முதலமைச்சர் விக்னேஸ்வரன்  சொந்தச் செலவில் தனக்கு சூனியம் வைத்துக் கொண்டவர்! நக்கீரன் 

முதலமைச்சர் விக்னேஸ்வரன்  சொந்தச் செலவில் தனக்கு சூனியம் வைத்துக் கொண்டவர்!

நக்கீரன் 

வட மாகாண மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்த பா.​டெனிஸ்வரன்  அவர்களைப் பதவி விலகுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்டார். ஆனால் டெனீஸ்வரன் தன்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனக் கூறித்  தானாகப்  பதவி  விலக அடியோடு மறுத்துவிட்டார். முடிந்தால் பதவி விலக்குங்கள் என்றார்.  இதனை அடுத்து அவரை அமைச்சுப்  பதவியிலிருந்து  விக்னேஸ்வரன் ஓகஸ்ட் 20, 2017 அன்று எழுதிய கடித மூலம் நீக்கியிருந்தார். ஒரு அமைச்சரை விலக்கத் தனக்கு சட்டப்படி அதிகாரம் உண்டு என்று விளக்கமும் கொடுத்தார்.

அதற்குப் பதிலளித்த டெனீஸ்வரன் “என்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பதற்கு முதலமைச்சருக்கு அதிகாரமில்லை” எனக் குறிப்பிட்டு முதல்வருக்கு பதில் கடிதம் அனுப்பினார்.  “நானே இப்போதும் அமைச்சுப் பதவியில் தொடர்கின்றேன். அதில் தலையீடு செய்வதிலிருந்து விலகியிருங்கள்” என அக்கடிதத்தில் டெனீஸ்வரன் கேட்டிருந்தார்.

இதனையடுத்து முதலமைச்சர் கடித மூலம் தன்னை நீக்கியது சட்டத்துக்கு முரணான நடவடிக்கை என  உத்தரவொன்றைப்  பிறப்பிக்குமாறு கோரி ​டெனிஸ்வரன் கடந்த ஓகஸ்ட் 30,  2017 இல்   மேன்முறையீடு  நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அமைச்சர் டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தது சட்டத்துக்கு முரணானது – பதவி நீக்கம் செய்ய முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை – அவர் எழுதிய கடிதம் சட்ட வலுவற்றது – எனவே டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் தொடர்கிறார் – அவரது அமைச்சர் கடமைகளை அப்போதிருந்த அமைச்சர்கள் தொடர்ந்து செய்யக் கூடாது – என யூன் 29, 2018 இல்  இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து டெனீஸ்வரன் யூலை 13, 2018 அன்று முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர் அனந்தி சசிகரன் மற்றும் அமைச்சர் சிவநேசன் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  அதன் பிரதி ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவர்களுக்கும் வழங்கப்பட்டது. குறித்த கடிதத்தில் வடக்கு மாகாணத்தின் அமைச்சராக மீண்டும் செயற்பட அனுமதி வழங்குமாறு கோரியிருந்தார்.  அமைச்சுப் பொறுப்புக்களைத் தனக்கு  மீண்டும் கையளிக்காத பட்சத்தில், நீதிமன்றக்  கட்டளையை மீறிய குற்றத்துக்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த விடயம் பற்றி  மாகாண சபையில் நடந்த விவாதத்தில் அமைச்சர் டெனீஸ்வரன் அமைச்சராக தொடர்ந்து இயங்குவதற்கு இடமளிக்கப்பட்டு அவருக்கு ஆசனம் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் அது நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாரா முகமாக இருப்பதாக அர்த்தப்படும் என உறுப்பினர்கள் கூறினார்கள்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்ச விக்னேஸ்வரன் “அமைச்சர் பா. டெனீஸ்வரனின் பதவி நீக்கம் தொடர்பாக ஆளுநர் வர்த்தமானி பிரசுரம் வெளியிடாமையினால், அவர்  தொடர்ந்தும் பதவி வகிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முதலமைச்சராக நான் எனது கடமையை சரியாகச் செய்துள்ளேன். வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது எனது கடமையல்ல” என்றார்.

ஒரு அமைச்சரை தன்னிச்சையாக முதலமைச்சர் பதவி நீக்கம் செய்ய முடியாது. ஒரு அமைச்சரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர்  முடிவு செய்தால் அதனை ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.  அதாவது முதலமைச்சரோ அல்லது ஆளுநரோ தங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியாது. இரண்டு பேரும் சேர்ந்தே ஒரு அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மறுத்தார். நீதிமன்ற உத்தரைவை வேண்டும் என்றே அலட்சியப் படுத்தினார். டெனீஸ்வரனை மீண்டும் அமைச்சராகப் பணியில் இருத்த அவர் அடியோடு மறுத்துவிட்டார். இதனை அடுத்தே டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இடையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை  விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என அறிவிக்குமாறு கேட்டு முன்னாள் முதலமைச்சர்  விக்னேஸ்வரன் வைத்த வழக்கை அந்த நீதிமன்றம் நேற்று (பெப்ரவரி 15)  தள்ளுபடி செய்தது.  அதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் மற்றும் இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குளின்  விசாரணை வரும் 21ஆம் தொடங்கும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இருக்கிற அதிகாரங்களைப் பயன்படுத்தத் தெரியாத விக்னேஸ்வரன்  இல்லாத அதிகாரங்களை கையில் எடுத்து  மொக்கேனப்பட்டிருப்பது அவரது சட்ட அறிவின் வறுமையை அம்பலப்படுதியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதியரசர் என்ற ஆணவம் காரணமாகவே ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தை விக்னேஸ்வரன் தான்தோன்றித்தனமாக தனது கையில் எடுத்துக் கொண்டார். அதுதான் அவரது இன்றைய மொக்கேனத்துக்கு அடிப்படைக் காரணம்.

விக்னேஸ்வரனது அடிவருடிகள், அவருக்கு பட்டுக் குடை பிடிப்பவர்கள், சாமரம் வீசுபவர்கள் அவரைப் பல்லக்கில் தூக்கிக் கொண்டு திரிபவர்கள் “ஒரு ஆளுநருக்கு இருக்கிற அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லையா?” எனப் பாமரத்தனமாகக் கேள்வி கேட்கிறார்கள். முதலமைச்சருக்கு தனியாக  அந்த அதிகாரம் இல்லை என்றுதான் சட்டம் சொல்கிறது. முதலமைச்சர் ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் ஆனால் அவர் ஒருவரே ஒரு அமைச்சரை விலத்த முடியாது.

ஒரு முன்னாள் நீதியரசர் இப்படியெல்லாம் தான் தோன்றித்தனமாக ஏன் நடந்து கொள்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. அதற்கு மேலாக விக்னேஸ்வரன் எப்படி ஒரு நீதியரசராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார் என்பது அதைவிடப் பெரிய வியப்பாக இருக்கிறது.

விக்னேஸ்வரன் தன்முனைப்புக் கொண்டவர். தான் பிடித்த காலுக்கு மூன்று கால் என வாதிடுபவர். இடம், பொருள், ஏவல் தெரியாது பேசுபவர்.

சொல்லும் கருத்தை இடம், பொருள், ஏவல் ஆகிய மூன்றினையும் அறிந்து வெளிப்படுத்த வேண்டும்.  இடத்திற்கு ஏற்ற கருத்தினை வெளிப்படுத்த வேண்டும், வெளிப்படுத்தும் கருத்தின் பொருள் தேவைக்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்றதாகவும் இருத்தல் வேண்டும். சொல்வது  கேட்பவருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

பிரதமர் இரணில் 40 நா.உறுப்பினர்களோடு பிரமராக வந்தவர். அவரது கட்சி மாமன் – மருமகன் கட்சி என்று எந்த முகாந்திரமும் இல்லாமல் பிரதமர் இரணிலோடு சண்டைக்குப் போனவர். இதனால் இரண்டு பேருக்கும் இடையில் நெடுங்காலமாக பேச்சல் பறைச்சல் இல்லை.

ஐநாஅபிவிருத்தி அமைப்பு வட மாகாண விவசாயிகளுக்கு அடொ.150 மில்லியனை உதவி நிதியாக கொடுக்க முன்வந்தது. அதனை இரண்டு கையாலும் வாங்குவதற்குப் பதில் தனது மருமகன் நிர்மலனுக்கு அந்தத் திட்டத்தில் சிறப்பு அதிகாரியாக மாதம் ரூபா 450,000 சம்பளத்தில் நியமிக்க வேண்டும் என்று அடம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி அந்த நிதிக் கொடுப்பனவை திரும்பப் பெற்றுவிட்டது. தனது மருமகனுக்கு பதவி வேண்டும் என்று அடம் பிடித்ததால் வட மாகாண விவசாயிகளின் வயிற்றில் அடித்த பாவம் எத்தனை பிறவி எடுத்தாலும் போகாது.

முன்னாள்  வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன்  நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருப்பது ஒட்டுமொத்தத்  தமிழ்மக்களுக்கும்  ஒரு தலைக்குனிவு என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அமைச்சர் பா. டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தது சட்டப்படி செல்லாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விக்னேஸ்வரன் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். நடைமுறைப்படுத்தி இருந்தால் அத்தோடு அந்தச் சிக்கல் தீர்க்கப் பட்டிருக்கும். நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்திருக்கும். ஆனால்  விக்னேஸ்வரன் அதைச் செய்யாத காரணத்தால்  பா.டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டார்.

இதில் இன்னொரு சோகம் என்னவென்றால் இளம் சட்டத்தரணி பா. டெனீஸ்வரனுக்குத் தெரிந்த சட்டம் நீதித்துறையில் 25 ஆண்டுகள் குப்பை கொட்டிய விக்னேஸ்வரனுக்குத் தெரியவில்லை. அதுமட்டுமல்ல தன்னை பதவி நீக்கம் செய்தது தவறு என்று விக்னேஸ்வரன் சொல்லட்டும் நான் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் எனப் பகிரங்கமாக அறிவித்தார்.

ஆனால் கெடுகுடி சொற்கேளாது என்பது போல விக்னேஸ்வரன்  கேளாக் காதாக இருந்துவிட்டார். வழக்கம் போல அவரது தன்முனைப்பு தவறை ஒத்துக் கொள்ள வைக்கவில்லை. விக்னேஸ்வரன் தான் பதவி நீக்கிய பா. டெனீஸ்வரனை   பதவி நீக்கம் செய்யபட்டுவிட்டதாக  ஆளுநர் உத்தியோக பூர்வமாக வர்த்தமானியில் பிரசுரித்திருக்க வேண்டும் அப்படி  செய்ய அவர் தவறிவிட்டார் என வாதாடினார்.

சரி சட்டம் என்ன சொல்கிறது?

அரசியல் யாப்பின் உறுப்புரை 154F(5) பின்வருமாறு கூறுகின்றது (ஆங்கிலத்தில் இருந்து எனது மொழிபெயர்ப்பு) ‘மாகாணமொன்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அம் மாகாண சபையின் உறுப்பினர்களின் மத்தியில் இருந்து மற்றைய அமைச்சர்களை ஆளுநர் அவர்கள் முதலமைச்சரின் அறிவுரைக்கு அமைய நியமிக்க வேண்டும்’.

ஆனால் இந்த உறுப்புரையோ அல்லது வேறு உறுப்புரையோ அமைச்சர்களின் பதவி நீக்கம் பற்றி எதனையும்  குறிப்பிடவில்லை. அந்த நிலையில் அந்த அமைச்சர் முதலமைச்சரால் பரிந்துரை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் ஆளுநர் பதவியில் அமர்த்தினாரோ அதே போல் அந்த அமைச்சரை பதவி நீக்குமாறு முதலமைச்சர் பரிந்துரைசெய்து ஆளுநர் அதனை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். இப்படித்தான் பொருள்விளக்கச் சட்டம் (Interpretation Ordinance) சொல்கிறது.

அதாவது நியமனம் கொடுத்தவர்(கள்) அந்த நியமனத்தை நீக்கவும் உரித்துடையவர்(கள்)  ஆவர்.

இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். முதலமைச்சர் அவர் நியமித்த ஆணையம் கொடுத்த அறிக்கையில் ஐங்கரநேசன் என்ற ஒரு அமைச்சரை மட்டும் பதவி விலக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. ஆனால் விக்னேஸ்வரன் எஞ்சிய  மூன்று அமைச்சர்களிடம் இருந்து பதவி விலகல் கடிதங்களைத் தருமாறு கேட்டார். விலகல் கடிதங்களைக் கேட்டாரே ஒழிய அவர்களைக் கடித மூலம் பதவிகளைப் பறிக்கவில்லை.

அமைச்சர்கள் ஐங்கரநேசன், குருகுலராசா மற்றும் மருத்துவர் சத்தியலிங்கம் நல்ல பிள்ளைகள் மாதிரி விலகல் கடிதங்களைக் கொடுத்தார்கள். டெனீஸ்வரன் மட்டும் விலகல் கடிதத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார்.  முதலமைச்சர் நியமித்த ஆணையம் தனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் வைக்காத இடத்து தான் ஏன் பதவி விலக வேண்டும்?  அப்படித் தன்னை முதலமைச்சர் கேட்க முடியாது – அதற்கான சட்டம் இல்லை – என டெனீஸ்வரன் எதிர் வாதம் செய்தார்.  இதனால் ஆத்திரம் அடைந்த முதலமைச்சர்  ஓகஸ்ட் 20, 2017 தேதியிட்ட கடித மூலம் டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் தன்னிடம் உள்ள அலுவலக ஆவணங்களை ஒப்படைக்குமாறும் கேட்டிருந்தார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் தவராசா  ஊடகங்களுக்கு வெளியிட்ட காட்டமான   அறிக்கை 18 ஓகஸ்ட், 2018 திகதியிட்டு   ஊடகங்களில் வெளிவந்தது.

“திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா என வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவுக்கு  அனுப்பிய கடிதமொன்று மிகக் காரசாரமாக எழுதப்பட்டது மட்டுமல்லாமல், அதில் கடுமையான வார்த்தைப் பிரயோகமும் அமைந்திருந்தது. இதனால் மிகவும் வேதனையடைந்த பளிகக்கார தனது பதவியிலிருந்து விலகினார் என்றும் தவராசா கூறியுள்ளார். ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரினால் டெனீஸ்வரனுக்கு முகவரியிடப்பட்டு 20.08.2017 இல் அனுப்பப்பட்ட கடிதத்தில் டெனீஸ்வரனை அவர் வகித்த அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதாகவும், அவரிடமிருக்கும் அலுவலக ஆவணங்கள் யாவற்றையும் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்குமாறும் எழுதிய கடிதம் செல்லுபடியற்றது என்றே மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை விதித்துள்ளது.

உண்மை நிலைமை இதுவாக இருக்க ஆளுநரினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப் படாமையினாலேயே நீதிமன்றம் வரை சென்றுள்ளது என முதலமைச்சர் கூறியிருக்கின்றமை முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாகும்.

முதலமைச்சர் தொடர்ச்சியாக இவ்விடயம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பாகவும், உண்மையைத் திரிபுபடுத்தியும் கூறி வருகின்றமை மக்கள் விளக்கமில்லாதவர்கள், அவர்களுக்குத் திரும்பத் திரும்பப் பொய் உரைப்பதன் மூலம் அவர்களை நம்ப வைக்க முடியும் என்ற நம்பிக்கையிலா என்று எண்ணத் தோன்றுகின்றது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த யூன் 29, 2018 இல் மேன்முறையீட்டு நீதிமன்றம் டெனீஸ்வரன் தனது பதவியில் தொடர்கிறார் என்று தீர்ப்பளித்த காரணத்தால் அமைச்சரவையின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து ஆறாக உயர்ந்தது. இது சட்டத்துக்கு முரணானது  என்பதால் நீதிமன்றத் தீர்ப்பு வந்த நாள் முதல் வட மாகாண சபையின் காலம்  முடியும் வரை (ஒக்தோபர் 25, 2018)வரை அமைச்சர் வாரியத்தைக் கூட்ட முடியவில்லை. அமைச்சர் வாரியத்தைக் கூட்டுவதற்கு ஆளுநர்  கூரே தடை விதித்திருந்தார். இந்த இக்கட்டான நிலைக்கு விக்னேஸ்வரனே  பொறுப்பு ஏற்க வேண்டும்.

பதவி இழந்த பின்னரும்  முதலமைச்சர் விக்னேஸ்வரன்  அவர்களுக்கு எதிராகத் தொடரும் வழக்கு அவர் தனது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டது போலாகிவிட்டது.   இந்த இலட்சணத்தில் விக்னேஸ்வரன் புதுக் கட்சி ஒன்றைத்  தொடங்கியிருக்கிறார். இது குருவி தலையில் பனம் பழம் வைத்த கதையாக இருக்கப் போகிறது.

வெண்மை எனப்படுவது யாதெனின், ஒண்மை
உடையம் யாம் என்னும் செருக்கு
(அதிகாரம் 85 – புல்லறிவாண்மை குறள் 844)

அறிவின்மை என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துக் கொள்ளும் செருக்காகும்.

About editor 3042 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply