அம்பாறை என்றால் அழகிய பாறை என்று அர்த்தம். ஈழத்தில் உள்ள தமிழ்ப் பெயர்களில் மிகவும் செம்மையானதொரு பெயர் அம்பாறை. மிகவும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அம்பாறை தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்த பூமி. தமிழ் மக்களின் தாயகப் பகுதியில் மிகவும் தொன்மையான பல ஆலயங்களையும் செழுமையான பாரம்பரியங்களையும் கொண்டு அமைந்திருக்கிறது அம்பாறை. சிங்கள அரசுகள் முன்னெடுத்த குடியேற்றத் திட்டங்களின் மூலம் தமிழ் மக்கள்நிலங்களை இழந்தார்கள். 1950களுக்குப் பின்னர் சிங்கள அரசுகள் முன்னெடுத்த தீவிர நில ஆக்கிரமிப்புத் திட்டத்தில் அதிகம் பலியானது அம்பாறை. பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழ் மக்கள் விரட்டப்பட்டு அவர்களின் காணி நிலங்கள் அபகரிக்கப்பட்டு இன்று தமிழர்கள் சிறுபான்மையராக வாழும் மாவட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அம்பாறையின் புரதானம்
அம்பாறையில் ஈழத்தின் புராதனமான சைவ ஆலயங்கள் அதன் பழமையையும் சரித்திரத்தையும் எடுத்துரைக்கின்றன. உகந்தை மலை முருகன் ஆலயம் புராண வரலாற்றுடன் தொடர்புபடுகிறது. போரில் ஈடுபட்ட முருகன் ஓய்வு பெற உகந்த மலையாக கருதி உகந்தை மலையில் இருந்து இளைப்பாறியதாகவும் அதுவே முருகன் இருக்க உகந்த மலை என்பது பின்னர் மருவி உகந்தை மலை எனப் பெயர் பெற்றதாகவும் இந்த ஆலயத்தின் வரலாறு குறிப்பிடுகிறது. இந்த ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்தது. கதிர்காமம் என்ற ஈழத்தின் தொன்மையான முருகன் ஆலயத்திற்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் யாழ்ப்பாணம் செல்வச் சந்தி ஊடாக பயணித்து, முல்லைத்தீவு வற்றாப்பளை ஆலயம் சென்று பின்னர் இவ் ஆலயத்திற்கு செல்வது பண்பாடாகும்.
சங்கமன் கண்டி மலை முருகன் ஆலயம் கி.பி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அக் காலத்தில் ஈழத்தை ஆண்ட சோழ மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டது. சங்கமன் கண்டி மலை ஒரு குறுநில மன்னரின் இராசதானியாக இருந்திருக்கலாம் என்று வரலாற்றுப் பேராசிரியர் சி. பத்மநாதன் சொல்கிறார். அங்கு புரதான நகரம் ஒன்று அமைந்திருந்தமைக்கான தூண்கள், உள்ளிட்ட பல தொல்லியல் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை தமிழ் மக்களின் பூர்வீகத்தினை எடுத்துரைக்கும் வகையில் காணப்படுகின்றது. ஈழத்தின் கண்ணகி வழிபாடு – தாய்தெய்வ – பெண் வழிபாட்டுப் பாரம்பரியங்கள் மிகுந்த இடமாக அம்பாறைப் பிரதேசமும் முக்கியத்துவம் பெறுகிறது.
வீரமுனை கண்ணகியம்மனின் வரலாறு கி.பி 2ஆம் நூற்றாண்டுடன் தொடர்புடையது. தென்னிந்தியாவில் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்த காலத்தில் கொண்டுவரப்பட்ட கண்ணகி சிலையே வீரமுனை கண்ணகி சிலை என்று வரலாற்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன் காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம், தம்புலுவில் கண்ணகி ஆலயம் என்பனவும் இதேகோலத்தில் இவ்வாறு அமையப்பெற்ற ஆலயங்களாகும்.
முருக வழிபாடு தமிழர்களின் முதன்மை வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். கிழக்கின் திருப்படை ஆலயங்களில் ஒன்றான அம்பாறை சித்திரவேலாயுதர் ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயமாகும். இராவணன் காலத்து ஆலயமாக இதன் தொன்மை கூறப்படுகிறது. சோழர் காலத்தில் இந்த ஆலயம் புதுப்பொலிவு பெற்றது. அம்பாறைப் பிரதேசத்தில் உள்ள கிராமங்களின் தமிழ்ப் பெயர்கள் அங்கு தமிழர்கள் வாழ்ந்த செழுமையான பாரம்பரியம் மிக்க வாழ்வை எடுத்துக் காட்டுகின்றன. ஈழத் தமிழரின் தனித்துவமான வாழ்க்கைமுறை, பண்பாட்டு அம்சங்கம், சைவ வழிபாட்டு முறைகளும் நிறைந்த வளங்களும் அம்பாறைப் பிரதேசத்தின் சிறப்புக்களாகும்.
அம்பாறைமீதான சிங்கள ஆதிக்கம் இன்று நேற்று நடக்கவில்லை. வரலாறு முழுவதும் நடந்திருக்கிறது. பண்டைய காலத்திலேயே அம்பாறைமீது சிங்கள மன்னர்களின் படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் பல தடவைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. தமிழரின் தொன்மை மிகுந்த அம்பாறைப் பிரதேசத்தை சிங்கள மன்னர் ஆக்கிரமித்து தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தமிழர்கள் பரந்து விரிந்து மிக நெடிய காலம் முதல் புராதனமாக வாழ்ந்து வரும் நிலையில் அதனை சீர்குலைக்கும் வகையில் சிங்கள அரசின் ஆதிக்கச் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பின் கதிரவெளிப் பிரதேசத்தில் கி.மு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு தொன்மையான பிரேத அடக்குமுறைச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கி.பி முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி 13 வரையான காலத்தில் கிழக்கில் தமிழ் அரச ஆட்சியில் தமிழ் சைவக் கலாசாரம் சமூக வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கியது. ஆறாம் நூற்றாண்டில் திருக்கோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திற்கும் திருக்கோவிலுக்கும் இடையில் படகு வழி போக்குவரத்து இடம்பெற்றது. யாழ்ப்பாண .ராசதானிக்கு முன்னரே கிழக்கில் தமிழ் சைவ சமூக எழுச்சி காணப்பட்டது.
இதேவேளை அம்பாறையில் உள்ள தமிழ்ப் பெயர்கள் தமிழ்ச் சைவப் பண்பாட்டை எடுத்துரைப்பதாக அமைகின்றன. இதற்கு திருக்கோவில் என்ற ஊர்ப் பெயர் சிறந்த எடுத்துக்காட்டு. சித்திரவேலாயுத கோவில் எனப்படும் திருக்கோவில் தமிழ் சைவப் பண்பாட்டின் வழிபாட்டில் முக்கியத்துவத்தை காட்டுகிறது. ஆகமமுறைப்படி எழுந்த இறைக்கோட்டம் கொண்ட கோயில் என்பதனால் இப்பெயர் ஏற்பட்டது. கோயிலின் சிறப்பும் அது அமைந்த தலமும் ஆலயத்தை மாத்திரமின்றி ஊரையே திருக்கோவில் என அழைக்க காரணமானது. அத்துடன் இந்திய – தமிழக தலங்களுக்குக்கூட அமையாத பெயர் இது என்றும் இதன் புனிதமும் பெருமையும் மெச்சப்படுகிறது.
இங்குள்ள காரைதீவு என்பதும் தமிழ் மக்களின் பண்பாட்டின் வரலாற்றின் தொன்மையையும் பாரம்பரியத்தையும் உணர்த்துகிறது. தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் கரையோரத் தீவுகளை காரைதீவு என அழைக்கின்றனர். குறிப்பாக தமிழர்களின் முக்கியத்துவம் வாய்ந்த மூன்று முனைகளில் இப்பெயரின் பயன்பாடு பண்டைய காலம் தொட்டு காணப்படுகிறது. வடக்கில் யாழ்ப்பாணம் காரைதீவும், கிழக்கில் அம்பாறை காரைதீவும் வடமேற்கில் புத்தளம் காரைதீவும் தமிழர் தாயக நிலத்தின் எல்லைகளாக அமைகின்றன. இவற்றின் வாழ்வு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவங்கள் தமிழர் பாரம்பரியத்தின் சீர்மைக்கு தக்க உதாரணங்களாகவும் மேன்மை பெறுகின்றன.
கல்லோயா திட்டம்
பட்டிப்பளை ஆறு என்ற பெயரே கல்லோயா என சிங்களத்தில் மாற்றப்பட்டது. 1949இல் கல்லோயா நீர்ப்பாசனத் திட்டம் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்காக தொடங்கப்பட்டது. நிலங்களற்ற உழவர்களுக்கு காணி வழங்குகிறோம் என்று கூறிக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் பட்டிப்பளை ஆற்றின் அருகில் அணைக்கட்டு கட்டப்பட்டு சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம்கள் குடியேற்றப்பட்டார்கள். நாற்பதாயிரம் ஏக்கரில் நடைபெற்ற இந்தக் குடியேற்றத்தில் 50வீதமான சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். நாற்பது சிங்கள ஊர்கள் உருவாக்கப்பட்டன. இந்தக் குடியேற்றத்திட்டம் சிங்கள – தமிழ் முரண்பாடுகளுக்கும் கலவரங்களுக்கும் வித்திட்டது.
1948இல் இலங்கை சுதந்திரமடைந்தது. உண்மையில் இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்பாகவே தமிழர்களின் பூமியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை சிங்களவர்கள் தொடங்கியிருந்தனர். விஜயனும் 700 தோழர்களும் குவேனி என்ற ஈழத்தின் பூர்வீக அரசியை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்றியது முதலே சிங்களவர்களின் ஆக்கிரமிப்பும் நிலப் பறிப்பும் ஆட்சிப் பறிப்பும் தொடங்கியது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் தங்கள் நிலங்களை இழந்து வருகிறார்கள். அந்த வகையில் சுதந்திரத்திற்கு பிந்தைய ஒரு வருடத்திலேயே அம்பாறையை சிங்கள அரசுகள் கூறப்போட்டு தமிழர் தாயகம் அல்லது தமிழர் தேசம் என்ற கனவை சிதைக்கத் தொடங்கின.
டி.எஸ். சேனநாயக்காவினால் முன்னெடுக்கப்பட்ட கல்லோயா திட்டத்திற்கு இஸ்லாமிய அரசியல்வாதிகளும் ஒத்துழைத்தனர். குறித்த குடியேற்றத் திட்டம் ஊடாக மாபெரும் இனப்படுகொலைக்கு சிங்கள அரசு வித்திட்டது. 1956ஆம் கொழும்பில் இனக் கலவரம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் சிங்கள பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டன. கல்லோயாவில் குடியேற்றத்திட்டத்தின் மூலம் இன முரண்பாடுகள் ஊக்குவிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள தமிழர்களை விரட்டியடித்து காணிகளை அபகரிக்க இனப் படுகொலை நிகழ்த்தப்பட்டது.
இனப்படுகொலை நில அபகரிப்புக்கானதே, நில அபகரிப்பு இனப்படுகொலைக்கானதே என்பதற்கு கல்லோயாப் படுகொலைகள் தக்க உதாணரம். தமிழ் இன விடுதலைப் போராட்டத்திற்கான அவசியத்தை ஏற்படுத்திய கல்லோயாப் படுகொலைகள் தமிழின அழிப்பு வரலாற்றில் ஆறாத, மறக்க முடியாத வடுவாக நிலைத்தது. இந்த இனப்படுகொலையில் சுமார் இருநூறுக்கு மேற்பட்ட ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்ட்டனர். அத்துடன் நிலம் உட்பட அனைத்து சொத்துக்களும் அபகரிக்கப்பட்டன.
அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைந்திருந்த அம்பாறைப் பிரதேசத்தை சிங்களக் குடியேற்றத்திற்காகவும் தமிழர் தாயகத்தை பலவீனப்படுத்தவும் சிங்கள ஆதிக்கத்திற்காகவும் தெற்கின் சில கிராமங்களை இணைத்து தனி மாவட்டமாகவும் தனி தேர்தல் தொகுதியாகவும் மாற்றியது இலங்கை அரசு. அம்பாறையின் மொத்த பரப்பு 4431.4 சதுரக் கிலோமீற்றர். கரையோரப் பரப்பு 1253.8 சதுரக் கிலோமீற்றர் ஆகும். தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த இந்தப் பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் 44 வீதமும் சிங்களவர்கள் 37.5 வீதமும் வாழ தமிழ் மக்கள் 18.3 வீதமாக சிறுபான்மையர் ஆக்கப்பட்டுள்ளனர். இதனால் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இடத்தில் ஒரு இடத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதி வருவதே பெரும் சவாலாகிவிட்டது.
1971, 1981, 2001 காலப் பகுதிகளில் அம்பாறையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புக்களின் பிரகாரம் தமிழர்களின் குடிம்பரம்பல் வீழ்ச்சியை இவ்வாறு அவதானிக்க முடிகின்றது. 1971இல் 30.18 விகிதம் வாழ்ந்த சிங்களவர்கள், 1981இல் 37.7 வீதமாக அதிகரிக்கப்பட்டு 2001இல் 39.3 வீதமாக அதிகரிக்கப்பட்டனர். ஆனால் தமிழர்கள் 1971இல் 22.85 வீதமாகவும் 1981இல் 20.37 வீதமாகவும் 2001இல் 18 வீதமாகவும் குடிப்பரம்பல் வீழ்ச்சியடைச் செய்யப்பட்டனர். திட்டமிட்ட குடியேற்றங்களினால் தமிழர்களின் குடிப்பரம்பல் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை 1827இல் தமிழ் பேசுபவர்கள் 99.62 வீதம் வாழ சிங்களம் பேசுபவர்கள் 0.38 வீதம் வாழ்ந்தனர். 1881இல் தமிழ் பேசுபவர்கள் 93.27 வீதம் வாழ சிங்களம் பேசுபவர்கள் 4.75 வீதம் வாழ்ந்தனர். 1953இல் தமிழ் பேசுபவர்கள் 87.64 வீதம் வாழ சிங்களம் பேசுபவர்கள் 11.52 வீதமாக அதிகரிக்கப்பட்டனர். 1961இல் அப்போது பிரதமராயிருந்த சிறிமாவோ பண்டார நாயக்கா அம்பாறையை அவசர கால சட்டத்தின் கீழ் தனி மாவட்டமாக பிரித்தார். 1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் இடம்பெறுவதற்கு முன்னர் பொலனறுவை மாவட்டத்தின் தெகியத்த கண்டிய என்ற பகுதியையும் பதுளை மாவட்டத்திலிருந்து பதியத்தலாவ என்ற பகுதியையும் சேர்ந்து அம்பாறை என்ற மாவட்டத்தை இலங்கை அரசு உருவாக்கியது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய குடியேற்றங்கள்
சுதந்திரத்திற்குப் பிந்தைய குடியேற்றத் திட்டங்கள் மூலம் சிங்களவர்களின் விகிதாசாரம் இரு மடங்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. 1963இல் 29.34 விகிதமாக இருந்த சிங்களவர்கள் 1981இல் 37.64ஆக அதிகரிக்கப்பட்டனர். 193களில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட பத்திரங்கள் பறிக்கப்பட்டே காணிகள் அபகரிக்கப்பட்டன. தாலிபோட்ட ஆற்றக் கண்டம், அம்பலத்தாறு, வேலாமரத்துவெளி, சேனைக் கண்டம், சோலைவட்டை, சீயாத்தரவட்டை, திராய் ஓடை, நுரைச்சோலை, கொச்சிக்காலை, பொன்னன்வெளி, குடுவில் வட்டை, தொட்டாச்சுருங்கி வட்டை, கொண்ட வெட்டுவான், மகாகண்டி, வெள்ளக்கல் தோட்டம் முதலிய அழகிய பெயர் கொண்ட தமிழ் கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் விரட்டப்பட்ட நிலையில் இவை சிங்களக் கிராமங்கள் ஆக்கப்பட்டன.
சீனித் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டு மாதாமாதம் மானியமும் கொடுக்கப்பட்டு வலிந்த குடியேற்றங்களுக்கு இலங்கை அரசு ஊக்குவித்தது. கரும்புத் தோட்டங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் 5 ஏக்கர் விவசாய நிலமும் குடியிருக்க மேட்டு நிலமும் வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டது. 1977இல் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர் தயாரெட்ண சிரிச்சிக இங்கு சிங்களக் குடியேற்றத்தை வெளிப்படையாக முன்னெடுத்தார்.
1961ஆம் ஆண்டில் #அம்பாறை தனி மாவட்டம் ஆக்கியது முதல் தொடர்ச்சியாக சிங்களவர்களே அரச அதிபராகவும் பிரதேச செயலாளர்களாகவும் அரசால் நியமிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் மேலதிக அரச அதிபர்களாகவும் பிரதேச செயலாளர்களாகவும் கடமையாற்றிய தமிழர்களுக்கு தமது பணிகளை ஆற்ற அனுமதிக்கப்படவில்லை. அரசியல் துன்புறுத்தல்கள் நிகழ்த்தப்பட்டு இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். அத்துடன் அரச திணைக்களங்களில் பெரும்பான்மையினத்தவர்களே அதிகம் நியமிக்கப்படுகின்றனர். இவைகள் யாவும் திட்டமிட்ட குடியேற்றத்திற்கு ஏற்பவே செய்யப்படுகின்றன. இதேவேளை 1960இல் நடந்த தேரல்தலில் சிங்கள அரசு திட்டமிட்டுச் செயற்பட்டபடி சிங்களவர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினரானார். இவரும் பின்னர் குடியேற்றங்களை ஊக்குவித்து முன்னெடுத்தார்.
அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் தொடர்பில் உரிய வகையில் மீளாய்வு செய்யப்பட்டு செயற்கையாக அதிகரிக்கப்பட்ட குடியேற்றத்திட்டங்களை கலைக்க வேண்டும் என்று அம்பாறை தமிழ் மாகாண சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர். 62.08 வீதம் வாழும் தமிழ் பேசும் மக்கள் 30வீத நிலத்திலும் 37.64 வீதம் சிங்கள மக்களின் வசம் 70 வீத அம்பாறை நிலமும் இருக்கின்றது. குடியேற்றத்திட்டங்களின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள நில அபகரிப்பை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் மக்கள் கோரியுள்ளனர்.
1967ஆம் ஆண்டுக்குப் பின்னர் அம்பாறையில் சுமார் 12ஆயிரம் ஏக்கர் காணிகளை இலங்கை அரசு தமிழர்களிடமிருந்து பறித்து சிங்களக்குடியேற்றம் செய்திருப்பதாக இந்தியாவின் ருத் டைவ் என்ற இணையதளம் அண்மையில் கூறியிருந்தது. 6500 ஏக்கர் நெல் வயல்களும் 3500ஏக்கர் தென்னந்தோப்புக்களும் 2000 ஏக்கர் கரும்புத் தோட்டங்களும் இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ருத் டைவ் இணையதளம் இலங்கை அரச படைகள் புதிதாக பல இடங்களில் பௌத்த விகாரைகளைக் கட்டியிருப்பதாகவும் 20 சைவ ஆலயங்களை இலங்கை அரச படைகள் அழித்துள்ளதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
காணி அபகரிப்பில் இஸ்லாமியத் தலைவர்கள்
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் அரசியல் தலைவர்களும் காணி அபகரிப்பை ஊக்குவிக்கின்றனர். சிங்கள அரசு எவ்வாறு அரசியல் காரணங்களுக்காக காணி அபகரிப்பை முன்னெடுக்கிறதோ அவ்வாறே, முஸ்லீம் தலைவர்களும் தமது அரசியல் இருப்பை பெருக்கிக்கொள்ள தமிழர் நிலங்களை அபரிக்கின்றனர். அம்பாறையின் வட எல்லையான பெரிய நீலாவணையில் தமிழர்களின் பூர்வீக காணிகளை முஸ்லீம்கள் அபகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். இராஜேஸ்வரன் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட அம்பாறை மண் இன்று பல வழிகளில் அழிந்து வருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த. கலையரசன் தெரிவித்துள்ளார்.
மீனோடைக்கட்டு என்ற பூர்வீகத் தமிழ்க் கிராமம் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த மீனோடைக்கட்டு தமிழ்ப் பாடசாலை தற்போது முஸ்லீம் பாடசாலை எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்த இந்துக்கோவில் தற்போது இறைச்சிக் கடையாக மாறியுள்ளது. திராய்க்கேணி, தமிழ்க் குறிஞ்சி முதலிய கிராமங்களும் இவ்வாறு பறிபோயுள்ளன.
இராணுவத்தின் வசம் மக்களின் காணிகள்
போரை காரணம் காட்டி அம்பாறையில் 11 தமிழ் பூர்வீகக் கிராமங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். 2009இற்குப் பின்னர் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் பல புதிய இராணுவ முகாங்களை அரச படைகள் அமைத்திருப்பதாக கூறும் கலையரசன் “சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாநித்தலை வானொலி ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு உரித்தான 43 பேருக்குச் சொந்தமான 50 ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழ்மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்து தன்வசப்படுத்தி பாரிய கட்டடங்களை அமைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் மக்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகளுக்குரிய ஆவணங்கள் அவர்களிடம் உள்ளன. விவசாயப் பண்ணையை அண்டிய மல்வத்தைப் பகுதியில் பாரிய இராணுவமுகாம் உள்ள நிலையில் மீண்டும் அங்கு ஏன் பாரிய படைமுகாங்களை அமைக்க வேண்டும் என்று மக்கள் கேள்வி எழுப்பினர். அத்துடன் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் நீர்ப்பாசன செயற்பாட்டுக்குச் சொந்தமான பத்து ஏக்கர் காணிகளை அபகரித்து இராணுவத்தை அங்கு நிலைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ன.
கடந்த 2012ஆம் ஆண்டு காலப் பகுதியில் பெரியநீலாவணை, கல்முனை, காரைதீவு, திருக்கோவில் பகுதிகளில் பாரிய இராணுவப் படைமுகாங்கள் உருவாக்கப்பட்டன. 1983க்கு முன்னர் தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த பகுதிகளில் தொட்டாச்சுருங்கி வட்டையும் மலையடி வட்டையும் முக்கியமானவை. இங்கு தொட்டாச்சுருங்கி வட்டையில் 1983 ஏக்கர் நிலமும் மலையடி வட்டையில் 197 ஏக்கர் நிலமும் சிங்கள பௌத்த பிக்கு ஒருவரால் பறிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்தக் காணிகளுக்குரிய ஆதாரங்கள், ஆவணங்கள் தமிழ் மக்களிடம் உண்டு.
நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு தமிழ் மக்களிடம் காணிகளை கையளிக்க உத்தரவிடப்பட்ட போதும் இன்னும் காணிகள் மீள வழங்கப்படவில்லை. ஆனால் யுத்தம் முடிந்து, இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் தமிழ் மக்கள் நீதிமன்ற தீர்ப்பின்படிகூட தங்கள் காணிகளை பெற முயவில்லை. இந்தக் காணிகளில் பாரிய இராணுவமுகாங்களை இன்னும் அமைக்கும் திட்டம் அரசுக்கு இருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர். அம்பாறையில் சிங்களக் குடியேற்றங்கள் ஒருபுறமும் இராணுவமுகாங்கள் மறுபுறமும் தமிழ் மக்களை மிகவும் ஒடுக்குகிறது.
.அம்பாறையில் பல இடங்களில் தமிழ் மக்களின் தொல்லியல் எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சில இடங்களை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளுகிறோம் என்று கூறி அரசு அபகரிப்பில் ஈடுபடுகிறது. தமிழர் தொல்லியல் ஆதாரங்களை மூடி மறைக்கும் செயலிலும் அரசு ஈடுபடுகிறது. அரசின் பௌத்த மத விவகார அமைச்சு அம்பாறை மாவட்டத்தில் குறியாக இருக்கிறது. புதிய வளத்தாப்பிட்டியில் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் இராணுவம் பொலிஸார் சகிதம் காணி ஆக்கிரமிப்பு மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
அம்பாறை உணர்த்தும் பாடம்
தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வரும் பிரதேசம் அம்பாறை. தமிழர் பண்பாடும், பாரம்பரியங்களும், சைவத் தொன்மையும், செழுமையான வாழ்க்கைக் கோலங்களும் கொண்ட அம்பாறை மண்ணில் இன்று பலமுனைகளில் ஆக்கிரமிப்பும் அபகரிப்பும் இடம்பெற்றுள்ளது. சுதந்திரத்திற்கு முன்பாகவே, இன முரண்பாடுகளுக்கு முன்பாகவே அம்பாறையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் அதன் வாழ்வுக் கோலத்தை அழிக்கும் முயற்சியில் அதன் சரித்திரத்தை சிதைக்கும் முயற்சியில் இலங்கை அரசுகள் ஈடுபட்டு வந்துள்ளன.
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த அம்பாறைப் பிரதேசத்தில் இன்று சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளதுடன் தமிழ்க் கிராமங்கள் எல்லாம் திருகி அழிக்கப்பட்டுள்ளன. கடுமையான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக தமிழ் மக்களின் குடிப்பரம்பல் வீழச்சியடைந்து அம்பாறையில் தமிழ் மக்கள் மிக சிறுபான்மை நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த அம்பாறையில் இன்று அவர்கள் சிறுபான்மையாக்கப்பட்டுள்ளதுபோல, ஒட்டுமாத்த கிழக்கு மாகாணத்திலும் தமிழர்களை சிறுபான்மையாக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை அழித்து தமிழ் தேச ஆட்சிக் கோரிக்கையை முறியடித்து தமிழர் நிலங்களை அபகரித்து அவர்களின் தாயகப் பரப்பை ஆக்கிரமிப்பதும் ஆள்வதுமே இதன் நோக்கமாகும். தமிழர் தொடர்ந்து விழிப்புடன் வாழவும் போராடவும் தலைப்படாத பட்சத்தில் அம்பாறை மண்ணுக்கு நடந்ததே ஒட்டுமொத்த தமிழ் தாயகத்திற்கும் ஈழ மக்களுக்கும் நடக்கும் என்பதையே அபகரிக்கப்பட்ட அம்பாறை உணர்த்தி நிற்கிறது.
-குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
Leave a Reply
You must be logged in to post a comment.