் (ஒரியா) பிரதேசத்திலிருந்து ஒரு வாணிகச் சாத்து அவ்வழியே போய்க்கொண்டிருந்தது. ஐந்நூறு வண்டிகளில் வாணிகச் சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்லும் இந்தச் சாத்தின் தலைவர்களாகத் தபுஸ்ஸன், பல்லிகன் என்னும் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இந்த வாணிகச் சாத்து செல்லும் வழிகெட்டியான தரையாக இருந்தும் வண்டிச் சக்கரங்கள் நகராமல் நின்றன. எருதுகள் வண்டிகளை இழுக்க முடியாமல் இடர்ப்பட்டன. இதைக் கண்ட வணிகர் வியப்படைந்து என்ன காரணம் என்றறியாமல் திகைத்தனர். அப்போது  ஒருவன் மேல் தெய்வம் ஏறி, பகவன் புத்தர் இராஜாயதன மரத்தின் அடியில் இருப்பதைக்கூறி அவருக்கு உணவு தானம் செய்யும்படி கூறிற்று.

தெய்வ வாக்கைக் கேட்ட வணிகத் தலைவர் இருவரும் தேனையும் மாவையும் எடுத்துக்கொண்டு பகவன் புத்தர் எழுந்தருளியிருந்த இடத்திற்கு வந்தார்கள். வந்து அவரை வணங்கி அவருக்கு அந்த உணவைக் கொடுத்தார்கள். அப்போது அதை ஏற்றுக்கொள்ளப்  பகவரிடம் பாத்திரம் ஒன்றும் இல்லை. இவர்கள் கொடுக்கும் உணவைக் கைகளில் பெறக்கூடாது, எதில் பெற்றுக் கொள்வது என்று அவர் சிந்தித்தார். அப்போது அவருடைய சிந்தனையை அறிந்த சதுர்மகாதேவர்கள் நால்வரும் வந்து நான்கு பாத்திரங்களை அவருக்கு அளித்தார்கள். அப்பாத்திரங்களைப் பெற்றுக்கொண்ட பகவன், அவைகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்தார். உடனே அப்பாத்திரங்கள் ஒரே பாத்திரமாயின. அப்பாத்திரத்திலே வணிகச் சகோதரர் அளித்த உணவை ஏற்றுக்கொண்டார்.

உணவை உட்கொண்ட பிறகு பகவர், கையையும் பாத்திரத்தையும் கழுவினார். பிறகு அவர்களுக்கு அறநெறியை உபதேசம் செய்தார். அறநெறியைக் கேட்ட வணிகர் மனமகிழ்ச்சியடைந்து பகவரை வணங்கி, “பகவரே! நாங்கள் தங்களிடத்திலும் தங்கள் தர்மத்தினிடத்திலும் அடைக்கலம் அடைகிறோம். எங்களைச் சீடர்களாக ஏற்றுக்கொண்டருள வேண்டும்,” என்று வேண்டினார்கள். பிறகு தாங்கள் வணங்குவதற்காக ஏதேனும் பொருளைத் தரும்படி அவரைக் கேட்டார்கள். பகவர் தமது தலையிலிருந்து எட்டுப்பிடி சிகையைப் பிய்துக்கொடுத்தார். அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு போய் பொற்கிண்ணத்தில் வைத்துத் தாம் பிறந்த தேசத்திலேயுள்ள அசிதஞ்சன நகரத்தில் ஒரு சேதிகம் கட்டி அதை அதில் வைத்து வணங்கி வந்தார்கள்.

தபுஸ்ஸன், பல்லிகன் என்னும் இவர்கள் தாம் முதன்முதல் பகவன் புத்தரிடத்தில் இரண்டு சரணங்களை மட்டும் (புத்தர், தர்மம்) கூறிச் சீடரானவர்கள்.

எட்டாவது வாரம்

பிறகு பகவர் இராஜாயதன மரத்தை விட்டுப் புறப்பட்டு மறுபடியும் அஜபால ஆலமரத்துக்குச் சென்றார். சென்று அவ்விடம் தங்கித் தாம் கண்ட போதிதர்மத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது, தாம் கண்ட போதிதர்மத்தை உலகத்தவருக்குப் போதிக்காமல் வாளா இருப்பது நலம் என்று அவருக்கு எண்ணம் தோன்றியது. பகவர் எண்ணிய இந்த எண்ணத்தைச் சகம்பதி பிரமன் அறிந்தார். “ஐயோ! உலகம் அழிந்துவிடும். புனிதரான சம்புத்தராகிய ததாகதர், தாம் கண்ட அறநெறியை உலகத்திற்குக் கூறாமல் போனால் உலகம் அழிந்துவிடும்,” என்று சகம்பதி பிரமன் எண்ணினார்.

உடனே, பிரமலோகத்தை விட்டுப் புறப்பட்டுத் ததாகதரிடம் விரைந்து வந்தார். வந்து, தமது மேல் ஆடையை எடுத்து ஒரு தோளின்மேல் போட்டுக்கொண்டு, வலது முழங்காலைத் தரையில் ஊன்றி முட்டியிட்டு அமர்ந்து இருகைகளையுங் குவித்துத் தலைமேல் தூக்கித் ததாகதரை வணங்கி இவ்வாறு கூறினார்: “சுவாமி! தாங்கள் அருள்கூர்ந்து தர்மத்தை உலகத்துக்குப் போதியுங்கள். பகவன் சம்புத்தர் உலகத்துக்குத் தர்மத்தைப் போதிக்கவேண்டும். இருளினால் மறைக்கப்படாத ஆறிவுக்கண் படைத்த மக்கள் பலர் உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அறநெறியைக் கேளாமல் இருந்தால், நிர்வாண மோக்ஷத்தையடைய மாட்டார்கள். அவர்கள் தர்மத்தை அறிந்து கொள்ளக் கூடியவர்கள். சம்புத்தரால் கண்டுபிடிக்கப்பட்ட தர்மத்தை அவர்கள் கேட்கட்டும்.”

இவ்வாறு கூறிய பிரமன் மேலும் கூறுவார்:

“ஓர் ஆள் மலையின்மேல் ஏறி அதன் உச்சியிலேயுள்ள ஒரு பாறையின்மேல் நின்று மலையடியில் உள்ள மனிதரைக் காண்பதுபோல், ஓ, புத்தரே! உண்மையான மெஞ்ஞானம் என்னும் உயர்ந்த இடத்தில் ஏறியுள்ள தாங்கள், அருள்கூர்ந்து கீழே நோக்கியருளுங்கள். துன்பத்தினால் துக்கப்பட்டு வருந்துகிற மக்களை, பிறந்து இறந்து அல்லல்படுகிற மானிடரை, துக்கத்திலிருந்து நீங்கிய ததாகதரே! அருள்கூர்ந்து நோக்கியருளுங்கள்.”எழுந்தருளும். ஓ, வீரரே! உலகத்தைச் சுற்றிப் பிரயாணம் செய்தருளுங்கள். பகவரே! தர்மத்தை உபதேசம் செய்தருளுங்கள். உலகத்திலே தர்மத்தை அறிந்துகொள்ளக் கூடிய மக்களும் இருக்கிறார்கள்.”

இவ்வாறு சகம்பதி பிரமன் கூறியதைக் கேட்ட பகவன் புத்தர் கூறினார்: ” எனது மனத்திலே இவ்வாறு நினைக்கிறேன். என்னவென்றால், இந்தத் தத்துவம் கடினமானது. சாதாரண மக்களால் அறிந்துகொள்ள முடியாது. மனத்திற்குச் சாந்தியையுண்டாக்கி உயர்நிலையையடையச் செய்கிற இந்தத் தத்துவம் அறிஞர்களால் மட்டுமே அறியக்கூடியது. ஆகையினாலே, ஆசையில் அழுந்தி, ஆசையில் உழன்று, ஆசையில் மகிழ்ச்சி கொள்கிற மக்கள், சார்பு வட்டமாகிய நிதானங்களை அறிந்துகொள்ள முடியாது. சமஸ்காரங்களை வென்று ஆசைகளை அடக்கிக் காமத்தை நீக்கிய அறிஞர்களுக்கு மனச்சாந்தியளித்து நிர்வாண  மோக்ஷத்தைத் தருகிற இந்தப் போதனைகளைச் சாதாரண உலக மக்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள். தெரிந்துகொள்ள முடியாதவர்களுக்குப் போதித்து ஏன் வீணாகக் காலங் கழிக்கவேண்டும்?”

“பெரிதும் வருந்தி முயன்று கைவரப்பெற்ற இந்தப் போதிஞானத்தை உலகப்பற்றுக்களில் அழுந்தியிருக்கிற மக்கள் தெரிந்துகொள்ள மாட்டார்கள். ஆசையிலும், பகையிலும் அழுந்தி அடர்ந்த இருட்டிலே கிடக்கிற மக்கள் இதை அறிந்துகொள்ள மாட்டார்கள். ஆகையால், புத்த தர்மத்தைப் போதிக்காமல் வாளாயிருப்பதுதான் நல்லது.”

இதைக்கேட்ட  சகம்பதி பிரமன், புத்தரை வணங்கி மீண்டும் கூறினான்: “சுவாமி! போதி தர்மத்தை உலகில் போதித்தருளுங்கள். உலகத்தைச் சுற்றிப் பிரயாணம் செய்து தர்மோபதேசம் செய்தருளுங்கள். பகவன் சம்புத்தரால் கண்டறியப்பட்ட தர்மத்தை மக்கள் கேட்கட்டும். அஞ்ஞான இருளினால் மறைக்கப்படாத ஞானக்கண்ணுடைய மக்களும் உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தர்மோபதேசத்தைக் கேளாவிட்டால், நிர்வாண  மோக்ஷ சுகத்தையடைய மாட்டார்கள். பகவரே! கருணைகூர்ந்து போதி ஞானத்தை உலகத்தில் போதித்தருளுங்கள்.”

பகவன் புத்தர் முன்போலே கூறி மறுத்தார். பிரமன் மூன்றாம் முறையும் வணங்கி முன்போலவே, உலகத்தில் தர்மோபதேசத்தைச் செய்தருளும்படி வேண்டினான்.

பிரமனுடைய வேண்டுகோளைக் கேட்டுப் பகவன் புத்தர், மிகவும் இரக்கமும் அன்பும் உள்ள மனத்தோடு, எல்லா வற்றையும் காண்கிற புத்தஞானக் கண்கொண்டு உலகத்தை நோக்கியருளினார். நோக்கியபோது, மாசுபடியாத அறிவுடையவர்களையும், மாசுபடிந்த அறிவுடையவர்களையும், கூரிய அறிவுடையவர்களையும், நல்ல குணமுடையவர்களையும், தீயகுணமுடையவர்களையும், போதனையை அறிந்து கொள்ளக் கூடியவர்களையும், அறிந்து கொள்ள முடியாதவர்களையும் கண்டார்.

தாமரை படர்ந்துள்ள பெரிய குளத்திலே நீர்மட்டத்துக்குமேல் வந்துள்ள முதிர்ந்த தாமரை மொட்டுகள் சூரியகிரணம் பட்டவுடன் மலர்ந்து விரிகின்றன. சில மொட்டுகள் சிலநாள் கழித்து முதிர்ச்சியடைந்தவுடன் சூரியகிரணம் பட்டு மலர்கின்றன. இன்னும் சில மொட்டுகள் நீருக்குக் கீழே இருக்கின்றன. அவை வளர்ந்து முதிர்ந்து நீர்மட்டத்துக்கு மேலே வந்து சூரியகிரணத்தினால் மலர்ச்சியடைகின்றன. இதுபோல, பகவன் புத்தர், ஞானக்கண் கொண்டு உலகத்தைப் பார்த்தபோது அறிவு நிரம்பிய மனிதரும், சற்று அறிவு மழுங்கிய மக்களும், மற்றும் அறிவு குன்றிய மக்களும், அறிவே இல்லாத மக்களும் இருப்பதைக் கண்டார். அவர்கள் அறிவுக்கண் பெற்றால் ஞானத்தையறியும் ஆற்றல் பெறுவார்கள் என்பதையும் அறிந்தார்.

இவ்வாறு கண்ட பகவன் புத்தர், சகம்பதி பிரமனைப் பார்த்து இவ்வாறு கூறினார்: “அறநெறியை அறிந்து கொள்ளுகிறவர்களுக்கு அழியாத்தன்மையுள்ள நிர்வாண  மோக்ஷத்தின் கதவு நன்றாகத் திறக்கப்பட்டிருக்கிறது. காதுடையவர்கள் கேட்கட்டும். இனியதும் நல்லதும் ஆகிய அறநெறியை, நான் போதிக்காமல் இருக்க எண்ணிய தர்மத்தை, உலகத்திலே போதிக்கப் போகிறேன்.”

பகவன் புத்தர், உலகத்திலே தர்மோபதேசம் செய்ய உடன்பட்டருளியதையறிந்த சகம்பதி பிரமன் மிகவும் மனம் மகிழ்ந்து பகவரை வணங்கி வலம்வந்து தமது பிரமலோகத்துக்குப் போய்விட்டார்.

கேட்பவர் யார்?

அதன் பின்னர், பகவன் புத்தர், “முதன் முதலாக யாருக்கு உபதேசம் செய்யலாம்? உபதேசத்தைத் தெரிந்து கொள்ளக் கூடியவர் யார்?” என்று தமக்குள் யோசித்தார். அப்போது, ஆலாரகாலாமர் என்னும் முனிவர் தம்முடைய உபதேசத்தை அறிந்துகொள்ளக் கூடியவர் என்று கண்டு, அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று ஞானக்கண்ணால் பார்த்த போது, அவர் இறந்து இப்போது ஒருவாரம் ஆகிறது என்பதை அறிந்தார். பின்னர், வேறு யாருக்கு உபதேசம் செய்யலாம் என்று சிந்தித்தபோது உத்ரகர் என்னும் முனிவர் தர்மோபதேசத்தைத் தெரிந்து கொள்ளக் கூடியவர் என்று பார்த்தபோது, நேற்று இரவுதான் அவர் காலமான செய்தியை ஞானக்கண்ணினால் அறிந்தார்.

பின்னர், வேறு யாருக்கு உபதேசம் செய்யலாம் என்று சிந்தித்தபோது, முன்பு தம்முடன் தமது சீடராக இருந்த கொண்டஞ்ஞர் முதலிய ஐந்து தாபசரகர்கள் போதிக்கத்தக்கவர்கள் என்று கண்டு, அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று பார்த்தபோது, வாரணாசி (காசி) நகரத்திலே இஸிபதனம் என்னும் இடத்தில் இருக்கிறதை அறிந்து அவ்விடம் போக எண்ணினார்.

அந்த ஐந்து தாபசர்களை நாடிப் பதினெட்டு யோசனை தூரத்தில் உள்ள காசி மாநகரத்திற்குச் செல்லக் கால்நடையாக நடக்கத் தொடங்கினார்.

உபகரைச் சந்தித்தல்

காசியை நோக்கி நடந்தபோது கயா என்னும் இடத்தருகிலே உபகர் என்னும் பெயருள்ள ஆஜீவகத் துறவி எதிர்பட்டார். அவர் பகவன் புத்தரைப் பார்த்து, “முனிவரே! தங்களுடைய கண் முதலான பொறிகள் மிகத் தூயனவாக இருக்கின்றன. உடம்பின் நிறமும் பொன்மயமாக இருக்கிறது. தாங்கள் யாரிடத்தில் துறவு பெற்றீர்கள்? தங்கள் குருநாதன் யார்? யாருடைய உபதேசத்தைப் பின்பற்றுகிறீர்கள்?” என்று கேட்டார்.

அப்போது பகவன் புத்தர் அவருக்கு இவ்வாறு விடையளித்தார்: “நான் எல்லாப் பகைகளையும் வெற்றி கொண்டேன். நான் எல்லாவற்றையும் அறிந்தேன். நான் எல்லாவிதத்திலும் குற்றமற்றவன். எல்லாவற்றையும் துறந்தவன். ஆசைகளை நீக்கி உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன். நானே முயன்று போதியை அடைந்தபடியினாலே, யாரை எனது குருநாதன் என்று கூறுவது? எனக்குக் குருநாதன் இல்லை. மண்ணுலகத்திலும், விண்ணுலகத்திலும் எனக்கு நிகரானவர் இலர். இவ்வுலகத்திலே நான் பரிசுத்தமானவன், சம்புத்த பதவியையடைந்தவன். ஆசைகளை அறுத்தபடியினாலே சாந்தியடைந்து நிர்வாண  மோக்ஷத்தைப் பெற்றிருக்கிறேன். சத்தியலோகம் என்னும் இராச்சியத்தை நிறுவுவதற்காக வாரணாசி நகரத்திற்குப் போகிறேன். இந்த இருண்ட உலகத்திலே இறவாமை என்னும் முரசைக் கொட்டப் போகிறேன்.”

இதனைக் கேட்ட உபகர், “முனிவரே! தங்களைப் பரிசுத்தரான உயர்ந்த அனந்தஜினன் என்று சொல்லிக் கொள்கிறீரா?” என்று கேட்டார்.

“எல்லா ஜினர்களும் என்னைப் போன்றே * ஆசவங்களை அவித்தவர்கள். நான் எல்லாப் பாவங்களையும் வென்றவன். ஆகையினாலே, உபகரே! நான் அனந்தஜினன் தான்,” என்று பகவன் புத்தர் கூறினார்.
* ஆசவம் – காமம், பவம் – திட்டி, அவிஜ்ஜை என்பன

இதனைக் கேட்ட ஆஜீவகராகிய உபகர், “முனிவரே! அப்படியும் இருக்கலாம்,” என்று கூறித் தலையையசைத்துத் தெற்கு நோக்கிச் சென்றார்.

பகவன் புத்தர் வடக்கு நோக்கிக் கயா தேசத்தைக் கடந்து உரோகிதவத்து, உருவில்லாகல்பம், அனாலயம், சாரதிபுரம் முதலான இடங்களையும் கங்காநதியையும் கடந்து வாரணாசி நகரத்திற்குப் போனார். அன்று ஆஷாட பௌர்ணமி நாள்.

இஸிபதனம் சேர்தல்

மாலை வேளை. பகவன் புத்தர் வாரணாசி நகரத்தின் அருகில் இருந்த இஸிபதனம் என்னும் தோட்டத்திற்குச் சென்றார். அங்கு இருந்த ஐந்து துறவிகள் – இவர்கள் உருவேல ஆசிரமத்தில் போதிசத்துவரின் சீடராக இருந்து பிறகு அவரை விட்டுப் போனவர்கள் – தூரத்தில் வருகிற பகவன் புத்தரைப் பார்த்தார்கள். பார்த்துத் தங்களுக்குள் இவ்வாறு பேசிக்கொண்டார்கள்: “அதோ கௌதமர் வருகிறார். கடுமையான தபசை நீக்கிச் சுகவாழ்க்கையை மேற்கொண்ட கௌதம முனிவர் வருகிறார். அவர் வந்தால் நாம் அவரை வணங்கக் கூடாது. எழுந்து நின்று மரியாதை செய்தல் கூடாது. ஆனால், ஒரு ஆசனத்தை மட்டும் விட்டு வைப்போம், அவருக்கு விருப்பம் இருந்தால் அதில் உட்காரட்டும்.”

பகவன் புத்தர் அவர்களுக்கு அருகில் வந்தபோது, அந்த ஐந்து துறவிகளும் தமக்குள் பேசிக்கொண்டபடி இருக்கவில்லை. அவர்கள் எழுந்து சென்று பகவரை எதிர் கொண்டழைத்தார்கள். ஒருவர், அவர் கையிலிருந்த பாத்திரத்தையும் துணியையும் வாங்கினார். ஒருவர், இருக்க ஆசனம் கொடுத்தார். இன்னொருவர் கை கால் கழுவ நீரும், துடைக்கத் துணியும் கொண்டு வந்தார். பகவன் புத்தர் அமர்ந்து கால் கழுவிக்கொண்டார்.

பிறகு அவர்கள் பகவரைப் பெயரிட்டழைத்தும், நண்பரே என்று விளித்தும் பேசினார்கள். இவ்வாறு அவர்கள் நண்பர் என்றும், கௌதமர் என்றும் அழைத்ததைக் கெட்ட பகவர், “பிக்குகளே ததாகதரை நண்பர் என்றும் கௌதமர் என்றும் அழைக்காதீர்கள். ததாகதர் பௌத்திரமான சம்புத்தராவார். பிக்குகளே! செவி கொடுத்துக் கேளுங்கள். பிறவாத நிலை கைவரப் பெற்றேன். உங்களுக்குத் தர்மத்தை உபதேசிப்பேன். உயர்குடியிற் பிறந்தவர்கள் எதை அடைவதற்காக இல்லறத்தைவிட்டுத் துறவுபூண்டு தபசு செய்கிறார்களோ அந்தப் பரிசுத்தமான உயர்ந்த வாழ்க்கையை நீங்கள் அடைவீர்கள். அந்த வழியை உங்களுக்குப் போதிக்கிறேன். வாருங்கள்,” என்று கூறினார்.

இவ்வாறு சொல்லக்கேட்ட ஐந்து துறவிகளும், “தாங்கள் மேற்கொண்ட இந்த வாழ்க்கையினாலே, இந்தத் தபசினாலே, உயர்ந்த ஆற்றலைத் தாங்கள் அடைய  முடியாது. தாங்கள் மேற்கொண்ட வாழ்க்கையினாலே ஆத்தும வளர்ச்சியை அடைய முடியாது. தாங்கள் கடுந்தபசைக் கைவிட்டு உணவை உட்கொண்டு வாழ்கிறீர்கள். இவ்வித வாழ்க்கையினாலே, ஆத்தும உணர்வையும் பரிசுத்தமான உயர்ந்த ஞானத்தையும் எவ்வாறு பெறக்கூடும்?” என்று கேட்டனர்.

பகவன் புத்தர்  இவ்வாறு கூறினார்: “ஓ, பிக்குகளே! ததாகதர் சுகபோக வாழ்க்கை வாழவில்லை. தபசைக் கைவிடவும் இல்லை. ததாகதர் பௌத்திரமான சம்புத்தராவார். இறவாமை என்னும் பதவியைக் கைவரப் பெற்றவராவர். ததாகதர் காட்டும் வழியிலே நீங்கள் நின்று ஒழுகுவீர்களானால், நீங்கள் விரைவிலே உண்மையைக் கண்டு அறிந்து உணர்ந்து அதனை நேருக்கு நேராகக் காண்பீர்கள்.”

ஐந்து துறவிகளும் பகவர் கூறியதை நம்பவில்லை. முன்போலவே அவர்கள் தங்கள் ஐயப்பாட்டைக் கூறித் தெரிவித்தார்கள். பகவன் புத்தர் மூன்றாம் முறையும் மேலே கூறியதுபோலவே அவர்களுக்குக் கூறினார். மூன்றாம் முறையும் முனிவர்கள் நம்பாமல் தங்கள் ஐயத்தைத் தெரிவித்தார்கள்.

துறவிகள், தம்மிடம் நம்பிக்கை கொள்ளாததை அறிந்த பகவன் புத்தர் அவர்களைப் பார்த்து, “பிக்குகளே! இதற்கு முன்பு எப்போதாவது இதுபோன்று ததாகதர் பேசியது உண்டா?” என்று கேட்டார்.

“தாங்கள் இதுபோன்று முன்பு எப்போதும் பேசியதில்லை!” என்று அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

“ஓ, பிக்குகளே! ததாகதர் பரிசுத்தமான உயர்ந்த சம்புத்தர். பிக்குகளே! ததாகதருக்குச் செவிகொடுத்துக் கேளுங்கள்; கேட்பீர்களானால் கிடைத்தற்கரிய நிர்வாண மோக்ஷ இன்பத்தை அடையப் பெறுவீர்கள்,” என்று ததாகதர் கூறினார்.

அப்போது முனிவர்கள் பகவர் மீது நம்பிக்கை கொண்டார்கள். அவருடைய உபதேசத்தைச் செவிசாய்த்துக் கேட்க இணங்கினார்கள்.

முதல் தர்மோபதேசம்

சூரியன் மேற்கில் சென்றான். பூக்களில் தேனையுண்டு மகிழ்ந்த தேனீக்களும் வண்டுகளும்  ரீங்காரம் செய்து பறந்து கொண்டிருந்தன. மரக்கிளைகளில் மயில்கள் அமர்ந்திருந்தன. குயில்கள் இனிமையாகக் கூவின. மான் கூட்டங்கள் அமைதியாக உலவின. இசிபதனம் (மான்வனம்) என்னும் அந்தத் தோட்டம் அமைதியாகவும் அழகாகவும் விளங்கிற்று. கொண்டஞ்ஞர், பத்தியர், வப்பர், மகாநாமர், அஸ்ஸஜி என்னும் பெயருள்ள ஐந்து முனிவர்களும் தமது ஆசிரமத்துக்கு வெளியே வந்து அமர்ந்தார்கள்.

பகவன் புத்தர் அவர்களுக்கு எதிரிலே உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்தார். அப்போது தேவர்களும் பிரமர்களும்  யக்ஷர்களும் அவ்விடம் வந்து அமர்ந்தார்கள். ஓசை அடங்கி அமைதியாக இருந்தது. பறவைகளும் விலங்குகளும் தத்தம் ஓசையை அடக்கிக்கொண்டு தத்தம் இடத்திலிருந்தே பகவன் புத்தர் உபதேசிக்கும் இனிய குரலைக் கேட்டன. புத்தர் பெருமான் ஐந்து தாபதர்களையும்  விளித்து இவ்வாறு திருவாய்மலர்ந்தருளினார்:

“பிக்குகளே! துறவிகள் விலக வேண்டிய இரண்டு எல்லைகள் உள்ளன. மாறுபட்ட இந்த இரண்டு எல்லைகள் எவை என்றால், காம சுகல்லிகானுயோகம், அத்தகிலமதானுயோகம் என்பன. காமசுகல்லிகானுயோகம் சிற்றின்ப சுகத்தை அனுபவிக்கிறது. இது இழிவும் தாழ்வும் விகாரமும் உள்ளது; இறுதியிலே தீமை பயப்பது. அத்தகில மதானுயோகம் என்பது, உடம்பை அதிகமாக வாட்டி ஒடுக்கி அடக்கித் துன்பங்கொடுப்பது; இதுவும் இறுதியில் யாதொரு பயனையும் கொடாமல் வீணாகப் போகிறது. பிக்குகளே! இந்த இரண்டு எல்லைகளையும் நீக்கி இடைவழியான ஒரு நெறியைத் ததாகதர் கண்டுபிடித்திருக்கிறார்.”

“இந்த நெறியானது நல்லறிவையும், நற்காட்சியையுங் கொடுத்து ஞானத்தையும், சம்புத்தியையும் நிர்வாண மோக்ஷத்தையும் அளிக்கிறது. ததாகதரால் கண்டறியப்பட்ட அந்த வழி யாது? அதுதான் எட்டு நெறி என்று கூறப்படும் அஷ்டாங்க யோகம் என்பது. அவை:

1.  ஸம்மா திட்டி – நற்காட்சி
2. ஸம்மா ஸங்கப்போ – நல்லெண்ணங்கள்
3. ஸம்மா வாகா – நல்வாய்மை
4. ஸம்மா கம்மந்தோ – நற்செய்கை
5. ஸம்மா ஆஜீவோ – நல்வாழ்க்கை
6. ஸம்மா வியாயாமோ –  நன்முயற்சி
7. ஸம்மா ஸதி – நற்கடைப்பிடி
8.  ஸம்மா ஸமாதி – நற்றியானம்

“பிக்குகளே! இவைதாம் ததாகதர் கண்டறிந்த மத்திம வழி. இது ஞானத்தையும், அமைதியையும் (சாந்தியையும்), சம்புத்தியையும், நிர்வாண  மோக்ஷத்தையும் அளிக்கிறது.”

“பிக்குகளே! நான்கு சத்தியங்கள் (வாய்மைகள்) உள்ளன. அவையாவன:

துக்க சத்தியம்: பிக்குகளே! பிறப்பு துன்பமானது. மூப்பு துன்பமானது. நோய் துன்பமானது. இறப்பு துன்பமானது. நம்மால் வெறுக்கப்படும் பொருள்கள் துன்பந் தருகின்றன. நாம் விரும்பிய பொருள் கிடைக்காமற் போனால் துன்பம் உண்டாகிறது. சுருங்கக் கூறினால், ஐம்புலன்களினாலே உண்டாகிற ஆசைகளினாலே துன்பங்கள் உண்டாகின்றன.

துக்கோற்பத்தி சத்தியம் (சமுதய சத்தியம்): பிக்குகளே! பிறப்புக்குக் காரணமாகிற வேட்கைகளும் அவற்றோடு தொடர்புடைய காமசுகங்களும் ஆசைகளும் துக்கத்தைத் தருகின்றன. இவை காமதிருஷ்ணா (சிற்றின்பத்தில் ஆசை), பவதிருஷ்ணா (வாழ்க்கையில் ஆசை), விபவதிருஷ்ணா (செல்வங்களில் ஆசை) என்று மூன்று வகைப்படும். இவை சமுதய சத்தியம் எனப்படும்.

துக்கநிவர்த்தி சத்தியம் (நிரோத சத்தியம்):  பிக்குகளே! அவா என்னும் வேட்கையை அடியோடு நீக்க வேண்டும். அவாவை மனம், வாக்கு, காயங்களினால் நிகழாமல் தடுக்க வேண்டும். அவாவை நீக்குவதே துக்க நிவர்த்தி (நிரோத சத்தியம்) என்று கூறப்படும்.

நிவர்த்தி மார்க்கம் (மார்க்க சத்தியம்): பிக்குகளே! நற்காட்சி, நல்லெண்ணம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நல்கடைப்பிடி, நற்சமாதி என்னும் இவை எட்டும் துக்க நிவாரண மார்க்கம் எனப்படும்.

துக்கசத்திய ஞானம்: இதற்கு முன்பு ஒருவராலும் கண்டறியப்படாத துக்க சத்தியம் என்கிற ஞானம் எனக்குத் தோன்றியது. பிறகு இந்த ஞானத்தை அறியவேண்டும் என்னும் கிருத்திய ஞானம் உண்டாயிற்று. இதனை ஆராய்ந்து அறிந்தபிறகு, துக்க சத்தியத்தை நன்றாக அறிந்தேன் என்கிற கிருத * ஞானம் தோன்றியது.
* கிருத்தியம், கிருதம் என்பதற்கு முறையே செய்த,செய்கின்ற என்பது பொருள்

சமுதய சத்தியத்தில் சத்தியஞானம்: பிக்குகளே! பிறகு, துக்க சமுதய சத்தியம் என்னும் ஞானம் தோன்றியது. அதை நன்கு அறியவேண்டும் என்னும் கிருத்திய ஞானம் தோன்றி, அந்தச் சமுதய சத்தியத்தை (திருஷ்ணையை) நீக்க வேண்டும் என்னும் ஞானம் தோன்றியது. பின்னர் அந்தச் சமுதயத்தை (திருஷ்ணையை) நான் நீக்கிவிட்டேன் என்கிற கிருதஞானம் தோன்றியது.

நிரோத சத்தியத்தில் சத்தியஞானம்: இந்த நிரோத சத்தியத்தை ஆராய்ந்தபோது நிர்வாணம் என்கிற ஞானம் தோன்றியது. இதனால், நிரோத சத்தியத்தை அறியவேண்டும் என்னும் கிருத்திய ஞானம் தோன்றி, அதனை ஆராய்ந்து பார்த்து, இந்த நிரோத சத்தியத்தை அடைந்தேன் என்னும் கிருதஞானம்தோன்றியது.

மார்க்க சத்தியத்தில் சத்தியஞானம்: பிக்குகளே! பிறகு மார்க்க சத்தியம் என்னும் ஞானம் உண்டாயிற்று. இந்த மார்க்க சத்தியத்தை நன்றாய் அறியவேண்டும் என்னும் கிருத்திய ஞானம் உண்டாகி, அதனை நன்கு ஆராய்ந்து பார்த்தபிறகு துக்கங்களை வெல்லும் மார்க்க சத்தியத்தையடைந்தேன் என்னும் கிருத ஞானம் தோன்றியது.

பிக்குகளே! இவ்வாறு சத்தியஞானம், கிருத்திய ஞானம், கிருதஞானம் என்னும் மூன்றையும் நான்கு சத்தியத்துடன் பொருத்திப் பார்க்கிறபோது பன்னிரண்டு விதமான ஞானம் எனக்குத் தோன்றியது. இந்த ஞானம் எனக்குத் தோன்றாமல் இருந்த காலத்தில், தேவர், பிரமர், மாரர் இருக்கிற அந்த உலகத்திலும், சிரமணரும் பிராமணரும் இருக்கிற இந்த உலகத்திலும் நான் சாமா சம்போதியை அடைந்ததாகச் சொல்லிக் கொள்ளவில்லை.

சத்திய ஞானம், கிருத்திய ஞானம், கிருதஞானம் என்கிற மூன்றையும் நான்கு சத்தியத்தோடு பொருத்திப் பார்க்கிறபோது பன்னிரண்டு விதமாக இருக்கிற இந்தத் தத்துவ ஞானத்தை நான் எப்போது அறிந்தேனோ அப்போது, தேவர், பிரமர், மாரர் இருக்கிற அந்த உலகத்திலேயும், சிரமணர், பிராமணர்  இருக்கிற இந்த உலகத்திலேயும்,  நான் சம்மா சம்போதியை யடைந்தேன் என்று எல்லோருக்கும் கூறினேன்.

இந்த ஞானம் எனக்குத் தோன்றியபோது, ‘நான் அடைந்த சம்போதி ஞானம் அழியாது; இதுவே என்னுடைய கடைசி பிறப்பு; இனி நான் பிறக்கமாட்டேன்’ என்கிற மனவுறுதி ஏற்பட்டது.”

இந்த உபதேசத்தைக் கேட்ட பிறகு கொண்டஞ்ஞர் என்னும் பிக்குவுக்கு அறிவுக் கண் திறந்தது. அவர் ஸ்ரோதாபத்தி ஞானம் அடைந்தார்.

வாரணாசி நகரத்திலே இசிபதனத்திலே பகவன் புத்தர் திருவாய் மலர்ந்தருளிய இந்தத் தர்மோபதேசத்தைக் கேட்டபோது தேவர்களும், பிரமர்களும், முனிவர்களும், சிரமணர்களும், பிராமணர்களும் சந்தோஷ ஆரவாரம் செய்து ‘இது உண்மை, இது சத்தியம்,’ என்று கூறினார்கள். இந்தச் சந்தோஷ ஆரவாரம் இம்மண்ணுலகத்தைக் கடந்து பிரமலோகம் வரையில் சென்றது. சக்கரவாளம் அசைந்து அதிர்ந்தது. தேவர்களின் தெய்வீக ஆற்றலினால் உண்டாகிற ஒளியையும் மங்கச் செய்கிற, ஆற்றல் மிக்க ஒரு பெரிய தெய்வீக ஒளி உலகம் எங்கும் தோன்றியது.

அப்போது பகவன் புத்தர், “உண்மையாகவே பிக்கு கொண்டஞ்ஞர் இதை அறிந்துகொண்டார்,” என்று திருவாய்மலர்ந்தருளினார். அதுமுதல் பிக்கு கொண்டஞ்ஞருக்கு அஞ்ஞா கொண்டஞ்ஞர் (ஞானம் பெற்ற கொண்டஞ்ஞர்) என்னும் பெயர் ஏற்பட்டது.

இரண்டாம் நாள் வப்ப முனிவரும், மூன்றாம் நாள் பத்திய முனிவரும், நான்காம் நாள் மகாநாம முனிவரும், ஐந்தாம் நாள் அஸ்ஸஜி முனிவரும் தர்மோபதேசம் கேட்டு ஸ்ரோதாபத்தி பலன் அடைந்தார்கள். இவர்கள் புத்தரிடம் பிக்கு ஆனார்கள். பகவன் புத்தர் அவர்களை நோக்கி, “பிக்குகளே! இங்கு வாருங்கள்; தர்மம் நன்றாக உபதேசிக்கப்பட்டது. எல்லாத் துன்பங்களையும் அழித்து, உயர்நிலை பெருவதற்காகச் சுத்தமான பிரமசரியத்தை அனுசரிப்பீர்களாக!” என்று கூறி அவர்களைச் சங்கத்தில் சேர்த்தார். அப்போது இந்த ஆறுபேர்களே பௌத்தமதத்தில் இருந்தார்கள்.

பிறகு ஒரு நாள் பகவன் புத்தர் கொண்டஞ்ஞர் முதலான ஐந்து பிக்குகளுக்கு அனாத்ம இலக்கணச் சூத்திரத்தை உபதேசம் செய்தார். அதன் சுருக்கம் வருமாறு: “பிக்குகளே! ரூபம் (உடம்பு) ஆன்மா அல்ல. நமக்கு உள்ள இந்த உருவம் ஆன்மாவாக இருந்தால், இதற்கு வியாதி வரக்கூடாது. எல்லோரும் தங்கள் உருவத்தைப் பற்றி,  இப்படி இருந்தால் நல்லது, இப்படி இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், அவரவர் நினைப்பதுபோல உருவம் அமைவது இல்லை.”

வேதனை ஆன்மா அல்ல. சஞ்ஞா, சம்ஸ்காரம், விஞ்ஞானம் என்பவைகளும் ஆன்மா அல்ல என்பதைப் பற்றியும் தேகத்தைப் பற்றிக் கூறியது போலவே விளக்கிக் கூறினார். பிறகு பகவன் புத்தர் பிக்குகளைப் பார்த்து, “பிக்குகளே! உருவம் (உடம்பு) நித்தியமா, அநித்தியமா? நிலைபெற்றிருப்பதா, அழிந்துவிடுவதா?” என்று வினவினார்.

பிக்குகள், “தேகம் (உருவம்) அநித்தியமானது; அழிந்துவிடக்கூடியது,” என்று விடைகூறினார்கள்.

பகவன் புத்தர், “அநித்தியமான, அழிந்துவிடுகிற பொருள் துக்கத்தை தருமா, சுகத்தை தருமா?”

பிக்குகள்: “பகவரே ! அது துன்பத்தைத் தருவது.”

பகவன் புத்தர்: “ஒரு பொருள் அநித்தியமானதாகவும் துன்பத்தைக் கொடுக்கிறதாகவும், மாறுதல் அடைந்து கொண்டிருக்கிறதாகவும் இருந்தால் அதைக் கண்டு, ‘இது நான், இது என்னுடையது, இது நானே,’ என்று நினைப்பது சரியா?”

பிக்குகள்: “அப்படி நினைப்பது சரியில்லை.”

பின்னர் வேதனை, சஞ்ஞா, சம்ஸ்காரம், விஞ்ஞானம் என்கிற மற்ற நான்கு ஸ்கந்தங்களைப் பற்றியும் பகவன் புத்தர் மேற்கண்டபடி கேள்விகள் கேட்க, பிக்குகள் மேற்கண்டபடி விடை கூறினார்கள்.  அப்போது பகவன் புத்தர் அருளிச் செய்தார்: “ஆகையினாலே, பிக்குகளே! இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்காலத்திலும் அகத்திலும் புறத்திலும் கம்பீரத்துடனும், கம்பீரம் இல்லாமலும், தாழ்ந்த தாகவும், உயர்ந்ததாகவும், அண்மையிலாயினும், சேய்மை யிலாயினும் ஏதாவது ஓர் உருவம் (தேகம்) இருந்தால், அது நான் அன்று, அது என்னுடையதன்று, அது என்னுயிர் அன்று என்று நன்றாகவும் சரியாகவும் அறிவினால் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறே வேதனை, ஸஞ்ஞா, சம்ஸ்காரம், விஞ்ஞானம் என்கிற நான்கைப் பற்றியும் நன்றாகவும் சரியாகவும் அறிவினால் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பிக்குகளே! இப்படி ஆராய்ந்து பார்க்கிற அறிவு பெற்றவர்கள் ரூபத்தைப் பற்றியும், வேதனையைப் பற்றியும், சஞ்ஞாவைப் பற்றியும், சம்ஸ்காரத்தைப் பற்றியும், விஞ்ஞானத்தைப் பற்றியும் இவ்வாறு ஆராய்ந்து  பார்த்து உண்மையைக் காண்பார்கள். உண்மையைக் கண்டவர்கள் ஆசையை விட்டுவிடுவார்கள். ஆசையை அறுப்பதினாலே, கிலேசங்களில் (துன்பங்களில்) இருந்து நீங்கிய மனத்தைப் பெறுவார்கள். அவ்வாறு மனமாசு நீங்கியவர்கள் அனாத்மவாத அறிவைப்பெற்று, ‘செய்ய வேண்டிய நன்மைகளையெல்லாம் செய்து முடித்தேன். இனி எனக்கு மறுபிறப்பு கிடையாது. இந்த அர்ஹந்தாவைப் பற்றிச் செய்யவேண்டியது வேறொன்றுமில்லை,’ என்று ஞானக்கண்ணாலே அறிந்துகொள்வார்கள்.”

பகவன் புத்தருடைய இந்தப் போதனையைக் கேட்டபோது ஐந்து பிக்குகளும் எல்லாவித கிலேசங்களையும் வென்று அர்ஹந்தபலனை அடைந்தர்கள்.

நாலக சூத்திரம்

பிறகு ஒரு நாள் நாலக முனிவர், பகவன் புத்தரிடம் வந்தார். இந்த நாலக முனிவர், புத்தர் குழந்தையாயிருந்தபோது தீர்க்க தரிசனம் கூறின அசித முனிவரின் மருகன். அசிதமுனிவரின் ஆணைப்படி, துறவு பூண்டு இமயமலைச் சாரலில் சென்று தவம் செய்திருந்தார். சித்தார்த்த குமரன் புத்த பதவியை அடைந்திருக்கிறார் என்பதை அறிந்து அவரிடம் உபதேசம் பெறுவதற்காக நாலக முனிவர் இமயமலையிலிருந்து பகவன் புத்தரிடம் வந்தார். வந்து வணங்கி அவரிடம் உபதேசம் கேட்டார். பகவன் புத்தர், நாலக முனிவருக்கு மோனெய்ய விரதத்தை உபதேசித்தார் (இந்த உபதேசத்தை சூத்திர பிடகத்திலே நாலக சூத்திரத்தில் காணலாம்). இவ்வுபதேசத்தைப் பெற்ற நாலக முனிவர் மீண்டும் இமயமலைக்குச் சென்று பகவன் புத்தர் உபதேசப்படி இருந்து ஏழு திங்களுக்குப் பிறகு உயர்ந்த நிலையைப் பெற்றார்.

யசபுத்திரனுக்கு உபதேசித்தல்

அக்காலத்திலே காசி நகரத்திலே மிக்க செல்வந்தனான தனபதியின் மகன் யசகுலபுத்திரன் இன்பசுகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் ஒருநாள் விடியற்காலையில் விழித்துக்கொண்டு பார்த்தபோது மகளிரின் இருப்பைக் கண்டு, சித்தார்த்த குமரன் இல்லறத்தில் வெறுப்புக் கொண்டது போல, வெறுப்புக் கொண்டு மாளிகையை விட்டுப் புறப்பட்டு வந்தான். வந்தவன்  புத்தர் எழுந்தருளியிருக்கும் இசிபதனத்தை அடைந்தான். அப்போது விடியற்காலம் ஆகையால், பகவன் புத்தர் ஆசனத்தில் அமர்ந்து ஞானக்கண்ணினாலே உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். யசகுலபுத்திரன் வரப்போவதையும் வந்து அறநெறி கேட்டுத் துறவு கொள்ளப் போவதையும் அறிந்தார்.

அப்போது யசகுல புத்திரன் பகவரிடம் வந்து வணங்கினான். பகவர் அவனை உட்காரச் சொல்ல அவனும் அமர்ந்தான். அவனுடைய பக்குவ நிலையையறிந்த பகவர் தானங் கொடுப்பதானாலும் சீலம் அனுஷ்டிப்பதானாலும் கிடைக்கும் பயன்களையும் இவற்றினாலே கிடைக்கும் உயர்ந்த இன்ப சுகங்களையும் கூறினார். சிற்றின்பச் சுகங்கள் குற்றம் உள்ளவை, கீழானவை, அசுத்தமானவை என்பதை விளக்கி, உத்தமமான உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்று உபதேசம் செய்தார்.

இதனைக் கேட்ட யசகுல குமாரனுடைய மனம் விளக்கமடைந்தது. அப்போது பகவன் புத்தர், துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்னும் நான்கு உண்மைகளை விளக்கமாகப் போதித்தார். தூய்மையான வெள்ளைத் துணியில் சாயம் நன்றாகப் பற்றுவதுபோல, யசகுலபுத்திரன் மனத்தில் நான்கு உண்மைகளும் மிக நன்றாகப் பதிந்தன. அதனால் அவன் ஸ்ரோதாபத்தி பலன் அடைந்தான்.

முதல் உபாசகர்

யசகுல புத்திரனுடைய தாயார், மாளிகையிலே புத்திரனைக் காணாமல், தன் பதியாகிய தனபதிக்கு அறிவித்தாள்.  தனபதியும் மகனைத் தேடுவதற்காக நான்கு திசைகளிலும் குதிரைச் சேவகரை அனுப்பித் தானும் அவனைத் தேடப் புறப்பட்டான். தனபதி, தன் மகனுடைய பொற் பாதரட்சையின் அடிச்சுவடுகளைக் கண்டு அதன் வழியே தொடர்ந்து சென்றான். அந்த அடிச்சுவடு இசிபதன ஆராமத்தில் சென்று விட்டது. பகவன் புத்தர், தனபதி தன் மகனைத் தேடிக்கொண்டு வருவதைத் தூரத்திலேயே கண்டு, தமது இருத்தியினாலே தனபதி தன் மகனைக் காணாதபடி செய்துவிட்டார்.

தனபதியும் ஆராமத்தையடைந்து பகவன் புத்தரிடன் போய் வணங்கி, “சுவாமிகளே! சற்று முன்பு இந்தப் பக்கம் வந்த யசபுத்திரனைப் பகவர் கண்டதுண்டா?” என்று கேட்டான்.

“யசபுத்திரனைக் காண்பதற்கு விருப்பமாக இருந்தால் தனபதியே! இங்குச் சற்று அமர்க. யசபுத்திரனை இங்குப் பார்க்கலாம்,” என்று அருளிச் செய்தார் பகவர்.

கிருகபதி, தன்மகன் இங்கு இருப்பதை அறிந்து கவலை நீங்கி மகிழ்ச்சி கொண்டான். அப்போது பகவன் புத்தர் செல்வம், தானம், பயன், தானத்தின் புண்ணியம் பாவம் முதலியவைகளைப் பற்றித் தனபதிக்கு உபதேசம் செய்தார். உபதேசத்தின் கடைசியிலே தனபதி ஸ்ரோதாபத்தி பலன் அடைந்தார். பிறகு, தனபதி புத்த, தம்ம, சங்கம் என்னும் மும்மணியைச் சரணம் அடைந்து பௌத்தரானார். உலகத்திலே மும்மணிகளைச் சரணம் அடைந்த முதல் உபாசகன், யசகுல புத்திரனுடைய தந்தையான காசி நகரத்துத் தனபதியே ஆவார்.

தன் தந்தைக்குப் பகவர் போதித்த தர்மோபதேசத்தைக் கேட்டுகொண்டிருந்த யசகுலபுத்திரன் ஞானம் பெற்று எல்லாக் கிலேசங்களையும் வென்று அர்ஹந் நிலையை அடைந்தார். அதாவது, இல்லறத்தை விட்டுத் துறவு கொள்ளும் நிலையை அடைந்தார். அப்போது பகவர் யசகுல புத்திரரைத் தனபதி காணும்படிச் செய்தார்.

தன் மகனைக் கண்டு மகிழ்ச்சியடைந்த தனபதி மகனைப் பார்த்து, “அருமை மகனே! உன்னுடைய தாயார் உன்னைக் காணாமல் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். நீ வந்தால் அவள் உயிர் பிழைப்பாள். உடனே வா,” என்று அழைத்தார். யசபுத்திரன் பகவன் புத்தருடைய முகத்தைப் பார்த்தான். அப்போது புத்தர், “யசபுத்திரன், அர்ஹந்த நிலையையடைந்திருக்கிறான். அவன் இனி இல்லறத்தில் தங்கமாட்டான்,” என்று தனபதியிடம் கூறினார்.

