நாங்கள் கத்தியைத் தீட்டக் கூடாது  புத்தியைத் தீட்ட வேண்டும்! நக்கீரன்

 

 நாங்கள் கத்தியைத் தீட்டக் கூடாது  புத்தியைத் தீட்ட வேண்டும்!

நக்கீரன்

ண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பற்றி  யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சமூகம் தெரிவித்துள்ள கருத்துக்கள்  சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. சிறுபிள்ளை  வேளாண்மை விளைந்தும் வீடு வந்து சேராது என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது.

இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கவே கூடாது என யாழ்ப்பாணப்  பல்கலைக் கழக சமூகம் வேண்டுகோள் விடுவது வியப்பாக இருக்கிறது. சாதாரணமாக பல்கலைக் கழக சமூகம் என்றால் அது அறிவு பூர்வமாக சிந்திக்கக் கூடியவர்களைக் கொண்ட அமைப்பு என்றுதான் யாரும் எதிர்பார்ப்பார்கள்.

ஐநாமஉ  பேரவையில் இலங்கை பற்றிய ஒரு விசாரணை வேண்டும் என்ற வேண்டுகோளை அமெரிக்க வல்லரசின் கவனத்துக்கு கொண்டு சென்றது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே. குறிப்பாகத் தமிழ் அரசுக் கட்சிதான் 2011 ஆம் ஆண்டுக் கடைசியில் அமெரிக்க இராசாங்க திணைக்கள  அதிகாரிகளுடன் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடாத்தியது. அதனைத் தொடர்ந்து  இலங்கை தொடர்பாக ஒரு தீர்மானத்தை கொண்டு வர அமெரிக்கா சம்மதித்தது.

இதனைத் தொடர்ந்து 2013, 2014 இல் அமெரிக்கா சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும்  தீர்மானங்களை ஐநாமஉ பேரவையில் கொண்டுவந்தது. இந்தத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த  இலங்கை தவறிவிட்டது அல்லது சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தால் 2015 ஆம் ஆண்டு 25 கோரிக்கைகள் அடங்கிய ஒரு நீண்ட தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை அனுசரணை வழங்கியதை அடுத்து அது  ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

போர்க் குற்றங்கள் பற்றி அனைத்துலக விசாரணைக்குப் பதில் ஒரு கலப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற  ஓர் உடன்பாடு அமெரிக்கா, இலங்கை, ததேகூ இடையே எழுதப்பட்டது. இதனை சிறிலங்காவுக்கான இன, மத மற்றும் மத சுதந்திரத்துக்கான அமெரிக்க  காங்கிரஸ் குழுவுக்கு முன் தோன்றிய  சுமந்திரன் எடுத்துக் கூறினார்.

2009 இல் போர் முடிந்த கையோடு இலங்கைக்கு எதிராகக்  கனடா மற்றும் சுவிட்சலாந்து நாடுகள் சேர்ந்து  இலங்கை போர்க்காலத்தின் போது மனித உரிமை மீறல்களைச் செய்துள்ள நாடு எனக் கூறி ஒரு கண்டனத் தீர்மானத்தை மே 26, 2009 இல்   கொண்டுவந்தன. அதற்குப் போதிய ஆதரவு இல்லாததால் அந்தத் தீர்மானம் கைவிடப்பட்டது.

மாறாக  ஏதிலிகளுக்கு உதவி மற்றும் சிறுபான்மையினருக்கு அரசியல் உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும்  என்ற  மேற்குலக நாடுகளின் வேண்டுகோளைப் புறந்தள்ளி விடுதலைப் புலிகளைத் தோற்கடித  சிறிலங்காவை பாராட்டி இந்தியா  கொண்டு வந்த  தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால்  நிறைவேறியது.  அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 27 வாக்குகளும் எதிர்த்து 12 வாக்குகளும்  6 நாடுகள் வாக்களிக்காது நடுநிலைமை வகித்தன.

அதோடு நின்று விடாமல் வெளிநாட்டு தலையீடு இல்லாமல் நடந்து கொள்ளும் உரிமை தனக்கு உண்டு என்று சிறிலங்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

“வி.புலிகளின் பிடியில்  அவர்களது விருப்பத்துக்கு மாறாக இருந்த பல ஆயிரம் மக்களுக்கு  சிறிலங்கா அரசு விடுதலை பெற்றுக் கொடுத்துள்ளதை ஐநாமஉ பேரவை வரவேற்கிறது. நாட்டை மீளக் கட்டியெழுப்ப பெருந்தொகை நிதி உதவி வேண்டும் ” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர மேற்குலக நாடுகள் எடுத்த  முயற்சிக்கு   கியூபா நாடு முட்டுப் போட்டது. கியூபா வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரியது.

“சமாதானத்தை நிலைநாட்ட சிறிலங்கா அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாகுபாட்டை  கைவிட்டு கல்வி, நல்வாழ்வு, வீட்டுத்திட்டம், தண்ணீர் மற்றும் உணவு போன்றவற்றைப் பெறுவதில் சமமான வாய்ப்பை அளிக்க வேண்டும்” என அமெரிக்க பிரதிநிதி Mark Storella கூறினார்.

ஏற்கனவே கூறியவாறு இந்தப் பின்னணியிலேயே  ததேகூ இன் தலைவர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் அமெரிக்கா சென்று அந்த நாட்டின் வெளியுறவு உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினர்.  இதில் சுரேஸ் இன்று தான் பெற்ற குழந்தையை சுயநல அரசியல் காரணங்களுக்காக கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சிப்பது வேறு கதை.

இந்த வரலாற்றை பல்கலைக் கழக சமூகம் தெரிந்து வைத்திருக்கிறது என்று கூறுவதற்கில்லை. தெரிந்திருந்தால் இப்படி அபத்தமாக  செய்தியாளர் மாநாட்டில் பேசியிருக்க மாட்டார்கள்.

கூட்டத்தோடு கோவிந்தா போடுபவர்கள் போல “கால அவகாசம் கொடுக்கக் கூடாது” எனக் கிளிப்பிள்ளைகள் போல் சொல்லிக் கொண்டிருக்கும் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ கட்சியின் தலைவர்கள், இபிஆர்எல்எவ், தமிழர் விடுதலை முன்னணி போன்ற அமைப்புக்களுக்கு ஆதரவாக பல்கலைக் கழக சமூகம் செயற்படுகிறது.

இலங்கைக்குத் தொடர்ந்தும் கால அவகாசம் வழங்குவதில் பயனில்லை என்று பல்கலைக் கழக சமூகம் சொல்கிறது. இந்த வாதம் சரியென்றால் இலங்கையை ஐநாமஉ ஆணையாளரின்  கண்காணிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என பல்கலைக் கழக சமூகம் விரும்புகிறதா?  இத்தனை காலமும் இலங்கைக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று அது  சொல்கிறதா? ஆம் என்றால் அதன் பின்னர் என்ன நடக்கும்?  இலங்கை ஐநாமஉ பேரவையின் பிடியிலிருந்து தப்பி விடும். அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றி அக்கறை காட்டுவதை குறைத்துவிடும்.

இந்த இடத்தில் 2015 இல் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு படுத்த வேண்டும். அந்த ஆண்டு அமெரிக்கா முன்மொழிந்த 30-1 தீர்மானத்தின் நகலை ஜெனீவாவுக்குச் சென்றிருந்த கஜேந்திரகுமார், சிவாஜிலிங்கம், அனந்தி சசிகரன்,  ரிசிசி போன்ற வி.புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் தெருவில் போட்டு எரித்தார்கள். அத்தோடு நின்றுவிடாமல் அமெரிக்க நாட்டின் தேசியக் கொடியையும் சேர்த்து எரித்தார்கள்!

இதைப் பார்த்த அமெரிக்க நாட்டின் இராசதந்திரிகள் சுமந்திரனிடம் “சிங்கள தரப்பும் நாங்கள் கொண்டு வருகிற தீர்மானத்தைக் கடுமையாக எதிர்க்கின்றது. தமிழர் தரப்பும் அதைவிடக் கடுமையாக எதிர்க்கிறது – தீர்மானத்தையும் எங்கள் கொடியையும் தெருவில் போட்டு எரிக்கின்றன. அப்படியென்றால் அமெரிக்கா ஏன் இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டும்?” என்று கேட்டார்கள்.

எனவே கால அவகாசம் வழங்கக்கூடாது,  அவ்வாறு கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தரப்புக்களும் ஆதரவை வழங்கக் கூடாது என்று பல்கலைக் கழக சமூகம் சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. அரசியல் அறிவுடையோரை சிரிக்க வைக்கிறது.

யாழ்ப்பாண பல்கலைக் கழக சமூகம் “இலங்கை விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச நீதிமன்றுக்குக் கொண்டு செல்லவேண்டியது அவசியம். இவ்வாறான நிலையிலேயே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இனியும் கால அவகாசம் இலங்கைக்கு வழங்கவேண்டா மென்ற கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். மேற்குறிப்பிட்டவாறு தமிழ் மக்கள் எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்கு அமைய நீதிக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன” என நவில்கிறது. ஆனால் இந்தச் செய்தியாளர் மாநாட்டைத் தவிர பல்கலைக் கழகம் எந்தப் போராட்டத்தை மேற்கொண்டது என்று சொல்ல முடியமா? உண்மையென்னவெனில் பல்கலைக் கழக சமூகத்தில் உள்ள சிலர் சில அரசியல் கட்சிகள் சார்பாக நடந்து கொள்கிறார்கள்.

மேலும் “ஒட்டு மொத்த தமிழ் மக்களும் இனியும் கால அவகாசம் இலங்கைக்கு வழங்கவேண்டா மென்ற கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர்” என எப்படிக் கண்டு பிடித்தீர்கள்? ஒட்டு மொத்த தமிழ் மக்கள் சார்பாகப் பேச  நீங்கள் யார்? இது யதார்த்துக்கு முரணான  நிலைப்பாடு இல்லையா?

“ஆகவே இலங்கை விவகாரத்தை ஐநா பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச நீதிமன்றுக்குக் கொண்டு செல்லவேண்டியது அவசியம்” என்று மொட்டையாக சொன்னால் எப்படி? ஐநா பாதுகாப்புச் சபை என்பது என்ன ஆண்டிகள் கூடும் மடமா? கால அவகாசம் கொடுக்கக் கூடாது என சிலம்பம் ஆடும் அமைப்பில் ஒன்றாவது ஐநா பாதுகாப்புச் சபையில் உள்ள ஐந்து நாடுகளில் ஒரு நாட்டோடு ஆவது சந்தித்துப் பேசியது உண்டா? பேசத்தான் முடியுமா?

ஐநா பாதுகாப்புச் சபையை விட்டுவிடுவோம். ஐநாமஉ பேரவையில் உள்ள ஒரு நாட்டோடு ஆவது, ஒரேயொரு நாட்டோடு ஆவது இவர்களால் பேச முடியுமா? பேச முடிந்ததா?

இதனால்தான் சுமந்திரன் “உங்களில் விண்ணாதி விண்ணன்கள் யாராவது இருந்தால் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குக் கொண்டு செல்லுங்கள் பார்க்கலாம்?” என  ஒரு அறைகூவல் விட்டிருக்கிறார். இந்தக் கணம்வரை யாரும் சுமந்திரனின்  அறைகூவலை ஏற்றதாகத் தெரியவில்லை.

தமிழ் மக்களுக்கு அரசியலில் எது சாத்தியம் எது சாத்தியம் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இன்று ஐநாமஉ  பேரவையில்  இலங்கைச் சிக்கல் ஒரு பேசு பொருளாக இருப்பதே பெரிய சாதனை.

ஐநாமஉ பேரவைக்கு மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஒரு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார். அது ஒரு காட்டமான அறிக்கை. அதில் முற்போக்கான பல அம்சங்களை வலியுறுத்தியுள்ளார்.

1) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு எதிராக கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கலப்பு நீதிமன்றப் பொறிமுறை மற்றும் ஐ.நா அலுவலகம் இலங்கையில் நிறுவப்பட வேண்டும்.

2)  இலங்கை அரசுக்கு  கால அவகாசம் கொடுப்பதாயின், அந்த கால அவகாசத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்மானங்களிற்கு கால அட்டவணை வழங்கப்பட வேண்டும். அந்தக் காலவரையறைகளை கனடா மற்றும் அமெரிக்க, சீனா, ஐக்கிய இராச்சியம் உட்பட நோர்வே உள்ளிட்ட 5 நாடுகளும் ஆராய வேண்டும்.   அதேவேளை, 2 வருட காலத்திற்குள் இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கையை உரிய காலத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

3) தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதியதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். 

இந்த முயற்சியில் ததேகூ ஈடுபட்டுள்ளது.

