“சுதந்திர தமிழரசு நிறுவப்படும் வரை “பதவி ஏற்கமாட்டோம்” என்று வாக்குறுதி அளிக்கும் உண்மை ஊழியர்களே எமது கட்சியில் இருத்தல் வேண்டும்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொல்வதையும் செய்வதையும் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் கட்சிகள் பலமாக விமர்ச்சித்து வருகின்றன. குறிப்பாக நா.உ சுமந்திரன் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். எது போல என்றால் வேண்டாப் பெண்ணுக்கு கால் பட்டாலும் குற்றம், கை பட்டாலும் குற்றம் என்ற தோரணையில். காரணம் தெரிந்ததுதான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தமிழ்மக்களது நன்மை அல்லது தீமை இரண்டையும் வைத்தே அரசியல் செய்கிறது.
நாடாளுமன்றம் சனாதிபதி சிறிசேனாவினால் கலைக்கப்பட்ட போது அதனை எதிர்த்து நீதிமன்றம் போனது ததேகூ. அதனை வைத்து “இது சனநாயகத்தைக் காப்பாற்ற அல்ல விக்கிரமசிங்கவைக் காப்பாற்ற சுமந்திரன் நீதிமன்றம் சென்றார் என” எமது எதிரிகள் ஊர் உலகம் எல்லாம் சென்று பறையடித்தன.
இதில் சோகம் என்னவென்றால் சட்டத்தரணிக்குப் படித்து விட்டு, நீதிமன்றங்களில் வாதாட அனுமதி பெற்றுவிட்டு நீதிமன்றப் பக்கம் தலைவைத்துப் படுக்காதவரும் அதில் சேர்ந்து கொண்டார்.
ஆனால் நிலாவை மேகங்கள் அவ்வப்போது மறைத்தாலும் நீண்ட நேரம் மறைக்க முடியாது.
அது போல உண்மை ஒரு நாள் வெளிவரும்.
ததேகூ, குறிப்பாக சுமந்திரனை குறிவைத்துத் தாக்குவதில் முன் வரிசையில் நிற்கும் காலைக்கதிர் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் அவ்வப்போது உண்மையை எழுத நிர்ப்பந்திக்கப் படுகிறார்.
ஐதேமு அமைச்சரவையின் எண்ணிக்கையை 18 ஆலும் துணை அமைச்சர் பதவிகளை 15 ஆலும் அதிகரிக்க எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் ததேகூ துணைபோகும் அல்லது ஆதரிக்கும் என்பது ஒருபோதும் நடவாத காரியம். கண்டிப்பாக தமிழ் அரசுக் கட்சி துணை போகாது.
தமிழ் அரசுக் கட்சி தந்தை செல்வநாயகத்தால் தோற்றுவித்து வளர்கப்பட்ட கட்சி. கட்சியை கட்டிக் காத்து வளர்த்து எடுப்பதில் தனது குன்றனைய பொருளைத் தொலைத்தவர். உடல் நலம் கெட்டவர்.
1949 ஆம் ஆண்டு டிசெம்பர் 18 அன்று கொழும்பில் நடந்த தமிழ் அரசுக் கட்சியின் தொடக்க மாநாட்டில் தந்தை செல்வநாயகம் ஆற்றிய தலைமையுரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
“சுதந்திர தமிழரசு நிறுவப்படும் வரை “பதவி ஏற்கமாட்டோம்” என்று வாக்குறுதி அளிக்கும் உண்மை ஊழியர்களே எமது கட்சியில் இருத்தல் வேண்டும். உள்ளத்தில் ஒரு நோக்கமும் பேச்சி்ல் ஒரு நோக்கமும் இருத்தலாகாது.
செல்வத்தில் குறைந்த எங்களுக்கு வலிமை பொருந்திய நண்பர்களும் இல்லை. நேர்மையையும் – மன உறுதியையும் – இலட்சியத் தூய்மையையுமே நாங்கன் ஆயுதங்களாகக் கொள்ள வேண்டும். (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெள்ளி விழா மலர்)
தமிழ் அரசுக் கட்சியில் சிலர் பதவி சுகத்துக்காகச் சேர்கிறார்கள். பதவி கிடைக்கவில்லை என்றவுடன் அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவைகள் போல் வேறு இடத்துக்குப் பறந்துவிடுகிறார்கள். பறந்துவிடுபவர்கள் சும்மா இருப்பதில்லை. இன்னொரு கட்சி தொடங்கி விடுகிறார்கள். தூற்றவும் செய்கிறார்கள்.
இப்போது பின்வரும் பந்தியைப் படித்துப் பாருங்கள். மொழித் தூய்மையைக் காக்க அயன்மொழிச் சொற்கள் சிலவற்றை மட்டும் நீக்கியுள்ளேன்.
இனி இது இரகசியம் அல்ல
“செல்லும் செல்லாதது எல்லாம் செட்டியார் தலை மீது‘ என்ற முதுமொழி நம்மத்தியில் உள்ளது.
பிழைகள் எல்லாவற்றையும் யாரோ ஒருவர் மீது சுமத்திவிடும் பண்பு பற்றிய பேச்சு அது.
அண்மைக் காலமாக தமிழர் அரசியலில் பிழைகள் எல்லாவற்றையும் தமிழ்க் கூட்டமைப்பு மீது போட்டுத் தாக்குவது என்ற நிலைப்பாடு பல தரப்புகளினாலும் கடைப்பிடிக்கப் படுவது நோக்கத்தக்கது. நாங்களும் அதற்கு விதிவிலக்கு அல்லர்.
எனினும் நல்லது செய்யும் போது அதனையும் பாராட்ட வேண்டும் அல்லவா?
தென்னிலங்கை அரசியல் சர்ச்சைக்குள் தேவையில்லாமல் அதிகம் ஊடுருவும் கூட்டமைப்பு, எதற்கு எடுத்தாலும் ஐ.தே.கட்சிக்கு தூக்குக் காவடி எடுக்கின்றது என்பது நம்மில் பலரின் குற்றச்சாட்டு. இது அதற்குப் புறநடையான ஒரு சம்பவம்.
இப்போது ஆட்சியில் இருக்கும் ஐ.தே.முன்னணி அரசு, நாடாளுமன்றத்தில் ஒரேயொரு நா.உ யை உத்தியோகபூர்வமாகக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து தேசிய அரசு அமைக்கப் போகின்றது எனச் செய்திகள் வெளியாகியிருந்தன அல்லவா?
இதற்கான சிறப்புத் தீர்மானம் நேற்று முன்னாள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கத் திட்டமிட்டிருந்த ஆளும் தரப்பு கடைசி நேரத்தில் அதிலிருந்து பின் வாங்கிக் கொண்டது. என்ன பின்னணி என்று சத்தம் சந்தடியின்றி உசாவினால், ஐ.தே.முன்னணி அரசின் ஆட்டத்துக்கு இசைந்து ஆடுவதற்கு தமிழ்க் கூட்டமைப்பு மறுத்து விட்டமையே முக்கிய காரணம் என்பது தெரிய வந்தது.
முக்கிய கட்சிகள் இணைந்து தேசிய அரசு அமைத்தால் அதன் அமைச்சரவையின் எண்ணிக்கையை 30 இலிருந்து 48 ஆக உயர்த்தலாம் என்ற அரசமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்துத் தமிழ்க் கூட்டமைப்பு வாக்களித்திருந்தது. ஆனால் தேசிய அரசுக்காக அப்போது ஐக்கியப்பட்டிருந்த ஐ.தே.கட்சியும் சுதந்திரக் கட்சியும் சேர்ந்து அந்த அரசமைப்புத் திருத்தத்தை வெற்றிரகமாக நிறைவேற்றி விட்டன.
இப்போது இரண்டு கட்சிகளுக் கும் இடையில் முரண்பாடு. அவை எதிரெதிர்த் திசையில். அதனால் சு.கவை விட்டுவிட்டு, முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து அரசு அமைப்பதாகக் கூறி, அதனைத் தேசிய அரசாகக் காட்டி, அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் 18 ஆல் உயர்த்துவது ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் திட்டம்.
ஆனால் அதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து சாதாரண பெரும்பான்மை மூலம் அதை நிறைவேற்றுவதற்குத் தமிழ் கூட்டப்மைப்பின் ஆதரவு, ஐ.தே.க. தரப்பு அரசுக்கு அவசியம். ஆனால் “நோ‘ சொல்லிவிட்டது கூட்டமைப்பு.
அதனால் இறுதி நேரத்தில் அந்தத் தீர்மானத்தை முன்வைப்பதிலிருந்து பின்வாங்கியது ஐ.தே.க.தலைமை.
“நீங்கள் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் தேசிய அரசு என்பது இனப்பிரச்சினைத் தீர்வையும் உள்ளடக்கிய அரசமைப்புத் திருத்தத்தையும் நிறைவு செய்வதற்கான முயற்சியின் ஓர் அம்சமாக இருக்க வேண்டுமே தவிர, தனி ஒரு கட்சிக்கு அதிக அமைச்சர்களை ஈட்டுவதற்கான வாய்ப்பாக அமையக் கூடாது. அத்தகைய திட்டம் எதற்கும் நாம் ஒத்துழைக்க மாட்டோம்” என்று கூட்டமைப்பு சார்பில் அதன் பேச்சாளர் சுமந்திரன், திட்டவட்டமாகவும், தெளிவாகவும் ஐ.தே.கட்சித் தலைமைக்கும் பிரதமருக்கும் தெரியப்படுத்தி விட்டார் என அறிய வந்தது.
கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமல் இந்த விடயத்தில் ஓர் “இஞ்ச்‘ கூட முன்நகர முடியாது என்ற உண்மையை உணர்ந்துள்ள ஐ.தே.க. தலைமை, கூட்டமைப்பைத் திருப்தி பண்ணத் தலைகீழாக நிற்பதாகக் கேள்வி. ஆனால் சுமந்திரன் அசைபவராக இல்லை என்கிறது ஆளும் கட்சி வட்டாரங்கள்.
சுமந்திரனை ஆளும் கட்சியினதும் பிரதமரினதும் ஆள் என்று விமர்சித்த சில தரப்புகள் இதனை அறிந்து ஆச்சரியத்தில் மூழ்கிப் போயிருக்கின்றன என்றும் கேள்வி. (Kalaikkathir – 09-02-2019)
Leave a Reply
You must be logged in to post a comment.