அது கேட்ட தனபதி, பகவன் புத்தரை யசபுத்திரனோடு அன்றையத் தினம் தன் இல்லத்திற்குத் தானத்தின் பொருட்டு வரவேண்டும் என்று வேண்டினான். பகவன் புத்தர், தம்முடைய உடன்பாட்டை வாய்திறந்து சொல்வது வழக்கமில்லை. அவர் உடன்பாட்டுக்கு அறிகுறியாக வாளா இருந்தார். பிறகு யசபுத்திரன், பகவன் புத்தரிடம் ஏஹீபி‌க்ஷுதாவைப் பெற்று பிக்கு ஆனார்.

முதல் உபாசிகைகள்

பிறகு பகவன் புத்தர் யசபிக்குவுடன் தனபதியின் இல்லத்திற்குச் சென்றார். தனபதி அவர்களை வரவேற்று ஆசனத்தில் அமரச் செய்தார். அவ்வமயம் யசனுடைய தாயாரான சுஜாதை என்பவள் மருமகளுடன் (யசனுடைய மனைவியுடன்) வந்து பகவன் புத்தரை வணங்கி ஒரு பக்கமாக அமர்ந்தாள். அப்போது பகவன் புத்தர் அவர்களுக்குத் தானகாதை, சீலகாதை சுவர்க்க காதை முதலானவைகளை முறையே உபதேசம் செய்தருளினார். அவ்வுபதேசங்களைக் கேட்டு அவர்கள் நன்றாக உணர்ந்தார்கள். பிறகு அவர்களுக்குப் புத்தர் நான்கு வாய்மைகளை அருளிச் செய்தார். அதைக் கேட்ட அவ்விருவரும் ஸ்ரோதாபத்தி நிலையையடைந்தார்கள். ஆகவே அவர்கள் மும்மணியைச் சரணம் அடைந்தார்கள். உலகத்தில் முதன்முதாலாகத் திரி சரணம் (மும்மணி) அடைந்த உபாசிகைகள் இவர்களே.

பிறகு அவர்கள் பகவருக்கும்  யசபிக்குவுக்கும் உணவு அளித்தார்கள். உணவு கொண்ட பிறகு பகவர் அவர்களுக்கு மோதனாபோதனை செய்து தமது விகாரைக்குத் திரும்பினார்.நால்வர் துறவு

யசபுத்திரனுக்கு வாரணாசி நகரத்திலே நான்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் விமலன், சுபாகு, புண்ணியஜித்து, கவம்பதி என்னும் பெயரையுடையவர்கள். தமது நண்பனான யசகுமரன் துறவு பூண்டதைக் கேட்ட இந்த நண்பர்கள் இசிபதனத்திற்கு வந்து, யச அரகந்தரை வணங்கி ஒருபக்கமாக அமர்ந்தார்கள். யசமுனிவர் அந்நான்கு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு புத்தரிடம் சென்றார். சென்று வணங்கி இவர்களை அறிமுகப்படுத்தி இவர்களுக்கு உபதேசம் செய்தருளும்படி பகவரை வேண்டினார்.

பகவன் புத்தர் இவர்களுக்குத் தானகாதை முதலானவைகளைப் படிப்படியாக உபதேசம் செய்தார். அப்போது இவர்களுக்குக் கிலேசங்கள் (மனமாசுகள்) நீங்கின. பின்னர் இவர்களுக்கு நான்கு வாய்மைகளை விரிவாக உபதேசம் செய்தார். அதைக் கேட்ட இவர்கள் ஸ்ரோதாபத்தி பலன் அடைந்து தங்களுக்குத் துறவு கொடுக்கும்படி கேட்டார்கள். பகவர் இவர்களை ஏஹி பிக்ஷுதாவாக ஏற்றுக் கொண்டார். மீண்டும் பகவன் புத்தர் இவர்க்ளுக்கு அறநெறியைப் போதித்தார். அதுகேட்ட இந்தப் பிக்குகள் அரஹந்தரானார்கள்.

அப்போது உலகத்திலேயே இவர்களோடு பதினோரு அர்ஹந்தர் தான் இருந்தார்கள்.ஐம்பதின்மர் துறவு

யச அரஹந்தருடைய பழைய நண்பர்கள் ஐம்பதின்மர் வெவ்வேறு இடங்களில் வசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள், யசருடைய துறவைக் கேள்விப்பட்டு அவரிடம் வந்தார்கள். வந்து வணங்கி ஒருபக்கமாக அமர்ந்தார்கள். யச அரஹந்தர் ஐம்பது நண்பர்களையும் வரவேற்று அவர்களை அழைத்துக்கொண்டு பகவன் புத்தரிடம் சென்றார். பகவர்  அவர்களுக்குத் தானகாதை முதலியவைகளை முறைப்படி உபதேசம் செய்தார். இதனாலே அவர்களின் உள்ளம் பண்பட்டுச் சாந்தி நிலையையடைந்தது. அதன் பிறகு பகவர் நான்கு வாய்மைகளை அவர்களுக்கு நன்கு உபதேசித்தார். இவ்வுபதேசத்தைக் கேட்டு ஐம்பது பேரும் ஸ்ரோதாபத்தி பலன் அடைந்தார்கள். அவர்கள் தங்களுக்குத் துறவு கொடுக்கவேண்டுமென்று அவர்களைக் கேட்டார்கள். பகவர் அவர்களுக்கு ஏகபிக்ஷுதா என்னும் துறவைக் கொடுத்தார். பின்னர் மீண்டும் தர்மோபதேசம் செய்தருளினார். அதனால் அவர்கள் எல்லோரும் அரஹந்த பலன் அடைந்தார்கள்.

அப்போது பகவன் புத்தரை உள்ளிட்டு அறுபத்தொரு அரஹந்தர்கள் இருந்தார்கள்.தர்மப் பிரசாரம்

கார்காலம் கழிந்து ஒரு திங்கள் வரையில் பகவன் புத்தர் காசியிலேயே இருந்தார். பிறகு அவர், தமது அறுபது பிக்குகளையும் அழைத்து, “பிக்குகளே! தேவர்களையும் மனிதர்களையும் பிணிக்கிற பாசங்களையெல்லாம் நான் நீக்கியிருக்கிறேன். என்னைப்போலவே நீங்களும் அந்தப் பாசங்களையெல்லாம் நீக்கியிருக்கிறீர்கள். உலகத்திலேயுள்ள மக்களின் நன்மைக்காக நீங்கள் யாவரும் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று தர்மத்தைப் போதியுங்கள். ஒரே இடத்திற்கு இருவர் போகாதீர்கள்! ஒவ்வொருவரும் வெவ்வேறு இடத்திற்குச் செல்லுங்கள். சென்று முதலிலும் இடையிலும் கடைசியிலும் நன்மைகளைப் பயக்கிற பரிசுத்தமான பௌத்த தர்மத்தை மக்களுக்குப் போதியுங்கள். பிரமசரியத்தைப் பிரகாசிக்கச் செய்யுங்கள். தருமத்தை உணர்கிற நல்லறிவு படைத்த மக்கள் உலகத்திலேயிருக்கிறார்கள். அவர்களுக்குத் தர்மத்தைப் போதிக்காவிட்டால் வீடுபெற மாட்டார்கள். தருமத்தைப் போதிக்கப் புறப்படுங்கள். நானும் உருவேல ஜனபதத்தில் சேனானி கிராமத்திற்குச் சென்று தர்மம் போதிக்கப் போகிறேன்,” என்று அருளிச் செய்தார்.

இவ்வாறு அருளிச்செய்து, தர்ம தூதர்களான அறுபது பிக்குகளையும் அறுபது இடங்களுக்கு அனுப்பித் தாமும் உருவேல ஜனபதத்திற்குப் புறப்பட்டார்.பத்ரவர்க்கிகர்

காசியிலிருந்து உருவேல கிராமத்துக்குச் செல்லும் சாலை வழியாகப் பகவன் புத்தர் நடந்து சென்று இடைவழியிலே  ஒரு பக்கத்தில் உள்ள பருத்தித் தோட்டத்தருகில் ஒரு மரத்தின் அடியிலே தங்கினார். அவ்வமயம் பத்ரவர்க்கிய குமார்கள் முப்பது பேர் தமது மனைவியரோடு வினோதத்திற்காக நடந்து வந்தார்கள்.  அவர்களில் மனைவியில்லாத ஒருவர், கணிகை ஒருத்தியை அழைத்துக் கொண்டு அவர்களுடன் வந்தார். இவர்கள் வினோதமாக இருக்கும் சமயம் பார்த்து அந்தக் கணிகை, நகைகளையும் விலையுயர்ந்த பொருள்களையும் இவர்கள் அறியாதபடி எடுத்துக்கொண்டு போய்விட்டாள். சிறிது நேரங்கழித்து இதனை அவர்கள் அறிந்தார்கள்; அவளைத் தேடிப் புறப்பட்டார்கள்.

அப்படித் தேடி வருகிறவர்கள், குளிர்ந்த மரத்தின்  அடியிலே தங்கியிருக்கிற பகவரைக் கண்டு வணங்கி, “சுவாமி! இவ்வழியாகச் சென்ற ஒருத்தியைக் கண்டீர்களா?” என்று கேட்டார்கள்.
“குழந்தைகளே! ஒருத்தியைக் தேடுகிறதினாலே உங்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?” என்று கேட்டார் பகவர்.
“சுவாமி! எங்கள் மனைவியரோடு விளையாட்டின் பொருட்டு இங்கு வந்தோம். மனைவியில்லாத ஒருவர் ஒரு தாசியுடன் வந்தார். அவள் எங்கள் நகைகளை எடுத்துக் கொண்டு போய்விட்டாள். அதற்காக அவளைத் தேடுகிறோம்,” என்று கூறினார்கள்.
“குழந்தைகளே! தன்னைத் தேடுவது உத்தமமானதா அல்லது அயலாள் ஒருத்தியைத் தேடுவது உத்தமமானதா?” என்று வினவினார்.
“சுவாமி! நம்மை நாமே தேடிக்கொள்வது உத்தமமானது,” என்றனர்.
“அப்படியானால், குழந்தைகளே! உட்காருங்கள். உங்களுக்குத் தர்மத்தை உபதேசிக்கிறேன்,” என்று அருளினார். அவர்களும், “அப்படியே, சுவாமி!” என்று அவரை வணங்கி ஒருபுறமாக அமர்ந்தார்கள்.
அப்போது பகவன் புத்தர் தானகாதை, சீலகாதை முதலிய காதைகளை முறைப்படி உபதேசம் செய்தார். அதைக்கேட்டு மகிழ்ந்து அவர்கள் மனத்தூய்மையடைந்தார்கள்.  பிறகு, நான்கு விதமான வாய்மைத் தத்துவத்தைப் போதித்தார். இத்தத்துவோபதேசத்தைக் கேட்ட அவர்களுக்கு அறிவுக்கண் விளங்கிற்று. சிலர் ஸ்ரோதாபத்தி பலன் அடைந்தார்கள். சிலர் சத்ருகாமி பலனையும், சிலர் அனாகாமி பலனையும் அடைந்தார்கள்.
இவ்வாறு உபதேசங்கேட்டு உயர்ந்த நிலையையடைந்த பத்ரவர்க்கியர், பகவன் புத்தரை வணங்கித் தங்களுக்குச் சந்நியாசம் கொடுக்கும்படிக் கேட்டார். பகவர் ஏஹிபிக்ஷு கிரமத்தினாலே சந்நியாசமும் உபசம்பதாவும் அவர்களுக்குக் கொடுத்தார். பின்னர், இந்த முப்பது பிக்குகளையும் பல கிராமங்களுக்குத் தர்மதூத வேலைக்காக அனுப்பித் தாம் தனியாக உருவேல கிராமத்திற்குச் சென்றார்.

திரிசரணம் (மும்மணி)அந்தக் காலத்தில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற பௌத்த பிக்குகள் அற ஒழுக்கத்தைப் போதித்தார்கள். பௌத்த தர்மத்தைக் கேட்டவர்களில் சிலர் தாங்களும் துறவு கொள்ள விரும்பினார்கள். பிக்குகள் அவர்களை அழைத்துக்கொண்டு வந்து பகவன் புத்தரிடம் துறவுகொள்ளச் செய்தார்கள். அவ்வாறு வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களில் பலர் நெடுந்தூரம் நடந்து வந்தபடியால் மிகவும் களைத்து இளைத்திருந்தார்கள். இதனைக்கண்ட பகவன் புத்தர் ஒருசமயம் தனியே இருந்தபோது இது பற்றிச் சிந்தித்தார். துறவு பெறுவதற்காக இவர்கள் ஏன் இளைத்துக் களைத்துவரவேண்டும்? அவரவர்கள் இடத்திலேயே ஏன் பிக்குகள் அவர்களுக்கு துறவு கொடுக்கக்கூடாது? இவ்வாறு சிந்தித்த பகவன் புத்தர் அன்று மாலையில் பிக்குச் சங்கம் கூடியபோது அவர்களுக்கு இவ்வாறு அருளிச் செய்தார்: “பிக்குகளே! துறவுகொள்ளவிரும்புகிறவர்களை வெகு தூரத்திலிருந்து அழைத்துக்கொண்டு வருகிறீர்கள். நெடுந்தூரத்தைக் கடந்து வரவேண்டியிருப்பதனால் அவர்களும் நீங்களும் களைத்துத் துன்பம் அடைகிறீர்கள். இனிமேலாக, நீங்கள் அந்தந்த ஊரிலேயே நீங்களே துறவு கொடுக்க உங்களை அனுமதிக்கிறேன்.”

துறவுகொள்ள விரும்புகிறவர் முதலில் தலைமயிரையும் மீசை தாடிகளையும் மழித்துவிட வேண்டும். பிறகு அவர் மஞ்சள்நிறச் சீவர ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். பிறகு அவர், துறவு கொடுக்கிற பிக்குவின் காலைத் தொட்டு வணங்கி அமர வேண்டும். அப்போது துறவு கொடுக்கிற பிக்குவிடத்தில் துறவு பெறுகிறவர் திரிசரணம் கூறவேண்டும்.
புத்தம் சரணங் கச்சாமி
தம்மம் சரணங் கச்சாமி
சங்கம்  சரணங் கச்சாமி’
என்று திரிசரணம் கூறவேண்டும். திரிசரணத்தை மூன்றுமுறை கூற வேண்டும்.

இவ்வாறு திரிசரணம் கூறித் துறவு பெறும்படி, “பிக்குகளே! உங்களுடைய ததாகதர் அனுமதியளிக்கிறார்,” என்று அருளிச் செய்தார்.

ஜடாதர தபசிகள்

அக்காலத்திலே உருவேல ஜனபதத்தில் நேரஞ்சர நதிக்கரையில் வெவ்வேறு இடங்களில் ஆசிரமங்களை அமைத்துக்கொண்டு மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். இவர்களில் உருவேல காசிபர் மூத்தவர். அவருக்கு ஐந்நூறு சீடர்கள் இருந்தார்கள். இரண்டாவது சகோதருக்கு நதிகாசிபர் என்பது பெயர் (நதி – நிரஞ்சா நதி).  இவருக்கு முந்நூறு சீடர்கள் இருந்தார்கள். இளையவருக்குக் கயாகாசிபர் என்பது பெயர். இவருக்கு இருநூறு சீடர்கள் இருந்தார்கள். இவர்கள் சடையை வளர்த்துத் தீ (அக்கினி) வழிபாடு செய்து வந்தனர்.

பகவன் புத்தர், உருவேல காசிபரிடம் சென்று அவரிடம் பேசினார். பிறகு, “காசிபரே! நான் இருப்பது தங்களுக்குக் கஷ்டமில்லாமல் இருந்தால், உம்முடைய எக்யசாலையில் ஒரு இரவு தங்குகிறேன்,” என்று கூறினார்.

“மகா சிரமணரே! தாங்கள் தங்குவது எனக்குக் கஷ்டம் அல்ல, ஆனால் , அங்கு ஒரு குரூரமான பாம்பு உண்டு. அது உமக்குத் தீங்கு செய்யக்கூடும் என்று அஞ்சுகிறேன்,” என்றார் காசிபர்.

“அதனால் எனக்கு ஒன்றும் தீங்கு நேராது. எக்கியசாலியில் நான் தங்க உத்தரவு கொடுங்கள,” என்று கேட்டார் பகவர். அவரும் உத்தரவு கொடுத்தர்.

பகவன் புத்தர் எக்கியசாலைக்குச் சென்று தர்ப்பைப் புல் ஆசனம் அமைத்து அதில் அமர்ந்தார். அப்போது அங்கிருந்த பெரிய நாகப்பாம்பு கோபங்கொண்டு மூக்கின் வழியாக நச்சுப் புகையை வீசிற்று. அந்த நச்சுப்புகை பட்டால் சாதாரண ஆட்களின் தோல், சதை, எலும்புகள் கருகிக் கறுத்துப்போகும். ஆனால், பகவன் புத்தரின் யோக சக்தியினாலே அந்த நச்சுப்புகை அவரை ஒன்றும் செய்யவில்லை. பிறகு, பகவர், “இந்தப் பாம்பின் கொடுமையை அடக்குவேன்,” என்று கருதிக் கொண்டு, தமது இருத்தி சக்தியினாலே அங்கு ஒருவித புகையை உண்டாக்கினார்.

அதனைக் கண்ட நாகப்பாம்பு மிகவும் சினங்கொண்டு அனலைக் கக்கி வீசியது. புத்தர் தமது இருத்தி சக்தியினாலே அனலை உண்டாக்கினார். அதனால் அந்த எக்யசாலை தீப்பற்றி எரிவது போலக்  காணப்பட்டது. அதனைக் கண்ட தாபசர்கள், “ஐயோ! அழகான தேகமுள்ள சிரமணருக்கு நாகப்பாம்பினாலே துன்பம் உண்டாயிற்று,” என்று பேசிக் கொண்டார்கள்.
இரவு கழித்து பொழுது விடிந்தவுடன், ஆற்றலை இழந்து வாடிக்கிடந்த நாகப்பாம்பைப் பகவன் புத்தர் எடுத்துத் தமது பாத்திரத்தின் உள்ளே போட்டுக் கொண்டுபோய், “உருவேல காசிபரே! இதோ உம்முடைய நாகப்பாம்பு. அதனுடைய ஒளி என்னுடைய ஒளியினாலே அடங்கிப் போய்விட்டது,” என்று சொல்லி அவருக்கு அதைக் காட்டினார். அதைக்கண்ட உருவேல காசிபர், “அடங்காத இருத்தி சக்தியுடைய இந்தக் கொடிய நாகப்பாம்பை அடக்கிய இந்தச் சிரமணர் அதிக இருத்தி சக்தியுள்ளவரே. ஆனால்,  இவர் என்னைப் போன்று அர்ஹந்த நிலையையடைந்தவர் அல்லர்,” என்று தமக்குள் நினைத்துக் கொண்டார்.

உருவேல காசிபர்உருவேல காசிபரின் எண்ணத்தை அறிந்த பகவன் புத்தர், மற்றும் சில இருத்திகளைச் செய்து காட்டினார். அப்போது காசிபர் அவரைப் பற்றித் தவறாகக் கருதிக் கொண்டிருந்த எண்ணத்தை நீக்கிப் பகவன் புத்தரிடம்  தருமோபதேசம் கேட்டுப் பௌத்தரானார். அவருடன் இருந்த சீடர்களும் பௌத்தர் ஆயினர். பிறகு, அந்தச் சடிலர்கள் எல்லோரும் பகவன் புத்தரிடம் ஏஹிபிக்ஷு விதமாகச் சந்நியாசமும் உபசம்பதாவும் பெற்றார்கள்.

நதி காசிபர்

உருவேல காசிபரும் அவருடைய சீடர்களும் பௌத்தராகிச் சந்நியாசம் பெற்றபோது, தங்களுடைய சடைகளை மழித்துத் துணிமணி முதலிய பொருள்களை நதியிலே போட்டார்கள். நேரஞ்சர நதிக்கரையிலே இன்னொரு இடத்தில் இருந்த நதிகாசிபர், ஆற்றிலே போகிற இந்தப் பொருள்களைக்கண்டு, தமது தமையனாருக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டதோ என்று ஐயம் அடைந்து, தமது சீடர்களுடன் புறப்பட்டுத் தேடிவந்தார். வந்த அவர், தமது தமையனாரும் அவர் சீடர்களும் பௌத்த சந்நியாசிகளாக இருப்பதைக்கண்டு, “இந்தத் துறவு நிரம்ப நல்லதா?” என்று கேட்டார்.

“ஆமாம், தம்பி! தாபச சந்நியாசத்தைப் பார்க்கிலும் இந்தச் சந்நியாசம் உத்தமமானது,” என்று உருவேல காசிபர் கூறினார். இதைக்கேட்டு நதிகாசிபரும் அவரது சீடர்களும் தங்களுடைய சடைமுடி முதலியவைகளைக் களைந்து ஆற்றிலே போட்டுவிட்டுப் பகவன் புத்தரிடம் சென்று தர்மோபதேசங் கேட்டார்கள். புத்தர் அவர்களுக்கு உபதேசம் செய்து, அவர்கள் வேண்டுகோளின்படி ஏஹிபிக்ஷு சந்நியாசம் கொடுத்தார்.

கயா காசிபர்

இவர்கள் ஆற்றில் எரிந்த சடைமுடி முதலிய பொருள்கள் ஆற்றிலே போவதைக் கண்ட மூன்றாவது சகோதராகிய கயாகாசிபர், தமது தமையனாருக்கு ஏதோ தீங்கு நேரிட்டது போலும் என்று கருதி, சீடர்களுடன் புறப்பட்டு வந்தார். வந்து, அவர்கள் பௌத்தத் துறவிகளாக இருப்பதைக்கண்டு, “தாபச சந்நியாசத்தை விட இந்தச் சந்நியாசம் உத்தமமானதா?” என்று வினவினார். “ஆமாம்! இந்தச் சந்நியாசம் அதைவிட உயர்ந்தது, மேலானது!” என்று அவர்கள் கூறினர். இதைக் கேட்ட கயா காசிபரும் தமது சீடர்களுடன் சடா முடி முதலியவற்றைக் களைந்துபோட்டுத் தர்மோபதேசங் கேட்டுப் பௌத்த துறவியானார்கள்.

ஆதித்த பரியாய சூத்திரம்

பகவன் புத்தர் சில நாள் அங்குத் தங்கியிருந்த பின்னர், தமது ஜடாதர சீடர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு கயா நகரத்தின் பக்கமாகச் சென்றார். அங்குச் சென்று ஒரு பாறையின் மேலே அமர்ந்து, தமது சீடர்களுக்கு ஆதித்த பரியாய சூத்திரத்தை உபதேசம் செய்தார்.

அச்சூத்திரத்தின் சுருக்கம் இது:

உலகத்தில் எல்லாப் பொருள்களும் தீப்பற்றி எரிகின்றன. கண் என்னும் பொறி தீப்பற்றி எரிகிறது. ரூபம் உருவம் என்னும் தீயினாலே சக்ஷு விஞ்ஞானத்தைத் தீப்பிடித்து இருக்கிறது. சக்ஷு ஸ்பர்ஸ மூலமாக வருகின்ற சுகம், துக்கம், உபேக்ஷை என்கிற மூன்றுவிதமான வேதனை நெருப்பினாலே தீபற்றி எரிகிறது.இவ்வாறே ஐம்புலன்களிலும் தீப்பற்றி எரிகிறது. எந்தவிதமான தீ என்று கேட்கிறீர்களா? ராகத் தீ, துவேஷத் தீ, பிறப்பு, நரை, திரை, மூப்பு, மரணம், சோகம், துன்பம், விருப்பு, வெறுப்பு என்கிற தீயினாலே எல்லாப் பொருள்களும் தீப்பற்றி எரிகின்றன.

இந்த ஆதித்த பரியாய சூத்திரத்தை உபந்நியாசிக்கக் கேட்ட பிக்குகள் அர்ஹந்தபலன் அடைந்தார்கள்.

பிறகு பகவன் புத்தர் , முன்பு ஜடிலத் துறவிகளாக இருந்த ஆயிரக்கணக்கான சீடர்களோடு புறப்பட்டு, முன்பு விம்பசார அரசனுக்குச் செய்த வாக்குறுதியை நிறைவேற்ற இராசகிருக நகரம் நோக்கிச் சென்றார். பன்னிரண்டு மைல் தூரமுள்ள வழியைக் கடந்து தாலவனம் என்னும் பனஞ்சோலையையடைந்து அங்கே ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே எழுந்தருளியிருந்தார்.

விம்பசாரன் பௌத்தனானது

பகவன் புத்தர் எழுந்தருளியிருக்கிறார் என்பதை அறிந்த சேணிய விம்பசாரன் என்னும் மகத நாட்டு அரசன், தன்னிடம் விருந்தாக வந்திருந்த லிச்சாவி அரசனான மஹாலியுடனும், வச்சபாலன் முதலிய பன்னிரண்டு பிராமணர்களுடனும், மந்திரி பிரதானிகள் முதலிய பரிவாரங்களுடனும் வந்து பகவரை அடிபணிந்து தொழுதான். பிராமணர்களும் பகவன் புத்தரை வணங்கி ஒருபுறம் அமர்ந்தார்கள்.  பகவன் புத்தரையும் அவருடன் இருந்த ஜடிலத் துறவிகளையும்  கண்ட பிராமணர்கள் ஐயங் கொண்டனர். புத்தர் ஜடிலருடைய சீடரா அல்லது ஜடிலர்கள் புத்தருடைய சீடரா என்று அவர்களுக்கு ஐயம் உண்டாயிற்று. இதனைப் பகவன் புத்தர் உணர்ந்தார். அவர்களுடைய ஐயத்தை நீக்க எண்ணிப் பகவன் புத்தர் உருவேல காசிபரைப் பார்த்துக் கூறினார்: “உருவேலரே! அனலை ஓம்பித் தீயை வளர்த்துத் தீ வணக்கம் செய்து கொண்டிருந்த நீர் ஏன் அந்த வணக்கத்தை விட்டுவிட்டீர்?” இந்தக் கேள்விக்கு உருவேல காசிபர் இவ்வாறு விடை கூறினார். “அனலை ஓம்பித் தீயை வணங்கினால் அது மறுமையில் இந்திரலோக பதவியைத் தந்து இன்ப சுகங்களை அளிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த இன்ப சுகங்கள் நிலையற்றவை. கடைசியில் துன்பத்தைத் தருபவை என்பதைக் தங்களால் அறிந்து, நிலையற்றதும், துன்பந் தருவதுமான இன்ப சுகங்களைத் தருகிற தீ வணக்கத்தை விட்டுப் பௌத்த தர்மத்தை மேற்கொண்டேன்.” இவ்வாறு கூறிய உருவேல காசிப முனிவர் தமது ஆசனத்தைவிட்டு எழுந்துவந்து பகவன் புத்தரின் திருவடியில் தலைவைத்து வணங்கினார். அப்போது பகவன் புத்தர், “இப்போது மட்டுமல்ல பூர்வஜன்மங்களிலும்கூட உருவேல காசிபருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்,” என்று கூறி மஹாநாரத ஜாதகக் கதையை அவர்களுக்கு விவரமாகச் சொன்னார்.

உருவேல காசிபர் கூறியதையும் அவர் பகவன் புத்தரை வணங்கியதையும் கண்டும், கேட்டும் அவர்கள் உண்மை அறிந்தனர். உருவேல காசிபர் பௌத்த மதத்தை மேற்கொண்டு பகவன் புத்தருக்குச் சீடர் ஆனார் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டனர்.

பிறகு விம்பசார அரசனுக்கும் அவனுடன் வந்திருந்தவர்களுக்கும் பகவன் புத்தர் தானகாதை முதலிய உபதேசங்களைச் செய்தார். அதனால் அவர்கள் மனம் மகிழ்ந்தார்கள். பிறகு நான்கு வாய்மைத் தத்துவங்களை அவர்களுக்கு உபதேசம் செய்தார். அதைக்கேட்ட அரசனும், மஹாலி என்னும் லிச்சாவி அரசனும் அங்கிருந்த மக்களும் சுரோத்தாபத்தி பலன் அடைந்தார்கள்.வட்டன், வச்சன் முதலான பிராமணர்களும் பௌத்தராகிச் சந்நியாசம் பெற்றார்கள். விம்பசார அரசன் மும்மணிகளைச் சரணம் அடைந்து உபாசகன் ஆனான். பிறகு, அடுத்த நாள் சீடர்களுடன் தானத்திற்காக வரும்படி பகவரை வணங்கி வேண்டிக் கொண்டு அரசன் அரண்மனைக்குத் திரும்பினான்.வெளுவன தானம்

மறுநாள் விம்பசார அரசன், பகவன் புத்தரை அரண்மனைக்கு எழுந்தருளும்படி செய்தி சொல்லி அனுப்பினான். பகவர் சீடர்களோடு புறப்பட்டு இராசகிருக நகரம் சென்றார். அதிகாலையிலிருந்து அவரைக் காண்பதற்காக வந்து  கூடுகிற ஜனக்கூட்டத்தைக் கடந்து வருவதற்கு அதிக நேரஞ்சென்றது. ஜனங்கள் புத்தரை வணங்கினார்கள்; அவருடைய குணங்களைப் பேசினார்கள். சிலர் அவரைவிட்டுப் பிரிய மனம்வராமல் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். சிலர் அவர்களை விலக்கி வழி விட்டார்கள். மக்கள் எல்லோரும் பகவன் புத்தரைக் கண்டு மனம் மகிழ்ந்தார்கள்.
ஒரு  தனபதியின் மகளான சித்திரை என்பவளும், அரசருடைய புரோகிதரின் மகளான சோமை என்பவளும், கிருகபதி ஒருவரின் மகளான சுக்கிலை என்பவளும், பிராமண கன்னிகையான  சுபை என்பவளும், மற்றும் சில மகளிரும், புத்தரை வணங்கி உபாசிகைகள் ஆனார்கள். பின்னர் இவர்களே  சந்நியாசம் பூன்டு பிக்குணிகளானார்கள்.

பகவன் புத்தர் அரண்மனைக்குச் சென்று  தமக்காக அமைத்திருந்த  ஆசனத்தில் பிக்கு சங்கத்தோடு இருந்தார். அரசர் அவர்களுக்கு அறுசுவை உணவை அன்போடு அளித்தார். பகவர், பிக்குகளுடன் உணவு அருந்திய பிறகு விம்பசார அரசன் ஒருபுறத்தில் உட்கார்ந்து, “சுவாமி! புத்த தர்ம சங்கம் என்னும் மும்மணியிலிருந்து நான் விலகி வாழ முடியாது. நான் அடிக்கடி  பகவரிடம் வந்து திருவாய்மொழி கேட்கவேண்டும். பனைவனம் வெகு தூரத்தில் இருக்கிறது. வெளுவனம் * இடைவழியில் இருக்கிறது. அதிக ஜனக்கூட்டம் இல்லாத அமைதியான இடம் அது. அந்த வனத்தைப் பகவர் ஏற்றுக்கொண்டு அங்கு எழுந்தருளியிருக்க வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டு, பொற்கிண்டியிலிருந்து நீரைத் தாரைவார்த்து வெளுவனத்தைப் பகவருக்குத் தானம் செய்தார். பகவன் புத்தர் அதனை ஏற்றுக்கொண்டு பிக்கு சங்கத்தாருடன் வெளுவனத்துக்குச் சென்றார் (வெளுவனத்திலே புத்தர் அடிக்கடி வந்து தங்கிப் பலருக்குத் தர்மோபதேசஞ் செய்திருக்கிறார்).

* வெளுவனம் என்றாலும் வேணுவனம் என்றாலும் ஒன்றே. மூங்கில்வனம் என்பது பொருள்.

சாரிபுத்த மொக்கல்லானர்

அக்காலத்திலே இராசகிருக நகரத்திலே இருநூற்றைம்பது பரிவிராசகர்களுக்குத் தலைவனான சஞ்சயன் என்னும் பரிவிராசகன் ஒரு கிராமத்திலே தங்கியிருந்தான். இராசகிருக நகரத்துக்கு அருகிலே உபதிஸ்ஸ கிராமம், கோலித கிராமம் என்னும் இரண்டு கிராமங்களுக்குத் தலைவர்களாக இரண்டு பிராமணர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்மகவு பிறந்தது. அக்குழந்தைகளுக்கு அக்கிராமத்தின் பெயரையே உபதிஸ்ஸன், கோலிதன் என்று சூட்டினார்கள். இக்குழந்தைகள் வளர்ந்து இளமையிலேயே சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து இல்லற வாழ்க்கையை வெறுத்துச் சஞ்சயப்பரிவிராசகனிடஞ் சென்று சீடர்களாகி அவரிடம் துறவு பெற்றார்கள்.

ஆனால், இவ்விருவரும் சஞ்சயருடைய போதனையில் திருப்தியடையாமல் தமக்குள் இவ்வாறு பேசிக்கொண்டார்கள்: “நாம் இருவரும் அமிர்த தருமத்தைத் தேடவேண்டும். அது யாருக்கு முதலில் கிடைக்கிறதோ அவர் மற்றவருக்குச் சொல்லவேண்டும்.
    ” இவ்வாறு தமக்குள் தீர்மானித்துக்கொண்டு அவர்கள் பரதகண்டம் முழுவதும் சுற்றித் திரிந்து மீண்டும் இராசகிருக நகரத்துக்கு வந்தார்கள். அவ்வமயம் பகவன் புத்தர் தமது சீடர்களைத் தர்மதூத வேலைக்காக வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பியிருந்தார். இவர்களில் அஸ்ஸஜி தேரர் இராசகிருக நகரம் வந்து மிகச் சாந்தியோடு பிக்ஷைக்காகப் போவதை உபதிஸ்ஸ பரிவிராசன் கண்டார். கண்டு, “இவர் கட்டாயம் அர்ஹந்தராக இருக்க வேண்டும். அல்லது அர்ஹந்தபதவிக்கு முயற்சி செய்தவராக இருக்கவேண்டும். எதற்கும் இவரை அணுகிக் கேட்போம்,” என்று தமக்குள் சிந்தித்தார்.
பிக்ஷைக்குப் போகும்போது பேசுவது சரியல்ல என்று நினைத்து அவர் பின்னே சென்றார். அஸ்ஸஜி தேரர் வீடுகளில் பிக்ஷை ஏற்று நகருக்கு வெளியேவந்து ஒரு இடத்தில் உட்கார நினைத்தார். அப்போது உபதிஸ்ஸர் தம்மிடம் இருந்த ஆசனத்தை விரித்து அதில் உட்காரச் சொன்னார். தேரர் அதில் அமர்ந்து உணவை உண்டார். உண்ட பிறகு உபதிஸ்ஸர் தமது குண்டிகையிலிருந்த நீரைக் கொடுத்துச் சுத்தம் செய்வித்தார்; பிறகு அவரோடு பேசத் தொடங்கினார்.
“நண்பரே! தங்களுடைய கண், காது முதலிய புலன்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. உடம்பின் தோற்றமும் நிறமும் நன்றாக உள்ளன. தாங்கள் யாரிடத்தில் சந்நியாசம் பெற்றீர்கள்?” என்று கேட்டார். அஸ்ஸஜி தேரர், ‘இந்தப் பரிவிராசிகர்கள் பௌத்த மதத்திற்கு விரோதிகள். ஆகையால், இவர்களுக்குப் பௌத்த மதத்தின் சிறந்த கொள்கையைக் காட்ட வேண்டும்’ என்று தமக்குள் நினைத்துத் தான் புதிதாகப் பௌத்த மதத்தில் சேர்ந்தவர் என்பதைக் கூறினார்.
“நான் திஸ்ஸன் என்னும் பெயருள்ளவன். சுருக்கமாகவோ, விரிவாகவோ தயவு செய்து உமது போதனையை எனக்குக் கூறுங்கள். சுருக்கமாகக் கூறினாலும் அதைப் பத்துப் பங்கு நூறுபங்காகத் தெரிந்துகொள்வது என்னுடைய கடமையாகும்” என்று உபதிஸ்ஸர் கூறினார்.
அஸ்ஸஜி தேரர், புத்தருடை உபதேசங்களையெல்லாம் அடக்கிச் சுருக்கிக் கூறினார். அதைக்  கேட்ட உபதிஸ்ஸர், “சுவாமி! உமது சாஸ்தா எங்கேயிருக்கிறார்?” என்று கேட்க, “சகோதரரே! அவர் வெளுவனத்தில் எழுந்தருளியிருக்கிறார்,” என்று தேரர் கூறினார்.
“தாங்கள் முன்னேபோங்கள், நான் என்னுடைய நண்பரை அழைத்துக் கொண்டு அவ்விடம் வருகிறேன்,” என்று அவரை வணங்கி அனுப்பி விட்டு உபதிஸ்ஸர், பரிவிராசக ஆரமத்திற்குச் சென்றார். சென்று தாம் புதிய குருவைக் கண்ட செய்தியைக் கோலிதருக்குக் கூறி, அவரை வெளுவன ஆராமத்திற்கு அழைத்தார். அவரும் புறப்பட்டார்.  இருநூற்றைம்பது பரிவிராசகருக்கும் இதைக் கூறுவோம். அவர்கள் வருவதாக இருந்தால் வரட்டும் என்று கூறி, அவர்களிடம் சென்று தாங்கள் புத்தரிடம் போவதைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட அவர்கள், தாங்களும் வருவதாகக் கூறினார்கள். பிறகு கோலிதரும், உபதிஸ்ஸரும், பரிவிராசகருக்குத் தலைமைக் குருவாகிய சஞ்சயரிடம் இச்செய்தியைக் கூறினார்கள். அதற்கு அவர், “நண்பர்களே! அங்கு போவதினாலே பிரயோஜன மில்லை, நாம் மூவரும் சேர்ந்து பரிவிராசக தர்மத்தை நடத்துவோம்,” என்று கூறித் தடுத்தார். இவர்கள் மறுத்தார்கள்.
இரண்டாம் முறையும், மூன்றாம் முறையும் இவர்களைச் சஞ்சயர் புத்தரிடம் போகாதபடி தடுத்தார். கோலிதரும் உபதிஸ்ஸரும் மறுத்து இருநூற்றைம்பது பரிவிராசக மாணவர்களுடன் வெளுவனத்திற்குச் சென்றார்கள்.
இவர்கள் கூட்டமாக வருவதைத் தூரத்திலிருந்து பார்த்த பகவன் புத்தர், “அதோ வருகிற கோலிதனும் உபதிஸ்ஸனும் என்னுடைய முதன்மையான சீடர்கள்,” என்று கூறினார்.
கோலிதர், மொக்கலி என்ற பார்ப்பனத்தியின் புத்திரன் ஆகையினாலே அவருக்கு மொக்கல்லானர் என்றும், உபதிஸ்ஸர், ரூபசாரி என்னும் பார்ப்பனியின் புத்திரன் ஆகையினாலே சாரீபுத்திரர் என்றும் பெயர் வழங்கப்பட்டனர்.

மொக்கல்லானர், சாரீ புத்திரர் என்னும் இருவரும் பகவன் புத்தரிடம் சென்று வணங்கி, அவருடைய உபதேசங்களைக் கேட்டு மனச்சாந்தியடைந்து, சந்நியாசமும் உபசம்பதாவும் கேட்டார்கள். அவ்வாறே பகவர் அவர்களுக்கு அவற்றை அளித்தார். மொக்கல்லானர் ஒரு வாரத்தில் அரஹந்தபதவியையடைந்தார். இவ்விருவரையும் பகவன் புத்தர் தமது தலைமைச் சீடராக ஏற்படுத்தினார். இது மற்றச் சீடர்களுக்குப் பொறாமையை உண்டாக்கிற்று. இதையறிந்த பகவன் புத்தர் அவர்களுக்குக் காரணத்தைக் காட்டி விளக்கி அவர்களின் பொறாமையை நீக்கினார்.

சுத்தோதனர் அனுப்பிய தூதுவர்

சுத்தோதன அரசர், தன் மகன் புத்த பதவியையடைந்து இராசகிருக நகரத்தில் தங்கித் தர்மோபதேசம் செய்கிறதைக் கேள்விப்பட்டு, அவரைக் கபிலவத்து நகரத்துக்கு அழைத்துவரத் தமது அமைச்சர் ஒருவரை ஆயிரம் பரிவாரங்களுடன் அனுப்பினார். அவரும் பரிவாரங்களுடன் வந்து, வெளுவனத்தில் தங்கித் தர்மோபதேசம் செய்துகொண்டிருந்த பகவன் புத்தருடைய உபதேசத்தைக் கேட்டு அரஹந்த பதம் அடைந்தார். அவருடன் வந்தவர்களும் அரஹந்தபதம் அடைந்தார்கள். பிறகு, இவர்கள் எல்லோரும் சந்நியாசம் பெற்றுத் துறவு பூண்டார்கள். அரஹந்தரான பிறகு இவரை அழைத்துப்போகவந்த காரியத்தை மறந்துவிட்டார்கள்.

சுத்தோதன அரசர் மீண்டும் ஒரு அமைச்சரை ஆயிரம் பரிவாரங்களுடன் அனுப்பினார். அவரும் முன்னவரைப் போலவே உபதேசம் கேட்டுச் சந்நியாசம் பெற்று வந்த காரியத்தை மறந்துவிட்டார்கள். இவ்வாறு ஒன்பதுபேரை அனுப்ப ஒன்பதின்மரும் அர்கந்த பலன் பெற்றுத் துறவியாய்விட்டார்கள்.
பிறகு சுத்தோதன அரசர் யோசித்துக் கடைசியாக உதாயி என்பவரை அனுப்பத் தீர்மானித்தார். இந்த  உதாயி என்பவர் சித்தார்த்த குமாரன் பிறந்த அதே நாளில் பிறந்தவர்.  சித்தார்த்த குமாரனின் இளமை வயதில் அவருடன் நண்பராக இருந்து விளையாடியவர்.
“அப்பா உதாயி! என் குமாரனை அழைத்துவரும்படி என் அமைச்சர் பத்துப் பேரையும் பத்தாயிரம் பரிவாரங்களுடன் அனுப்பினேன். போனவர்கள் திரும்பி வரவில்லை. ஒரு செய்தியும் தெரியவில்லை. எனக்கோ வயதாய் விட்டது. எப்போது மரணம் நேரிடுமோ தெரியாது. ஆகையினாலே நீ போய் என் புத்திரனை அழைத்துக்கொண்டு வா,” என்று சுத்தோதன அரசர் கூறினார்.
“அரசே! நான் சந்நியாசம் பெற எனக்கு உத்தரவு கொடுப்பீர்களானால், நான் போய் அவரை அழைத்து வருகிறேன்,” என்றான் உதாயி.
“உன் விருப்பம் போலச் செய்யலாம். ஆனால், என் மகனை என்னிடம் அழைத்துக் கொண்டு வரவேண்டும்,” என்றார் அரசர்.
உதாயி பரிவாரங்களுடன் புறப்பட்டு வெளுவனம் சென்று பகவன் புத்தரிடம் உபதேசம் கேட்டு அர்ஹந்த பலம் அடைந்து ஏக பிக்குவிதமாகச் சந்நியாசம் எடுத்து உபசம்பதாவையும் பெற்றார்.
எட்டு நாட்கள் சென்ற பிறகு உதாயிதேரர், புத்தரைக் கபிலவத்து நகரம் அழைத்துப்போக எண்ணினார். அப்போது வேனிற்காலம். உதாயிதேரர், பகவன் புத்தரிடம் சென்று வணங்கி இவ்வாறு கூறினார்.
“பகவரே! இப்போது மரங்கள் அழகான பூக்களைப் பூக்கின்றன. பூக்கள் அழகாக இருக்கின்றன. மலர்ந்த பூக்களிலிருந்து எல்லாப் பக்கங்களிலும் நறுமணம் வீசுகிறது. பழுத்த இலைகள் விழுந்து புதிய தளிர்கள் துளிர்க்கின்றன. ரோகிணி நதியைக் கடந்து கபிலவத்துக்குப் புறப்பட்டுப் போகும் காலம் வந்தது. பகவரே! புறப்படுங்கள். ஜனங்களின் நன்மைக்காக அங்கே போகப் புறப்படுங்கள்.”
    “உழவர்கள் நிலத்தை உழுது பயிர் செய்கிறார்கள். வியாபாரிகள், ஊதியத்தைக் கருதிக் கடலைக் கடந்து சென்று செல்வம் திரட்டுகிறார்கள். குடியானவர் மீண்டும் மீண்டும் விதைத்துப் பயிரிடுகிறார்கள். மழையும் அடிக்கடி பெய்துகொண்டேயிருக்கிறது. மீண்டும் மீண்டும் தானியங்கள் விளைந்து கொண்டேயிருக்கின்றன. பிச்சைக்காரர் மீண்டும் மீண்டும் பிச்சை கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். தனவந்தர் மீண்டும் மீண்டும் தானம் கொடுக்கிறார்கள். ஊக்கமும் அறிவும் முயற்சியும் உள்ளவர் எந்தக் குடும்பத்தில் பிறக்கிறாரோ அந்தக் குடும்பத்தை ஏழு தலைமுறைக்கு அவர் புகழையுண்டாக்குகிறார்.”

“பகவரே!  தாங்கள் எல்லோரிலும் பெரியவர். இம்மையிலும் மறுமையிலும் நன்மை தர வல்லவர். மக்களின் பாவச் செயல்களைத் தடுத்து நன்மைகளை மேற்கொள்ளச்செய்யும் ஆற்றல் படைத்தவர். தங்கள் தந்தையாகிய சுத்தோதன அரசரும் சாக்கிய ஜனங்களும் தங்களைக் காணும்படி எழுந்தருள வேண்டும்,” என்று பலவாறு வேண்டினார்.கபிலபுரம் செல்லல்

உதாயி தேரரின் வேண்டுகோளுக்கு இணங்கி பகவன் புத்தர் கபிலவத்து நகரம் போகப் புறப்பட்டார். அர்ஹந்தர்களுடன் புறப்பட்டு, இடைவழியிலே கூடுகிற மக்களுக்குத் தர்மோபதேசம் செய்துகொண்டே ஒரு நாளைக்கு ஒரு யோசனை தூரம் நடந்து சென்றார். இரண்டு திங்கள் நடந்து வைசாக பௌர்ணமி நாளிலே கபிலவத்து நகரத்தையடைந்தார். உதாயிதேரர் முன்னதாகச் சென்று இவர் வருகையைச் சுத்தோதன அரசருக்கும் மற்றவர்களுக்கும் தெரிவித்தார். அவர்கள் இவர் வரவை எதிர்பார்த்து, இவர் தங்குவதற்காக நிக்ரோத ஆராமம் என்னும் தோட்டத்தை அழகுபடுத்தி வைத்தார்கள்.

பகவன் புத்தர், நகரத்திற்கு வந்தபோது மலர் முதலியவற்றை எடுத்துக் கொண்டு நகர மக்கள் அவரை எதிர்கொண்டு அழைத்தார்கள். அவர்கள் சிறுமிகளை முதலில் அனுப்பினார்கள். அவர்களுக்குப் பிறகு அரசகுமாரர்கள் எதிர்கொண்டு அழைத்தார்கள். பகவன் புத்தர் கணக்கற்ற அர்ஹந்தர்களோடு நிக்ரோத ஆராமத்தில் சென்று தங்கினார். ஆனால், இயற்கையிலே இறுமாப்புள்ள அரசகுலத்தில் பிறந்த சாக்கியர்கள், ‘சித்தார்த்த குமரன் வயதிலே நமக்கு இளையவன்; நமக்கு மருகனாகவுள்ளவன்; பேரனாகவுள்ளவன் என்று நினைத்துத் தாங்கள் வணக்கம் செய்யாமல் தமது குமாரர்களையும் குமாரத்திகளையும் வணக்கம் செய்வித்தார்கள்.

அவர்களுடைய எண்ணத்தை அறிந்த பகவன் புத்தர், தமது இருத்தியினாலே மண்ணிலிருந்து கிளம்பி ஆகாயத்திலே நின்றார்.  இதனைக் கண்ட சுத்தோதன அரசர், “உத்தமரே! நீர் பிறந்த நாளிலே அசித முனிவரை வணங்க உம்மை அழைத்துவந்தபோது உமது பாதங்கள் முனிவர் சிரசில் பட்டதைக் கண்டு நான் உம்மை வணங்கினேன். அது என்னுடைய முதலாவது வணக்கம். வப்பமங்கல விழாவிலே நாவல் மரத்தின் கீழே தாங்கள் யோகத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்து வணங்கினேன். அது என்னுடைய இரண்டாவது வணக்கம். இப்போது உமது இருத்தியைக் கண்டு உம்மை வணங்குகிறேன்.  இது என்னுடைய மூன்றாவது வணக்கம்,” என்று கூறிக் கைகூப்பி புத்தரை வணங்கினார்.

இதைக் கண்ட மற்ற சாக்கியர்களும் இவரைக் கைகூப்பி வணங்கினார்கள்.பாவா நகரத்தில் மள்ளர் குலத்தில் பிறந்த நான்கு அரசகுமாரர்கள் அவ்வமயம் ஏதோ காரணமாக கபிலவத்து நகரத்துக்கு வந்திருந்தார்கள். அவர்கள் பெயர் கோகிகன், சுபாகு, வல்லியன், உத்தியன் என்பன. அவர்கள் புத்தர் பெருமான் ஆகாயத்தில் நின்று காட்டிய இருத்தியைக் கண்டு வியப்படைந்தார்கள். பிறகு, அவர்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து சந்நியாசம் பெற்றார்கள். கொஞ்ச நாளைக்குப் பிறகு அவர்கள் அர்ஹந்த நிலையை யடைந்தார்கள்.

பிறகு, பகவன் புத்தர் ஆகாயத்திலிருந்து இறங்கிக் கீழே வந்து தமது ஆசனத்தில் அமர்ந்து அங்கு வந்திருந்த மக்கள் கூட்டத்திற்கு வெஸ்ஸந்தர ஜாதகத்தைக் கூறினார். எல்லோரும் கேட்டு இன்பம் அடைந்தார்கள்.   பின்னர் எல்லோரும் பகவன் புத்தரை வணங்கித் தத்தம் இல்லங்களுக்குச் சென்றார்கள். ஒருவரும் அடுத்த நாள் அவரை உணவுக்கு அழைக்கவில்லை. ஏனென்றால், பகவன் புத்தர் செய்தருளிய உபதேசத்தைக் கேட்டதனால் அவர்கள் மனம் அதிலேயே அழுந்திக் கிடந்தது. அதனால், அவர்களுக்கு அவரை உணவுக்கு அழைக்க நினைவு இல்லாமற்போயிற்று. பகவன் புத்தர் அன்றிரவு சீடர்களுடன் நிக்ரோத ஆராமத்திலேயே தங்கினார்.
அடுத்த நாள் பிக்ஷாநேரம் வந்த போது பகவன் புத்தர் தமது சீடர்களுடன் புறப்பட்டுக் கபிலவத்து நகரத்தில் வீடு வீடாகப் பிக்ஷைக்குச் சென்றார். நகர மக்கள் தங்கள் மாளிகைகளின் சிங்கபஞ்சரம் என்னும் சாளரங்களைத் திறந்து, “நமது அரச குமாரராகிய சித்தார்த்த குமரன் பிக்ஷைக்காகப் போகிறார்,” என்று சொல்லிக்கொண்டு ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். யசோதரை தேவியார், பகவன் புத்தர் பிக்ஷை க்குப் போகிறதைக் கேள்விப்பட்டுச் சிங்கபஞ்சரத்தைத் திறந்து பார்த்தார். அப்போது அவர் தமக்குள் இவ்வாறு எண்ணினார். “என்னுடைய கணவர், முன்பு இந்நகரத்தில் உலாவச் சென்றபோது பொற்றேரில் அமர்ந்து அறுபத்து நான்கு விதமான ஆபரணங்களை அணிந்து மாணிக்கங்களினாலே ஒளிவிடுகிற கிரீடத்தை அணிந்து, ஒருலக்ஷம் பொன் விலையுள்ள முத்துமாலைகளை மார்பிலே தரித்து இந்திரன் போலச்சென்றார்.  இப்போது தலைமுடியையும் தாடி மீசைகளையும் மழித்துப் போட்டு அரையிலும் தோளிலும் காவியாடை அணிந்து ஒரு பாத்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கால்நடையாகப் பிக்ஷைக்கு வருகிறாராம். இந்தக் கோலம் அவருக்கு உசிதமானதா என்பதைப் பார்ப்போம்,” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அப்போது பகவன் புத்தர்  அவ்வழியே வர அவருடைய திருமேனியிலிருந்து ஆறு நிறமுள்ள புத்த ஒளி வீசியதைக் கண்டு யசோதரைத் தேவியார் வியப்படைந்தார். அப்போது பகவன் புத்தருடைய திருமேனியின் அழகைப் பற்றிக் கேசாதிபாதமாக (தலைமுதல் பாதம் வரையில்) வர்ணனை செய்து எட்டுப் பாடல்களைத் தம்மையறியாமலே பாடினார். பிறகு, ஓடோடிச் சென்று, தமது மாமனாரான சுத்தோதன அரசரிடம் போய், “தங்களுடைய குமாரர் தெருவழியே பிக்ஷை எடுத்துக்கோண்டே போகிறார்,” என்று தெரிவித்தார்.
இதைக் கேட்ட அரசர் திடுக்கிட்டெழுந்து விரைந்து சென்று பகவன் புத்தர்  முன்னிலையில் நின்று, “சுவாமி! நமக்கு ஏன் வெட்கத்தை உண்டாக்குகிறீர். எதற்காக பிக்ஷை    ஏற்கிறீர். பிக்ஷுக்களுக்கு அரண்மனையில் ஆகாரம் கொடுக்க முடியாது என்று ஜனங்களுக்குத் தெரிவிக்கிறீர்களா?” என்று கேட்டார்.
அப்போது     பகவன் புத்தர், “மகாராசரே! இது நமது பரம்பரை வழக்கம்,” என்று விடை கூறினார்.
இதைக் கேட்டு வியப்படைந்த சுத்தோதன அரசர், “சுவாமி! நமது பரம்பரை என்றால் மகாசம்பிரத க்ஷத்திரிய ராஜவம்சம். இதில் பிக்ஷைக்குப் போன அரசர் ஒருவரும் இருந்ததில்லை,” என்று கூறினார்.
“மகாராசரே! தாங்கள் கூறுவது தங்களுடைய பரம்பரை. நமது பரம்பரை என்றால், தீபாங்கரர், கொண்டஞ்சர் முதலான புத்தர்களுடைய பரம்பரை. அந்த புத்தர்களும் அவர்களுக்கு முன்பிருந்த ஆயிரக்கணக்கான புத்தர்களும் பிக்ஷையாசித்து வாழ்ந்தார்கள்.” என்று அருளிச் செய்தார்.

பிறகு, அரசர், பகவன் புத்தர் கையிலிருந்து பிக்ஷா பாத்திரத்தைத் தமது கையில் வாங்கிக் கொண்டு புத்தரையும்  பிக்கு சங்கத்தாரையும் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். சென்று அரண்மனையிலே எல்லோருக்கும் உணவு கொடுத்து உண்பித்தார். உணவு சாப்பிட்டான பிறகு பகவர், அவருக்கு அனுமோதனா உபதேசம் செய்தார். அதனைக்கேட்ட அரசர் சக்ருதாகாமி நிலையை  அடைந்தார். அவருடன் இருந்து உபதேசம் கேட்ட பிரஜா கௌதமியும் ஸ்ரோதாபத்தி நிலையைப் பெற்றார்.

யசோதரையார்

யசோதரைத் தேவியார் பகவன் புத்தரைப் பார்க்க வரவில்லை.  பகவன் புத்தர், தமது  பிக்ஷைப் பாத்திரத்தைச் சுத்தோதன அரசரிடம் கொடுத்து  யசோதரையாரிடம் கொண்டுபோகச் சொல்லித் தாமும் அவரைப் பின்தொடந்தார். பகவன் புத்தர் தமது இருப்பிடத்திற்கு வருவதையறிந்த யசோதரையார் எதிர் சென்று, அவர் பாதத்தில் வீழ்ந்து வணங்கி அவருடைய இருபாதங்களையும் பிடித்துத்கொண்டு அழுதார். புத்தர், யசோதரையாரைத் தமது மகள் போலக் கருதி வாளா இருந்தார்.  பிறகு யசோதரையாரின் மனம் தன் வயப்பட்டபோது சுத்தோதன அரசரையும் பகவன் புத்தரையும் கண்டு வெட்கங்கொண்டு எழுந்து மௌனமாக இருந்தார்.

அப்போது சுத்தோதன அரசர், பகவன் புத்தரிடம் இவ்வாறு கூறினார்: “சுவாமி! தாங்கள் ஆடையணிகளை நீக்கிக் காவி உடை தரித்ததைக் கேட்டு என் மருமகளும் ஆடை அணிகளைக் கழற்றிவிட்டுக் காஷாய ஆடை அணிந்தார். ஒரு நாளைக்கு ஒரே வேளை உணவு உண்டார். தாங்கள் விலை உயர்ந்த ஆசனங்களை நீக்கிச் சாதாரண ஆசனத்தில் அமர்வதைக் கேட்டு இவரும் சாதாரண ஆசனத்தில் அமர்வதை வழக்கமாகக் கொண்டார். அரச போகங்களை எல்லாம் நீக்கி ஒரு துறவியைப் போலவே வசித்து வருகிறார்.” இவ்வாறு யசோதரை தேவியாரைப் பற்றிச் சுத்தோதன அரசர் கூறியதைக் கேட்ட பகவன் புத்தர் அவர்களுக்குச் சந்திர கின்னர ஜாதகக் கதையை உபதேசம்செய்தார்.

யசோதரையார் தாமும் பிக்குணியாக விரும்பினார். ஆனால், பகவன் புத்தர் அதற்கு இணங்காமல் அவருக்குத் துறவு கொடுக்க மறுத்தார்.

இராகுலன்

கபிலவத்து நகரத்திற்குப் பகவன் புத்தர் வந்த ஏழாம் நாள், பிக்கு சங்கத்தாருடன் அரண்மனைக்குப்போய்ப் பகவன் புத்தர் உணவு கொண்டார். அப்போது யசோதரைத் தேவியார், தமது ஏழுவயதுள்ள இராகுல குமாரனை நன்றாக அலங்காரம் செய்து, “மகனே! அதோ பிக்குகள் சூழப்போகிற, பொன் நிறமாகப் பிரகாசிக்கிறவர் உன்னுடைய தகப்பனார். உனக்கு உரியதை அவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்,” என்று கூறி அனுப்பினார். இராகுல குமாரன் புத்தரிடம் போய், மிக அன்போடு, “ஓ! சிரமணரே! தங்களுடைய நிழல் எனக்கு மிகவும் சுகமானது,” என்பது முதலாகச் சில வார்த்தைகள் கூறினார். பகவன் புத்தர் பிக்கு சங்கத்துடன் உணவு கொண்ட பிறகு அனுமோதனா தர்மோபதேசம் செய்து ஆசனத்திலிருந்து எழுந்து நடந்தார். இராகுல குமாரனும், “சிரமணரே! எனக்குக் கிடைக்க வேண்டியதைக் கொடுங்கள்,” என்று பின்தொடர்ந்து சென்றான்; புத்தரும், குமாரனை வரவேண்டாமென்று தடுக்கவில்லை. பார்த்துக்கொண்டிருந்தவர்களும் தடுக்கவில்லை. குமாரன் பகவரைப் பின்தொடர்ந்து விகாரைக்குச் சென்றார்.

பகவன் புத்தர், எனக்குப் போதி மண்டலத்திலே கிடைத்த ஏழுவிதமான உத்தம தனத்தை இவனுக்குக் கொடுப்பேன் என்று தமக்குள் நினைத்து, சாரிபுத்திர தேரரை அழைத்து, இராகுல குமாரனுக்குச் சந்நியாசம் தரும்படி சொன்னார். சாரிபுத்திர தேரர், “சுவாமி, எப்படிச் சந்நியாசம் கொடுப்பேன்?” என்று கேட்க, பகவர், திரிசரணத்தை எடுக்கச் செய்து ஸாமநேர சந்நியாசத்தைக் கொடுக்கச் சொன்னார். அவ்வாறே இராகுல குமாரனுக்குச் சந்நியாசம் கொடுக்கப்பட்டது.

இராகுல குமாரனுடைய சந்நியாசத்தைச் சுத்தோதன அரசர் அறிந்து மிகவும் விசனமடைந்தார். அவர் பகவன் புத்தரிடம் வந்து, வணக்கம் செய்து ஒரு பக்கத்திலே இருந்து, பெற்றோர்களுடைய அனுமதியில்லாமல் சிறுவர்களுக்குச் சந்நியாசம் கொடுக்கக் கூடாது என்னும் வரந்தரும்படி வேண்டிக்கொண்டார். பகவன் புத்தர் அதற்கு இணங்கிப் “பிக்ஷுக்களே! இனிப் பெற்றோருடைய அனுமதி கிடைக்காத சிறுவர்களுக்குச் சந்நியாசம் கொடுக்காதீர்கள்,” என்று கூறிச் சட்டம் செய்தார்.

அடுத்தநாள், சுத்தோதன அரசருக்கும் கௌதமி தேவிக்கும் பிறந்த நந்தகுமாரனுக்கு இளவரசப் பட்டமும், திருமணமும் நடக்க ஏற்பாடாகியிருந்தது.  பகவன் புத்தர், நந்தகுமாரனுடைய மாளிகைக்குச் சென்று, உணவு அருந்தி பிக்ஷாபாத்திரத்தை நந்தகுமாரன் கையில் கொடுத்து  முன்னே நடந்தார். நந்தகுமாரன் அவரைப் பின்தொடர்ந்து சென்றான்.  அப்போது, மணப் பெண்ணாகிய ஜனபத கல்யாணி என்பவள், நந்த குமாரனைக் கண்ணால் பார்த்து, “ஓ கணவரே! உடனே விரைவாகத் திரும்பிவாருங்கள்,” என்று கூறுவது போல நோக்கினாள். குமரனும் அதனை அறிந்து, ‘பாத்திரத்தை எப்போது வாங்கிக்கொள்வார்’ என்று நினைத்தவண்ணம் பின் தொடர்ந்தான்.
பகவர் விகாரைக்குச் சென்றார்: குமரனும் மரியாதையோடு பின் தொடர்ந்தான். அப்போது பகவர் நந்தனைப் பார்த்து, “நந்தா! நீ சந்நியாசம் பெறுவதற்கு விரும்புகிறாயா?” என்று கேட்டார். அவனும் “ஆம்,” என்று விடை கொடுத்தான்.  பகவன் புத்தர் நந்த குமாரனுக்குச் சந்நியாசம் கொடுத்தார்.

அரச குடும்பத்திலே பிறந்த அநேக அரசகுமாரர் பகவன் புத்தரிடம் வந்து தர்மங்கேட்டுத் துறவு பூண்டனர். பிறகு பத்தியர், அநுருத்தர், ஆனந்தர், பகு,  கிம்பிலர், தேவதத்தர் என்னும் ஆறு குமாரர்களும் ஒரு வாரம் வரையில் தேவர்கள் போல அரச போகத்தை அனுபவித்துப் பிறகு, எட்டாம்நாள் உபாலி என்னும் அம்பட்டனை அழைத்துக் கொண்டு மள்ளர் நாட்டில் அனுபியவனம் என்னும் தோட்டத்தில் தங்கியிருந்த பகவன் புத்தரிடம் சென்றார்கள். சென்று துறவு கொள்வதற்குத் தங்களுடைய ஆடை அணிகளை யெல்லாம் களைந்து உபாலியிடம் கொடுத்தார்கள். உபாலி முதலில் அவைகளை ஏற்றுக் கொண்டான். பிறகு யோசித்துத் தானும் துறவு கொள்வதாகக் கூறினான். பகவன் புத்தரிடம் வந்தவுடன், அவர்கள் வணங்கித் தங்களுக்குத் துறவு கொடுக்கும்படி கேட்டார்கள், அன்றியும் முதலில் உபாலிக்குத் துறவு கொடுக்கும்படிச் சொன்னார்கள். அவ்வாறே இவர்கள் எல்லோருக்கும் சந்நியாசம் அளிக்கப்பட்டது.ஜேதவன தானம்

பகவன் புத்தர் இராசகிருகம் அடைந்து சீதவனம் என்னும் இடத்தில் தங்கியிருந்தபோது, சிராவத்தி நகரத்தில் இருந்து வந்திருந்த சுதத்தன் என்னும் செல்வப் பிரபு, இராசகிருகத்திற்கு வந்திருந்தான். இவனுக்கு அனாதபிண்டகன் என்னும் பெயரும் உண்டு. இப்பிரபு உலகத்திலே புத்தர் தோன்றியுள்ளார் என்பதைக் கேள்விப்பட்டு, அடுத்தநாள் சீதவனத்துக்கு வந்து பகவரைக் கண்டு வணங்கி உபதேசம் கேட்டான். அடுத்த நாள் புத்த சங்கத்தாருக்குப் புத்தர் தலைமையில் பெருஞ் செல்வத்தைத் தானம் செய்தான். பிறகு சிராவஸ்வதி நகரத்திற்கு எழுந்தருள வேண்டுமென்று பகவரை வணங்கிக் கேட்டுக் கொண்டான்.

புத்தரை வரவேற்பதற்காக அனாத பிண்டகன் முன்னதாக சிராவத்தி நகரம் சென்றான். சென்று, ஜேதன் என்னும் அரசனுக்கு உரியதான   ஜேதவனம் என்னும் தோட்டத்தைப் பதினெட்டுகோடி பொன் விலை கொடுத்து வாங்கி, அதில் விகாரையையும், அதன் நடுவில் பகவர் தங்குவதற்காகக் கந்தகுடியையும் தேரர்கள் தங்குவதற்குரிய இடங்களையும் அமைத்தான். பகவன் புத்தர் அங்கு எழுந்தருளியபோது அவரைச் சிறப்பாக வரவேற்று அவருக்கு ஜேதவனத்தையும் விகாரையையும் நீர் பெய்து தாரைவார்த்துக் கொடுத்தான். பகவன் புத்தர், அவைகளைப் பிக்குச் சங்கத்தின் சார்பாக ஏற்றுக்கொண்டார்.  பகவன் புத்தர், அங்கு மக்களுக்கு அறநெறிகளைப் போதித்துக் கொண்டிருந்தார்.ஜீவகன்

அக்காலத்தில் ஜீவகன் என்னும் பெயருள்ள கை தேர்ந்த வைத்தியன் இருந்தான். இவன் உச்சயின் நாட்டின் அரசன் பிரத்யோதன் என்பவனுக்கும், மகத நாட்டு அரசன் விம்பசாரனுக்கும் வைத்தியனாக இருந்தான். பகவன் புத்தருக்கு வயிற்றுவலி ஏற்பட்டபோது இந்த ஜீவகன் மருந்து கொடுத்து நோயைப் போக்கினான். அன்றியும் பிரத்யோத அரசன் தனக்கு வெகுமதியாகக் கொடுத்த விலையுயர்ந்த ஆடைகளைப் பகவன் புத்தருக்கு அன்புடன் வழங்கினான்.

கொள்ளை நோய்

வெளுவனத்தில் தங்கியிருந்தபோது, வைசாலி நகரத்தார் அனுப்பிய தூதுவர்கள் வந்து, அந்த நகரத்தில் உள்ள கொள்ளைநோய்ப் பீடையை ஒழிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். ஆறுவகையான சமயத்துத் தலைவர்கள் வந்து அந்நோயைப் போக்க முயன்றனர். ஆனால், அந்நோய் நீங்கவில்லை. அவர்கள் வேண்டு கோளுக்கு இணங்கிப் பகவன் புத்தர் வைசாலிக்குச் சென்றார். சென்றவுடனே கொள்ளை நோய் நீங்கிற்று. நோயாளிகள் நலன் அடைந்தார்கள். பிறகு பகவன் புத்தர் அங்கு அரதன சூத்திரத்தை ஓதி உபதேசம் செய்தார். பெருந்தொகையானவர் பௌத்தரானார்கள். பிறகு பகவன் வெளுவனத்திற்குத் திரும்பி வந்தார்.

போரை நிறுத்தியது

அக்காலத்தில் சாக்கியருக்கும், கோலியருக்கும் பகை ஏற்பட்டுப் போர் செய்யத் தொடங்கினார்கள். நாட்டில் மழை பெய்யாமல் வற்கடம் ஏற்பட்டது. இரண்டு நாட்டாருக்கும் இடையே பாய்ந்து வயல்களுக்கு நீர்கொடுத்த உரோகிணி ஆற்றில் நீர் குறைந்தது. நிலங்களுக்கு நீரைப் பாய்ச்சுவதில் ஏற்பட்டதுதான் இந்தப் பகையும் போரும். இரு நாட்டாரும் போருக்கு ஆயத்தமாக நின்றபோது, பகவன் புத்தர் தமது ஞானக் கண்ணினால் இந் நிகழ்ச்சியையறிந்து போர்களத்தின் இடையே இரு தரத்தாருக்கு நடுவில் ஆகாயத்திலே நின்று, அறவுரை நிகழ்த்தினார். அதனைக் கேட்ட இருதரத்தாரும் போரை நிறுத்தினார்கள். அன்றியும் உபதேசங்கேட்டுப் பௌத்தரானார்கள்.

சுத்தோதனர் மோக்ஷம்

சில காலஞ் சென்ற பிறகு சுத்தோதன அரசர் நோய் வாய்ப்பட்ட செய்தி அறிந்த பகவன் புத்தர் சில பிக்குகளுடன் புறப்பட்டுத் தமது இருத்தியினாலே ஆகாயத்தில் பறந்து சென்று நோயாய்க் கிடந்த அரசருக்கு நிலையாமை என்பது பற்றி அறவுரை வழங்கினார். அதனைக் கேட்ட அரசர் அர்ஹந்த நிலையடைந்து புத்தரைத் தொழுது நிர்வாண மோக்ஷம்  அடைந்தார்.

சுத்தோதன அரசர் இறந்தபிறகு, பகவன் புத்தரின் இளையதாயாரான பிரஜா கௌதமி தேவியார், துறவுகொள்ள விரும்பினார். அவர் ஆலவனத்தில் தங்கியிருந்த பகவரிடம் வந்து தமக்கு சந்நியாசம் கொடுத்துப் பிக்குணியாக்கும்படி கேட்டுக்கொண்டார். மகளிரைப் பௌத்தப் பிக்ஷுசங்கத்தில் சேர்க்க விருப்பம் இல்லாதபடியால் பகவர், அவருக்கு சந்நியாசம் கொடுக்க மறுத்து வைசாலி நகரத்திற்குப் போய்விட்டார்.

பிக்ஷுணிச் சங்கம்

ஆனால், பிரஜா கௌதமி தேவியாரும் மற்றும் சில ஸ்திரீகளும் தலைமயிரைச் சிரைத்துக் கொண்டு மஞ்சள் ஆடை அணிந்து, கால் நடையாக வைசாலி நகரத்திற்குப் பகவரை நாடிச் சென்றார்கள். வழி நடந்ததால் கால்கள் வீங்கி, புழுதி படிந்த ஆடையுடன் அவர்கள் அழுது கொண்டே  பகவன் புத்தர் தங்கியிருந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்களைப் பகவரின் அணுக்கத் தொண்டரான ஆனந்த மகாதேரர் கண்டு, அவர்களிடம் சென்று அவர்கள் வந்த காரணத்தையறிந்து, பகவன் புத்தரிடம் சென்று செய்தியைக் கூறி, அவர்களுக்காகப் பரிந்து பேசினார்.

பகவர், தமது பௌத்தச் சங்கத்தில் மகளிரைச் சேர்க்க விரும்பவில்லை. ஆனால், ஆனந்த மகாதேரர், பிரஜா கௌதமியார் புத்தருடைய குழந்தைப் பருவத்தில்  அவரைப் போற்றி வளர்த்ததைச் சுட்டிக்காட்டி, அவரைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டினார். அதன்மேல் பகவர் பிக்குணிகளுக்கென்று எட்டு விதமான கடமைகளை வகுத்து அக்கடமைகளை ஏற்றுக் கொண்டால் பிக்குணிகள் சங்கத்தில் சேரலாம் என்று உத்தரவு கொடுத்தார். அந்தக் கடமைகளை ஏற்றுக்கொண்டபடியால் அந்த ஸ்திரீகள், சங்கத்தில் பிக்குணிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

பகவன் புத்தர் ஸ்திரீகளைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள உடன்பட்டபோதிலும் அதனால் நேரிடப் போகிற தீமையை நன்கு உணர்ந்தார். அவர் ஆனந்த மகா தேரரிடம், “பௌத்த சங்கத்திலே ஸ்திரீகள் சேர்க்கப்படாமல் இருந்தால், பௌத்த தர்மம் ஆயிரம் ஆண்டுகள் நிலைபெற்றிருக்கும். ஸ்திரீகள் சேர்க்கப்படுவதனாலே தர்மம் இப்போது ஐந்நூறு ஆண்டுகள் தான் நிலைத்திருக்கும்.” என்று அருளிச் செய்தார்.இராசமாதேவி கேமை

வைசாலியிலிருந்து ததாகதர் சிராவத்தி நாட்டுக்குச் சென்று அங்குக் கார்காலத்தைக் கழித்தார். பின்னர் இராசகிருகம் திரும்பிவந்தார். வந்து வெளுவனத்தில் தங்கியிருந்தபோது, விம்பசார அரசன் இராணியாகிய கேமை என்பவள் பௌத்த உபாசிகையானாள். கேமை, தான் மிகவும் அழகுள்ளவள் என்னும் இறுமாப்பினாலே பகவன் புத்தரிடம் வரவிரும்பவில்லை. விம்பசார அரசன் பகவரைக் காண வரும்போது இவ்வரசியையும் வரும்படி அழைப்பார். இறுமாப்புள்ள அரசியார் வர மறுப்பார். ஒரு சமயம், அரசியார் வெளு வனத்தில் ஒரு புறம் உலாவிக் கொண்டிருந்தபோது, விம்பசார அரசன் அரசியாரைப் புத்தரிடம் அழைத்து வந்தார். ததாகதர், அரசியாரின் அழகைப் பற்றிய துரபிமானத்தை நீக்கக் கருதி, தமது இருத்தி சக்தியினாலே ஆகாயத்திலே ஒரு அழகான தெய்வ மகள் தோன்றும்படிச் செய்தார். அவ்வாறு தோன்றிய அழகான தெய்வமகளை அரசியார் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, அப்பெண் உருவம், இளமைப் பருவம் நீங்கி நடுத்தர வயதடைந்தது. பிறகு, நடுத்தர வயது நீங்கிக் கிழப்பருவம் அடைந்தது. பின்னர் கிழப்பருவத்திலே அப்பெண் உருவம் செத்துப் போயிற்று.

இக்காட்சியைக் கண்ட கேமை என்னும் அரசியாருக்குத் தமது அழகைப் பற்றிய இறுமாப்பு நீங்கியது. பகவன் புத்தருடைய உபதேசத்தைக் கேட்கவேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. அப்போது, ததாகதர் சில சூத்திரங்களை ஓதினார். அதைக் கேட்ட அரசியார் அர்ஹந்த நிலையையடைந்தார். அந்நிலையடைவதற்கு முன்பு மாரன் அரசியாரை மருட்டினான். ஆனால் மாரனை வென்று அர்ஹந்த நிலையடைந்தார் அவர்.

அறுவகைச் சமயத்தார்

பகவன் புத்தருக்கு எதிரிகளாக ஆறு குருமார்கள் இருந்தார்கள். அவர்கள் பூரணகாசிபர், மக்கலி கோசாலர், அஜிதகேசகம்பளி, பகுட கச்சாயனர், நிகந்த நாதபுத்திரர், சஞ்சயபெலட்டிபுத்திரர் என்பவர்கள். இந்த அறுவரும் வைசாலி நகரத்தாரால் தங்கள் நாட்டில் ஏற்பட்டிருந்த கொள்ளை நோயைத் தீர்ப்பதற்காக வரவைக்கப்பட்டு அவர்களால் அந்நோய் தீர்க்கப்படாமல் போகவே, மேலே கூறப்பட்டது போலப் பகவன் புத்தரை அவர்கள் அழைக்க அவர் சென்று அந்நோயைப் போக்கினார்.

அந்தச் சமயத்தாருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தும் அவர்கள் பகவன் புத்தருடைய செல்வாக்கையும் சிறப்பையும் கண்டு பொறாமை கொண்டார்கள். இவர்கள் விம்பசார அரசனிடம் செல்வாக்குப்பெற எவ்வளவோ முயன்று பார்த்தும் வெற்றி பெறாமல் சிராவத்தி நாட்டு அரசன் பிரசேனஜித்து என்பவனிடம் செல்வாக்குப் பெறலாம் என்று நினைத்து அவனிடம் சென்றார்கள். சென்று தங்களுடைய இருத்தியினால் சில அதிசயங்களை உண்டாக்கிக் காட்டி அவ்வரசனைத் தங்கள் பக்கம் வசப்படுத்த முயன்றார்கள்.  இதையறிந்த பகவன் புத்தர், சிராவத்திக்குச் சென்று அரசன் முன்பும் மக்களின் முன்பும் தமது இருத்தி சக்தியினாலே அற்புதத்தைச் செய்து காட்டினார்.
ததாகதர் செய்த அற்புதம் இது: ததாகதர் ஆகாயத்திலே கிழக்கு மேற்காகக் கீழ்க்கோடி முதல் மேற்குக் கோடிவரையில் ஒரு பெரிய சாலையை உண்டாக்கினார். அந்தச் சாலையின் மேல் ததாகதர் நின்று உலாவினார். உலாவிக் கொண்டிருந்தபோது சிவந்த நிறம் தோன்றியது. பிறகு அந்நிறம் பொன்நிறமாக மாறி உலகமெங்கும் பிரகாசித்தது. அங்கிருந்த பகவன் புத்தர் தர்மோபதேசம் செய்தார். கீழிருந்த அத்தனை ஜனங்களும் அவ்வுபதேசத்தைக் கேட்டு நான்கு வகையான உண்மைத் தத்துவத்தைக்  உணர்ந்து கொண்டார்கள். இதனைக் கண்ட அறுவகைச் சமய குருமார்களும் திகைப்படைந்தார்கள். அவர்களால் இதுபோன்ற இருத்தியைச் செய்ய முடியவில்லை. அப்போது பகவன் புத்தர், “சூரியன் இல்லாதபோது மின்மினிகள் மின்னுகின்றன. சூரியன் வந்தபோது மின்மின்கள் இருந்த இடம் தெரியாமல் போகின்றன,” என்று கூறினார். அறுவகைக் சமயக் குருமார்களில் ஒருவராகிய பூரண காசிபர் என்பவர், ஒரு புதுமையைச் செய்யத் தொடங்கினார். அது கைகூடாமற் போயிற்று. ஆகவே, அவர் வெட்கமடைந்து கனமுள்ள ஜாடியொன்றைக் கழுத்தில் கட்டிக்கொண்டு ஆற்றில் விழுந்து அமிழ்ந்து உயிரைவிட்டார்.

புத்தர்கள் ஏதேனும் பெரிய புதுமைகளைச் செய்தால், உடனே அவர்கள் முப்பத்து மூன்று தேவர்கள் வாழும் தேவலோகத்துக்குப் போவது வழக்கம். அந்த முறைப்படி பகவன் புத்தரும்  மேற்சொன்ன அற்புதத்தைச் செய்த பிறகு, தமது திருவுருவத்தை நிழல் போல விட்டுவிட்டுத் தேவலோகம் சென்றார். தமது திருத்தாயாரான மாயா தேவியார் வாழும் தேவலோகத்துக்குச் சென்று அறநெறியைப் போதித்தார்.  தெய்வலோகத்தில் பகவன் புத்தர் இருந்தபோது, பூலோகத்தில் அவர் உபதேசம் செய்ய வேண்டியபடியால், அவர் விட்டுப் போன அவருடைய திருவுருவம் தினந்தோறும் பிக்ஷைக்குச் சென்று மக்களுக்கு உபதேசம் செய்து வந்தது. இவ்வாறு மூன்று திங்கள் பகவன் புத்தர் தேவலோகத்தில் தங்கியிருந்தார். பிறகு சக்கரன் (இந்திரன்) ஒருபுறமும் பிரமன் ஒருபுறமும் வர அவர்களின் இடையே பகவன் புத்தர் பூலோகத்துக்கு வந்தார்.

பொய்க் குற்றச்சாட்டு

பௌத்த மதத்திற்கு ஏற்பட்ட வெற்றியினாலும் தங்களுக்கு உண்டான தோல்வியினாலும் அவமானமும் பொறாமையும் கொண்ட அறுவகைச் சமயக் குருமாரும் புத்தர் மீது வஞ்சம் தீர்த்துக்கொள்ள நினைத்தார்கள். அவர்கள் நேர்மையான வழியைவிட்டுக் கீழான முறையைக் கையாண்டார்கள். தங்கள் மதத்தைச் சார்ந்த சிஞ்சா மாணவிகை என்னும் பெயருள்ள ஒரு அழகுள்ள மகளைத் தூண்டிவிட்டு, பகவன் புத்தர் மீது அவதூறு கூறும்படி ஏவினார்கள். அவளும் அதற்கு உடன்பட்டாள்.

சிஞ்சா மாணவிகை, நாள்தோறும் இரவு வேளையில் பகவன் புத்தர் தங்கியிருந்த இடத்திற்கு வருவதும் காலை வேளையில் அவ்விடத்திலிருந்து போவதுமாகப் பலரும் பார்க்கும்படி பல நாட்கள் செய்துவந்தாள். இவ்வாறு பலமுறை இவளைப் பார்த்தவர்கள் இவள் மீது ஐயம் கொண்டார்கள்.  ஊரார் இதைபற்றி அவதூறு பேசவும் தொடங்கினார்கள். பிறகு, அவள் வயிற்றில் கருவாய்த்துக் கர்ப்பம் கொண்டவள் போல நடித்தாள். கர்ப்பப் பெண்ணின் வயிறு போன்று மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பொருளை வயிற்றில் கட்டிக் கொண்டு சூல் கொண்டவள்போல நடித்தாள். இவ்வாறு நடித்து ஊராரிடத்தில் ஐயத்தையும் அபவாதப் பேச்சையும் உண்டாக்கினாள்.

ஒன்பது மாதம் சென்ற பிறகு, ஒருநாள் மாலை பகவன் புத்தர் தருமபோதனை செய்துகொண்டிருந்த இடத்திற்குப் போனாள். பெருங்கூட்டம் திரண்டிருந்த அந்தச் சபையிலே சென்று, பகவன் புத்தர் மீது கூடா ஒழுக்கக் குற்றம் சாற்றினாள். தான் கர்ப்பமானதுக்குக் காரணமாக இருந்தவர் புத்தர் என்றும், தனக்குப் பிள்ளைபேறு உண்டாகும் காலம் நெருங்கிவிட்டபடியால் அதற்கு வேண்டிய வழிவகைகளைச் செய்துகொடுக்கவேண்டும் என்றும் எல்லோருக்கும் மத்தியில் சென்று கூறினாள். அப்போது பகவன் புத்தர் தமது உபதேசத்தை நிறுத்திக்கொண்டு, “தங்காய்! நீ கூறுவது மெய்யா பொய்யா என்பது எல்லோருக்கும் தெரியாது. ஆனால், அதன் உண்மை உனக்கும் எனக்கும் தெரியும்,” என்று கூறினார். அப்போது என்ன அதிசயம்! அவள் கர்ப்பவதிபோல வயிற்றில் கட்டியிருந்த மரத்துண்டு அவிழ்ந்து கீழேவிழுந்து அவள் கால் விரல்களைக் காயப்படுத்திற்று! சக்கரன் (இந்திரன்) தனது ஏவலாளர்களை ஏவ, அவர்கள் சுண்டெலிகள் போல் சென்று, கயிற்றைக் கடித்து, அவள் வயிற்றில் கட்டியிருந்த மரத்துண்டு அறுந்து விழும்படிச் செய்தார்கள்! அப்போது அங்கிருந்த ஜனங்கள் எல்லோரும் உண்மையறிந்து அவளை வைது அடித்துத் துரத்தினார்கள். அவமானம் அடைந்து அவ்விடத்தினின்று அவள் ஓடினாள். பிறகு, பூமி வெடித்து அதில் விழுந்து நரகத்தையடைந்தாள்.சங்கத்தில் சச்சரவு

பகவன் புத்த பதவியடைந்த ஒன்பதாம் ஆண்டு கார்காலத்தில் கோசிகன் என்பவருடைய கோசிகாராமத்தில் தங்கியிருந்தபோது பிக்கு சங்கத்தில் சச்சரவு உண்டாயிற்று. ஒரு பிக்கு தம்மையறியாமலே விநய ஒழுக்கத்தில் ஏதோ சிறு தவறு செய்துவிட்டார். அதை ஒரு பிக்கு கண்டித்தார். இதனால், பிக்குகள் இரு பிரிவினராகிச் சச்சரவு செய்தார்கள். இதையறிந்த பகவன் புத்தர், அவர்களை அழைத்து அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றார். அவர்களுக்குத் தீகாவு என்பவன் கதையைச் சொல்லிச் சச்சரவு செய்யக்கூடாதென்று போதித்தார். ஆனால், அவர்கள் அதைக் கேளாமல் முன்போலவே சச்சரவுசெய்தார்கள். அதனால் வெறுப்படைந்த பகவன் புத்தர், இவர்கள் சமாதானப்பட மாட்டார்கள் என்று கண்டு, அவர்களுக்குச் சில சூத்திரங்களை ஓதிய பிறகு, அவர்களை விட்டுத் தனியே ஓரிடத்திற்குப் போய்விட்டார். அவர் பாலகலோணகார என்னும் கிராமத்திற்குச் சென்றார். அங்கே அவர் பகுதேரரைக் கண்டார். பிறகு, பாசீனவம்ஸதாய என்னும் வனத்திற்குச் சென்றார். அங்கு அநுருத்தர், நந்தியர், கிம்பளர் ஆகியோர் வரவேற்று உபசரித்தார்கள். அங்குத் தங்கி அறவுரை நிகழ்த்திய பிறகு அங்கிருந்து ஒரு காட்டிற்குச் சென்று தன்னந்தனியே யோகம் செய்து கொண்டிருந்தார்.

தனிவாசம்

தன்னந்தனியே ஏகாந்தவாசமாக இருந்தபோது அவ்விடத்திற்கு ஒரு யானை வந்தது. காட்டில் வெகுதூரத்துக்கப்பால் யானைக் கூட்டங்களுடன் இந்த யானை வசித்துக் கொண்டிருந்தது. ஆனால், இந்த யானைக்கு மற்ற யானைகள் பலவிதமாகத் துன்பங்கள் செய்துகொண்டிருந்தன. இதனால் வெறுப்படைந்த இந்த யானை அக்கூட்டத்திலிருந்து பிரிந்து வந்து தன்னந்தனியே வேறு ஒரு இடத்தில் வசித்துக் கொண்டிருந்தது. பகவன் புத்தர் இக்காட்டிற்கு வந்தபோது, இந்த யானை நாள்தோறும் காய்கனி கிழங்குகளைக் கொண்டு வந்து அவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தது. இந்த யானையினுடைய உணர்வையும் அன்பையும் கண்ட பகவர் இதைப்பற்றி ஒரு சூத்திரத்தை அருளிச்செய்தார். இவ்வாறு சிலகாலம் காட்டில் தனியே தங்கியிருந்த பிறகு, ததாகதர் அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சிராவத்தி நகரம் சென்றார்.

கௌசாம்பியிலிருந்த புத்த சங்கத்தார், நகர மக்களால் அவமதிக்கப்பட்டார்கள். இவர்கள் சச்சரவு செய்துகொண்டு பிணங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட மக்கள் இவர்களை இகழ்ந்தார்கள். இதனை அறிந்த பிக்கு சங்கத்தார், பகவன் புத்தரை நாடிச் சிராவத்தி நகரத்துக்கு வந்தார்கள். வந்து தமது குறையை அவரிடம் சொன்னார்கள். பகவர், அவர்களுக்குப் புத்திமதிகளைக் கூறி, இரு சார்பாரையும் ஒன்றுபடுத்தினார்.பயிர் செய்யும் குடியானவன்

பதினோராவது மழை காலத்துக்குப் பிறகு ததாகதர் இராசகிருக நகரம் சென்றார். அவர் தக்கிணாகிரி வழியாக ஏகநாளம் என்னும் கிராமத்தின் ஊடே சென்றபோது, பாரத்வாஜன் என்னும் பார்ப்பனன் தன்னுடைய வயல்களில் இருந்து பயிர்த் தொழிலைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவன், ததாகதரைப் பார்த்து, “சிரமணரே! நான் நிலத்தை உழுது பண்படுத்துகிறேன். நீர் பாய்ச்சிக் களை பிடுங்குகிறேன். இவ்வாறு பயிர் செய்து உயிர் வாழ்கிறேன்.  தாங்களும் ஏன் பயிர் செய்து உண்டு வாழக்கூடாது?” என்று வினவினான்.

இதனைக் கேட்ட பகவர், “நானும் உழுது விதைத்துப் பயிர் செய்து உண்டு வாழ்கிறேன்,” என்று கூறினார்.
இதைக் கேட்டு வியப்படைந்த பார்ப்பனன், “வணக்கத்திற்குரிய கௌதமரே! உம்மிடம் ஏர், எருதுகள் முதலியவை இல்லையே! தாங்கள் எப்படிப் பயிர் செய்வீர்கள்?” என்று கேட்டான். கௌதம புத்தர், இவ்வாறு விடை கூறினார்: “உண்மைத் தத்துவம் என்பது விதைகள். ஆர்வம் என்பது மழைநீர். அடக்கம் என்பது கலப்பை. ஊக்கமும் முயற்சியும் எருதுகள். துக்கமற்ற இன்பநிலையே நான் அறுக்கும் அறுவடை.”

இதைக் கேட்ட பாரத்துவாஜன் மனம் மகிழ்ந்து பௌத்த தர்மத்தை மேற்கொண்டு வாழ்ந்தான்.சுப்ரபுத்தன் நரகம் அடைந்தது

ததாகதர் போதிஞானம் அடைந்த பதின்மூன்றாம் ஆண்டில் பகவன் புத்தர் ஜேதவனத்தில் தங்கியிருந்தபோது இராகுல தேரருக்கு இருபது வயது நிரம்பிற்று. அதனால்  அவருக்கு உபசம்பதா துறவுகொடுக்கப்பட்டது. அதே ஆண்டு பகவர் கபிலவத்து நகரம் சென்றார்.

பகவர் ஆலவனத்திலே தங்கியிருந்தபோது ஒருநாள், அவருடைய மாமனாராகிய சுப்ரபுத்தர், ததாகதரை இழிவாகப் பேசி அவமானப்படுத்தினார். சுப்ரபுத்தர், தன் மகளாகிய யசோதரையாரை விட்டுப் போய்த் துறவுபூண்ட ததாகதரிடம் சினமும் பகையும் கொண்டிருந்தார். ஆகவே அவர் ஆலவனத்தில் ததாகதர் தங்கியிருந்த போது, அவரை அவமானப்படுத்த வேண்டும் என்னும் கருத்தோடு குடித்து வெறி கொண்டு ததாகதரிடம் சென்றார். அப்போது ததாகதர் பிக்ஷைக்காக நகரத்தின் தெருவிலே நடந்து கொண்டிருந்தார். சுப்ரபுத்தர், ததாகதரை மறித்துத் தடுத்துப் பலவகையாக ஏசி இகழ்ந்து பேசினார். அவருடைய நிந்தனைகள் கட்டுக்கடங்காமல் அளவுக்கு மீறிச் சென்றன. அப்போது ததாகதர் அமைதியாகப் பக்கத்திலிருந்த ஆனந்த தேரரைப் பார்த்து, “சுப்ரபுத்தரை ஒரு வாரத்திற்குள் பூமி விழுங்கிவிடும்,” என்று தீர்க்கதரிசனம் கூறினார். அதைக் கேட்ட சுப்ரபுத்தர் எள்ளி நகைத்து மேன்மேலும் தூற்றினார். பிறகு, ததாகதரின் தீர்க்கதரிசனத்தை நினைத்து ஒரு வாரம் வரையில் பூமியில் இல்லாமல் உயரமான மாளிகையிலே தங்கியிருந்தார். ஆனால், ஏழாம் நாள் பூமிவெடித்து அவரை விழுங்கிவிட்டது. அவர், அவிசி என்னும் நரகத்தை யடைந்தார்.அணுக்கத் தொண்டர்

பகவன் புத்தர்  போதிஞானம் அடைந்த இருபதாவது ஆண்டிலே, அதாவது தமது ஐம்பத்தைந்தாவது வயதில், தமக்கு ஒரு அணுக்கத் தொண்டரை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினார். அதனால், வெளுவனத்திலே கந்தகுடியிலே இருந்தபோது சீடர்களையெல்லாம் அழைத்து, “பிக்குகளே! ததாகதருக்கு வயது அதிகம் ஆயிற்று. அவருக்கு ஒரு அணுக்கத் தொண்டர் தேவை. உங்களில் யாருக்கு அணுக்கத் தொண்டராயிருக்க விருப்பமோ அவர் எழுந்து நின்று சம்மதத்தைத் தெரியப் படுத்தலாம்,” என்று அருளிச் செய்தார்.

அப்போது பிக்குகள் எல்லோரும் நான், நான் என்று கூறித் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். ஆனால், பகவன் புத்தர் அவர்களையெல்லாம் வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டார். ஆனந்த மகாதேரர் மட்டும் வாளா இருந்தார். அப்போது பிக்குகள் எல்லோரும் ஆனந்தரைப் பார்த்து, “ஆனந்தரே! தங்கள் விருப்பத்தைக் கூறுங்கள். பகவர் தங்களை ஏற்றுக்கொள்வார்,” என்று கூறினார்கள்.
பகவன் புத்தர், “பிக்குகளே! ஆனந்தருக்கு விருப்பம் இருந்தால், அவரே தமது விருப்பத்தைக் கூறுவார். நீங்கள் அவரைக் கட்டாயப்படுத்தாதீர்கள்,” என்றார். ஆனந்த தேரர் எழுந்து நின்று, “பகவன் நான்கு பொருள்களை எனக்கு மறுக்கவும் நான்கு பொருள்களை அளிக்கவும் அருள் புரிந்தால், அடியேன் அணுக்கத் தொண்டனாக இருக்க இசைகிறேன். எனக்கு மறுக்கவேண்டிய நான்கு பொருள்கள் என்னவென்றால்: 1. பகவருக்கு நல்ல உணவு கிடைக்குமானால், அதனை அடியேனுக்குக் கொடுக்கக்கூடாது. 2. நல்ல ஆடைகிடைத்தால் அதையும் எனக்குக் கொடுக்கக்கூடாது. 3. பகவருக்கு அளிக்கப்படுகின்றன ஆசனங்களை எனக்குக் கொடுக்கக்கூடாது. 4. பகவரை வணங்கிப் பூசிக்க யாரேனும் அழைத்தால் அந்த இடங்களுக்கு அடியேனை அழைக்கக்கூடாது.
“பகவர் அடியேனுக்கு அளிக்கவேண்டிய நான்கு பொருள்கள் எவை என்றால், 1. அடியேனைப் பூசிக்க யாரேனும் அழைத்தால் அந்தப் பூசையைப் பகவர் ஏற்றுக் கொள்ளவேண்டும். 2. அடியேன் அழைத்து வருகிறவர்களுக்குப் பகவர் தரிசனம் தரவேண்டும். 3. அடியேன் மனம் தடுமாறித் திகைக்கும்போது பகவர் என்னைத் தேற்றி நல்வழிப்படுத்த வேண்டும். 4. அடியேன் இல்லாத காலத்தில் மற்றவருக்குச் செய்த உபதேசங்களை அடியேனுக்கு உபதேசிக்க வேண்டும். இந்த எட்டு வரங்களையும் பகவன் புத்தர் அருளினால் அடியேன் அணுக்கத் தொண்டனாக இருக்க இசைகிறேன்,” என்று கூறினார்.

பகவன் புத்தர்  இந்த வரங்களை அளித்து ஆனந்த தேரரைத் தமக்கு அணுக்கத் தொண்டராக ஏற்றுக் கொண்டார். அது முதல் பகவன் புத்தர் , பரிநிர்வாணம் அடைகிற வரையில் ஆனந்த மகாதேரர் அவருக்கு அணுக்கத் தொண்டராக இருந்தார்.அங்குலி மாலன்

அக்காலத்திலே கோசல நாட்டிலே அங்குலி மாலன் என்னும் ஒரு கொடியவன் இருந்தான். அவன் வழிப் போக்கரைக் கொன்று அவர்களின் கை விரல்களில் ஒன்றை எடுத்து மாலையாகக் கட்டிக் கழுத்தில் அணிந்து கொண்டிருந்தான். அதனால் அவனுக்கு அங்குலி மாலன் என்னும் பெயர் உண்டாயிற்று. அவன் அணிந்திருந்த அங்குலி மாலையில் 998 விரல்கள் இருந்தனவாம். இந்தக் கொடிய கொலைகாரனை நல்வழிப்படுத்த பகவன் புத்தர்  கருதினார். அவனிடம் போகக் கூடாதென்று பலர் பகவன் புத்தரைத் தடுத்தார்கள். ஆயினும் பகவர் அவனிருக்கும் காட்டில் சென்று அவனுடன் உரையாடி அவனை நல்வழிப்படுத்தினார். அவன் நல்லறிவு பெற்றுத் திரிசரணம் அடைந்து புத்த சங்கத்தில் சேர்ந்து துறவியானான். அன்றியும் சிறிது காலத்திற்குள் அர்ஹந்த நிலையையும் அடைந்தான்.

கொலைக்குற்றம்

புத்தரின் பௌத்த மதம்  நாளுக்குநாள் வளர்ந்து நாட்டில் செல்வாக்குப் பெறுவதைக் கண்ட எதிர் சமயத்துத் தலைவர்கள் மிகவும் பொறாமை கொண்டார்கள். பகவன் புத்தர்  மீது பழிசுமத்தி அவருக்குச் செல்வாக்கு இல்லாமல் செய்ய எண்ணினார்கள். அவர்கள் அதற்காகச் சுந்தரி என்னும் பெயருள்ள ஒருத்தியை நியமித்தார்கள். சுந்தரி, பகவன் புத்தர்  தங்கியிருந்த தோட்டத்திற்கு அடிக்கடி சென்று வந்தாள். யாரேனும் அவளைக் கண்டு எங்கு போய் வருகிறாய் என்று கேட்டால், புத்தரிடம் சென்று வருவதாகவும் அவருக்கும் தனக்கும் கூடாவொழுக்கம் உண்டென்றும் கூறுவாள். இவ்வாறு சிலகாலஞ் சென்றது. பிறகு, அந்தச் சமயத் தலைவர்கள் சில கொடியவர்களுக்குக் கை நிறையக் காசு கொடுத்துச் சுந்தரியைக் கொன்று பகவன் புத்தர்  தங்கியிருக்கும் ஜேதவன ஆராமத்தில் போட்டுவிடும்படி ஏவினார்கள். அக்கொடியவர்களும் அவ்வாறே சுந்தரியைக் கொன்று ஆராமத் தோட்டத்தில் போட்டுவிட்டார்கள்.

பொழுது விடிந்ததும், சுந்தரியைப் பௌத்தர்கள் கொலை செய்துவிட்டார்கள் என்று அரசனிடம் கூறினார்கள். இதனால் பகவன் புத்தருக்கும் பௌத்த சங்கத்துக்கும் பெரும் அபவாதம் ஏற்பட்டது. ஆனால், சில காலத்திற்குள் குற்றவாளிகள் அகப்பட்டுக் கொண்டார்கள். கொலை செய்த கொடியவர்கள் குடித்து வெறித்துத் தமக்குள் சச்சரவு செய்து கொண்டபோது, அவர்கள் சுந்தரியைக் கொலை செய்த செய்தி வெளிப்பட்டது. அரசன் அவர்களை அழைத்து விசாரித்தபோது, சுந்தரியைக் கொன்றவர்கள் தாங்களே என்றும், பௌத்த விரோதிகளான சமயத் தலைவர்கள் தங்களுக்குக் காசு கொடுத்துக் கொலைசெய்து புத்தர் ஆராமத்தில் போட்டு வரும்படிக் கூறினார்கள் என்றும் தாங்கள் அவ்வாறே செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்கள். அரசன் குற்றவாளிகளைத் தண்டித்தார். புத்தர் மேல் சுமத்தப்பட்ட அபவாதம் நீக்கப்படது.விசாகை

அநாத பிண்டிகன் என்னும் செல்வச் சீமானுக்கு விசாகை என்னும் பெயருள்ள குமாரத்தி ஒருத்தியிருந்தாள். அங்க நாட்டில் பெருஞ் செல்வனாகிய மிகாரர் என்னும் பிரபுவுக்குப் புண்ணியவர்த்தனன் என்னும் குமாரன் இருந்தான். புண்ணியவர்த்தனக் குமாரனுக்கு விசாகையைத் திருமணம் செய்து வைத்தார்கள். விசாகை, கணவன் வீடு வந்து சேர்ந்தாள்.

விசாகையினுடைய மாமனார் நிர்க்கந்த(ஜைன) மதத்தைச் சேர்ந்தவர். விசாகையோ பகவன் புத்தரை வழிபட்டு அவரது அறநெறிப்படி நடக்கிறவள். விசாகையின் மாமனார், விசாகையை நிர்க்கந்த மதத்தில் சேரும்படிக் கூறிப் பல இன்னல்களைச் செய்தார். ஆனால், விசாகை பகவன் புத்தரையே வழிபட்டு வந்தாள். அன்றியும் தனது மாமியார் முதலியவர்களுக்கும் அந்நகரத்துப் பெண்களுக்கும் பகவன் புத்தர் மீது பக்தி உண்டாகும்படிச் செய்தாள். அவர்கள் எல்லோரும் பகவன் புத்தரைக் கண்டு அவரது அறநெறியைக் கேட்க விரும்பங்கொண்டனர்.

இதனை ஞானதிருஷ்டியினால் அறிந்த பகவன் புத்தர்  தமது சீடர்களுடன் அங்கநாடு சென்று விசாகையின் வீட்டுக்குச் சென்றார். விசாகை பகவரை வரவேற்று உணவு கொடுத்து அவரிடமிருந்து அறநெறி கேட்டாள். அதனைக் கேட்ட உற்றார் உறவினரும் ஏனையோரும் மனம் மகிழ்ந்து பௌத்தராயினர். விசாகை பேரன் பேத்திகளோடு நெடுங்காலம் வாழ்ந்து பகவன் புத்தருக்கும் புத்த சங்கத்துக்கும் பெரும் பொருளைத் தானம் வழங்கினாள். பின்னர் துறவு பூண்டு பிக்குணியாகி இறுதியில் மோட்சம் அடைந்தாள்.தேவதத்தன்

பகவன் புத்தருக்கு எழுபத்திரண்டு வயதாயிற்று.  ததாகதருக்கு நாடெங்கும் பெரும் புகழும் மதிப்பும் ஏற்பட்டது. பௌத்த சங்கத்தை மக்கள் மதித்துப் போற்றினார்கள். புத்தருடைய உறவினனும் அவரிடம் துறவு பூண்டு பிக்கு சங்கத்தில் இருப்பவனுமாகிய தேவதத்தனுக்குப் பதவி ஆசை ஏற்பட்டது. பகவன் புத்தருக்குப் பதிலாகத் தானே பௌத்த சங்கத்தின் குருவாக இருந்து பெருமையடையவேண்டும் என்று அவன் பெரிதும் விரும்பினான். நாளுக்கு நாள் இந்த ஆசை  அவன் உள்ளத்தில் பெருகி வளர்ந்தது. அதுமட்டுமன்று பகவன் புத்தர்  நாட்டில் அடைந்த புகழையும், சிறப்பையும் கண்டு அவனுக்குப் பொறாமையும் உண்டாயிற்று.

தேவதத்தன், விம்பசார அரசன் மகனும் இளவரசனுமான அஜாத சத்துருவிடம் சென்று, தான் அடைந்துள்ள இருத்திகளின் உதவியினாலே சில அற்புதங்களைச் செய்துகாட்டி அரச குமாரனைத் தன்வயப் படுத்தினான்.

தேவதத்தன் என்றைக்காவது ஒரு நாள் பௌத்த சங்கத்தின் தலைமைப் பதவியைப் பெறவேண்டும் என்று எண்ணினான். வெளுவன ஆராமத்தில் பகவன் புத்தர்  உபதேசம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு நாள் தேவதத்தன் எழுந்து நின்று வணங்கி, பகவன் புத்தருக்கு அதிக வயதாய்விட்டபடியால், சங்கத்தின் தலைமைப் பதவியைத் தனக்குக் கொடுக்கும்படி கேட்டான். ‘புத்த பதவி ஒருவர் கொடுக்க ஒருவர் பெறுவதன்று. பல பிறவிகளில் முயன்று பெறப்படுவது புத்த பதவி,’ என்று கூறிப் பகவன் புத்தர்  மறுத்துவிட்டார். அதுமுதல் தேவதத்தனுக்குப் பகைமை உணர்ச்சி ஏற்பட்டுப் பகவன் புத்தரை எப்படியாவது ஒழிக்கவேண்டும் என்னும் தீய எண்ணம் வளர்ந்தது.

அஜாத சத்துரு

பகவன் புத்தரை உயிர்போல் கருதியிருக்கும் விம்பசார அரசன் இருக்கிறவரையில் புத்தருக்கு யாதொரு தீங்கும் செய்யமுடியாது என்று அறிந்த தேவதத்தன், இளவரசனான அஜாத சத்துருவிடம் சென்று நல்லது சொல்வதுபோலச் சில வார்த்தைகள் கூறினான். தந்தையாகிய விம்பசார அரசனைக் கொன்று மகதநாட்டின் அரசனாகும்படி தேவதத்தன் அஜாத சத்துருவுக்குக் கூறினான். அரசகுமாரனும் அரச பதவிக்கு ஆசைப்பட்டுத் தன் தந்தையைக் கொல்ல உடன்பட்டான். குற்றுடைவாளைக் கையில் ஏந்திக்கொண்டு அரசகுமாரன் இரவும் பகலும் அரண்மனையில் நடமாடுவதைக் கண்டு ஐயமுற்ற அரசவூழியர், விம்பசார அரசனிடம் அச்செய்தியைக் கூறினார்கள். விம்பசார அரசன் மகனை அழைத்துப் புத்திமதிகூறி, தான் அரசாட்சியை விட்டு நீங்கி, மகனுக்கு அரச பட்டம் கட்டினான்.

தனது எண்ணம் நிறைவேறாமற் போனதைக் கண்ட தேவதத்தன், மீண்டும் அஜாத சத்துருவினிடம் சென்று, “உனது தந்தை உயிருடன் இருக்கும்வரையில் உனக்கு உண்மையான அரச அதிகாரம் இல்லை,” என்று கூறி விம்பசார அரசனைக் கொன்றுவிடும்படி தூண்டினான். அதனைக் கேட்ட அஜாதசத்துரு, அரசரைச் சிறையில் அடைத்து உணவு கொடுக்காமல் பல கொடுமை செய்தான். அரசன் சிறைச்சாலையில் வருத்தம் உற்றுச் சில நாட்களுக்குப் பிறகு இறந்து போனான்.வில்வீரர்

தேவதத்தன், அரசனான அஜாதசத்துருவின் உதவி பெற்று பகவன் புத்தரை அழிக்கத் தொடங்கினான். வில்வீரர் பதினாறுபேரை ஏற்படுத்திப் பகவன் புத்தர் போகும்போது அம்பு எய்து அவரைக் கொல்லும்படி ஏவினான். வீரர்கள் வில் அம்புடன் சென்று, வழியில் காத்திருந்தார்கள். பகவன் புத்தர் வந்தபோது அவரைக் கண்ட வீரர்கள் திகைத்துப் போனார்கள். பகவனின் தெய்வீகத் தன்மை அவர்களின் மனத்தை மாற்றிவிட்டது. அவர்கள் ஓடிச்சென்று பகவன் பாதங்களில் விழுந்து வணங்கிச் சென்றார்கள். அவர்களில் ஒருவன், தேவதத்தனிடம் சென்று, பகவன் புத்தரின் உயிரைப் போக்குவது முடியாது என்று கூறினான்.

பாறையை உருட்டியது

பிறகு தேவதத்தன் பகவன் புத்தரைக் கொல்ல வேறு முறையைக் கையாண்டான். பகவன் புத்தர்  கிருத்திரக்கூட மலையின் (கழுகுமலையின்) அடிவாரத்தில் உலாவுகிற வழக்கப்படி, ஒரு நாள் மாலையில் உலாவும்போது, தேவதத்தன் மலையுச்சியிலிருந்து பெரிய பாறைக் கல்லை உருட்டிப் பகவன் புத்தர் மேல்  தள்ளினான். மலையுச்சியிலிருந்து வேகமாக உருண்டுவந்த அந்தப் பாறைக்கல், நல்லவேளையாக, இரண்டு பாறைகளுக்கு இடையில் அகபட்டு நின்றுவிட்டது. அதிலிருந்து சிதறிவந்த சிறு கல் துண்டு பட்டுப் பகவரின் காலில் காயம் ஏற்பட்டது. பிக்குகள், ஜீவகன் என்னும் மருத்துவனைக் கொண்டு காயத்திற்கு மருந்து இட்டு ஆற்றினார்கள். அன்றியும் இனி மலையடிவாரத்திற்கு உலாவப் போகக்கூடாது என்றும் பகவரிடம் கூறினார்கள். அதற்குப் பகவன் புத்தர் , “ததாகதரின் உயிரைப் போக்க ஒருவராலும் இயலாது. ததாகதருக்குக் காலம் வரும்போதுதான் அவர் உயிர் பிரியும்,” என்று கூறி அவர்களின் அச்சத்தை நீக்கினார்.

யானையை ஏவியது

தேவதத்தன் அதனோடு நின்றுவிடவில்லை. நாலாகிரி என்னும் பெயருடைய யானைக்கு மதமூட்டிக் கோபங்கொள்ளச் செய்து பகவன் புத்தர்  இராசவீதி வழியே வரும்போது அந்த யானையை அவர்மேல் ஏவிவிட்டான். இராசகிருக நகரத்தின் வீதியில் அந்த மதயானை மூர்க்கத்தனமாக வெறிகொண்டு ஓடியது. அதனைக் கண்ட ஜனங்கள் அஞ்சி ஓடினார்கள். மதயானை, பகவன் புத்தரின் அருகில் வந்தபோது, அவருடைய திருமேனியில் இருந்து வெளிப்படும் தெய்வீக ஒளியினால், அதன் மதம் அடங்கிக் கோபம் தணிந்து சாந்தம் அடைந்தது. அது, தும்பிக்கையைத் தாழ்த்திப் பகவருக்குத் தலை வணங்கிற்று. பிறகு சாந்தமாகத் திரும்பிப் போய்விட்டது. இவ்வாறு தேவதத்தன், பகவன் புத்தரைக் கொல்லச் செய்த சூழ்ச்சிகளும் முயற்சிகளும் பயன்படாமற் போயின.

பிளவு உண்டாக்கியது

தனது சூழ்ச்சிகள் நிறைவேறாமற் போகவே தேவதத்தன் வேறுவிதமாகச் சூழ்ச்சி செய்தான். பௌத்தச் சங்கத்திலே பிளவு உண்டாக்கி அதனால் வெற்றியடையலாம் என்று எண்ணினான். பௌத்த சங்கப் பிக்குகளில் தன் பேச்சைக் கேட்கக்கூடிய சிலரை அழைத்து, பகவன் புத்தர் உடன்பட முடியாத சில புதிய கொள்கைகளை அவர்களுக்குக் கூறி அவைகளைப் புத்தர் ஏற்றுக்கொள்ளச் செய்யும்படி அனுப்பினான். அவர்கள் சென்று புத்தரிடம் அக்கொள்கைகளைக் கூறி அவற்றை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டார்கள். பகவர் அவைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார். இந்தப் பிக்குகள் புதிதாகப் பௌத்தமதத்திற்கு வந்தவர்கள். விநய முறைகளை அறியாதவர்கள். இவர்களுடைய கொள்கையைப் பகவன் புத்தர் மறுக்கவே, இவர்கள் தேவதத்தனுடன் சேர்ந்து அவனைத் தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள்.
தேவதத்தன் ஐந்நூறு புதிய பிக்குகளை அழைத்துக் கொண்டு அவர்களுக்குத் தலைமைப் பதவியை ஏற்று, கயாசீர்ஷமலைக்குச் சென்றான். சென்று, பிக்குகளுக்கு உபதேசம் செய்தான். இந்தப் பிக்குகளின் கூட்டத்தில் சாரிபுத்திர மகாதேரரும் மொக்கல்லான மகாதேரரும் இருந்தார்கள். இவர்களைக் கண்ட தேவதத்தன், இவர்களும் தன்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள் என்று தவராக கருதி, சாரிபுத்திர மகாதேரரை அழைத்து, பிக்குகளுக்கு உபதேசம் கொடுக்கும்படியும் தனக்குக் கலைப்பும் தூக்கமும் வருகிறபடியால் தான் சென்று தூங்கப்போவதாகவும் கூறிச் சென்றான். சாரி புத்திரதேரரும் மொக்கல்லாதேரரும் பிக்கு சங்கத்தாருக்குப் போதனை செய்து அவர்களைப்  பகவன் புத்தரிடம் திரும்பி வரும்படிக் கூறினார்கள். அவர்கள் பேச்சுக்களைக் கேட்ட அப்புதிய பிக்குகள் உண்மை உணர்ந்து, தங்கள் அறியாமைக்கு வருந்தி, பகவன் புத்தரிடம் சென்றார்கள். தேவதத்தன் விழித்தெழுந்து நடந்ததையறிந்து ஆத்திரத்தினாலும் கோபத்தினாலும் இரத்தம் கக்கி இறந்துபோனான்.

அஜாதசத்துரு அரசன், தான் தனது தந்தையாகிய விம்பசார அரசனைக் கொன்ற குற்றம் அவன் மனத்தில் உறுத்தியது. அவனுடைய மனச்சாட்சி அவனைத் துன்புறுத்தியது. அவன் மனம் அமைதி இல்லாமல் வருந்திற்று. தனது மனத்தை அமைதியாக்கிக் கொள்ள எண்ணி அவன் பல சமயத்தலைவர்களிடம் சென்றான். அவர்கள் போதனை அவனுக்குச் சாந்தியை உண்டாக்கவில்லை. கடைசியாக அரண்மனை வைத்தியனாகிய ஜீவகன் கூறிய யோசனையின் படி அவன் பகவன் புத்தரிடம் வந்தான். வந்து அவரிடம் தர்மம் கேட்டுப் பௌத்தனானான்.

பகவன் புத்தரின் எழுபத்தொன்பதாவது வயதுக்குப் பிறகு ததாகதர் வைசாலியிருந்து புறப்பட்டுப் பேலுவநகரம் சென்று சிலநாள் தங்கினார். அங்கே இருக்கும்போது அவருக்கு உடம்பில் நோய் கண்டது. ஆனால், பகவர் அவற்றைப் பொறுத்துக் கொண்டார். தமது எண்பதாவது வயதில் தமக்குப் பரிநிர்வாணம் ஏற்படும் என்பதை அவர் அறிந்தார். பிறகு, அவர் வழக்கம்போல் பல இடங்களுக்குச் சென்று அறநெறியைப் போதித்துக் கொண்டிருந்தார். பிறகு பாவாபுரிக்குச் சென்று, அந்நகரத்துக் கருமானாகிய சுந்தன் என்பனுடைய மாந்தோப்பில் தங்கினார்.சுந்தன் அளித்த விருந்து

பகவன் புத்தர், மாந்தோப்பில் எழுந்தருளியிருப்பதையறிந்த சுந்தன் விரைந்து வந்து பகவரை வணங்கி அடுத்த நாளைக்குத் தனது இல்லத்தில் உணவு கொள்ளும்படி அழைத்தான். பகவர் அதனை ஏற்றுக்கொண்டார். சுந்தன் பலவித உணவுகளைச் சமைத்ததோடு காட்டுப் பன்றியின் இறைச்சியையும் சமைத்திருந்தான். பகவன் புத்தர், பௌத்த பிக்குகளுடன் சுந்தன் இல்லம் சென்றார். காட்டுப் பன்றியின் இறைச்சியை அன்போடு சமைத்து வைத்திருப்பதை யறிந்த பகவன் புத்தர் அதனைப் பிக்குகளுக்குப் பரிமாறக் கூடாதென்றும் அதைக் கொண்டுபோய் புதைத்துவிட வேண்டும் என்றும், ஆனால், அன்போடு சமக்கப்பட்ட அதைச் சுந்தனுடைய திருப்திக்காகத் ததாகதருக்கு மட்டும் பரிமாறலாம் என்றும் அருளிச் செய்தார். சுந்தன் அவ்வாறே செய்தான்.

காட்டுப்பன்றியின் இறைச்சியை உட்கொண்ட காரணத்தினாலே, அது சமிக்க முடியாத கடின உணவு ஆகையினாலே, பகவருக்கு வயிற்றுக் கடுப்பு உண்டாயிற்று. அதனை அவர் பிறர் அறியாதபடி அடக்கிக்கொண்டு, வழக்கம்போல நன்றி கூறும்பொருட்டுச் சுந்தனுக்கு அறவுரை கூறியபிறகு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டார். ஆனந்தரிடம், “குசிநகரம் செல்வோம்,” என்று கூறினார். ஆனந்தர், “அப்படியே,” என்று கூறி இருவரும் குசிநகரம் நடந்தனர். பகவன் புத்தருக்கு வயிற்றுக் கடுப்பு அதிகமாயிற்று. பொறுக்கமுடியாத வலி வயிற்றில் ஏற்பட்டது. ஆகவே வழியிலேயே படுத்துக்கொள்ள விரும்பினார். “ஆனந்தா, மரத்தின் கீழே துணியை விரித்துப்போடு,” என்றார். ஆனந்தர் மரநிழலில் துணியை விரித்துப் படுக்கை அமைத்தார். பகவன் புத்தர் வலதுபுறமாகச் சாய்ந்து படுத்தார். பிறகு, பகவருக்கு நீர் வேட்கை இருந்தபடியால், ஆனந்தர் ஆற்றுக்குச் சென்று நீரைக் கொண்டுவந்து கொடுக்க அதைப் பருகி விடாய் தீர்த்தார்.
சிறிது நேரம் இளைப்பாறிய பிறகு பகவன் புத்தர் ககுத்த ஆற்றுக்குச் சென்று அதில் நீராடினார். பிறகு, ஆற்றைக் கடந்து மாஞ்சோலையையடைந்து அங்கிருந்து மள்ளர் நாட்டைச் சேர்ந்த குசிநகரத்து உபவர்த்தன வனத்திற்குச் சென்றார். அங்கு இரண்டு சாலமரங்களுக்கு இடையில் துணியை விரிக்கச் சொல்லி வடக்கே தலைவைத்து வலது கைப்புறமாகச் சிங்கம் படுப்பதுபோலப் படுத்தார்.
பகவன் புத்தர் பரிநிர்வாணம் அடைந்தால் அவர் திருமேனிக்கு என்னென்ன கடைசிச் சடங்குகள் செய்ய வேண்டும் என்று ஆனந்தர் பகவன் புத்தரைக் கேட்டார். அதற்குப் பகவர், “பிக்குகள் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இல்லறத்தைச் சேர்ந்த சாவக நோன்பிகள், செய்யவேண்டியவற்றைச் செய்வார்கள்,”என்று கூறினார்.
ததாகதரின் திருமேனியை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று ஆனந்ததேரர் பகவன் புத்தரைக் கேட்டார்.
பகவன் புத்தர்  அதற்கு இவ்வாறு விடைகூறினார்: “அரச சக்கரவர்த்திகள் இறந்தால் அவர் உடம்பை எவ்விதமாக அடக்கம் செய்வார்களோ அவ்விதமாகத் ததாகதரின் உடம்பையும் அடக்கம் செய்ய வேண்டும்.”
“அரச சக்கரவர்த்தியின் உடம்பை எவ்வாறு அடக்கம் செய்வார்கள்?” என்று ஆனந்ததேரர் கேட்டார்.
“ஆனந்த! அரச சக்கரவர்த்தி இறந்துபோனால் அவருடைய உடம்பைப் புதிய துணியினால் சுற்றி அதன் பிறகு பஞ்சுத் துணியினால் சுற்றி, அதன்மேல் மறுபடியும் புதிய துணியினால் சுற்றி அதன்மேல் பஞ்சுத் துணியைச்  சுற்றி அபடியே ஐந்நூறு துணிகளினால் சுற்றிக் கட்டுவார்கள். பிறகு எண்ணெய் இரும்புச் சாடியில் அந்த உடம்பை வைத்து எண்ணெய் இரும்புச் சாடியினால் மூடிவைப்பார்கள். அதற்குப் பிறகு மணமுள்ள விறகுகளைக் கொண்டுவந்து ஈமவிறகு அடுக்கி அதன் மேலே அந்த உடம்பை வைத்துத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். உடம்பு தீயில் எரிந்த பிறகு எலும்பை எடுத்து வந்து நகரத்தில் நாற்சந்திச் சதுக்கத்திலே வைத்துக் கல்லினால் நினைவுச் சின்னம் கட்டுவார்கள். ஆனந்த! இப்படித்தான் அரச சக்கரவர்த்தியின் உடம்பை அடக்கம் செய்வது வழக்கம்.”
“அந்த விதமாகத்தானே ததாகதருடைய உடம்பையும் அடக்கம் செய்யவேண்டும். அங்கு யாரேனும் வந்து தூபம் தீபங்கள் வைத்து பூக்களைத் தூவி வணங்கினால் அவர்களுக்கு மகிழ்ச்சியும் இன்பமும் நன்மையும் உண்டாகும்.

“ஆனந்த! கல்லினால் நினைவுச் சின்னம் கட்டி அமைக்கப்பட வேண்டியவர்கள் நான்கு பேர் உள்ளனர். அந்த நால்வர் யார்? ததாகதராகிய புத்தர்கள், பிரத்தியேக புத்தர்கள், அர்ஹந்தர்கள், அரச சக்கரவர்த்திகள். இந்த நான்கு வகையானவர்களுக்குச் சேதியங்கள் அமைக்கப்பட வேண்டும்,” என்று பகவன் புத்தர் கூறினார்.கடைசி இரவு

பகவன் புத்தர் , பிறகு ஆனந்தரை அழைத்துக் குசிநகரத்துக்குச் சென்று அந்நகரத்து மள்ளர்களுக்குத் தாம் பரிநிர்வாணம் அடையப் போவதைச் சொல்லி வரும்படி அனுப்பினார்: “இன்று இரவு கடையாமத்திலே ததாகதர் பரிநிர்வாணம் அடையப்போகிறார். ‘ததாகதர் நமது நாட்டுக்கருகில் வந்து பரிநிர்வாணம் அடைந்தபோது நாம் அவ்விடம் இல்லாமற் போனோமே,’ என்று பிறகு நீங்கள் வருந்தவேண்டாம், இச்செய்தியை அறியுங்கள்,” என்று நகரத்தாருக்குச் சொல்லிவிட்டு வரும்படி அனுப்பினார்.

ஆனந்ததேரரும் இன்னொரு தேரரும் புறப்பட்டுக் குசிநகரம் சென்றார்கள். அப்போது நகர மண்டபத்திலே மள்ளர்கள் ஏதோ காரணமாகக் கூட்டங்கூடியிருந்தார்கள். அவர்களிடம் சென்று பகவன் கூறிய செய்தியை ஆனந்த தேரர் கூறினார். இதைக் கேட்ட மள்ளர்கள் வருத்தம் அடைந்தனர். இச்செய்தி உடனே நகரமெங்கும் பரவியது. முதியவரும், இளையவரும், பெண்களும், குழந்தைகளும் அழுது புலம்பினார்கள். ‘பகவன் புத்தர் இவ்வளவு சீக்கிரத்தில் பரிநிர்வாணம் அடையப்போகிறார்,’ என்று கூறித் துன்பம் அடைந்தார்கள். பிறகு மள்ளர்களுள் ஆண்களும் பெண்களும் முதியவரும் குழந்தைகளும் எல்லோரும் உபவர்த்தன வனத்திற்கு வந்தார்கள்.

அப்போது ஆனந்த மகாதேரர் தமக்குள் இவ்வாறு கருதினார்: “மள்ளர்களை ஒவ்வொருவராகப் பகவரைத் தரிசிக்க அனுப்பினால் பொழுது விடிந்துவிடும். ஆகையால் குடும்பம் குடும்பமாக அவர்களை அனுப்புவது நல்லது,” என்று எண்ணி, ஒவ்வொரு குடும்பமாக உள்ளே வரச்சொல்லிப் பகவன் புத்தரிடம், “இன்ன பெயருள்ள மள்ளர் தமது குடும்பத்துடன் வந்திருக்கிறார்,” என்று ஒவ்வொரு குடும்பத்தாரின் பெயரையும் கூறினார். அந்தக் குடும்பத்தார் பகவன் புத்தருக்கு வணக்கம் செய்து சென்றார்கள். இவ்வாறு அவ்விரவு முதல் யாமத்திற்குள் எல்லா மள்ளர் குடும்பத்தாரும் வந்து பகவன் புத்தரை வணங்கித் தங்கள் இல்லம் சென்றார்கள்.கடைசி தர்மோபதேசம்

குசிநகரத்தில் சுபத்தர் என்னும் பெயருள்ள ஒரு துறவி இருந்தார். இவர் பௌத்தரல்லர், வேறு மதத்தைச் சேர்ந்தவர். அவ்விரவில் கௌதமபுத்தர் நிர்வாண மோக்ஷம் அடையப் போகிறார் என்பதையறிந்த இந்தத் துறவி, பகவன் புத்தரைக் காணவேண்டும் என்று விரும்பினார். அவர் உபவர்த்தன வனத்திற்கு வந்து புத்தரைப் பார்க்க உள்ளே விடும்படி ஆனந்ததேரரைக் கேட்டார்.

சுபத்தர், பகவன் புத்தரிடம் சமயவாதம் செய்ய  வந்திருப்பதாக ஆனந்ததேரர் எண்ணினார். புத்தர் சோர்வடைந்து களைத்திருக்கிற இந்தச் சமயத்தில் சமயவாதம் செய்ய அனுமதிப்பது நன்றன்று என்று கருதி ஆனந்ததேரர் சுபத்தரை உள்ளே விட மறுத்தார். சுபத்தர் பகவன் புத்தரைப் பார்க்க வேண்டும் என்று மறுபடியும் கேட்டார். அப்போதும் ஆனந்த தேரர் மறுத்தார். மூன்றாம் முறையும் சுபத்தர் தன்னை உள்ளே விடும்படி கூறினார். அப்போதும் ஆனந்த தேரர் மறுத்தார். இவர்கள் வெளியே இப்படிப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த பகவர், ஆனந்த தேரரை அழைத்து சுபத்தரை உள்ளே விடும்படிக் கூறினார். சுபத்தர் சமயவாதம் செய்ய வரவில்லை என்றும் சமய உண்மையை அறிந்துகொள்ள வந்திருக்கிறார் என்றும் பகவர் ஆனந்தருக்குக் கூறினார்.
உள்ளே சென்ற சுபத்தர் பகவரை வணங்கி ஒருபக்கமாக அமர்ந்து பகவன் புத்தரின் உபதேசங்களைக் கேட்க விரும்புவதாகத் தெரிவித்தார். ஆரிய (மேலான) அஷ்டாங்க மார்க்கம் எங்கு இல்லையோ அங்குச் சிரமணரைக் காணமுடியாது. ஆரிய அஷ்டாங்க மார்க்கம் எங்கு இருக்கிறதோ அங்குச் சிரமணரைக் காணமுடியும் என்று கூறிப் பகவன் புத்தர், மேலும் பௌத்த தர்மத்தை அவருக்குப் போதித்தார். நான்கு வாய்மைகளை விளக்கிச் சொல்லி, அஷ்டாங்க மார்க்கத்தை உபதேசம் செய்தார். சுபத்தர் இந்த உபதேசங்களை உடனே தெளிவாக விளங்கிக் கொண்டார்.

பிறகு சுபத்தர் தமக்கு துறவு கொடுக்கவேண்டும் என்று பகவரை வணங்கி வேண்டிக் கொண்டார். பகவர், ஆனந்த தேரரை அழைத்துச் சுபத்தருக்குத் துறவு கொடுக்கும்படி சொன்னார். அவ்வாறே ஆனந்த தேரர் சுபத்தருக்குத் துறவு கொடுத்தார். கௌதம புத்தர் உயிரோடு இருந்தபோது கடைசியாகத் துறவு பெற்ற பௌத்த பிக்கு சுபத்தரே.பிக்குகளுக்குப் போதனை

அதன் பிறகு பகவன் புத்தர், ஆனந்த மகாதேரரை அழைத்து இவ்வாறு அருளிச் செய்தார்: “ததாகதர் நிர்வாணம் பெற்ற பிறகு சங்கத்தாரில் யாரேனும், ‘பகவர் நிர்வாண மோட்சம்  அடைந்து விட்டார். இப்போது நமக்குக் குருநாதன் இல்லை,’ என்று நினைக்ககூடும். அப்படி நினைப்பது தவறு. ஆனந்த! ததாகதரின் போதனைகள் சங்கத்தின் குருநாதனாக இருக்கட்டும். ததாகதரின் போதனைகளைச் சரிவர அறிந்து ஒழுகுங்கள்,” என்று அருளினார்.

பிறகு பகவன் புத்தர் பிக்குகளை விளித்து, ததாகதரைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் சங்கத்தைப் பற்றியும் உங்களில் யாருக்கேனும் சந்தேகங்கள் இருக்ககூடும். ஏதேனும் ஐயம் இருந்தால் இப்போதே கேளுங்கள். உங்கள் ஐயங்களை விளக்குவேன். இப்போழுது கேட்காவிட்டால் பிற்காலத்தில், ‘ததாகதர் இருந்த காலத்தில் எங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் தெரிந்து கொள்ளவில்லையே?’ என்று பின்னால் வருந்துவீர்கள்,” என்று அருளிச்செய்தார்.
அப்போது பிக்குகள் எல்லோரும் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார்கள். பகவன் புத்தர் மறுபடியும், ஐயமுள்ளவர்கள் சந்தேகம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று கூறினார். அப்போழுதும் பிக்குகள் மௌனமாக இருந்தார்க்ள. மூன்றாந்தடவையும் பகவர், ஐயங்களைக் கூறும்படி கேட்டார். அப்பொழுதும் அவர்கள் வாளா இருந்தார்கள்.
அப்போது பகவன் புத்தர், ” ததாகதரிடம் உள்ள குருபத்தி காராணமாக உங்களுக்குள்ள ஐயப்பாடுகளை நேரில் கேட்க நீங்கள் அச்சப்படுவதாக இருந்தால், நண்பர்களுக்கு நண்பர்களாக உங்களுக்குள்ளேயே சந்தேகங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்,” என்று அருளிச் செய்தார்.
அப்போதும் பிக்குகள் வாளா இருந்தார்கள். அப்போது ஆனந்தமகா தேரர் பகவரை நோக்கி, “பகவரே! அதிசயம், இது மிக்க அதிசயம்! இந்தப் பிக்ஷு சங்கத்திலே புத்த, தர்ம, சங்கங்களைப் பற்றி யாருக்கும் எந்தவிதமான ஐயமும் இல்லை,” என்று கூறினார்.

“ஆனந்த! இந்த ஐந்நூறு பிக்குகள் எல்லாரும் நிர்வாண மோட்சம் அடைவார்கள். நிர்வாணமோட்சம் அடையாத பிக்குகள் இந்தச் சங்கத்தில் ஒருவரும் இல்லை,” என்று அருளிச் செய்தார். அதன் பிறகு பகவன் புத்தர் பிக்குகளைப் பார்த்துக் கூறினார்: “பிக்குகளே! ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டான பொருள்கள் அழிந்துவிடும் என்னும் உண்மையைத் தவிர ததாகதர் உங்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை. ஆகவே, நிர்வாண மோட்சம் பெறுவதற்கு ஊக்கத்தோடும் உறுதியோடும் முயற்சி செய்யுங்கள்,” என்று அருளிச்செய்தார். இதுவே பகவரின் கடைசி போதனையாகும்.பரி நிர்வாணம்

பிறகு பகவன் புத்தர் தியானத்தில் அமர்ந்து முதல் நிலையை (பேராநந்த நிலையை) அடைந்தார். பிறகு, முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலையை அடைந்தார். இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலையை அடைந்தார். பின்னர் மூன்றாம் நிலையிலிருந்து நான்காம் பேராநந்த நிலையை அடைந்தார். அந்நிலையிலிருந்து எல்லையற்ற பரவெளியை அடைந்தார்.  அந்நிலையிலிருந்து சூனிய நிலையை அடைந்தார். பிறகு அந்நிலையிலிருந்து அதற்கு மேற்பட்ட நிலையை அடைந்தார்.
அப்போது ஆனந்த மகாதேரர் அனுருத்த மகாதேரரிடம், “அனுருத்த தேரரே, பகவன் புத்தர் நிர்வாண மோட்சம் அடைந்தார்,” என்று கூறினார்.

“இல்லை, ஆனந்த தேரரே, பகவன் புத்தர் இன்னும் நிர்வாண மோட்சம் அடையவில்லை. அவர் தியானத்தின் மிக உயர்ந்த எல்லையில் இருக்கிறார்,” என்று அனுருத்தர் கூறினார்.
அப்போது பகவன் புத்தர் யோகத்தின் மிக உயர்ந்த நிலையிலிருந்து படிப்படியாகக் கீழிறங்கி நான்காம் நிலைக்கு வந்து, அதிலிருந்து இறங்கி மூன்றாம் நிலைக்கு வந்து பிறகு இரண்டாம் நிலைக்கும் முதல் நிலைக்கும் வந்தார். பிறகு மீண்டும், யோகத்தின் முதல்நிலைக்குச் சென்று அதிலிருந்து இரண்டாம் நிலையையடைந்து, அதிலிருந்து மூன்றாம் நிலைக்குச் சென்று, அதிலிருந்து நான்காம் நிலையையடைந்து பிறகு பரிநிர்வாண மோட்சத்தையடைந்தார்.

பகவன் புத்தர் பரி நிர்வாணம் அடைந்தபோது வானமும் பூமியும் அதிர்ந்தன. சகம்பதி பிரமனும், சக்கரனும் (இந்திரனும்), ஆனந்த மகாதேரரும், அனுருத்த மகாதேரரும் புத்தருக்கு வணக்கம் பாடினார்கள். தோன்றின பொருள்கள் அழியும் என்னும் உண்மையையறிந்த அறிஞரான பிக்குகள் பகவன் புத்தருடைய பிரிவினால் உண்டான துக்கத்தை அடக்கிப் பொறுத்துக் கொண்டார்கள். திடமனம் இல்லாதவர்கள் அழுது புலம்பினார்கள்.தீப்படுத்தியது

விடியற்காலையில் அனுருத்த மகாதேரர், ஆனந்த மகாதேரரை மள்ளர் இடத்திற்கு அனுப்பி பகவன் புத்தர் பரிநிர்வாண மோட்சம் அடைந்த செய்தியைத் தெரிவித்தார். மள்ளர்கள் மனம் வருந்தி ஆண்களும், பெண்களும் எல்லாரும் அழுதார்கள். பிறகு பூமாலைகளையும் சந்தனம் முதலிய நறுமணப் பொருள்களையும் எடுத்துக் கொண்டு இன்னிசை வாத்தியங்களுடன் வந்து பகவன் புத்தருடைய திருமேனிக்கு அலங்காரம் செய்து வணங்கி இசைகள் வாசித்தும் அவர் புகழைப் பாடியும் கொண்டாடினார்கள். இவ்வாறு ஏழு நாட்கள் நடைபெற்றன.

பிறகு மள்ளர் தலைவர் எண்மர் முழுகிக் குளித்து புதிய ஆடைகள் அணிந்து பகவன் புத்தருடைய திருமேனியைத் தீயிட்டுக் கொளுத்தத் தூக்கினார்கள். அவர்களால் தூக்க முடியவில்லை. திருமேனி எழும்பவில்லை.
அப்போது குசி நகரத்து மள்ளர் வியப்படைந்து வணக்கத்துக்குரிய அனுருத்த தேரரை இதன் காரணம் என்னவென்று கேட்டார்கள்: அதற்கு அனுருத்த தேரர், “வேசந்தர்களே! இதன் காரணம் என்னவென்றால் உங்கள் எண்ணம் ஒன்றாக இருக்க, தேவர்களின் எண்ணம் வேறொன்றாக இருப்பதுதான்,” என்று கூறினார்.
“தேவர்களின் எண்ணம் என்ன?” என்று அவர்கள் கேட்டார்கள்.
“உங்களுடைய எண்ணம் பகவருடைய திருமேனியை நகரத்தின் தெற்கே கொண்டுபோய்த் தீயிலிட்டு எரிக்க வேண்டும் என்பது. தேவர்களின் எண்ணம் என்னவென்றால் திரு மேனியை நகரத்தின் வடக்கே, நகரத்தின் வடக்கு வாயில் வழியாக நகரத்துகுள் கொண்டுபோய் நகரத்தின் நடுவில் சென்று அங்கிருந்து கிழக்குப் பக்கமாகக் கொண்டு போய் கிழக்கு வாயிலின் அருகில் இருக்கிற மகுட பந்தனம் என்னும் மள்ளரின் கோவிலுக்குப் பக்கத்தில் திருமேனியைத் தீயிட்டு எரிக்கவேண்டும் என்பது,” என்று அனுருத்த மகாதேரர் கூறினார்.
அவ்வாறே செய்வோம் என்று மள்ளர்கள் குசிநகரத்து வீதிகளை அலங்காரம் செய்தார்கள். பிறகு இன்னிசைகள் முழங்க ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் திருமேனியைத் தூக்கிக் கொண்டு நகரத்துக்கு வடக்கே கொண்டு போய் வடக்கு வாயிலில் நுழைந்து நகரத்தின் மத்தியில் கொண்டுவந்து பிறகு கிழக்கு வாயில் பக்கமாக மகுடபந்தன ஆலயத்துக்கு அருகில் கொண்டு போனார்கள். பிறகு, மள்ளர் வணக்கத்துக்குரிய ஆனந்த மகாதேரரிடம் இனி என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். ஆனந்த மகாதேரர், “அரச சக்கரவர்த்தி இறந்துபோனால் அவர் உடம்பை என்ன செய்கிறார்களோ அப்படிச் செய்யுங்கள்,” என்று கூறினார்.
“வேசந்தர்களே! கேளுங்கள். அரச சக்கரவர்த்தி இறந்துபோனால் அந்த உடம்பைத் துணியினாலும் பருத்திப் பஞ்சினாலும் ஒன்றின்மேல் ஒன்றாக ஐந்நூறு சுற்றுச் சுற்றிக் கட்டிய பிறகு பெரிய இரும்புப் பாத்திரத்தில் நிறைய எண்ணெய் ஊற்றி அதில் கட்டின உடம்பை வைத்து மற்றொரு இரும்புப் பாத்திரத்தினால் மூடுவார்கள். பிறகு, விறகுகளை அடுக்கி அதன்மேல் உடம்பை வைத்துத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். கொளுத்தி எரிந்து கரியான எலும்பை எடுத்து அதன்மேல் சேதியம் கட்டுவார்கள். வேசந்தர்களே! பகவன் ததாகதருடைய திருமேனியை அந்தவிதமாகச் செய்யுங்கள்,” என்று ஆனந்த மகாதேரர் சொன்ன முறைப்படியே பகவன் புத்தருடைய திருமேனியைத்  துணியினாலும் பருத்திப் பஞ்சினாலும் சுற்றி இரும்புப் பாத்திரத்தில் எண்ணெயில் இட்டு மூடிப் பிறகு ஈம விறகை அடுக்கி அதன்மேல் திருமேனியை வைத்தார்கள்.
அப்போது குசி நகரத்து மள்ளர் தலைவர் நால்வர் நீராடி நல்லாடை அணிந்து பகவன் புத்தரின் திருமேனிக்குத் தீயிட்டார்கள். என்ன வியப்பு! தீ பற்றவில்லை!
அவர்கள் வணக்கத்துக்குரிய அநுருத்த மகாதேரரை இதன் காரணம் என்ன என்று கேட்டார்கள். அவர், “வேசந்தர்களே! தேவர்களின் எண்ணம் வேறுவிதமாக இருக்கிறது,” என்று கூறினார்.
“தேவர்களின் எண்ணம் என்ன, தேரரே?”
“வணக்கத்துக்குரிய மகாகாசப மகாதேரர், தம்முடைய பிக்குச் சங்கத்துடன் பாவாபுரியிலிருந்து குசிநகரத்துக்கு இப்போது வந்துகொண்டிருக்கிறார். அவர் வந்து பகவன் புத்தரின் திருவடிகளை வணங்கின பிறகு தான் தீ பற்றி எரியும்,” என்று மகாதேரர் கூறினார்.
“அப்படியே ஆகட்டும்,” என்று அவர்கள் சொன்னார்கள்.
மகாகாசப மகாதேரர் பிக்கு சங்கத்துடன் விரைந்து வந்து மள்ளருடைய கோவிலுக்கருகில் ஈமவிறகின் மேல் வைக்கப்பட்டிருந்த பகவன் புத்தரின் திருமேனியை மும்முறை வலம் வந்து திருவடிகளைப் பணித்தார். அவ்வாறே மற்றப் பிக்குகள் எல்லோரும் வலம் வந்து வணங்கிப் பணித்தார்கள். எல்லோரும் பணித்து வணங்கிய பிறகு தீ பற்றி எரிந்தது.

பகவன் புத்தருடைய திருமேனி தீயில் எரிந்து சாம்பராயிற்று. திருமேனி முழுவதும் எரிந்து சாம்பரான பிறகு எலும்புகள் மட்டும் எரிந்து கருகி எஞ்சியிருந்தன. அப்போது மழை பெய்து தீயவிந்தது. மள்ளர்களும் நறுமணமுள்ள நீரினால் சாம்பலை அவித்து எலும்புகளை எடுத்துப் பொற்றட்டில் வைத்துக் குசிநகரத்து மண்டபத்துக்கு எடுத்துக் கொண்டு போனார்கள். போய் அங்கு அதை வைத்துப் பூக்களை இட்டு வணங்கி ஏழுநாட்கள் விழாக் கொண்டாடினார்கள்.சேதியம் கட்டியது

பகவன் புத்தர் பரி நிர்வாணம் அடைந்தார் எனபதைக் கேள்விப்பட்ட  அஜாதசத்துரு அரசன், தூதுவரை அனுப்பித் தனக்குப் புத்தருடைய தாது சிலவற்றை அனுப்பும்படி கேட்டான். அவ்வாறே வைசாலி நாட்டு லிச்சாவியரும், கபிலவத்துச் சாக்கியரும், அல்லகப்பை பூலியரும், இராமகிராகத்துக் கோலியரும், பாவாபுரி மள்ளர்களும், வேட்டதீபத்துப் பிராமணர்களும் தங்களுக்குப் புத்த தாது வேண்டும் என்றும் அந்தத் தாதுவின்மேல் சேதியங்களை அமைக்கப் போவதாகவும் கூறினார்கள்.
ஆனால், குசி நகரத்து மள்ளர்கள், புத்த தாதுவை ஒருவருக்கும் கொடுக்கமாட்டோம் என்று பிடிவாதம் செய்தார்கள். அப்போது, அங்கிருந்த துரோணன் என்னும் பார்ப்பனன், அவர்களை அமைதிப்படுத்தி, புத்த தாதுவைப் பல இடங்களுக்கு அனுப்பினால், அத்தாதுக்களின் மேல் சேதியங்களை அமைத்துக் கொண்டாடுவார்கள்; அதனால் பகவன் புத்தருடைய புகழும் பெருமையும் உலகெங்கும் பரவும் என்று கூறினான். அவர்கள் தாதுவைப் பங்கிட்டுக் கொள்ள இசைந்தார்கள். அவர்கள் துரோணனையே புத்த தாதுவைப் பங்கிடும்படிக் கூறினார்கள். அவனும் தாதுவை எட்டுச் சமபங்காகப் பங்கிட்டுக் கொடுத்தான். தாதுவைப் பங்கிட்ட தட்டத்தை அவன் எடுத்துக்கொண்டு அத்தட்டத்தின் மேல் சேதியம் கட்டினான். தாதுவைக் கொண்டு போன எல்லோரும் அதைத் புதைத்த இடத்தில் சேதியங்களைக் கட்டினார்கள்.

புத்த தாது பங்கிடப்பட்ட பிறகு பிப்பலிவனத்தைச் சேர்ந்த மௌரியர்கள், தங்களுக்கும் புத்த தாது வேண்டுமென்று கேட்டார்கள். முன்னமே பங்கிடப்பட்டபடியினாலே, அவர்களுக்குத் தாது கிடைக்கவில்லை. அவர்கள், திருமேனியை எரித்து எஞ்சியிருந்த கரிகளைக் கொண்டுபோய் அதன் மீது சேதியங் கட்டினார்கள். இவ்வாறு பகவன் புத்தருடைய தாதுக்களின் மேலே பத்துச் சேதியங்கள் கட்டப் பட்டன.

மருள்அறுத்த பெரும்போதி
மாதவரைக் கண்டிலனால்! – என்செய்கோ யான்!
அருள் இருந்த திருமொழியால்
அறவழக்கங்   கேட்டிலனால்! – என்செய்கோ யான்!
பொருள்அறியும் அருந்தவத்துப்
புரவலரைக் கண்டிலனால்! – என்செய்கோ யான்!

About editor 3003 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply