கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை! தெல்லிப்பழை வைத்திய அத்தியட்சகர்

கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை! தெல்லிப்பழை வைத்திய அத்தியட்சகர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமூக முன்னேற்றம் கருதிய எவ்வளவோ செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். எமது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தனியாரிடமிருந்து சுகாதாரத் துறை அபிவிருத்திக்குப் பலகோடி ரூபாக்களைப் பெற்றுத் தந்துள்ளார். இவ்வாறான நல்ல செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படுவதில்லை. மக்களுக்கும் இந்தச் செயற்பாடுகள் தெரியாது. ஊடகங்களும் இவற்றை வெளிக்கொண்டுவருவது கிடையாது.

– இவ்வாறு ஆதங்கத்துடனும் வேதனையுடனும் உரையாற்றினார் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் யோ.திவாகர்.

யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு, நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வீ. சிவஞானசோதியின் நிதியில் உருவாக்கப்பட்ட பல்வேறு வேலைத்திட்டத் தொகுதிகளை அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா திறந்துவைத்தார். திறப்பு நிகழ்வைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் யோ திவாகர் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக – நோயாளர்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு – சமூக நன்மையைக் கருத்திற்கொண்டு – யதார்த்தத்தை புள்ளிவிவரங்களுடனும் ஆதாரபூர்வமாகவும் விளக்கி உரையாற்றினார் வைத்திய அத்தியட்சகத் வைத்தியர் யோ.திவாகர்.

அவரது உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:-

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா அவர்கள் கலந்துகொண்டமை மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் நாம் நிகழ்வுக்கு அழைத்திருந்தோம். ஆனால், அவர் இன்று தவிர்க்கமுடியாத நிகழ்வு ஒன்று கொழும்பில் இருப்பதால் பங்குபற்ற முடியவில்லை என அறிந்தோம். அவரும் இந்த நிகழ்வில் கலந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். நாம் எமது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எமது மக்கள் பிரதிநிதிகளாகிய தங்களுக்கு இன்று ஒரு கலந்துரையாடல் மூலம் வெளிப்படுத்துவதாக இருக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஏராளமான நல்ல விடயங்களை ஆற்றுகின்றது. ஆனால், அந்தச் செயற்பாடுகள் மக்கள் மயப்படுகின்றமை கிடையா. மாறாக, எதிர்மாறான கருத்துக்களே மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் கூட்டமைப்புக்கு எதிராகவே செயற்படுகின்றன.. ஊடகங்கள் நடுநிலையுடன் இவர்கள் ஆற்றுகின்ற நல்ல விடயங்களை மக்களிடத்தில் கொண்டுசெல்லவேண்டும்.

எமது மக்கள் பிரதிநிதிகள் தொடர்பில் ஆரம்பத்தில் எனக்கும்  அனைத்து மக்களையும் போன்றுசிறு வருத்தங்கள் இருந்திருக்கின்றன. நான் அவ்வப்போது அவர்களுடனான சந்திப்பில் எனக்குரிய தொனியில் அதை நேரடியாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். அவர்கள் அரசியல் தீர்வுதொடர்பில் ஆரம்பத்தில் இருந்தே கரிசனையுடன் செயற்பட்டார்கள்.காத்திரமான பணியாற்றினார்கள். அது மறுப்பதற்கில்லை. ஆனால், சமூக நன்மை கருதிய – மக்கள் நலன்சார்ந்த – அபிவிருத்திப் பணிகளில் இவர்கள் சரியான முறையில் செயற்படுகின்றார்கள் அல்லர் என்ற வருத்தம் எனக்கிருந்தது. நான் இன்றைக்கு மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் தொடக்கம் மாவை சேனாரதிராசா அவர்களுடனும் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுடனும் பழகியிருக்கின்றேன். அவர்களின் ஒவ்வொரு நகர்வுகளையும் அவதானித்திருக்கின்றேன்.

ஆனால், இன்றைக்கு ஒருவருடத்துக்கு மேலாக அவர்களது செயற்பாடுகள் யாரும் நம்பமுடியாத அளவுக்கு பிரமிக்கவைப்பனவாகக் காணப்படுகின்றன. உண்மையில் இவர்களா இப்படி செயற்படுகின்றார்கள் என்ற அளவுக்கு இவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஏராளமான நிதியை அரசிடம் இருந்து பெற்று எமது வடக்கு அபிவிருத்திக்கு தந்துள்ளார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் எமது சுகாதாரத் துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாக்களை தனியாரிடமிருந்தும் பிற நாடுகளின் நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுத் தந்துள்ளார். எமது வைத்தியசாலைக்குக் கூட சுகாதார அமைச்சால் மேற்கொள்ளமுடியாத அளவுக்கு பிரமாண்டமான வேலைத் திட்டங்களுக்கு பல ஆயிரம் மில்லியன்களை பெற்றுத் தந்துள்ளார்.

இன்றைக்கு தென்னிலங்கையில் ஆட்சியை நிர்ணயிப்பவராக எங்களது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் காணப்படுகின்றார். இன்னமும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்குப் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு உதவ தாங்கள் முயற்சிகளை எடுக்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான செயற்பாடுகள் பாராட்டுக்குரியவை. – என்றார்.


கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை! தெல்லிப்பழை வைத்திய அத்தியட்சகர்

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply