இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்த குழப்பமான சூழலில், பிரச்சினையின் ஆணி வேரை ஆராய்கிறது இலங்கையில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் இந்த வெளியீடு.
”இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளும்!” என்ற தலைப்பில் இலங்கையில் செயல்பட்டுவரும் புரட்சிகர அமைப்பான புதிய ஜனநாயக மாக்சிச – லெனினிச கட்சி ஒரு சிறு வெளியீட்டை வெளியிட்டுள்ளது.
இந்த வெளியீட்டை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும். இந்த வெளியீட்டை முழுமையான பதிவாக இங்கு வெளியிட்டுருக்கிறோம்.
இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளும் !
அனைத்து மத அடிப்படைவாதங்களும் எதிர்க்கப்படவேண்டும் ! முஸ்லீம் மக்கள் எல்லோரையும் சம்மந்தப்படுத்தி நோக்கக்கூடாது !
தாக்குதலும் எதிர்வினைகளும்
கடந்த 2019 ஏப்ரல் 21-ம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் தற்கொலைக் குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்க வைத்ததால் 250-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திட்டமிட்டு இலக்கு வைத்த தேவாலயங்கள் மூன்றும் கத்தோலிக்கத் தேவாலயங்கள் எனவும் நேரந் தவறியதால் சியோன் தேவாலயம் தாக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.
தாக்குதல்கள் நிகழ்ந்த நாள் கிறிஸ்தவர்கட்கு அதி புனிதமான உயிர்த்த ஞாயிறு. அது கிறிஸ்தவர்கள் பெருந்தொகையாகத் தேவாலயஞ் சென்று விசேட ஆராதனைகளிற் பங்கேற்கும் நாள். எனவே தாக்குதல்களின் நோக்கம் தேவாலயங்களைச் சேதப்படுத்துவதுடன் பெருந்தொகையான கிறிஸ்தவர்களைக் கொல்வதுமாகும். குறி தவறிய ஒரு ஹோட்டல் உட்பட, இலக்கு வைத்த ஹோட்டல்கள் என்ன அடிப்படையிற் தெரியவாயின என நிச்சயமில்லை.
இத் தாக்குதல்கள் எழுப்பும் முக்கிய கேள்விகளைப் புறக்கணித்தே, அரசியற் பிரமுகர்களும் சமூகத் தலைவர்களும் தாக்குதல்களைப் பற்றியும் மேற்கொண்டு இவ்வாறான தாக்குதல்களைத் தவிர்ப்பதைப் பற்றியும் அதிகமாகப் பேசுகின்றனர். மிக நிதானமான சிலர், சமூகங்களிடையே ஒற்றுமையைப் பேணலும் பாரபட்சத்தை நீக்கலும் தேவை என வலியுறுத்துகின்றனர். பலர் தங்களுடைய இறுகிய சிந்தனைகளினின்று விடுபடாது, தமக்கு வாய்ப்பான விளக்கங்களையும் தீர்வுகளையும் முன்வைக்கின்றனர். சில ஊடகங்களின் நடத்தை எரிகிற வீட்டில் விறகு பொறுக்கும் வழமையில் வணிக நோக்குடன் தொடர்கிறது.
இது தனியே முஸ்லிம்கள் பற்றிய பிரச்சனையல்ல. முஸ்லீம் ‒ கிறிஸ்துவப் பகை பற்றியதுமல்ல. இது முழு நாட்டினதும் பிரச்சனை. நாட்டின் அமைதியும் மக்களின் பாதுகாப்பும் பற்றிய பிரச்சனை. எனினும் இப் பிரச்சனையின் அடிப்படை, தேசிய இனப் பிரச்சனை ஒரு பகை முரண்பாடாக்கப்பட்டமையாகும். அதனால் சாதாரண மக்களிடையே இனப் பகை கூறிப்பிடத்தக்க அளவில் இல்லாவிடினும் பிற சமூகங்களைச் சிறிதேனும் சந்தேகத்துடன் நோக்கும் தன்மை உருவானது.
எனவே, முஸ்லிம் தீவிரவாத எழுச்சியின் பின்புலத்தைச் சிறிது ஊன்றி நோக்க வேண்டும். அதன் தேசிய, சர்வதேசியப் பரிமாணங்களையும் கவனிக்க வேண்டும். அதைவிட, முஸ்லிம் சமூகத்தினருக்கும் பிற சமூகத்தினருக்கும் இருந்த உறவின் சீரழிவையும் அதற்குப் பங்களித்த சமூகப் போக்குகளையும் விசாரிக்கவேண்டும்.
முதலில், முஸ்லிம்களின் சமூக அடையாளத்தையும் பிற சமூகங்களுடனான அவர்களுடைய உறவையும் கவனிப்போம்.
முஸ்லிம்களின் சமூக அடையாளம்
முஸ்லிம்கள் நீண்டகாலமாகத் தம்மை ஒரு தேசிய இனமாக அறிவிக்காத போதும், அவர்கள் தமது தனித்துவத்தை ஒரு நூற்றாண்டுக்கு மேலாக வலியுறுத்தி வந்துள்ளனர். இஸ்லாம் மதம் வணிகர்கள் ஊடாகவே இலங்கைக்கு அறிமுகமாகியதால், முஸ்லிம்களிடையே வணிகர்களின் விகிதாச்சாரம் பிற சமூகங்களில் உள்ளதினும் அதிகம். எனினும் இன்று பெரும்பாலோர் உடல் உழைப்பாற் பிழைப்போராவர்.
சிங்கள முதலாளிகட்கு முஸ்லிம்களுடன் வணிகப் போட்டியிருந்தது. அதன் விளைவாகவே 1915-ல் வடக்கு ‒ கிழக்கு தவிர்ந்த இலங்கையிற் கடுமையான சிங்கள ‒ முஸ்லிம் மோதல் நடந்தது. அம்மோதலில் வன்முறையைத் தூண்டியமைக்காகக் கைதான சிங்கள பேரினவாதத் தலைவர்களின் சார்பில் கப்பலில் லண்டனுக்குப் போய் வாதாடிய சேர் பொன்னம்பலம் இராமநாதன் பேரினவாதிகளை விடுவிக்குமாறு மன்றாடியதோடு, முஸ்லிம்கட்குப் பாதகமாயும் பேசியமை தென்னிலங்கை முஸ்லிம் தலைவர்களிடையே கசப்பை ஏற்படுத்தியது.
முஸ்லிம்களில் ஏகப்பெரும்பாலானோரின் வீட்டு மொழி தமிழ் என்ற காரணத்தை முன்னிறுத்தி, அவர்கள் தமிழர்கள் என்றும் முஸ்லிம்கட்குத் தனிப் பிரதிநிதித்துவம் தேவையில்லை என்றும் இராமநாதன் முன்னர் வாதித்தமையும் நோக்கத்தக்கது.
முஸ்லிம்கள் கிழக்கிலங்கையிற் கணிசமானளவு பிரதேசத்திற் செறிவாக வாழ்கின்றனர். வடக்கிலும் மேற்குக் கரையோரமாயும் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பிரதேசங்கள் உள்ளன. ஆயினும் ஏகப் பெரும்பாலோர் பல இடங்களிற் சிங்கள மக்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க சிறுபான்மையாக உள்ளனர். எனவே அவர்கள் தமிழருடன் ஒப்பிடத்தக்க மொழிப்பற்று உடையோராயினும், அவர்களின் தனித்துவம், மொழியை விட முக்கியமாக மதமும் பண்பாடும் சார்ந்திருந்தது.
ஜி.ஜி. பொன்னம்பலம்
அவர்களுடைய தனித்துவத்தை இராமநாதன் நிராகரித்தார். முற்றிலும் யாழ், குடாநாட்டை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியலை அவருக்குப் பின் வந்த ஜி.ஜி. பொன்னம்பலம் முன்னெடுத்தார்.
வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழரையும் மலையகத் தமிழரையும் முஸ்லிம்களையும் ஒரு பொது அடையாளத்துட் கொண்டுவரும் நோக்குடன் தமிழரசுக் கட்சி தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்தை முன்வைத்தது. அது வடக்கு‒கிழக்கின் முஸ்லிம்கட்கு உடன்பாடானதெனினும், தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளும் போராட்டங்களும் முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் சிறப்பான தேவைகளை வலியுறுத்தத் தவறின. தமிழரசுக் கட்சிக்குப் பாராளுமன்ற ஆசன எண்ணிக்கை முக்கியமாயிருந்தது. முஸ்லிம் பிரமுகர்கட்குத் தங்களைத் தனிப்பட வலுப்படுத்தும் தேவை இருந்தது. எனவே, வெறும் தேர்தல் வாக்குக் கணிப்பின் மீது கட்டியெழுப்பிய புரிந்துணர்வு நிலைக்கவில்லை.
பேரினவாதிகளுடைய ஒடுக்கல் அணுகுமுறையாலும் தமிழ்த் தேசியவாதிகளின் குறுகிய நோக்காலும் தேசிய இனப் பிரச்சனை மோசமாகி ஒடுக்குமுறை வலுத்த சூழலில் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அக்கோரிக்கை நாட்டில் வாழும் தமிழ்த் தேசிய இனம் முழுவதையும் பற்றிய கணிப்பில்லாமலும் முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் பற்றி உரிய சிந்தனை இல்லாமலும் அமைந்தது. எனவே, முஸ்லிம்கள் தமிழ் மக்களின் உரிமைகட்கு ஆதரவாக இருந்தபோதும் பிரிவினை பற்றிய ஐயத்துடனேயே இருந்தனர்.
தமிழர் ‒ முஸ்லிம்கள் பிரிவினை
தமிழ்ப் பாராளுமன்ற அரசியற் தலைமைகள் மீதான நம்பிக்கையை இழந்த நிலையில் முன்னணிக்கு வந்த தமிழ்த் தேசிய இளைஞர் இயக்கங்களிடையிலும் குறுந்தேசிய மேலாதிக்கப் போக்கு முனைப்பாயிருந்தது. முஸ்லிம்கள் தமிழீழக் கோரிக்கையை ஏற்றேயாக வேண்டுமெனப் பெருவாரியான இளைஞர் இயக்கங்கள் நிர்ப்பந்தித்தன.
குறிப்பாக, விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் வலுத்த போர்ச் சூழலில், முஸ்லிம்களும் தமிழ் மக்களைப் போல தமக்குக் கீழ்ப்பட்டு நடக்க வேண்டுமென எதிர்பார்த்த விடுதலைப் புலிகளின் அணுகுமுறையால் முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்தனர். அதன் பயனாகக் கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில், முஸ்லிம்களை வலிந்து தாக்கலும் முஸ்லிம்களின் எதிர்த் தாக்கலும் சில முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் நிற்பதுமாகத் தமிழ் ‒ முஸ்லிம் நல்லுறவுக்குக் கேடு விளைந்தது.
காத்தான்குடி மசூதி மீதான தாக்குதல்
அதை மேலும் மோசமாக்குமாறு 1990-ல் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியமை தமிழ்த் தேசியத்துக்கும் முஸ்லிம்கட்குமிடையே கடும் பிரிவை ஏற்படுத்தியது.
தமிழரிடமிருந்து முஸ்லிம்கள் விலகுவதை விரும்பித் தமிழ் ‒ முஸ்லிம் பகையைத் தூண்டும் செயல்களைச் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்தனர். அதை வாய்ப்பாக்கிய சில தமிழ்த் தேசியவாதிகளும் தமிழ் ‒ முஸ்லிம் பகைக்குத் தூபமிட்டனர். அதில் பேரினவாதிகள் குளிர்காய்ந்தனர்.
இன்று தென்னிலங்கையில் முஸ்லிம்களிற் குறிப்பிடத்தக்க பகுதியினர் அரசாங்க நிர்ப்பந்தத்தாலும் வளக் குறைவுகளாலும் சில சமயம் சுய தெரிவாயும் சிங்கள மூலமே கல்வி பெறுகின்றனர். சிங்களம் இன்னமும் பலரின் வீட்டு மொழியாகாவிடினும், முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் மேலும் மேலும் மதமும் பண்பாடும் சார்ந்து அமையும் சூழ்நிலை வலுத்துள்ளது.
எவ்வாறாயினும், சிங்களத் தேசியவாதம் சிங்கள ‒ பௌத்த பேரினவாதமாக உருமாறிய நிலையில் அது முஸ்லிம்களைச் சிங்களவர்களாக ஏற்கும் வாய்ப்புக் குறைவு. அதேவேளை, தமிழ்க் குறுந்தேசியம் ஒருபுறம் முஸ்லிம்களின் தனித்துவத்தை மறுத்து அவர்களைத் தமிழ் மேட்டுக்குடிகட்குக் கீழ்ப்பட்டோராகக் கருதுவதால், முஸ்லிம்கள் தமிழ்த் தேசிய அடையாளத்துக்கு உட்படவும் வாய்ப்பு இல்லை எனலாம்.
தேசிய இனமாக முஸ்லிம்கள்
பொது நிலைமைகளுடன் குறிப்பான நிலைமைகளையும் கணிப்பிற்கொண்ட புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, முஸ்லிம் தலைவர்களையும் மலையகத் தமிழ்த் தலைவர்களையும் விட முற்போக்காகச் சிந்தித்து, முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் தனித்துவத்தை அங்கீகரித்ததோடு, அவர்களைத் தனித் தேசிய இனங்களாக ஏற்கவேண்டுமெனவும் வற்புறுத்தியது.
அந்த அடிப்படையிலேயே சுயநிர்ணயக் கோட்பாட்டை மேலும் விரிவுபடுத்தி, நாட்டின் நான்கு தேசிய இனங்கட்கும் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, ஐக்கிய இலங்கைக்குட் சுயாட்சி அமைப்புகள் என்ற தீர்வை முன்வைத்தது.
1978-ம் ஆண்டின் அரசியல் யாப்புப் புகுத்திய விகிதாசாரத் தேர்தல் முறை முஸ்லிம்கட்கு முன்னெப்போதினும் அதிகப் பிரதிநிதித்துவத்துக்கு வழி செய்தது. அதன் மூலம் பாராளுமன்றத்திற் கணிசமான ஆசனங்களை வென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் பதவிகளைப் பெறவும் பிற சலுகைகளையும் வளங்களையும் அடையவும் முற்பட்டதேயொழிய, முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனமாகவோ தனித்துவமான ஒரு சமூகமாகவோ எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பார்க்கவில்லை. இப்போக்கு முஸ்லிம் பாராளுமன்ற அரசியற் தலைமைகளின் சமூக நம்பகத்தை வேகமாகக் குலைத்தது.
பேரினவாதத்தின் இலக்காக முஸ்லிம்கள்
1915 -க்குப் பின் நீண்டகாலமாக சிங்கள ‒ முஸ்லிம் மோதல் ஏதும் நிகழவில்லை. ஆயினும், முஸ்லிம் வணிகர்கள் இரத்தினக்கல் வணிகம் போன்ற துறைகளிலும் 1970 -களின் எண்ணெய் நெருக்கடிக்குப் பின்பு மத்திய கிழக்குப் பொருளாதாரம் கண்ட செழிப்பின் பயனான புதிய வணிக முயற்சிகளிலும் மேலுஞ் செல்வந்தர்களான சூழ்நிலையிற், பழைய போட்டியுணர்வு தலைதூக்கியது. எனினும் ஒருசில உள்ளூர் மோதல்கட்கு மேல் குறிப்பிடத்தக்களவில் எதுவும் நிகழவில்லை.
1977 -க்குப் பின் தமிழ்த் தேசிய இனத்தை இலக்குவைத்த சிங்களப் பேரினவாதம், முஸ்லிம்களுடன் தனது முரண்பாட்டைத் தாழ்நிலைக்கு இறக்கியது. ஆயினும் முஸ்லிம்கட்கெதிரான கசப்பு நீறுபூத்த நெருப்பாகத் தொடர்ந்தது. அதை முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிவராயினும். வாக்கு வங்கிகளைப் பலப்படுத்துவதிலும் பாராளுமன்ற, அமைச்சுப் பதவிகளைக் கட்டிக்காப்பதிலும் தங்களையும் தங்களது குறுகிய வட்டங்களை வளப்படுத்துவதிலும் அவர்கள் கவனங்காட்டினரே ஒழிய, முஸ்லிம்களைப் பிற சமூகங்களுடன் இணக்குவதைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை.
சிங்கள ‒ பௌத்த மதவாதம் சிஹல உருமய எனத் தொடங்கி இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜாதிக ஹெல உருமய எனும் அப்பட்டமான சிங்கள ‒ பௌத்த இனவாத அமைப்பாகப் பரிணமித்தது. அதனோடொட்டி முஸ்லிம் விரோதத்தை முதன்மைப்படுத்தும் வன்முறை அமைப்புகள் தோன்றின. அவற்றுள் முக்கியமானவை பொது பல சேன. சிஹல ராவய, சிங்ஹ லே போன்றவை.
அதேவேளை, கிறிஸ்தவர்கட்கும் முஸ்லிம்கட்கும் எதிரான துவேஷத்தைக் கிளறிய சோம தேரர் போன்றவர்கட்கு ஊடக ஆதரவும் இருந்தது. 2003 -ஆம் ஆண்டு ரஷ்யாவுக்குச் சென்ற சோம தேரர்; நோய் காரணமாக மரித்ததை ஒரு சதியென்று கூறிக் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டன. இப் போக்கு இன்னமும் தொடர்கிறது.
விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின், சிங்கள‒பௌத்த வன்முறை அமைப்புகள், தேசிய இனப் பிரச்சனையின் தீர்வுக்கு ஆப்பு வைப்பது போக, முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் குறிப்பாக இலக்கு வைத்தன. முஸ்லிம் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டன. ஆயினும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய சூழ்நிலைகளிலும் பேரினவாதிகளுடன் சமரசம் செய்வதையே முஸ்லிம் பெருவணிகர்கள் விரும்பினர். இப் பலவீனத்தைச் சிங்கள‒பௌத்த வெறியர்கள் தமக்குச் சாதகமாக்கினர்.
சிங்கள‒பௌத்த வெறியர்கள் ஹலால் மாமிசத்துக்கு எதிராக முன்னெடுத்த இயக்கத்தின் போது, இரு தரப்புகளிலும் இருந்த பிரச்சனைகளை அறிந்த முஸ்லிம் தலைமைகள், சிங்கள மக்களுக்கு ஹலால் பற்றி அறிவூட்டாததோடு, ஹலால் என்பதைப் பணம் சம்பாதிக்கும் உபாயமாக்கும் மத நிறுவனங்களைக் கண்டிக்கவும் தயங்கினர். இதனால் முஸ்லிம்கள் சிங்களவர் மீது ஹலால் மாமிசத்தைத் திணிப்பதாகப் பொது பல சேன ஆகிய நிறுவனங்கள் நடத்திய துவேஷப் பிரசாரங்களை வேளைக்கே முறியடிக்க இயலவில்லை.
முஸ்லிம்களிடையே மத அடிப்படைவாதப் போக்கு
முஸ்லிம் சமூகம் அரசியற் தளத்திற் தனிமைப்பட்ட அதே வேளை, அதை மேலும் தனிமைப்படுத்துங் காரியங்களில் சவுதி நிதி உதவியுடன் செயற்பட்ட சலாஃபி‒வஹாபி முகவர்கள் தீவிரமாயினர்.
1970 -களின் இறுதி ஆண்டுகள் தொட்டு மத்திய கிழக்கில் வேலை தேடும் போக்கு வலுத்தது. அதை யூ.என்.பி. அரசாங்கம் ஊக்குவித்தது. அதன் தீய சமூக விளைவுகளைப் பற்றி இப்போது பலரும் பேசுவர்.
இலங்கை முஸ்லிம்களின் சமூக வாழ்வில் அரபியப் பண்பாட்டுத் திணிப்பு ஒரு முக்கிய அம்சமாகும். மத்திய கிழக்கில் வேலை வாய்ப்புகள் பெண்களைப் பணந்திரட்டும் பொறிகளாக்கிய அளவுக்குப் பெண்கள் சம்பாதித்த பணம் அவர்களுடைய சமூக விடுதலைக்கு உதவவில்லை.
அரபுச் சமுதாயங்களின் (முக்கியமாகப் படுபிற்போக்கான ஆட்சிகளைக் கொண்ட அரபுத் தீபகற்ப நாடுகளின்) கடும் ஆணாதிக்கச் சிந்தனை ஆண்கள் மூலமும் பெண்கள் மூலமும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற் பரவியது.
அதைவிடப், பல்வேறு அரபு நாடுகள் முஸ்லிம்களிடையே தமது செல்வாக்கை வளர்க்க நிதியுதவி, நிவாரணப் பணிகள், அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றைப் பாவித்தன. குறிப்பாக, நிதியுதி முதல் சலாஃபி‒வஹாபி பிரசாரங்கள் உட்படப் பல வழிகளிற் சவூதிச் செல்வாக்கு முஸ்லிம் சமூகத்தை ஊடுருவியது.
இஸ்லாம் என்பது இன்னது தான் என்று கட்டுப்படுத்தவும் அதற்குப் புறம்பான எதுவும் இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமானது எனவும் முஸ்லிம் சமுதாயத்தினுட் புதிய கட்டுப்பாடுகள் உருவாகின. தனிப்பட்ட அளவில் இது பெண்களின் உடை பற்றிய கட்டுப்பாடாக வெளிப்பட்டது. முஸ்லிம் ஆண்கள் தாடி வைப்பது முதல் சவூதியில் அணிவது போன்ற மேலங்கி அணிவது வரை வற்புறுத்தப்பட்டது.
முஸ்லிம் விரோத வன்செயல்களும் நிந்தனைகளும் வலுத்தநிலைமைகளில் அதற்குத் தமது எதிர்ப்பைக் காட்டவும் கணிசமானோர் இஸ்லாமிய உடைகளை அணியலாயினர். இஸ்லாமிய உடை அணிந்த யாவரும் சலாஃபி‒வஹாபிகளல்ல. எனினும் நாட்டில் வலுத்துவந்த மதவாதச் சிந்தனைகளிடையே அது முஸ்லிம்களைப் பிற மதத்தினரிடமிருந்து தனிமைப்படுத்த உதவியது.
அதேவேளை, மதத் தீவிரவாதம் முஸ்லிம் சமூகத்தினுட் பிளவுகளை விளைவித்தது. மதச்சார்பற்றுச் சிந்திக்கும் முஸ்லிம்களையும் சலாஃபி‒வஹாபிகள் ஏற்காத நடைமுறைகளைக் கடைப்பிடிப்போரையும் மார்க்க விரோதிகள் என நிந்திக்கவும் முஸ்லிம் சமூகத்தினின்று விலக்கவும் முயற்சிகள் நடந்தன.
சூஃபியம் எனும் திறந்த சிந்தனைப் போக்குள்ள ஒரு வகைச் சித்தர் மரபு இலங்கையிலும் இருந்துள்ளது. அதைவிட நல்லொழுக்கமுடைய முஸ்லிம் சான்றோரின் ஜனாஸாக்களை (சடலங்களை) அடக்கிய கபுர் எனும் கல்லறைகளை வணங்கும் வழக்கமும் இருந்துள்ளது. இவை யாவும் கடுமையாகச் சாடப்பட்டன. ஒரு தசாப்தம் முன்னர் மேற்கில் பேருவளையிலும் கிழக்கில் காத்தான்குடியிலும் மார்க்க விரோதப் பள்ளிவாசல்கள் என சூஃபி பள்ளிவாசல்களைத் தாக்கிய நிகழ்வுகள் பரவலாகப் பேசப்பட்டன.
முஸ்லிம் சமூகத்தைப் பிளந்த இப் போக்குகள் ஆழப் புரையோடி மேலால் அயறு படர்ந்த புண்களாக இருந்தன. முஸ்லிம் மக்களைப் பிறரிடமிருந்து பிரிக்கும் தீவிரப் போக்குகளை முறியடிக்க முஸ்லிம்களிற் பெரும்பான்மையினருக்கு ஆதரவு தேவையாய் இருந்த சூழ்நிலையில், முஸ்லிம் விரோதப் பிரசாரமும் வன்முறையும் தீவிரப் போக்குகட்கும் அடிப்படைவாதத்துக்கும் மேலும் தனிமைப்படலுக்குமே உதவின.
முஸ்லிம் மக்களும் முஸ்லிம் தலைமைகளும்
தென்னிலங்கையில் 1970 -களின் நடுப்பகுதியில் நடந்த ஓரிரு வன்செயல்களை ஐக்கிய முன்னணி அரசாங்கம் கவனமாகக் கையாண்டு அவை பரவாமற் தடுத்தது. ஆனால் அடியாழத்திலிருந்த துவேஷத்தின் காரணங்களை விளங்கவோ களையவோ இயலவில்லை.
1970 -களில் இரத்தினக் கல் வணிகம் மூலம் சில முஸ்லிம் வணிகர்கள் பெருஞ் செல்வந்தர்களாயினர். அதைவிட, 1974 -இன் பின் எண்ணெய் விலை பன்மடங்கு உயர்ந்ததால் மத்திய-கிழக்கு நாடுகளின் பொருளாதாரம் செழித்தது. அதையொட்டி வணிக, வேலை வாய்ப்புகள் வளர்ந்தன. இதனால் இலங்கையின் எல்லாச் சமூகத்தினரும் நன்மையடைந்தாலும், முஸ்லிம்கள் வாய்ப்புகளைக் கூடியளவிற் பயன்படுத்தினர். 1978 -இன் திறந்த பொருளாதாரக் கொள்கையையடுத்து மத்திய கிழக்கிற் தொழில்தேடும் போக்கு வேகமடைந்தது.
அதைவிட, 1956 முதல் அரசாங்கம் முஸ்லிம்களின் கல்வியிற் சிறப்பான கவனங் காட்டியது. 1970 தொட்டு முஸ்லிம்கள் உயர் கல்வியிற் துரிதமாக முன்னேறினர். எனவே, முஸ்லிம்களுடன் வணிகத் துறையில் இருந்த போட்டி 1980 -களில் உயர் கல்வித்துறைக்கும் விரியலானது.
அது போக, முஸ்லிம் செல்வந்தர்கள் தம் செல்வச் செழிப்பைக் காட்டுமாறு ஆடம்பர வீடுகளையும் பெரிய பள்ளிவாசல்களையும் கட்டலாயினர். பெரு நகரங்களை விட முக்கியமாகப், பொருளாதார வளங்குறைந்த சிறிய பட்டணங்களில் இவை வறுமைப்பட்ட பிற சமூகத்தினரின் கண்களை உறுத்தின. மத்திய கிழக்கிலிருந்து வந்த நிதியுதவி முஸ்லிம் சமூகத்தின் வசதி படைத்தோரை வளப்படுத்தியமை பலரது கவனத்தையும் ஈர்த்தது.
பேரினவாத அரசியற் கட்சிகள் ஆட்சி அமைக்க முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அரசியல் சந்தர்ப்பவாதம் உதவியபோதும், முஸ்லிம் தலைவர்கள் பேரம் பேசி முக்கிய பதவிகளைப் பெறுவதும் அவற்றின் மூலம் தம்மையும் தம்மைச் சார்ந்தோரையும் வளப்படுத்துவதும் பற்றிய வெறுப்பு இருந்தது. முஸ்லிம் தலைமைகள் இவ்வாறான விடயங்களைக் கவனிப்பதற்கு மாறாகத் தமது முஸ்லிம் வாக்கு வங்கிகளை வலுப்படுத்தும் நோக்கிற் செயற்பட்டனர்.
1978 -ஆம் ஆண்டுக்குப் பிந்திய விகிதாசாரத் தேர்தல் முறை, முற்றிலும் முஸ்லிம் வாக்குகளையே நம்பித் தேர்தலில் இறங்க இடமளித்தது. எனவே முஸ்லிம் காங்கிரஸ் முதலிற் கிழக்கிலும் பின்பு வடக்கிலும் தன்னை வலுவாக நிலைநிறுத்தியது. பிற மாவட்டங்களிற், பேரினவாதக் கட்சிகளில் இணைந்தும் (அரிதாகத் தனித்தும்) போட்டியிட்டுத் தேர்தல்களில் வென்ற முஸ்லிம் பாராளுமன்ற அரசியல்வாதிகட்கு முஸ்லிம் சமூகம் ஒரு தேசிய இனம் என்ற உணர்வோ அதன் தேசிய அபிலாசைகள் என்ன என்ற கவனிப்போ முஸ்லிம் மக்கள் முகங்கொடுக்கும் சமூகப் பிரச்சனைகள் என்னவென்ற அக்கறையோ இருக்கவில்லை.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக ஏற்ற பின்பும், முஸ்லிம்களின் அரசியலை ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் முன்னெடாமல் முஸ்லிம் அடையாளத்தின் பேரில் வாக்கு வேட்டையாடுதைத் தாண்டி முஸ்லிம் அரசியல் வளரவில்லை.
சென்ற நூற்றாண்டின் முடிவையண்டி இந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை கிழக்கிலங்கையில் முஸ்லிம் தேசம் என்ற ஒரு கருத்துச் சிறிது முக்கியம் பெற்றது. எனினும், இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் குடிப்பரம்பலின் சிக்கல்களைக் கணிப்பில் எடாமல், தமிழீழக் கோரிக்கைக்கு ஏட்டிக்குப் போட்டியான ஒரு மனநிலையுடன் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வாழ்வோரை மட்டுமே கருதி முன்வைத்த இக் கருத்து விரைவாக அடங்கியது.
அதற்கு மாறாக, வேறெந்த அரசியற் கட்சியும் பேசத் துணியாதவாறு, முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக ஏற்று, அவர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் சுயாட்சிகளையும் அவர்கள் ஐதாக வாழும் பகுதிகள் உள்ளக சுயாட்சிக் கட்டமைப்புகளையும் நிறுவ வேண்டும் என்ற ஆலோசனையை தேர்தல் அரசியல் நோக்கிற் செயற்பட்ட முஸ்லிம் தலைமைகள் கருத விரும்பவில்லை. அதே வேளை, தமிழ்த் தேசியவாதக் கட்சி எதுவும் முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக ஏற்கத் துணியவில்லை.
எனவே முஸ்லிம்களின் அரசியல், தெளிவான சமூகநோக்கும் அரசியல் நெறியும் இல்லாமல் அடையாள அடிப்படையில் தேர்தல்கட்கு முகங்கொடுப்பதற்கும் முஸ்லிம் சமூகம் தாக்கப்படும் போதோ குறிப்பான நெருக்கடியை எதிர்நோக்கும் போதோ உரக்கப் பேசுவதற்குமான வரையறைக்குட்பட்டது.
முஸ்லிம்கள் கிழக்கில் அடுக்கடுக்காக நிலப்பறிப்பையும் வடக்கில் மீள்குடியேறத் தடைகளையும் தெற்கு முழுவதும் பேரினவாத நிந்தனையையும் வன்முறையையும் எதிர்நோக்குகையில், அதைக் கையாளற்குரிய விரிந்த அரசியல் நோக்கும் அணுகுமுறையும் முஸ்லிம் தலைமைகட்கு வாய்க்கவில்லை.
முஸ்லிம் சமூகம் இவ்வாறு பிற சமூகங்களிடமிருந்து தனிமைப்படவும் தனக்குள்ளேயே பிளவுண்ணவும் காரணங்களைச் சுருங்கக் கூறின்:
I. சவூதி அராபியாவின் ஆழமான பொருளாதார ஊடுருவல்.
II. சவூதி முகவர்களாக இயங்கிய இஸ்லாமியத் தூய்மைவாதிகள் முஸ்லிம் சமூகத்தின் மீது அராபியப் பண்பாட்டைத் திணித்தமை.
III. நாட்டின் அரசியலில் பேரினவாத எழுச்சியும் அதையொட்டித் தமிழ்க் குறுந்தேசியவாத எழுச்சியும்.
IV. முஸ்லிம் அடையாள அரசியல் தேர்தல் இலக்குடன் செயற்பட்டமையும் முஸ்லிம் தேசிய இனத்தின் பிரச்சனைகளை நாடாளவிய நோக்கிற் கருதத் தவறியமையும்.
V. இடதுசாரி இயக்கத்தில் முஸ்லிம்களின் பங்குபற்றல் ஓய்ந்தமை. (இதற்கு இடதுசாரி இயக்கம் 1970 -களின் போது கண்ட நலிவும் பேரினவாதத்தினதும் தமிழ்க் குறுந்தேசியத்தினதும் எழுச்சியும் பங்களித்தன.)
முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமென வலியுறுத்திய புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, முஸ்லிம்களை அவ்வாறு அடையாளப்படுத்தி அவ்வடிப்படையில் முஸ்லிம்களின் தேசிய உரிமைகட்காகப் போராடுவதன் மூலமே முஸ்லிம்கள் நடுவே இஸ்லாமியத் தீவிரவாதம் பரவுவதைத் தவிர்க்க இயலும் என விளக்கியது. இவ்விடயத்தில் முஸ்லிம்களின் தனித்துவத்தை ஏற்க மறுத்த தமிழ்த் தேசியவாதமும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் சந்தர்ப்பவாதமும் பெருந் தவறிழைத்தன.
முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் முஸ்லிம்களைத் தமிழரிடமிருந்து தனிமைப்படுத்தல் மூலம் தமது வாக்கு வங்கிகளை வளர்த்த முஸ்லிம் அரசியல்வாதிகட்குத், தென்னிலங்கையில் மொழி, பண்பாட்டு உரிமைகளும் ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்படும் முஸ்லிம்களின் பிரச்சனைகள் பற்றிய அக்கறை துளியும் இருக்கவில்லை.
தென்னிலங்கை முஸ்லிம் பிரமுகர்கட்கு யாருடன் கூட்டுச் சேர்ந்தால் பாராளுமன்றப் பதவிகளையும் அமைச்சர் பதவிகளையும் பெறலாம் என்பதை விட வேறு கவனம் இருக்கவில்லை.
எனவே இலங்கையில் முஸ்லிம்களின் சுயநிர்ணயமும் சுயாட்சியும் பற்றிய அக்கறைக்குப் பதிலாக, குறிப்பிட்ட சில பிரதேசங்களில் தமது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் தனிப்பட்ட சலுகைகளைப் பெறுவதற்கும் மட்டுமே முஸ்லிம் அரசியல் சக்திகள் முயன்றன.
அண்மைய முஸ்லிம் விரோத அலை
இப் பின்புலத்தில், 2002 -ஆம் ஆண்டு மாவனல்ல தாக்குதலின் பின் அடுத்தடுத்து நிகழ்ந்த முஸ்லிம் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம் வணிகர்களைப் புறக்கணிக்கும் பிரசாரம், ஹலால் மாமிச விற்பனையை முஸ்லிம்கட்கெதிரான பிரசாரமாக்கியமை, பொது இடங்களில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் நிந்தித்தல் ஆதிய துன்புறுத்தல்கள் வலுத்தன.
குறிப்பாக ராஜபக்ச ஆட்சியில் போர் உச்சத்தை எட்டிய சூழலில் வலுவடைந்த பொது பல சேன, சிஹல ராவய, ராவண பலய அமைப்புகள் முஸ்லிம் விரோதத்ததைச் சிங்கள இளைஞர்களிடையே பரப்பின. ஜூன் 2014 -இல் உச்சத்தை எட்டிய முஸ்லிம் விரோதம் அளுத்தகமவில் முஸ்லிம் விரோத வெறியாட்டமாக வெளிப்பட்டது. அதிற் பங்குபற்றியவர்களையும் அதைத் தூண்டியவர்களையும் தண்டிக்க ராஜபக்ச அரசாங்கம் விரும்பாமை 2015 -ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமானது.
முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த சனாதிபதி சிரிசேனவோ யூ.என்.பி.‒ஸ்ரீ.ல.சு.க அரசாங்கமோ குற்றவாளிகளைத் தண்டிக்கத் துணியவில்லை. அதைவிட, ரக்பி கால்பந்தாட்ட வீரர் தாஜுடீன் கொலை விசாரணையைத் தேர்தல் பிரசாரத்திற் பாவித்த யூ.என்.பி. பின்பு அந்த விசாரணையை இழுத்தடித்தமை போன்ற விடயங்கள் முஸ்லிம்களிடையே அதிருப்தியை வளர்த்தது.
முஸ்லிம்கட்கெதிரான மதத் துவேஷகள் தண்டிக்கப்படாமை பௌத்த‒சிங்கள வெறியர்கட்குத் துணிவூட்டியது. முஸ்லிம்கட்கு எதிரான பொய்ப் பிரசாரங்கள் மூலம் 2018 பெப்ரவரியில் அம்பாறையிலும் அடுத்து கண்டியிலும் நடந்த வெறியாட்டத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியமையும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடாமையும் முஸ்லிம் சமூகத்தை மேலும் வருத்தியது.
இத்தனைக்கும் நடுவே, முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வழமை போல பதவிகளை இறுகப் பற்றிக் கொண்டு சடங்காக அறிக்கைகளை விடுத்து மனநிறைவு கொண்டனர்.
ஐ.எஸ்.ஸின் கவர்ச்சி
அளுத்கம நிகழ்வுகளின் பின் முஸ்லிம் இளைஞர்களிற் கணிசமானோரிடம் ஏற்பட்ட மனக் கொதிப்பு அவர்களைத் தீவிரவாதத்தை நோக்கி உந்தியது. இக் காலத்தில் அமெரிக்க‒சவூதி ஆதரவுடன் சிரியாவில் வேர்கொண்ட இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) வேகமாக வளர்ந்தது. சிரிய அரசாங்கத்தைக் கவிழ்க்க சவூதி அராபியா, கட்டார், துருக்கி ஆகிய நாடுகள் வெவ்வேறு நோக்கங்களுடனும் அமெரிக்க ஊக்குவிப்போடும் 2011 முதல் நேரடியாகச் செயற்பட்டன.
அவற்றின் ஆதரவுடைய போராளிகள் வெல்லத் தவறிய நிலையில், 2013 -இல் உருவான ஐ.எஸ். சர்வதேச மட்டத்தில் தன் இஸ்லாமியப் படைக்கு ஆட்களைத் திரட்டியது. அமெரிக்காவும், சவூதி அராபியாவும், கட்டாரும், துருக்கியும் ஐ.எஸ்.ஸை ஆதரித்தன.
ஐ.எஸ்.ஸிற்கான நிதி சவூதி அராபியா, கட்டார் உட்பட்ட நாடுகளிலிருந்தும் சிரியாவிற் களவாடிய எண்ணெயைத் துருக்கிக்கு அனுப்பியும் தீவிரவாத ஆதரவு நிறுவனங்களிடமிருந்தும் கிடைத்தது.
முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் எல்லாவற்றிலும் ஐ.எஸ். வேரூன்றாமை கவனிக்கத்தக்கது. எனினும் முஸ்லிம்கள் ஒரு சமூகமாக வாழும் நாடுகள் பலவற்றிலிருந்தும் ஐ.எஸ். ஆட்களைத் திரட்டியது. ஐரோப்பாவில் இஸ்லாமிய விரோதத்திற்கு முகங்கொடுத்த முஸ்லிம்கள் தொட்டு ஆசிய நாடுகளின் அதிருப்தியுற்ற முஸ்லிம்கள் வரை ஏலவே இஸ்லாமிய அடிப்படைவாத ஈர்ப்புக்கு உட்பட்டிருந்தனர். அவர்களிடையே அல் கைடா போன்ற இயக்கங்களிலும் பிற போராளி அமைப்புகளிலும் இணைந்தோரை விட ஐ.எஸ்.ஸில் இணைந்தோரின் தொகை அதிகம். காரணம், ஐ.எஸ்.ஸின் வெற்றியின் கவர்ச்சி. குறுங்காலத்திற் தனக்கென ஒரு பெரிய பிரதேசத்தை உருவாக்கிய ஐ.எஸ். ஒரு இஸ்லாமிய அரசை (கலிபா ஆட்சியை) அறிவித்தது.
2017 -இல் அதன் பிரதேசம் துரிதமாகச் சுருங்கியதோடு அதன் பெருமை மங்கியது. அதில் இணைந்த போராளிகள் தமது நாடுகட்கு மீள இயலாதபோது வேறு நாடுகளின் தீவிரவாத அமைப்புகளில் இடம் தேடினர். பலர் அரசியலிலிருந்து ஒதுங்கினர். சிலர் தமது மதச் செயற்பாடுகளை மட்டும் தொடர்ந்தனர்.
இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் சென்ற நூற்றாண்டின் இறுதிப் பகுதியிற் தொடங்கியதையும் அதன் பிரதான ஆதரவுத் தளம் சவூதி அராபியா என்பதையும் 2013 -க்குப் பின்பே இலங்கையில் ஐ.எஸ். தோன்றியதையும் கருத்திற் கொள்ளத் தகும்.
இலங்கையில் ஒரு பயங்கரவாதக் குழுவின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பின்புலமாகவுள்ள புறக்காரணிகளுள் ஐ.எஸ். மட்டுமன்றி சவூதி அராபிய, அமெரிக்க முகவரகங்களும் அடங்கும். ஆனால்; அதன் தளம் உள்ளூர் முஸ்லிம்களைக் கொண்டது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முன்னெடுத்த சலாஃபி‒வஹாபி குழுக்கள் போக, முஸ்லிம் அரசியல்வாதிகள் பற்றி விரக்தியுற்றோர், குறிப்பாக இளையோர், இவ் வன்முறைப் போக்கில் இணைந்தனர்.
ஐ.எஸ். இலங்கையில் வேர்கொள்வதை சவுதியின் தீவிர மதவாத அமைப்புகள் ஊக்குவிக்க வாய்ப்பு மிக இருந்தது. பெருமளவான ஆயுதத் திரட்டலும் தற்கொலைப் படைப் பயிற்சியும் ஐ.எஸ். தூண்டுதலாலோ துணையோடோ நடந்ததென்பது மிகச் சாத்தியம். மத்திய கிழக்கில் ஐ.எஸ். சந்தித்த தோல்வியும் எதிர்நோக்கும் பேரழிவும் ஐ.எஸ்.ஸின் கலிபாப் பேரரசுக்கு முடிவுகட்டிய பின், ஐ.எஸ். தலைமை இலங்கைக்கென ஒரு வேலைத் திட்டத்தைக் கொண்டிருந்தது என்பது கடினம்.
தாக்குதலின் நோக்கம்
இத் தாக்குதல்கள் பற்றி மேலும் விளக்கம் தேவைப்படும் சில கேள்விகள் உள்ளன.
I. இத் தாக்குதல் ஏன் கத்தோலிக்கர்களைக் குறிவைத்தது?
II. தாக்குதல் முயற்சிகள் யாவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றிருந்தாலும் இவ்வாறான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தும் வாய்ப்போ சூழலோ இருந்ததா?
III. தாக்குதல் பற்றி எவ்வளவு தகவல்கள் இந்திய உளவு நிறுவனங்கட்குத் தெரிந்திருந்தன?
IV. இந்திய உளவு நிறுவனங்கள் தகவல்களை ஏன் இடைநிலை மட்டத்திற் பரிமாறின?
V. தகவல்களை அறிந்த உயர்மட்ட அதிகாரிகளும் அரசியல், அரசாங்கத் தலைவர்களும் யார்? அவர்கள் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?
இந்திய உளவுத் தகவல்கள் கிடைத்து, உடனடியாகச் செயற்பட்டிருப்பின் அறிந்த இலக்குகளைக் காப்பாற்றியிருக்கலாமே ஒழியத் தனிமனிதர்களாகவோ சிறு குழுக்களாகவோ செயற்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகள் இவ்வாறான தாக்குதலை மே தினம், வெசாக் போன்று இன்னும் அதிகமாக மக்கள் திரளும் நாட்களில் நடத்தியிருக்கலாம். ஏனெனிற் பயங்கரவாதிகளின் நோக்கம் கத்தோலிக்கர்களிற் சிலரையும் சுற்றுலாப் பயணிகள் சிலரையும் அழிப்பதைவிட விரிவானது என்றே தெரிகிறது.
விரிவான நீண்டகாலப் போராட்டத்துக்கு வாய்ப்புக் குறைவு என்பதோடு ஆக மிஞ்சி ஒரு சில இலக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை விட அதிகம் இயலாத ஒரு வன்முறை அமைப்பு ஒரே நாளில் இவ்வளவு பெரிய உயிரழிவாலும் கணிசமான பொருளழிவாலும் சாதித்தது என்ன?
I. நாட்டில் அச்ச உணர்வை வலுப்படுத்திப் பாதுகாப்புத் தேவையை அரசாங்கம் வலியுறுத்தவும் அதன் பெயரில் அடக்குமுறைச் சட்டங்களைப் புகுத்தவும் வாய்ப்பு உருவானமை.
II. சமூகங்களிடையே சுமுக உறவைச் சீரழித்துப் பரஸ்பர ஐயத்தை வலுப்படுத்தியமை. (குறிப்பாக முஸ்லிம் துவேஷ உணர்வைப் பரப்புவோரின் கைகளைப் பலப்படுத்தியமை.)
III. இலங்கையில் நுழையக் காத்திருக்கும் அந்நிய மேலாதிக்கச் சக்திகள், முக்கியமாக அமெரிக்கா அடுத்து இந்தியா, நாட்டின் பாதுகாப்பை முன்னிறுத்திப் படைத் தளங்களை நிறுவவோ வேறு வகையிலோ இராணுவ உறவுகளை வலுப்படுத்த ஊக்குவிப்பு.
IV. முஸ்லிம்களின் இருப்பைச் சமூகத்தளத்திலும் பொருளாதாரத் தளத்திலும் மிரட்டலுக்குட்படுத்தல்.
V. குறுகிய‒இடைக்கால நோக்கில் நாட்டின் பொருளாதார நெருக்கடியை மோசமாக்கல்.
எனவே இத் தாக்குதல்களின் மூலம் நலனடையும் சக்திகள் எவை என நாம் கவனிக்கவேண்டும். ஐ.எஸ். மட்டுமே அவற்றுடன் தொடர்புடைய அயற் சக்தி என்று விடயத்தை எளிதாக விளக்க இயலாது.
ஐ.எஸ். யாருடைய கருவி என்பது போக, தேசிய தௌஹிட் ஜமாத்தை (NTJ) ஜமாத்தெய் மில்லத்து இப்ராஹிம் (JMI) ஆகியவற்றை ஐ.எஸ். வழிநடத்தியது என்று சொல்லி அவற்றைப் பயன்படுத்தக் கூடிய வேறு சர்வதேச நிறுவனங்களைப் புறக்கணிக்கலாகாது. ஏனெனில் பயங்கரவாத இயக்கங்களை எதிர்த்துப் போரிடுவதாக அறிவிக்கும் அமெரிக்கா அதே பயங்கரவாத இயக்கங்களைத் தனக்குக் கீழ்படிய மறுக்கும் ஆட்சிகளைக் கவிழ்க்கப் பயன்படுத்துகிறது.
இத் தாக்குதல்கள் பற்றிய விவரங்களை நுணுக்கமாக இந்திய உளவுத்துறை அறிந்து இலங்கைக்குத் தகவல் வழங்கியதாயும் அவை மேலிடத்துக்குப் போகத் தவறியதாயும் மாறிமாறிக் குற்றச்சாட்டுகளைப் பரிமாறும் அதே வேளை, என்ன தகவல்கள் என்றும் யார் எதை யாருக்கு எவ்வாறு வழங்கினர் என்றும் விவரமறிய மக்களுக்கு உரிமையுண்டு. அவ் விவரங்களை இதுவரை வழங்காமை விசாரிக்கத் தக்கது.
பின் விளைவுகளும் எதிர்காலமும்
தேடுதல்களின் போக்கில் இந் நிகழ்வுடன் தொடர்புள்ளவர்கள் மட்டுமன்றித் தொடர்பற்ற பலரும் கைதாகின்றனர். ஒவ்வொரு முஸ்லிமையும் சந்தேகத்துக்குரியவராகவும் ஒவ்வொரு பள்ளிவாசலையும் மதராசாவையும் பயங்கரவாதப் பாசறையாகவும் நோக்கும் போக்கு வலுத்துள்ளது.
இப் போக்குத் தொடர்வது நாட்டின் சமூகங்களின் ஒற்றுமைக்கு நல்லதல்ல. முஸ்லிம்கட்கு எதிரான பாரபட்சம் வலுத்தால்; அதன் பயனான அதிருப்தி நாட்டை எங்கு கொண்டு செல்லும் என நாம் சிந்திக்க வேண்டும்.
ஏற்கெனவே நாட்டின் பாதுகாப்பின் பெயரில் அடக்குமுறைச் சட்டங்களை நிறைவேற்றும் முயற்சிகள் துரிதமாகின்றன. பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் ஒழிப்பது என்ற பெயரில் மக்களின் நியாயமான பேராட்டங்கட்குத் தீவிரவாத முத்திரை குத்தியும் அரச வன்முறைக்கெதிரான மக்களின் தற்காப்பு முயற்சிகட்குப் பயங்கரவாத முத்திரை குத்தியும் மக்களை அடக்கும் முயற்சிகள் பற்றி மக்கள் விழிப்போடிருக்க வேண்டும்.
ஆயுதப் போராட்டத்தை ஏற்கும் புரட்சிவாதிகள் புரட்சிகர வன்முறைக்கும் எதிர்ப்-புரட்சிகர வன்முறைக்கும் வேறுபாட்டை அறிவர். தமது போராட்டங்கள் மக்களைத் துன்புறுத்துவதை நிராகரிக்கும் அதேவேளை, ஆளும் வர்க்க ஒடுக்குமுறைக்கும் அரச பயங்கரவாதத்திற்கும் எதிராக மக்கள் ஆயுதம் ஏந்துவதை மக்களின் அடிப்படை உரிமையாக அவர்கள் ஏற்கின்றனர். ஆனாற் தனிமனிதப் பயங்கரச் செயல்களையும் வலிந்து மக்களைத் துன்புறுத்தும் வெறிச் செயல்களையும் அவர்கள் எதிர்க்கின்றனர். மக்கள் விரோத ஆட்சியை மாற்றி அதனிடத்தில் மக்களாட்சியைக் கொண்டுவரும் அரசியல் தீவிரவாதமல்ல.
இன்று முக்கியமான விடயம் தேசிய இனங்களின் ஒற்றுமை. குறிப்பாக, உழைக்கும் மக்கள் இன வேறுபாடு கடந்து இணைந்து செயற்படல். குறுந் தேசியவாதத் தலைமைகளும் பேரினவாதக் கட்சிகளும் அதைச் செய்யத் தகுதியற்றவை.
தேர்தல் அரசியலுக்காக இன உணர்வுகளைக் கிளறிப் பகையைத் தூண்டுவோர் மேலோட்டமாகவே ஒற்றுமையைப் பேசுவர். அதன் கீழ், இனப்பகை நீறுபூத்த நெருப்பாகக் கனலும். மதத் தலைவர்கள் மேடையேறி மத நல்லிணக்கம் பற்றிப் பேசினும் கீழ் மட்டங்களில் சமூகங்களின் இணக்கப்பாட்டுக்குச் செயலாற்ற வல்லோரல்ல.
மத நிறுவனங்களிற் செல்வாக்குள்ள மேட்டுக்குடிகளின் நலன்கட்கு மாறாக எந்த மதத் தலைமையும் செயற்பட்டதில்லை. கீழ் மட்டங்களில் உள்ள மதகுருமார் மதஞ்சாராத சமூக‒அரசியல் அமைப்புகளில் பங்குபற்றினால் அவர்களால் மதத் தலைவர்கள் என்போரை விட அதிகம் செய்ய இயலும். ஆயினும் மக்களிடையே மூடநம்பிக்கைகளையும் மூடிய சிந்தனையையும் ஊக்குவிக்கும் மதகுருமார் பற்றி மக்கள் விழிப்புறுவது அவசியம்.
வரலாற்று நோக்கில் இலங்கையின் அனைத்துத் தேசிய இனங்களையும் அணைத்துச் செயற்பட்ட பெருமை இடதுசாரி இயக்கத்தினது. தேர்தல் அரசியல் தொடங்கிய நாள் முதல் முதலாளியக் கட்சிகள் இன அடிப்படையிலேயே இயங்கியுள்ளன. தேர்தல் அரசியல் பாராளுமன்ற இடதுசாரிகளைப் பேரினவாதிகளுடன் சமரசஞ் செய்யத் தூண்டியது. அவர்கள் வேறுபடுமளவுக்குப் பேரினவாத ஒடுக்கலுக்குத் துணைபோன போதும் அப்பட்டமான இனத் துவேஷ அரசியலில் இறங்கியோர் வெகு சிலரே.
இடதுசாரி முகமூடியுடன் தொடங்கிய ஜே.வி.பி. பேரினவாதத்தை முதன்மைப்படுத்தியே தன்னை வளர்த்தது. போரின் முடிவு வரை, அதன் பேரினவாத அணுகுமுறை வலுவாயிருந்தது. இப்போது பேரினவாதத்தின் மூலம் அதிகஞ் சாதிக்க இயலாமையால் பேரினவாதத்தை அடக்கி வாசித்தாலும் அதன் கொள்கைகள் இன்னமும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிச் சரியான புரிதல் அற்றவை.
பல முஸ்லிம்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குப் பலியாகவும் முஸ்லிம்கள் தம்மைப் பிற சமூகங்களினின்று தனிமைப்படுத்தவும் முக்கியமான ஒரு காரணம் இடதுசாரி அரசியலின் நலிவு. இன்று தமிழ்த் தேசியவாதமும் இந்து மதவாதப் போக்குகளின் விளைவான முரண்பாடுகளையும் பிளவுகளையும் எதிர்நோக்குகிறது.
இந்தியாவில் மதவாத அரசியல் இந்துத்துவமாக வெளிப்பட்ட பின், 1980-கள் தொட்டு இந்துத்துவம் தமிழ்ச் சமூகத்தை ஊடுருவி முஸ்லிம், கிறிஸ்தவத் துவேஷத்தை வளர்த்துள்ளது. போரின் முடிவோடு துரித வளர்ச்சி கண்ட இந்துத்துவம் பவுத்த மதவெறியர்களுடன் இணக்கங் காணத் துடிக்கிறது. ஏட்டிக்குப் போட்டியாக நடக்கும் சினமூட்டல்கள் பற்றி மக்களை விழிப்பூட்டும் பணி நம் முன்னுள்ளது.
மதவாத அரசியல் மக்களைப் பிரித்து முதலாளியத்தினதும் ஏகாதிபத்தியத்தினதுங் கைகளை வலுப்படுத்தியுள்ளது. நாட்டை மதவாதத்தினின்று காப்பாற்ற அரசை மதச்சார்பற்றதாக்க வேண்டும். நேபாளத்தின் இந்து முடியரசைப் பிரதேச சுயாட்சிகளைக் கொண்ட மதச்சார்பற்ற அரசாக மாற்றிய நேபாள அரசியல் யாப்பிற் குறைபாடுகள் இருப்பினும், மதச் சார்பின்மையும் அதிகாரப் பரவலாக்கமும் நேபாளத்தின் சமூக ஒற்றுமைக்கு உதவுவன. அதன் பாடங்களை நாம் கற்க வேண்டும்.
சிதறிக் கிடக்கும் போராளிகட்கான ஒரு வேலைத்திட்டம் இல்லாத நிலையில் அவர்கள் உதிரிகளாகச் செயற்படவும் பிற மதவாத அமைப்புகளில் இணையவும் வாய்ப்புண்டு. எனவே மதத் தீவிரவாதத்தினின்று அவர்களை மீட்பது அவசியம். அதில் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமன்றிப் பிற சமூகங்கட்கும் பொறுப்புண்டு.
தேர்தல் அரசியலுக்குப் பலியாகாது, குறுகிய இன அடையாள வற்புறுத்தலைப் பகிரங்கமாக நிராகரிக்கும் சமூக‒அரசியல் சக்திகள் மட்டுமே தேசிய இனங்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டித் தலைமை தாங்க வல்லன.
இப்போது, ஏப்ரல் 21 -இன் துன்ப நிகழ்வுகளை மறந்து அரசியல் ஆதாயந் தேடுவதிலேயே பாராளுமன்ற அரசியற் கட்சிகளும் தலைவர்களும் குறியாயுள்ளனர். நாட்டின் அவலத்தைப் பாவித்து ஊடுருவ ஏகாதிபத்தியமும் பிராந்திய மேலாதிக்கவாதிகளும் துடிக்கின்றனர்.
அடக்குமுறைச் சட்டங்களை நிறைவேற்றியும் அரச இயந்திரத்தை மேலும் வலுவாக ஆயுதபாணியாக்கியும் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் முதலாளிய, ஏகாதிபத்திய நோக்கங்கள் அறவே மக்கள் விரோதமானவை.
எனவே நேர்மையான இடதுசாரிகளின் முன்னுள்ள பணி பாரியது. அரசியலை மக்கள்மயப்படுத்தி ஒரு புரட்சிகர வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்பல் மூலமே, மக்கள் விரோத அரசையும் அதன் ஏகாதிபத்திய எசமான்களையும் அவர்கட்கு மறைமுகமாக உதவும் அனைத்து மதத் தீவிரவாதிகளையும் முறியடிக்க இயலும். இத்தகைய மக்கள் சார்பு இடதுசாரி இயக்கங்களுடன் மக்கள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்.
வெளியீடு :
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி,
இலங்கை.