தமிழர்க்கு மட்டுமா இலங்கைச் சட்டங்கள்…..?

தமிழர்க்கு மட்டுமா இலங்கைச் சட்டங்கள்…..?

இலங்கையில் பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக – அல்லது, முற்றாக ஒழிப்பதற்காகப் பல்வேறு சட்டங்கள் காணப்படுகின்றன. அதில் பிரதானமானது பயங்கரவாதத் தடைச் சட்டம். தற்போது இலங்கையில் நடைபெற்ற தீவிரவாதச் செயற்பாடு குறித்து, இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் சரத்துக்களை மையகப்படுத்தி ஒரு சிந்திக்கத்தக்க கருத்தொன்றை முன்வைத்திருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய கே.வி.தவராசா. அவரது கருத்துக்கள் – அதிலுள்ள நியாயத் தன்மைகளை – கூர்ந்து அவதானித்தால் பங்கரவாதத் தடைச் சட்டம் தமிழர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட ஒன்று என்றே தோன்றுகின்றது.

21 ஆம் திகதி அதிகாலை நாட்டின் பல பாகங்களிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டுத் தாக்குதல்களைக் கனகச்சிதமாக நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் 350 ஐ அண்மித்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பல வெளிநாட்டு பிரஜைகள்கூட மரணித்திருக்கின்றார்கள். அதிலும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பச்சிளம் பாலகர்கள். 500 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கின்றார்கள். ஏராளமான சொத்தழிவு ஏற்பட்டிருக்கின்றது. இதனால் இலங்கைத் திருநாடு சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய – எவரும் எதிர்பார்க்காத – ஒன்று. இது ஒரு மிகமிகக் கோரமான பயங்கரவாதத் தாக்குதல். அதை எவரும் மறுத்தல் ஆகாது. மறுக்கவும் முடியாது.

இங்குதான் சட்டச்சிக்கல் முடிச்சு ஒன்றைப் போடுகின்றார் தவராஜா. நான் எவரும் எதிர்பார்க்காத ஒன்று என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இந்த விடயம் தொடர்பில் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கின்றது.

இந்திய புலனாய்வுத் துறையினர் இவ்வாறான தாக்குதல் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது என்று 2 மணி நேரத்துக்கு முன்னரே இலங்கைப் புலனாய்வுத் துறைக்கு அறிவித்திருக்கின்றது. இந்தியா அவ்வாறு அறிவித்திருந்தமையை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஒப்புக்கொண்டிருக்கின்றார். நாங்கள்தான் சற்றுக் கவனமில்லாமல் இருந்துவிட்டோம் என்று அவர் தனது பிழையை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர், உயிர்த்த ஞாயிறு வழிபாட்டுக்காக தேவாலயத்துக்கு செல்ல ஆயத்தமாகிய தனது மனைவி, பிள்ளைகளை வழிபாட்டுக்குச் செல்லவிடாது தடுத்திருக்கின்றார்.

அவருக்கு மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் பல அமைச்சர்கள் தங்களுக்கு இந்த விடயம் ஏற்கனவே தெரிந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். ஒரு பெரிய அசம்பாவிதம் நாட்டில் இடம்பெற இருந்தும் – அது தொடர்பான முன்னெச்சரிக்கைகள் தெரிந்திருந்தும் – அதனைத் தடுத்து நிறுத்தத் தவறியுள்ளனர் நாட்டின் முக்கிய புள்ளிகளும் ஆட்சியாளர்களும்.

இந்த இடத்தில் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட சட்டவல்லுநர் தவராஜா, பய்ஙகரவாதத் தடைச்சட்டத்தை மேற்கோள்காட்டிக் குறிப்பிடும் விடயம் மிக முக்கியமானது.

நாட்டில் யுத்த காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் (அவசரகாலச் சட்டம்), பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகி இரண்டும் இருந்தன. இந்தச் சட்டங்களால் பல அப்பாவிப் பொதுமக்கள் கூடத் தண்டிக்கப்பட்டனர். தண்டனையை அனுபவித்துக்கொண்டு தற்போதும் சிறையில் வாடுகின்றனர்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அவரசகாலச் சட்டம் நீக்கப்பட்டது. ஆனாலும், நாட்டில் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டிவிட்டேன் என்று அரசு குறிப்பிட்டாலும் அந்தச் சட்டம் இன்றுவரை 10 ஆண்டுகளாகியும் இன்னமும் நீக்கப்படாமல் இருந்துகொண்டே உள்ளது. இதனால்தான், இன்றுவரை பலர் அரசியல் கைதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவிக்கப்படாமல் உள்ளனர்.

இந்த அரசியல் கைதி விடயத்தில் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒன்றைத் தெளிவுபடுத்தவேண்டும். சுமந்திரன்மீது குற்றஞ்சாட்டுபவர்கள், அவர் நாட்டின் அரசாங்கத்தை தனது சட்டப் புலமையால் தூக்கி நிறுத்தி, ஜனநாயகத்தைக் காப்பாற்றி ”ஜனநாயகக் காவலன்” என்று அனைவராலும் போற்றப்படுகின்றார், இந்த அரசியல் கைதிகள் விடயத்தில் அவர் ஏன் வழக்குத் தாக்கல் செய்து, அந்த – எம்மின – மக்களுக்காக நீதிமன்றில் தனது சட்ட, சாணக்கிய அறிவால் வாதிடமல் இருக்கின்றார் என்று பலர் வேண்டுமென்றே, சிலர் விடயம் புரியாமலே குறைகூறுகின்றார்கள்.

அதுதான் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள சிக்கல். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டால், அவருக்காக நீதிமன்றில் எவரும் வாதத்தை முன்வைக்க முடியாது. கைதுசெய்யப்பட்டவருக்கு எதிராக அரசு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அவ்வாறு அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு எதிராக மீண்டுமொரு வழக்கைத் தாக்கல் செய்ய முடியாது.

இந்த விடயத்துக்கு சுமந்திரனிடமிருக்கின்ற சட்ட அறிவு உதவாது. சாணக்கிய மூளை மட்டுமே பயன்படும். அதனால்தான், அரசுடன் தன் மதினுட்பப் பேச்சுக்கள் ஊடாக ஏராளமான அரசியல் கைதிகளை விடுவித்துள்ளார் சுமந்திரன். இன்னமும் 80 பேர் வரையிலானோர்தான் தமிழ் அரசியல் கைதிகளாக உள்ளனர். ஒரேயடியாக இவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்றால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும். அதன்பின்பே சுமந்திரனும் தனது சட்ட அறிவை இவர்களுக்காகப் பிரயோகிக்க முடியும்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இன்னமொரு முக்கிய விடயம் உள்ளது. அதை தமிழரசு சட்டத்தரணி தவராஜா சுட்டிக்காட்டத் தவறவில்லை. அதாவது, ஒரு பயங்கரவாத செயற்பாடு குறித்த தகவல்கள் தெரிந்திருந்தால் – அதை ஒருவர் தடுத்து நிறுத்தத் தவறுவாராயின் – அல்லது உரிய தரப்பினருக்கு – பாதுகாப்புத் தரப்பினருக்கு – அவர் அறிவிக்கத் தவறுவாராயின் – அவர் குற்றத்துக்கு உடந்தையாகச் செயற்பட்டார் – நாட்டில் பயங்கரவாதச் செயற்பாடு நிகழக் காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் போடலாம். அவ்வாறு போடப்பட்டவர்கள் – பயங்கரவாதத்துக்குத் துணைபோனவர்கள் என்று கைதுசெய்யப்பட்டவர்கள் – இன்றும் இலங்கைச் சிறைகளில் தம் வாழ்நாள்களில் அரைவாசியைக்கூடக் கழித்த நிலைகளில் வாழாவிருக்கின்றார்கள். அவர்களுக்காகத் தொடர்ந்து சட்டரீதியாக விடயங்களைத் தவராஜா நகர்த்தி வருகின்றார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் வலிமை இவ்வாறிருக்க, நாட்டில் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற மிகக் குரூரமான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருந்தும், அது பிரதமராகவும் இருக்கலாம், அமைச்சர்களாகவும் இருக்கலாம், பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளாகவும் இருக்கலாம் அந்தக் கோர பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமையால் 350 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. 500 உயிர்கள் காயப்பட்டு வேதனையில் தவிக்கின்றன. பல கோடி ரூபா சொத்தழிவு நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்கத் தவறியமைக்காக – இவ்வாறான சம்பவம் ஒன்று நிகழ இருக்கின்றது என்று தெரிந்தும் பிரதமர் குறிப்பிட்டமைபோன்று கவனக் குறைவாக இருந்தவர்களை – ஏன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்தல் இயலாது? நாட்டின் ஆட்சியாளர்கள் மீது சட்டம் பாயாதா? அல்லது பெரும்பான்மை மக்களுக்கு இந்தச் சட்டங்கள் பிரயோகிக்கப்படமுடியாதனவா? தமிழர்களுக்கு மட்டுமா இந்தச் சட்டங்கள்……?

தெல்லியூர் சி.ஹரிகரன்.

தமிழர்க்கு மட்டுமா இலங்கைச் சட்டங்கள்…..?

About editor 3122 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply