ஆதாரபூர்வமாக மீண்டெழும் தமிழர் வரலாறு!
யாழ்ப்பாண அரசு மீது போர்த்துக்கேயர் படையெடுப்பு
எழுதப்பட்டுள்ள தமிழர்களின் வரலாறுகள் புனைவுகள் அல்ல என்பதை ஆதாரபூர்வமாக நிறூபித்திருக்கிறது மன்னார் புதைகுழி! வரலாற்றோடு தொடர்பு பட்ட பல சம்பவங்களுக்கும் மன்னார் புதைகுழிக்கும் தொடர்புகள் இருப்பது இதனூடாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
எதேச்சையாக மன்னார் சதோச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப்புதைகுழியின் எலும்புக்கூடுகளின் காபன் அறிக்கை அது கி.பி 1400 தொடக்கம் கி.பி 1700 வரையான காலப்பகுதிக்குறியதென்று வந்திருக்கின்றது. இதன் மூலம் தமிழர் வரலாறு மீண்டெழ சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.
போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் ஆங்கிலேயர் காலம் வரை யாழ் இராசதானி மீதும் வன்னி ராஜ்யங்கள் மீதும் பல்வேறு போர்கள் இடம்பெற்றிருந்தன அவை வெறுமனே வரலாற்று கதைகள் என்ற ரீதியிலேயே இதுவரை பார்க்க்கப்பட்டது இப்போது இந்த புதைகுழி அவைகள் கதைகள் அல்ல நிஜங்கள் என தெரியவந்திருக்கிறது.
இதே காலப்பகுதியில் மன்னாரோடு தொடர்பு பட்ட வரலாற்று சம்பவங்கள் சில:-
1) 1540 இல் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாகிய மன்னாரில் போர்த்துக்கேயக் குருமாரின் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக முதலாம் சங்கிலி எடுத்த தீவிர நடவடிக்கைகளால் மதமாற்றம் செய்யப்பட்ட 800 மன்னார் குடிமக்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போர்த்துக்கேயக் குருமார், யாழ்ப்பாண அரசனைத் தண்டிக்கும்படி கோவாவில் இருந்த போர்த்துக்கேய அரசப்பிரதிநிதிக்கு அழுத்தங்களைக் கொடுத்துவந்தனர். இந்தியாவில் இருந்த போர்த்துக்கேயரின் ஆட்சிப்பகுதிகளைச் சுற்றியிருந்த தாயக அரசுகளின் பயமுறுத்தல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்ததாலும், அவர்களின் வணிக நோக்கங்களுக்கு யாழ்ப்பாண இராச்சியம் எவ்வித வாய்ப்புகளையும் வழங்காததினாலும், யாழ்ப்பாணத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் அவர்கள் உற்சாகம் காட்டவில்லை. சளைக்காத குருமார் போர்த்துக்கேயப் பேரரசன் வரை இந்த விடயத்தை எடுத்துச் சென்றனர். பேரரசனும் யாழ்ப்பாண அரசனைத் தண்டிப்பதற்கான ஆணையை கோவாவில் இருந்த அரசப் பிரதிநிதிக்கு அனுப்பியிருந்தான். எனினும் குருமார் விரும்பிய அளவு வேகமாக எதுவும் நடக்கவில்லை.
1558 இல் டொம் கான்சுட்டன்டீனோ டி பிரகன்சா போர்த்துக்கேய அரசப்பிரதிநிதியாக கோவாவுக்கு வந்தான். புறப்படுமுன், யாழ்ப்பாண இராச்சியம் தொடர்பில் போர்த்துக்கேய அரசன் மூன்றாம் ஜோன் முன்னைய அரசப் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய ஆணை வேறு போர்களில் கவனம் செலுத்தவேண்டி இருந்ததனாலோ, பிற காரணங்களாலோ நிறைவேற்றப்படாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கிறித்தவத்துக்கு வேண்டிய ஆதரவை வழங்குவதில் மெத்தனம் காட்டப்படுவது குறித்து குருமார் முறைப்பாடு செய்வதாகவும் கூறிய போர்த்துக்கேய அரசி கத்தரீனா, இந்த விடயத்தில் சிறப்புக் கவனம் எடுக்குமாறு பிரகன்சாவைக் கேட்டுக்கொண்டிருந்தார். யாழ்ப்பாண அரசன் மன்னாரில் செய்த கொடுமைகளுக்காகவும், தொடர்ந்து கிறித்தவத்துக்கு எதிரான அவனது நடவடிக்கைகளுக்காகவும் அவன் இன்னும் தண்டிக்கப்படாமல் இருப்பது வருத்தத்துக்கு உரியது என்றும் அரசி எடுத்துக்கூறி இருந்தார். எனவே இந்தியாவுக்கு வந்த பிரகன்சா தானே யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்துச் சென்று போர்த்துக்கேய அரசனின் ஆணையை நிறைவேற்றத் தீர்மானித்தான்.
2) போர்த்துக்கேயரின் இரண்டாம் படையெடுப்பு:- 1591 அக்டோபர் இறுதியில் மன்னாரில் இருந்து, 1400 போர்த்துக்கேயரும், 3000 சிங்களவரும் அடங்கிய பெரும் படையுடன் அந்தரே பூர்த்தாடோ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டான். இந்தப் படையெடுப்புக்காக மன்னார்ப் பகுதியில் முத்துக்க்ளிப்பினால் பெறப்பட்ட 30,000 பர்தாங்கும், மன்னார்க் கத்தோலிக்கரிடம் கடனாகப் பெறப்பட்ட 20,000 பர்தாங்கும் பயன்படுத்தபட்டதாகத் தெரிகிறது 43 கப்பல்களிலும், 200க்கு மேற்பட்ட தோணிகளிலும் இப்படைகள் சென்றன. யாழ்ப்பானத்து அரசன் இப்படைகள் ஊர்காவற்றுறையில் இறங்கும் என எதிர்பார்த்து அங்கே பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தான். ஆனால், போர்த்துக்கேயப் படைகள் கொழும்புத்துறையை அடைந்தன. கப்பல்களில் இருந்து கனரகப் பீரங்கிகள் தாக்குதல் நடத்த முதலில் 150 போர்த்துக்கேயரும், 200 சிங்களப் படையினரும் கரையில் இறங்கினர். எதிர்த்தாக்குதல் நடத்திய யாழ்ப்பாணப் படைகள் கடுமையான தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோல்வியைச் சந்தித்தன. முதலியார் பிராங்கோவும் 250 பேரும் இறந்தனர். ஏராளமான ஆயுதங்கள் போர்த்துக்கேயர் வசமாயின. பின்னர் போர்த்துக்கேயரின் படைகள் முழுவதும் கரையிறங்கின. கரையோரமாக நடந்துவந்த படைகள் பண்ணைக்கருகில் முகாமிட்டன. இப்பகுதியில் இருந்த முசுலிம்களின் வணிக நிலையில் இருந்த களஞ்சியங்களில் சேமிக்கப்பட்டிருந்த அரிசி, நெல் ஆகியவற்றையும் அவர்கள் கொள்ளையிட்டனர்.
3) மூன்றாவது யாழ் இராசதானி மீதான படையெடுப்பு:-
யாழ்ப்பாணத்தின் முடிக்குரிய வாரிசான எதிர்மன்னசிங்கனின் மகன் சிறுவனாக இருந்ததால் அவன் சார்பில் அரசை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பில் பிரச்சினை எழுந்தது. இறுதியில் சங்கிலி குமாரன் அரச நிர்வாகத்தைக் கைப்பற்றிக்கொண்டான். உள்நாட்டுப் பிரச்சினையாக உருவான இது போர்த்துக்கேயரின் தலையீட்டினால் தீர்த்துவைக்கப்பட்டது. சங்கிலியைப் பகர ஆளுனனாகப் போர்த்துக்கேயர் ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் விரைவிலேயே சங்கிலி ஒழுங்காகத் திறை செலுத்தவில்லை என்றும் 3 ஆண்டுகளுக்கான திறை நிலுவையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டினர். அதே வேளை ஒப்பந்தங்களுக்கு எதிராக சங்கிலி தமிழ்நாட்டில் இருந்து படைகளையும் ஆயுதங்களையும் பெற்று வருவதாகவும் ஐயங்கள் எழுந்தன.[1]
இலங்கையில் போர்த்துக்கேயரின் கட்டளைத் தளபதியாக இருந்த கான்சுட்டன்டினோ டி சா டி நோரஞ்ஞா யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பிலிப்பே டி ஒலிவேராவை தலைமைத் தளபதியாக இப்பணியில் ஈடுபடுத்தினான்.
கொடுக்கவேண்டியிருந்த திறையை அறவிடுவது என்ற போர்வையில், 1619ம் ஆண்டில் தளபதி ஒலிவேரா தலைமையிலான படைகள் மன்னாரில் இருந்து தரைப்பாதை ஊடாகபூநகரிக்கு வந்தன. இப்படையில் மூன்று கப்பித்தான்களின் தலைமையில் மூன்று கம்பனி போர்த்துக்கேயப் போர்வீரர்களும், இன்னொரு கப்பித்தானின் தலைமையில் 500 சிங்கள வீரர்களும் உட்பட 5,000 படை வீரர்கள் வரை இருந்தனர். இப்படைகள் சிறிய தோணிகளில் நீரேரியைக் கடந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் நுழைந்தன. அங்கிருந்து பண்ணைப் பகுதியில் இருந்த புதுமைமாதா தேவாலயப் பகுதிக்கு வந்த ஒலிவேராவின் படைகள் அங்கே முகாமிட்டன. உண்மையில், போர்த்துக்கேயர் கோரும் பணம் முழுவதையும் யாழ்ப்பாண அரசன் செலுத்தாவிடின் அவனைக் கைது செய்வதற்கும், எதிர்த்தால் கொல்வதற்குமான இரகசிய ஆணையுடனேயே ஒலிவேரா யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தான். ஒலிவேரா தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் அந்தோனியோ டி எஸ். பேர்னாடினோ என்பவரைச் சங்கிலியிடம் தூது அனுப்பினான்.
திறை நிலுவையைச் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், யாழ்ப்பானத்தில் இருந்த வடக்கர் படைகளையும், கரையார் தலைவன் வருணகுலத்தானையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. வடக்கர் படைகளையும், வருணகுலத்தானையும் போர்த்துக்கேயரிடம் ஒப்படைப்பது துரோகம் என்பதால், அதை ஏற்றுக்கொள்ள மறுத்த சங்கிலி, ஒலிவேரா யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்ற மூன்று நாட்களுக்குப் பின் அவர்களைத் திருப்பி அனுப்புவதாக வாக்களித்தான். முதலில் பணத்தைத் தருவதாக ஒப்புக்கொண்ட சங்கிலி, சில நாட்களின் பின்னர், ஒலிவேரா படைகளுடன் பூநகரிக்குத் திரும்பிச் சென்றால் 5,000 பர்தாவ் பணம் அனுப்புவதாகவும், மூன்று மாதங்களுக்குப் பின்னர் அதேயளவு பணம் தரப்படும் என்றும் அதற்கு மேல் இப்போது தரமுடியாது என்றும் தெரிவித்தான். சங்கிலியின் பதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமையாததால் ஒலிவேரா யாழ்ப்பாணத்தை தாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினான்…
இவ்வாறான பல வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளோடு மன்னார் தொடர்புபட்டிருக்கிறது. இந்த புதைகுழி அந்த வரலாற்றின் உண்மைக்கு சான்றாதாரமாக இருக்கிறது. இது குறித்து மேலும் ஆய்வுசெய்து தமிழர்களின் வரலாற்றை ஆதாரபூர்வமாக நிறூவவேண்டியது தமிழ் பேசும் வரலாற்று ஆய்வாளர்களின் கடமையாகும். மன்னார் புதைகுழி உங்களுக்கு வரலாற்றின் ஒரு கதவை திறந்துவிட்டிருக்கிறது.
சு.பிரபா
Leave a Reply
You must be logged in to post a comment.