குதிரைகள் ஓடிய பின்னர் லாயத்தை இழுத்துப் பூட்டும் சனாதிபதி சிறிசேனா!
நக்கீரன்
குதிரைகள் ஓடிய பின்னர் லாயத்தை இழுத்துப் பூட்டிய கதை போல உயிர்த்த ஞாயிறு அன்று கத்தோலிக்க தேவாலயங்கள், ஹோட்டல்கள் மீது பயங்கரவாதிகள் மின்னாமல் முழங்காமல் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா சனாதிபதி சிறிசேனா பொலிஸ் மா அதிபரையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு கேட்டிருக்கிறார்.
தேவாலயங்கள் மற்றும் நான்கு ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 45 சிறார்கள், 35 அயல்நாட்டவர் உட்பட 252 பொது மக்கள் இறந்து பட்டுள்ளார்கள். மொத்தம் 500 க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் எல்லோரும் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உயிர்ப்பித்த ஞாயிறு (ஏப்ரில் 21) தொழுகையில் ஈடுபட்டிருந்த கிறித்தவர்கள். இறந்து பட்டவர்களில் பெரும்பான்மை தமிழர்கள் ஆவர்.
இந்தத் தாக்குதலில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 9 தற்கொலைதாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களில் ஒரு பெண் உட்பட 8 தாக்குதல்தாரிகள் அடையாளம் காணப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் படித்த செல்வந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. ஒருவர் இலண்டனில் படித்து பின்னர் ஒஸ்ரேலியா பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர்.
தற்கொலைக் குண்டுதாரிகள் ஒரே நேரத்தில் 3 மாவட்டங்களில் 8 இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கிப் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளார்கள். இதுபோன்ற பல்முனை சமகாலத் தாக்குதலை 30 ஆண்டுகாலம் நீடித்த உள்நாட்டுப் போரில் வி.புலிகள் கூட நடத்தியதில்லை என அரசாங்கமே கூறுகிறது. தற்கொலைத் தாக்குவதாரிகள் பயன்படுத்திய குண்டுகள் அல் – கொய்தா, ஐஎஸ்ஐஸ் போன்ற உலகப் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் குண்டுகளை ஒத்தது எனக் கூறப்படுகிறது.
தற்கொலைக் குண்டுத் தாக்கலில் ஈடுபட்ட பயங்கவர வாதிகளின் காணொளியை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் 8 தீவிரவாதிகள் உள்ளனர். ஆயினும் ஏழு பயங்கரவாதிகள் இறந்ததாக அந்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதில் தெளஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் குழுமி நின்று குழுத் தலைவன் மெளலவி சஹ்ரன் ஹாஸிமின் கைமேல் கைகளை வைத்துச் உறுதிமொழி எடுக்கும் காட்சி உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவன் அபூபக்கர் அல்பக்தாதிக்கு விசுவாசமாக இருப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள்.
அபு ஒபைதா, அபு பாரா, அபு மொஹ்தார் ஆகியோர் சங்ரிலா, சினமன்கார்டன், கிங்ஸ்பெரி ஹோட்டல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அபு ஹம்ஸா, அபு ஹலீல், அபுமொஹமட் ஆகியோர் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்புத் தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அபு அப்துல்லா, தெமட்டகொட வீட்டில் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்துள்ளான்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பூகோள பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஸ் உரிமை கோரியுள்ளது. தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்களில் பலர் சிரியாவுக்குச் சென்று பயிற்சி பெற்று நாடு திரும்பியவர்கள். வி.புலிகளுக்கு தேநீர், இடியப்பம் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் அடைத்து வைத்திருக்கும் அரசாங்கம் இப்படிப் பயிற்சி பெற்று வந்தவர்களைக் கண்காணிக்கத் தவறிவிட்டது.
சிறிலங்காவில் மூன்றாவது சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் ஏன் நான்காவது சிறுபான்மை இனமான கத்தோலிக்க கிறித்தவர்களை இலக்கு வைக்க வேண்டும் என்பது புரியாத புதிராக இருக்கிறது. அதிலும் தமிழ்க் கத்தோலிக்கர்களை ஏன் இலக்குவைத்துக் கொல்ல வேண்டும் என்பது தெரியாமல் இருக்கிறது. இதன் மூலம் இஸ்லாமிய தீவிரவாதிகள் விடுக்கும் செய்தி என்ன?
கடந்த மார்ச் மாதம் 15 ஆம் நாள் பிறன்ரன் தாறன்ட் என்ற ஒரு வெள்ளைநிற மேலாதிக்கவாதியால் இரண்டு நியூசீலந்து கிறிஸ்தவ மசூதிகள் தாக்குதலுக்கு இலக்கானது. அதில் 50 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். இந்தக் கொலைகளுக்குப் பதிலடியாகவே கத்தோலிக்க தேவாலயங்கள் மீது தவ்ஜீத் ஜமாத் தாக்குதலை மேற்கொண்டது எனச் சிலர் சொல்கிறார்கள். அப்படியிருந்தாலும் அந்த அமைப்பு அதற்கு முன்னரே குண்டுகள் தயாரிப்பது, தாக்குதல் பயிற்சியில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்க வேண்டும். மேலும் தமிழ்க் கத்தோலிக்கர்களை ஏன் கொல்ல வேண்டும்? கொழும்பில் உள்ள பிரபல கோட்டல்களை ஏன் தாக்க வேண்டும்? பொருளாதார இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோள் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.
கிறிஸ்ட்சேர்ச் மசூதித் தாக்குதலுக்கும் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் தொடர்பிருப்பதாக எவ்வித புலனாய்வுத் தகவல்களும் தமது அரசுக்குக் கிடைக்கவில்லை என்று நியூசிலாந்து பிரதமர் ஜெஸின்டா ஆர்டொன் அறிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக கண்டி, அலுத்கம, முல்லகம போன்ற நகரங்களில் வாழும் முஸ்லிம்கள், அவர்களது வர்த்தக நிறுவனங்கள் சிங்கள – பவுத்த மத தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தன. அந்தத் தாக்குதல்களுக்கு பழி வாங்க நினைத்திருந்தால் சிங்கள – பவுத்த மக்களும் வியாபார நிலையங்களும் தாக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியொன்றும் நடைபெறவில்லை.
உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான மெளலவி சஹ்ரான் ஹாசீம் காத்தான்குடி பள்ளிவாசல் ஒன்றி நிருவாகத்தின் தலைவராக இருந்திருக்கிறான். அதன் செயலாளராக அவனின் சகோதரன் ஜெய்னி ஹாசீம் இருந்திருக்கிறான். 2017ஆம் ஆண்டில் காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய மதப்பிரிவினருக்கும், மெளலவி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான தெளஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் இடையில் நடைபெற்ற மோதல் ஒன்றையடுத்து, சஹ்ரான் தலைமறைவாக இருந்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் ஆயுதப் பயிற்சி பெற்று வருகின்றன அந்தக் குழுக்கள் எந்த நேரத்திலும் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற செய்திகள் கசிந்து வந்திருக்கின்றன. குறிப்பாக தவ்ஜீத் ஜமாத் குழுவின் பெயர் செய்திகளில் அடிபட்டு வந்திருக்கின்றன. அதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் பலமாக மறுத்து வந்திருக்கிறார்கள்.
கடந்த சனவரி மாதக் கடைசியில் மாவனல்ல பவுத்த கோயில்களில் இருந்த புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. அதற்குப் பின்னால் தீவிர முஸ்லிம்வாதிகள் இருந்திருக்கிறார்கள் என பொலீஸ் தெரிவித்தது. இதனால் முஸ்லிம் – சிங்கள சமூகங்களுக்கு இடையே பதட்டம் ஏற்பட்டது. பொலீசாரினால் பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் வசம் 100 கிலோ வெடிபொருட்களும் 100 வெடித்தூண்டிகளும் (detonators) கைப்பற்றப்பட்டன. ஆனால் செல்வாக்கு மிக்க ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் தலையீடு காரணமாக அந்த சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்படி விடுவிக்கப்பட்ட ஒருவரே உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிர் இழந்துள்ளார். மாவனல்ல, கேகால மாவட்டத்தில் கேகாலைக்கும் கடுவன்னாவுக்கும் இடையில் காணப்படும் நகர் ஆகும்.
கடந்த வாரம் காத்தான்குடியை அண்டிய பகுதியில் தற்கொலைதாரி மோட்டார் சைக்கிளொன்றை வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்துள்ளதாகத் தெரியவந்திருகிறது. காத்தான்குடிப் பிரதேசத்தைப் பார்ப்பவர்கள் அது ஒரு குட்டி அரேபியா என நினைப்பார்கள். பேரீட்சை மரங்கள், அராபு மொழியில் பெயர்ப் பலகைகள் அங்கு காணப்படுகின்றன. காத்தான்குடி, கிழக்கு மாகாண ஆளுநரான எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாவின் கோட்டையாக இருந்து வருகிறது. இவர் கடந்த காலங்களில் நாடாளுமன்றில் உரையாற்றும் போது நாட்டில் இரத்த ஆறு ஓடும் என வெளிப்படையாகவே கூறி வந்திருக்கிறார். அப்படியெனில் உயிர்த்த ஞாயிறு நாளன்று இடம்பெற்ற படுகொலைகள் அவர் இரத்த ஆறு ஓடும் என்று கூறிய கருத்தின் எதிரொலியா என நாடாளுமன்றத்தில் ஞானமுத்து சிறீநேசன், பாஉ தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் பலராலும் அறியப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் மொகமது ஸகரானின் நடமாட்டத்தை கண்காணித்து வந்திருக்கிறார்கள். அவன் சிறிலங்காவிலும் தமிழ்நாட்டிலும் மாறி மாறி இருந்திருக்கிறான்.
ஏப்ரில் 4 ஆம் திகதி இந்திய உளவுத்துறை சிறிலங்காவிற்கு ஸகரான் மற்றும் அவனது கூட்டாளிகள் பற்றியும் அவர்களது அலைபேசி எண்கள் பற்றிய தகவல்களைக் கொடுத்திருந்தார்கள். குறிப்பாக அவர்கள் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் இந்திய தூதுவராலயம், இந்திய தூதுவராலய அதிகாரிகள் தாக்குதலுக்கு இலக்காகக் கூடும் என்ற தகவல்களைக் கொடுத்திருந்தது. அதனையடுத்து சிறிலங்காவின் பாதுகாப்புச் சேவை ஸகரானையும் அவனது கூட்டாளிகளையும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்ததாகத் தெரிகிறது.
ஏப்ரில் 11 ஆம் திகதி மீண்டும் துல்லியமான மேலதிக தகவல்களை இந்திய புலனாய்வுத்துறை பாதுகாப்பு அமைச்சுக்குக் கொடுத்துள்ளது. முஸ்லிம் பயங்கரவாதிகள் உயிர் நீத்த ஞாயிறு அன்று கிறித்தவ தேவாலயங்கள், கோட்டல்கள் மற்றும் இந்திய தூதுவராலயம் போன்றவற்றைத் தாக்கலாம் என்ற புலனாய்வுத் தகவல் பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதில் ஸகரானின் சகோதரன் தனது மனைவி மக்களை இரவில் (2300 – 0400 மணி) சந்திப்பதாகவும் அந்த வீட்டின் சரியான எண் மற்றும் குறுக்குத் தெருவின் பெயர் போன்றவற்றை இந்திய புலனாய்வுத்துறை கொடுத்திருந்தது.
மூன்று பக்கம் கொண்ட இந்த எச்சரிக்கை ஆவணங்கள் துணை பொலீஸ் மா அதிபர் பிரியலால் திசநாயக்க ஏப்ரில் 11 அன்று தனது உயர் அதிகாரிக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் அமைச்சர்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருக்கும் அதிகாரிகளுக்கும், நீதித்துறைக்கும் இராசதந்திரிகளுக்கும் “அவசரம்” எனக் குறிப்பிட்டு அனுப்பி வைத்திருந்தார். அதில் நான்கு சந்தேக நபர்களின் பெயாகள் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நான்கு சந்தேக நபர்களில் ஒருவன் தற்கொலைத்தாக்குதல் நடத்தி இறந்துள்ளான். “உங்களது திணைக்களங்களில் உள்ள பிரமுகர்கள் மற்றும் இடங்கள் தொடர்பான பாதுகாப்பை பலப்படுத்துமாறு” அதி உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதில் சோகம் என்னவென்றால் இப்படியான தாக்குதல் இடம் பெறப்போகிறது என்பதை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவும், இந்திய புலனாய்வுப் பிரிவான றோவும் முன் கூட்டியே சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்திருந்தும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலீஸ் மா அதிபர் அதனை அலட்சியம் செய்துவிட்டார்கள். தாக்குதல் இப்படி உக்கிரமமாகவும் பரந்து பட்டும் இருக்கும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஃபெர்னாண்டோ சொல்கிறார்.
தாக்குதல் நடந்த நாளன்று சனாதிபதி சிறிசேனா நாட்டில் இல்லை. அவர் திருப்பதி சென்று வழிபாடு செய்துவிட்டு பின்னர் தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் சென்றுவிட்டு திங்கட் கிழமைதான் நாடு திரும்பியிருந்தார். தான் நாட்டில் இல்லாத நேரில் தனது கடமைகளை செய்வதற்கு யாரையும் அவர் நியமிக்கவில்லை. மேலும் புலனாய்வுத்துறை அனுப்பிய புலனாய்வுத் தகவல் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கோ, துணை பாதுகாப்பு அமைச்சர் ரூவான் விஜயவர்த்தன அவர்களுக்கோ கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு ஒக்தோபர் 26 இல் நடந்த எதிர்ப்புரட்சியின் பின்னர் பாதுகாப்பு சபைக் கூட்டங்களுக்கு பிரதமர் சரி, துணை பாதுகாப்பு அமைச்சர் சரி இருவருக்கும் அழைப்பில்லை. இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் பற்றி தனக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை எனப் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏப்ரில் 23 ஆம் நாள் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய சுமந்திரன், நா.உ இந்த உயிரிழப்புகளுக்கு சனாதிபதியே பொறுப்பு எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த நான்கு சகாப்த காலத்தில் இஸ்லாம் உலகில் மாபெரும் மீள் எழுச்சி பெற்றுள்ளது. இதற்கு எண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகளின் பண பலம் ஒரு காரணமாகும். சவுதி அரேபியா வகாபிசம் எனச் சொல்லப்படும் அடிப்படைவாத இஸ்லாமிய கோட்பாடுகளை பரப்புவதில் முனைந்துள்ளது. பல இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி வேதமாகிய திருக் குர் ஆன் அந்த நாடுகளின் அரசியல் அமைப்புச் சட்டமாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. திருக் குர்ஆனில் இருந்தும் அல்-ஹதீஸ் (Hadith) என்னும் முகம்மது நபியின் வாழ்க்கை முறையில் இருந்தும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதே சரியா சட்டமுறை. இந்தச் சட்டமுறை காட்டுமிராண்டித்தனமான (கால் கைகளைத் துண்டித்தல், கல்லால் எறிந்து கொல்லுதல்) தண்டனைகளை விதிக்கிறது.
சரியாகச் சொல்லப்போனால் இஸ்லாம் ஒரு மதம் அல்ல. அது ஒரு அரசியல் வழிபாட்டு (political cult) மரபாகும். “அல்லாவை விட வேறு கடவுள் இல்லை. மொகமது நபிகளே கடைசி இறைத் தூதுவர்” என பிரகடனம் செய்வதன் மூலாம் இஸ்லாம் ஏனைய மதங்கள் மீது போர் தொடுக்கிறது. மதசார்பின்மைக் கோட்பாட்டை (secularism) இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. அல்லாவில் நம்பிக்கை இல்லாத ஒருவர் நம்பிக்கைஈனர் (kafit/infidel) என அழைக்கப்படுகிறார். முஸ்லிம்கள் மனிதர் உருவாக்கிய சட்டங்களை ஏற்பதில்லை. அல்லா உருவாக்கிய சட்டங்களையே அவர்கள் பின்பற்ற வேண்டும். மதத்தையும் அரசையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதை அவர்கள் ஏற்பதில்லை. அப்படி ஏற்பது அல்லாவின் சட்டத்தை மீறுவதாகும். இஸ்லாம் வன்முறையை பிறழ்ச்சி என்று பார்ப்பதில்லை. அது இஸ்லாம் மதக் கோட்பாட்டில் உள்ள இயற்கையான கூறு ஆகும். இஸ்லாம் மதத்துக்காக போர்க்களத்தில் மரணிக்கும் ஜிஹாதிகள் மற்றும் தியாகிகள் ஆகியோருக்கு சொர்க்கத்தில் இடம் உண்டு என சத்தியம் (குரான் 3:157) செய்கிறது.
இந்தியா 700 ஆண்டுகள் இஸ்லாமிய ஆளுகைக்குள் உட்பட்டிருந்தது. இதனால் பலர் வாள் முனையில் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். இதனால் இந்தியாவில் இருந்து ஒன்றல்ல இரண்டு இஸ்லாமிய நாடுகள் பிரித்தெடுக்கப்பட்டன. இஸ்லாமியர் என்பவர்கள் இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் ஆவர். முஸ்லிம் என்ற சொல் அரபு மொழியில் இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன் என்றும், இறைவனிடம் சரணடைந்தவன் என்றும் பொருள் தரும். இன்று உலகளாவிய அளவில் அதி தீவிரம் அடைந்துள்ள அடிப்படைவாத இஸ்லாம் பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.
Leave a Reply
You must be logged in to post a comment.