கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு! 

கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு! 

நக்கீரன்

(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்!” என்ற கட்டுரைக்கு ஒரு எதிர்வினை)

(1) இலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ மக்களது அரசியல் விடுதலை போராட்டம் என்பது, ஏறக்குறைய ஏழு தசாப்தங்களிற்கு மேலானது. இதில் விட்டு கொடுப்பு, காலம் கடத்தல், ஏமாற்றங்கள், துரோகங்கள், போன்றவற்றின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆனால் தமிழீ மக்களது அரசியல் தீர்விற்கு சிங்கள பௌத்த அரசுகள் ஓர் நேர்மையான உண்மையான நிரந்தரமான தீர்வை கொடுப்பதற்கு எண்ணியுள்ளார்களா? முயற்சித்துள்ளார்களா? ஒன்றுபட்டுள்ளார்களா? முன்வந்துள்ளார்களா? என்பதை நாம் பொது அறிவின் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றிற்கு சில அரைகுறை தமிழ் அரசியல்வாதிகளின் கூற்றுக்கள் மிகவும் சிரிப்பிற்கு இடமானது.

பதில்: இந்தக் கட்டுரையின் தலைப்பு வி.புலிகளை பூனையாகவும் மென்வலு கோட்பாடுடைய அரசியல்வாதிகள் எலிகள் எனவும் சொல்லப்படுவது போலத் தெரிகிறது. “இவற்றிற்கு சில அரைகுறை தமிழ் அரசியல்வாதிகளின் கூற்றுக்கள் மிகவும் சிரிப்பிற்கு இடமானது” என்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால்  இவர் தன்னை அரசியலில் ஒரு சாணக்கியன் என்றும் அறிவில் பிரகஸ்பதி என்றும் நினைக்கிறார் என்பது தெரிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியான கருத்தைத் தாயக்தில் இருந்து கொண்டு சொன்னால் அதில் கொஞ்சம் நியாயமிருக்கும். ஆனால் பாரிசில் பத்திரமாக இருந்து கொண்டு இப்படிக் கோமாளித்தனமாக எழுதக் கூடாது. நாலுபேர் பார்த்துச் சிரிப்பார்கள்.

(2) இலங்கைதீவின் சரித்திரத்தை நன்கு படித்து அறிந்த சர்வதேச நாடுகளிடமோ அல்லது விதண்டாவாதம் பேசாத ஒருவரிடம், இலங்கைதீவில் தமிழர்களிற்கான அரசியல் தீர்வு ஏதற்காக கடந்த ஏழு தசாப்பதங்களாகியும் தீர்க்கபடவில்லை என்பதை நாம் வினாவினால் – இதற்கு அவர்கள், சிங்கள பௌத்த அரசியல் தலைவர்கள், பௌத்த குருமார்களை குற்றம் சாட்டுவதை நாம் காணுகிறோம்.

ஆனால் மிக அண்மை காலமாக, தமிழீழ மக்களது சரித்திரத்தை தமது பிழைப்பிற்கு அரைகுறையாக படித்த அறிந்த சில விதண்டாவாதம் பேசும் தமிழ் அரசியல்வாதிகள், “பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம் கொண்டவர்கள் போல்” புதிய சரித்திரமும் புதிய கண்டு பிடிப்புகளை தமக்கு கிடைக்கும் அர்ப்ப சொர்ப்ப மேடைகளில் ‘கிணற்று தவழைகள்’ போல் புலம்புகிறார்கள்.

பதில்: இந்தக் கிணற்றுத் தலைவர்களைத்தான் தாயக மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்த மக்களை கட்டுரையாளர் கொச்சைப்படுத்துகிறார். அந்த மக்ளை இழிவு படுத்துகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தவர்கள் அறிவிலிகள் என அவமானப்படுத்துகிறார். 

