தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உடைத்த விக்னேஸ்வரன்தான் ஒற்றுமை பற்றிப் பேசுகிறார்! நக்கீரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உடைத்த விக்னேஸ்வரன்தான் ஒற்றுமை பற்றிப் பேசுகிறார்!
நக்கீரன்
தமிழில் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்ற பழமொழி உண்டு. சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வேற்றுமை பற்றிய பழமொழி இது.
விக்னேஸ்வரன் தேசியக் கூட்டமைப்பை உடைக்க மாட்டேன் என்று மார் தட்டுகிறார். ஏதோ இவர் பாவம் பார்த்து “பிழைத்துப் போ” என்று சொல்கிறது போல இருக்கிறது அவரது கூற்று. உண்மை என்னவென்றால் ஒற்றுமை பற்றிப் பேசிக் கொண்டு   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உடைத்தவரே விக்னேஸ்வரன்தான்.
பிள்ளையார் பிடிக்க குரங்காக வந்த கதை போல ஓர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசருக்கு இருக்கிற ஆளுமையை வைத்து, அவரது முகத்தைக் காட்டி வெளிநாட்டு இராசதந்திரிகள், தூதுவர்கள், பிரமுகர்களிடம் தமிழ் மக்கள் நோக்கும் சிக்கல்களை எடுத்துச் சொல்லி தமிழ்மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டுவார் என நினைத்தோம்.  அரசாங்கத்தோடு நல்லுறுவை வளர்த்து போரினால் நலிந்து போன வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதரங்களை நிமிர்த்துவதற்கு வேண்டிய நிதிகளைப் பெற்று அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைப்பார் என்று எதிர்பார்த்தோம். அந்த நம்பிக்கையில்தான் விக்னேஸ்வரனை பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் தேர்தலில் போட்டியிட வைத்து முதலமைச்சர் நாற்காலியில்  உட்கார வைத்தோம். ஆனால் நடந்தது என்ன?
முதலில் விக்னேஸ்வரன் ஏறிய ஏணியை எட்டி உதைத்தார். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தார்.  அன்னம் இட்ட கையைக் கடித்தார். தேர்தலில் தான் வெற்றி பெற்றதற்கு மக்களிடம் தனக்கு இருந்த  சொந்தச் செல்வாக்குத்தான் காரணம் என்றார்.
அதோடு நின்று விடாமல் அவருக்கு நியமனம் வழங்கி, தேர்தலில்  களமிறக்கி  அதில் வெற்றிவாகை சூட வைத்த தமிழ் அரசுக் கட்சியை ஓரங்கட்டத் தொடங்கினார். உதாசீனம் செய்தார்.
வெற்றி பெற்று முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த அடுத்த கணமே அந்தக் கட்சியின் பொதுக்குழு, செயல்குழுக் கூட்டங்களுக்கு போகாமல் விட்டு விட்டார். புறநடையாக இரண்டொரு கூட்டத்துக்குப் போன போதும் தலையைக் காட்டிவிட்டு இடை நடுவில் வெளியேறி விடுவார்!
இந்த இலட்சணத்தில் 2014 இல் தன்னைக் கட்சியின் தலைவராக நியமிக்குமாறு கேட்டார். ஏற்கனவே வேலியில் இருந்த ஓணானைப் பிடித்து மடியில் கட்டிக் கொண்டு குடையுது குடையுது என்ற தவித்துக் கொண்டிருந்த தமிழ் அரசுக் கட்சித் தலைமைப் பதவியை நேற்று வந்த விக்னேஸ்வரனிடம் தூக்கிக் கொடுக்க முன்வருமா? கட்சித் தலைவர்கள் என்ன பயித்தியக்காரர்களா? அவரது வேண்டுகோள் மறுக்கப்பட்டது. அதுதான் அவருக்கு ஏற்பட்ட வெப்பாரம்.
விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவியைத் தருமாறு கேட்ட செய்தியை அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராசசிங்கம்தான் ஒரு நீண்ட அறிக்கையில் அம்பலப்படுத்தி இருந்தார். இந்த அறிக்கைக்கு வாரம் ஒரு கடிதம் எழுதும்  விக்னேஸ்வரன் இதுவரை மறுப்புத் தெரிவிக்கவில்லை. எனவே அவரது மௌனம் சம்மதத்தின் அறிகுறி என்று எடுத்துக் கொள்ளலாம்.
2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  கொழும்பில் இருந்து கொண்டு ஒன்றுக்குப் பல அறிக்கைகளை விட்டு “வீட்டை விட்டு வெளியே வந்து தவறாது வாக்களிக்கு மாறு” கேட்டுக் கொண்டார்.
அதாவது தமிழ் அரசுக் கட்சியின் சின்னமான வீட்டைக் கைகழுவிவிட்டு வெளியில் வந்து கஜேந்திரகுமாரின் சைக்கிளுக்கு வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கேட்டுக் கொண்டார். ஆனால் தமிழ்மக்கள் அவரது வேண்டுகோளை நிராகரித்தார்கள். முகத்தில் கரி பூசினார்கள். விக்னேஸ்வரன் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார் என நினைத்தார்கள்.
தேர்தலின் முடிவுகள் விக்னேஸ்வரனது எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் எதிர்மாறாக இருந்தது. தனித்துவிடப் பட்ட விக்னேஸ்வரனுக்கு ஒரு கைத்தடி தேவைப்பட்டது. அதன் காரணமாக உருவாகியதே தமிழ் மக்கள் பேரவை. புலத்தில் இருக்கும் போலித் தேசியவாதிகள் அதன் உருவாக்கத்துக்குப் பின்னால் இருந்து உதவினார்கள். ஆனால் 3 ஆண்டுகள் கழிந்தும் அந்த அமைப்புக்கு யாப்புக் கிடையாது. இந்த இலட்சணத்தில்  தான் போக வழியில்லை  சுண்டெலி விளக்குமாற்றையும் காவிச்சாம் என்றமாதிரி விக்னேஸ்வரன் புதிதாகக் கட்சி தொடங்கியுள்ளார்.
விக்னேஸ்வரனது சாமுத்தரிகா இலட்சணங்கள் சிலவற்றைப்பற்றி அண்மையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவுஸ்திரேலியாவில் இயங்கும் ஒரு வானொலிக்குக் கொடுத்த செவ்வியில்  சுட்டிக் காட்டினார்.
(1) விக்னேஸ்வரனுக்கு அரசியல் தெரியாது. அரசியல் தெரியாத அவரைக் கொண்டு வந்து வடக்கு மாகாண முதலமைச்சர் ஆக்கியது முதலாவது பிழை.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைதான் விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது.  கூட்டமைப்பில் இருந்தவர்கள் பலரும் அதனை அன்றே எதிர்த்தார்கள்.
(2) முதலமைச்சர் பதவிக்குப் பொருத்தம் இல்லாதவர்.  மாவை சேனாதிராசாதான் அந்தப் பதவிக்கு நூறு வீதம் பொருத்தமானவர் என செய்திகளையும் ஆசிரியர் தலைப்புகளையும் எனது பத்திரிகைகள் அன்று எழுதின.
(3) முதலமைச்சர் பதவியில் இருந்தபோது எவரினதும் சொல்லையும் கேட்காமல் தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டார்.
(4) எம்மை விமர்சிக்கும் மாற்றுக் கட்சிகள் திருப்திகரமான – ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டத்தை முன் வைத்திருக்கின்றனவா?
                   (5) 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் மாற்றுக் கட்சிகளை எமது மக்கள் நிராகரித்தார்கள். 2015ஆம் ஆண்டு தேர்தலிலும் மாற்றுக் கட்சிகளை அவர்கள்   நிராகரித்தார்கள்.
                 (6) வெளிநாட்டில் இருக்கும் பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மாற்றுக் கட்சிகளுக்குத்தான் ஆதரவு வழங்கின. ஆனால், களத்தில் நின்ற எமது மக்கள், மாற்றுக் கட்சிகளைத் தோற்கடித்தன. இது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும்.
விக்னேஸ்வரன் புதிய கட்சி தொடங்கியிருப்பது குருவி தலையில் பனம்பழம் வைத்தது போல ஆகிவிடும். கட்சி தொடங்குவது எளிது. அதைவிட எளிது தன்னைத்தானே கட்சியின் செயலாளர் நாயகம், தொடக்க நிறுவனர் என்று அறிவிப்புச் செய்வது.
அரசியல் கட்சியைத் தொடங்கினாலும்  அதனை நடத்துவது வில்லங்கம். அதற்கு அரசியல் ஞானம் தேவை. அனுபவம் தேவை. உழைப்புத் தேவை. நிதி தேவை. இதில் ஒன்றேனும் விக்னேஸ்வரிடம் இல்லை.
விக்னேஸ்வரனுக்கு அகவை இப்போது எண்பது. இந்த அகவையில் அவர் ஊர் ஊராகப் பயணம் செய்ய முடியாது. சென்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தன்னிடம் பணம் இல்லை என்றும் தனக்கு  ஓய்வூதியமாக வரும் ரூபா 35,000  யில்தான் வாழ்க்கை ஓடுகிறது என்று சொன்னவர் கட்சியை நடத்தப் பணத்துக்கு எங்கு  போவார்?  அவரது புலம்பெயர் ஆதரவாளர்கள் பணம் கொடுக்கக் கூடும். ஆனால்  பணம் வாங்கினால் அவர்களது  தாளத்துக்குப்  ஆட  வேண்டி வரும்.
தமிழ் மக்கள் கூட்டணிக்கு விக்னேஸ்வரன் ஒருவரே  எல்லாமாக  இருப்பதால்  அவர் படுக்கையில் விழ நேர்ந்தால் அதன்பின் அந்தக் கட்சி உயிரோடு இருக்காது. அதில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் எனக் குறிப்பிட்டுச் சொல்ல யாரும் இல்லை.
1946 இல் தொடக்கப்பட்ட அகில இலங்கை காங்கிரஸ் கட்சியே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற முகமூடியை அணிந்து கொண்டுதான் அரசியல் செய்கிறது.  அந்தக் கட்சியே தேர்தல்களில்  கட்டுக்காசை இழக்கும் போது தமிழ் மக்கள் கூட்டணி எந்த மூலைக்கு என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயற்கை.
ஆனந்தசங்கரி தலைமை தாங்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு ‘கடிதத் தலைப்பு’க் கட்சி. உலக்கை தேய்ந்து உளிப்பிடியான பழமொழிக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. அதனை ஏலத்தில் விற்க ஆனந்தசங்கரியார் பெரு முயற்சி செய்கிறார். ‘கடை விரித்தேன் கொள்வார் இல்லை’ என்று வள்ளலார் சொன்னது போல அந்தக் கட்சியோடு கூட்டுச் சேருவார் யாரும் இல்லை.
இன்னொரு கோணத்தில் பார்த்தால் விக்னேஸ்வரன் மீது கழிவிரக்கம் ஏற்படுகிறது. தனது ஓய்வு காலத்தை “சித்தன் போக்கு சிவன் போக்கு” என்று கழித்துக் கொண்டிருந்தவரை  அரசியலுக்கு இழுத்துவந்தது தவறாகி விட்டது. அந்தத் தவறு அடுத்த தேர்தலில் திருத்தப்படும்.

About editor 3162 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply