என் குட்டன் என்னைப் புறம்புல்குவான்!
உலகில் பெறுவதற்கினிய பேரின்பங்களுள் ஒன்று, நமது குழந்தைகள்ஓடோடிவந்து நம்மை அணைத்துக் கொள்வதும் கொஞ்சுவதும்தான். நமக்கோ குழந்தைகளுக்கோ எத்தனை வயதானாலும் இந்த இன்பத்தின் அளவு மாறுவதேயில்லை!அதுவும் மலர்கள்போன்ற மென்மையான பூவுடலைக்கொண்ட சின்னஞ்சிறுகுழந்தைகள் ‘குறுகுறு’வென நடைபயின்று, நாம் எதிர்பாராமலோ இல்லை எதிர்பார்த்தோ,பின்னாலிருந்தோ அல்லது முன்னிருந்து ஓடிவந்தோ நம்மை அணைத்துக்கொள்ளும் ஆனந்த அனுபவம் வார்த்தைகளால் விளக்கமுடியாத உன்னதமான ஒரு அனுபவம்.
சரியான சொல்லால் கூறவேண்டுமெனில் பாரதியாரின் பாடலைத்தான் துணைகாணவேண்டும். ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,’ எனும் பாடலில் ‘உன்னைத்தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடீ,’ என்று கூறுவார். ‘உன்மத்தம்’ என்பதற்கு மதிமயக்கம் – அல்லது ஊமத்தம்பூவை உண்டநிலை போன்ற அனுபவம் எனலாம். குழந்தையைத் தழுவிக்கொண்ட அந்தத்தருணங்களில், உலகினையும், நம்மையும் மறந்து, நமது நிலையையும் இடம், ஏவல், பொருள் அனைத்தையுமே மறந்து தன்வயமிழந்து விடுகிறோம். இதனால்தான் குழந்தைகளை ‘மயக்குறு மழலை’ என்றார் புறநானூற்றுப் பாடலைப் பாடிய புலவனார். தெய்வப்புலவர் திருவள்ளுவரும் ‘மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’ என்றார்.
இந்த ‘மெய்தீண்டும்’ அனுபவத்தைப் பெரியாழ்வார் ஆரத்தழுவுதல், புறம்புல்கல் என விதம்விதமாக அனுபவித்துப் பாடிமகிழ்ந்துள்ளார். குழந்தை கிருஷ்ணன் தன்னை அணைத்துக்கொள்ளும் இன்பத்தை அனுபவித்த தாய், அவனிடம், “வா, வந்தென்னை அணைத்துக்கொள்,” என அந்த மெய்தீண்டும் இன்பத்தைத் திரும்பத்திரும்பப்பெற யாசிக்கிறாள்.
‘கருநிறக் குட்டிக்கிருஷ்ணன், பொன்னாலான அரைச்சதங்கை, பாதச்சதங்கை, நெற்றிச்சுட்டி ஆகியவை அணிந்துகொண்டு, அவை ‘பளீர்பளீரெ’ன மின்னல் போல ஒளிவீச, காற்சதங்கைகள் ‘சலன்சலன்,’ என்றொலிக்க, குட்டிமேகம் ஒன்று மின்னலோடு முழங்கியபடி வருவதுபோல ஓடிவந்து எனது இடுப்பில் இருப்பதற்காக வந்து என்னை அணைத்துக் கொள்ளவேணும்’ எனத் தாய் ஆசைப்படுகிறாள். மனிதனுக்குப் பொன்நகைகளின் மேல் ஆசை வளர்ந்தபின்பு தான் தோன்றி வளர்கிறது. ஆயினும் குழந்தை சிறிது தத்தித்தத்தி நடக்க ஆரம்பித்த உடனேயே அவனுக்குக் காலில் ‘கிணிகிணி’யென ஒலிக்கும் கால்சதங்கைகளையும், இடையில் அரைச்சதங்கையையும் அணிவித்து மகிழ்கிறோம். அவன் நடைபயிலும்போது அவை ‘சலார்பிலார்’ எனவும் ‘சலன்சலன்’ எனவும் ஒலிப்பதனைக் கேட்டு மகிழ்கின்றோம்.
பொன்னியல் கிண்கிணி சுட்டி புறங்கட்டித்
தன்னியல் ஓசை சலன்சலன் என்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்
என்னிடைக்கு ஒட்டரா, அச்சோ! அச்சோ!
எம்பெருமான் வாராய்! அச்சோ! அச்சோ! (பெரியாழ்வார் திருமொழி- 9)
இவ்வாறு ஓடிவரும் குழந்தையின் அழகோ கொள்ளை அழகு. அதனையும் ஆசைஆசையாக வர்ணித்து மகிழ்கிறாள் அவள். ஓடிவரும் அவசரத்திலும் ஆர்வத்திலும் கிருஷ்ணனின் சுருண்ட கரிய தலைமயிரானது அவனுடைய பவளவாய் உதட்டின்மீது ஒட்டிக்கொண்டுள்ளது. இது தாய்க்கு செந்தாமரை மலரில் தேன் உண்ண வந்து மொய்க்கும் வண்டுகளைப் போலுள்ளதாம்! ‘சங்கு, சக்கரம், வில், வாள், தண்டு ஆகியவற்றை ஏந்திய உன்னுடைய அழகிய கைகளைக் கொண்டு என்னை ஆரத் தழுவிக் கொள்வாய், அச்சோ! அச்சோ!’ என்கிறாள்.
செங்கமலம் பூவில்தேன் உண்ணும் வண்டேபோல்
பங்கிகள் வந்துன் பவளவாய் மொய்ப்ப,
சங்குவில் வாள்தண்டு சக்கரம் ஏந்திய
அங்கை களாலே வந்து அச்சோ! அச்சோ!
ஆரத் தழுவாய் வந்து, அச்சோ! அச்சோ!
(பெரியாழ்வார் திருமொழி- 9)
இந்த ‘அச்சோ’ எனும் பதத்திற்கு என்ன பொருள்? வியப்புக் குறிச்சொல் என்கிறது
கழகக் கையகராதி. அன்னை வேண்டிக் கொண்டபடிக்கே வந்து குழந்தை அவளை ஆரத்தழுவிக் கொண்டால் விவரிக்க முடியாத புளகாங்கிதம் எய்துவாளல்லவா? அந்த விவரிக்க இயலாத நிலையினை (ஒருவாறு) விளக்கும் வியப்புக் குறிச்சொல்லாக இதனைக் கொள்ளலாம். ஒரு அருமையான, அழகான பூவையோ பொருளையோ கண்டால், ‘ஐயோ, எவ்வளவு அழகாக இருக்கிறது,’ என வியக்கிறோம் அல்லவா? அழகை அளவிட்டுக்கூற இயலாத நமது இயலாமையை அது வெளிப்படுத்துகிறது. அதுபோன்றதே இதுவும் எனக் கொள்ளலாம்.
தாம் போற்றிப்பரவும் தெய்வங்களைக் குழந்தைகளாக்கித் தம்மை அன்னையராகப் பாவித்துக்கொண்டு பாடும் அடியார்களின் அனுபவம் உண்மையான அன்னையரின் அனுபவத்திலிருந்து சிறிது வேறுபடுகின்றது என்பது ஒரு கருத்து. அந்தத் தெய்வத்தின் திருவிளையாடல்களை ரசித்து கற்பனைக்கண்ணில் கண்டு மகிழ்ந்தவர்கள் அடியார்கள். ஆகவே அவர்கள் ‘இவ்வாறு செய்த எம்பிரானாகிய குழந்தை என்னிடம் வாரானோ’ என வேண்டிப்பாடுகின்றனர். பெற்றெடுத்த அன்னைக்கோ குழந்தை ஒன்றேதான்
அவளுடைய உலகம்; ஆதலால் அவள் பாடல்கள் அனைத்தும் அவனிடம், ‘நான் உனக்கு இதனைத்தருவேன், இதனைச்செய்வேன்’ என்றே கூறும்விதத்தில் அமையும். இங்கு ஒரு உதாரணமாக எனது பாட்டியார் பாடும் ஒருபாடலைப் பற்றிக் கூறுகிறேன்:
அம்புஜநாபனே அரவிந்தநேத்ரனே
வம்புகள் செய்யாமல் மடிதனில் இருக்கலாம்
ஐயனே கிருஷ்ணா வாடா
மாணிக்கமே கிருஷ்ணா வாடா….
அரப்பும் அரைத்துவைத்து அண்டாவெந்நீரும்
வெந்நீரில் குளிப்பாட்டி மேனியெல்லாம் துடைத்து
நெய்யினால் அதிரசம் கையிலே தருகிறேன்
கட்டித்தயிர் வார்த்து கையிலே பழையது
இது தன்குழந்தையைப் பதமான வெந்நீரில் இதமாக நீராட்டி, அழகான பட்டாடை உடுத்துவதையும், நானாவிதத் தின்பண்டங்களை உண்ணவளித்து அவனைக் கொஞ்சிக்களிக்க விரும்புவதனையும் உணர்த்துகிறதே அன்றி, அவன் ‘மின்னல் ஒளிரும் மேகம்போல’ ஓடிவந்தான் என்றோ, ‘சங்குசக்கரம் ஏந்திய திருக்கைகளால்’ தன்னை வந்து தழுவிக்கொள்ள வேண்டுமென்றோ அந்தத் தாயுள்ளம் கவித்துவமாக வேண்டுவதில்லை.
பக்தியில் பரவசத்திலாழ்ந்த பெரியாழ்வார் போலும் அடியார்களே தாயின் எண்ணங்களை, அழகொழுகும் பிள்ளைத்தமிழின் மூலம் கவிநயம் பொங்க, மேலும் ஒருபடி உயர்ந்தநிலைக்கு எடுத்துச்சென்று சிந்தையில் கண்டுகளிக்கின்றனர்.
கூனிப்பெண்ணொருத்தி சந்தனம் அரைத்து எடுத்துச்செல்கிறாள். ‘என்னுடலில் பூசிக்கொள்ளச் சிறிது சந்தனம் கொடேன்’ என்ற அவளிடமிருந்து சந்தனத்தை வாங்கிப் பூசிக்கொள்கிறான் இளம்காளைப்பருவத்தினனான கிருஷ்ணன். அவளும் கொடுக்கிறாள். பூசிக்கொண்டவன் சும்மாயிராது, அவள் முகத்தைப்பற்றி நிமிர்த்தினான்; அவள் கூனல் நிமிர்ந்தது. அத்தகைய அரியதோர் செயலைச்செய்தவன் இந்தக் கிருஷ்ணன்; அவன் என்னை வந்து அணைத்துக்கொள்ள மாட்டானா எனத் தாய் ஏங்குகிறாள்.
இதனை இன்னொரு பாசுரத்தில் பெரியாழ்வார் அன்னையாகிக் கூறுகிறார்:
நாறிய சாந்தம் நமக்கு இறைநல்கு என்னத்
தேறி அவளும்திருவுடம்பிற் பூச
ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அன்று
ஏற உருவினாய் அச்சோ! அச்சோ!
ஆறிப்போகுதே கிருஷ்ணா வாடா
வெண்பட்டுடுத்துறேன் வாடா….
ஆண்டவனே கிருஷ்ணா வாடா
சட்டமாய்ப்போடுறேன் வாடா……
எம்பெருமான்! வாராய்! அச்சோ! அச்சோ!
(பெரியாழ்வார் திருமொழி- 9)
குழந்தையிடம் அவன் நம்மை வந்து அணைத்துக் கொள்ளும்படி வேண்டுவது ஒருவிதம். அவனாக ஓடோடி வந்து பின்னாலிருந்து நாம் ஏதோ சிந்தனையில் உள்ளபோது எதிர்பாராமல் நம்மை அணைத்துக்கொண்டால் – புறம்புல்கினால்- ஆலிங்கனம் செய்துகொண்டால்- எப்படி இருக்கும்?
இவ்வாறு தான் கிருஷ்ணன் ஓடோடிவந்து அன்னையின் முதுகினைக் கட்டிக் கொள்கிறான்; சின்னஞ்சிறு குழந்தை. ஆண்குறியிலிருந்து சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் துளிர்க்கின்றது. அதைப் பற்றி அன்னையானவள் அருவருப்போ சினமோ கொள்வதில்லை. தாயன்பு இதனைப் பொருட்படுத்தாதது. அவனது பூப்போன்ற பிஞ்சுக்கைகளின் அணைப்பு அவளை ஆனந்தமயமான ஒரு உலகிற்கு அழைத்துச் சென்றுவிடுகின்றது. பெரியாழ்வார் இப்படிக் கிருஷ்ணன் அன்னையைப் புறம்புல்குவதை இன்னும் அழகாக ரசிக்கிறார்.
‘இரண்டு நீலநிற இரத்தின வட்டுக்களின் நடுவில் வளர்ந்துள்ள மாணிக்கமொட்டின் நுனியில் அரும்பும் முத்துக்கள் போலத்துளிர்த்த நீருடன் ஓடிவந்து என் கோவிந்தன் என்னைப் புறத்தில் அணைத்துக்கொள்வான்,’ எனக் கற்பனைசெய்து உள்ளம் நெகிழ்கிறார்.
வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனியில் முளைக்கின்ற முத்தேபோல்
சொட்டுச் சொட்டு என்னத் துளிக்கத் துளிக்கஎன்
குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்;
கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான். (பெரியாழ்வார் திருமொழி- 10)
இந்தக்குட்டன் தேவர்களுக்கெல்லாம் தலைவன் எனப்படுபவன். ‘ ‘நாந்தகம்’ எனும் வாளினை ஏந்திய நம்பியே! நான் உன்னிடம் அடைக்கலம்,’ என்று பாரதப்போரில் அர்ச்சுனன் கிருஷ்ணனைச் சரணடைகிறான். அவனுக்கு அடைக்கலம்தந்து, பகைவர்கள் அனைவரும் கலங்கி அஞ்சி ஓடுமாறு, அர்ச்சுனனுக்காகத் தேரோட்டியாக இருந்தான் இந்தக்கண்ணன். அப்பேர்ப்பட்ட கண்ணன் குழந்தையாகி என்னைவந்து புறத்தே அணைத்துக்கொள்வான் என எண்ணிக் களிக்கிறார் பெரியாழ்வார். இப்பாடலில், தனது மகனான அவன் ஒரு உயர்ந்த வீரனாகவும், நம்பியவர்களைக் காப்பவனாகவும், ராஜதந்திரியாகவும் விளங்கியதை வெளிப்படுத்தும் பெருமிதம் தொனிக்கின்றது!
தன் குழந்தையின் கருணை உள்ளத்தையும், பக்தவத்சலனாக அவன் அர்ச்சுனனுக்கு அருளிய திறத்தையும் வியந்து ‘விசயன் மணித்திண்தேர் ஊர்ந்தவன்’ என அவனை வர்ணித்து மகிழ்ந்தவர், இருப்பினும் தனக்கு அவன் என்றென்றும் தன்னைப் புறம்புல்கும் குழந்தைதான் என்றே கருதிப்போற்றுகிறார்.
நாந்தகம் ஏந்திய நம்பி சரணென்று
தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி தரணியில்
வேந்தர்கள் உட்க விசயன் மணித்திண்தேர்
ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான்
உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான். (பெரியாழ்வார் திருமொழி- 10)
கிருஷ்ணனின் குழந்தைப்பருவக் குறும்புகள் எல்லோருக்குமே மிகவும் இன்பமானவை. வேண்டுமென்றே அக்குறும்பன் அனைவருக்கும் அன்புத்தொல்லை கொடுக்கிறான். அவன்பொருட்டு, அவனை ரசித்து, அனுபவித்து, அதனால் தாம் நுகரும் இன்பத்தினை இடையறாது அடைவதற்காகவே அவன் குறும்புகளை அனைவரும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறார்கள்.
கிருஷ்ணன் எனும் குட்டனின் பிறப்பால் ஆய்ப்பாடியே புதுக்களை பெற்றதாம். ‘கிருஷ்ணா, கிருஷ்ணா’ எனும் தலைப்பில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் கிருஷ்ணனின் குணாதிசயங்களை ஆய்ந்து எழுதிய ஒரு அருமையான நூல் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. அதில் அவர், கிருஷ்ணன் பிறப்பதற்குமுன் ஆய்ப்பாடி மாடுமேய்ப்பது, பால்கறப்பது, தயிர் வெண்ணெய் விற்பது என இயந்திரமயமான ஒரு நியமம் கொண்ட லயத்தில் இயங்கிவந்தது எனவும் கிருஷ்ணனின் வரவால், ஆயர், இடைச்சியர் வாழ்க்கை மிக்க சுவாரசியமுடையதாகவும் வண்ணமயமாகவும் மாறிவிட்டதாக விவரிப்பார். கதைப்போக்கில் அமைந்திருந்தாலும் இது கிருஷ்ணனின் குணாதிசயங்களைப் பாங்குறவிளக்கும் ஒரு ஆராய்ச்சிநூலாகவே விளங்குகிறது.
கிருஷ்ணனை ரசிக்கும் அனைவரும் படித்து மகிழ வேண்டிய நூல் இது. ஏதாவது ஒரு வீட்டில் நண்பர்கள் பட்டாளத்துடன் நுழைந்து, ஒரு பொத்த மரஉரலைக் கவிழ்த்துப்போட்டு அதன்மீது வாகாக ஏறியமர்ந்துகொண்டு இனிக்கும் பாலையும், வெண்ணெயையும், வயிறு நிரம்ப ரசித்து உண்கிறான் இவன். ‘இவ்வாறு ‘பாலும் வெண்ணெயும் மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய’ என்னப்பன் கிருஷ்ணன் புறத்தேவந்து என்னை அணைத்துக் கொள்வான்,’ என ஆசையாகக் கற்பனை செய்கின்றார் பெரியாழ்வார். (அத்தன்- என்னப்பன்)
பொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய
அத்தன் வந்து என்னப் புறம்புல்குவான்
ஆழியான் என்னைப் புறம்புல்குவான். (பெரியாழ்வார் திருமொழி- 10)
வெண்ணெயும் பாலும் தயிரும் திருடி எதற்காக இவன் உண்ணவேண்டும்? ஒரு மோகனப்புன்னகை செய்துகேட்டால் கொடுக்காத கோபியரும் உண்டோ? ஆய்ப்பாடியே இவனுடைய அழகிலும், குறும்பிலும் மயங்கிக்கிடக்கிறது. இவனுக்குக் கொடுக்காத வெண்ணெயால் என்ன பிரயோசனம்? இதற்கெல்லாம் பொருள் ஒன்றுதான். கள்ளமற்ற ஆய்ப்பாடி மக்களுக்கு அளவில்லாத ஆனந்தத்தினைக்கொடுத்து அவர்கள் வாழ்விலும் சுவைசேர்க்கவே இவ்விளையாடல்களையெல்லாம் இவன் செய்தான் எனலாம்.
சிவனுடைய திருவிளையாடல்களுக்கு ஈடாகத் திருமால் தானொரு குழந்தையாகிச் செய்த விளையாடல்கள்தான் இவை.
குட்டிக்கிருஷ்ணன் ஒரு பெரிய மணல்குன்றின் உச்சியிலேறி நின்றுகொண்டு, தனது புல்லாங்குழலை இசைத்து, மகிழ்ச்சிபொங்க நடனம் ஆடிக்கொண்டிருக்கிறான். ஆய்ப்பாடிப் பிள்ளைகளோடு மாடுமேய்த்தும், வெண்ணெய் திருடித்தின்றும் கூத்தடித்துக் களித்து அவர்களை ரசிக்கவைத்தான். இப்போது வயதில் முதிர்ந்த ஆயர்கள் மகிழும்வண்ணம் அவர்கள் கண்டுகளிக்குமாறு நடனமாடி அவர்கள் இதயங்களையும் கொள்ளையடித்து, அன்பையும் தனக்குரியதாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் இவனைத்தவிர வேறு யாருக்கு வரும்? இவ்வாறு நடனமாடுபவன் திருமாலே என உணர்ந்த முனிவர்களும் தேவர்களும் வந்து அவனை வணங்கிப் போற்றுகின்றனர்.
இதையெல்லாம் சாமானிய மக்களான, எளிய ஆயர்கள் (கிருஷ்ணன் தெய்வ அவதாரம் என) உணராதபடிக்குச் செய்து மயக்குகிறான். அந்த மாயக்கிருஷ்ணன் வந்து என்னைப் புறம்புல்குவான் என்று பெரியாழ்வார் எண்ணி இன்புறுகிறார்.
முத்தலை காணமுது மணற்குன்று ஏறிக்
கூத்து உவந்து ஆடிக் குழலால் இசைபாடி
வாய்த்த மறையோர் வணங்க மறையவர்
ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான்
எம்பிரான் என்னைப் புறம்புல்குவான். (பெரியாழ்வார் திருமொழி- 10)
‘குறுகுறு’வென நடந்து ஆடிவந்து அருகில் நிற்கும் சிறுகுழந்தை! எல்லாவற்றினையும் ஆச்சரியத்துடன் விழித்துநோக்கும்- சலிக்கும்- அவனது கண்கள்; அந்தப்பார்வையும், அவனுடைய சிறுவடிவமும், செய்யும் செய்கைகளும் அவனை அள்ளி அணைத்து உச்சிமுகரும் பேராசையை – வார்த்தைகளால் கூறமுடியாதபடி எழும் மழலைப்பாசத்தினை- வாத்ஸல்யத்தை மனதில் உண்டுபண்ணிவிடுகின்றன. அவனைக் கண்களால் கண்டு களிப்பதே பரமானந்தத்தினை அளிக்கின்றது. உள்ளத்தைக் கவர்ந்துகொள்வதில் கிருஷ்ணனுக்கு இணை யாருமே இல்லை எனலாம். இருகைகள் கொள்ளாமல் வாரியெடுத்து, மெய்குளிர அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டு மகிழும் ஆனந்த அனுபவத்தினைப்பெற ஆசையால் துடித்தபடி உள்ளன கண்கள். அவனைச்சென்று தழுவிக்கொள்ள அவை மிகுந்த ஆவலுடன் இருக்கின்றவாம். தெய்வக்குழந்தையான கிருஷ்ணனின் திருவுருவைச் சிந்திப்பவர்கள் மெய்யால்- உடலால் அவனை ஆலிங்கனம் செய்துபெறும் பேரின்ப அமுதத்தைக் கண்களாலும், கற்பனைசெய்வதனால் உண்டாகும் ஆன்ம அனுபவத்தினாலுமே பெற்றுணர்கின்றனர். குழந்தை கண்ணனை அணைக்கும் இன்பம் பற்றி லீலாசுகர் இவ்வாறு தான் உணர்கிறார்;
உணர்ந்து பாடுகிறார்:
பாவேன முக்தசபலேன விலோகனேன
லோலேன லோசன-ரஸாயன-மீக்ஷணேன
மன்மானஸே கிமபி சாபல-முத்வஹந்தம்
லீலீ-கிசோர-முபகூஹிது-முத்ஸுகோஸ்மி (ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம் 1.35)
எங்கும், எதிலும் கண்ணனையே கண்டுகளித்த பாரதியார் கூறுகிறார்:
‘தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா.’
காக்கைச்சிறகினில் அவன் கரியநிறத்தினையும், பார்க்கும் மரங்களிலெல்லாம் அவன் பச்சைவண்ணத்தினையும் போற்றுபவர், ஏன் அவன் ‘தீயெனச் சுடுகிறான்’ என்கிறார் என நாம் சிந்திக்கிறோம்! கற்பனையில் தான் அவனை அணைத்துமகிழும் அனுபவத்தினையும் அவன் தன்னைப்புறம்புல்கும் இன்பத்தினையும் அனுபவித்து உணர்ந்தவர்கள் இவ்வடியார்கள். கிருஷ்ணனின் வளர்ப்புத்தாயான யசோதையைப் போற்றி, அவள் அனுபவித்த மழலை இன்பத்தினைத் தாமும் கற்பனையில் அனுபவித்துப்பாடி மகிழ்ந்தனர். ‘அவனை அன்பால் அடைவது எளிது; ஆயினும் அது ஒரு ஆன்மீக அனுபவம்-எல்லோர்க்கும் எளிதில் கிட்டாதது,’ எனவும் உணர்ந்தவர்கள் இவ்வடியார்கள். ஆகவே தான், தீயினுள் விரலை வைத்தால் பொசுக்கிவிடும்; அதையே கண்ணனைத் தீண்டுவதாகக் கருதிவிட்டால் இன்பம் கிடைக்கும் எனும் சிந்தனையில் பாரதி இவ்வாறு பாடிக்களித்திருப்பாரோ எனத் தோன்றுகிறது! ‘காற்றென வந்தெனைக் கட்டியணைப்பான்’ என்று சுத்தானந்த பாரதியாரும் பாடியுள்ளார். எல்லாமாக இறைவனைக் கண்டுணர்ந்து களிப்பதே பேரின்பம் எனச் சொல்லாமல் விளங்குகிறது. உண்ணும் சோறும், பருகு நீரும், தின்னும் வெற்றிலையுமாக உள்ளவன், காற்றாகவும் உள்ளான்; வந்து கட்டியணைத்தும் கொள்கிறான். ஒரு குழந்தை நம்மைத் தழுவுவதும் தென்றல் நம்மைத் தழுவுவதுபோன்ற சுகானுபவமே!
தென்றல்தழுவுவதும் ஒரு குழந்தை நம்மைத் தழுவுவதுபோன்ற சுகானுபவமே! ஆக இந்தக் குழந்தையின் அணைப்பின்பத்தினை ரசித்துப் போற்றாத அடியார்களில்லை எனலாம்.
குழந்தையின் அணைப்பில் பெறும் இன்பம், அது, மனிதனானாலும், நாய்க்குட்டி, அணில்பிள்ளை ஆனாலும், தெய்வமே ஆனாலும், குழந்தைக்கும் நமக்கும் உள்ள பிணைப்பினை நெருக்கி, இறுக்கி பலப்படுத்துகிறது. உரிமையை, உரிமையால் விளையும் அன்பினை உறுதிசெய்கின்றது.
இதனால் தான் கிருஷ்ணன் எனும் குட்டன் நம் எல்லாருக்கும் மிக மிக நெருக்கமானவன். நம் வீட்டுக்குழந்தை. ஆண்டவன் எனும் உறவு அதற்குப்பின்தான்!
Leave a Reply
You must be logged in to post a comment.