(3)‘தட்டி கேட்க ஆள் இல்லையானால் தம்பி சங்க பிரசங்கம்’ என்பார்கள். உண்மையை கூறுவதனால், தட்டி கேட்க ஆள் இல்லை என்பது உண்மையல்லா! தட்டி கேட்பவரது எதிர்காலம் என்னவாகும் என்ற அடிப்படையில் சிலர் அல்ல பலர் மௌனமாகவுள்ளார்கள் என்பதே உண்மை.

பதில்: இது மொட்டைத் தலைச்சி  மயிரைச்  சிலிர்ப்பிக் காட்டினாளாம் என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது.  எதிர்காலத்துக்குப் பயந்து பலர் ஏன் மொளனமாகவுள்ளார்கள்? இப்பவும் யாராவது ஏகே துப்பாக்கியோடு தாயகத்தில் திரிகிறார்களா? மின்சாரக் கம்பத்தில் கட்டிவைத்துவிட்டுச் சுட்டுத் தள்ளுகிறார்களா?

(4) விடயத்திற்கு வருகிறேன்! தமிழீழ விடுதலை புலிகளின் எச்சமான தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிரதிநிதித்துவ படுத்தி, தமிழீழ விடுதலை புலிகளின் பெயரால் மக்களின் வாக்குகளை பெற்றவர்கள், தம்மை ஓர் உண்மைவாதியாக சிங்கள பௌத்தவாதிகளிற்கு காண்பிப்பதற்காக, தமிழீழ விடுதலை புலிகள் பற்றி மிக அபாண்டமாக விமர்ச்சிப்பது, பேசுவது அவர்களது பேச்சு சுதந்திரம் என்பதை, என்னை போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மறுக்கவில்லை. ஆனால் இன்று தமிழீழ விடுதலை புலிகள் பற்றி உரையாற்றும் இவர்களிற்கு சிங்கள பௌத்தவாதிகள் தமிழீழ மக்களிற்கு கடந்த ஏழு தசப்தங்களாக மறுத்துவருவது மட்டுமல்லாத மிக மோசமாக மீறி வரும் மனித உரிமை, மனிதபிமான உரிமைகள், அரசியல், பொருளாதார உரிமைகள் இவர்களது அறிவிற்கு கண்ணுக்கு தெரிவதில்லையா?

பதில்: வி.புலிகளை ததேகூ இன் தலைவர்கள் மேடைகளில் மிக அபாண்டமாக விமர்ச்சித்தார்கள்,  பேசினார்கள் என்று யார் சொன்னது? ஒரு வாதத்துக்கு அது சரியென்றே வைத்துக் கொள்வோம். மக்கள் அவர்களைத்தானே தெரிவு செய்து நாடாளுமன்றத்துக்கும், மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அனுப்பி வைத்தார்கள்அதே சமயம் வி.புலிகளோடு மிக நெருக்கமானவர்கள் எனத் தங்களைக் காட்டிக் கொண்டவர்கள் தேர்தலில் கட்டுக்காசை இழ்தார்களே? அந்த மக்கள் அறிவிலிகளா? புலிகள் காலத்திலும் (30 ஆண்டுகள்) இதே  உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. அவர்களைப் பார்த்து ஏன் இந்தக் கேள்வியை எழுப்பவில்லை?  உரிமைப் போராட்டங்கள் வெற்றிபெறக் காலம் எடுக்கும். இன்னும் எழுபது ஆண்டுகள் கூட எடுக்கலாம்.  கட்டுரையாளர் தான் ஒருவனே அதிபுத்திசாலி மற்றவர்கள் புத்தியற்றவர்கள் என நினைக்கிறார். உயிருக்குப் பயந்து ஓடிவந்த ஒருவருக்கு இந்தத் தலைக்கனம் கூடாது. சனநாயகப் போராளிகள் கட்சிபற்றி கட்டுரையாளர் தெரிந்திருப்பார் என நினைக்கிறேன். அவர்கள் இப்போது ததேகூ  இணைந்து அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த முன்னாள் போராளிகளைப் பற்றி கட்டுரையாளர் என்ன சொல்ல விரும்புகிறார்? அவர்கள் புலிகள் அல்ல எலிகள் என்று சொல்லப்போகிறரா?

(5) இவர்கள் உண்மையாக தமிழீழ மக்களில் உணர்வு ரீதியாக அக்கறை கொண்டவர்களானால், 2009ம் ஆண்டு மே மாதத்திற்கு முன் இவர்களது அரசியல் நிலைப்பாடு என்ன? அன்று புலி எதிர்ப்பு பேசி தங்களை தாக்கு பிடித்த – ரொலோ, புளோட், ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் அன்றும் இருந்தார்கள் இன்றும் இருக்கிறார்கள். இவர்கள் தமிழீழ விடுதலை புலிகளது ஆயுத போராட்ட காலத்திலும் அரசியல் பேசினார்கள் என்பது மட்டுமல்லாது, தாம் உண்மையில் தமிழீழ மக்களது அரசியல் உரிமைகளில் விசுவசமாக அக்கறை கொண்டவர்கள் என்பதையும் நிருபித்தார்கள்.

பதில்: அப்படிப் போடு அருவாளை! கட்டுரையாளருக்கு வரலாறு சுத்த சூனியம் என்பதை எண்பிக்கிறார். முதலில் புளட் அமைப்பைப்  பார்ப்போம். புளட் அமைப்பு போர் முடியும் வரை ஆயுதங்களைக் கீழே போடவில்லை. போடாதது மட்டுமல்லாமல்  சம்பளம் வாங்கிக் கொண்டு வி.புலிகளுக்க எதிராக இராணுவத்தோடு சேர்ந்து போராடினார்கள். போர் முடிந்த கையோடு புளட் தலைவர்  என்ன சொன்னார்? வி.புலிகளைத் தோற்கடித்ததில் புளட்டுக்கு கணிசமான பங்கு இருப்பதாக சித்தார்த்தன் சொன்னார். சொன்னாரா இல்லையா? ஏனைய அமைப்புகள் (ரெலோ, இபிஆர்எல்எவ்) அப்படியில்லை. 1987 இல் இந்திய – இலங்கை உடன்பாட்டைத் தொடர்ந்து அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு அரசியலில் ஈடுபட்டார்கள்.  ததேகூ  20 ஒக்தோபர் 2001 இல் தொடக்கப்பட்டது. புளட் அதில் சேர்ந்து கொள்ளவில்லை. காரணம் அவர்கள் இராணுவத்தோடு சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார்கள். ததேகூ இன்  தலைவராக இரா சம்பந்தன் அவர்களும் பொதுச் செயலாளராக மாவை சேனாதிராசாவும் தெரிவு செய்யப்பட்டார்கள். எனவே ததேகூ உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் அதில் தமிழரசுக் கட்சிக்கும் அதன் தலைவர்களுக்குமே முக்கியம் கொடுக்கப்பட்டது. ததேகூ எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற கேள்வி எழுந்தபோது தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஆயுள் காலத் தலைவர் கஜேந்திரகுமார் சைக்கிள் சின்னத்தில் போட்டி போடலாம் என்றார். ஆனால் புலிகள் இந்த யோசனையை நிராகரித்துவிட்டு தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே போட்டி போடுவது என முடிவெடுத்தார்கள்.  

(6) சுயநிர்ணய உரிமை, தேசியம் என்பதற்கு புதிய வரவிலக்கணம், புதிய விளக்கம் என்பதுடன், அரசியல் கொலைகள் என்னும் பொழுது, இவ் விகடகவிகளுக்கு – தமிழீழ விடுதலை புலிகளினால் செய்யப்பட்ட கொலைகள் தவிர்ந்த வேறு எந்த கொலை, ஆட்கடத்தல் இன அழிப்பு பற்றி கூறுவதற்கு உரையாற்றுவதற்கு இவர்களது குறுகியகால அரசியல் வாழ்க்கை அனுமதிப்பதில்லை போலும்.

பதில்: தமிழ் மக்களது அடிப்படை உரிமைகளான சுயநிர்ணய உரிமை, தாயகம்,  தேசியம் என்பதற்கான  வரைவிலக்கணம் மாற்றப்படவில்லை. ஒன்றுபட்ட இலங்கையில் இனச் சிக்கல் தீர்க்கப்பட வேண்டும் எனத் தேர்தல் அறிக்கைகளில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

(7) யாதார்த்தம் என்ன?

முப்பது வருடங்களிற்கு மேலாக சாத்வீக போராட்டம் செய்து தோல்விக்கு மேல் தோல்வி கண்ட தமிழீழ மக்களிற்கு, இவர்கள் ‘மென்வலு அரசியல்’பற்றி விளக்கம் கொடுப்பது ‘விடிய விடிய இராமர் கதை, விடிந்த பின்னர் இரமர் சீதைக்கு என்ன முறை’ என்பது தான் நினைவில் வருகிறது.

தாம் ஏற்கனவே தயார் செய்ததிற்கு அமைய, மேடைகளில் ஒருவர் ‘மென்வலு அரசியல்’பற்றி உரையாற்ற, மற்றவர் அதற்கு ‘சிஞ்சா’ போடுவதையும் – சுயநிர்ணய உரிமை என்பது ஒன்று தான் என கூறிவிட்டு, தொடர்ந்து உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றி விளக்கம் கொடுப்பதும், தமிழீழ மக்களை இவர்கள் கேணையர்களாக எண்ணியுள்ளார்களா என எண்ண தோன்றுகிறது.

இங்கு ஓர் பழைய ஞாபகம் எனது மனதில் தோன்றுகிறது. சில வருடங்களிற்கு முனபு, பிரான்ஸில் ஓர் கூட்டத்தில் கலந்து கொண்டவேளையில், அங்கு உரையாற்றிய ஒருவர், கூறியதாவது, “சிங்கொங்கின் தத்துவதற்கு அமைய, உலகில் போராடும் இனங்கள் யாவும் கூடிய விரைவில் விடுதலை அடையப்போவதாக கூறினார்”. இது பலருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஆகையால், உரை முடிந்தவுடன், அவ் நபரை நாடி, யார் இந்த சிங்கொங் எந்த நாட்டை சார்ந்தவரென வினாவிய வேளையில், அவர், சிரித்து கொண்டு அப்படி ஒரு நபர் இல்லையென்றும், மேடை பேச்சு வேளையில் இப்படியான தமசுக்கள் சகஜமென கூறினார். இது போன்றே – தேசியம், சுயநிர்ணய உரிமை பற்றிய விளக்கமும் தென்பட்டது. மேடை பேச்சு வேளையில் பலத்த பாதுகாகப்புகளுடன் உரையாற்றும் பேச்சாளரை யார் குழப்புவார்கள்?

பதில்: சுயநிர்ணய உரிமைக்கான வரைவிலக்கணம் ஒன்றுதான். உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்  கொண்டால் பிரிந்து  போகிற உரிமை கிடையாது. 2002 ஆம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளை அடுத்து விடுக்கப்பட்ட  செய்தி அறிக்கையில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் வரலாற்றுபூர்வமாக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் சமஷ்டி முறையில் தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டுக் கொண்டனர். பின்னர் அதிலிருந்து புலிகள் பின்வாங்கியது வேறு கதை. மென்வலு அரசியலைப் புறக்கணித்தால் வன்வலு அரசியலை அதாவது மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுக்க  வேண்டும். இது சாத்தியமா? இல்லை பகற்கனவா?  பாரிசில் இருந்து கொண்டு கட்டுரையாளர் தனது கற்பனைக் குதிரையைத் தட்டிவிடலாம். நாளை ஆயுதப் போர் வெடித்தால் இவர் இங்கு பத்திரமாக இருந்துவிடுவார். ஆனால் தாயக மக்கள்? அவர்கள் இன்னொரு முள்ளிவாய்க்காலைச் சந்திக்க வேண்டி இருக்கும்.  இதுதான் இந்தக் கட்டுரையாளரது பேராசையா?

(9) தமிழர் தரபு அரசியல் தீர்விற்கான தவறவிட்ட சந்தர்ப்பங்களை தமிழர்களிற்கு எடுத்து கூறும் இவ் நபர்களிடம் ஓர் சிறு கேள்வி.

1977ம் ஆண்டு பாரளுமன்ற தேர்தலில், வடக்கு கிழக்கு வாழ் மக்கள் ஒருமித்து தமிழீழத்திற்கு வாக்கு அழித்ததை நீங்கள் அறிந்துள்ளீர்களா? தமிழீழ மக்களை புண்படுத்து வகையில் விடயங்களை கூற துணிந்தவர், சிங்கள பௌத்தவாதிகளிடம் இது பற்றி எப்பொழுதாவுதல் உரையாடிதுண்டா?

சிங்களவர்களிற்கு நாட்டை பிரிக்க மாட்டோம் என்ற உறுதியை நாம் கொடுக்க வேண்டுமென கூறும் இவர்கள் – 1957 ம் ஆண்டு பண்ட செல்வா ஒப்பந்தம், அதனை தொடர்ந்த 1965ம ஆண்டு டட்லி செல்வ ஒப்பந்தம் போன்றவற்றை ஒருபட்சமாக சிங்கள பௌத்த தலைவர்களினால் கிழித்து ஏறியப்பட்டது இவர்களிற்கு ஞாபகம் உள்ளதா? அவ்வேளையில் நாட்டை பிரிப்பதற்கு எந்த ஆயத போராட்டம் நடந்தது? ஏன் இவற்றை சிங்கள பௌத்தவாதிகளிற்கு இவர்களால் கூற முடியாதுள்ளது?

பதில்: கட்டுரையாளர் எந்த உலகில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. பழசுகளைக் கிண்டுவதால் பயனில்லை. பண்டாரநாயக்க – செல்வா உடன்பாடு, டட்லி – செல்வா உடன்பாடு கிழித்தெறியப்பட்டுவிட்டதால் தமிழர் தரப்பு நாடிக்குக் கையைக் கொடுத்துக் கொண்டு மூலையில் போய் இருந்து ஒப்பாரி வைத்ததா? முதலில் சனநாயக வழியிலும் பின்னர் ஆயுத வழியிலும் மீண்டும் சனநாகவழியிலும் போராட்டம் தொடர்கிறது  என்பதுதான் வரலாறு.

சிங்கள மக்களுக்கு  தமிழர் தரப்பு ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் ஒரு தீர்வு கேட்கிறோம் என நாடாளுமன்றத்துக்குள்ளேயும் ததேகூ சொல்லி வருகிறது. இது தொடர்பாக நா.உ சுமந்திரன் சிங்களப் பகுதிகளில் நடந்த கூட்டங்களில் சிங்களத்தில் பேசி விளக்கம்  அளித்துள்ளார். இப்படியான விளக்கம் போதுமா என்றால் இல்லை போதாது என்பதுதான் பதில். சுமந்திரன் இந்தக் கூட்டங்களில் சமஷ்டி என்றால் என்பது பற்றி விளக்கிப் பேசியுள்ளார். சமஷ்டி என்றால் பிரிவினை என்று அர்த்தம் இல்லை என்று பேசியுள்ளார். அவரைப் போல் இன்னும் பலர் இந்த முயற்சியில் ஈடுபட வேண்டும்.

(10) யாதார்த்தம் என்னவெனில், சிங்கள பௌத்தவாதிகள் தமிழ் மக்களிற்கு எந்தவித அரசியல் தீர்வையும் முன் வைக்க போவதில்லை என்பதே உண்மை, யாதார்தம். நாட்தமிழ் மக்களின் வாக்குகளில் மாகாண சபைக்கும், பாரளுமன்றத்திற்கும் தெரிவான இவர்கள், சிங்கள பௌத்தவாதிகளை திருப்திபடுத்துவது தான் இவர்களது தலையாய கடமையா?

இவ் நபர்களின் ஏதேச்சையான உரைகளிற்கும், தமிழீழ மக்களை புண்படுத்தும் நடவடிக்கைகளிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, புதிய அரசியல் கட்சிகளை ஆரம்பித்தவர்களும், அவர்களிற்கு புலம்பெயர்வாழ் தேசத்திலிருந்து உசுப்பேற்றியவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

ஐக்கியத்திற்காக தந்தை செல்வா, திரு ஜீ.ஜீ.பொன்னம்பலம் வீடு சென்றது போல் – தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முதல் பிரிவை ஏற்படுத்திய கஜன் பொன்னம்பலம், ஏதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகளை தேடி சென்று ஐக்கியத்தை உருவாக்க முடியாது?

உண்மையை கூறுவதனால் இன்று பத்து வீதமான தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமே, தமது இனம், தமது நிலம், தமது அரசியல் போராட்டம் என்பதை சிந்திப்பவர்கள். மிகுதி நபர்கள் தமிழ் அரசியல் போராட்டம் என்பதை ஒரு பொழுதுபோக்காக தமது பொருளாதார லாபங்களிற்காக மேற்கொள்கிறார்கள் என்பதே உண்மை.

“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம் கொள்வது” போல் சன்னதம் கொள்பவர்கள், பூனையின் உண்மை தன்மையை அறிந்திருக்கவில்லை போலும்! ஓர் பூனையை அதனது நிரந்தர இருப்பிடத்திலிருந்து அகற்றி பல மைல்களிற்கு அப்பால் கொண்டு சென்று துரத்தினாலும், அப் பூனை திரும்ப தனது வழமையான இடத்திற்கு வந்தே தீரும் என்பதே யாதார்தம்.

சிறிலங்காவின் ஜனநாயத்தை காப்பாற்றுவதாக கூறுபவர்களிடம் கேட்கபட வேண்டிய கேள்வி என்னவெனில் – இலங்கைதீவில் ஜனநாயகம் இருந்திருந்தால் இவ்வளவு பெரும் தொகையான தமிழ் மக்கள் மட்டுமல்லாது, சிங்கள, முஸ்லீம் மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் கோர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமா? ஆகையால் ஜனநாயம் என்றால் என்ன எப்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

பதில்: சிறிலங்காவில் முழுமையான சனநாயகம் இல்லை என்பதுதான் சிக்கல். தாயகத்தில் இருந்து கொண்டு பல சிக்கல்கள் மத்தியில் அரசியலை முன்னெடுக்கும்  எமது அரசியல் தலைவர்களுக்கு இந்தக் கட்டுரையாளர் மென்வலு பற்றியும் சனநாயகம் பற்றியும் பாடம் எடுக்க முயற்சிப்பது கூரையேறி கோழி பிடிக்க முடியாத ஐயர் வைகுண்டத்துக்கு வழிகாட்டப் போகிறேன் என்று  சொன்ன கதை போன்றது. கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார்? பூனையைப் பிடித்து தூரத்தில் கொண்டு போய்விட்டாலும் அது ஒரு நாள் வீடு வந்து சேரும் அது போல ஆயுதங்கள்  இப்போது மௌனிக்கப்பட்டாலும் இன்னொரு நாள் ஆயுதப் போர் மீண்டும் வெடிக்கும் என்கிறாரா? கற்பனை செய்வதில் ஓர் அளவு கணக்கில்லையா? ஆயுதங்களை மௌனித்துவிட்டு வெளியில் வந்த போராளிகளே இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்று கூறுகிறார்கள். பத்தாயிரம் மைலுக்கு இப்பால் இருக்கும் கட்டுரையாளர் மட்டும் வாளைச் சுழட்டுகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர் தன்னை ஒரு மனித உரிமைச் செயல்பாட்டாளர் எனச் சொல்லிக் கொள்கிறார். அப்படிப்பட்ட ஒருவர் ஆயுதக் கலாசாரத்துக்கு தூபம் போடுவது எந்த முறையில் நியாயம்? படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயிலா?

(11) இன்று உலகத்தில் சீனா, ராஸ்யா உட்பட சகல நாடுகளும் தமிழர்களது அரசியல் தீர்வில் அக்கறை கொண்டுள்ளதாக கூறுபவர்கள், சீனா ராஸ்யா, கியூபா போன்ற நாடுகளை பொறுத்த வரையில், இலங்கைதீவில் தமிழர்களிற்கான அரசியல் தீர்வு என்பது, ‘பஞ்சயத்து முறையே’ என்பதை இவர்கள் இன்னும் அறியவில்லை போலும்.

சிறிலங்காவில் மிளகாய்தூள் பிரச்சனைகள் நடக்கும் பொழுது, ராஜபக்சா பிரதமர் பதவியை விட்டு கொடுக்கும் கட்டத்தில், அவருக்கு எதிர்கட்சி பதவி கொடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி பேச்சுவார்த்தை நடத்தியதை, பத்தாயிரம் மைல்களிற்கு அப்பால் வாழும் எமக்கு தெரிந்த விடயம், ஜனநாயகத்தை காப்பாற்றியதாக கூறும் இவர்களிற்கு தெரியவில்லை என்பது பூதாககரமான பொய், நடிப்பு..

தமிழீழ மக்களிற்கு இன்று தேவைபடுவது மூன்றில் இரண்டு நிலங்களை பறிகொடுத்துவிட்டு உலகிற்கு சாத்வீகம் பேசும் தீபெத்தின் தலலாம போன்ற அரசியல் தலைவர் அல்ல. மக்களின் பங்களிப்புடன் இந்தியாவின் உதவியுடன் ‘பங்காளதேசத்தை’ வென்றெடுத்த சேக் முஜீபூர் ராகுமான் போன்ற தலைவரையே தமிழீழ மக்கள் தேடுகிறார்கள் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பதில்: கனவு  காண்பதற்கு எல்லோருக்கும் உரிமையுண்டு. யதார்த்தம் பற்றிப் பேசுபவருக்கு யதார்த்தம் தெரியாமல் இருக்கிறது. தலைவர்களை கடையில் வாங்க முடியாது. தவைர்களை இணக்க முடியாது. சேக் முஜீபூர் ராகுமான் வாழ்ந்த காலம் வேறு. இன்றைய காலம் வேறு. இடமும் வேறு. சேக் முஜீபூர்  ராகுமானை தமிழீழ மக்கள் தேடுகிறார்கள் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார். மீண்டும் முள்ளிவாய்க்காலுக்கு அந்தப் பாபப்பட்ட மக்களை அழைத்துப்போக மனித உரிமை செயற்பாட்டாளர் திட்டமிடுகிறாரா? மேலும் அந்த மக்கள் சார்பாகப்  பேச இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?  இவருக்கு என்ன அருகதை இருக்கிறது?

கட்டுரையாளரின் ஆசைகளைப் பார்த்தால் கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது!

அதாவது   கடல் வற்றிவிட்டால் மீன்களைப் பச்சையாகத் தின்னாமல், காயவைத்துத் தின்னலாமே என்று காத்திருந்த கொக்கு உடல் மெலிந்து செத்ததாம். இப்போதுள்ள சிறிய அனுகூலங்களை, நாளை நடக்கும் என்று நாம் நம்பும்  நிச்சயமில்லாத பெரிய வாய்ப்பினை எதிர்பார்த்து நழுவவிடுவது அறிவீனம்.

கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு! 


About editor 3192 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply