இலங்கை வட – கிழக்கு இஸ்லாமியர்கள் தேடும் அடையாளம் எது, ஏன்?

இலங்கை வட – கிழக்கு இஸ்லாமியர்கள் தேடும் அடையாளம் எது, ஏன்?

 

7 மே 2019

இலங்கை வட - கிழக்கு இஸ்லாமியர்கள்: வாழ்வும் பண்பாடும்

(இலங்கையில் உயிர்ப்பு திருவிழா ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட – கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் முதல் பகுதி இது.)

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவர்களைக் குறிவைத்து நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளை சஹ்ரான் ஹாஷ்மி என்ற இஸ்லாமியரே நடத்தியதாகவும் அதில் பங்கேற்றவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்று தெரிந்தபோது பலருக்கும் கோபத்தைவிட அதிர்ச்சியும் ஆச்சரியமுமே ஏற்பட்டன.

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலும் இஸ்லாமியர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையிலும் முரண்பாடுகளும் மோதல்களும் இருந்திருக்கின்றன. ஆனால், சமீபகால வரலாற்றில் ஒருபோதும் கிறிஸ்தவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டதில்லை. இந்த நிலையில் அவர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டது கிறிஸ்தவர்களை எப்படி அதிர்ச்சிக்குள்ளாக்கியதோ, அதேபோல, இலங்கையில் வசிக்கும் இஸ்லாமியர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உடனடியாக நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்தின் வாசலிலும் இந்த தாக்குதலுக்குக் கண்டனமும் இந்த பயங்கரவாத சம்பவத்திற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்ற வாசகங்களும் இடம்பெற்ற பதாகைகள் தொங்கவிடப்பட்டன. வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டன. பல இடங்களில் கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பும் வருத்தமும் தெரிவிக்கும் வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.

கிழக்கிலங்கையில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் காத்தான்குடியும் இதற்கு விதிவிலக்கில்லை. அங்குள்ள மௌலவிகளில் துவங்கி, சாதாரண குடிமக்கள்வரை சந்தித்த ஒருவர்கூட இந்தத் தாக்குதலை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முயலவில்லை. வெட்கத்தையும் கடுமையான வருத்தத்தையுமே தெரிவித்தனர். இந்தத் தாக்குதலின் மையமாக இருந்த சஹ்ரான் ஹாஷ்மி காத்தான்குடியைச் சேர்ந்தவர். தங்களுக்கு தீர்க்க முடியாத களங்கத்தை உருவாக்கியிருப்பதாகவே அங்கிருக்கும் பலரும் கருதினார்கள்.

இலங்கை வட - கிழக்கு இஸ்லாமியர்கள்: வாழ்வும் பண்பாடும்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் வசிக்கும் இஸ்லாமியர்கள் மீது இந்த சம்பவத்தை அடுத்து சர்வதேச கவனம் திரும்பியிருக்கிறது. பிற நாடுகளின் இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் இந்த சம்பவங்களும் இணைத்துப் பேசப்பட்டன. ஆனால், இப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் மத அடையாளம் சார்ந்த, தனித்துவம்மிக்க ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள்.

2012ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இலங்கையில் 19,67,523 இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். இது அந்நாட்டின் மக்கள் தொகையில் 9.66 சதவீதம். இலங்கையிலேயே அம்பாறை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக மக்கள் தொகையில், 43 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். திருகோணமலையில் 42 சதவீதம் பேரும் மட்டக்களப்பில் 26 சதவீதம் பேரும் உள்ளனர்.

Presentational grey line

“தற்கொலை குண்டுதாரி ஆஸாத்தின் மனைவியும் குண்டு வெடிப்பில் இறந்தார்”

விடுதலைப் புலிகள் அமைப்பின் பேரில் பரவும் அறிக்கை: உண்மை என்ன?

Presentational grey line

இலங்கையில் உள்ள முஸ்லிம்களில் இலங்கைச் சோனகர்கள் எனப்படும் (Sri Lankan Moors) தமிழ் பேசும் இஸ்லாமியர்களே பெரும்பான்மையாக (90%) உள்ளனர். இவர்களைத் தவிர, மலேய முஸ்லிம்கள், போரா முஸ்லிம்கள், மேமன்கள் ஆகிய பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் மிகச் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். மொத்தமுள்ள சுமார் 19 லட்சத்து 60 ஆயிரம் இஸ்லாமியர்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலேயே வசிக்கிறார்கள். அதாவது இஸ்லாமியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வட-கிழக்கிலும் மீதமுள்ளவர்கள் நாட்டின் தெற்குப் பகுதியிலும் பிற பகுதிகளிலும் பரவிவசிக்கிறார்கள்.

“இஸ்லாமியர்கள் இலங்கையில் எந்தப் பகுதியில் வசிக்கிறார்களோ, அந்தப் பகுதியின் கலாசாரத் தாக்கம் அவர்கள் மீது உண்டு. கிழக்குப் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களிடம் தமிழர்களிடம் உள்ள (இந்துக்கள்) சீதனம் கொடுப்பது, தாலி அணிவிப்பது போன்ற பழங்கங்கள் இங்கும் சில இடங்களில் உண்டு. வட – கிழக்கிற்கு அப்பால் உள்ள பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சிங்கள மக்களின் கலாசாரத் தாக்கத்தை கொண்டவர்கள்” என்கிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை தலைவரான டாக்டர் ரமீஸ் அபூபக்கர்.

இலங்கை வட - கிழக்கு இஸ்லாமியர்கள்: வாழ்வும் பண்பாடும்

ஆனால், இங்கு வசிக்கும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் அனைவருமே தங்களை தங்களுடைய மதம் சார்ந்தே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் தங்களுடைய இனம் என்பது மதத்தின் அடிப்படையில் அமைந்ததே தவிர, மொழியின் அடிப்படையில் அமைந்ததல்ல எனக் கருதுகின்றனர்.

“இலங்கையில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினரால், பிற மதத்தவரால் ஒதுக்கப்பட்டபோது அந்த சவால்களை முறியடித்து முன்னேற அவர்களது மார்க்கம் ஒரு அரசியல் பலமாக இருந்தது. ஒரு இனக்குழுவுக்கு தங்களது அடையாளம் எதன் அடிப்படையில் அமைந்தது என்பதை தீர்மானித்துக்கொள்ள உரிமை உண்டு. அதன் அடிப்படையில் அவர்கள் தங்களை மதத்தின் அடிப்படையில் தனி இனக்குழுவாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். சமீபத்தில்கூட இஸ்லாமியர்களுக்கு எதிராக கடும்போக்கு பவுத்தர்கள் அணிதிரண்டு போராட்டங்கள், பிரசாரங்களைச் செய்தனர். அந்தத் தருணத்தில் மதம்தான் முக்கியமானதாக இருக்கிறது. ஆகவே முஸ்லிம்கள் தங்கள் மதத்தை அடிப்படையாக வைத்தே தங்களை அடையாளப்படுத்துகிறார்கள்” என்கிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியரான ரமீஸ் அப்துல்லா.

Presentational grey line

இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு

இலங்கை மலையக தமிழர்கள் பகுதியில் தேசிய தவ்ஹித் ஜமாத் முகாம்

Presentational grey line

எங்கே துவங்கியது அடையாளப்படுத்துதல்?

இலங்கையில் வசிக்கும் தமிழ்பேசும் இஸ்லாமியர்கள் தங்களை தமிழர்களாக அல்லாமல் முஸ்லிம்களாக அடையாளப்படுத்திக்கொள்ளும்போக்கு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் துவங்கியது என்கிறார் கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான எம்.ஏ. நுஹ்மான்.

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின்போது சட்டமியற்றும் அவையில் இனரீதியான பிரதிநிதித்துவத்தை வழங்கும் முயற்சிகள் துவங்கின. அந்த காலகட்டத்தில் மிக முக்கியமான தலைவராக இருந்துவந்த தமிழரான சர். பொன்னம்பலம் ராமநாதன், அந்தத் தருணத்தில் ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியின் இலங்கைக் கிளையில் உரை ஒன்றை ஆற்றினார். அந்த உரையில் ‘இஸ்லாமியர்களும் தமிழர்களே; அவர்களுக்கென தனியான பிரதிநிதித்துவம் தேவையில்லை’ எனக் கூறினார். “அந்தத் தருணத்தில் அவர் அவ்வாறு கூறியது இஸ்லாமியர்களின் தனித்த அடையாளத்திற்கான ஒரு முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. அவர்கள் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்திலிருந்து வேறுபட்ட ஒரு அடையாளத்தை மேற்கொள்ள ஆரம்பித்தனர்” என்கிறார் நுஹ்மான்.

இலங்கை வட - கிழக்கு இஸ்லாமியர்கள்: வாழ்வும் பண்பாடும்

இது இயல்பானது எனக்கூறும் நுஹ்மான், மலையகத் தமிழர்களும் தமிழ்தான் பேசுகிறார்கள்; பேசும் மொழிதான் அடையாளம் என்றால் அவர்களும் தமிழர்கள் என்ற வரையறைக்குள் வரவேண்டுமே; அப்படியல்லாமல் மலையகத் தமிழர்கள் என்றுதானே குறிக்கப்படுகிறார்கள். அதுபோலத்தான் இஸ்லாமியர்களும் என்கிறார் நுஹ்மான்.

ஆனால், இந்தக் கருத்துடன் மாறுபடுகிறார் காத்தான்குடியில் வசிக்கும் மூத்த ஊடகவியலாளரான புவி ரஹ்மத்துல்லா. “இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் தமிழ் அடையாளத்தையும் வலியுறுத்த வேண்டும் என்பதை நான் பல நாட்களாகவே கூறிவருகிறேன். இரு பிரிவினரை அடையாளப்படுத்தும்போது ஒரு தரப்பினரை மொழி அடிப்படையிலும் ஒரு தரப்பினரை மத அடிப்படையிலும் குறிப்பிடுவது சரியானதல்ல” என்கிறார் புவி ரஹ்மத்துல்லா.

தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கில் வசிக்கும் இஸ்லாமியர்களை விரோதமாகப் பார்க்கும் போக்கு துவங்கியபோது, அவர்களிடமும் தான் இதை வலியுறுத்தியதாகச் சொல்கிறார் அவர்.

ஆனால், இந்த வாதங்களையெல்லாம் தாண்டி, வட – கிழக்கில் வசிக்கும் இஸ்லாமியர்கள் மதம் என்ற அடையாளத்தையும் தேசம் என்ற அடையாளத்தையுமே வலியுறுத்துகின்றனர். மொழி என்ற அடையாளத்தை வலியுறுத்துவதில்லை.

“மொழிரீதியான அடையாளத்தை இஸ்லாமியர்கள் மீது திணிக்கத் திணிக்க அவர்கள் மத ரீதியான அடையாளங்களைக் கடுமையாகப் பின்பற்ற ஆரம்பித்தனர். இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் இஸ்லாமியர்கள் மத அடையாளங்களை தீவிரமாக பேணுவதற்கு இதுவும் ஒரு காரணம்” என்கிறார் ரமீஸ் அப்துல்லா. இந்த அடையாளத்துடன்தான் அவர்கள் தங்கள் கலை, கலாசார, பண்பாட்டு அம்சங்களை பின்பற்ற ஆரம்பித்தனர் என்கிறார் அவர்.

இந்த அடையாளத்துடன்தான் அவர்கள், இலங்கையின் பிற சமூகங்களான சிங்களர்களுடனும் தமிழர்களுடனும் தங்கள் உறவுகளை கட்டமைக்கத் துவங்கினர்.

(இத் தொடரின் அடுத்த பகுதி நாளை புதன்கிழமை வெளியாகும்.)

பிற செய்திகள்

முஸ்லிம்களின் வீடுகளின் கீழ் இந்து கோயில்கள் கண்டெடுக்கப்பட்டதா?

வெளிநாட்டு வேலையை நம்பி பாலியல் தொழிலில் தள்ளப்படும் நேபாள பெண்கள்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிரான நோட்டீஸுக்கு தடை

ஃபானி புயல்: சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பாராட்டப்படும் ஒடிஷா

https://www.bbc.com/tamil/sri-lanka-48175737


 

இலங்கை இஸ்லாமியர்கள்:சூஃபியிஸவாதிகள் அடிப்படைவாதிகளாக மாறியது எப்படி? இஸ்லாமியர்கள்: வாழ்வும் பண்பாடும் – பகுதி 3

 

9 மே 2019
இலங்கை இஸ்லாமியர்கள்:சூஃபியிஸவாதிகள் அடிப்படைவாதிகளாக மாறியது எப்படி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

(இலங்கையில் உயிர்ப்பு திருவிழா ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட – கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் 3வது பகுதி இது. )

நாட்டின் தலைநகரான கொழும்புவிலிருந்து சுமார் 330 கி.மீ. தூரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கிறது காத்தான்குடி. சுமார் 2.56 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் இந்த நகரம் தெற்காசியப் பகுதியில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் ஒன்று. காத்தான்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்து மொத்தமாக சுமார் 66 ஆயிரம் இஸ்லாமியர்கள் இங்கு வசிக்கிறார்கள்.

இலங்கைத் தீவின் எல்லா நகரங்களிலும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களின் கடைகளையோ, வர்த்தக நிறுவனங்களையோ பார்க்க முடியும். “காக்காய் இல்லாத இடமும் இல்லை; காத்தான்குடிக்காரர்கள் இல்லாத ஊரும் இல்லை” என்ற பழமொழியே இந்தப் பகுதியில் உண்டு. அந்த அளவுக்கு இந்த நகரம் கடுமையான உழைப்பாளிகளும் வர்த்தகர்களும் நிறைந்த நகரம்.

இலங்கை இஸ்லாமியர்கள்:சூஃபியிஸவாதிகள் அடிப்படைவாதிகளாக மாறியது எப்படி?ஆறு ஜும்மா பள்ளிவாசல்களுடன் 50க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இங்கு இருக்கின்றன. ஷரீயத் சட்டங்களைப் போதிக்கும் சுமார் 10 மதரசாக்களும் இங்கே இயங்கிவருகின்றன. சஹ்ரான் இயங்கிவந்த பிரதேசம் என்பதால் இப்போது சர்வதேச கவனத்திற்கு உள்ளாகியிருக்கும் காத்தான்குடி, உண்மையில் அடிப்படைவாத இஸ்லாத்திற்குப் பெயர்போன நகரமல்ல.

துவக்கத்தில் தப்லீக் ஜமாத்தும் தரிக்காஸ்-உம் இந்தப் பகுதியில் செல்வாக்கு செலுத்திவந்தன. நடை, உடை, தனிப்பட்ட பழக்க வழக்கங்களில் சுன்னி இஸ்லாத்தை வலியுறுத்தும் தப்லீக் ஜமாத், இந்தியப் பின்னணியைக் கொண்டது. சூஃபி பாணியிலான இஸ்லாத்தை வலியுறுத்தும் தாரிகாஸ், மத்திய கிழக்கில் உருவானது.

1970களின் பிற்பகுதியில் மௌலவி அப்துல் ரவூஃப் என்பவர் இஸ்லாம் குறித்த மாறுபட்ட ஒரு பிரசங்கத்தைத் துவங்கினார். அதாவது ‘அல்லாவும் இறைதூதர் முஹம்மது நபியும் ஒருவரே; கடவுளுக்கு உருவம் உண்டு’ என்பது இவரது பிரசாரத்தின் அடிப்படையாக இருந்தது. இதற்குக் காத்தான்குடி இஸ்லாமியர்களிடம் கடும் எதிர்ப்பு இருந்தாலும், அவர் தனது பிரசாரத்தைத் தொடர்ந்துவந்தார்.

இலங்கை வட – கிழக்கு இஸ்லாமியர்கள்: வாழ்வும் பண்பாடும்

இலங்கை இனப்போர்: இஸ்லாமியர்கள் யார் பக்கம்?

“அந்த காலகட்டத்தில் இருந்த மௌலவிகள், அப்துல் ரவூஃபின் கருத்தை வாதம் செய்து மறுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி அவர்கள் செய்யவில்லை. அவரது கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்களே தவிர, திருக்குரானை மேற்கோள்காட்டி அவருக்கு எதிரான வாதங்களை யாரும் முன்வைக்கவில்லை” என நினைவுகூர்கிறார் மூத்த பத்திரிகையாளர் புவி. ரஹ்மத்துல்லா.

இலங்கையில் ஏற்கனவே அப்துல் ஹமீத் பக்ரி போன்றவர்கள், அன்ஸாருஸ் ஸுன்னா முஹம்மதியா என்ற இயக்கத்தை ஆரம்பித்து ஏகத்துவத்தை வலியுறுத்தும் ‘தவுஹீத்தை’ பிரசாரம் செய்துவந்திருந்தனர். இருந்தபோதும் அப்துல் ரவூஃபின் சூஃபி இஸ்லாமை வலியுறுத்தும் பிரசாரமே, அதற்கு எதிரான தவ்ஹீத் அமைப்புகளுக்கு செல்வாக்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இலங்கை இஸ்லாமியர்கள்:சூஃபியிஸவாதிகள் அடிப்படைவாதிகளாக மாறியது எப்படி?இதுமட்டுமல்ல, இலங்கையில் நடந்த, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பல சம்பவங்கள் தவ்ஹீத் அமைப்புகளின் வளர்ச்சிக்கு உதவின. 1970களின் பிற்பகுதியில் இலங்கையில் தாராளவாத பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்டது. அதே காலகட்டத்தில் இலங்கையிலிருந்து – குறிப்பாக கிழக்கு மாகாணத்திலிருந்து – மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெருமளவில் ஆட்கள் வேலைக்குச் சென்றனர். அதனால் மத்திய கிழக்கின் பணமும் கூடவே அங்கு செல்வாக்குச் செலுத்திய வஹாபிய தூய்மைவாத இஸ்லாமும் இலங்கையை வந்தடைந்தன. கிழக்கில், குறிப்பாக காத்தான்குடி, மருதமுனை பகுதிகளில் இந்தக் கருத்துகளுக்கான செல்வாக்கும் மெல்ல மெல்ல உருவானது.

“இந்த மாற்றங்கள் ஏதோ ஒரு சில ஆண்டுகளில் நடந்துவிடவில்லை. 30-35 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றது. முதலில் மத சீர்திருத்தம் என்றுதான் துவங்கியது. பிறகு, படிப்பு, உடை, பழக்கவழக்கம் எல்லாம் இந்தப் பகுதியில் மாற ஆரம்பித்தது” என நினைவுகூர்கிறார் காத்தான்குடி நகரசபையின் உறுப்பினரான அப்துல் லதீப் முஹம்மது சபீல்.

இலங்கை குண்டுவெடிப்பால் சந்தேகங்களை எதிர்கொள்ளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் – யார் இவர்கள்?

முதலில் பள்ளிக்கூடங்களில் பெண்கள் நடனமாடக்கூடாது என்றுதான் கட்டுப்பாடுகள் துவங்கின என்கிறார் அவர். பிறகு, மெல்லமெல்ல சினிமாவைத் தவிர்க்கும்படி வலியுறுத்தப்பட்டது. 1980களின் மத்தியப் பகுதிவரை அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளிலும் கோலோச்சிய திரையரங்குகள் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தன. தற்போது இந்த மாவட்டங்களில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை ஒட்டிய இடங்களில் மட்டும் சில திரையரங்குகள் தென்படுகின்றன.

90களின் இறுதியிலும் 2000த்தின் துவக்கத்திலும் காத்தான்குடி, மருதமுனை பகுதிகளில் தவ்ஹீத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கு வளர ஆரம்பித்தது.

இலங்கை இஸ்லாமியர்கள்:சூஃபியிஸவாதிகள் அடிப்படைவாதிகளாக மாறியது எப்படி?2001வாக்கில் காத்தான்குடியில் உள்ள ஜமியத்துல் ஃபலா அரபிக் கல்லூரியில் சஹ்ரான் காசிமி என்ற அந்த 15 வயதுச் சிறுவன் அரபு மொழி, இஸ்லாமியச் சட்டங்கள், ஹதீதுகளைப் படிப்பதற்காகச் சேர்ந்தான். ஏழு ஆண்டுகள் இங்கே படித்து பட்டம்பெற வேண்டிய நிலையில், நான்காவது ஆண்டிலேயே அங்கிருந்த மௌலவிகளின் கருத்துகளுடன் வெளிப்படையாகவே முரண்பட்டார் சஹ்ரான்.

“தலையில் தொப்பி அணியக்கூடாது, ரம்ஜானின்போது 20 முறை வணங்கக்கூடாது; எட்டு முறைதான் வணங்க வேண்டும் என்றெல்லாம் சஹ்ரான் கூற ஆரம்பித்தார். இதனால், நான்கு ஆண்டுகளிலேயே அவர் கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டார். அவருடைய தந்தை சென்று சண்டையிட்டாலும் எந்தப் பயனும் இல்லை. பிறகு, குருநாகலில் உள்ள இபின் மசூத் மதரஸாவில் மீதமுள்ள படிப்பை முடித்தார் சஹ்ரான்” என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

2008வாக்கில் படிப்பை முடித்துவிட்டுவந்த சஹ்ரான், தன் பாணி இஸ்லாத்தை போதிக்க ஆரம்பித்தார். அப்துல் ரவூஃபின் கருத்துக்களைக் கடுமையாகச் சாடினார். தன்னை இஸ்லாத்தை சீர்திருத்த வந்தவராக சொல்லிக்கொண்டார். தாருல் – அதர் என்ற அமைப்பில் இருந்தபடி இந்தச் செயல்பாடுகளில் சஹ்ரான் ஈடுபட்டுவந்தார். மதம் மட்டுமின்றி, சமூகப் பிரச்சனைகள் தொடர்பான கூட்டங்களையும் இந்த அமைப்பு நடத்திவந்தது. ஆனால், விரைவிலேயே சஹ்ரானின் தீவிர தூய்மைவாதக் கருத்துகள் தாருல் – அதர் அமைப்பிற்குள்ளும் சிக்கலை ஏற்படுத்த அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

அதற்குப் பிறகு, இஸ்லாமிக் சென்டர் என்ற பெயரில் தனியாக ஒரு பள்ளிவாசலை உருவாக்கினார். 2012ல் தேசிய தவ்ஹீத் ஜமாத் உருவாக்கப்பட்டது. சஹ்ரானும் தன் போதனைகளைத் தீவிரப்படுத்தியபடியே இருந்தார். காத்தான்குடி இஸ்லாமியர்கள், சஹ்ரானை கவனிக்க ஆரம்பித்திருந்தார்கள். சஹ்ரானின் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். அவரைப் பொறுத்தவரை எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தது, மார்ச் 16, 2017வரை.

(தொடரும்)

பிற செய்திகள் :

ராஜீவ் வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய தடை கோரிய மனு தள்ளுபடி – பின்னணி

தமிழகத்தில் 13 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுவது ஏன்?

ஒரே வாரத்தில் இரு முறை ஆயுத சோதனை செய்த வடகொரியா

பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடிய சிவாஜிலிங்கம் மீது வழக்குப்பதிவு


 

முஸ்லிம்களின் வீடுகளின் கீழ் இந்து கோயில்கள் கண்டெடுக்கப்பட்டதா? #BBCFactCheck

முஸ்லிம்களின் வீடுகளின் கீழ் இந்து கோயில்கள் கண்டெடுக்கப்பட்டதா?படத்தின் காப்புரிமைFACEBOOK

பிரதமர் நரேந்திர மோதியின் காசி-விஸ்வநாதர் சாலைத் திட்டத்திற்கு 80 முஸ்லிம் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதாக கூறி, பல இடிந்துபோன பண்டைய கட்டிடங்களை கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அவ்வாறு பகிரப்பட்டு வரும் காணொளியின் விளக்க பகுதியில், “காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து கங்கை நதிக்கு செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, அவ்வழியே உள்ள 80 முஸ்லிம்களின் வீடுகளை கையகப்படுவதற்கு பிரதமர் மோதி உத்தரவிட்டார். அதன்படி, அங்கிருந்த முஸ்லிம்களின் வீடுகளை பிடித்தபோது, அதற்கு கீழ் 45 பழமையான கோயில்கள் கண்டெடுக்கப்பட்டன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதியின் கனவு திட்டமான காசி – விஸ்வநாதர் சாலைத் திட்டம், 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த புகழ்மிக்க காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் எளிதாக கங்கை நதிக்கு செல்வதை சாத்தியமாக்குகிறது.

பிரதமர் மோதியின் வாரணாசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் 8ஆம் தேதி நடைபெற்றது.

இந்த காணொளி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.

இந்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்து பரிசோதித்தபோது, அது தவறானது என்று தெரியவந்துள்ளது.

செய்தியின் உண்மைத்தன்மை

நரேந்திர மோதிஇந்த சாலை விரிவாக்க திட்டத்திற்கான பணிகளை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் சிறப்பு மேம்பாட்டு ஆணையம் நிர்வகித்து வருகிறது.

இந்த காணொளியில் உண்மை தன்மை குறித்து தெரிந்து கொள்வதற்காக அந்த ஆணையத்தின் தலைமை செயலதிகாரி விஷால் சிங்கிடம் பேசினோம்.

“இந்த சாலை விரிவாக்க திட்டத்திற்காக நாங்கள் கையப்படுத்திய 249 வீடுகளும் இந்து சமயத்தை சார்ந்தவர்களுக்கு சொந்தமானது. அவற்றில் இதுவரை 183 வீடுகளை இடித்துள்ளதில், சிறியது முதல் பெரியது வரை மொத்தம் 23 கோயில்களை கண்டறிந்துள்ளோம்” என்று விஷால் பிபிசியிடம் கூறினார்.

இந்த பகுதிக்கு அருகில் மசூதி ஒன்று உள்ளது. ஆனால், இந்த சாலைத் திட்டத்திற்காக முஸ்லிம்களின் வீடுகள் ஏதும் இடிக்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

‘குடியிருப்புவாசிகள் விரும்பவில்லை’

காசி விஸ்வநாதர் கோயிலை கங்கையுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம், பண்டைய நகரத்தை மறுசீரமைப்பதற்கு பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஆலயத்தை சுற்றியுள்ள பாதையை விரிவுபடுத்துவதற்காக வீடுகள் மற்றும் கடைகளை இடிப்பது தவிர்த்து, கங்கையை ஒட்டிய பகுதிகளை சீரமைப்பது, பக்தர்களுக்கான ஓய்வறைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் அரங்குகள் போன்றவற்றை ஏற்படுத்துவதற்கு இதன் மூலம் திட்டமிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, உணவுகளுக்காகவே ஒரு தெரு, பூசாரிகள், பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் போன்றவற்றை கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களின் காரணமாக தங்களது வீடுகள் இடிக்கப்படுவது வருத்தத்தை ஏற்படுத்துவதாக பிபிசியிடம் பேசிய பொது மக்கள் தெரிவித்துள்ளனர். “இந்த குறுகிய பாதைகளை பார்ப்பதற்காக தான் மக்கள் வாரணாசிக்கு வருகின்றனர். அவை அழிக்கப்படும் பட்சத்தில் வாரணாசியின் கதையும் அவ்வளவுதான்” என்று காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு வாரணாசியை ஆன்மீக தலத்திலிருந்து சுற்றுலாத்தலமாக மாற்றுவதை எதிர்ப்பதாக தெரிவித்து பல இந்து அமைப்புகள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்


 

About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply