அரசு அபிவிருத்தி என்ற பெயரில் அங்கும் இங்குமாகப் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அள்ளித் தெளிக்கிறது – செயலர் ஸ்ரீகாந்தா
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொடுப்பதே ததேகூ யின் பிரதான இலக்கு – தலைவர் அடைக்கலநாதன்
நக்கீரன்
குரு – வா, வா உன் வருகைக்குத்தான் காத்திருக்கிறேன். நாட்டில் மாதம் மும்மாரி பெய்கிறதா?
சீடன் – என்ன குருவே பழைய காலத்து இராசாக்கள் கேட்ட அதே கேள்வியைக் கேட்கிறீர்கள்? அந்தக் காலத்து இராசாக்களுக்கு நாட்டில் மழைபெய்ததா இல்லையா என்ற சங்கதியே தெரியாமல் இருந்தது. சரி அதை விடுங்கள். ‘காலைக்கதிர்‘ நாளேட்டைப் படித்தீர்களா?
குரு – இல்லையே! அந்தக் காலத்தில் ஒரு வீரகேசரி அல்லது ஒரு தினகரன்தான் அல்லது ஒரு சுதந்திரன் வந்தது. இப்போது அப்படி இல்லையே? ஏகப்பட்ட ஏடுகள் வருகின்றன. எல்லாவற்றையும் எழுத்துக் கூட்டிப் படிக்க ஒரு நாள் போதாது. சரி. காலைக்கதிர் நாளேட்டில் அப்படி என்னதான் புதினம்?
சீடன் – ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என். ஸ்ரீகாந்தாவைச் செவ்வி கண்டு அதனை இரண்டு முழுப்பக்கதில் காலைக்கதிர் வெளியிட்டுள்ளது. அதில் ஸ்ரீகாந்தா தமிழ் அரசுக் கட்சியையும் தலைவர்களையும் ஒரு பிடி பிடித்திருக்கிறார்!
குரு – அதில் என்ன அதிசயம்? அண்மையில் கூடத் தேசியப் பட்டியல் எம்பி பதவி தங்களுக்கு இல்லை என்றால் நடக்கிறதே வேறு என்று சொன்னார்களே? நினைவு இருக்கா?
சீடன் – இல்லாமலா? அவர் எப்போதும் காரசாரமாகத்தான் பேசுபவர். அவரது பேச்சைக் கேட்பவர்கள் அவருக்கும் அவரது கட்சிக்கும் பின்னாலே ஆனை,சேனை, அணிதேர் புரவி, ஆட்பெரும் படை, குடை குஞ்சரம் இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்!
குரு – ஆமாம் நீ சொல்வது சரிதான். பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் சொல்லும் பொய்யும் மெய் போலவே தோன்றும் என உலகநீதி சொல்கிறது!
சீடன் – அதேதான் குருவே! “எமது மக்கள் நீண்ட காலமாகத் திட்டவட்டமாக வெளிப்படுத்தி வந்த அரசியல் நிலைப்பாடு இப்போது நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது. இதற்குக் காரணம் சிங்கள – பெளத்த அரசியல் ஆதிக்க சக்திகள் அல்ல. மாறாக எமது மக்களின் சார்பில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் பல்வேறு தரப்பினரும் என்று தான் கூற வேண்டும்” என்கிறார் ஸ்ரீகாந்தா!
குரு – யாரையோ மனதில் வைத்துக் கொண்டு நொட்டை சொல்வது போல் இருக்கிறதே? அதாவது same goal அடிக்கிறார் போல் தெரிகிறதே?
சீடன் – அதேதான் குருவே! அவரது இலக்கு தமிழ் அரசுக் கட்சித் தலைவர்கள் குறிப்பாக சம்பந்தன் ஐயா மற்றும் சுமந்திரன். இந்தத் தலைவர்கள் சிங்கள பெளத்த அரசியல் சக்திகளை விட மோசமாம்! அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கிறார்களாம்!
குரு – இப்படிச் சொல்பவரும் அரசியல்வாதிதானே? அவரது கட்சியும் கட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகள்தானே? அவர்களும் முண்டு கொடுக்கிறார்கள்தானே?
சீடன் – நீங்கள் வேறு? அவர் அரசியல்வாதிகள் என்று சொல்வது நாடாளுமன்ற உறுப்பினர்களை! முக்கியமாக தமிழ் அரசுக் கட்சி நா.உறுப்பினர்களை. அதில் இரண்டு ரெலோ நாடாளுன்ற உறுப்பினர்களும் அடங்குவர்!
ஸ்ரீகாந்தா அவர்களிடம் கேட்ட கேள்வியும் அதற்கு அவர்கொடுத்த பதிலையும் அப்படியே படிக்கிறேன் கேளுங்கள் குருவே!
கேள்வி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்ற ரீதியில் சமகால அரசியல் நிலைமைகளில் கூட்டமைப்பின் செயற்பாடுகளை எவ்வாறு கருதுகின்றீர்கள்?
பதில் – இன்றைய அரசியல் நிலைமையில் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் பல சவால்களை முன்னிறுத்தி உள்ளது. எமது மக்கள் நீண்ட காலமாகத் திட்டவட்டமாக வெளிப்படுத்தி வந்த அரசியல் நிலைப்பாடு இப்போது நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது. இதற்குக் காரணம் சிங்கள பெளத்த அரசியல் ஆதிக்க சக்திகள் அல்ல. மாறாக எமது மக்களின் சார்பில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் பல்வேறு தரப்பினரும் என்று தான் கூற வேண்டும்.
இதில் பிரதானமாகக் கூட்டமைப்பின் பிரதான கட்சியாகத் தன்னை கருதிக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியென்று பகிரங்கமாகக் கூறவேண்டிய நிர்ப்பந்தமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நாங்கள் நம்பிக்கை இழக்கக்கூடாது. தலைவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லது தலைமைத்துவத்துக்கு உரிமை கோரிக் கொண்டிருப்பவர்கள் சனநாயக அரசியல் களத்திலே தமிழ் மக்களைக் கைவிட்ட துக்ககரமான நிகழ்வுகள் கடந்த காலங்களிலும் அரங்கேறியிருக்கின்றன.
குரு – நீ சொல்வதைப் பார்த்தால் ஸ்ரீகாந்தா தன்னை ஒரு மூன்றாவது மனிதர் போல நினைத்துப் பேசுவதாக எனக்குப் படுகிறது?
சீடன் – அதேதான்! “இதில் பிரதானமாகக் கூட்டமைப்பின் பிரதான கட்சியாகத் தன்னை கருதிக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியென்று பகிரங்கமாகக் கூறவேண்டிய நிர்ப்பந்தமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது” என்கிறார்.
குரு – அப்படியென்றால் கூட்டமைப்பின் பிரதான கட்சியாகத் தன்னை இலங்கைத் தமிழரசுக் கட்சி கருதிக் கொண்டிருக்கிறது ஆனால் உண்மை அதுவல்ல என ஸ்ரீகாந்தா சொல்கிறார் என்று சொல்?
சீடன் – ஆமாம் குருவே! ஆனால் அது சரியென்றால் – அதாவது தமிழ் அரசுக் கட்சி பிரதான கட்சி இல்லாவிட்டால் – பின்னர் எதற்காக தமிழ் அரசுக் கட்சியை மட்டும் போட்டுத் தாக்க வேண்டும்? விமர்சனம் செய்ய வேண்டும்? புளட் அமைப்பையும் அல்லவா சேர்த்து விமர்சனம் செய்ய வேண்டும்?
குரு – நான் கேட்க வேண்டிய கேள்விகளை நீ கேட்கிறாய்! கூட்டமைப்பில் தமிழ் அரசுக் கட்சி பிரதான கட்சி இல்லையா?
சீடன் – அப்படி ஸ்ரீகாந்தா எப்படிச் சொல்ல முடியும்? தமிழ் அரசுக் கட்சிதான் பிரதான கட்சி என்பது மக்கள் அளித்த தீர்ப்பை அடிப்படையாக வைத்துச் சொல்லி விடலாம். கடந்த ஓகஸ்ட், 2015 இல் நடந்த தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்கள் 1,2,3,5 ஆவது இடத்துக்கு வந்தார்கள். ஆறாவது இடத்துக்கு வந்த அருந்தவபாலனுக்கு 42,925 விருப்பு வாக்குகள் கிடைத்தன. தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு விழுந்த 15,022 வாக்குகளில் வெறுமனே 5 வாக்குகள் மாறி விழுந்திருந்தால் அருந்தவபாலன் இன்று ஒரு நா.உறுப்பினராக இருந்திருப்பார்! போகட்டும். இந்த அட்டவணையைப் பாருங்கள் குருவே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளையும் வாக்கு விழுக்காட்டையும் இந்த அட்டவணை காட்டுகிறது.
2015 நாடா ளுமன்றத் தேர்தல் விருப்பு வாக்குகள் – யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம்
வேட்பாளர் |
வாக்குகள் |
இதஅக |
புளட் |
ரெலோ |
இபிஆர்எல்எவ் |
ஸ்ரீதரன் |
72,258 |
72,258 |
|||
மாவை |
58,782 |
58,782 |
|||
சுமந்திரன் |
58,043 |
58,043 |
|||
சித்தார்த்தன் |
53,740 |
53,740 | |||
சரவணபவன் |
43,289 |
43,289 |
|||
அருந்தவபாலன் |
42,925 |
42,925 |
|||
சுரேஸ் |
29,906 |
0 |
29,906 |
||
ஸ்ரீகாந்தா |
20,684 |
0 |
20,684 | ||
ஆனந்தராஜ் |
15,408 |
0 |
15,408 |
||
நெல்வன் மதனி |
13,793 |
13,793 |
|||
மொத்தம் |
408,828 |
289,090 |
53,740 | 20,684 |
45,314 |
விழுக்காடு |
70.71 |
13.14 |
5.06 |
11.08 |
மொத்த விருப்பு வாக்குகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 289,090 (70.71 விழுக்காடு) வாக்குகள் விழுந்திருக்கின்றன. ரெலோ சார்பாகப் போட்டியிட்ட ஸ்ரீகாந்தாவுக்கு வெறுமனே 20,684 (5.06 விழுக்காடு) வாக்குகள்தான் கிடைத்தன. இப்போது சொல்லுங்கள் எந்தக் கட்சி பிரதானக் கட்சி என்று?
குரு – அறுக்க முடியாதவன் இடுப்பில் ஆயிரத்தெட்டு அரிவாள் என்று சொல்வார்கள். தேர்தலில் எட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டவர் இப்படி எல்லாம் பேசக் கூடாது என்று சொல்ல வருகிறாய்?
சீடன் – குதிரையின் குணத்தை அறிந்துதான் கடவுள் குதிரைக்கு கொம்பு கொடுக்கவில்லை குருவே! ஸ்ரீகாந்தா “கூட்டமைப்பு இப்போது தடுமாறிக் கொண்டிருக்கின்றது என்று கூற நான் தயங்கப் போவதில்லை. ஆனால் நாங்கள் அதாவது எமது ரெலோ இயக்கம் மக்களுக்குக் கடந்த தேர்தல்களில் எதை எதை முன்வைத்து வந்ததென்பதையும் அதனால் கூட்டமைப்பு ஆதரவைப் பெற்றுக் கொண்டதென்பதையும் ஒரு போதும் மறக்க மாட்டோம். ஆகவே கூட்டமைப்பின் கொள்கைத் திட்டத்தை முன்னெடுப்பதில் உறுதியாக இருக்கின்றோம்” என்கிறார்.
குரு – இப்படிச் சொல்லிக் கொண்டே ததேகூ ஓடு முரண்படுகிறாரே? முரண்பாடு இருப்பது உண்மையானால் அதனை நான்கு சுவர்களுக்கு உள்ளே அல்லவா பேசவேண்டும்? இப்படி நடுவீதியில் வைத்து அழுக்குத் துணைகளை வெளுப்பவன் போல் நடக்கக் கூடாது?
சீடன் – இது ஒரு உத்தி அல்லது தந்திரம். அடியோடு முரண்பட்டால் ததேகூ இல் இருந்து இபிஆர்எல்எவ் வெளியேறியது போல வெளியேற வேண்டிவரும். அதற்கு அவரோ அவரதுகட்சியோ அணியமாகவில்லை. ததேகூ க்குள் இருந்து கொண்டு குடைச்சல் கொடுத்துக் கொண்டு அரசியல் செய்ய ஸ்ரீகாந்தா விரும்புகிறார். பாப்பாண்டவரைவிடத் தான் பெரிய கத்தோலிக்கன் என நினைப்பவன் போல தான்மட்டும் 22 கரட் தமிழ்த் தேசியவாதி மற்றவர்கள் பித்தளைகள் என்று நினைக்கிறார். இதைக் கேளுங்கள் குருவே!
“அபிவிருத்தி என்ற பெயரில் அங்கும் இங்குமாகப் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அள்ளித் தெளித்து அல்லது கிள்ளித் தெளித்து அடுத்த தேர்தலில் அவர்களுடைய வாக்குகளை மீண்டும் எங்களுக்கு உறுதிப்படுத்துவது தானா எங்களது நோக்கம் என்ற கேள்வியைக் கூட்டமைப்பிலுள்ள அரசியல் மனச்சாட்சி கொண்ட ஒவ்வொரு பிரமுகரும் கட்டாயம் எழுப்பி அதற்கு விடை காண வேண்டும்.. மேலும் வெறுமனே அரசு கொட்டிக் கொடுக்கின்ற 30 கோடி ரூபாக்களோடு எங்களை நாங்கள் மட்டுப்படுத்திக் கொள்வோமாக இருந்தால் அது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாக இருக்கும். அது மாத்திரமல்லாமல் கூட்டமைப்பின் அரசியல் தற்கொலையாகவும் இருக்கும். அந்த நிலைமைக்குள்ளே நாங்கள் ஒரு போதும் எங்களுடைய கட்சியை அனுமதிக்க மாட்டோம்.”
குரு – ஸ்ரீகாந்தா அபிவிருத்தி வேண்டாம் என்கிறாரே? விக்னேஸ்வரனும் இதைத்தானே சொல்கிறார்? அபிவிருத்தி எங்களுக்குத் தேவையில்லை. அரசியல் தீர்வுதான் வேண்டும் என்று சொல்கிறார். இரண்டு பேரும் சாடிக்கு மூடி போல காட்சி அளிக்கிறார்களே?
சீடன் – அதேதான் குருவே! ஆனால் ஸ்ரீ காந்தாவுக்கு ரூபா 30 கோடி சின்னக் காசாக இருக்கலாம். அற்ப தொகையாகத் தெரியலாம். ஆனால் எமது மக்களுக்கு அப்படியில்லை. அவர்களது அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்து வைக்க வீடுகள், கழிவறைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் கட்டிக் கொடுக்க வேண்டும், குடி தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். வேலைவாயப்புக்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக வடக்கில் மூன்றில் ஒரு பகுதியினர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவர்கள். முப்பது ஆண்டு காலம் நீடித்த போர் காரணமாக தென்னிலங்கை மீனவர்களோடு ஒப்பிடும் போது இவர்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு மயிலிட்டி, பருத்தித்துறை போன்ற துறைமுகங்களை மேம்படுத்தி, வள்ளங்கள், வலைகள் போன்றவற்றை வழங்கி கடலை நம்பி வாழும் அந்த ஏழை பாழைகளின் வாழ்வாதாரத்தை பழைய நிலைக்கு உயர்த்த வேண்டும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ரெலோ கட்சியைச் சார்ந்த நா.உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் இருவரும் இந்த 30 கோடியை இரண்டு கையாலும் வாங்கி மக்களது அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கப் பயன்படுத்துகிறார்கள்.
குரு – கோட்டையில் உள்ள இராசா குடிமக்களும் தன்னைப் போல பால் பழம் சாப்பிட்டு, எட்டுவகைக் கறிகள் பதினெட்டுவகைப் பச்சடியோடு உண்டு, ஆயாசம் போக பாயாசம் சாப்பிட்டுப் பன்னீரில் வாய் கொப்பளித்து சகல சுகபோகங்களோடும் வாழ்வதாக நினைப்பாராம். ஸ்ரீகாந்தா கோட்டையில் வாழும் இராசா போல் தன்னை நினைக்கிறாரா?
சீடன் – அதேதான் குருவே! இதில் பகிடி என்னவென்றால் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தாதான் இப்படிப் பேசுகிறார். அவரது கட்சி நா.உறுப்பினர்கள் அப்படிப் பேசவில்லை. இன்னும் சொல்லப் போனால் ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா சொல்வதற்கு நேர்மாறாகப் பேசுகிறார்!
குரு – அப்படியென்றால் தலையிருக்க வால் ஆடுகிறதா?
சீடன் – அதேதான் குருவே! செல்வம் அடைக்கலநாதன் பேசியதைப் படிக்கிறேன் கேளுங்கள்,
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை பெற்றுக்கொடுப்பதே கூட்டமைப்பின் குறிக்கோள்” – செல்வம் அடைக்கலநாதன்
“பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான இலக்காகும்” என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கொள்கைக்காக செயற்படுபவர்கள். மக்களுக்கு கிடைக்கவேண்டிய வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுப்பதிலிருந்து தமது கட்சி ஒருபோதும் பின்வாங்காது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(http://www.newsuthanthiran.com/2019/03/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%)
குரு – எனக்குத் தலை சுற்றுகிறது. ஓடிப்போய் செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா!
(சீடன் தண்ணீர் கொண்டுவர தலைதெறிக்க ஓடுகிறான்)
இடுப்பில் ஆயிரத்தெட்டு அரிவாள்களுடன் அலையும் ரெலோவின் செயலர் ஸ்ரீகாந்தா!
Leave a Reply
You must be logged in to post a comment.