சனாதிபதி சிறிசேனா ஐநாமஉ பேரவைத் தீர்மானத்துக்கு  இலங்கை அனுசரணை வழங்கக் கூடாது எனச் சொல்கிறார். அதனை வலியுறுத்தும் பொருட்டு வட மாகாண சபை ஆளுநர் உட்பட மூன்று பேர் கொண்ட குழுவை ஐநாமஉ பேரவைக்கு அனுப்பி வைக்கப் போகிறார்.  சிறிசேனா சனாதிபதி என்ற முறையில் அவரே அரசின் தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். ஆளுநர் நரேன் இராகவன் சனாதிபதியின் முகவர். தமிழ் மக்கள் சார்பாகப் பேச அவருக்கு எந்தத் தகைமையும் கிடையாது.

ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மனாங்கள் 30-1 (2015) மற்றும் 34-1 (2017) இலங்கை அரசின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் வாள்!  அந்தத் தீர்மானங்களை நடை முறைப்படுத்த வேண்டும் என்றால் அவற்றை உயிரோடு வைத்திருக்க வேண்டும். அதன் மூலமே  இலங்கையை ஐநாமஉ பேரவை தனது கண்காணிப்பில் தொடர்ந்து வைத்திருக்க முடியும்.

ஐநாமஉ பேரவை உருவாக்கப்பட்ட யூன் 2006 – யூன் 2016 வரை அந்த அமைப்பு 135 நாடுகளைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இதில் 68 தீர்மானங்கள் (51%)  இஸ்ரேல் நாட்டுக்கு எதிரானவை. 2013 ஆம் ஆண்டில் மட்டும் ஐநாமஉ பேரவை இஸ்ரேல் நாட்டைக் கண்டித்து  45 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் அந்த நாடு ஐநாமஉ பேரவைக்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்க மறுதjதுவிட்டது. அந்த அமைப்பில் இருந்தே இஸ்ரேல் நாடு  வெளியேறிவிட்டது.

இஸ்ரேல் இப்படி நடந்து கொள்வதற்குக் காரணம் அந்த நாட்டுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு. அதே அமெரிக்கா எங்களுக்கும் ஆதரவு வழங்குகிறது.

இதற்கிடையில் கூத்துக்கு  கோமாளிகள் இல்லாவிட்டால் கூத்து சோபிக்காது என்பார்கள்.  கூத்துக்கு மட்டுமல்ல எங்களது அரசியல் கூட  கோமாளிகள் இல்லாது சோபிக்காது.  பல அரசியல் கோமாளிகள் இருந்தாலும் அவர்களில் முன்வரிசையில் இரண்டு பேர் காணப்படுகிறார்கள். ஒருவர் நாடறிந்த குழப்பவாதி சிவாஜிலிங்கம். மற்றவர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.

சுமந்திரன் எம்பி யை எச்சரிக்கிகறார் சிவாஜி என்ற செய்தி வந்திருக்கிறது. இதைப் படிக்க சிரிப்பு வருகிறது. மொட்டைத் தலைச்சி மயிரைச் சிலுப்பிக் காட்டினாளாம். 

சிவாஜிலிங்கம், தனது கட்சியான ரெலோ இயக்கத்தின் கட்டுப்பாட்டையும், தனது கட்சி இடம் பெற்றுள்ள  தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டையும் தன்னிச்சையாக எப்போதும் மீறி வரும் ஒரு அரசியல்வாதி.

சிவாஜிலிங்கத்தை எல்லோரும் ஒரு அரசியல் கோமாளி என்றே நினைக்கிறார்கள். 2009 இல் சனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என ததேகூ முடிவு செய்த போது அதனை மீறி சனாதிபதி தேர்தலில்  போட்டியிட்டு 9,662 (0.09விழுக்காடு) வாக்குகளை மட்டும் பெற்று ஒன்பதாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். போதாக்குறைக்கு கட்டுப்பணமான  ரூபா 75,000 இழந்தார்!

ஓகஸ்ட் 2015 இல் நாடாளுமன்றத் தேர்தல்  நடந்தது.  அந்தத் தேர்தலில் மகிந்த இராசபக்ச போட்டிபோடும் குருநாகலில் போட்டியிட்டுக் கட்டுக் காசை இழந்தார்.  வட மாகாண சபை அமர்வின் போது சபை நடுவில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை தடை செய்வார்.   சபையின் இறையாண்மையைக் குறிக்கும் செங்கோலைப் பறித்துத்  தரையில் வீசி உடைப்பது (ஒரு முறையல்ல இருமுறை) போன்ற கோமாளி நடவடிக்கைகளையிட்டு அவர் வெட்கப்படுவதில்லை. துக்கப்படுவதும் இல்லை. அவற்றை வீர தீர சாதனை என நினைத்துக் கொள்கிறார்.

“நாங்கள் சுமந்திரனுக்குக் கூறவிரும்புவது மன்னாதி மன்னர்களை எல்லாம் மக்கள் புரட்சி வேரொடு பிடுங்கி எறிந்த வரலாற்றை மறக்கக்கூடாது” என்கிறார். ரெலோ அமைப்பு என்ன புரட்சி செய்தது? எதை வேரோடு புடுங்கி வெட்டிச் சாய்த்தது? 

1983 யூலை கரவரத்தை அடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவிற்கு சென்று அங்கு தங்கியிருந்தனர். ஆனால் மானிப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் தனது உடுவில் இல்லத்திலும், கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் தனது நல்லூர் இல்லத்திலும், பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரத்தினம் தனது தொண்டமானாறு இல்லத்திலும் வாழந்து வந்தனர்.

இந்த மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு இந்திய றோ அமைப்பு ரெலோ இயக்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அக்காலப்பகுதியில் இந்திய றோவின் வழிநடத்தலில் ரெலோ இயக்கம் பல படுகொலைகளை யாழ்ப்பாணத்தில் நடத்திக்  கொண்டிருந்தது.

இந்திய றோ அமைப்பின் உத்தரவை அடுத்து ரெலோவின் தலைவர் சிறிசபாரத்தினம் தனது பொறுப்பாளர்களான பொபி, தாஸ் ஆகியோருக்கு தமிழ் தலைவர்கள் மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு தகவல் அனுப்பினார். உடுவிலிருந்த தர்மலிங்கத்தையும் நல்லூரில் இருந்த ஆலாலசுந்தரத்தையும் சுட்டுக்கொல்லுமாறு பொபிக்கு தகவல் அனுப்பினார். தொண்டமானாறில் இருந்த கே.துரைரத்தினத்தை சுட்டுக் கொல்லுமாறு வடமராட்சிப்  பொறுப்பாளர் தாஸிற்கு உத்தரவிட்டார். ஆனால் துரைரத்தினத்தைச்  சுட்டுக்கொல்வதற்கு தாஸ் இணங்கவில்லை. வடமராட்சியில் மக்கள் செல்வாக்குள்ள ஒரு மனிதரை எந்த குற்றச்சாட்டுக்களும் இன்றி எப்படி கொல்வது என அதற்கு அவர் இணங்கவில்லை.  செப்தெம்பர் 2, 1985  நள்ளிரவு நேரத்தில்  பொபி உடனடியாக ஆலாலசுந்தரத்தையும் தர்மலிங்கத்தையும் வீட்டிலிருந்து கடத்தி சென்று சித்திரவதை செய்து சுட்டுக்கொன்றார்கள்.

அடுத்த நாள் அதிகாலையில் ஆலாலசுந்தரத்தின் உடல் சூட்டுக் காயங்களுடன் அவரது வீட்டுக்கு அருகில் கிடக்கக் காணப்பட்டது. தருமலிங்கத்தின் இறந்த உடல் தலையில் சூட்டுக் காயத்துடன் மானிப்பாய்க்கு அருகில் தாவடியில் உள்ள இடுகாடு ஒன்றில் கிடக்கக் காணப்பட்டது.   இதுதான் ரெலோ செய்த மாபெரும்  புரட்சி.

இந்த இரண்டு படுகொலைகளுக்கு எவரும் உரிமை கோரவில்லை. ஈழ தேசிய விடுதலை முன்னணியின் உறுப்பினர்களே இப்படுகொலைகளை நிகழ்த்தியதாக தருமலிங்கத்தின் மகனும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சாட்டினார். விடுதலைப் புலிகளே இதனை நிகழ்த்தியதாக இலங்கை அரசு தெரிவித்து வந்தது. ஆனாலும் இப்படுகொலைகளை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோவின் கட்டளைக்கிணங்க தமிழீழ விடுதலைக் கழகமே நிகழ்த்தியது என்பதே உண்மையாகும்.  ஆலாலசுந்தரம் டெலோ அமைப்புக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தார்.  அத்துடன் டெலோ அமைப்பின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் உறவினரும் ஆவார்.

மேலும் றோவிடம் ஆயுதங்களை வாங்கி புலிகளோடு போராடிக் கொண்டிருந்த புளட்டுக்கு சிவாஜிலிங்கம் அவற்றை வழங்கினார். இப்போது புலிவேடம் போட்டுக் கொண்டு திரிகிறார். அது வேறு கதை.

இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்கக் கூடாது என ஒற்றைக்காலில் நிற்கும் சிவாஜிலிங்கம் ஐநாமஉ பேரவை இலங்கையில் ஒரு அலுவலகத்தை திறக்க வேண்டும் என்கிறார். இலங்கையின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ஒரு கண்காணிப்பாளரை – அறிக்கையாளரை- நியமிக்க வேண்டும் என்கிறார்.

ஓர் அலுவலகம் அல்லது அறிக்கையாளர் அல்லது அனைத்துலக கண்காணிப்பு இடம் பெறவேண்டும் என்றால் ஐநாமஉ பேரவையின் கண்காணிப்பு நீடித்தால் மட்டுமே அவை சாத்தியமாகும். அவற்றை ஓரு புதிய தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினால் மட்டுந்தான் அவை சாத்தியமாகும். இது சிவாஜிலிங்கம் என்ற அரசியல் கோமாளிக்கு விழங்காது. அப்படி எதிர்பார்ப்பதும் அறம் அல்ல. ஆனால் நீதிமன்ற நீதிபதி விக்னேஸ்வரன் உட்பட  5 கட்சித் தலைவர்களுக்கும் தெரியவில்லையா?

இலங்கையின் ஒப்புதல் இன்றி அல்லது இணக்கம் இன்றி ஒன்றும் நடை பெறாது.

சிவாஜிலிங்கம்  போல இன்னொரு அரசியல் கோமாளி சுரேஸ் பிறேமச்சந்திரன். அவர் என்ன சொல்கிறார்?  “சட்டத்துறையில் சுமந்திரன் விண்ணாதி விண்ணராக இருக்கலாம். ஆனால் அரசியலில் அவர் அப்படியில்லை” என்கிறார். இப்படித்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் சுமந்திரனையும் கிழக்கில் சம்பந்தன் ஐயா அவர்களையும் தோற்கடிக்க புலத்தில் நிதி திரட்டினார். கடைசியாக வடக்கில் சுமந்திரனுக்கு வெட்டிய குழியில் தானே குப்புற வீழ்ந்தார். மக்கள் பிறேமச்சந்திரனை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

ததேகூ இல் இருந்து வெளியேறிய பிறேமச்சந்திரன் இந்த மூன்று ஆண்டு காலம் எதைச் சாதித்தார் எனச் சொல்ல முடியுமா? 2018  இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கில் போட்டியிட்ட கட்சிகளில் ஆகக் குறைந்த வாக்குகளையும் (36,183)  ஆகக் குறைந்த உறுப்பினர்களையும் (43) பெற்ற கட்சி இபிஆர்எல்எவ் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிதான்.   தமிழர் விடுதலைக் கூட்டணியோடு தேர்தல் கூட்டணி வைத்திருக்காவிட்டால் இதில் பாதி வாக்குகள்தான் இபிஆர்எல்எவ் கட்சிக்கு விழுந்திருக்கும். அதே சமயம் அந்தத் தேர்திலில் ததேகூ க்கு  வடக்கில் 200,344 வாக்குகள் கிடைத்தன. மொத்தம் 277 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இன்றைய பூகோள அரசியலை எதிர்கொள்ள அரசியல் சாணக்கியம் தேவை. அனைத்துலக நாடுகளை நாம் பகைக்கக் கூடாது. பகைக்கவும்  முடியாது. அவற்றோடு நாம் ஒட்டித்தான் ஓட  வேண்டும். வெட்டி ஓட முடியாது.

கடந்த கால  வரலாற்றில் இருந்து நாம் பாடம் படிக்க வேண்டும். வரலாற்றில் இருந்து பாடம் கற்காத இனம் வரலாறாகிவிடும்.  இன்றைய கால கட்டத்தில் நாங்கள் கத்தியைத் தீட்டக் கூடாது. புத்தியைத் தீட்ட வேண்டும்.

பல்கலைக் கழக சமூகம், ஐந்து கட்சித் தலைவர்கள்  எல்லோருக்கும் இது சமர்ப்பணம்!


புத்தியைத் தீட்டவேண்டும்!

 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply